அத்தியாயம் நான்கு

பண்ணையத்தில் பலபேர் மாறிக்கொண்டே இருந்தார்கள். கூழ ராமசாமியிலிருந்து, செங்கான், மாதேஸ்வரன் என நீண்ட பட்டியலில், மாப்பி என்கிற ஆறுமுகம் மட்டுமே காடு விற்கும் வரை நிலைத்தான்.

காட்டை வாங்குவதற்கும் மறைமுகமாக பல அழுத்தங்கள் வந்து கொண்டு தான் இருந்தது.

தாத்தாவுக்கு ஓய்வூதியம் மற்றும் அப்பாவுக்கு சம்பளமும் வந்து கொண்டு இருந்ததாலும், எங்கள் படிப்புக்கு செலவேதுமில்லை என்பதாலும், அப்பாவால் காட்டுக்குக் கையிலிருந்து செலவு செய்ய முடிந்தது.

எத்தனை கஷ்டங்கள் வந்தாலும், கிராமத்தில் சந்தோஷம் பண்டிகை நாட்களில் தான். அதுவுமின்றி நீண்ட விடுமுறை கிடைக்கும். வீட்டுப் பாடம் எழுதுவதில் இருந்து சில நாட்கள் விடுதலை.

தேவி டீச்சர் கேட்டார்:  “நாளையிலிருந்து பொங்கல் லீவு வருது. என்ன பண்ணப் போறீங்க?”.

ஆளாளுக்கு கைதூக்கினோம். “கண்ணா, நீ சொல்லு” என்றார். எனக்கு மிகவும் பெருமையாகவும் வெட்கமாகவும் இருந்தது.

எழுந்து நின்று, “மாட்டுக் கொம்புக்கு பெயிண்ட் அடிப்பேன் டீச்சர்” என்றேன்.

பொங்கல் வந்தாலே கொண்டாட்டம் தான். நான்கு நாட்கள் பள்ளிக்கு விடுமுறை.

முதல் நாள் காப்புக் கட்டுதல். காலையில் எழுந்ததும் அம்மா அண்ணன் சந்துருவை விரட்டி விடுவார். “சந்துரு, போயி ஆவாரம்பூவும், பூளைப் பூவும் பறிச்சிக்கிட்டு வா”. “அம்மா, நாங்களும் அண்ணனோடப் போறம்” என நானும் தம்பியும் அடம் பிடிப்போம். “சரி சரி, பாத்துப் போய்ட்டு வாங்க. பூச்சி பொட்டு இருக்கும்”.

அண்ணன் பின்னாடியே ஓடினோம். வரப்புகளில் ஓடி, மேட்டாங்காட்டினருகில், ஓடையில் ஆவாரம்பூ நிறைய வளர்ந்திருந்தது. பூளைப் பூவும் இருந்தது. சந்துரு கொடுவாளால் செடிகளை வெட்டினான். நானும் தம்பி ராஜும் வெட்டியதை சுமந்து கொண்டு வீட்டிற்கு வந்தோம். “சரி, வீட்டு வாசப்படியில, தாத்தா வீட்டு வாசப்படி, மாட்டுக் கொட்டகை, ஆறுமுகம் வீட்டு வாசப்படி. இது எல்லா எடத்துலயும் இரண்டையும் சொருகி வைங்க. முடிஞ்சதும், காட்டுக்கு நாலு பக்கமும் போட்டுட்டு வாங்க” என்றாள் அம்மா.

கத்தைகளாக கட்டிக் கொண்டு ஒவ்வொரு வீட்டு வாசப்படியிலும் சொருகினோம்.

பிறகு, அண்ணன் பின்னாடியே ஓடினோம். காட்டின் ஒவ்வொரு மூலையும் நீண்ட தூரத்தில் இருப்பது போலிருந்தது. ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு கத்தையைப் போட்டு விட்டு வந்தோம். “அம்மா, போட்டு முடிச்சாச்சு” என்றோம்.”சரி சரி, சீக்கிரம் தண்ணி ஊத்திக்கிட்டு வாங்க. இட்லி ஊத்தி வைக்கிறேன்”. இட்லியோடு ஆளுக்கொரு தோசையும் கிடைத்தது. அன்று சாயந்திரம், வேகவைத்த சக்கரவல்லிக் கிழங்கும் மொச்சக் கொட்டையும் தின்னக் கிடைத்தது. சக்கரவல்லிக் கிழங்கோடு வாழைப்பழம் போட்டு நெய் ஊற்றி ஆயா பிசைந்து தந்தாள். அப்படி ஒரு சுவை. மிகவும் மகிழ்ச்சியான நாள்.

“நாளைக்கு சூரியப் பொங்கல். நேரமா எந்திரிச்சு குளிக்கனும்” என்றாள் அம்மா.

பொங்கலன்று அப்பா, நாலு மணிக்கே எழுந்து விட்டார். வெளியே கல் மூட்டி, விறகடுப்பில், ஈய தேக்சாவில் சுடு தண்ணீர் தயாராக இருந்தது. வீட்டின் வலது புறம் இருந்த, கூரைத்தட்டியில் பெரிய குண்டாவில் நீர் விளாவிக் கொடுக்க, ஒவ்வொருவராக குளித்தோம்.

அம்மா எங்களுக்கு முன்னரே குளித்து விட்டு பொங்கல் செய்ய ஆரம்பித்திருந்தார். முந்திய நாளே அப்பாவிடம் பட்டியல் எழுதிக் கொடுத்திருந்தாள். எப்போதும் இதை எழுதுவதில் எனக்கும் தம்பிக்கும் போட்டி. பெரும்பாலும் தம்பி ஜெயித்து விடுவான். “அவன் சின்னப் பையன்டா. அவனே எழுதட்டும். சொல்லிச் சொல்ல எழுது. அரிசி இருக்குது. அச்சு வெல்லம் பத்து, முந்திரி நூறு, திராட்சை நூறு, ஏலக்காய், நெய்யி. சாப்பிட வெண் பொங்கல் வைச்சிக்கலாம். பாசிப்பருப்பு சேர்த்திக்கோ. மிளகு நூறு, பொட்டுக்கடலை ஒரு கிலோ” என முடித்தாள். ஆறுமுகத்திடம் கரும்பு ஒரு சவலையும், மஞ்சளும் வாங்கி வரச் சொல்லி இருந்தாள்.

நாங்கள் குளித்து முடித்ததும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை இருந்தது. வீட்டின் முன்னால், மூன்று கரும்புகளை நிறுத்திக் கட்டி வைப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. காட்டிலிருந்து ஆறுமுகம், கற்களை எடுத்து வந்திருந்தான். அக்கற்களை முட்டுக் கொடுத்து, கயிற்றால் இறுக்கிக் கட்டி, எப்படியோ கரும்புகளை நிறுத்தி விட்டோம். அதற்கு முன், அவற்றின் வேரில் மண் இல்லாமல் நன்றாகக் கழுவி இருந்தோம். மஞ்சளை வேரில் மண் இல்லாமல் சுத்தம் செய்து, இரண்டு பக்கமும் வைத்தோம்.

அம்மா, வெற்றிலை, பாக்கு, தேங்காய்களை வைத்துப் பின், ஒரு பெரிய வாழை இலையை நடுவில் வைத்தாள். அதில் சர்க்கரைப் பொங்கல் இரண்டு கரண்டிகள் வைத்தாள். பிறகு ஒன்பது அச்சு வெல்லங்களை அந்த இலையில் வைத்தாள். சிறிய இலைகளை இரண்டு பக்கமும் வைத்து, அதிலும் பொங்கலும் அச்சு வெல்லமும் வைத்த பிறகு, கரும்புத் துண்டுகளை எல்லா இலைகளிலும் வைத்தாள்.

ஊதுபத்தி ஏற்றி விட்டு,”எல்லாரும் சூரியனக் கும்புட்டுக்குங்க” என்றபடியே, ஊதுபத்திக் காண்பித்து, தேங்காய்களை உடைத்து, ஊதுபத்தியில் காண்பித்து, இரண்டு பக்கங்களிலும் வைத்தாள். துளசியோடு இருந்த நீரில் தேங்காய்த் தண்ணீரும் கலந்து பின், நீர் விளாவினாள். கற்பூரம் ஏற்றி, சூரியனுக்குக் காண்பித்து,”பொங்கலோ பொங்கல்” என்றாள். நாங்களும் கூடவே “பொங்கலோ பொங்கல்” என்று சொல்லியபடியேச் சூரியனை வணங்கினோம். கற்பூரம் அணைந்ததும், மாடுகளுக்கும் காக்கைக்கும் பிரசாதம் வைத்தோம். பிறகு அனைவரும் சாப்பிட அமர்ந்தோம். தாத்தா ஆயாவும், கூட உட்கார்ந்து சாப்பிட்டார்கள். சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கலோடு, தோசையும் ஒன்று கிடைத்தது. வயிறு முட்டச் சாப்பிட்டதில், வயிறே வெடித்து விடும் போலிருந்தது. சாப்பிட்டதும் நானும் தம்பியும் தூங்கி விட்டோம்.

“ஆறுமுகம், நாளைக்கி மாட்டுப்பொங்கல். மேட்டுப்பட்டி போய்ட்டு மாடுகளுக்கு கயிறு, பெயிண்ட், கலர் பவுடர் எல்லாம் வாங்கிட்டு வந்திரு” என்றார்.

“பசங்களா, நாளக்கி மாட்டுப்பொங்கல். நாளைக்கும் நேரமா எந்திரிச்சு குளிக்கனும்” என்றாள் அம்மா.

காலையில் எழுந்ததும், எப்போதும் போலவே, அம்மா குளித்து விட்டு, தயாராக இருந்தாள். அப்பா அடுப்பில் எல்லோருக்கும் சுடு தண்ணீர் வைத்து கொடுத்து விட்டுக் கடைசியாக குளித்து விட்டு வந்தார். ஆறுமுகம் ஒவ்வொரு மாடாக கழுவ ஆரம்பித்தான். தொட்டியில் இருந்து வெளியே வரும் தண்ணீரைப் பிடித்து நாங்கள் ஊற்றி விட்டோம். குண்டன் அமைதியாக ஊற்றிக் கொள்ள, சூரிக்கொம்பன் ஆட்டம் போட்டான். ஆறுமுகம் நாலு அடி போட்டபின், தண்ணீர் ஊற்ற அனுமதித்தான். ஆடுகள் இரண்டையும் கழுவினோம். குளிருக்கு அவை கத்தின. ஈரம் காய்வதற்குள் கலர் பவுடர்களை மாடுகளின் மேலும் ஆடுகளின் மேலும் தூவினோம். சிகப்பு, பச்சை, மஞ்சள், கத்தரிப்பூக் கலர் என, திடீரென எல்லாரும் அழகாகி விட்டனர். ஆறுமுகம் எல்லோருக்கும் கயிறு மாற்றி விட்டான். கழுத்துக் கயிறு, மூக்கணாங்கயிறு, பிடிக்கயிறு என மாற்றினான். மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு மாற்றுகையில் பக்கத்து காட்டு பாட்டப்பன் உதவினான். பிறகு கொம்புகளுக்கு பெயிண்ட் அடிக்க ஆரம்பித்தான். முன்பே கொம்பு சீவியிருந்தான். பெரும்பாலும் எல்லோருக்கும் சிவப்பு மற்றும் பச்சை வண்ணம் அடித்தான். சூரிக்கொம்பனுக்கு பெயிண்ட் அடிக்க நாலு பேர் தேவைப் பட்டது. எங்களை பக்கத்தில் நிற்க விடவில்லை. ஒரு வழியாக பெயிண்ட் அடித்து முடித்ததும், கொம்புகளுக்குப் பூக்கள் சுற்றப்பட்டது.

அம்மா கிணற்று மேட்டில் பூஜை செய்தாள். சூரியப் பொங்கல் போலவே, கரும்புகளை நிறுத்தி, வாழையிலையில் பொங்கல் வைத்து, கற்பூரம் ஏற்றி, அனைவரும் கும்பிட்டோம். மாடுகளுக்கும், ஆடுகளுக்கும் கற்பூரம் காட்டி, நெற்றியில் விபூதி பூசி விட்டாள் அம்மா. அவற்றுக்குப் பிரசாதம் கொடுத்து விட்டு, நாங்கள் எடுத்துக் கொண்டோம்.

“சந்துரு, கரும்புகள வெட்டி ஆடு மாடுகளுக்குக் குடுங்க. வாழப் பழமும் ஆளுக்கு ஒண்ணு குடுங்க”. அண்ணன் கரும்புகளை இரண்டிரண்டு கணுவாக வெட்டிக் கொடுக்க, நானும் தம்பியும், பழங்களும் கரும்பும் வரிசையாகக் கொடுத்தோம். சூரிக்கொம்பனுக்கு மட்டும் தூக்கிப் போட்டோம். மாடுகள் கரும்பைக் கடித்துச் சுவைத்து, வாயில் ஜொள்ளு ஒழுக சாப்பிட்டன. கீழே ஒழுகிய கரும்புச் சாற்றை நாக்கால் நக்கிச் சுவைத்தன.

குண்டனும் சூரிக்கொம்பனும் மிக அழகாக இருந்தன. நிறையத் தீனி கிடைத்ததில் மிகுந்த சந்தோஷம் அவைகளுக்கு. எங்களுக்கும் தான்.

அடுத்த நாள் காணும் பொங்கல். எல்லோருக்கும் கறிநாள். அம்மா கோழிக்கறி செய்து தந்தாள். நான் கறி சாப்பிடுவதை ஐந்தாவது படிக்கும் போதே விட்டு விட்டேன்.

ஒரு முறை, மாரியம்மன் பண்டிகைக்கு, வீட்டில் கோழி அறுத்தார்கள். பெரிய அத்தையின் மாமாதான் கத்தியால் அச்சேவலின் கழுத்தை அறுத்தார். கழுத்து அறுபட்டப் பின்னரும் சற்று தூரம் ஓடி, பின்னர் பொத்தென்று கீழே விழுந்தது சேவல். பார்க்க மிகவும் பரிதாபமாக இருந்தது. அப்போது பாடத்தில் புத்தர் பற்றிய கதை இருந்தது. பிற உயிர்களை துன்புறுத்தாமை, புலால் உண்ணாமை எல்லாம் படித்ததில், கறி உண்பதன் மேல் வெறுப்பு உண்டானது. அப்போது கறி சாப்பிடுவதை நிறுத்தியது தான். பிறகு எப்போதும் சாப்பிடுவதில்லை.

அன்றைய நாளில், மேட்டுப்பட்டியில் எருதுக்கட்டு. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மாடாவது கலந்து கொள்வது வழக்கம். அப்பா மாடுகளை இதற்கெல்லாம் அனுப்ப மாட்டார். எங்களையும் எப்போதாவது ஒரு முறை, பார்த்து வர அனுமதிப்பார்.

ஒவ்வொரு மாட்டையும் இரு புறத்திலும் கயிறு கட்டி இருவர் பிடித்துக் கொள்வார்கள். குழந்தைகளின் பொம்மை போல ஒன்றைச் செய்து, மாட்டின் முன்னால் காட்டுவார் ஒருவர். சிலசமயம் சிவப்புத் துண்டாகவும் இருக்கும். மாடு துரத்தியபடி முட்ட வர, அவர் பின்னால் ஓட, கயிற்றை இழுத்துப் பிடித்துக் கொள்வார்கள். இதற்கு உறி காட்டுவது என்பர். திடீரென ஏதாவது ஒரு மாடு, பிடித்திருக்கும் இரண்டு கயிறுகளையும் தாண்டி, உறி காட்டுபவரை துரத்தியபடி ஓடுவதும் நடக்கும். உயிரைக் காப்பாற்ற உறி காட்டியவர் வேகமாக ஓடி ஒளிந்து கொள்வார். அப்போதெல்லாம் மிகவும் பயமாக இருக்கும். “ஆறுமுகம் மாடு வருது” என ஓட்டம் எடுக்க, எங்கள் பின்னால், ஆறுமுகம் ஓடிவர, உடனே வீட்டுக்கு திரும்பி வந்து விடுவோம். அப்பாவிடம் இதைப் பற்றி மூச்சு விட மாட்டோம். சில நாட்கள் கழித்து, ஆறுமுகம் உளறி விடுவான். “இதுக்குத் தான் வேணாம்னு சொன்னேன். நீ கேட்டாதான. பசங்க ஆசப்பட்டாங்கன்ன. ஏதாவது ஒண்ணு ஆகியிருந்தா, என்ன செய்யறது?” என அப்பா, அம்மாவிடம் திட்டுவது நடக்கும்.

எப்போதும் பொங்கல் என்றாலே எங்களுக்குக் கொண்டாட்டம் தான். பள்ளிக்கூடம் திறந்ததும், எல்லோருக்கும் சொல்வதற்கு ஒவ்வொரு கதையிருக்கும். ஒரு வாரத்திற்குக் கதைகளுக்குப் பஞ்சமிருக்காது.

மற்றொரு மறக்க முடியாத சிறப்பான அனுபவம், புரட்டாசி மாதம், கோதண்ட ராமரைக் கும்பிட கோதமலை மீது ஏறுவது. எட்டாவது ஒன்பதாவது படிக்கும் போது, இரண்டு முறை மலை ஏறியிருக்கிறேன். கூடப் படித்த நண்பன் சேகர்தான் அப்பாவிடம் ஆரம்பித்தான்: “இந்த தடவ மல ஏற கண்ணனையும் அனுப்பி வைங்கண்ணா”. “அவனுக்கு மல ஏறலாம் தெரியாது சேகரு. அதுவுமில்லாம செங்குத்தான மலை. வலதுபக்கம் பெரிய பள்ளமா இருக்குது. ஏதாவது ஒண்ணு ஆய்டிச்சின்னா, என்ன பண்றது” என்றார். “அப்பா, என்னால முடியும்ப்பா. நானும் போறன்” என்றேன். “ஏங்க பையன் ஆசப்படறான். போய்ட்டு வரட்டுமே. அதுதான் சந்துரு, சேகர் இரண்டு பேரு இருக்காங்களே”. “கண்ணா, போய்ட்டு வர்றன்னு சொல்லு. சேகரு, பத்திரமாப் போய்ட்டு வாங்கப்பா. வர்ற சனிக்கிழமை தானே” என்றாள் அம்மா. எனக்கு சந்தோஷத்தில் தலை கால் புரியவில்லை. இரண்டு நாட்களில் மலையேறுகிறோம் என்பது மிகவும் பெருமையாக இருந்தது.பள்ளியில் மற்றவர்களிடமும் பெருமை அடித்துக் கொண்டேன்.

அன்றைய சனிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை எடுத்துக் கொண்டோம். மலையேறுவதற்கு ஏறக்குறைய முப்பது பேருக்கு மேல் தயாராக இருந்தார்கள்.

அவரவர் வீடுகளில் பெருமாளைக்குப் பூஜை செய்தோம். காலையில் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து, பூஜை முடிந்ததும் சாப்பிட்டு விட்டுக் கிளம்பத் தயாரானோம்.

அப்பா, அம்மா, தாத்தா, ஆயா, அத்தை அனைவரிடமும் ஓடி ஓடிச் சொல்லி விட்டு, மற்றவர்களோடு சேர்ந்து கொண்டோம்.

இருவர் தொடர்ந்து வானம் போட்டார்கள். அதன் வெடிச்சத்தம் ரொம்ப தூரம் கேட்டது.

வீட்டிலிருந்து நானும் சந்துருவும் மாதேஸ்வரன் காட்டு வரப்பு வழியாக நடக்க ஆரம்பித்தோம். அவன் வீட்டைத் தாண்டியதும், ஒரு சிறிய படல். படலைத் திறந்து மலைக்குச் செல்லும் பாதையில் காலடி வைத்தோம். சேகரும் அவன் தம்பியும் சேர்ந்து கொண்டார்கள்.  பாதை முழுக்கக் கருங்கற்களாக இருந்தது. நடக்க மிகவும் சிரமமாக இருந்தது. கொஞ்சம் ஏமாந்தாலும் கற்களில் வழுக்கி கால் சுளுக்கி விடக்கூடும். ஆங்காங்கே கூறான கற்களும் இருந்தன.

சேகர் தான் கோவிந்தராஜிடம் சொன்னான்: “கூடப் படிக்கிறான், பேரு கண்ணன். இது அவங்க அண்ணன் சந்துரு”.

“முதல் முறையா மலை ஏற்றமா? கோதண்டராமன் காப்பாத்துவான். இப்படித்தான் என்னோட தம்பி மகன் வெங்கடேசனுக்கு ஏழரை. அவருதான் படிக்க வைச்சாரு. மேட்டுப்பட்டி பள்ளிக்கூடத்தில மொத மார்க்கு எடுத்தான். நல்லா கும்புட்டுக்கங்க” என்றார்.

“டே, சேகரு. பாம்பு இருக்குமாடா?”. “ஆமா, மலையடிவாரத்தில ஆலமரத்தடியிலேயே மலைப்பாம்பு இருக்கும். நானே ஒரு தடவ பார்த்திருக்கிறேன். ஆட்டுக்குட்டிய முழுங்கி விடும். ஆளு நீளத்துக்கு இருக்கும். எல்லோரும் புடிச்சிக்கிட்டு, மொளக்குச்சிகள சீவி, அதனோட ஒடம்புல, வரிசையா அடிச்சாத்தான் சாவுமாம்” என்றான்.

மலை அடிவாரத்தில் இருந்த ஆலமரத்தடியில் எல்லோரும் ஒன்று கூடினோம். எனக்கு எங்கே மலைப் பாம்பு வந்து விடுமோ என்ற பயம். அங்குமிங்கும் பார்த்துக் கொண்டே இருந்தேன். அங்கேயே ஒரு கற்பூரம் ஏற்றி அனைவரும் கும்பிட்டோம்.

மலை ஏற ஆரம்பித்தோம். ஏதோ கனவு போலிருந்தது.

எல்லோரும் ஏதோவொரு பொருளைச் சுமந்து கொண்டு நடந்தனர். சாமி அபிஷேகத்திற்கு இருவர் இரு குடங்களில் தண்ணீரைத் தலையில் சுமந்து கொண்டு நடந்தனர். கோவில் கொப்பரைச் சட்டியில் ஊற்றி, ஆளுக்குக் கொஞ்சம் எண்ணெயை எடுத்து வந்தார்கள். பூசாரி கோவிந்தராஜ் வயதானவர் என்பதால், சேகரின் அப்பா ராமசாமி, பூஜை சாமான்களை ஒரு கூடையில் எடுத்துக் கொண்டு நடந்தார்.

நானும் சந்துருவும் புதிது என்பதால் எங்களுக்கு தலைச் சுமை ஏதுமில்லை.

மலை செங்குத்தாக இருந்தது. பாதையென்று ஏதுமில்லை. இதுவரை நடந்தவர்கள் காலடி பட்டுத் தேய்ந்த ஒற்றையடிப் பாதைதான் தடம். எனக்கு முன்னால் பரமபத விளையாட்டில் இருக்கும் பெரிய பாம்பு போல வளைந்து நெளிந்து நீண்டு படுத்திருந்தது பாதை.

பாதை இருப்பதால் சிலசமயம் மாடுகள் இந்த வழியில் மேலே ஏறி கோதண்ட ராமசுவாமி கோவில் வரையிலும் சென்று விடுமாம். அங்கு பசும்புற்கள் இருப்பதாலும் பாழியில் தண்ணீர் கிடைப்பதாலும் மாடுகள் வீட்டை மறந்து விடுமாம். நான்கைந்து நாட்கள் பார்த்து விட்டு, யாராவது மேலே சென்று பார்த்து விட்டு ஓட்டிக் கொண்டு வருவார்களாம்.

தடத்தின் வலதுபுறம் பார்க்கவே பயமாக இருந்தது. அதல பாதாளமாக இருந்தது. விழுந்தால் எலும்பு கூட கிடைக்காது. ஆரம்பத்திலேயே எனக்கு சொல்லப்பட்ட ஒன்று, வலதுபுறம் திரும்பிப் பார்க்கக் கூடாது என்பதுதான்.

இடதுபுறம் பரவாயில்லை. ஓரளவு மேடாக இருந்தது. கல்லும் முள்ளுமாக இருந்தது.

கொஞ்ச நேரத்திலேயே கால்கள் வலிக்க ஆரம்பித்தது. நாக்கு வறண்டு போனது. எச்சிலால் உதட்டை ஈரப்படுத்திக் கொண்டேன். முன்னால் நடந்து கொண்டிருந்த சேகரிடம் மெதுவாக சொன்னேன்; ”சேகரு, காலு ரொம்ப வலிக்குதுடா. இன்னும் எவ்வளவு தூரம் போகனும்?”. “இன்னும் கொஞ்ச நேரத்தில நெல பெருமாள் கோவில் வந்துடும். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கலாம்” என்றான். அவன் சொல்லியது போல கொஞ்ச நேரத்தில் எதுவும் வரவில்லை. மறுபடியும் ஆரம்பித்தேன்: ”சேகரு, எப்படா வரும்?”. “இன்னும் கொஞ்ச நேரம்” என்றான்.

பதினைந்து இருபது நிமிடங்கள் கழித்து, தடத்தின் இடதுபுறம் ஒரு சமவெளி போல ஒரு இடம் வந்ததும் எல்லோரும் நின்றனர். தலையிலிருந்த பாரத்தை இறக்கி விட்டு அனைவரும் சற்று நேரம் அமர்ந்தனர்.

பூசாரி கோவிந்தராஜ் ஆரம்பித்தார்: ”எல்லாரும் எந்திரிங்கப்பா. நெல பெருமாளுக்குக் கற்பூரம் காமிக்கனும் “. எல்லோரும் எழுந்து நிற்க, பூசாரி அங்கிருந்த பெருமாளை தண்ணீரால் சுத்தம் செய்து, நாமம் போட்டார். கொண்டு வந்திருந்த பூக்களைத் தூவினார். துளசி மாலையை அணிவித்தார். ஊதுபத்தி காண்பித்துப் பின்னர், கற்பூரம் ஏற்றினார். வானம் போட ஆரம்பித்தனர்.

எல்லோரும் நெல பெருமாளை வணங்கி விட்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தோம்.

“டேய் சேகரு, இன்னும் எவ்வளவு தூரம் டா?” என்றேன். “இன்னும் கொஞ்ச நேரத்தில போயிடலாம்” என்றான் வழக்கம்போல.

குறைந்தது அரை மணிநேரம் நடந்திருப்போம். திடீரென ஒரு சமதளமான பகுதி வந்தது. கோவிலுக்கு வந்து விட்டோம் என்று புரிந்து கொண்டேன். எல்லோரும் ஆளுக்கொரு பாறையிலோ, தரையிலோ அமர்ந்தோம். எனக்கு கால்களில் சரியான வலி. கால்களை நன்றாக நீட்டியபடி தரையில் அமர்ந்து விட்டேன். அண்ணன் சந்துருவும் வலியிலிருக்கிறான் என்று அவன் முகத்தைப் பார்த்ததுமே தெரிந்தது.

கோவிந்தராஜ் தான் ஆரம்பித்தார்: ”மசமசன்னு நின்னது போதும். வேலய ஆரம்பிச்சா தான், இருட்டு கட்டறதுக்குள்ள சாமி கும்பிட்டு முடிக்க முடியும்”. வரிசையாக கட்டளைகள் பறந்தன.

அந்த சமதளப்பகுதியின் வலதுபுறம் ஒரு சிறிய கல்கட்டு கட்டப்பட்ட சதுரமான ஒரு பகுதி இருந்தது. அதன் நடுப்பகுதியில் மூன்று கருங்கற்கள் இருந்தன. நடுவில் இருந்தது சற்றே பெரிய ஒன்று. அதுதான் கோதண்ட ராமசுவாமி என சேகர் விளக்கினான்.

கோவிந்தராஜ் தான் ஆரம்பத்தில் இருந்து பூஜை செய்கிறார். அவரால் முடியாத போது, அவரது தம்பி பொன்ராம் செய்தார். அவர்கள் இருவருக்கும் செல்லியம்மன் கிராமத்து ஆரம்பத்தில் ரோடு மீது இருந்த கோதண்ட ராமருக்கு பாத்தியதைப் பட்ட இரண்டு ஏக்கர் நிலத்தில் சிறிய வீடு இருந்தது. அதில் விளையும் பயிர்கள் அவர்கள் உபயோகத்திற்கு. சோளம் போன்றதைப் பயிரிட்டார்கள்.

கோவிந்தராஜ் “தண்ணி கொடம் எடுத்துட்டு வாங்க என்றார்” . அவரைத் தவிர வேறு யாருக்கும் சாமிக்கு அருகில் செல்ல அனுமதியில்லை.

குடங்களை வாங்கி சாமிகளை நன்றாகக் கழுவினார். சுற்றிலும் மண்ணிலிருந்த குப்பைகளைக் கூட்டிய பின்னர், தண்ணீர் தெளித்தார். மண் ஓரளவுக்கு அடங்கியது போலிருந்தது. அலங்காரம் செய்ய ஆரம்பித்தார். நாமக் கட்டியால் இரண்டு பெரிய நாமங்களை வரைந்தார். பிறகு குங்குமத்தை எடுத்து நாமத்தின் நடுவில் கோடு போட்டார். இப்படியே மூன்று சாமிகளுக்கும் நாமம் வரைந்து முடித்தார். “அந்தப் பூவெல்லாம் எடுத்துட்டு வாங்கப்பா” என்றார். நாங்கள் ஓடிப்போய் பூக்களைக் கொடுத்தோம். மலர்களாலான மாலைகளை சாதியைச் சுற்றிக் கட்டி விட்டு, இதழ்கள் அகற்றப் பட்ட பூக்களை சாமியின் தலையில் குவியலாக வைத்தார். பிறகு துளசி மாலைகளை அணிவித்தார். “அலங்காரம் முடிஞ்சது. எண்ணெய் ஊத்தி கோடி ஏத்திடலாம்”.

சாமிக்கு முன்னால், கல்கட்டு தாண்டி ஒரு சிறிய தூண் போன்ற நீண்ட கருங்கல் நின்றிருந்தது. அதன் மீது ஒரு பெரிய எண்ணைக் கொப்பரை இருந்தது. எல்லோரும் கொண்டு வந்த எண்ணையைக் கொடுக்க, கோவிந்தராஜ் ஊற்ற ஆரம்பித்தார். பிறகு நூலால் திரிக்கப் பட்ட பெரிய திரியைப் போட்டு விளக்கேற்றினார்.

“எல்லோரும் வாங்கப்பா. பூஜைய ஆரம்பிச்சிடலாம்” என்றபடியே கல்கட்டுக்குள் வந்தார். மந்திரங்கள் ஓதிய படியே, ஊதுபத்தி கொளுத்தி காண்பித்து விட்டு, சாம்பிராணி தூபம் காட்டி விட்டு, தேங்காய் உடைத்து பின்னர் தீர்த்தம் தெளித்தார். பூஜைக்கான தட்டில் கட்டிக் கற்பூரம் ஏற்றி, தீபாராதனை காட்டி ஆரம்பித்தார். வரிசையாக வானம் போட ஆரம்பித்தனர். எல்லோருக்கும் தீபாராதனை காட்டிய பின் தீர்த்தமும் துளசியும் கொடுத்தார்.

வாக்கு கேட்பது ஆரம்பமானது. முதலில் இன்றைய பூஜையை கோதண்டராமன் ஏற்றுக் கொண்டாரா? என்று ஆரம்பித்தார். வலதுபுறமும் நாமத்தின் நடுவிலும் பூ விழுந்தால் நல்லது. நினைத்தது நடக்கும். இடது புறமும் பின்புறமும் கெட்டது. வேண்டிக்கொண்டது நடக்காது.

வலதுபுறம் பூ விழுந்ததில், சாமி பூஜையை ஏற்றுக் கொண்டதில், அனைவருக்கும் மகிழ்ச்சி.

அடுத்து பொது வாக்கு. எல்லோரும் சாமியையே பார்த்துக் கொண்டு கைகூப்பி வணங்கி நின்றார்கள். எல்லோர் முகத்திலும் பக்திப் பரவசம். சிறிது நேரம் கழித்து, பூவின் ஒரு இதழ் வலது புறம் நழுவி மெதுவாக கோதண்ட ராமரின் காலடியில் விழுந்தது. எல்லோரும் கோவிந்தா கோவிந்தா எனப்பக்திப் பரவசத்தில் சொல்ல ஆரம்பித்தனர். சந்தோஷமாக கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள்.

இது நடந்து கொண்டிருக்கும் போதே, மற்றொரு குரூப் சமையலுக்கு ரெடி செய்து கொண்டிருந்தனர்.

அடுத்தது, தனிப்பட்ட வாக்கு. இந்த முறை முப்பது பேர் வந்திருந்தனர். சேகரின் அப்பா ராமசாமி ஆரம்பித்தார். கண்களை மூடி வேண்டிக்கொண்டு, பூசாரியிடம் சொல்ல, பூக்களை சாமியின் தலையில் குவியலாக வைத்தார்.

“நல்ல வாக்கு குடுப்பா, கோதண்ட ராமா” என வாய்விட்டு கேட்டுக் கொண்டார். கைகூப்பி வணங்கி நின்றிருந்தார்.  சிறிது நேரம் கழித்து பூவின் ஒரு இதழ் நாமத்தின் நடுவில் நழுவி கீழே சுவாமியின் காலடியில் விழுந்தது. சேகர் அப்பாவுக்கு மிகுந்த சந்தோஷம். சேகர் அண்ணனுக்குப் பொண்ணு வாக்கு கேட்டிருப்பார் என சேகர் பிறகு சொன்னான்.

நீர்முளிக்குட்டையிலிருந்து ஐந்து பேருக்கு மேல் வந்திருந்தனர். தனி வாக்கு கேட்பது ஒரு மணி நேரத்திற்கு மேல் நீண்டது. ஒரு சிலரைத் தவிர எல்லோருக்கும் நல்ல வாக்கு. வாக்கு சரியாக வராததால் சிலர் மிகவும் சோகமாக இருந்தனர்.

வாக்கு கேட்பது முடிந்ததும் எல்லோரும் கீழே விழுந்து வணங்கினோம். இடையில் சமையலுக்குத் தண்ணீர் பற்றவில்லை என, ஒரு சிலர் அருகிலுள்ள பாழிக்குத் தண்ணீர் எடுக்கச் சென்றனர். நான் அங்கு சென்றதில்லை. அரை கிலோ மீட்டர் தூரத்தில், ஒரு பாறைக்கு அடியில் சிறிய ஊற்று வந்து கொண்டிருந்தது. கொட்டாய் குச்சியில் நீண்ட கைப்பிடி செய்து தண்ணீரை குடத்தில் மொண்டு மொண்டு ஊற்றினார்கள். இடையில் குரங்குகள் தொந்தரவு வேறு.

சிறிது நேரத்தில் உணவு தயாராக இருந்தது. “எல்லாரும் வரிசையா உக்காருங்கப்பா. சின்ன பசங்களையும் வயசான ஆளுங்களையும் மொதல்ல ஒக்கார வைங்க” என்றார் ராமசாமி.

வாழையிலையில் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. தண்ணீர் போன்ற பருப்பு சாம்பார், கெட்டியான காரமான ரசம், பூசணிக்காய் பரிமாறப்பட்டது. களைப்பில் நல்ல பசியென்பதால், நிறைய சாப்பிட்டோம்.

இரவு தங்கல் என்று தெரிந்தாலும், எங்கு, எப்படித் தூங்குவது எனத் தெரியவில்லை. “சேகரு, எங்கடா தூங்கறது? பாம்பு எதுவும் வராது இல்ல?” என்றேன். “சாப்பிட்ட இடத்துலேயே பெட் சீட்டை விரிச்சு படுக்க வேண்டியது தான். இல்லன்னா பாயி. ஆளு நடமாட்டம் நிறைய இருக்கிறதனால, பாம்பு பயம் இல்லை”.

இருந்தாலும் பயமாகத்தான் இருந்தது. அண்ணன் சந்துருவும் சேகரும் எங்கு படுக்கிறார்கள் என்று பார்த்து விட்டு, அருகிலேயே படுத்துக் கொண்டேன்.

சேகர் அப்பா ராமசாமி எங்கள் பக்கத்தில் வந்து பேச ஆரம்பித்தார். “இப்படித்தான் கண்ணா, ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னாடி, மல ஏறரதுக்கு வசதியா, ஆளுங்க தடத்தில இருக்க முள்ளு செடியெல்லாம் வெட்டி, பாதயிலத் தொந்தரவு இல்லாம பாத்துக்குவாங்க. நானு சாப்பாடு கொண்டு போயி கொடுக்கறது வழக்கம். அன்னிக்குனு பாத்துக் காட்டுல ஏகப்பட்ட வேல. சாப்பாட்டப் பத்தி மறந்தே போய்ட்டேன். இவங்களும் நான் வருவன்னுக் காத்துக் கிட்டு இருந்து களச்சிப் போய்ட்டாங்க. சரி, தண்ணி குடிச்சிட்டு கீழ எறங்கி வேண்டியது தான் முடிவு செஞ்சிட்டு, கோவிலத் தாண்டி, சாப்புடற எடத்துக்குப் போறாங்களாம். பாத்தா, கொழம்பு ரசத்தோட சாப்பாடு வாழ இலயிலப் போட்டு மூடி வைச்சிருந்ததாம். எல்லாரும் வயிறார சாப்புட்டு கீழ வந்து சொன்னப்ப, வருத்தமெல்லாம் போயிடுச்சு. கோயிந்தா கோயிந்தான்னு என்னய மறந்து சொல்லிக்கிட்டே இருந்தன்”.

கேட்ட நாங்களும் கோவிந்தா போட்டோம்.

பலரும் வெகு நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள். “காலையில வெள்ளன எழுந்திரிச்சிக் கெளம்பனும்ப்பா. அப்பதான் வெயிலுக்கு முன்னால் ஊடு போயிச் சேர் முடியும். பேசுனது போதும், படுங்கப்பா” என்றார் கோவிந்தராஜ்.

காலையில் எல்லோரும் விடிகாலையிலேயே எழுந்து விட்டோம். ராமசாமி அண்ணன் எல்லோருக்கும் வரக்காப்பி வைத்துக் கொடுத்தார். பாத்திரங்களையும் மீதி சாமான்களையும் எல்லோரும் பிரித்துக் கொண்டு கீழிறங்க ஆயத்தமாகினர். வானம் வரிசையாக போடப்பட்டது.

கோவிந்தராஜ், வயதானவர்கள் மற்றும் நாங்களெல்லோரும் குச்சிகளை ஊன்றி இறங்கினோம். இளந்தாரிகள் ஏற்கெனவே பலமுறை இங்கு வந்தவர்கள் படபடவென இறங்க ஆரம்பித்தனர். நான் தான் ஒவ்வொரு முறை சறுக்கும் போதும், சந்துருவின் கையைப் பிடித்துக் கொண்டு, பயத்தில் அலறினேன்.

சற்று நேரத்தில் நெல பெருமாள் கோவிலை அடைந்தோம். வானம் வரிசையாக போடப்பட்டது. அனைவரும் கும்பிட்டோம்.

பயணம் மீண்டும் தொடங்கியது. கால்கள் நடுங்க ஆரம்பித்தன. மிக மெதுவாக இறங்க ஆரம்பித்தேன். “கண்ணா, கொஞ்சம் வேகமா நட. பாரு, எல்லாரும் போய்ட்டாங்க. நாம்தான் கடசி” என்றான் சேகர்.

கொஞ்சம் வேகத்தை அதிகரித்தேன். ஆனாலும் பயமும் கால் நடுக்கமும் தொடர்ந்தது.

மூன்று மணிநேரம் கழித்து அடிவாரத்தை அடைந்தோம். ஆலமரத்தடியில் எல்லோரும் சற்று நேரம் அமர்ந்தனர். ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தோம். “சாமிகளா, பத்திரமா வீட்டுக்கு வந்துட்டிங்களா. தண்ணி ஊத்திக்கிட்டு சாப்புடுங்க’ என்றது ஆயா. “என்னய ஏமாத்தி, உட்டுட்டுப் போய்ட்டானுங்க. அடுத்த வருஷம் கட்டாயம் நானும் போவன்” என்றான் தம்பி ராஜ்.

“சரிங்கண்ணா, நான் கெளம்பறன். கண்ணா, நாளைக்கு ஸ்கூல் இருக்குது. காலையில ரெடியா இரு” என்று சொல்லிக் கிளம்பினான் சேகர்.

-வளரும்.

கண்ணன்

வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி. முதல் கவிதை விருட்சத்தில் 30 வருடங்களுக்கும் முன்பு வெளியாகியது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *