மாத்தூர் ஒரு மலையடிவாரக் கிராமம்.
கொற்றவைக் கோயில் திருவிழாவுக்கு மகாரணியாரே வருகிறாராம்.
கோவிலுக்குத் தேவையான பூக்களைப் பறித்து மாலைகளைத் தொடுக்க தானும் உதவுவதாக திலகா மாலை கட்டும் முத்தம்மா அத்தையிடம் சொல்லி இருந்தாள்.
அதனால், பொழுது விடிவதற்கு முன்னரே, தன் தோழிகள் சித்ரதேவியையும் கலையழகியையும் அழைத்துக் கொண்டு குளிப்பதற்காக குளத்திற்கு வந்து விட்டாள்.
“மிகவும் சிலுசிலுப்பாக உள்ளதே திலகா! நீரில் இறங்கவே அச்சமாக உள்ளது” கலை.
“ம்ம்.. ஒரிரு நாட்கள் மட்டும் தானே! அச்சப்படாதே! நீரில் இறங்கினால், குளிர் இருக்காது” என்றாள் திலகா.
அப்போது, ‘கொர் கொர்’ என்று சத்தம் கேட்டது.
“அச்சச்சோ! ஏதோ விலங்கு!” எனக் கிசுகிசுத்தாள் சித்ரா.
தைரியமிக்க சாகசப்பெண்ணான திலகா, தனது வில்லையும் அம்பையும் எடுத்துக் கொண்டு, குளத்தின் படிக்கட்டுச் சுவரில் ஏறி சுற்றுமற்றும் நோட்டம் விட்டாள்.
’சர்க் சர்க்’… இலைகளின் மேல் ஏதோ நடந்து செல்லும் சப்தம்!
குளத்தங்கரையின் அருகே இருந்த மரங்கள் அடர்ந்த சோலையில் இருந்து தான் சத்தம்! திலகா மெல்ல நடந்தாள். அவள் கண்கள் நாலாப்புறமும் சுழன்றன. கைகள் அம்பை எய்திடத் தயார் நிலையில் இருந்தன. சித்ரதேவியும் தன் கவண் கருவியுடன் திலகாவைப் பின் தொடர்ந்தாள்.
காட்டு விலங்குகளையும் எதிர்கொள்ளும் மனத்திண்மையும் வீரமும் பெற்றவள் தான் திலகா! ஆனால், அவள் அன்று கண்டதோ இரு சிறு குரங்கு குட்டிகளைத் தான்! அவை இரண்டும் ஒரு குச்சியை பிடித்து இழுத்து சண்டையிட்டுக் கொண்டு இருந்தன.
திலகா தன்னுடைய கவண் வில்லை எடுத்து குறி பார்த்து கல் எறிந்தாள். சித்ராவும் கவண் கல் எறிந்தாள். இந்த திடீர் தாக்குதலால் குரங்குகள் பயந்து ஓடின.
”அந்த மரத்துக்குப் பின்னால் ஒரு பொருள் தென்படுகிறது, வா , அருகில் சென்று பார்க்கலாம்” என்றாள் திலகா.
அழகான இரு மண்பானைகள் அங்கே இருந்தன.
குரங்குகள் இழுத்துப் பிடித்து சண்டையிட்டுக் கொண்டிருந்த குச்சி கூட பானைக்கு வண்ணமடிக்கும் ஒரு தேங்காய் நார் தூரிகை தான்.
பானைகளை எடுத்துக் கொண்டு, தங்கள் குளியலை முடித்துக் கொண்டு இல்லம் நோக்கி விரைந்தனர் தோழியர்.
அந்த விடியற்காலையிலேயே கிராமம் பரபரப்பாக இருந்தது.
“என்ன ஆயிற்று? ஏன் அனைவரும் ஆலமரத்தடியில் குழுமி விட்டார்கள்?” என அங்கலாய்த்தாள் கமல்தேவி.
“திலகா! சேதி தெரியுமா? நமது குயவனார் சித்தன் அய்யாவை அரண்மணை அதிகாரிகள் அடித்தே விடுவார்கள் போலிருக்கிறது“ என்றான் திலகாவின் நண்பன் சிவநந்தன்.
“ஏன்? அவர் என்ன குற்றம் செய்துவிட்டார்?”என்றாள் சித்ரதேவி.
“இன்று அரண்மனைப் பெண்டிர் பொங்கலிடும் நாள் அல்லவா. குயவனார் அவர்கள் கேட்ட எண்ணிக்கையிலான பானைகளைக் கொடுக்கத் தவறி விட்டாராம்” என்றான் சிவநந்தன்.
தோழிகள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து அர்த்தபுஷ்டியுடன் சிரித்துக் கொண்டனர்.
“விலகுங்கள், விலகி நில்லுங்கள்! நம் மாத்தூரின் தங்கப்பெண் திலகா வருகிறாள்“ என சித்ராவும் சிவாவும் குரல் கொடுக்க, சட்டென ஊர் மக்கள் விலகி வழி விட்டனர்.
“என்ன! இச்சிறு பெண்ணுக்கு இவ்வளவு மரியாதையா, இவ்வூரில்?” என உறுமினார் அரசாங்க அதிகாரி.
“ஐயா! திலகா தீரமும் அறிவும் ஒரு சேர சேர்ந்த பெண்! இதோ இந்த விஷயத்தைக் கூட அவள் தீர்த்து வைப்பாள் பாருங்கள்” என்றார் ஊர்ப்பெரியவர் பரமசிவனார்.
ஈட்டி முனையில் நடுங்கிக் கொண்டு இருந்தார் சித்தன் அய்யா.
“எங்கள் சித்தனாரை விட்டு விலகுங்கள்” எனக் கர்ஜித்தாள் திலகா.
திடுக்குற்ற வீரர்கள் சற்றே நகர்ந்தனர்.
“ஏ! சிறு பெண்ணே! இதோ பொங்கலிடும் முகூர்த்த நேரம் விரைவில் வந்துவிடும். தருவதாகச் சொன்ன பானைகளின் எண்ணிக்கை குறைகிறதே!” உறுமினார் அதிகாரி.
“நான் வேறு பானைகள் தருகிறேன் அய்யா: என வேண்டினார் சித்தன்.
“அது எப்படி அய்யா, அரண்மனைப் பெண்டிர் அனைவரும் ஒரே அளவில் ஒரே மாதிரியான பானைகளில் பொங்கலிட வேண்டும். இல்லையேல், அது மேலும் குழப்பங்களை ஏற்படுத்தும்”
“ஆக… தங்களது சிக்கல்… எங்கள் சித்தனார் தராத பானைகள் அல்ல.. அரண்மனைப் பெண்டிருக்குள் வரக்கூடிய குழப்பமே! “ என திலகா சொல்ல, ஊர்மக்கள் ‘கொல்’லெனச் சிரித்தனர்.
“பெண்ணே! வாயை அடக்கு! வாக்கு தவறியதற்காக சித்தனை சிரச்சேதம் கூட செய்து விடுவேன்” என்று பிரதான அதிகாரி கடுகடுத்தார்.
“வேண்டாம் அய்யா! கொடுமையான சொற்களை உதிர்க்க வேண்டாம்“ என்ற திலகா, சித்தனாரிடம் திரும்பி, “அய்யா! தாங்கள் அவர்கள் கேட்ட எண்ணிக்கையிலான பானைகளைச் செய்தீர்களா இல்லையா?” என வினவினாள்.
“செய்தேன், கண்ணே! ஒரே உருவிலான அழகான பானைகள்!”
“வண்ணமும் தீட்டினீரா?” திலகா.
“ஆம், வண்ணம் தீட்டிக் காய வைத்தேன். நிலவிளக்கின் உதவியுடன் இரவு வெகு நேரம் விழித்து வண்ணம் தீட்டினேன்”
“எங்களுக்குத் தரவில்லையே! சில எண்ணிக்கை குறைகின்றனவே!”
“இரண்டு பானைகள் குறைகின்றன” சித்தன்.
“பானைகள் மட்டும் தான் காணவில்லையா?” திலகா.
“வண்ணமடிக்கும் சில தூரிகைகளையும் காணோம். ஆனால், அது பற்றி கவலையில்லை. வேறு தயாரித்துக் கொள்வேன்” சித்தன்.
“மாத்தூர் நன்மக்கள் நிறைந்த ஊர் என நினைத்தோமே! கள்வர்கள் மலிந்த ஊரோ?” என ஒரு அரண்மனைவாசி சொன்னாள்.
”எம் மக்கள் நன்மக்கள் தான்! கலைகளில் சிறந்தவர்கள் தான்! எங்கள் விலங்கினங்களும் கலையார்வம் மிகுந்து இருப்பதால் சற்று குழப்பம் நேர்ந்து விட்டது.” திலகா.
“என்ன! விலங்குகளின் கலையார்வமா? சற்று விளக்கமாகத்தான் கூறேன்” என ஒரு அதிகாரி வினவ, திலகா தொடர்ந்தாள், “எம் ஊர் குரங்குகளுக்கும் சித்தனார் போல புதுப்பானையில் வண்ணமிடும் எண்ணம் வந்து விட்டது. அவை தான் பானைகளில் இரண்டைக் கவர்ந்து சென்று விட்டன. தூரிகைகளையும் தூக்கிச் சென்றுவிட்டன”
“ஆமாம், நேற்று சில குரங்குகள் என் வீட்டின் அருகே வெகுநேரம் உட்கார்ந்திருந்தன” என்றார் சித்தன்.
“இதோ, பானைகள்“ என கலையழகியும் சித்ரதேவியும் பானைகளை எடுத்து வந்தனர்.
குரங்குகள் பானைகளைத் தூக்கிச் சென்று வண்ணமடிக்க முயற்சி செய்ததைக் கேட்டு மக்கள் சிரித்தனர்.
“சரி சரி! சேடிகளே! பூஜை தொடங்க வேண்டும். சீக்கிரம் பானைகளைப் பத்திரமாகக் கொண்டு வாருங்கள்” என ஆணை பறந்தது.
பிரதான அதிகாரி திலகாவைப் பார்த்து, “மிக்க மகிழ்ச்சி பெண்ணே! நீயும் எங்களுடன் வரவேண்டும். மகாராணி மாசில்லா மரகதமணியார் அவர்களிடம் உன்னை அறிமுகம் செய்ய வேண்டும்” என்று கூறி திலகாவையும் அவள் நண்பர்களையும் பல்லக்கில் அழைத்துச் சென்றார்.
000
கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வரும்,இவரது இயற்பெயர் திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும்.
ஆங்கில இலக்கியம் மற்றும் கல்வியியலில் முதுகலைப்பட்டம் பெற்ற கமலா முரளி,சென்னை, பெரம்பூர்,விவேகானந்தா பள்ளியில் சில வருடங்கள் பணியாற்றிய பின், கேந்திரிய வித்யாலயா சங்கதனில் ஆங்கில ஆசிரியையாகப் பணியேற்றார். கேந்திரிய வித்யாலயாவின் தேசிய அளவிலான “சீர்மிகு ஆசிரியர்” விருதினை 2009 ஆண்டு பெற்றார்.
கமலா முரளியின்,கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் தினசரி.டாட் காம், மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ், கேலக்ஸி தளம், நமது உரத்த சிந்தனை, மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், சிறுவர் வனம் ,ஆனந்தசந்திரிகை, மங்கையர்மலர், கோகுலம் , இந்து தமிழ்திசையின் மாயாபஜார் , வாசகசாலை, தினமலர் பட்டம் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.
அவரது “மங்கை எனும் மந்திர தீபம்” (“எ லேடி வித் த மேஜிக் லேம்ப்”)எனும் மொழிபெயர்ப்பு நூல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.