பகுதி 1
“யாருங்க இவங்கல்லாம்?” ஆச்சர்யத்தில் விரிந்த பவித்ராவின் கண்கள் அவள் கையிலிருந்த ஃபோட்டோவையும் என்னையும் மாறி மாறிப் பார்த்தன. அறியாத விருந்தாளி்களின் வருகையையொட்டி கதவைத் திறந்ததும், தடுமாற்றத்தில் பூக்கும் புன்னகையை போல அவளது முகபாவனைகள் எனது பதில்களுக்கு எதிர்நோக்கிக் கொண்டிருந்தன.
அவளிடம் என்ன சொல்வது? எதிலிருந்து ஆரம்பிப்பது? எனத் தெரியாமல், தவிர்ப்பது போல் மருகினாலும் எனக்குள் சொல்லொண்ணா ஆனந்த ரேகைகள் உள்ளூர வேர்ப் பிடித்து எங்கெங்கோ கிளைத்தோடிக்கொண்டிருந்தன.
குறிப்பிட்ட புகைப்படத்தை எனது சான்றிதழ்கள், முக்கிய கோப்புகள், ஆவணங்கள், என அனைத்தையும் பத்திரப்படுத்தி வரும் ஃபைலின் லீஃபொன்றில் மேற்சொன்ன இத்யாதிகளுக்கு நடுவே என்றோ ஒரு நாள் அவரசத்தில் திணித்து வைத்தது இன்றுதான் ஞாபகத்திற்கும் வந்தது.
மறைத்து வைத்திருந்தேன் என்றும் சொல்லலாம். மறைத்து வைத்திருந்தேன் என்பதை விட அந்த ஃபோட்டோவை பாதுகாக்க அச்சமயம் சரியான இடமென்று வேறு எதுவும் தோணாதலால், அவசர கதியில் ஃபைலில் ஏதோ ஒரு இடுக்கில் அவ்வாறுச் சொருகிவிட்டிருந்திருக்கிறேன். அட அந்த வெளிர் பிரவுன் கவரும் கொஞ்சமும் மாறவில்லையே! சிறிதும் மங்கவில்லையே! என்று லயித்தவனாய், முகத்தில் சந்தோஷ குறிப்புகளோடுத் தடவிப் பார்த்தேன்.
அந்த புகைப்படம் 2006ல் எடுத்தது. அதற்குப்பிறகு ஒரு நாள் 2008ல் அலுவகத்தில் புதிதாக சேர்ந்து, என்னிடம் பழக ஆரம்பித்திருந்த ஆந்திர நண்பன் சத்திய நாராயணாவிடம் காட்டியிருக்கிறேன். அதுவும் அவனுடைய பூர்வீகம் குண்டூர் என்று சொன்னதும் சட்டென றெக்கைக் கட்டிக் கொண்ட ஒரு இயல்பான ஆர்வக்கோளாறில்!
ஒரே அறை நண்பர்கள் வேறு; பேச்சின் தொடர்ச்சியில் தாளவோ தவிர்க்கவோ முடியாமல் அந்த புகைப்படத்தின் பின்னணியைப் பற்றி ஒன்று விடாமல் பகிரும் நிலைக்கு நான் ஆளாகியிருந்தேன். சில நேரங்களில் அழுதும் மனதை ஆற்றியிருக்கிறேன். நான் சொல்லச் சொல்ல கதையை உருக்கமாகக் கேட்டுக் கொண்டிருந்த சத்யாவால், இறுதியில் பாவமாக ஒரு உச்சு மட்டுமேக் கொட்ட முடிந்தது. அதெல்லாம் நினைத்தால் இப்போது சிரிப்புதான் வருகிறது.
