அத்தியாயம் – 5

மில்ட்ரிப்பாவின் வருகையை எதிர்பார்த்து ஆவலோடு காத்திருந்தாள் இளவரசி.

அன்று சனிக்கிழமை பள்ளி விடுமுறை. பள்ளி விடுமுறை நாட்களில் விளையாட்டு காலையிலேயே ஆரம்பமாகிவிடும். அன்று மிலிட்டரி வருவதாக சுபா கூறி இருந்ததால் அன்றைய விளையாட்டு சுபாவின் வீட்டு முன்னால் அரங்கேறியது. சுபாவின் வீட்டு முன்பு விளையாட்டு என்றாலே அது கொய்யா மரத்தில் ஏறி விளையாடும் விளையாட்டாகத் தான் இருக்கும். கொய்யா மரத்தில் ஏறி கொய்யாக் காய்களை பறித்துச் சாப்பிடுவார்கள். அவர்கள் வீட்டின் முன்பு இருந்த கொய்யா மரத்தில் ஒருபோதும் கொய்யா பழுத்ததே இல்லை. இவர்கள் பழுக்க விட்டதும் இல்லை. பிஞ்சுக் கொய்யாவைக் கூடப் பறித்துச் சாப்பிட்டு விடுவார்கள்.

கொய்யா மரத்தின் உச்சியில் ஏறி நிற்க கடுமையான போட்டி நடைபெறும். பெரும்பான்மை நேரங்களில் இளவரசி தான் உச்சியில் நிற்பாள்.

“பொட்ட புள்ளைங்களா அடக்க ஒடுக்கமா இல்லாம மரத்துல ஏறிட்டு, ஆம்பளப் பசங்களோட போட்டி போட்டுக்கிட்டு என்ன பழக்கமுன்னே தெரியல. எல்லாம் உங்க அப்பா கொடுக்கிற எடம். கீழே எறங்கப் போறியா? இல்ல அடி வாங்கப் போறியா? எல்லாம் இந்த எளவரசி பண்றது. அவளோட என்னிக்குச் சேர்ந்தியோ அன்னைக்கே நீ இப்படி மாறிப் போயிட்ட” என்று சத்தம் போட்டபடியே வீட்டின் உள்ள இருந்து வெளியே வந்தார் சுபாவின் அம்மாத்தா வள்ளியாத்தா.

 “அம்மத்தா பொட்டப் புள்ளைங்க மரம் ஏறக் கூடாதா?”

“மரம் ஏறக்கூடாது. உங்கள மாதிரி சத்தம் போட்டு பேசக்கூடாது. சிரிக்க கூடாது. கொழாய் மாட்டிட்டு திரியக்கூடாது. தாவணி பாவாடை போடணும். சொன்ன பேச்சைக் கேட்டு அட குடுக்காம ஊட்டுல இருக்கோணும். பொழுது வுழுந்தா வீடு வந்து சேரனும். அப்படியா இருக்கீங்க? நான் சொன்னா தாரு கேக்குறாங்க. எல்லாம் காலம் மாறி போச்சு” என்று கூறிக்கொண்டே வெளியில் இருந்த விறகுகளை தூக்கிக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்தார் வள்ளியாத்தா.

அந்த நேரம் கேட்ட புல்லட்டின் சத்தம் அனைவரையும் சந்தோஷத்தில் எல்லைக்குக் கொண்டு சென்றது.

அந்த ஊரில் புல்லட் வைத்திருக்கும் ஒரே மனிதர் மில்ட்ரிப்பாதான். அவர் மில்ட்ரியிலிருந்து விடுமுறைக்கு வரும்போது அவர் வீட்டில் இருந்து அந்த புல்லட்டில் தான் சுபாவின் வீட்டிற்கு வருவார்.

குழந்தைகளுக்கு மில்ட்ரிப்பாவை பிடிக்க அவரின் அன்பு ஒருபுறம் காரணம் என்றால், மற்றொன்று இந்த புல்லட்.

புல்லட்டில் அனைவரையும் அமர வைத்து ஊர்வலம் கூட்டிச் செல்வார். நான் நீ என்று அனைவரும் போட்டி போட்டு ஏறிக் கொள்வார்கள். அன்றும் அப்படித்தான் நடந்தது. எல்லோரையும் அமர வைத்து ஒரு சுற்று சுற்றி வந்து புல்லட்டை கொய்யா மரத்தின் நிழலில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றார். வானரப் படைகள் போலே அவரின் பின்னாலேயே அனைவரும் ஓடிச் சென்றார்கள். மில்ட்ரிப்பா ஆசாரத்தின் வலது மூலையில் சுருட்டி வைத்து இருந்த பாயை விரித்து அமர்ந்தார். அவரைச்சுற்றி அனைவரும் அமர்ந்து கொண்டார்கள்.

“இதுங்க சும்மாவே ஆடும். இவன் வேற வந்துட்டானா இனி சொன்ன பேச்சு கேட்காதுங்க”என்று முணுமுணுத்துக் கொண்டே ஊதுகுழலால் அணைந்து போன நெருப்பை ஊதி ஊதிப் பற்ற வைத்தார் வள்ளியாத்தாள்.

”மில்ட்ரிப்பா இந்த கிழவியோட தொல்லை தாங்க முடியல. எப்பப் பார்த்தாலும் சத்தமா பேசாதீங்க. சத்தமாச் சிரிக்காதீங்க. மரம் ஏறாதிங்க. கொழாய் போடாதீங்க. 6 மணிக்கு மேல வூட்ட வுட்டு வெளியில போகாதீங்க. பொட்ட வையுங்க பூவையுங்க அப்படின்னு எங்கிட்ட சொல்லிட்டே இருக்கு” என்று மேரி தன்னையும் இளவரசியையும் சுபாவையும் பார்த்து கைகாட்டி சொன்னாள்.

’விடுடா வயசானவங்கனா அப்படித்தான் இருப்பாங்க’. என்று கூறிவிட்டு, சமையல் அறைக்குள் எட்டிப் பார்த்து, அத்தை இந்தாப் பாருங்க சின்னப் புள்ளைங்க தானே. உங்க காலத்துல தான் அப்படி எல்லாம் இருந்தீங்க. இவங்களாவது சந்தோசமா இருந்துட்டு போகட்டுமே” என்று வள்ளியாத்தாவைப் பார்த்து கூறினார் மில்ட்ரிப்பா சின்னமுத்து.

“அப்படியெல்லாம் விட முடியாது பொம்பள புள்ளைங்க எப்படி இருக்கணுமோ அப்படி இருக்கோணும். அப்பத்தான் நாளைக்கு கண்ணாலமூச்சு போற பக்கம் புருசனுக்கும் மாமியாளுக்கும் அடங்கி ஒடுங்கி இருப்பாங்க”

“அத்தை உங்களுக்கு வரலாறே தெரியல. ஆதி காலத்தில் இருந்தே பெண்கள் தான் எல்லாத்துக்கும் முதன்மையா இருந்தாங்க. காடுகளில வாழ்ந்த காலத்துல பெண்கள் தான் எல்லாத்தையும் வழி நடத்திட்டு போயிட்டு இருந்தாங்க. அதுக்கப்புறம் தான் காலம் கொஞ்சம் கொஞ்சமா மாறிடுச்சு.‌ இப்ப ஆண்கள் வழி நடத்துற மாதிரியான இடத்துக்கு வந்து இருக்கு. உங்களோட சக்தி உங்களுக்கே தெரியாது. நீங்க அவ்வளவு சக்தி வாய்ந்தவங்க”

“நீ படிச்சிருக்க அப்படிங்கிறதுக்காக எதை சொன்னாலும் கேட்க முடியாது. ஆம்பளைங்க ஆம்பளைங்க தான் பொம்பளைங்க பொம்பளைங்க தான். ஆம்பளைங்க உடம்பு வலிமையால எத்தனை வேலை செய்றாங்க பொம்பளைங்க அப்படி செஞ்சிட முடியாது”

“என்ன இப்படி சொல்லிட்டீங்க இன்னைக்கு ராணுவத்தில் கூட வேலை செய்ற அளவுக்கு பொம்பளைங்க வந்துட்டாங்க. ஏரோப்ளேன் ஓட்டுறாங்க ரயில் ஓட்டுறாங்க விண்வெளிக்கே போயிட்டு வந்துட்டாங்க”

“உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியாது. சும்மாவே ஆடுவாளுங்க இந்தப் பொட்டக் கழுதீங்க. நீ வேற வந்துட்டியா? என்னமோ பேசுங்க நாஞ்சோறு ஆக்கோனும்” என்று கூறிவிட்டு சமையலுக்கு தேவையான காய்கறிகளை வெட்ட ஆரம்பித்தார்.

“நெசமாவா மில்ட்ரிப்பா? அந்த காலத்துல எல்லாம் பெண்கள் தான் வழிநடத்தினாங்களா?”

“ஆமாண்டா. பெண்கள் தான் வழிநடத்தி இருக்காங்க. இதை வால்கா முதல் கங்கை வரை அப்படிங்கற புத்தகத்தில் நான் படிச்சிருக்கேன். நீங்க பெரிய பசங்க ஆனதும் அந்தப் புத்தகங்களை வாங்கிப் படிக்கணும். இன்னும் பெண்களை பத்தின நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கலாம்”

“சரி சரி நாங்க கண்டிப்பா வாங்கி படிக்கிறோம் மிலிட்டரிப்பா. இப்ப ஒரு சந்தேகம் இருக்கு. ஜாதின்னா என்ன அத முதல்ல நீங்க எங்களுக்கு தெளிவு படுத்துங்க” என்று கேட்டாள் இளவரசி.

“அடடா ரொம்ப பெரிய பசங்களா வளந்துட்டீங்க போல இருக்கே. ஜாதியை பத்தி எல்லாம் கேக்குறீங்க”

“சொல்லுங்க மில்ட்ரிப்பா”

”மனுஷங்கள்ள நாலு வர்ணங்கள் சொல்லுவாங்க. அதாவது தலையில் இருந்து பிறந்தவன். தோலில் இருந்து பிறந்தவன். தொடையிலிருந்து பிறந்தவன். காலில் இருந்து பிறந்தவன். இதுல தலையில் இருந்து பிறந்தவங்க தான் உயர்ந்த ஜாதியினும் அப்படியே படிப்படியா தாழ்ந்த ஜாதினும், காலில் பிறந்தவன் எல்லாரைவிடவும் தாழ்ந்த ஜாதினும் சொல்லுவாங்க. இது எல்லாம் மனிதனால உருவாக்கப்பட்டது. இந்த ஜாதியை காரணமாக வைத்து எவ்வளவு கொடுமைகள் நடந்திருக்கு. மனிதர்கள் எல்லாரும் ஒன்னு தான் ஜாதி கிடையாது. அப்படின்னு எதிர்த்து நிறைய பேரு போராடினார்கள். ஜாதியைக் காரணம் காட்டி அடிமைப்படுத்தி இருக்கிறார்கள்”.

“கீழ் ஜாதி என்றால் யார் மில்ட்ரிப்பா?”

”நம்ம தோட்டத்துல பண்ணயத்துல வேலை செய்றானே முனியன் அவங்கள மாதிரி இருக்குறவங்களத் தான் கீழ் ஜாதின்னு சொல்லுவாங்க. அவங்கள நம்ம தொடக்கூடாது நம்மளையும் அவங்க தொடக்கூடாது. அவங்கள வீட்டுக்குள்ளேயும் விட மாட்டாங்க”

“ஆமாம் மில்ட்ரிபா எங்க பள்ளிக்கூடத்துல கூட ஆரானு ஒரு புள்ள படிக்கிறா. நாங்க யாருமே அவங்க கிட்டப் பேச மாட்டோம்”

“அப்படியெல்லாம் இருக்கக்கூடாது. நீ சுத்தமா குளிச்சிட்டு வா. நல்லா துவைத்து துணியை போட்டுட்டு வான்னு சொல்லுங்க. அவங்களுக்கு சொல்லிக் கொடுக்குறதுக்கு யாரும் கிடையாது. அதனாலதான் அப்படி இருக்காங்க. அதுக்காக அவங்கள ஒதுக்கி வைக்கக் கூடாது. இப்போ நீங்க இவ்ளோ பேர் இருக்கீங்க. உங்களை யாராவது தொட மாட்டேன் நீங்க என்னை தொடக்கூடாதுன்னு ஒதுக்கி வச்ச உங்க மனசு எவ்வளவு கஷ்டப்படும்?”

“ஆமா கஷ்டப்படுவோம். ஆனா எங்க அக்காவ அப்படித்தானே ஒதுக்கி வைத்து விடுறாங்க”.

“உங்க அக்காவையா? எதுக்கு ஒதிக்கி வைக்கிறாங்க?” 

“மாசத்துல மூணு நாலு அக்கா சமையல் ரூமுக்குள்ளதான் படுத்துக்குவா. அவளுக்கு தனியா தட்டு கொடுத்துடுவாங்க. தனியா பாய் கொடுத்துடுவாங்க. அவ யாரையும் தொடக்கூடாது. அவளும் அவளையும் யாரும் தொட மாட்டோம். அப்போ அவ அந்த மூணு நாள் மட்டும் வேற ஜாதியா?” என்று கேட்டாள் எளவரசி.

“அது என்ன மூணு நாளு” என்று கேட்டான் ஜோசப்.

“அடக்கொடுமையே இன்னும் அது மாறலையா?”

என்று கூறியபடியே அது பற்றி பேச ஆரம்பித்தார் சின்னமுத்து.

தொடரும்.

சரிதா ஜோ

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சரிதா ஜோ தமிழிலும் உளவியலிலும் முதுகலை பட்டமும் கல்வியியலில் நிறைஞர் பட்டமும் பெற்றவர். கதை சொல்லியாக தமிழ் இலக்கியத்திற்குள் பயணத்தை தொடங்கிய இவர் ஏராளமான சிறார் புத்தகங்கள் எழுதியுள்ளார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *