காணாமல் போனவை பற்றிய முதல் தகவல் அறிக்கை
நீண்ட காலமாக ஆடு, மாடு மந்தைகள் மேய்ந்துகொண்டிருந்த
கிராமத்து மேய்ச்சல் நிலங்களைக் காணவில்லை.
கால்நடைகள் புற்கள், தழைகளோடு சேர்த்து
மேய்ச்சல்நிலங்களையும் தின்றுவிட்டிருக்கக் கூடும் என யூகம்.
,
சிறுவர்களும் இளைஞர்களும் விடுமுறை நாட்களில் க்ரிகெட் விளையாடிக்கொண்டிருந்த
அவ்வப்போது அண்டை கிராமத்தார்களுடன் டோர்ணமென்ட்டுகளும் நடத்திய
தரிசு நிலங்களையும் காணோம்.
விளையாடி முடித்துப் போகும்போது
பந்து, மட்டை, ஸ்டம்ப்புகளுடன்
தரிசு நிலத்தையும் சுருட்டி எடுத்துக்கொண்டு போயிருக்கலாம் என சந்தேகம்.
,
வேலிகளிலும் புறம்போக்கிலும் தானாக வளர்ந்து
மனிதர்களுக்கு உணவாகிக்கொண்டிருந்த
விலையற்ற காட்டுத் தாவரங்களும்,
இலவச மருந்தாக ஆன மூலிகைகளும்
சமீப ஆண்டுகளாகத் தென்படுவதில்லை.
யாரும் பாராதபடி நள்ளிரவுகளில்
தம்மைத் தாமே வேரோடு பிடுங்கிக்கொண்டு
புலம்பெயர்ந்து தூர தேசம் போய்விட்டதாக
இன்ஃபார்மர்கள் தெரிவிக்கின்றனர்.
,
மழைக் காலங்களில்,
மென்மையான இடி இடிக்கும் நாட்களுக்கு மறு நாள் காலையில்,
கிராம மக்களுக்கும் சிறார்களுக்கும் அன்பளிப்பாக
உணவுக் காளான்களை ஆங்காங்கே முளைப்பித்து வைத்திருக்கக்கூடிய
உபரி நிலங்களின் நல்லிதயத்தை
யாரோ திருடிச் சென்றுவிட்டனர்.
இப்போது
இளவேனில் காலம், கோடைகாலம், குளிர்காலம், இலையுதிர்காலம்
எல்லாக் காலங்களிலும்
காளான்களுக்கு பதிலாக
புதிய புதிய வீடுகளையும் பிற கட்டிடங்களையும்
முளைப்பித்துக்கொண்டிருக்கின்றன
இதயமற்ற அந் நிலங்கள்.
எளிய உண்மைகள் கவிதைக்குப் போதுமானவையல்ல
,
எளிய உண்மைகள் கவிதைக்குப் போதுமானவையல்ல
சிறுத்தைகள் மரமேறி அணிலைத் துரத்தி
வேட்டையாடித் தின்பதில் பெருமையும் இல்லை
பசியும் அடங்காது
,
பார்ப்பவர்கள் கவிஞர்கள் அல்ல
தரிசனங்களைத் தங்கள் மண்டையோட்டுக்குள் கொண்டிருப்பவர்கள்தான்
,
உன் கண்களைப் பிடுங்கியெறி
அவை இருந்த குழிகளில்
ஒன்றில் நுண்ணோக்கியையும்
இன்னொன்றில் தொலைநோக்கியையும் பொருத்திக்கொள்
,
ஒவ்வொரு கணமும் உயிர்த் துடிப்போடு இரு
ஒரு கண்ணில் நுண்ணுயிரிகளையும்
மறு கண்ணில் புதிய விண்மீன் திரள்களையும் ஆராய்பவராக
,
இன்னும் முக்கியமான ஒன்று
கவிதை எழுதும் முன்பு கழற்றி வைத்துவிடு
மூளைப் புயல்கள் வசிக்கும் உனது தலையை
உங்கள் நலமே எங்கள் நலம்!
,
மாபெரும் சிந்தனையாளர்கள், சீர்திருத்தவாதிகள், போராளிகளுக்கு
உலகம் அளித்த வெகுமதிகள்
மகத்தானவை
சாக்ரட்டீஸுக்கு விஷம்
யேசுவுக்கு சிலுவை
அல் ஹல்லாஜ் மன்சூருக்கு கொடூர சித்ரவதை
சே குவேரா முதல் ப்ரபாகரன் வரை துப்பாக்கிக் குண்டு
,
உனக்கு உயிர் மீது ஆசை இருந்தால் மறந்துவிடு
சிந்திப்பதால் நான் இருக்கிறேன் என்னும் வாசகத்தை
,
சமூக நலம் துற; சுயநலவாதியாக மட்டும் இரு
மத வாந்திகளை ப்ரசாதமாக விழுங்கு
அடையாள அட்டையைப் புதுப்பித்துக்கொள்; தவறாமல் ஓட்டுப் போடு
கேள்விகள் கேட்காமல் வாழ்ந்து செத்துப் போ
,
பொது நலன் கருதி வெளியிடுபவர்கள்
டேஷ் டேஷ் டேஷ்
*******
ஷாராஜ்
கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது பொள்ளாச்சியில் வசித்துக்கொண்டிருக்கிறார். தமிழ் வழிக் கல்வியை பள்ளி இறுதி வரை மட்டும் பயின்றவர். 90-களின் துவக்கம் முதல் இலக்கியத்தில் ஈடுபட்டுவரும் இவர், சுயமாக நுண்கலை ஓவியம் கற்றுக்கொண்டு நவீன தாந்த்ரீக ஓவியராகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். 5 சிறுகதைத் தொகுப்புகள், நான்கு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு ஆகியவை வெளியாகியுள்ளன.
சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும், நுண்கலை ஓவியத்துக்காக கே.எம்.கோபால் நினைவு விருதும், கவிதைக்காக நெருஞ்சி இலக்கிய விருதும் பெற்றவர். 2023-ம் ஆண்டுக்கான சௌந்தரா கைலாசம் நாவல் போட்டியில், நீர்க்கொல்லி என்ற இவரது நாவல் பரிசு பெற்றது.