கடந்த அரை நூற்றாண்டுகளாக மலையாள சிறார் இலக்கிய வளர்ச்சிக்கு தனது பங்களிப்பை நல்கிவரும் சிப்பி பள்ளிப்புரம் 200க்கும் மேற்பட்ட சிறுவர் இலக்கிய நூல்களை வெளியிட்டுள்ளார். குழந்தைகளுக்கு இயற்கை மீதான அக்கறை, குரு பக்தி, தேச பக்தி, பெற்றோரை மதித்தல், நேர்மை, ஒழுக்கம், பிறருக்கு உதவும் மனப்பான்மை ஆகியவற்றை வளர்க்கும் கதைகளை தொடர்ந்து எழுதி வருகிறார். இவரது நூல்கள் தமிழ் தெலுங்கு குஜராத்தி ஹிந்தி ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
அட்டப்பாடி ராஜீவ் காந்தி அரசு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றி வரும் க.சிவமணி இந்த மலையாள சிறார் கதைகளை அழகாக தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் இந்த நூலுக்கு அழகானதொரு அணிந்துரை வழங்கி அழகு செய்திருக்கிறார்
இன்றைய காலகட்டத்தில் சிறார் இலக்கியத்தின் தேவை மிக அவசியமாகிறது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கவனிப்பதற்கு நேரம் ஒதுக்க முடியாத பொருளாதாரத்தைத் தேடி ஓடும் சூழலில் கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து தனிக் குடும்பங்களாக மாறிவிட்ட காலகட்டத்தில் குழந்தைகள் தங்களுக்கான தேவைகளையும் பொழுதுபோக்கிற்கும் நாடுவதற்கான வாய்ப்புகள் குறைந்து வரும் சூழலிலும் சிறார் கதைகளின் அவசியம் உணரப்படுகிறது.
அன்றைய காலகட்டத்தில் தாத்தா பாட்டி மாமா அத்தை என கூட்டுக் குடும்பங்களில் நிலவி வந்த குடும்பச் சூழல் ஒவ்வொரு குழந்தைக்கும் பலவிதமான கதைகளையும் நாட்டு நடப்பையும் அறிமுகம் செய்தன. அதன் வழியே குழந்தைகள் இயற்கை மீதான அக்கறையையும் ஆசிரியர் மீதான மதிப்பையும் தேசத்தின் மீதான பற்றையும் வளர்த்துக் கொள்வதற்கு கதைகள் பேருதவி புரிந்தன.
பெற்றோர்களை மதித்தல் வாழ்க்கையில் எப்பொழுதும் நேர்மையாக நடத்தல் எவ்விடத்தும் ஒழுக்கத்தை பேணிப் பாதுகாத்தல் தம் கண் முன்னே பிறருக்கு ஏதேனும் ஆபத்துகள் நேர்கையில் அவற்றிலிருந்து அவர்களை பாதுகாத்தல் பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை வளர்த்தல் போன்ற அடிப்படை நெறிகளை சமூகமும் சுற்றுப்புறமும் அன்றைய காலகட்ட குழந்தைகளுக்கு சிறப்பாகக் கற்றுத் தந்தன. ஆனால் இன்றைய சூழலில் அத்தகைய வேலைகளை அறிவியலும் அறிவியல் சார்ந்த கருவிகளும் கையெடுத்துக் கொண்டனர்.
சிறார் இலக்கியம் என்பது இயற்கையையும் பறவைகளையும் விலங்குகளையும் தேவதைகளையும் அடிப்படையாகக் கொண்ட நீதிநெறி கதைகளைக் கூறுவதோடு நின்று விடாமல் சுற்றுச்சூழல் சார்ந்தும் குழந்தைகளை இயங்குவதற்கு ஊக்கப்படுத்தும் வழிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கின்றன. எளிய மொழியில் புரிந்து கொள்ள முடியாத வார்த்தைகளை பயன்படுத்தாமல் சிறு சிறு வாக்கியங்களாக எழுதப்படும் கதைகளே சிறார்கள் தொடர்ச்சியான வாசிப்பிற்கு உதவி செய்கின்றன.
மழலை மனங்களுக்குத் தோதாக அமையும் இத்தகு கதைகளே அவர்களை வாசிப்பின் பக்கம் வெகுவாக ஈர்த்து விடுகின்றன. அப்படியானதொரு அருமையான கதைத் தொகுப்பாக மந்திரமயில் இடம் பிடிக்கிறது. மலையாள மூலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்டாலும் எந்த இடத்திலும் மொழிபெயர்ப்புக்கான அறிகுறிகளும் வார்த்தை தடுமாற்றங்களும் தென்படவில்லை. நேரடியான மொழியில் எழுதப்பட்ட சிறார் கதைகளாகவே இந்த நூலில் உள்ள 25 கதைகளும் இடம் பிடிக்கின்றன. நூலின் அட்டை தொடங்கி ஒவ்வொரு கதைக்கும் வரையப்பட்டு இருக்கும் ஓவியங்கள் அனைத்தும் சிறார்களை வெகுவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இணையத்தின் பக்கமும் அதன் வழியே நிறைய உலகத்தின் தேவையில்லாத தகவல்களை சேகரிக்கும் இன்றைய சூழலில் மாட்டிக் கொண்டிருக்கும் குழந்தைகளை இது போன்ற சிறார் கதைகளே விடுவிப்பதற்கு உதவி செய்கின்றன. கதைகளின் வழியே அறிவுறுத்தாமலும் தலையில் கொட்டி தண்டனையாக கொடுக்காமலும் நன்னெறிகளையும் நீதிகளையும் எளிய மொழியில் போகிற போக்கில் மனங்களில் பதிய வைக்கும் கதைகள் இந்த நூலை அழகு செய்கின்றன.
தாய் சொல்லைத் தட்டாதே
பேராசை பெரு நஷ்டம்
அகம்பாவம் ஆபத்தைத் தரும்
உருவு கண்டு எள்ளாதே
நேர்மையே சிறந்த பரிசைத் தரும் நம்பிக்கையே வாழ்வை வளமாக்கும்
புத்திக் கூர்மை எவ்வித ஆபத்தையும் எதிர்கொள்ள வைக்கும்
நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும்
உழைப்பு எப்போதும் உயர்வு தரும்
புத்திசாலித்தனம் எப்போதும் வெற்றியை பெற்றுத் தரும்
அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் நம் உயிருக்கும் ஆபத்து வரும்
ஆராயாது செய்யும் அவசர வேலைகள் ஆபத்தில் முடியும்
புத்தியே அனைத்து செயல்களுக்கும் சக்தியைத் தரும்
பிறர் பொருள் மீது ஆசை வைத்தால் தன் பொருளும் காணாமல் போய்விடும்.
தன்னை உணர்ந்தால் யாரைப் பார்த்தும் பொறாமை கொள்ளத் தேவையில்லை
என உலகத்தின் நம்பிக்கையான அறநெறி கருத்துக்களையும் அதன் வழியே ஒவ்வொரு குழந்தையும் தங்களது வாழ்வில் பின்பற்றக்கூடிய அறிவுரைகளையும் இந்த நூலில் உள்ள கதைகள் விவரித்துச் செல்கின்றன.
மீன்கள் மயில் காகம் அன்னம் கோழி கீரி பாம்பு புலி வனதேவதை வாழைமரம் சிறுத்தைப்புலி பரங்கிக்காய் முயல் தவளை மந்திரப்பேனா என நாம் கண்ணுறும் ஒவ்வொரு உயிரியும் இந்த நூலில் நமக்கானதொரு கதையாக மாறி அதன் வழியே நீதி நெறியை விவரித்துச் செல்கின்றன.
கண்ணாடியை எடுத்துக்கொண்டு விற்பனைக்கு செல்லும் வணிகன் நடுக்காட்டில் ஒரு புலியிடம் மாட்டிக் கொள்கிறான். எப்படி புலியிடமிருந்து தன்னை தற்காத்துக் கொண்டான்? அவனது புத்திசாலித்தனம் எப்படி அவனுக்கு உதவியது? என்பதை கண்ணாடி வணிகனும் புலியும் கதையை வாசித்துப் பாருங்கள் ஆச்சரியம் நம்மை அரவணைக்கும்.
ஏன் கீரியும் பாம்பும் விரோதிகளாகவே மாறிப் போயின என்பதற்கான கதையும், காட்டில் வளர்ந்த கோழியும் சேவலும் எப்போது வீட்டு விலங்காக மாறின என்பதற்கான கதையும் உணர்ந்து கொள்வதற்கு அறிவியல் ரீதியான காரணங்களைத் தேடாமல் சிறார்களுக்கான வாசிப்பை ஊக்குவிக்கும் கதைகளாக நூலில் அமைந்திருக்கின்றன..
இன்றைய காலகட்டத்தில் அவசியத் தேவையாக இலக்கியத்தில் இடம்பெறும் சிறார் கதைகள் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் நல்லதொரு வழிகாட்டியாக அமைவதில் முதலிடம் பிடிக்கின்றன. அத்தகையதொரு குழந்தை இலக்கிய வழிகாட்டியாக மந்திர மயில் நமக்கு எதிர்காலத் தலைமுறையை சிறப்பானதொரு நகர்த்தலுக்கு இழுத்துச் செல்ல உதவி செய்கின்றது.கவிஞர் சிவமணி அவர்களின் சிறார் இலக்கியப் பங்களிப்பிற்காக நல்வாழ்த்துகள்.
00
மலையாளம்: சிப்பி பள்ளிப்புரம், தமிழில்: க.சிவமணி, முதல் பதிப்பு நவம்பர் 2024, வெளியீடு பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
பக்கம் 120 -விலை ரூபாய் 150
இளையவன் சிவா
கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி ஏழை தாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.