என்ன செய்ய அப்போது எங்களது உரையாடல்களுக்கு மத்தியில் இயல்பாகவே குண்டூர் கதைகளும் எப்படியோ தொற்றிக் கொண்டுவிடும். அந்த நாட்களை நினைவு கூறுகையில் எங்கிருங்தோ தூரத்திருந்து மினுங்கும் நட்சத்திரத்தின் ஒளிஅசைவைப் போல ஏதோ ஒரு மகிழ்ச்சியும், பெருமூச்சும் இன்று வரை என்னிடம் எட்டிப் பார்க்கவேச் செய்கிறது! இதில் இன்னொரு விடயமும் உண்டு; அவனிடம் சொன்னது 2006 வரை நடந்தேறிய நிகழ்வுகள் மட்டுமே.
அதற்கே இன்று வரை அவனை சந்திக்கும் சந்தர்ப்பங்களில் அதையொட்டி அவன் செய்யும் கிண்டலுக்கும் கேலிகளுக்கும் அளவிருக்காது.
அதன்பிறகு கீதாவின் ஞாபகங்கள் தொடர்மழையைப் போல என்னை பீடித்துக் கொள்ளும் வேளைகளில் அந்த புகைப்படத்தை எடுத்துப் பார்ப்பதுண்டு. குறிப்பாக கவனத்தை ஈர்க்கும் காதலர்கள் யாரையும் வழியில் பார்த்தால், இரசனையான, நெருக்கமான காதல் படங்களில் மூழ்க நேரிட்டால், ஏன் அனுக்கமாகும் சில குழந்தைகளைக் கண்டாலும் கூட அந்த துய்ப்பில், தூண்டுதலில் சில மணி நேரங்கள் அவள் நினைவலைகளில் திளைத்திருப்பேன்.
எனக்கு பெண் பார்க்கத் தொடங்கிவிட்டதையடுத்து அதுவும் நின்றுப் போய்விட்டது என்பதை விட நிறுத்திக் கொண்டேன்; அந்த புகைப்படத்தை எடுத்துப் பார்ப்பதை அறவேத் தவிர்த்தும் விட்டேன். ஆனால் அதை கிழித்துப் போடவோ, எரிக்கவோ மனம் வரவேயில்லை. புத்தகத்தின் நடுவே ஒளித்து வைக்கப்பட்ட மயிலிறகைப் போல இன்று பிரித்துப் பார்க்க நேர்ந்தது நிச்சயம் எதிர்பாராதொரு கொடைமழைதான். என்னுள் சிரிப்பு மின்னல்கள் வெடிப்பது போல் வெட்டிக்கொண்டிருந்தன.
ஆழ்ந்த களிப்பில் என்னுடைய முகம் போன பிசகைப் பார்த்து விட்டு, மீண்டும் ‘யாருங்க..?’ என்று அதே ஆச்சர்யமும் புன்னகையும் மாறாமல் கேட்டாள். பவித்ராவை சமாளிப்பது அப்படியொன்றும் தலைப்போற காரியமில்லை. அப்படி தலைப்போகும் அளவிற்கு அந்த புகைப்படத்திலும் ஏதுமில்லை என்பதுதான் உண்மை.
திருமணம் ஆனதிலிருந்து எனக்கான சின்னச் சின்ன வேலைகள் செய்வதில் கூட அதிக சோம்பறித்தனம் கூடிவிட்டதால், எனது பழைய ஃபைலிருந்த டாக்குமெண்ட்ஸை எல்லாம் வேறொன்றில் மாற்றித் தரும்படி பவித்ராவை நான்தான் கேட்டிருந்தேன். அதனால்தான் அவளும் அந்த ஃபோட்டோவை எதார்த்தமாகப் பார்க்கும்படி ஆயிற்று.
“அவங்களா..? அவங்கெல்லாம் நான் குண்ட்டூரூல இருந்தப்ப, ஃபேக்டரில வேல செஞ்ச லேடீஸ்ப்பா” சொல்லிக் கொண்டிருந்தபோதே மனதில் யுவனின் மென்மையான துள்ளிசையொன்று எழத் தொடங்கியது போன்றதொரு லயிப்பு. அதன் நீட்சியாக எனது விரல்கள் பவித்ரா அணிந்திருந்த சிவப்பு – நீல வளையல்களை எண்ணுவது போல் அவைகளைத் தொட்டு தொட்டு நகர்த்திக் கொண்டிருந்தன. அவளுக்கும் கூட எனது திடீர் பிரகாசமும், வெட்கத்தில் அல்லாடிக் கொண்டிருந்த முகமும், புதிர் போடும் செய்கைகளும் புதுமையாகத் தோன்றிருக்கக் கூடும்.
சட்டென சுதாரித்துக் கொண்டேன் என்றாலும் மற்ற சிலரின் மனைவிகள் போலில்லை அவள். உரிமைகளைத் தாண்டி எதையும் நேர்கொண்டப் பார்வையோடு அணுகுபவள். குறிப்பாக என்னை முழுவதுமாக நம்புபவள். இந்த பொஸசிவ் என்ற பெயரில், மைனா படத்தில் வரும் சூசனைப் போல சிலரின் மனைவிகள் சந்தேகப்பேய்களாய் எந்நேரமும் கண்காணித்துக் கொண்டிருப்பார்களே அப்படியெல்லாம் இல்லை அவள்.
அதனாலேயே அப்போதைக்கு அதைப் பற்றிய முழு விபரங்களையும் சொல்ல முடியாவிட்டாலும், முடிந்ததை பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டேன். அதற்கு நான் அந்த பெண்களின் மீது காட்டி வந்த அபிமானமும், அவர்கள் என் மீது வைத்திருந்த மதிப்பு, மரியாதை, நம்பிக்கை என என்னுடைய அனுபவங்களை அடுக்கடுக்காய் சிலாகித்துக் கொண்டேப் போகலாம்.
“இது, நான் அங்கிருந்து கடைசியாப் புறப்பட்டு வரும்போது, நியாபகார்த்தமா அவங்க எனக்காக எடுத்து வந்துக் கொடுத்த படம்ப்பா!” சொன்னபோது தேன் சுவைத்தவனாய் எனக்குள் நானே இன்புற்றுக்கொண்டேன்.
“ஓ..!” என்று அவளும் மீண்டும் அந்த புகைப்படத்தைப் பார்த்தபடி ஒரு அர்த்தப் புன்னகை வீசினாள். ஆனால் இன்று யோசித்தால்தான் புரிகிறது அப்போது அவர்கள் எல்லோரும் எனக்காக ஸ்டூடியோ வரை சென்று போட்டோ பிடித்து வைத்துக் கொடுத்ததெல்லாம் எவ்வளவு பெரிய அர்ப்பணிப்பென்று! அந்த இருபத்து நான்கு வயதில் எனக்கும்தான் என்ன பக்குவங்கள் இருந்திருக்கப் போகிறது?
அதில் மொத்தம் பதினாறு பேர் மலர்ந்த முகமாய் விதவிதமாய்… பூத்துக் குலுங்கிக் சிரித்துக் கொண்டிருக்கும் ஒரு ரோஜாவனத்தை போல நின்றுக்கொண்டிருந்தார்கள், அவளைத் தவிர! கோட்டேஸ்வரி அம்மா, மல்லேஸ்வரி, விஜயா, புஷ்ப லதா, பாரதி… என அனைவரையும் பற்றி பேச நிறைய இருக்கின்றன. எனக்கும் சொல்ல துடித்தது மனசு. அப்படி ஒவ்வொருவரையும் காட்டி அவர்களைப் பற்றி ஓரிரு வார்த்தைகளிலாவது அவளிடம் பகிர்ந்து கொள்ள நினைத்தாலும் பவித்ராவிடம் கீதாவை யார் என்று அறிமுகப்படுத்துவேன்?
ஒரு குளிரிரவில் சிமிலிக்குள் ஆடும் தீஞ்சுடர் போல் கீதாவின் உருவம் மீண்டும் என்னை அசைக்கத் தொடங்கியது.
கூட்டத்தில் அவள் மட்டும்தான் திருஷ்டிபட்டது போல்… தனது தேவதைகளின் சிறகுகளை இழந்து, முகமொடுங்கி, இரண்டு கைகளையும் ஒன்றொன்றுக் கோர்த்தபடி… என்னை… என்னை ஊடுருவிப் பார்ப்பது போல்.. பார்த்துக்கொண்டிருந்தாள். உன்னை இனிமேல் காணவே முடியாதா என்பது போல்… தனக்கு பிடித்தமான துணிமணிகள் அத்தனையையும் இனி உடுத்தி மகிழும் நாளே தனக்கு வரப்போவதில்லை என்று கொள்ளாதப் பெட்டியொன்றில் அத்தனையையும் அடைத்துப் பூட்டியது போல் நின்றுக்கொண்டிருந்தாள். ‘அப்டிப் பாக்காதே கீதா..!’ என என் மனம் விம்மியது.
எந்நேரமும் வெடித்துவிடக் கூடுமளவிற்கு உணர்ச்சிப்பெருக்குகள் அவள் நெஞ்சு வரை முட்டிக்கொண்டு நின்றன. அதுதான்… அந்த பார்வைதான் என்னையும் பல நாட்கள் என்னை துரத்திக் கொண்டிருந்தது. என் இரவுகளை கண்ணீராக்கிக் கொண்டிருந்தது, காயங்களுக்கு காதலனாக்கியது. பிறகு நாட்கள் செல்லச் செல்ல வாழ்வி்ன் எதார்த்தங்கள் உணர்ந்து வடுக்களை வருடி சுகிக்கும் ஒரு சாதாரண மனிதப் பிண்டமாகி சில காலம் திரிந்துக் கொண்டிருந்தேன்.
“என்னங்க…?” பவித்ராவின் குரல் கேட்டு, எதிர்பாராத நீண்ட நினைவுகளிருந்து மீண்டு வந்தேன். கண்ணீர் விட்டுவிட்டானா..?! தொட்டுப் பார்க்க கையெழுந்தும், அப்படியெல்லாம் இருக்காது என என்னை சாதாரணமாக்கிக் கொள்ள முனைந்தேன்.
அந்த உரையாடலை அதற்கு மேல் தொடர விரும்பவில்லை. ஒரு சிரிப்பை வரவழைத்துக் கொண்டு, பவித்ராவிற்கு நானும் உதவி செய்வது போல வேலையைத் துரிதப்படுத்தினேன்.
அந்த ஃபைலில் எனது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் முதல் இது போல ஒன்றிரெண்டு நினைவுப்படங்களும் கூட அங்கங்கு நுழைக்கப்பட்டிருக்கவே, அவைகளுடன் இதையும் சேர்த்து வைத்ததனால் அவளும் அந்த புகைப்படத்தைப் பற்றி மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை. விளையாட வெளியில் சென்றிருந்த பிள்ளைகள் வாசலிலிருந்து அவளை அழைத்துக்கொண்டிருந்தனர். என்னை எப்போதும் நிம்மதிப்படுத்தும் தனக்கே உரிய புன்னகையோடு பவித்ராவும் தனது மற்ற வேலைகளைத் தொடர ஆரம்பித்துவிட்டாள்.
***
எம்.ஏ. எக்கனாமிக்ஸ் முடித்த பிறகு, எனது வகுப்பு நண்பன் இளங்கோவுடைய அண்ணன் மூலமாக முதன் முதலில் ஒரு வாட்டர் கம்பெனியில் சூப்பர்வைசர் வேலைக் கிடைத்தது. கம்பெனியின் ஆபிஸ், ஸ்டோர் எல்லாம் சென்னை போரூரில் இருந்தாலும், பிளான்ட் கும்மிடிப்பூண்டி பக்கம் அமைக்கப்பட்டிருந்தது.
அது தமிழ்நாடு – ஆந்திர எல்லை, நட்டநடுவே ஒரு வயல்காட்டிற்குள் வாட்டர் பிளாண்ட்டை அமைத்திருந்தனர். அங்கேதான் எனக்கு வேலை. ப்ரொடக்ஷன் இரவு, பகலென எல்லா நேரங்களிலும் நடக்கும். எப்போது வேண்டுமானாலும் நடக்கும். ஆர்டர் மற்றும் மூவ்மெண்ட்டைப் பொறுத்து பிளான்ட் ரன் ஆகும் என்பதால், எனக்கான தங்குமிடத்தை அங்கேயே ஏற்பாடு செய்துத் தந்திருந்தார்கள்.
அதில் எனக்கு நிறைய சிக்கல்கள் இருந்தன. டெக்னிக்கலாக நான் இருந்தது தண்ணியில்லா காடு என்று சொல்ல முடியாது. என்றாலும் அந்த இருபத்தி ரெண்டு வயதில், எல்லா நண்பர்களும் சென்னையில் பணி புரிய நான் மட்டும் எப்படா ஞாயிறு வரும் என்று மற்ற நாட்களை கையில் பிடித்துக் கொண்டிருப்பேன். ஜெயில் வாழ்க்கையை போல், சேர்ந்ததிலிருந்து ஏதோ பேருக்கு ஓடிக்கொண்டிருந்தது.
அதிலும் அங்கே ஆஞ்சனேயலு என்று வாட்டசாட்டமான ஒரு தெலுங்கு பெரியவர் இருந்தார். வயது அறுபது இருக்கும். அவர் வைத்ததுதான் அங்கு சட்டம். முதலாளிக்கு மிக நெருக்கமானவர் என்பதால் தனது செல்வாக்கை, அதிகாரம் போல முதலாளிக்கு நிகராகக் காட்டி வந்தார்.
இதில் முதலாளியைப் பற்றியும் கூற வேண்டும். மிகவும் அதிரிபுதிரியான மனிதர். பார்க்க நடிகை தேவயானியின் கணவர் ராஜகுமாரன் போல இருப்பார். அடிப்படையில் அவர் ஒரு சமையற்கலை வல்லுநர், அதாவது விசேங்களுக்கு தேவைகளுக்கேற்ப செய்துகொடுக்கும் பண்டாரி என்றாலும் அவருக்கு இன்னும் சில சுவாரசியமான திறமைகளும் இருந்தன. அதில் முக்கியமானது குறிப் பார்ப்பது, அருள் வாக்கு சொல்வது.
அவர் சொன்ன வாக்கின் பேரில்தான் அந்த நட்ட நடு வயற்காட்டில் வாட்டர் பிளாண்ட்டை ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால் சுற்று வட்டாரத்தில் கிணறு மற்றும் போர்வெல் போட வேண்டுமென்றால் ஓனரைத்தான் அழைப்பார்கள். அதில் பாதிக்கு பாதி பொய்த்துப் போகுமென்றாலும், அதை லாவகமாய் சம்பந்தப்பட்டவருக்கு ஜாதகம் சரியில்லை, அவருக்கு நீர் சம்பந்தபட்டதில் இது போல் எப்போதும் விரயமே உண்டாகும் என ஏதாவது ஒன்றை சொல்லிச் சமாளித்துவிடுவாராம்!
சுப்பாராவ்தான் இதையெல்லாம் எனக்கு சொல்வான். சுப்பாராவ் அங்கு வேலை செய்துக்கொண்டிருந்த பணியாட்களில் ஒருவன் என்றாலும், அவனுடைய பெண்மைக் கலந்த ஒரு வகையானப் பேச்சும், நளினமும் முதலாளியிடத்தில் தனி ஒரு நெருக்கத்தைப் பெற்றுத் தந்திருந்தது.
சுப்பாராவ்தான், முதலாளி மது அருந்தும் நேரங்களில் அவர் கூடவே இருந்து எடுத்துக்கொடுத்து எல்லா சேவகங்களும் புரிந்து வந்தது. அதனால் அவனுக்கு கூடுதல் வருமானமும் ஆச்சு, அவர் போதையில் உளறிக்கொட்டுவதையெல்லாம் பொழுது போக கேட்டதுமாச்சி என்று என்னிடம் சொல்லி சிரிப்பான்.
அவர் அம்மன் வேஷம் கட்டியும் ஆடுவார் தெரியுமா? என்று என்னை ஒரு முறை பயமுறுத்தவும் செய்தான். அது திருப்பாச்சி படத்தில் வரும் ‘கும்மிட போன தெய்வம்’ பாட்டு பிரபலமாகிக் கொண்டிருந்த சமயம்… சாயா சிங் வேடத்தில் ஓனரை கற்பனை செய்துப் பார்த்தேன். ஹாஹ்ஹா! கொள்ளெனச் சிரித்துவிட்டேன்!
இங்கே இன்னொன்றையும் நான் கூறியாக வேண்டும். எனக்கு சினிமா ரொம்ப பிடிக்கும் என்பதை விட நான் சினிமா பைத்தியம், வெறியன் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கேதும் கவுரவக் குறைச்சலும் இல்லை. எல்லாவற்றிற்கும் சினிமாப்படங்களிலிருந்தே மேற்கோள்கள் எடுத்து விவரிக்குமளவிற்கு சினிமா என் நாடி நரம்பெல்லாம் புகுந்து பின்னிப் பிணைந்து, ஊறிக் கிடந்திருந்தது. டைரக்டர் ஆகும் கனவு என்னுள் இரகசியமாக வளர்ந்து வந்த காலக்கட்டமும் கூட.
அந்த ஆஞ்சநேயலு தாத்தா எப்போதுமே எதையாவது சொல்லி சொல்லி என்னை சீண்டிக் கொண்டிருப்பார். படிச்சவனெல்லாம் தன் முன் ஒன்றுமே இல்லை என்று அவ்வப்போது என் வேலைகளிலும் கூட குறுக்கிட்டு இடையூறுகள் செய்வார். சில வேளைகளில் அவை நல்லதுக்கே என்றாலும், அவரின் தலையீடல்களை நான் விரும்பவில்லை. எல்லோருமுன் என்னை அவருடைய உதவியாள் போல நடத்தி வந்ததை எனது ஈகோ ஏற்கவில்லை.
அதுவும் அவர் நடத்தும் மெஸ்ஸில்தான் நான் சாப்பிட்டாக வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தவும் செய்தார். முதல் இரண்டு நாட்கள் அங்கே சாப்பிட்டேன். அதீத காரம்! வயிற்றுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. காரத்தை கம்மி் பண்ணச் சொன்னபோது, ஆம்பிளைன்னா காரம்தான் அதிகம் சாப்பிடணும் நீ என்ன ஐயர் வீட்டு சாம்பாரா என்று சம்பந்தமில்லாமல் பேசி அனைவருமுன் கிண்டல் செய்யவே, முதலாளியிடம் முறையிட்டேன். காசு கொடுத்து நீ தனியாக சமைத்து சாப்பிட்டு கொள் என்று எங்கள் இருவரையும் மத்திசம் செய்து வைக்கவும் முற்பட்டார். எனக்கு சமைக்க தெரியாது என்றபோதுதான் சுப்பாராவை எனக்கு உதவிக்கு அனுப்பினார். அந்த சமயத்தில்தான் ஓனரைப் பற்றிய இந்த கதைகளையெல்லாம் சுப்பாராவ் சொல்ல ஆரம்பித்தான்.
இருந்தாலும் ஒரு டீ குடிக்க சைக்கிளை மிதித்துக் கொண்டு சத்தியவேடு வரை சைக்கிள் மிதிக்க வேண்டியிருந்தது. மெட்றாஸ் போக முடியாத ஞாயிறுகளில் பிரௌசிங் செய்ய கும்மிடிப்பூண்டிக்கு செல்வேன். முன்னர் சொன்னது போல எனக்கு சினிமா பித்து அதிகம் என்பதால் வாரம் ஒரு படமாவதுப் பார்த்துவிட வேண்டும். அங்கே பார்த்தால் அந்நேரம் வெறும் தெலுங்கு மற்றும் பழைய ஹிந்தி படங்கள்தான் ஓடிக் கொண்டிருந்தன. சரி மற்ற மொழிகளில் படங்கள் எப்படி எடுத்திருக்கிறார்கள் என காணும் ஆவலில் கிடைத்ததை பார்க்கத் தொடங்கினேன். அதைவிட்டால் எனக்கு அங்கே வேறு போக்கிடமுமில்லை.
அந்த வகையில் தெலுங்கில் வந்த ஜெமினி, மொஹரா, முஜ்ரிம் போன்ற அதுவரை கேள்வியேப்பட்டிருக்காத ஹிந்தி படங்களையெல்லாம் பார்க்க நேர்ந்தது. இருந்தாலும் அதெல்லாம் என்னை அங்கே இருப்புக் கொள்ள வைக்கவில்லை. அதனால் சென்னையிலிருந்த நண்பர்களை வேலை விஷயமாக உதவுமாறு, என்னை அந்த சிறையின் பிடியிலிருந்து மீட்குமாறு, தொடர்ந்து அவர்களை நச்சரித்துக் கொண்டிருந்தேன். முயற்சி வீண்போகவில்லை, சந்தன் ஸ்பைசஸ் என்கிற கம்பெனியிலிருந்து ஒரு இன்டர்வீவ் வந்தது. நிறுவனம் இயங்குவது அண்ணா நகரில் என்றார்கள். அதற்கு ஒரு பொய்யைப் புழுகிவிட்டு போய் அட்டென்ட் செய்தேன். வேலைக் கிடைத்துவிட்டது. ஆனால் பணி குண்டூரில்!
தொடரும்…
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கட்டுமாவடி எனும் ஊரைச் சார்ந்த இத்ரீஸ் யாக்கூப் நுண்ணுயிரியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று தற்சமயம் பணி நிமித்தமாக அமீரகத்தில் வசித்து வருகிறார். இவரது முதல் நூலான ‘ஒரு திர்ஹமும் உள்ளூர் காசும்’ – நாவல் பிப்ரவரி 2024ல் கோதை பதிப்பகம் வெளியீட்டுள்ளது. இவரது சிறுகதைகள் கீற்று, சொல்வனம், வாசகசாலை, கலகம், நடுகல் போன்ற இணைய இதழ்களிலும் மற்றும் கேலக்சி தளத்திலும் வெளியாகியுள்ளன.புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கட்டுமாவடி எனும் ஊரைச் சார்ந்த இத்ரீஸ் யாக்கூப் நுண்ணுயிரியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று தற்சமயம் பணி நிமித்தமாக அமீரகத்தில் வசித்து வருகிறார். இவரது முதல் நூலான ‘ஒரு திர்ஹமும் உள்ளூர் காசும்’ – நாவல் பிப்ரவரி 2024ல் கோதை பதிப்பகம் வெளியீட்டுள்ளது. இவரது சிறுகதைகள் கீற்று, சொல்வனம், வாசகசாலை, கலகம், நடுகல் போன்ற இணைய இதழ்களிலும் மற்றும் கேலக்சி தளத்திலும் வெளியாகியுள்ளன.