திறக்காதக் கதவுகளின் தரிசனங்கள்.
நிலம் பார்த்தே
வாழப்பழகிய நாளில்
மருகித் திளைத்த
உன் காதல்
இணை கோடுகளாகுமென்பதை
நான் அறிந்தே இருந்தேன்.
,
என் கடைக்கண்
கவனம் பெறாதபொழுதும்
காதலின்
சுய சிலிர்ப்பில்
பூமியாக
புலம்பியதும் தெரியும்.
,
உறவுகளின் நிகழ்வுகள்
யாவிலும்
தவறாமல்
வரவாகி நிற்பதையும்.
எதிரி வீட்டிற்கு வந்து
உன்
வீட்டின்
ஏலனத்துக்கு
ஆளானதும் தெரியும்.
என் சாளரச்
சாவிகளை
தூர எறிந்துவிட்ட பொழுதில்.
,
பொருள் புரியாத
மௌனப் பாடின்
தவித்தலில்
தமிழ்தான்
தழுவிக் கொண்டது
இலக்கணமற்ற
இதமாக
உனக்கு.
,
அன்றைய நாளில்
பழங்குடிகள் போல
பழைய கிராமங்கள்
யாவிற்குமே
நகரமென்பது
கண்டம் விட்டு
கண்டம் பாயும்
கனவாக இருந்தது
பெற்றவர்களின்
ஏக்கமாக.
,
பின்னொரு நாளில்
என் மகன் பெயர்
கேட்ட
உன்
காதலின் கள்ளத்தனத்தை
மெச்சினேன்.
ஆதுர சிலாகிப்பில்
யாதொரு
சுவடுகளுமற்ற
என் புறம்பற்றிய
உன்
ஏக்கமாக.
,
நான் சிரித்திருந்தால்
இந்த
தாமிரபரணியில் குளித்து
தரிசு நிலத்தில்
நடந்து
அய்யாக்கோவிலுக்கு
செல்லும்
ஆனந்தமான
வாழ்க்கையாக
அமைந்துதான் இருக்கும்
பவிசாக.
,
தலை குனிந்தே
நடந்துபோன
என்னால் தான்
இந்த
தலைநகர வாழ்க்கையும்
வாய்த்ததென
நீ
அறியும் பொழுது
உன் காதல்
பௌருஷம் கொண்டதாக
உணர்ந்து கொள்ளலாம்.
காலம் உனக்குள்
கண்ணாமூச்சி ஆடாமலிருந்தால்.
,
கல்யாண வயதில்
நமக்கு
பிள்ளைகள் வளர்ந்த பொழுதும்
என் காதலின்
நிறம்
பச்சையாவெனக்
பார்த்துவிடத் துடிக்கிறாய்
வேர்விட்ட நேசத்தில்.
,
கைபடாத
கருவறை
சாமியாகவே
இருந்துவிட்டுப்போகட்டும்
இந்த
காதல்
வணங்குவதாக
மட்டும்
வாழ்வதற்காக
இல்லாமல்
இந்நிலம் பார்க்கும்
நிதர்சனத்தில்.
***
பிடித்தலாகவொரு
பின்நேரப் பயணம்.
நடுநிசியின்
யாதொரு சத்தமற்ற
இப்பொழுதில்
எதிர் வீட்டு
நாய்க்கு என்னவானது.
அதன்
பக்க வாத்தியங்களும்
எதிர் வாத்தியங்களும்
இசைக்காமல் போனது
எதனால்.
,
காதோரம் சொல்விட்டு சென்ற
கொசு
கடைவரை வராதுபோனது
ஏன்.
,
வயிற்றின்
கழிவு அகற்ற
திறந்து மூடிய
கதவைப் போல்
மனக் கதவு மாட்டியே
படைத்திருக்கலாம்
ஏகக்கருணையென
புகழுரைக்க.
,
இரவின் வலு குறைந்து
பகல் மிகைக்கும்
தருணங்களை
கால ஓசை
சுவரில் காட்டிக்கொண்டிருந்தது
ஒளிர்தலாக.
,
இரவு வெக்கமுற
எல்லா சாத்தியங்களும்
இருக்கிறது
நறுமண அழைப்பாக
வீடொறு
சுகமெனச் சொல்ல.
,
இப்பொழுது
ஒரு கவிதை எழுதலாம்.
ஒரு
கோப்பை
தேநீர் அருந்தலாம்.
முற்றிலும்
அமைதியான
பொழுதில்
முதல் சத்தம்
என்னவாக இருக்கும்.
கண்கள் மூடி
காத்துக் கொண்டிருக்கிறேன்.
கா
த்
து
க்
கொ
ண்
டி
ரு
க்
கி
றே
ன்
காலம் துறந்து.
,
கேட்டதென்னவோ
தொப்புக்கொடியின்
வழக்கமான
குரல்தான்
வாஞ்சையாக.
***