1
இஸ்திரி கடை தேடி அலைதல்
பரிசு பெறாத
சுருட்டப்பட்ட லாட்டரி சீட்டை போல
சுருக்கங்களோடு மனிதர்கள்
,
சுருக்கங்களை யார் விரும்புவார்கள்?
சுருக்கங்களற்ற வாழ்வைத் தேடி
உலகம் பயணிக்கிறது.
,
பழுத்த சுருண்ட இலைகளை
உதிர்த்து விடுகின்றன மரங்கள்
,
சட்டையில் உள்ள சுருக்கத்தை
நீக்க
இஸ்திரி போடுகிறவர்களை
சந்து சந்தாக தேடுகின்றேன்
,
இந்த தெரு
இந்த நகரம்
இந்த நாடு
இஸ்திரி போடுகிறவர்களை
தொலைத்து விடுகிறது
,
சர்வாதிகாரிகள்
அரசியல்வாதிகள்
நடிகர்கள் எல்லாம்
தங்கள் சுருக்கங்களுக்கு
எப்படி நிவாரணம் தேடுகிறார்களோ
,
கதவுகள் சுருங்குகின்றன
வாசல்கள் சுருங்குகின்றன
மனங்கள் சுருங்குகின்றன
இதயங்கள் சுருங்குகின்றன
கனவுகள் சுருங்குகின்றன
ஆசைகள் சுருங்குகின்றன
பாதைகள் சுருங்குகின்றன
,
அகச்சுருங்குதல்கள்
புறச்சுருக்கங்களை
உருவாக்குகின்றன
,
இந்த நாடு
பழைய காலாச்சாரத்துக்குள்ளே
சுருங்கிச் சுருங்கி விழுகின்றன
கவிஞர்கள்
சீர்திருத்தவாதிகள்
எழுத்தாளர்கள்
தத்துவ வாதிகள்
உடல் சுருக்கங்களை
சுலபமாக கடந்து போகிறார்கள்
,
மனச்சுருக்கங்களைப்பற்றி
கவலைப்படுகிறார்கள்
சமூகம்
மானுடத்தின் திசையில்
சுருங்குகிறதென எச்சரிக்கிறார்கள்
,
சுருக்கங்களை சரிசெய்ய
புதுப்புது சிந்தனையாளர்கள்
வரவேற்கப்படுகிறார்கள்
,
சுருக்கங்களின் வரலாறு சொல்கிறது
அதிக சுருக்கமுள்ளவர்களே
அதிகமாகப் புறக்கணிக்கப்படுகிறார்கள்
2
நானில்லாத போது
வீட்டை திறக்கின்றான்
வீட்டு உரிமையாளன்
,
அவசரத்துக்காக
ஒரு சாவி
கொடுத்து வைத்திருந்தேன்
,
வீடு அவனுடையதாக இருக்கலாம்
அந்த வீட்டின் இருட்டு என்னுடையது
அதில் ஒளிந்திருக்கும் வாசனை
என்னுடையது
இருட்டின் அலமாரியில்
கனவுகள் இருக்கின்றன
,
வீட்டுக்குள்
நான் உருவாக்கிய நதி இருக்கிறது
என் பழக்க வழக்கங்களின்
அருங்காட்சியகம் இருக்கிறது
,
வெறுப்பு அரசியலின்
செய்திகளை கொட்ட
குப்பைத் தொட்டி வைத்திருக்கிறேன்
புணராத இரவுகளை
ஆணியில் தொங்கவிட்டிருக்கின்றேன்
,
வீட்டு உரிமையாளன்
நானில்லாமல் திறக்கும் போது
சுவற்றில்
ஆணியில் தொங்கவிடப்பட்டிருக்கும்
ஆசைகளிடம் என்ன பேசுவான்?
,
மூடப்பட்ட வார்த்தைகளிடம்
என்ன ரகசியம் தெரிந்துக்கொள்வான்?
,
என் புனைவுகளாலான
கனவுகளிடம் என்ன பேசுவான்?
,
அந்த வீட்டில் என் மெளனங்களின்
ரகசிய கிடங்குகள் இருக்கின்றன.
,
வீட்டை திறந்தவுடன் பார்க்கின்றேன்
உரிமையாளனின் நிழல்கள்
நடமாடிக்கொண்டிருப்பதை
,
அவனிடம் சொன்னேன்
தயவு செய்து
உன் நிழல்களை கூட்டிக்கொண்டு போ
உன் நிழல்களை துரத்த
ஒரு சாத்தானை
வேலைக்கு அமர்த்த முடியாது
3
கடவுள்கள்
கடவுள்கள்
நவீன காலத்திற்கு
பழகி விட்டார்கள்
அவர்களுக்கு எந்த வேலையும்
இல்லை
லோக்பால் சட்டத்தின் வரம்புக்குள்
வர மாட்டார்கள்
தகவல் அறியும் உரிமை சட்டத்தின்
வரையறைக்குள்
வர மாட்டார்கள்
எந்த நீதிமன்றமும்
நேரில் ஆஜராக சொல்லி
கடவுளுக்கு ஆணையிட்டதில்லை
,
இந்த நாட்டின்
குடியரசு தலைவரை விட
அதிக செல்வாக்கு
கண் முன்னால் நடக்கும்
எந்த கொடுமைகளையும்
எதிர்த்து கேட்க வேண்டாம்
ஆனாலும் செல்வாக்கு
கூடிக் கொண்டே வருகிறது
,
வரம் கொடுக்கவோ
சாபம் இடவோ தேவையில்லை
வேலை செய்ய ஆட்கள்
,
எதிர்த்து கேள்வி கேட்பவர்களை
ஆதரவாளர்கள் பார்த்துக்கொள்கிறார்கள்
,
புராணக்காலத்தின் கடவுள்களை
இன்றைய கடவுள்களோடு
ஒப்பிடக்கூடாது
,
அந்தக்காலக் கடவுள்கள்
மக்களுக்காக
நதிகளைக் கூட்டி வந்தவர்கள்
அற்புதங்களால் மலைகளையும்
அழகிய பூங்காக்களையும்
உண்டாக்கியவர்கள்
,
மாமிசங்களை மலர்களாக
மாற்றியவர்கள்
யுத்தக்களத்தில்
தேரோட்டியவர்கள்
,
ஆனால் இன்றைய கடவுள்கள்
போர் நடந்த போதும்
வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்
,
கடவுள்கள்
ரிட்டையர்டு ஆகி விட்டார்கள் .
4
காதலில் தோல்விடைந்தவர்கள்
பிரியும் போது
இழப்பீட்டு தொகை கேட்பதில்லை
தன் காதலுக்குன்
அணிந்துரை
எப்படி கேட்டதில்லையோ
பிரியும் போது
விமர்சன உரையும் வாங்கியதில்லை
,
காதல்
மரபுக் கவிதையிலிருந்து
நவீனக்கவிதையாக
பரிணாம வளர்ச்சியடைந்திருக்கிறது
,
அவன்
மரபு கவிதையாக வளர்ந்தான்
அவள் நவீனக்கவிதையாக இருந்தாள்
அணி இலக்கணம்
காதலுக்கு தேவையில்லை
அது வாழ்க்கைக்குரியதென்றாள்
,
வாழ்ந்த வீட்டை
காலி செய்வதை போலத்தான்
காதலை காலி செய்வது
அத்தனை எளிதாக
நினைவுகளை சாகடிக்க முடியாது
5
என் பெயர்
பெயரில்
மதத்தின் வாசனை இருக்கிறதா
மோப்பம் பிடித்தார்கள்
,
என் பெயர்
ஒழுக்கத்தை மீறிய சொல்லா
ஆராய்ந்தார்கள்
,
என் பெயர்
தேசத்திற்கு எதிராக சிந்திக்கிறதா
சோதனை செய்தார்கள்
,
அவர்களின் விதிகளுக்கு
என் பெயர்
ஏன் கட்டுப்பட வேண்டும்
,
முடிவு செய்தேன்
ஒரு தேசத்தை சுட்டிக்காட்டியோ
ஒரு மதத்தை சார்ந்தவளென்றோ
என் பெயர் இருக்க வேண்டாமென்று
அப்படி ஏன் இருக்க வேண்டும்
,
ஆப்பிரிக்கா நாட்டு பெண்ணுக்கும்
ஸ்பெயின் நாட்டு பெண்ணுக்கும்
ஒரே மாதிரிதான் பிரசவ வலி
என் பெயர் பிரசவ வலியாக இருக்கட்டும்
,
இங்கிலாந்து காரிகைகளுக்கும்
இந்திய மாதர்களுக்கும்
பிரிவின் வலியை
இதயத்தில்தான் தேக்கி வைக்கிறார்கள்
என் பெயர் இதயமாக இருக்கட்டும்
,
பிரஞ்சு நாட்டு உதடுகளும்
சிவந்த அரேபியா உதடுகளும்
ஒரே மாதிரி முத்தத்தைதான் தருகின்றன
என் பெயர் முத்தமாக இருக்கட்டும்
,
சிலி நாட்டு பெண்மணியின் உடலிலும்
ரஷ்யா நாட்டு பெண்ணின் உடலிலும்
ஒரே நிறத்தில்தான் ரத்த ஓட்டம்
என் பெயர் இரத்தத்தின்
ஒரு வகையாக இருக்கட்டும்
,
தொடை மார்பு கை தசை கால் தசை
ஒரே மாதிரியான சதைகளால் ஆனதுதான்
எல்லா நாட்டு காரிகளுடையதும்
என் பெயர்
என் மாமிசமாக இருக்கட்டும்
,
வெளிப்புறம் மாறியிருக்கலாம்
பெண் என்பது உள்ளே இருப்பது
பெண்ணென்று உணர்வது
என் பெயர் உணர்தலாக இருக்கட்டும்
,
உங்களால் தனித்தனியாக
அழைக்க முடியாதெனில்
என்னை காதல் என்று அழையுங்கள்
அது போதும்.
6
பார்வையுள்ளவர்கள்
ஒரு மரத்தை படைப்பதில்லை
பார்வையற்றவன்
ஒரு மரத்தை படைக்கின்றான்
பார்வையுள்ளவன்
ஒளியை உருவாக்க வில்லை
பார்வையற்றவன்
தன் வெளிச்சத்தை
தானே உருவாக்கிக் கொள்கிறான்
பார்வையற்றவனின் உலகில்
உள்ள எதுவும்
கடவுளால் படைக்கப்பட்டதில்லை
00
கோசின்ரா
கோ.ராசேந்திரன் என்ற இயற்பெயர் கொண்டவர் கவிஞர் கோசின்ரா. கடந்த பதினைந்து வருடங்களாக கவிதை எழுதி வருகிறார். இவருடைய அரசியல் கவிதைகள் பிரபலமானவை. சமூக எதார்த்தங்களின் மீது இவருடைய உக்கிரமான பார்வை கவிதைகளாகிறது. என் கடவுளும் என்னைப் போல கருப்பு என்பது இவரது முதல் கவிதைத் தொகுப்பு. “சமூகத்தில் பிரச்னைகள் எழுகிற போதெல்லாம் என்னுடைய விமர்சனங்கள் கவிதைகளாக வெளிவருகின்றன” என்கிறார் .இவருடைய இரண்டாம் தொகுப்பு “ பூனையின் கடவுள்:”புது எழுத்து வெளியீடு