புகலிட புனைவுக்குள் அலைவுறும் புலி எதிர்ப்பு மனம்

[நவமகனின் ஆகிதம் சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து]

ஈழத்தின் போர்ச்சூழல் நம்மைத் தின்று செரித்து மீதம் வைத்தவற்றுள் உலவும் மனிதர்களையும் – மேற்கு ஐரோப்பிய நாடுகளில் , கனடா மற்றும் அவுஸ்திரேலியா என்று மகிழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களையும் இணைக்கும் பலவற்றுள் இலக்கியமும் ஒன்றாகிறது. இவர்களின் புலம்பெயர்வானது புகலிட இலக்கிய வகையறாவை தமிழ் இலக்கியச் சூழலுக்குத் தந்துள்ளது. இவர்களுள் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், தாமரைச்செல்வி, அ. முத்துலிங்கம், ஆசி.கந்தராஜா , லெ.முருகபூபதி, ஷோபாசக்தி, விமல் குழந்தைவேல், வ.ந.கிரிதரன், கற்சுறா, ரஞ்சகுமார், சக்கரவர்த்தி, நோயல் நடேசன், ப.அ. ஜெயகரன், ஜேகே , தமிழ்நதி எனத் தொடங்கி வாசு முருகவேல், சயந்தன், டானியல் ஜெயந்தன், தர்மு பிரசாத், அனோஜன் பாலகிருஷ்ணன் என இரு தலைமுறை எழுத்தாளர்கள் தமக்கான ஒரு எழுத்துலகை அமைத்துள்ளனர். இவர்களது நாவல்களிலும், சிறுகதைகளிலும் இரண்டு விதமான கதைக்களங்கள் எப்போதும் ஊசலாடிக் கொண்டிருக்கும். தாம் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்த மண்ணின் கதைகளும், மாந்தர்களும் கதையின் பாதியை நிறைக்க, மீதம் தாம் புலம்பெயர்ந்த நாடுகளும், சந்தித்த புது மனிதர்களையும் பற்றியதாக இருக்கும். இந்தச் சட்டங்களை மீறாது இதே பாணியில் தனக்கேயுரிய படைப்பு மனத்துடன் யாழ்ப்பாணத்தின் வேலணைக்கும் , நோர்வேக்கும் இடையில் பயணப்படுகிற நவமகனின் சிறுகதைகளின் முதல் தொகுப்பே ஆகிதம். (இந்த ஊசலாட்டத்தில் நவமகன் புதிதாகப் புகுத்துகின்ற அல்லது நமக்கு புனைவினூடாக சொல்லவிளைந்த சங்கதிகளையும் அதன் படைப்பு உளவியலையும் அறியமுற்பட்டதன் விளைவே இக்கட்டுரையாகிறது.)

இத்தொகுதி பற்றி எழுதவதற்கான முக்கிய காரணங்களில் (அதன் படைப்பிலக்கியத் தரத்தை இரண்டாவதாக வைத்துவிட்டு) அதன் முக்கியபேசுபொருளான ‘சகோதரப் படுகொலைகள்’ ஆகும். ஈழத்தை கைப்பற்றவெனக் கிளம்பிய பலதரப்பட்ட இயக்கங்களின் அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் போட்டி வெடிக்க, அங்கு ஒரு இயக்கத்தினர் இன்னுமொரு இயக்கத்தினரை காவு வாங்கிய யுத்த காண்டம் தொடங்கியது. பல வரலாற்று நிகழ்வுகளை உள்ளடக்கிய சகோதர படுகொலைகளில் நவமகன், ‘இயக்கம்’ எனும் பூடகமான வார்த்தையின் பின்னால் ஒளிந்து கொண்டு புலிகளின் மீது தனது எதிர்ப்பை முன்னிறுத்துகிறார். இங்கு கதைகளில் வரும் கதாமாந்தர்களில் இருவிதமான மனநிலையுடையவர்களாகவும் , அதில் எழுத்தாளரை மூன்றாவதாகவும் வைத்துப் பார்க்க நேரிடுகிறது. ஒன்று புலி ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பவர்கள் இன்னுமொன்று அதனை எதிர்க்கும் பாத்திரங்கள். இவற்றினிடையே இரண்டுக்கும் வெளியில் நிற்பதாக நினைத்து அக மனத்தால் புலி எதிர்ப்பு பேசும் எழுத்தாளரை பல இடங்களில் காணமுடிகிறது.

ஆகிதம் என்கிற கதைக்குள் அகதி தஞ்சம் கோருகின்ற கதையின் பிரதான பாத்திரங்களில் ஒன்றான சத்தியநாதன், இலங்கையின் கிழக்குப் பகுதியில் இருந்து வந்த போராளிகளோடு, முகாமின் பொறுப்பாளியாக இருக்கும் சத்தியநாதனிடம் சிறுவன் ஒருவன் இயக்கத்தில் இணைய முன்வருகிறான். வயது காணாது என்பதைக் காரணம் காட்டி அவனுக்கு உணவு கொடுத்தும் அனுப்பி விடுகிறார் சத்தியநாதன் . அதன் பின் அவனே உளவாளியாகி அன்றிரவு அந்த முகாமிருக்கும் வீட்டிற்கு இன்னுமொரு இயக்கத்தினரை அழைத்து வருகின்றான். அந்த இயக்கத்தினரின் தாக்குதலில் அங்குள்ள எல்லோரும் மடிந்துபோக சத்தியநாதன் மட்டும் தப்பித்து வருவதே சுருக்கம். இதில் புலி எதிர்ப்பு மனம் எங்கிருக்கிறது என்று கதையை வாசிப்பவர்களுக்கு நன்கு புரியும். 1984 காலப்பகுதியில் கிழக்குப் போராளிகள் கொண்ட இயக்கம் மற்றும் 1986 இலே இன்னுமொரு இயக்கத்தால் சுட்டுத்தள்ளுகிறது எனவும் குறிப்பிடுகிறார். அத்தோடு அவரது இயக்கத்தினர் 39 பேரைக் கொன்றுவிட்ட குறித்த குழுவிற்கு மானிப்பாய் முகாமைத் தாக்குவதற்கான கட்டளையும் தளபதி ஒருவரால் பிறப்பிக்கப்படுகிறது. ஈழம் வேண்டிப் போரிட்ட இயக்கங்களுக்குள் இருந்த கசப்புணர்வினை மையப்படுத்திய கதைக்குள் சாதி, இனம், அடுத்த தலைமுறை எல்லாம் வந்து போவது வேறு கதை அத்தோடு முன்னாள் போராளிகள் உளவியற் சிக்கலையும் முக்கியமாகப் பேசிச் செல்கிற ஆயுதமாகிறது ஆகிதம். குறித்த கதையின் முக்கிய பகுதியை வாசிக்கும் போது ஜெ. ராம்கி எழுதிய பத்மநாபாவின் படுகொலை எனும் புத்தகத்தின் எழுத்துக்கள் மனதில் தோன்றி மறைவது எனக்கேயான உள்ளுணர்வாகக்கூட இருக்கலாம்.

மீண்டும் மாவீரர் யாரோ என்றால் என்ற கதையிலும் தனது இரண்டு பிள்ளைகளை போரில் பறிகொடுத்துவிட்ட பெற்றோர்களுக்கு தனது மகளுக்கான வீர வணக்கத்தை பகிரங்கமாக புலம்பெயர் தேசமொன்றில் செய்ய முடிகிற போதும்; வேறொரு இயக்கத்தில் இணைந்துவிட்ட ஒரே காரணத்துக்காக தனது மூத்த மகனின் படத்தை உள்ளங்கைக்குள் வைத்துக் கொண்டு அழ வேண்டிய நிலை வேறொரு தம்பதிக்கு ஏற்படுகிறது. எல்லோரும் தமிழீழத்துக்காகவே போராடினார்கள் என்றால் எனது மகனுக்கு மட்டும் வெளிப்படையாக துக்கம் அனுஷ்டிக்கப்படுவதற்கு ஏன் முடியாதவனாகிறான் எனும் கேள்வி, புலிகள் இல்லாத எந்தவொரு இயக்கத்தினரும் தமிழ்த்துரோகிகள் அல்லது போராடாதவர்கள் எனும் விம்பத்தை புலம்பெயர் நாடுகள் சுமப்பதை முன்னிறுத்துகிறார்.  

மீண்டும் ‘சைக்கிள்களின் அந்தாதி’ எனும் சிறுகதையில் எழுத்தாளர் இப்படியொரு பகிரங்க குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.

‘ஒரு இயக்கம் புதுச் சைக்கிள்களில் வந்து மக்களிடம் சோற்றுப்பார்சல் வாங்கிப் போவதற்கே தயங்கிக் கொண்டிருக்கிற அதே காலத்தில்தான் எனது ஊருக்குள் இன்னொரு இயக்கம் மோட்டார் சைக்கிள்களில் வந்து மக்களிடம் தங்கம் வேண்டிக் கொண்டும் போனது. ‘

இரண்டு இயக்கங்களின் பொருளாதார நிலையும் அல்லது அதனை அவர்கள் எங்கனம் அடைந்தார்கள் எனும் செயற்பாட்டின் மீதான மறைமுக எதிர்ப்பையும் காட்டுகிறார். இதை இன்னுமொரு இயக்கம் என அவர் நழுவி விடலாம் ஆனால் தங்கம் வாங்கிய இயக்கம் என்ற குறிப்பின் பிரகாரம் இது ஒரு புலி எதிர்ப்பு இல்லாமல் வேறென்ன… மீண்டும் அதனை அவரே உறுதிப்படுத்தும் விதத்தில் சைக்கிள் உரிமையாளரின் அனுமதி பெற்றே அவரது பழைய சைக்கிளை வாங்கிச் சென்ற குறித்த இயக்க உறுப்பினர் ‘சைக்கிள் திருடன்’ எனும் நாமத்தோடு மின்கம்பத்தில் கட்டப்பட்டு சுடப்படுகிறான் என்கிற கூடுதல் தகவலையும் தந்துவிடுகிறார்.

மீண்டும் ‘மூன்றாம் விதி’ எனும் கதையில் புலி ஆதரவு நிலைப்பாட்டுடன் வரும் குமாரவேலர் என்கிற பாத்திரத்தை முன்னிறுத்தி அவருக்கு எதிராக புலி எதிர்ப்பை சுப்பு எனும் பாத்திரம் மூலமாக வலுவாக வைக்க முயல்கிறார். சுப்புவின் குடும்பத்தைப் பற்றிக் கூறும் போது

 ‘கடைசி சண்டை வரைக்கும் வன்னிக்கதான் இருந்ததுகள் முள்ளிவாய்க்கால் நோக்கி இடம்பெயர்ந்து போகைக்க….. ‘ என்கிற வரிகளில் இடம்பெயர வேண்டிய தேவையை ஏற்படுத்திய புலிகளை மறைமுகமாகச் சாடுவதோடு பிரபாகரன் மீண்டும் வருவார், போராட்டம் மீண்டும் வெடிக்கும் என்று கூறுகிற குமாரவேலரை படு தூஷணத்தில் ‘போராட்டமும் ….ண்டையும்’ என்று பேச வைத்து தனது எதிர்பை சுப்பு மூலம் காட்டுகிறார்.

இச்சிறுகதை புலம் பெயர் தேசத்தில் தங்களது சந்ததிகளையும் காப்பாற்றிக் கொண்டும், சொகுசாக இருந்து கொண்டும் இடையிடையே ஈழத்தை எட்டிப்பார்த்துவிட்டு போக நினைக்கிறவர்களுக்கும் , புலி வருது புலி வருது என்று மீண்டும் புலிப்புராணம் பாடிக் கொண்டிருப்பவர்களையும் நிஜமான போரின் வலி உணர்ந்த பாத்திரமொன்றின் எதிர்வினை மூலம் சிதறடிக்க முற்படுகிறார் எழுத்தாளர்.

இந்த எல்லா சந்தர்ப்பங்களிலும் தன்னை நடுநிலைப்படுத்திக் கொள்ள எழுத்தளவில் முயன்ற நவமகன் அவர்கள் இறுதியாக விஷமுறிவு எனும் கதையில் தன்னுடைய இயக்க முகத்திரையை உடைத்து வெளிப்படையாக விடுதலைப்புலிகள் ஆதரவாளராக இருவரைக் காட்டி அக்காதல் ஜோடிகள் வெருகல் படுகொலையை முன்வைத்துப்பிரிவதனை குறிப்பிடுகிறார். புலி ஆதரவு நிலைப்பாட்டிலேயே இருக்கும் கதாநாயகன் தன்னியல்பு போல் அவ்வியக்கத்தின் இயல்பையும் கூறுகின்றான். மட்டக்களப்பை சேர்ந்த மாலதி உடனான வாக்குவாதத்தில் ‘வார்த்தைகளில் பலவீனமுற்றிருந்த நான் அப்போதுதான் வன்முறையை கையிலெடுத்தேன் ‘ என்பது ஒன்றாக போரிட்ட இரு இயக்கங்களுக்குள் பேச்சுவார்த்தை நீர்த்துப் போன பின் நடந்த வன்முறை எவர்களால் இயக்கப்பட்டது என்றும் கூற விளைகிறார். மேலும் புலிகளின் சுயதம்பட்டமாக வரும் வரிகளில் ஒஸ்லோவில் கதாநாயகன் மீது அவன் வேலை செய்யும் ஹோட்டல் உரிமையாளரான சீக்கியருக்கு விருப்பு இருந்ததற்கான காரணமாக கூறப்படுவது யாதெனில் ‘ தாங்கள் கொலை செய்த இந்திராகாந்தியின் மகனைக் கொலைசெய்த இனத்தைச் சேர்ந்தவனாக நானிருந்தது’ என்கிறார். புனைவாக இருந்தாலும் இவ்வரிகள் தேவையற்றதாகிறது. ராஜீவ் காந்தியின் கொலை தமிழர்கள் மீது ஏற்படுத்திய கறைகளை துடைத்தெறிய வேண்டுமே தவிர அதனைத் தூக்கிப்பிடிப்பதில் பயனில்லை. ஆனால் அக்கருத்தை அந்த பாத்திரமே சொல்ல விளைகிறது. அதன் மீது எதிர்வினையாற்றுவதாக நவமகனின் எழுத்துக்கள் கடைசியில் ‘உணர்ச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து தோற்றுப்போன” மனிதனாகவே அவனைக் காட்டுகிறார்.

இதில் சரி பிழைகளைத் தாண்டி புலி எதிர்ப்பு மனத்தோடு , சகோதரபடுகொலைகளினால் ஏற்பட்ட மனத்தாக்கத்தின் சித்திரங்களை பெரும்பாலும் எல்லாக்கதைகளிலும் காணமுடிகிறது.

இதே தொகுப்பிற்குள் போலித் தமிழ்த்தேசிய சிந்தனை அல்லது போலித்தனமான முற்போக்குகளை காட்டும் பாத்திரங்களையும் அதனை எதிர்க்கும் பாத்திரங்களையும் கூடவே புனைவாக்குறார். ஆகிதத்தில் மரபு என்கிற பெயரில் குறுகிய யாழ்ப்பாணத்து சாதியச்சிந்தனையுடன் பிள்ளைகளுக்கு வரன் தேடுகிற பெற்றோர்களையும் அதற்கு மாற்றீடு சொல்லும் நிலையும் கதைக்குள் வர, ‘உபதேசிகள்’ கதைக்குள் வரும் கதாநாயகன் பிரசன்னா தான் புலம்பெயர்ந்த தேசத்தில் இனவாதத்திற்கும், நிறவாதத்திற்கும் எதிராக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறான். புலம்பெயர் தமிழர்கள் உட்பட பலஸ்தீனம் மற்றும் சூடான் போன்ற ஆபிரிக்க நாடுகளில் இருந்தும் உலகளாவிய ரீதியில் இடம்பெயர்ந்து செல்கிற அகதிகளுக்கு இருக்கின்ற முக்கிய பிரச்சினையாக அவர்கள் குடியேறும் நாட்டில் வாழும் மக்களில் சிலராலோ, அங்குள்ள சில கட்சிகளாலோ இவர்கள் மீது இனவாத மற்றும் நிறவாத எதிர்ப்பை மேற்கொள்ளுதல் காணப்படுகின்றது. ஷோபாசக்தியின் அண்மைய சிறுகதையான மரச்சிற்பத்திலும் கூட பிரான்ஸ் நாட்டில் அகதிகளுக்கு எதிரான அரசியல் கட்சியொன்றின் எதிர்மறையான தாக்குதல்களை குறிப்பிடுகிறார். இப்படியொரு நிலையில் அகதிகளுக்கு ஆதரவாக முற்போக்கு பேசிக்கொண்டு அலையும் பிரசன்னா நிறவாதப்புயலைக் கவிதையாக்கிவிட்டு ஆர்ப்பாட்டமொன்றையும் மேற்கொள்கிற முனைப்பிலிருக்க , தனக்காக தனது அம்மா பார்த்திருக்கும் பெண்ணை அணுகும் போது, புகைப்படத்தில் பெண் மூக்கும் முழியுமாக இருந்த போதிலும் கறுப்பாக இருக்கிறாள் என்பதைக் காரணம் காட்டி விலக முயல்கிறான். இந்த போலித்தனமான நிறவாத எதிர்ப்பைக் குறித்து கேள்வி கேட்கிறார் எழுத்தாளர் . இதே போல் வினைவயல் கதைக்குள் வரும் மனோரதன் என்கிற கதைமாந்தரின் புலம்பெயர்ந்து வந்த பின்னர் வரன் தேடுகையிலும் மனமிருந்தால் இடமுண்டு என்று கூறி அவனை போலித்தனங்களில் இருந்து மடைமாற்றுகிறார்.

ஆச்சியும் அஸ்தரும் கதையில் புலம்பெயர் நாட்டின் வசிக்கும் பெற்றோர்களின் மனநிலையை விவரிக்கிறது. இரண்டு தலைமுறைக்கு இடையிலான வாழிடம் சார் சிக்கல்களைப் பேசும் சிறுகதைகள் இங்கு முக்கியமாகிறது. ப.அ. ஜெயகரன் அவர்களும் இதே போன்ற தொனியில் எழுதிய சிறுகதை கடந்த வருடத்தில் சமூக வலைத்தளங்களில் வாதப்பிரதிவாதங்களுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. புலம்பெயர்வின் மனநிலைகளை இக்கதை பேசுகிறது. இதே போன்று அதற்கு முரணான ஒரு சந்தர்ப்பத்தை சாதகமாக்கி தனது தாயை தன்னுடனேயே வைத்திருக்க முயலும் ஒரு கதையை ஷோபாசக்தியின் ‘ one way ‘ குறிப்பிடுகிறது. ஆனால் இக்கதை வித்தியாசமாக மனைவியின் அம்மாவை அவரது தாய் நாட்டிற்கே திருப்பி அனுப்புதலை விவாதிக்கிறது. இரண்டு தலைமுறைகளின் சாதக பாதகங்களை முன்வைத்து பேசப்படுகிற கதைகளை காணமுடிகிறது.

இத்தொகுப்பில் வாசக பார்வையில் வித்தியாசமான ஒரு கதையை முன்வைப்பதானால் அது ‘தூயதுணைகள்’ சிறுகதையைக் குறிப்பிட முடியும். தனது மூத்தமகன் ஓட்டிசம் நோயால் பாதிக்கப்பட அவனைப் பராமரிக்க எத்தனிக்கும் தாயின் வாழ்க்கையில் நடக்கும் தொடரான போராட்டமொன்றை இக்கதை முன்வைக்கிறது. இதில் இரண்டாவது மகனுடன் பிரிந்து செல்லும் கணவன் வேறொருத்தியுடன் வாழ்ந்துவிட்டு மீண்டும் அவளைத் தேடி வருவதும், அதே வேளையில் வாகனச் சாரதி ஒருவன் அவளின் ஒப்புதலைக் கேட்டு அலைவதையும் விபரிக்கும் எழுத்தாளர் இறுதியில் அவள் பூங்காவில் சந்திக்கும் இன்னுமொரு தம்பதியினரின் மகனான ஓட்டிசத்தால் பாதிக்கப்பட்ட ஜோனை அழைத்துக் கொண்டு வருகிறாள். தனது மகனுக்கும் ஜோனுக்கும் உருவாகின்ற இசை மூலமான நட்பினை அடுத்து ஜோனை தனது தூய துணையாகவும், அதே ஜோனை தனது மகன் தூயவனுக்கான தூய துணையாகவும், அதே போன்று அவர்கள் இருவருக்குமான தூயதுணையாகவும் அவள் மாறிவிடுவதும் இங்கு முக்கியமாகிறது. இக்கதையில் முக்கிமானதொரு பகுதியுள்ளது ஓட்டிசம் உடைய ஜானிற்கு காற்றடிக்கும் பட்ட பெண் பொம்மையொன்றை உடல் சார்ந்த உளவியல் தேவைக்காக அவனது தந்தை வழங்க அந்த பொம்மையை விலக்கிவிட்டு அவனை அழைத்துச் செல்கிறாள் சந்தியா. இந்தக்கதை முக்கியமான பேசு பொருளைத்தாண்டி ஒரு வரையறைக்குள் நின்று சொல்லப்படுவது அதன் முழுமையைத் தருகிறது.

அப்படியென்றால் முழுமையற்ற கதைகளும் இத்தொகுப்பில் உண்டா என்றா ஆம் என்றுதான் சொல்ல வேண்டும். காதலா சாதலா , விஷமுறிவு போன்ற கதைகள் அவசரத்தில் எழுதப்பட்டு அப்படியே தொகுப்பில் இணைக்கப்பட்டதான ஒரு உணர்வைத் தருவதை மறுக்கமுடியவில்லை. மேலும் ஆகிதம் போன்ற சிறந்த கதைகள் அதன் மையப் பொருளை விட்டு எங்கோ தொடங்கி எதை எதையோ நிறைத்துக் கொண்டு முடிவுறுவது அதன் படைப்புத் தரத்தை கேள்விக்குள்ளாக்குகிறது. இதில் வினைவயல் கதைதான் மோசமான மீளாய்விற்கு (edit ) செய்யப்படாத தன்மையைத் தோற்றுவிக்கிறது. எங்கோ வெளிநாட்டிலிருந்து வந்தவன், அதற்குள் ஒரு வெளிநாட்டுக்கதைப்படலம், அகதி விசாரணை, சாமியார் கதை , அதில் மலையக வரலாறு மீண்டும் பழைய கதை இப்படியாக பத்திகளால் நிறைத்து ஒரு நாவலை உருவாக்குவதற்கான முயற்சி செய்ய முடியுமே தவிர அது சிறுகதைக்கான தரத்தை முற்றுமுழுதாக குறைத்துவிட்டு எக்காளமிடுகிறது. மூன்றாம் விதிக்கான கதையின் ஆரம்பம் எழுத்தாளர் ரஜீசனின் ‘ பாத்தியதை ‘ நாவலை சிறிது ஞாபகமூட்டுகிற அதே வேளை குமாரவேலரின் இறுமாப்புடனான வாழ்க்கைக்கும் கதையின் முடிவிற்கும் இடையில் நம்பகத்தன்மையுடைய ஒரு பொருத்தப்பாட்டை வாசகனுக்குக் கடத்தவில்லை என்பதே உண்மையாகிறது.

சிறுகதைகளுக்குள் உள்ள கதாபாத்திரங்களின் உரையாடல் மூலமாக கதையை நகர்த்துதல் எனும் உத்தி வழக்கமாக கையாளப்படுகின்ற ஒன்று என்றாலும், தொகுதியிலுள்ள பல கதைகளில் உரையாடல் பகுதிகள் முழுத் திருப்திகரமான தோற்றப்பாட்டினைத் தரவில்லை என்பது கதைக்கான முக்கியப்பின்னடைவாக காணப்படுகின்றது. நாவலை விரிக்கும் உத்திகளைக் கொண்டுள்ள எழுத்துப்பாணி வலுவான சிறுகதைகளை வலுவிழக்கச் செய்யும் என்கிற சூட்சுமம் அறியப்படாத வரை நவமகனின் பல நல்ல சிறுகதைகள் தனக்குரிய இடத்தை இழந்துவிடும் அல்லது எதிர்காலத்தின் மையநீரோட்டக் கதைகளில் இருந்து தம்மை தாமாகவே ஒதுக்கிக் கொள்ளும் என்பதும் தெளிவாகிறது.

பேசுபொருளில் புலம்பெயர் உளவியல், போராளிகள் உளவியல், தலைமுறை இடைவெளி , ஓட்டிசம் போன்ற விடயங்களை பேச எத்தனித்தமையும், புகலிடத்தில் மாற்றமடையாத ஈழத்து உளவியலோடு, அடுத்து மாற்றமடையும் எதிர்கால சந்ததிகளின் உளவியலை கதைகளூடாக புனைய முற்படும் நவமகன்; தன்னிலை உணர்ந்து அல்லது போகிற போக்கில் புலி எதிர்ப்பு விம்பத்தை உடைய எழுத்துக்களைத் தருவதோடு, சகோதரப் படுகொலை மீது அழுத்தமான எதிர்க் கருத்தியலை வைப்பதும் முக்கியமானதாகிறது. தனது கதைகளை செறிவாக்கும் உத்திகளாலும், ஒரு மையப் பொருளைக் கொண்டு அதனைச் சுற்றிக் கதையினைக் கட்டமைக்கும் பண்புடனும் வருங்காலத்தில் ஆகிதத்தை விட படைப்புத்தரமிக்க தொகுப்பொன்றை நிச்சயம் தருவார் என்று நம்புகிறேன்.

ஆகிதம்

கருப்பு பிரதிகள் வெளியீடு

இந்திய விலை – 250/-

ஆசிரியர் – நவமகன்

நான் பாக்கியராசா மிதுர்ஷன், நீலாவணை இந்திரா எனும் புனைபெயரில் எழுதி வருகின்றேன். ஈழத்தைச் சேர்ந்தவன். சிறுகதைகள், கட்டுரை, நூல் விமர்சனங்களை எழுதி வரும் நான், கக்கூஸ் வாளி என்கிற சிறுகதைத் தொகுப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறேன். தற்சமயம் இளமாணிப் பட்டத்தை நிறைவு செய்துவிட்டு மூலக்கூற்று உயிரியல் மற்றும் உயிர்த் தொழில்நுட்பம் எனும் பாடத்தில் முதுமாணி கற்கை நெறியை கொழும்பு பல்கலைக்கழகத்தில் தொடர்கிற ஒரு உயர்தர உயிரியல் பட ஆசிரியர் ஆவேன். விளிம்பு நிலை மாந்தர்களின் கதையை முன்னிறுத்திய இலக்கியச் செயற்பாடுகளையும், விவாத அரங்குகளையும் நாடாத்தி வருகின்ற இலக்கிய இளவல்.

மற்ற பதிவுகள்
Sorry no related post found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *