பாத்தியா “மேம்மக்களெல்லாம் எவ்வளவு வாந்த வரிசையா ஒழுக்கமா வரிசைல நின்னு கறியுஞ் சோறும் வாங்கி திங்கறாங்க. யாருமே வரிசைல நிக்காம போவல, எல்லாருமே நெல பொலம் நெறைய வச்சி பண்ணயம் பண்ணறவங்கதான், பல தொழில் பண்ற பெரியமனுசங்க, “மேம்மக்க மேம்மக்கதா” என்று கஞ்சி போட்ட வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்த எல்லாருமே முன்னுரிமை எடுத்துக்கொள்ளாமல் வரிசையில் நின்று பொறுமையாக வாங்கி சாப்பிடுவதை நோக்கி பறையடிக்கும் சங்கரன் தனது குழுவினரிடம் சொன்னார்.

“சாமி எங்களுக்கு சோறு” என்று பாத்திரங்களை கையில் வைத்துக்கெண்டு கோயில் காரியங்களில் தன்னை முழுவதுமாய் ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் அவ்வூர் முக்கிய காரியகர்த்தாக்களில் ஒருவரிடம் மரியாதை நிமித்தமாக வேட்டியை இறக்கிவிட்டு பவ்யமாக கேட்டார் சங்கரன். அவரும் “கெஞ்சும் பொறு சங்கரா வாங்கிக்கலாம்” என்று சொல்லிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்து மற்ற வேலைகளில் மும்மரமாகினார். மீண்டும் கல்லுக்கட்டின் மேல் அமர்ந்து காத்திருக்க தயாராகினார்கள் பறைக் குழுவினர். சங்கரன் ஐம்பது வயது மதிக்கத்தக்க பறை இசைக் கலைஞர், அவர் அப்பா இறந்த பிறகு அவர்தான் அந்த ஊருக்கு தொடர்ந்து வாசிப்பது.

முனியப்பன் கோயில். மிக உயரமான இரண்டு முனிகள் பக்கத்து பக்கத்தில் அமர்ந்திருக்கின்றனர், ஊரின் எல்லையில் கிழக்குப் பார்த்து, கண்கள் அகல விரித்துப் பார்க்கும்‌காட்சியை பார்த்தால், கடவுள்‌நம்பிக்கை இல்லாதவனுக்குக்‌கூட‌சிறிது பயத்தைக் ‌காண்பித்துவிடும் முனிகளின் தோற்றம். ஊர்க் கிழவிகள் சொல்லுவார்கள் “முனி ராத்திரி ஊர சுத்தி வரும் காவகாக்குறதுக்கு” என்று. அப்போது முனிகளின் தோற்றத்தை ‌அதி பயங்கரமாக கற்பனை செய்துக் கொள்வார்கள் சிறுவர்கள். முனிகள் மட்டுமா உயரம் அவர்களின் கைகளில் உள்ள அறுவாள் எவ்வளவு பெரியது. சில சமயம் இரண்டு முனிகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது ‌என்று அதிபயங்கர முகத்தையும், அந்நெடு உடலையும் நீண்ட நேரம் சிறுவர்கள் ஆராய்ச்சி செய்வதும் உண்டு. முனி சிலைகளுக்கு அப்படியே நேர் வடகிழக்காக தனது விருட்சங்களை அகல விரித்து, விழுதுகள் பல வேறூன்றும் அளவுக்கு நூறு வருடங்களுக்கு மேல் கடந்த ஆலமரம் ஒன்று இருக்கிறது. அதன் பழுத்த இலைகள் மரத்தின் அடியில் விழுந்து சருகுக் கடல் போல் காட்சியளிக்கும் அவ்விடம். முனியின் பயங்கர தன்மைக்கு மேலும் பயங்கரத்தைக் கூட்டுவது போல் இருக்கும் மரம் அது. சிலைகளுக்கு பின்னாடியும் ஆலமரம், வேப்ப மரம், புங்கமரம் என்று பல மரங்கள் என அனைத்தும் சேர்ந்து கோவிலை சேர்த்த ஒரு ஏக்கர் நிலத்தை அடர்ந்த வனாந்தரம் போல காட்சியமைப்பினைத் தரும். கோவிலுக்கு வருவதற்கும் போவதற்கும் கோவிலுக்கு தெற்காக ஒரே ஒரு ஒற்றையடி மண் தடம்தான்.

மாசியில் பேச்சியம்மனுக்கு திருவிழா ஆம்பித்ததும்‌, அம்மாவாசை முதல்நாள் இரவில் முனியப்பன் கோவிலில் பலிகள் நடக்கும். முதல் பலி மட்டும் பன்றி, அதன் பிறகு ஆடு, கோழிகளின் தலைகள் தனித்தெடுக்கப்படும்.

வேண்டுதல்களின் படி ஆடு, கோழிகளை இருட்டு கட்டினதும் கொண்டு வர ஆரம்பித்துவிட்டார்கள். அக்கம்பக்கம் இருக்கும் மரத்தின் வேர்களிலோ, பெரும் கற்களிலோ உருவனாஞ்சுருக்கு இட்டு கட்டிவிட்டு, தங்களது சகாக்களுடன் அரட்டை ஆரம்பித்துவிடுவார்கள். சுற்றிலும் விவசாயக் காடுகள்தான். அந்த சமயத்தில் அறுவடை முடிந்து நிலங்கள் வெறுமனே இருக்கும்‌ பெரும்பாலும். அந்த செம்மண் காட்டில் ஆங்காங்கே மினி ஆட்டோக்களும், பைக்குகளும், மிகவும் அரிதாக மாட்டு வண்டிகளும் நிறுத்தப்பட்டிருக்கின்றன. அவைகளின் அருகருகே மனித வட்டங்கள் . பெண்கள் இந்த பலிக்கு வரக்கூடாது, ஆண்கள் மட்டுமே கலந்துக் கொள்ளும் பூஜை.

திருவிழா, கோயில் காரியங்கள் என்றால் சச்சரவுகள் இல்லாமல் இருக்காது. எவ்வளவுதான் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும், தனிமனித செயல்பாடுகளுக்கு ஒன்றும் செய்ய இயலாது. ஒவ்வொரு வருடமும் புதிய பிரச்சினைகள் வந்தவண்ணம்தான் இருக்கும்.

வேறு ஜாதிப் பெண்ணை திருமணம் செய்திருந்தான் சேகரன். “இந்தா பாருங்க பொலங்காத சாதில உங்க மவன் கலியாணம் கட்டிக்கிட்டதால, உங்க குடும்பத்துக்கிட்ட வரி வாங்க மாட்டோம், ஊரு காரியங்கல எதுலையும் உங்கள சேத்திக்க மாட்டோம்” என்று ஊர் முக்கியப் புள்ளிகள் நியாயம் கூட்டி சேகரன் குடும்பத்தினரிடம் தெரிவித்துவிட்டார்கள். “நாங்க பையனையும் கட்டிட்டு வந்த புள்ளையையும் டவுனு பக்கம் அனுப்பி விட்டறோம்” எங்கள ஊருல சேத்துக்குங்க என்று, இவ்வளவு நாள் ஒன்னும்மண்ணுமாக இருந்த ஊர் தங்களை தள்ளி வைப்பதை பொறுத்துக்கொள்ளமாட்டாது மன்றாடினார். எவ்வளவு கேட்டும் ஊர் ஒத்துக்கொள்ளவில்லை. சேகரன் “ஊர் என்ன எங்கள ஒதுக்கி வைக்கிறது, நாங்க ஊர ஒதுக்குறோம்” என்று அன்றிலிருந்து ஊருக்கும், ஊர் பெரியவய்களுக்கும் தொந்தரவு தரும் காரியங்களை செய்ய ஆரம்பித்தான். ஊர் சம்பந்தமான பண புழக்கங்களில் கையாடல் நடப்பதாக, பிரசிடன்ட் ஊருக்கு வரும் திட்டங்களில் கமிஷன் பெறுவதாக, கோவில் காரியங்களில் ஊழல் நடப்பதாக என்று பல்வேறு வகையில் மொட்டை பெட்டிசன்கள்‌மூலம் தொந்தரவு தர ஆரம்பித்தான். அதில் சில வெற்றியும் பெற்றன. ஊர்த்திருவிழாவே நின்று போகும் அளவுக்கு ஒரு முறை ஆகிவிட்டது அவனது இந்த ஒழுங்கு நடவடிக்கைகளால்‌.

ஒரு வருடம் தாழ்த்தப்பட்ட ஜாதி‌ச்சிறுவன் பேச்சியம்மன் கோவிலினுள் நுழைந்து விட்டான். பேச்சியம்மனுக்கு தீட்டாகி விட்டது என்று பெரும் ரகளையில் ஈடுபட்டு காவல் நிலையம் வரை சென்றார்கள். திருவிழாவிற்கு குறவன் குறத்தி ஆட்டம் ஆட வந்த பெண்ணிடம் அத்துமீறி நடந்துக்கொண்டனர் சிலர், அந்த பிரச்சனை பெரிய பிரளயமாகி அதற்கு அப்புறம் பல வருடங்கள் குறவன் குறத்தி ஆட்டம் தவிர்க்கப்பட்டது. ஒரு வருடம் ஊரின் பெரிய தலக்கட்டு பெருசு இறந்து திருவிழாவை நிறுத்தியது. இவ்வாறு பிரிச்சனைகள் இல்லாமல் திருவிழா என்பது நடப்பது என்பது அரிதினும் அரிது.

நல்ல முறுக்கேறிக் கொண்டு திமிலும் கிடாய்கள் முதல் இளங் கிடாய்கள் வரை கருப்பும், வெள்ளையும், கருப்பு வெள்ளை கலந்தும், செம்மண் நிறத்திலும் பல ரகமான வெள்ளாடுகள் அடுத்த நாள் விருந்திற்கு பலியாக காத்துக்கிடக்கின்றன. சேவல்களும் பல “குனுக் குனுக்” என மெல்லிய சத்திமிட்டுக்கெண்டு கால்கள் கட்டிய நிலையில் ஆங்காங்கே பெரிய வயர் பைகளிலோ அல்லது வண்டிகளுக்கு அடியில் படுத்துக் கிடக்கின்றன. சேவலை அறுத்துக்கொண்டு வீட்டுக்கு எடுத்து சென்று விடலாம். கிடாய்கள் முழுவதும் ஊர் விருந்துக்கு மட்டுமே, கிடாயின் கால்கள் மட்டும் உரிமையாளருக்கு தரப்படும். கோயிலில் வந்து எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுவிட்டு போகலாம். வீட்டிலுள்ள பெண்களுக்கு தூக்குச் சட்டியில் வாங்கிக் கொண்டும் போகலாம்.

முனியப்பன்களுக்கு தேங்காய் உடைத்து ஊதுபத்தி கொளுத்தி, வாழைப்பழ ஸ்டாண்டில் சொருகி விட்டு,பெரிய கற்பூரம் ஏற்றி பூஜை புனஸ்காரங்கள் எல்லாம் ஆரம்பம் ஆகியது, மணி அடிக்கும் ஓசையுடன். சிலைகளுக்கு சற்றே தொலைவில் நேர் எதிரில் இருக்கும் இரண்டு உயரமான இரும்புத் தூண்களில் தெங்கவிடப்பட்ட பெரிய மணி முதல் சிறிய மணிகள் வரை பையன்கள் அதிக ஒலி எழுப்பும் படி அடிக்க ஆரம்பித்தனர். எல்லோரும் கிடாய்களை கொண்டுவந்து சிலைகளுக்கு முன் நிறுத்தினார்கள். அவர்களின் தலைகளை எண்ண முடியவில்லை “நானூறு ஐந்நூறு கெடாக்களுக்கு மேல இருக்குமாட்டம்” என்று உயரமான திட்டின் மேல் நின்ற கிழவர் சொல்லிக்கொண்டிருந்தார். பறை ஒலி காதை கிழிக்க, அங்கு கூடியிருக்கும் சிலருக்கு அருள் வர, முனிகளைக் கைகளைக் கூப்பி கும்பிட்டு பட்டை இட்டுக்கொண்டு பலிக்கு நின்று கொண்டிருந்தார்கள். சின்னப் பயன்களுக்கு இந்த இரவு நடக்கும் சம்பவங்களில் என்ன ஆர்வமோ அங்கேயே கிடையாய் கிடப்பார்கள்.

ஒவ்வொரு கிடாய்களுக்காய் பூசாரி தீர்த்தம் தெளித்துக் கொண்டே வந்தார். கிடாய் துலுக்கலுக்கு ஏற்ப கிடாய்களை வரிசையாய் அறுக்க ஆட்கள் கத்தியுடன் தயாராக இருந்தார்கள். கிடாய் துலுக்கியதும் “அய்யா முனியப்பா” என்று பக்தி மிகுந்தவர்களாக கைகளை இரண்டையும் தலைக்கு மேல் கூப்பி ஒரு கும்புடு போட்டுவிட்டு, கயிற்றை நீளமாக விட்டு பிடித்துக்கெண்டு சில அடிகள் உரிமையாளர் தள்ளி நின்றுகொள்ள, வெட்டுபவர் பட்டை இடப்பட்ட ராட்சச அறுவாளை ஓங்க ஒரு வினாடிப்பொழுதில் தலையும் உடலும் தனித்தனியாக கிடக்கும். இரத்தம் பீச்சிக்கெண்டு அடிக்கும்.

“முனியப்பா என்ன கொற வச்சோம், தப்பு தவறு எதாச்சும் நடந்திருந்தா மன்னிச்சு வேண்டுதல ஏத்துக்க சாமி எங்களுக்கு ஒன்ன உட்டா ஆரு இருக்கா” என்று கிடாய் துலுக்காததால் கவலைத் தேய்ந்த முகத்துடன் சாமியை கைக்கூப்பி, நன்றாக வாய்விட்டு வேண்டுக்கொண்டிருந்தனர் சிலர். தீர்த்தம் போட்டதும் உடனே கிடா உடலை உலுப்பி தலையை தானாக அறுவாளுக்கு கீழ் கொண்டு வந்து வைக்க வேண்டும் என்ற நினைப்பு அவர்களுக்கு. மனமுருகி வேண்டியும் முனியப்பனுக்கு மனம் இறங்கவில்லையென்றால், இந்த கிடாய் துலுக்குவதற்காக இன்னொரு வேண்டுதல் அங்கு வைக்கப்படும் “அடுத்த வருசம் ஒரு கெடாய உடுரோம் முனியப்பா” என்று‌. இன்னும் துலுக்க நேரம் எடுத்தால் ஒன்னு இரண்டாக மாறும், இப்படி அடுத்த வருட பலிக்கு முனியப்பன் இப்பொழுதே முன்பதிவு செய்துக் கொண்டிருப்பார்.

பெரிய பெரிய அடுப்புகள் மூட்டி பாத்திரங்களில் கறியும், சோறும் தயார்படுத்த ஆரம்பித்தார்கள் என்றால் காலை ஏழு எட்டு மணிக்கெல்லாம் கறியுஞ் சோறும் முனியப்பன் கோவிலை சுற்றி தயாராகிய நிலையில் இருக்கும். பக்தர்கள் வரத்தொடங்கிவிடுவார்கள் முனியனை கும்பிட்டுவிட்டு சாப்பிடுவதற்காக. சாப்பாட்டுக்கான அரிசி ஊரில் வரிக்கொடுக்கும் அனைத்து வீடுகளிலும் வாங்கிக்கொண்டு அவற்றை கலந்தே சாப்பாடு பொங்கப்படும்.

“என்னதான் ஊட்ல பாத்து பாத்து ஆக்குனாலும் இந்த கொழம்பு ருசி வரமாட்டங்குது” என்று அனேகமானவர்கள் இந்த விருந்தை அவர் அவர்களுக்கு ஏற்றார் போல் பாராட்டிக் கொண்டிருப்பார்கள். இது வருடா வருடம் இப்படித்தான், இருந்தாலும் அவர்கள் சொல்வதில் உண்மையும் இருக்கிறது. அந்தத் தண்ணிக்கொழம்பை பச்சரிசி சோற்றில் நன்றாக பிசைந்து, கரியை அதனுடன் சேர்த்து சதம்ப சதம்ப சாப்பிட்டால் அப்படியிருக்கும். பாத்திரங்களில் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு எடுத்தக்கொண்டு போனால் ஊரார் அனைவருக்கும் அன்று முழுவதும் அதுதான் சாப்பாடு‌. காலை கோயிலில் சாப்பிட்டு விட்டு மதியமும் இரவும் சூடு பண்ணி வீட்டிலும் ஒரு கட்டு கட்டிவிடுவார்கள். எல்லாரும் வரிசையாக நின்று பாக்கு மட்டை தட்டுகளில், முதலில் சோறு பின் கறி அடுத்து குழம்பு என வாங்கிக்கொண்டு சிறிய சிறிய வட்டமாக கிடா விருந்தைப் பற்றி பேசிக்கொண்டும் சாப்பிட்டுக்கொண்டும் இருந்தார்கள்.ஆயிரக்கணக்காக மனிதத் தலைகள் அந்த விருந்திற்காக வந்திருந்தது.

இரவு முழுக்க பறையடித்து அசதியும் பசியுமாயிருந்த சங்கரன் குழுவினருக்கு இன்னும் சாப்பாடு கொடுத்தப் பாடில்லை “செத்த நேரம் செத்த நேரம்” என்று ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகிவிட்டது. அதற்கு மேல் சங்கரானால் பொறுக்க முடியவில்லை.

“என்ன சாமி இது, எம்மா நேரம் காத்துக்கிட்டு கெடக்குறது, சாமி சோத்த சாப்டலாம்னு இருந்தா யாரும் எங்கள காங்கவே மாட்டுறிங்க”

“சங்கரா என்னா சத்தம் பெருசா இருக்கு” என்று ஊர் காரியகர்த்தாக்கள் ஒவ்வொருவராக கூட ஆரம்பித்துவிட்டனர்.

“ஆமாங்க சாமி ஊங்க ஊருக்கு எங்கப்பாரு காலத்துல இருந்தே நாங்கதான் பறையடிச்சுக்கிட்டு இருக்கோம், அதுக்கு நீங்க காட்டுற மருவாதி ரொம்ப நல்லா இருக்குங்கசாமி, எங்களுக்கு சோறே வாண்டாம் சாமி, இந்த சோத்துக்காவதான இம்மா நேரம் எங்கள காக்க வச்சிக்கிட்டு இருக்கறீங்க” என்று கிளம்ப ஆரம்பித்தனர் பறை இசைக் குழுவினர். பறையடிக்கறவன் நம்ம சாப்பாட்ட வேணாம்னு போனா அது நமக்குதான் அசிங்கம் என்று காரியகர்தாக்கள் அவரிடம் சண்டையும் சமாதானமும் செய்துகொண்டிருந்தனர்‌. சண்டையில் சலசலப்பு அதிகம் ஆகிவிட்டது.

ஆலமரத்தடியிலும், கோயிலை சுற்றியுள்ள செம்மண் புலுதிகளிலும் ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த அந்த நேரத்தில் சிறிய வட்டமாக சங்கரன் குழுவினரை சூழ்ந்து வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்தனர். பறையடிக்கிறவன் நம்மை எதிர்த்து பேசுவதா என்று இவர்களும் எகிறிக்கொண்டிருந்தனர். வருணாசர விகிதாச்சாரத்தில் தாழ்வு படுத்தி வைக்கப்பட்ட அந்த அன்றாடங்காச்சிகளுக்காக பேச ஆயிரக்கணக்கான மேன்மக்களில் ஒருவர் கூட அங்கு இல்லை.

மேன்மக்கள் ‌மேன்மக்களே!

000

சொந்த ஊர் திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம். போட்டித் தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கிறேன். 2019 ல் இருந்து புத்தக வாசிப்பின் மீது ஆர்வம் கொண்டு புத்தகங்கள் வாசிக்கத் தெடங்கினேன். மேலும் திருச்செங்கோடு வெளிச்சம் வாசகர் வட்டம் 2022 முதல் நடத்தும் புத்தகத் திருவிழாவில் தன்னார்வளராக இணைந்து எனது பங்களிப்பை அளித்துக் கொண்டிருக்கிறேன். “புதுச் சட்டை” என்ற என் முதல் சிறுகதை திரு.பொன்குமார் அவர்கள் தொகுத்த நாமக்கல் மாவட்ட சிறுகதைகள் புத்தகத்தில் வெளியானது. 

மற்ற பதிவுகள்
Sorry no related post found

One thought on “மேன்மக்கள் ‌மேன்மக்களே!

  1. “மேன்மக்கள் மேன்மக்களே” சிறுகதை அருமையாக இருந்தது…. முனியப்பனின் கோவில் கண்முன் வந்து போனது… நடக்கும் சம்பவங்கள் நம் எதிரே நடப்பது போல எழுதியுள்ளார் எழுத்தாளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *