குட்டியானை அம்முலுவின் கும்மாளங்கள்

அத்தியாயம் – ஆறு.

கலா யானைக்குட்டியை நல்லபடியாக காப்பாற்றிய  பெரிய யானைகளும் அம்முலுவின் நண்பர்களும் சேர்ந்து அதை பனிக்காட்டுக்கே மறுபடி பத்திரமாக அழைச்சுட்டு போனாங்க. காடே அன்னிக்கு ஒரே கோலாகலமா அந்த நிகழ்ச்சியைக் கொண்டாடிச்சு.

அப்போ கஜா முன்னால் வந்து, “அன்பு தோழர்களே, இன்னைக்கு நாமெல்லாரும் சேர்ந்து இறைவன் படைப்பிலேயே அதி புத்திசாலிகள் எனப்படும் மனுஷங்க கூட போராடி நம்ம கலாவைக் காப்பாத்திட்டோம். இது மிகவும் பெருமைக்குரிய விஷயம் தான். பெரியவங்க நமக்கு தகவல் சொல்ல வெகு வேகமாக ஓடி வந்த குட்டி யானைக்கு பெரிய பாராட்டு. ஆனால், நாமெல்லாம் அங்க போகிறவரைக்கும் அந்த மனுஷங்க கலாவை தூக்கிட்டுப் போக விடாம புத்திசாலித்தனமா திட்டம் போட்டு அவங்களை அலைக்கழிச்ச நம்ம குட்டி யானைகளுக்கும் சேஷு நரி, மீனா முள்ளம்பன்றி, மோகனன் முயல் மற்றும் கட்டெறும்பு கூட்ட நண்பர்களுக்கு நாம எல்லோரும் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கோம்” என்றது.

அப்போது சேஷு மற்றும் காசி இருவரும் ஒரே நேரத்தில் “கஜா ஐயா, நாங்க எல்லாரும் உதவி செய்தது உண்மைதான். ஆனால், எங்க எல்லோரையும் ஒருங்கிணைச்சு, திட்டம் சொல்லிக் கொடுத்து, நம்மால முடியும்னு தைரியம் தந்தது, தலைமை தாங்கி வழிநடத்தி வெற்றி பெற செய்தது நம்ம அம்முலு தாங்க” என்று கோரஸாகச் சொன்னாங்க.

அது கேட்டு கஜாவுக்கு ரொம்ப பெருமையாவும் மகிழ்சியாகவும் இருந்துச்சு. காமாட்சி பக்கம் பார்த்து “பார்த்தியா காமாட்சி, நம்ம அம்முலுவை எப்பவும் சுட்டித்தனம் பண்ற குட்டின்னு சொல்லி அலுத்துப்பியே. இப்ப பாரு அம்முலு எவ்வளவு புத்திசாலின்னு” என்பது போல பார்த்தது.

காமாட்சியும் “ஆமாம். நான் நினைச்சது தப்புதான்” என்பது போல சந்தோஷத்தோடு தலையசைத்தது. கஜா அம்முலுவை பக்கத்தில் அழைத்து தன் தும்பிக்கையால் அதன் தலையில் வருடிக் கொடுத்து வாழ்த்தியது. அம்முலுவின் நண்பர்கள் “ஹையா.. அம்முலு.. அம்முலு.. புத்திசாலி..” என்று சொல்லி குதித்து மகிழ்ந்தார்கள்.

அப்போது செண்பகம் யானை முன்னால் வந்து “கஜா ஐயா, இந்த மகிழ்ச்சிகரமான நல்ல நாளில் நம் கூட்டத்தில் புதிதாக பிறந்திருக்கும் செவிலி யானையின் குட்டிக்கு பெயர் சூட்டும் விழா நடத்தினால் நன்றாக இருக்கும்” என்று ஞாபகப் படுத்தியது.

“ஆஹா. ரொம்ப சரி. இன்னிக்கே அந்த குட்டிப்பையனுக்கு பெயர் சூட்டு விழா வச்சிடலாம். எல்லாரும் மாலை மூணு மணிக்கு பனிக்காட்டு நடுவில இருக்கிற மகிழ் பாறைக்கு வந்துடுங்க. வரும்போது அவங்க அவங்களால என்னனென்ன பரிசுகள் தர முடியுமோ அதை மறக்காம எடுத்துட்டு வாங்க” என்று அறிவித்தார் யானைக்கூட்டத் தலைவர் கஜா.

** **

மகிழ் பாறை ஒரு பெரிய கருங்கல் பாறை. ஆனால் மற்ற பாறைகள் போல உருண்டையாகவோ நீள் வட்டவடிவிலோ இல்லாமல் தட்டையா அகலமா தரைக்கு மேல் ஒரு பெரிய கல் மேடை அமைச்ச மாதிரி இருக்கும். அதனால, அந்த காட்டுல நடக்குற விழாக்கள் எல்லாம் அந்த மேடையிலதான் நடக்கும். நடனம் நாடகம் போன்ற கேளிக்கைகளை நிகழ்த்துற விலங்குகள் அந்த பாறையில் தான் நடத்துவார்கள்.

பார்வையாளர்கள் பாறையை சுற்றி உட்கார்ந்துகிட்டு ரசிச்சு பார்ப்பது, கை தட்டுவது விசில் போல அவங்க அவங்களால முடிஞ்ச ஒலிகளை எழுப்புறதுன்னு ஒரே கும்மாளமா மகிழ்ச்சியா இருப்பாங்க. அதனாலதான் அந்தப் பாறைக்கு மகிழ் பாறைன்னு பேர் வந்துச்சு.

** **

அன்னிக்கு நடக்கவிருந்த பெயர் சூட்டு விழாவுக்கு யானைகள் மட்டுமில்லாமல் மற்ற விலங்குகளும் கூட தயாராகத் தொடங்கினாங்க. நம்ம நண்பர்கள் குழுவும் ரொம்ப சந்தோஷமாக பரிசு பொருள்களை சேகரிக்கத் தொடங்கினாங்க.

மோகனன் முயல் குட்டி நிலத்துல இருந்து புதுசா பறிச்ச காரெட்களை எடுத்துட்டு வந்துச்சு. காரெட் செக்கச்செவேர்னு பவளம் போல மின்னிச்சு. சேஷு ஒரு குடுவை பூரா காட்டுத்தேனை நிரப்பி எடுத்துட்டு வந்துச்சு. மீனா நல்ல விளைஞ்சிருந்த சக்கரவள்ளிக் கிழங்கு நாலை எடுத்துட்டு வந்துச்சு. அம்முலு சுவையான இளநீர் குலை ஒண்ணும், தித்திப்பான செங்கரும்பு கட்டு ஒண்ணும் கொண்டு வந்துச்சு. நாலு பேரும் தங்கள் பரிசுப் பொருட்களை மகிழ் பாறைக்குப் பக்கத்தில் வச்சுட்டு மற்றவங்க எல்லாரும் வரும் வரைக்கும் ஓடிப்பிடிச்சு விளையாட ஆரம்பிச்சாங்க.

அப்போ ரங்குடுன்னு ஒரு குரங்கு மகிழ் பாறைக்கு வந்து சேர்ந்துச்சு. ரங்குடு எப்பவும் அடுத்தவங்களுக்கு தொல்லை குடுத்துகிட்டே இருக்கும். தூங்குற புலி சிங்கத்தோட மீசையை வெடுக்குனு பிடிச்சு இழுத்துட்டு மரக்கிளையில தவ்வி ஏறிகிட்டு ‘ஹிஹிஹி’ ன்னு பழிச்சுக் காட்டி இளிக்கும்; மான் குட்டிகள் முயல் குட்டிகளை புல் திங்க விடாம தன் பல்லைப்பூரா காட்டி சீறி விரட்டும்;

ரங்குடு, தன் கூட்டத்துல இருக்குற குரங்களைக்கூட விடாது, அதுங்க சாப்பிட எடுக்குற பொருட்களை வெடுக்குன்னு பிடுங்கி தின்னும், அந்தக் குரங்குகள் தடுக்கப் பார்த்தால் அவற்றைத் தன கூறிய நகங்களைக் கொண்டு கிழிச்சும் பிராண்டியும் விட்டுடும்.

அதனால ரங்குடுவை அந்தக் காட்டில் யாருக்குமே பிடிக்காது. குரங்குக் குட்டிகளிடம் அவற்றின் அம்மாக்கள் “ஒரு போதும் ரங்குடு கூட சேரக்கூடாது. அதுகிட்ட இருந்து எட்டி, ஜாக்ரதையா இருக்கணும்னு” சொல்லி தான் வளர்த்தாங்க.

ரங்குடு மகிழ் பாறைக்கு வந்து சேர்ந்தவுடன், நம்ம நண்பர்கள்  அங்க வச்சிருந்த உணவு  பொருட்களை பக்கத்தில் போய் பார்த்தது. தேன், இளநீர், கரும்பு, கேரட் எல்லாத்தையும் விட, மீனா முள்ளம்பன்றிக் குட்டி தோண்டி எடுத்து வச்சிருந்த  புத்தம்புது சக்கரைவள்ளிக் கிழங்கோட வாசனை அதோட மூக்கைத் துளைச்சுது.

“ஆஹா, யாரோ ரொம்ப சுவையான புதுசா தோண்டியெடுத்து சுத்தப்படுத்திய சக்கரவள்ளிக் கிழங்கை வச்சிட்டுப் போயிருக்காங்க. மீதி இங்க இருக்குற பொருளெல்லாம் பூமிக்கு மேலயே கிடைக்கும். நானே எடுத்துக்குவேன். ஆனால், பூமிக்கு அடியில விளையிற இந்தக் கிழங்கு ரொம்ப அபூர்வம். என்னால தோண்டியெடுக்க முடியாதது. அதனால, யாரும் வரதுகுள்ள இதைத்தான் முதல்ல சாப்பிடணும்” அப்படீன்னு தனக்குத் தானே சொல்லிகிச்சு.

அப்புறம், அந்தக் கிழங்குகளை எடுத்துகிட்டு பாறை பக்கத்துல இருந்த ஒரு குட்டை மரத்து மேல ஏறி உக்காந்துகிட்டு; கிழங்குகளுக்கு மேல இருந்த கீரையை பழக்க தோஷத்துல ஒடிச்சு ஒடிச்சு கீழே போட்டுட்டு, மடக் மடக்குன்னு கிழங்குகளைத் திங்க ஆரம்பிச்சுது.

அது கடைசி கிழங்கை உள்ளே தள்ளி ஏப்பம் விடவும், நண்பர்கள் அங்கு வந்து சேரவும் சரியாக இருந்தது. அவர்கள் தன்னைப் பார்த்து விடக்கூடாது என்று ரங்குடு மரத்தில் அடர்த்தியான கிளைக்குள் போய் மறைஞ்சு உட்கார்ந்துடுச்சு. அங்கிருந்து கீழே நடப்பதை நோட்டம் விட்டுச்சு.

பாறைமேல் தான் வைத்திருந்த கிழங்குக் கொத்தைக் காணாமல் மீனா பதறியது “ஐயையோ, என்னோட பரிசுப் பொருள் சக்கரைவள்ளிக் கிழங்கைக் காணோமே. எங்க போச்சு?” என்று கத்தியது. அம்முலுவும் மற்றவர்களும் கூட “அட ஆமா, இங்கதான வச்சோம்? மீதியெல்லாம் இருக்கும் போது கிழங்கை மட்டும் காணோமே? ஒருவேளை கிழங்குக்கு கால் முளைச்சு ஓடிப் போயிடுச்சா?” என்று ஆச்சரியமாக பார்த்தார்கள். எல்லோரும் சுற்றும் முற்றும் ஓடித் தேடினார்கள்.

அப்போது குட்டை மரத்தடியில் கிழங்கிலிருந்து ஒடித்துப் போட்டிருந்த இலைகளைப் பார்த்து விட்டது அம்முலு. மெல்ல தலையைத் தூக்கி மரத்தில் மறைந்திருந்த ரங்குடுவையும் தன் தீர்க்கமான பார்வையால் கண்டு கொண்டது அம்முலு. உடனே, “நண்பர்களே, ஒரு முக்கியமான விஷயம் இங்கே வாருங்கள்” என்று எல்லோரையும் குட்டை மரத்தடிக்கு வரவைத்தது.

“என்ன அம்முலு? சீக்கிரம் சொல்லு. இன்னும் கொஞ்ச நேரத்தில் மற்றவங்க எல்லாரும் பரிசுப் பொருட்களை எடுத்து கிட்டு இங்க கூடிடுவாங்க. அதுக்குள்ள கிழங்கை கண்டு பிடிக்கலைன்னா, நான் மட்டும் வெறுங்கையோடு விழாவில எப்படி கலந்துப்பேன்? எவ்வளவு கஷ்டப்பட்டு அருமையான கிழங்கை அந்தக் குட்டிப்பயலுக்காக கொண்டு வந்தேன். இப்படி காணாமல் போயிடுச்சே. எந்த களவாணிப் பயல் எடுத்தானோ தெரியலையே?” என்று புலம்பியது மீனா.

“மீனா, புலம்பாதே. களவாணின்னு பழிக்காதே. யார் கிழங்கை எடுத்ததுன்னு எனக்குத் தெரியும்” என்று சொன்னது அம்முலு. “யாரு? யாருன்னு நண்பர்கள் ஆர்வமாகக் கேட்டார்கள்.

அதேசமயம், மரத்துக்கு மேல் ஒளிஞ்சிருந்த ரங்குடுவுக்கு பயத்தில் கைகால் நடுங்கத் தொடங்கியது. புலி சிங்கமென்றால் கூட பயப்படாத ரங்குடுவுக்கு யானை என்றால் மிகவும் பயம்.

ஒருதடவை, ஒரு யானையின் வாலைப் பிடித்திழுத்து விட்டு பக்கத்திலிருந்த ஒற்ற மரத்தில் ஏறிக்கொண்டது. கோபம் கொண்ட யானை அந்த மரத்தை ஒரே நிமிடத்தில் வேரோடு பிடுங்கி கீழே சாய்த்து விட்டது. பக்கத்தில் வேறு மரங்களிருந்திருந்தால் தாவி தப்பித்து இருக்கும். அது ஒற்றைமரம். கீழே விழுந்த வேகத்தில் ரங்குடுவுக்குக் இடுப்பில் நல்ல அடி. ஓடமுடியாமல் கூச்சலிட்டது.

கோபத்துடன் யானை பக்கத்தில் வந்து தன் வலது முன்னங்காலை உயர்த்தி மிதிக்க முயன்றபோது ரங்குடுவின் அம்மா குறுக்கே ஓடி வந்து யானையை கைகூப்பித் தொழுது மன்னிப்புக் கேட்டது. தன் பிள்ளை ஒரு அசடன் என்றும் முட்டாள் என்றும்; இந்த ஒரேயொரு முறை மன்னித்து விடும்படியும் கேட்டுக் கொண்டது.

அப்போது அந்த யானை போனால் போகட்டும் என்று ரங்குடுவை மன்னித்து விட்டது. ஆனால், “இன்னொரு முறை யானைகளிடம் ஏதும் வம்பு செய்தால் சட்டினி ஆக்கி விடுவேன். ஜாக்கிரதை” என்று எச்சரித்துச் சென்றது. அந்த யானை வேறு யாருமில்லை அம்முலுவின் அம்மா காமாட்சி தான்.

அன்றிலிருந்து ரங்குடு யானைகளை மட்டும் வம்புக்கு இழுப்பதேயில்லை. ஆனால், இன்று கிழங்குக்கு ஆசைப்பட்டு அம்முலு யானையிடம் வசமாக மாட்டிக் கொண்டு விட்டோமோ என்று பயந்து நடுங்கியது. தன்னை எச்சரித்து உயிர்ப்பிச்சை அளித்த காமாட்சி யானையின் குட்டியான அம்முலுவிடமே சேட்டை செய்து விட்டோமே என்று தன் தலையில் தானே கொட்டிக் கொண்டது. ஆனாலும், அம்முலு என்ன சொல்கிறது என்று உன்னிப்பாக கேட்டது.

“நண்பர்களே, மீனா கொண்டுவந்த கிழங்கை இந்த குட்டை மரம்தான் தின்றிருக்கிறது. பாருங்கள், சக்கரைவள்ளி இலைகள் மரத்தடியில்தான் கிடக்கின்றன” என்று சொல்லி இலைகளைக் காட்டியது அம்முலு.

சேஷு முந்திரிக் கொட்டை போல முந்திக்கொண்டு “அம்முலு. உனக்கு என்ன லூஸா? அதெப்படி மரம் கிழங்கைத் தின்னும்?” என்று கேட்டது.  கண்களை படபடவென அடித்து ‘நான் சொல்வதில் ஒரு விஷயம் இருக்கிறது’ என்று சமிக்கை செய்தது அம்முலு. அதன் நண்பர்களுக்கு அம்முலு ஏதாவது ரகசியம் அல்லது அதிசயம் பற்றி சொல்லும் போது அப்படி சமிக்கை செய்யும் என்பது தெரியும். அதனால் அவர்களும் உஷாராகி விட்டார்கள்.

அம்முலு “சும்மாயிரு சேஷு.. இது அதிசய மரம்” என்று சொல்லி, கண்களால் ‘மேலே ஆள் இருக்கு’ என்று ஜாடை செய்தது. நண்பர்களும் புரிந்து கொண்டு அம்முலு மேலே என்ன சொல்கிறது என்று கேட்டார்கள்.

“நீங்க நினைக்கிற மாதிரி மீனா கொண்டு வந்தது சாதாரண கிழங்கு இல்லை. பிறந்திருக்கிற குட்டி யானைக்காக மான் மாந்திரீகர் மலையுச்சியில் பூஜை செய்து கொடுத்த கிழங்கு. புதிதாக பிறந்த குழந்தைகள் தின்றால், அவர்கள் புத்திசாலிகளாகவும், பலசாலிகளாகவும் மாறுவார்கள்.” என்றது அம்முலு.

“ஒருவேளை வேறு யாராவது, இந்த மரத்தைப் போல அந்தக் கிழங்கை தின்றால் என்னாகும்?” என்று கேட்டது மோகனன். அம்முலு “ஐயோ, அந்தக் கொடுமையை என் வாயால எப்படி சொல்றது? மீனா நீ சொல்றியா?” என்று கேட்டது அம்முலு.

அது ஏதோ பொடி வைத்துப் பேசுகிறது என்று புரிந்து கொண்ட கெட்டிக்காரி மீனா “என்னால முடியாது. சொல்லவே குலை நடுங்குது. நீயே சொல்லிடு அம்முலு” என்று போலியாக பயந்தது போல் நடித்தது.

அவர்கள் பேசுவதை மேலேயிருந்து கேட்டுக்கொண்டிருந்த ரங்குடுவின் வயிற்றில் பயம் பிசைய ஆரம்பித்து விட்டது. “ஏதுடா வம்பாப் போச்சு. கேவலம் ஒரு வள்ளிக் கிழங்குக்கு ஆசைப்பட்டு பேராபத்துல மாட்டிக்கிட்டோமேன்னு” தவிச்சுது. அதே தவிப்போட அம்முலு என்ன சொல்லப் போகுதுன்னு காதைத் தீட்டிக்கிட்டு கேட்டுச்சு.

“கிட்ட வாங்க நண்பர்களே. அது பரமரகசியம். யாராவது அந்த மந்திரக் கிழங்கைத் திருடித் தின்றால் அவங்களோட குடல் அழுகி மூணே நாளுல செத்துருவாங்க. பாவம் இந்த மரத்துக்கு ஆயுசு மூணு நாள்தான்” என்று வருத்தமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னது அம்முலு.

மேலேயிருந்த குரங்கு ரங்குடுவுக்கு பயத்தால் வயிறு கலங்கியது. ஆனால், அது அந்தக் கிழங்கைத் தின்றதால் தன் குடல் அழுகத் தொடங்கி விட்டது என்று நினைத்து பயந்து போனது.

அப்போது மோகனன் “பாவம் அம்முலு இந்த மரம், ஒரு கிழங்கை திருடித் தின்னதுக்கு இறந்து போகணுமா? இதிலிருந்து தப்பிக்க வேறு வழியே இல்லையா?” என்று அப்பாவியாக கேட்டது. அந்தக் கேள்வி ரங்குடு வயிற்றில் பாலை வார்த்தமாதிரி இருந்தது.

அம்முலு தோரணையாக “இருக்கு. ஒரு வழி இருக்கு. திருடித் தின்னவங்க தன் தவறை மறைக்காம ஒத்துகிட்டு பொருளுக்கு சொந்தக்காரியான மீனா கிட்ட மன்னிப்பு கேட்கணும். மீனாவும் முழு மனசோட மன்னிச்சிட்டான்னா, தின்ன கிழங்கு வாந்தியா வெளில வந்துடும். திருடினவங்க உயிர் பிழைச்சுக்கலாம். அதைத்தவிர வேறு வழியே இல்லை” என்று சொன்னது.

உடனே, மோகனன் மரத்தைப் பார்த்து “ஏய், மரமே. திருடினதை ஒத்துக்கிட்டு மன்னிப்பு கேளு. திங்கறப்போ வாயைத் திறந்தமாதிரி மறுபடி திற” என்றது.

சேஷு “ஒண்ணு ரெண்டு மூணு எண்ணுவேன். அதுக்குள்ள உன் குத்தத்தை ஒத்துக்கிட்டாதான் மீனா மன்னிப்பா நீயும் பொழைச்சுக்கலாம். இல்லைன்னா, மான் மாந்திரீகரைப் பத்தி உனக்குத் தெரியாது. அவர் பெரிய மந்திரவாதி. அவரோட மந்திரம் நிச்சயம் பலிக்கும். அப்புறம் உன்னிஷ்டம்” என்றது. மீனா “ஏய் முட்டாள் மரமே, ஒரு கிழங்குக்காக உயிரை விட்டுடாதே” என்று தன் பங்கிற்குச் சொன்னது.

ரங்குடு மலையுச்சியில் பலமுறை மான் மாந்திரீகர் மந்திரங்கள் உச்சரித்து பூசைகள் செய்வதைப் பார்த்திருந்தது. “ஐயோ, நான் சாக மாட்டேன். முள்ளம்பன்றி குட்டியே, என்னை மன்னிச்சுடு” என்று மரத்தின் மேலிருந்தே அலறியது. அப்போதும் மரம் பேசுவதாக நினைத்து மீனா மன்னித்து விட்டால் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் தப்பி விடலாம் என்றெண்ணியது ரங்குடு.

அப்போதுதான் நண்பர்களுக்குத் திருடன் மரத்தில் ஒளிந்திருக்கும் ரகசியம் புரிந்தது. மறுபடியும் அம்முலு சமிக்கை செய்ய, மீனா “ஏய், திமிர் பிடித்த மரமே. கிழங்கை எடுத்து வர கையும் காலும் கொண்டு தானே போயிருப்பாய். மன்னிப்பு மட்டும் வாயால் கேட்கிறாயா? மரியாதையாக கைகளை வெளியே நீட்டி குவித்து வணங்கி மன்னிப்புக் கேள். இல்லாவிட்டால் மன்னிக்க மாட்டேன்” என்றது.

வயிற்று சங்கடம் அதிகரிக்க பயத்தில் நடுங்கிய படியே தொப்பென்று கீழே குதித்தது ரங்குடு “அம்மா தாயே, மீனா. உன்னோட மந்திரிச்சக் கிழங்கைத் திருடித் தின்னவன் நான்தான். என்னை மன்னிச்சுடு” என்று கைகூப்பிச் சொல்லியது.

வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு அம்முலு “ரங்குடு நீயா? ச்சீய். நீயென்று தெரியாமல் இந்த அப்பாவி மரத்தைப் போய் தப்பா நினைச்சோமே. மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது, இனிமே எப்பவும் திருடவே மாட்டேன்னு சத்தியம் செய். அப்புறம் போய் உன்னால் என்ன முடியுமோ அந்த பரிசுப் பொருளைக் கொண்டு வந்து மீனாவுக்குக் கொடு. அப்போதான் உனக்கு முழு மன்னிப்பு. என்ன மீனா சரிதானே” அப்படீன்னு கேட்டுச்சு.

“அம்முலு நீ சொன்னா அப்பீலே இல்லை. எப்பவுமே நீ ரொம்ப சரி” என்றது மீனா. உடனே, ரங்குடு காட்டுக்குள் ஓடி சுவையான கற்பூர வாழைக் குலையிலிருந்து இரண்டு சீப்புப் பழங்களை எடுத்துக் கொண்டு வந்து மீனாவிடம் தந்தது. மீனாவும் “சரி சரி ரங்குடு உன்னை நான் மனசார மன்னிச்சிட்டேன். போ” என்றது.

“அப்பாடா” என்று பெருமூச்சு விட்டு விட்டு ஒரு ஓரமாகச் சென்று “உவ்வே.. உவ்வே” என்று வாந்தி எடுக்க முயன்று கொண்டிருந்த ரங்குடுவைப் பார்த்துத் தங்களுக்குள் சிரித்தபடியே மகிழ் பாறைக்குப் போய் சேர்ந்தார்கள் அம்முலுவும் நண்பர்களும்.

முதல் பாகம் முற்றிற்று

000

இராஜலட்சுமி

பொருளியல் பட்டதாரி – சென்னை கிறித்துவ கல்லூரி. முதுநிலை பட்டம் மனிதவள மேம்பாடு துறையில். அமேஸான் ப்ரைம், மாக்ஸ், நெட்பிளிக்ஸ் ஆகிய ஓடிடி தளங்களில் இந்தி மற்றும் ஆங்கில படங்கள், வெப் சீரியல்களைத் தமிழாக்கம் செய்துள்ளார்..

கன்னி நெஞ்சின் ஓவியம் – சரித்திர குறுநாவல், கண்ணோடு காண்பதெல்லாம் – காதல் குறுநாவல், ஒரு இனிய மனது – அமானுஷ்ய நாவல், மறக்கத் தெரிந்த மனம் நாவல்- குடும்ப நாவல், கொலை நோக்குப் பார்வை – க்ரைம் நாவல் என் இதுவரை புத்தகங்கள் வெளிவந்துள்ளன.

1. திருப்பூர் சக்தி விருது 2024 தமிழிலக்கிய பணிக்காக.

2. மலர்வனம் 2023 சிறந்த எழுத்தாளர்

3. வளரி கவியரங்கம் 2023

4. புதுச்சேரி தமிழ்ச்சங்கம் பாப்போட்டி  2023.

5. லயோனஸ் உலகசாதனை புத்தகத்தில் இடம் 2024.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *