விண்மீன் சதுக்கம்

மருத்துவர் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். கீல் பூசிய மிக அகலமான சாலைகள் வழியாக அவருடைய வண்டி போய்க் கொண்டிருந்தது. ஹால்களை விடப் பிரகாசமாக ஒளி வீசிக் கொண்டிருந்தன இந்தச் சாலைகள். அவற்றுக்கு மேலே விளக்குகளின் வரிசை வானளாவ உயர்ந்திருந்தது. கண்களைக் கூசச் செய்யும்படிக் கொதித்த பால் நிரம்பிய பலூன்கள் போல இருந்தன தெரு விளக்குகள். விளக்குகளைச் சுற்றி மொய்ப்பதும் நொய்யென்று இரைவதும் மடிவதுமாக இருந்தன சிறு பூச்சிகள். மருத்துவருடைய வண்டி கரையோரச் சாலையில் தடுப்புக் கற்சுவர்களை ஒட்டிச் சென்றது. முன் கால்களில் கேடயங்களைப் பிடித்துக் கொண்டு நாக்குக்களைத் துருத்திக் கொண்டிருந்த சிங்கங்களின் வெண்கலச் சிலைகள் அவற்றின் மேல் இருந்தன. கீலெண்ணெய் போலக் கறுப்பாகப் பளபளத்த குழம்பல் நீர் கீழே மெதுவாகப் பெருகிற்று. நகரத்தின் நிழல் உருவம் நீரில் தலைகீழாகத் தெரிந்தது. அது மூழ்கிற்று, நீந்தி வெளியேறப் பார்த்தது. ஆனால் வெளியேற முடியாமல் மெல்லிய தங்கப் புள்ளிகளாகக் கரைய மட்டுமே செய்தது. மருத்துவரின் வண்டி கமான்களின் வடிவில் வளைந்திருந்த பாலங்கள் வழியாகப் போயிற்று. கீழே இருந்தோ, மறு கரையில் இருந்தோ பார்ப்பதற்கு இந்தப் பாலங்கள் தாவிக் குதிப்பதற்கு முன்னால் இரும்பு முதுகுகளை வளைக்கும் பூனைகள் போலக் காணப்பட்டன. இங்கே, நகரில் புகும் இடத்தில், ஒவ்வொரு பாலத்தின் மேலும் காவல் படை இருந்தது. படையினர் முரசுகளின் மேல் உட்கார்ந்து சுங்கான்களைப் புகைத்துக்கொண்டும், சீட்டு ஆடிக் கொண்டும், நட்சத்திரங்களைப் பார்த்துக் கொட்டாவி விட்டுக் கொண்டும் இருந்தார்கள்.

மருத்துவர் வண்டியில் போனபடியே எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்தார்.

வீதியிலிருந்தும் வீடுகளிலிருந்தும் சாப்பாட்டுக் கடைகளின் திறந்த சன்னல்களிலிருந்தும் உல்லாசப் பொழுதுபோக்குத் தோட்டங்களிலிருந்தும் வந்த ஒரு பாட்டின் சில சொற்கள் காதில் விழுந்தன:

கருமான் புரோஸ்பெரோவின் கழுத்தில்

கச்சிதமாய் விழுந்தது சுருக்கு.

உரிமைகள் ஊக்கமாய்க் கோரியவன்

உட்கார்ந்திருக்கிறான் இரும்புக் கூண்டில்.

குடி மயக்கத்தில் இருந்த ஒரு பகட்டன் இந்த அடிகளைத் திரும்பிப் பாடினான். அவனுடைய அத்தை செத்துப் போனாள். ஏராளமான பணமும் அதை விட ஏராளமான மச்சங்களும் அவளுக்கு இருந்தன. ஆனால் நேர் வாரிசு ஒருவன் கூட இல்லை. அத்தையின் பணம் எல்லாம் வாரிசு உரிமையாகப் பகட்டனுக்குக் கிடைத்திருந்தது. ஆகையால்தான் பணக்காரர்களின் ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளம்பியது அவனுக்குப் பிடிக்கவில்லை.

விலங்குக் காட்சிச் சாலையில் பெரிய நாடகம் நடந்து கொண்டிருந்தது. மயிர் அடர்ந்த மூன்று கொழுத்த குரங்குகள் மூன்று தடியர்களாக நடித்துக் கொண்டிருந்தன. நரி வேட்டை நாய் வாத்தியம் வாசித்துக் கொண்டிருந்தது. கோமாளியின் கருஞ்சிவப்பு உடையின் முதுகுப் பக்கம் சூரிய பிம்பமும் வயிற்றின் மேல் சந்திர பிம்பமும் வரையப்பட்டிருந்தன. இசையின் தாளத்துக்குப் பொருந்த அவன் செய்யுள் படித்துக் கொண்டிருந்தான்:

மூன்று கோதுமை மூட்டைகள் போல்

மூன்று தடியர் சுமந்தார் நம்மேல்!

தொந்திகளை வளர்ப்பதிலேயே

எந்தப் பொழுதும் குறி அவர்க்கு!

இருங்கள் உஷாராக, தடியர்களே,

நெருங்குது சாக்காடு உங்களையே!”

“நெருங்குது சாக்காடு உங்களையே!” என்று நான்கு பக்கங்களிலும் இருந்து கத்தின தாடிக்காரக் கிளிகள்.

நம்ப முடியாத அளவு கூச்சல் கிளம்பியது. வெவ்வேறு கூண்டுகளில் இருந்த பிராணிகளும் பட்சிகளும் குலைக்கவும் உறுமவும் கிரீச்சிடவும் சீழ்க்கை அடிக்கவும் தொடங்கின.

குரங்குகள் மேடையில் இங்கும் அங்கும் தாவின. அவற்றின் கால்கள் எங்கே, கைகள் எங்கே என்று புரிந்து கொள்ள முடியவில்லை. அவை பார்வையாளர்கள் மேல் தாவிக் குதித்துத் தப்பி ஓடப் பார்த்தன. பார்வையாளர்கள் நடுவிலும் குழப்பம் ஏற்பட்டது. அதிகத் தடியாய் இருந்தவர்கள் சிறப்பாகக் கூச்சல் போட்டார்கள். தடியர்கள் கன்னங்கள் சிவக்க, ஆத்திரத்தால் உடம்புகள் நடுங்க, தொப்பிகளையும் இரட்டை நோக்காடிகளையும் கோமாளி மேல் எறிந்தார்கள். ஒரு கொழுத்த சீமாட்டி குடையை ஆட்டினாள். குடை பக்கத்திலிருந்த கொழுத்த மாதின் தலையில் மாட்டி அவளுடைய தொப்பியைப் பறித்து விட்டது.

‘’ஐயையையோ!” என்று அங்கலாய்த்துக் கைகளை உயர்த்தினாள் பறி கொடுத்தவள், ஏனென்றால் தொப்பியோடு கூடவே அவளுடைய பொய்மயிரும் போய் விட்டது.

தப்பி ஓடிக் கொண்டிருந்த ஒரு குரங்கு அந்த மாதின் வழுக்கை மண்டையில் பளார் என்று அறைந்தது. அவள் மூர்ச்சை போட்டு விழுந்து விட்டாள்.

”ஹ-ஹ-ஹா!’’

பார்ப்பதற்கு மெலிந்தும் மோசமாக உடை அணிந்தும் இருந்த மற்றப் பார்வையாளர்கள் ‘ஹ-ஹ-ஹா!” என்று பொங்கிப் பொங்கிச் சிரித்தார்கள். “பலே! பலே! தொலையட்டும் இவர்கள்! மூன்று தடியர்கள் ஒழிக! புரோஸ்பெரோ நீடூழி வாழ்க! திபூல் நீடூழி வாழ்க! மக்கள் நீடூழி வாழ்க!” என்று முழங்கினார்கள்.

அந்தச் சமயத்தில் யாரோ மிகவும் இரைந்து கத்தியது கேட்டது: “நெருப்பு! நகரம் தீப்பிடித்து எரிகிறது…’

ஒருவரை ஒருவர் நசுக்கிக் கொண்டும் பெஞ்சிகளைப் புரட்டிக் கொண்டும் ஆட்கள் வெளியேறும் வாயில்களுக்கு ஓடினார்கள். நாலா பக்கமும் ஓடின குரங்குகளைக் காவல்காரர்கள் பிடித்தார்கள்.

மருத்துவரை ஏற்றிப் போன வண்டியோட்டி அவர் பக்கம் திரும்பி, தனக்கு முன்னே சாட்டையால் சுட்டிக் காட்டினான்.

”காவல் படையினர் தொழிலாளர்களின் வட்டாரங்களுக்கு நெருப்பு வைக்கிறார்கள். சர்க்கஸ்காரன் திபூலைப் பிடிக்கப் பார்க்கிறார்கள் அவர்கள்…” என்றான்.

நகரத்துக்கு மேலே, வீடுகளின் கறுப்புக் கும்பலுக்கு மேலே, ரோஜாச் செவ்வொளி நடுங்கிற்று.

நகரத்தின் பிரதானச் சதுக்கம் விண்மீன் சதுக்கம் என்று அழைக்கப்பட்டது. மருத்துவரின் வண்டி அதை நெருங்கிய போது, மேலே போவது அசாத்தியமாகத் தோன்றியது. உள்ளே போகும் வழியில் வாடகை வண்டிகளும் சாரட்டுக்களும் குதிரைச் சவாரி செய்பவர்களும் நடைப் பயணிகளுமாகப் பெருங் கூட்டம் நெரிந்தது.

‘“என்ன அது?” என்று கேட்டார் மருத்துவர்.

ஒருவரும் பதிலே பேசவில்லை, ஏனென்றால் எல்லாருடைய கவனமும் சதுக்கத்தில் நடந்து கொண்டிருந்த நிகழ்ச்சியிலேயே நிலைத்திருந்தது. வண்டிக்காரனும் தன் இருக்கையில் நட்டமாய் நின்று அந்தத் திக்கில் பார்க்கலானான்.

அந்தச் சதுக்கம் விண்மீன் சதுக்கம் என்று அழைக்கப்பட்டதற்குக் காரணம் இதுதான்: ஒரே உயரமும் வடிவமும் உள்ள பிரமாண்டமான கட்டிடங்கள் சதுக்கத்தைச் சூழ்ந்திருந்தன. சதுக்கம் கண்ணாடிக் கும்மட்டத்தால் வேயப்பட்டிருந்தது. இதனால் அது பார்ப்பதற்குப் பிரமாண்டமான சர்க்கஸ் போல் இருந்தது. கும்மட்டத்தின் நடுவில், அச்சம் தரும் உயரத்தில் எரிந்தது உலகத்திலேயே மிகவும் பெரிய தெரு விளக்கு. வியப்பூட்டும்படிப் பிரமாண்டமான உருண்டை அது. பலத்த கம்பி வடங்களில் தொங்கிய இரும்பு வளையம் அதைக் குறுக்கில் அணைத்துப் பிடித்திருந்தது. இதனால் அது வளையங்கள் சூழ்ந்த சனிக் கிரகம் போலக் காணப்பட்டது. விளக்கின் ஒளி மிகவும் இனியதாக இருந்தது. உலகின் எந்த ஒளியையும் அது நிகர்த்திருக்கவில்லை. ஆகையால் நகர மக்கள் அந்த விளக்குக்கு விண்மீன் என்ற விந்தையான பெயரை இட்டிருந்தார்கள். சதுக்கம் முழுவதற்கும் அந்தப் பெயர் வழங்கலாயிற்று.

சதுக்கத்திலோ, அக்கப் பக்கத்தில் இருந்த வீடுகளிலோ, வீதிகளிலோ மேற்கொண்டு எந்த வெளிச்சமும் தேவைப்படவில்லை. எல்லாச் சந்து பொந்துகளுக்கும் கல் வளையமாகச் சதுக்கத்தைச் சூழ்ந்திருந்த வீடுகளின் எல்லா மூலைகளுக்கும் சாமான் அறைகளுக்கும் வெளிச்சம் தந்து கொண்டிருந்தது விண்மீன். விளக்குகளோ மெழுகுவத்திகளோ இல்லாமலே அங்கிருந்தவர்கள் வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தார்கள்.

சாரட்டுகளுக்கும் வாடகை வண்டிகளுக்கும் மருந்துக் குப்பிகளின் மூடிப் பகுதிகள் போலிருந்த வண்டியோட்டிகளின் தொப்பிகளுக்கும் மேலாகப் பார்வை செலுத்தினான் மருத்துவரின் வண்டிக்காரன்.

“உங்களுக்கு என்ன தெரிகிறது? அங்கே என்ன நடக்கிறது?” என்று வண்டியோட்டியின் முதுகுக்குப் பின்னாலிருந்து எட்டிப்பார்த்தபடிக் கவலையுடன் கேட்டார் மருத்துவர். உருவத்தில்

சிறியவரான அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை. போதாக்குறைக்கு அவருக்குப் பார்வையும் மந்தம்.

வண்டியோட்டி தான் கண்டது எல்லாவற்றையும் விவரித்தான்.

அவன் கண்டது இதுதான்.

சதுக்கத்தில் ஒரே கொந்தளிப்பாக இருந்தது. மிகப் பெரிய வட்ட வெளியில் ஆட்கள் ஓடிக் கொண்டிருந்தார்கள். சதுக்கத்தின் வட்டம் குடை ராட்டினம் மாதிரிச் சுழல்வது போலக் காணப்பட்டது. உயரே நிகழ்ந்ததை முன்னிலும் நன்றாகப் பார்ப்பதற்காக ஆட்கள் ஓர் இடம் விட்டு வேறு இடத்துக்கு மாறிய வண்ணமாய் இருந்தார்கள்.

உயரத்தில் தகதகவென்று எரிந்து கொண்டிருந்த அற்புத விளக்கு சூரியன் போலக் கண்களைக் கூசச் செய்தது. ஆட்கள் தலைகளை உயர நிமிர்த்தி, கண்களைக் கைகளால் மறைத்துக் கொண்டார்கள்.

“அதோ அவன்! அதோ அவன்!” என்ற கூச்சல்கள் கேட்டன.

‘அதோ, பாருங்கள்! அங்கே!”

”எங்கே? எங்கே?”

“இன்னும் உயரே!”

“திபூல்! திபூல்!”

நூற்றுக் கணக்கான சுட்டு விரல்கள் இடது பக்கம் காட்டின. அங்கே ஒரு சாதாரண வீடு இருந்தது. ஆனால் அதன் ஆறு மாடிகளிலும் எல்லாச் சன்னல்களும் திறந்திருந்தன. ஒவ்வொரு சன்னலிலிருந்தும் தலைகள் வெளியே துருத்தி இருந்தன. அவை வெவ்வேறு விதமாகக் காட்சி அளித்தன. சில குஞ்சலங்கள் உள்ள இரவுக் குல்லாய்கள் அணிந்திருந்தன. மற்றவை செம்மஞ்சள் சுருள்கள் உள்ள ரோஜா நிறத் தொப்பிகள் போட்டிருந்தன. பின்னும் சில தலைக் குட்டைகள் கட்டியிருந்தன. ஏழை இளைஞர்கள் – கவிகளும் ஓவியர்களும் நடிகைகளும் – வசித்த மேல் மாடியில் புகையிலைப் புகைப் படலங்கள் சூழ்ந்த மீசையற்ற குதூகல முகங்களும் மாதர்களின் தலைகளும் எட்டிப் பார்த்தன. தங்க நிறக் கூந்தலின் ஒளிர்வால் சூழப்பட்ட அந்த மாதர்களின் தோள்கள் மேல் இறக்கைகள் முளைத்திருப்பது போலத் தோன்றியது. அந்த வீட்டின் அழிகள் பாய்ச்சிய திறந்த சன்னல்களிலிருந்து பல நிறத் தலைகள் பறவைகள் போல வெளியே துருத்திக் கொண்டிருந்ததால் அந்த வீடு பொன் குருவிகள் நிறைந்த பெரிய கூண்டு போலக் காட்சி அளித்தது. அந்தத் தலைகளுக்கு உடையவர்கள் கூரை மேல் நடந்து கொண்டிருந்த மிக முக்கியமான ஒரு நிகழ்ச்சியைப் பார்க்க முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். முகம் பார்க்கும் கண்ணாடி இல்லாமல் சொந்தக் காதுகளைப் பார்ப்பது எப்படி முடியாதோ அப்படியே இதுவும் முடியாததாக இருந்தது. சொந்த வீட்டிலிருந்து சொந்தக் கூரையைப் பார்க்க விரும்பிய இந்த மனிதர்களுக்கு அந்த மாதிரிக் கண்ணாடியாக இருந்தது சதுக்கத்தில் வெறிக் கூச்சல் போட்டுக் கொண்டிருந்த கூட்டம். அது எல்லாவற்றையும் பார்த்தது, கத்திற்று, கைகளை வீசி ஆட்டியது. சிலர் பெரு மகிழ்ச்சியையும் மற்றவர்கள் கடுங்கோபத்தையும் வெளியிட்டார்கள்.

கூரையில் நகர்ந்து கொண்டிருந்தது சிறு உருவம். அது மெதுவாகவும் எச்சரிக்கையுடனும் தன்னம்பிக்கையுடனும் கட்டிடத்தின் முக்கோண முகட்டினுடைய சரிவில் இறங்கிற்று. அதன் கால்களுக்கு அடியில் இரும்பு கணகணத்தது.

சர்க்கஸ் கழைக் கூத்தாடி பச்சைச் சீனக் குடையின் உதவியால் நிலையைச் சமமாக வைத்துக் கொள்வது போல இந்த உருவம் மழைக் கோட்டை வீசி ஆட்டி நிலையைச் சமப்படுத்திக் கொண்டது.

சர்க்கஸ்காரன் திபூல்தான் அந்த உருவம்.

“சபாஷ், திபூல்! பலே, திபூல்!” என்று ஆர்ப்பரித்தார்கள் மக்கள்.

“உறுதியாய் இரு! சந்தையில் கயிற்றின் மேல் நடந்தாயே, அதை நினைவுபடுத்திக் கொள்.”

‘இவன் விழ மாட்டான். நாட்டில் எல்லோரிலும் மேலான சர்க்கஸ்காரன் இவன்…”

“இவனுக்கு இது முதல் தடவை அல்ல. கயிற்றின் மேல் நடப்பதில் இவன் எவ்வளவு திறமை உள்ளவன் என்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம்.”

“சபாஷ், திபூல்!’

‘ஓடு! தப்பு! புரோஸ்பெரோவை விடுவி!”

வேறு சிலருக்கு ஆத்திரமாய் இருந்தது. அவர்கள் முட்டிகளை ஆட்டினார்கள்:

“உன்னால் தப்பவே முடியாதடா, கேடு கெட்ட கோமாளிப் பயலே!”

“படு மோசக்காரப் பயலே!”

“கலகக்காரப் பயலே! முயலைச் சுடுவது போல உன்னைச் சுட்டுக் கொல்ல வேண்டும்…”

“உஷார்! முகட்டிலிருந்து உன்னை வெட்டு மேடையில் தள்ளுகிறோம் பார். தலைகளை வெட்டுவதற்கான பத்து மேடைகள் நாளைக்குத் தயாராகி விடும்!”

திபூல் தன் பயங்கர நடையைத் தொடர்ந்தான்.

“எங்கிருந்து வந்தான் இவன்? இந்தச் சதுக்கத்துக்கு எப்படி வந்து சேர்ந்தான்? கூரை மேல் எப்படி ஏறினான்?’ என்று கேட்டார்கள் ஆட்கள்.

‘’காவல் படையினரின் கைகளிலிருந்து தப்பி விட்டான் இவன். ஓடினான், மறைந்தான். அப்புறம் நகரின் வெவ்வேறு பகுதிகளில் காணப்பட்டான். கூரைகள் மேலாக வீட்டுக்கு வீடு தாவினான். இவன் பூனை மாதிரி விகு உள்ளவன். இவனுடைய கலை இவனுக்கு உதவிற்று. நாடு பூராவும் இவனுடைய புகழ் முழங்குவது காரணத்தோடுதான்” என்று விளக்கினார்கள் மற்றவர்கள்.

காவல் படையினர் சதுக்கத்துக்கு வந்தார்கள். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பக்கத்துத் தெருக்களுக்கு ஓடி விட்டார்கள். திபூல் தடுப்பைத் தாண்டி முகட்டு விளிம்பில் நின்றான். மழைக்கோட்டு சுற்றிய கையை நீட்டினான். பச்சை நிறமழைக் கோட்டு கொடி போல விரிந்தது.

சந்தைகளிலும் ஞாயிற்றுக் கிழமை உல்லாசக் கூட்டங்களிலும் இதே மழைக்கோட்டுடன், மஞ்சள், கறுப்பு முக்கோணங்களால் தைத்த இதே பின்னல் துணி உடையில் அவன் சர்க்கஸ் வித்தைகள் காட்டுவது வழக்கம்.

இப்போது உயரே, கண்ணாடிக் கும்மட்டத்துக்கு அடியில், சிறிய, மெல்லிய மேனியும் கோடுகள் போட்ட உடையுமாக இருந்த அவன், வீட்டின் வெள்ளைச் சுவற்றின் மேல் ஊரும் குளவி போல் காணப்பட்டான். மழைக்கோட்டு காற்றில் உப்பிய போது குளவி பளபளக்கும் பச்சைச் சிறகுகளை விரிப்பது போல் இருந்தது.

‘’இதோ நீ விழுந்து விடுவாய், தெருக்கூத்தாடிப் பயலே! இதோ உன்னைச் சுட்டுத் தொலைத்து விடுவார்கள்!” என்று கத்தினான் மச்சங்கள் நிறைந்த அத்தையின் பணத்தை வாரிசுரிமையாகப் பெற்ற குடிகாரப் பகட்டன்.

காவல் படையினர் வசதியான இடத்தைத் தெரிந்தெடுத்துக் கொண்டார்கள். அவர்களுடைய அதிகாரி ஒரே கவலையில் ஆழ்ந்தவனாக ஓடினான். அவன் கையில் இருந்தது கைத்துப்பாக்கி. அவனுடைய குதி முட்கள் நீளமாய் இருந்தன.

ஒரே நிசப்தம் குடி கொண்டது. கொதி நீரில் முட்டை போலக் குதித்த நெஞ்சைப் பிடித்துக் கொண்டார் மருத்துவர்.

திபூல் ஒரு வினாடி முகட்டு விளிம்பில் தாமதித்தான். சதுக்கத்தின் எதிர்ப் பக்கத்துக்குப் போவது அவனுக்கு அவசியமாய் இருந்தது. அப்போது விண்மீன் சதுக்கத்திலிருந்து தொழிலாளர் வட்டாரங்களின் திக்கில் தப்பி ஓட அவனால் முடியும்.

சதுக்கத்தின் நடுவில், மஞ்சள், நீலப் பூக்கள் நிறைந்த பாத்தியில் நின்று கொண்டான் அதிகாரி. நீர்நிலையும் வட்டமான கல் கிண்ணத்திலிருந்து பீச்சி அடித்த நீர் ஊற்றும் அங்கே இருந்தன.

“பொறுங்கள்! இவனை நானே சுட்டுத் தள்ளுகிறேன். ரெஜிமெண்டில் எல்லோரையும் விடக் குறி தவறாமல் சுடுபவன் நான். எப்படிச் சுட வேண்டும் என்று கற்றுக் கொள்ளுங்கள்” என்று அந்த அதிகாரி படைவீரர்களிடம் கூறினான்.

எல்லாப் பக்கங்களிலுமிருந்து, ஒன்பது வீடுகளிலிருந்து, கும்மட்டத்தின் நடுவுக்கு, விண் மீனுக்கு, இழுத்துக் கட்டப்பட்டிருந்தன ஒன்பது எஃகு வடங்கள் (கப்பல் வடக்கயிறு போலப் பருத்த கம்பிகள்).

விளக்கிலிருந்து, தகதகக்கும் அற்புத விண்மீனிலிருந்து ஒன்பது மிக நீண்ட கரும் கதிர்கள் சதுக்கத்துக்கு மேலே நாலா புறமும் போவது போலத் தோன்றியது.

அந்த நேரத்தில் திபூல் என்ன நினைத்தானோ தெரியாது. ஆனால் அவன் இந்த மாதிரி முடிவு செய்திருக்கலாம்: “சந்தையில் வடக் கயிற்றில் வழக்கமாக நடப்பது போல இந்தக் கம்பி மேல் நடப்பேன். விழ மாட்டேன். ஒரு கம்பி விளக்கு வரை போகிறது. மற்றொன்று விளக்கிலிருந்து எதிர் வீட்டுக்குப் போகிறது. இரண்டு கம்பிகள் மேலாகவும் நடந்து நான் எதிர் வீட்டுக் கூரையை அடைந்து தப்புவேன்.”

அதிகாரி கைத்துப்பாக்கியை உயர்த்திக் குறி வைக்கலானான். திபூல் கம்பி தொடங்கிய. இடம் வரை முகட்டு விளிம்பில் நடந்து, சுவற்றிலிருந்து விலகி, விளக்கை நோக்கிக் கம்பி மேல் நகரத் தொடங்கினான்.

கூட்டம் ‘ஆ” என்று மலைத்தது.

அவன் சில வேளைகளில் மிகவும் மெதுவாக நடந்தான். வேறு சில வேளைகளிலோ, விரைவாகவும் எச்சரிக்கையுடனும் அடி வைத்து, அசைந்து ஆடியபடி, கைகளை இரு புறமும் நீட்டிக் கொண்டு அனேகமாக ஓடினான். அவன் விழுந்து விடுவான் என்று ஒவ்வொரு கணமும் தோன்றியது. இதோ அவனுடைய நிழல் சுவற்றின் மேல் தெரிந்தது. அவன் விளக்கை நெருங்க நெருங்க, அவனுடைய நிழல் சுவற்றில் மேலும் மேலும் தாழ்ந்து, பெரியதும் வெளிறியதும் ஆகிக் கொண்டு போயிற்று.

கீழே இருந்தது கிடுகிடு பள்ளம்.

விளக்குக்குப் பாதி வழியில் அவன் இருந்த போது, முழு நிசப்தத்தில் அதிகாரியின் குரல் ஒலித்தது:

“இப்போது நான் சுடுவேன். அவன் நேரே குளத்தில் விழுவான்.

ஒன்று, இரண்டு, மூன்று!”

படாரென்ற வெடிச் சத்தம் கேட்டது.

திபூல் மேலே நடந்தான், ஆனால் அதிகாரி எதனாலோ குளத்தில் குப்புற விழுந்தான். அவன் கொல்லப்பட்டு விட்டான்.

காவல் படை வீரன் ஒருவனுடைய கையில் இருந்த கைத்துப்பாக்கியிலிருந்து இள நீலப் புகை வந்து கொண்டிருந்தது. அவன்தான் அதிகாரியைச் சுட்டவன்.

’’நாய்ப் பயலே! மக்களுடைய நண்பனைக் கொல்லப் பார்த்தாயே! நான் அதைத் தடுத்தேன். மக்கள் நீடூழி வாழ்க!” என்றான் அவன்.

“மக்கள் நீடூழி வாழ்க!” என்று அவனை ஆதரித்தார்கள் மற்றக் காவல் படையினர். “மூன்று தடியர்கள் நீடூழி வாழ்க!” என்று கத்தினார்கள் அவர்களுடைய எதிரிகள். அவர்கள் எல்லாப் புறங்களிலும் சிதறி, கம்பி மேல் நடந்து கொண்டிருந்த மனிதன் மீது குண்டுகள் சுடத் தொடங்கினார்கள்.

திபூல் விளக்கை நெருங்கி விட்டான். மழைக்கோட்டை வீசி ஆட்டி விளக்கின் ஒளியிலிருந்து கண்களை மறைத்துக் கொண்டான். குண்டுகள் குறி பிசகின. கூட்டம் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தது.

படார்! படார்!

‘தவறி விட்டது!’

”பலே! குறி பிசகி விட்டது!’

திபூல் விளக்கைச் சுற்றி இருந்த வளையத்தின் மேல் தொற்றினான்.

‘பரவாயில்லை! அவன் மறு பக்கம் போவான்… இன்னொரு கம்பி மேல் நடப்பான். அங்கிருந்து அவனை ஒழிப்போம்!” என்றார்கள் காவல் படையினர்.

ஒருவரும் எதிர்பாராதது அப்போது நடந்தது. விளக்கின் ஒளியில் கறுப்பு ஆகிவிட்ட கட்டங்கள் போட்ட உருவம் இரும்பு வளையத்தில் குந்தி, ஒரு நெம்புகோலைத் திருப்பிற்று. கிளிக் கென்ற ஒலியும் கிணுகிணுப்பும் கேட்டன. அக்கணமே விளக்கு அணைந்து விட்டது.

ஒரு வார்த்தை கூடப் பேச யாருக்கும் வாய்க்கவில்லை. பெட்டிக்குள் அடைபட்டது போல பயங்கர இருட்டும் பயங்கர நிசப்தமும் சூழ்ந்தன.

அடுத்த நிமிடம் மிக மிக உயரத்தில் எதுவோ மறுபடி இடித்துக் கணகணத்தது. இருண்ட கும்மட்டத்தில் வெளிறிய சதுரம் திறந்தது. இரண்டு சிறு விண்மீன்கள் மினுமினுத்த வானத் துண்டை எல்லோரும் பார்த்தார்கள். பிறகு இந்தச் சதுரத்தில், வானத்தின் பின்னணியில் புகுந்தது கரிய உருவம். கண்ணாடிக் கும்மட்டத்தின் மேல் தடதடவென்று யாரோ ஓடிய சத்தம் கேட்டது.

சர்க்கஸ்காரன் திபூல் கும்மட்டத் திறப்பின் வழியாக விண்மீன் சதுக்கத்திலிருந்து தப்பி ஓடி விட்டான்.

வெடியோசைகளாலும் திடீரென்று சூழ்ந்த இருட்டாலும் குதிரைகள் மிரண்டன. மருத்துவரின் வண்டி குடை கவிழாமல் மயிரிழை தப்பிற்று. வண்டிக்காரன் வண்டியை எதிர்ப்புறம் திருப்பிச் சுற்றுவழியாக ஓட்டினான்.

இப்படியாக, அசாதாரணமான பகலையும் வழக்கத்துக்கு மாறான இரவையும் கழித்து விட்டு முடிவில் வீடு திரும்பினார் மருத்துவர் கஸ்பார் அர்னேரி. அவருடைய வீட்டுக் காரியங்களை மேற்பார்த்து வந்து கனிமீடு அத்தை வாயிலில் அவரை எதிர்கொண்டாள். அவள் நிரம்பக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். மெய்தானே: மருத்துவர் வீட்டை விட்டுக் கிளம்பி வெகு நேரம் ஆகி இருந்தது! கனிமீடு அத்தை கைகளை உயரே வீசினாள், ஆவென்றாள், தலையை அசைத்தாள்:

“உங்கள் மூக்குக் கண்ணாடி எங்கே? உடைந்து போய் விட்டதா? அடாடா, டாக்டர், டாக்டர்! எங்கே உங்கள் மழைக்கோட்டு? கெட்டுப்போக்கி விட்டீர்களா? அடாடாடா!’ ‘கனிமீடு அத்தை, இது மட்டும் அல்லாமல், என் இரண்டு செருப்புக் குதிகளும் பிய்ந்து விழுந்து விட்டன…’

“அடாடா, எப்பேர்ப்பட்ட துரதிர்ஷ்டம்!”

“இதை விடக் கடுமையான துன்பம் இன்றைக்கு நேர்ந்தது, கனிமீடு அத்தை: கருமான் புரோஸ்பெரோ கைதி ஆகிவிட்டான். அவனை இரும்புக் கூண்டில் அடைத்திருக்கிறார்கள்.” பகலில் நடந்தது எதுவுமே கனிமீடு அத்தைக்குத் தெரியாது. பீரங்கி வெடிகளின் சத்தம் அவள் காதில் பட்டது, வீடுகளுக்கு மேலே ஒளியை அவள் கண்டாள். கலகக்காரர்களைத் தண்டிப்பதற்காக நீதிமன்றச் சதுக்கத்தில் நூறு தச்சர்கள் வெட்டு மேடைகளைக் கட்டுவதாக அண்டை வீட்டுக்காரி அவளிடம் சொல்லி இருந்தாள்.

“எனக்கு ஒரே பயமாய்ப் போய் விட்டது. சன்னல் கதவுகளை அடைத்தேன், எங்கும் போவதில்லை என்று முடிவு செய்தேன். நான் உங்களுக்கு ஒவ்வொரு நிமிடமும் காத்துக் கொண்டிருந்தேன். எனக்கு மிகவும் கவலையாக இருந்தது. மதியச் சாப்பாடு ஆறிப் போயிற்று, இரவுச் சாப்பாடும் ஆறிவிட்டது. அப்படியும் உங்களைக் காணோம்…” என்றாள் கனிமீடு அத்தை. இரவு முடிந்து விட்டது. மருத்துவர் படுக்க ஏற்பாடு செய்யலானார்.

அவர் கற்ற நூறு கலைகளில் வரலாற்று இயலும் ஒன்று. தோல் அட்டை போட்ட பெரிய புத்தகம் மருத்துவரிடம் இருந்தது. முக்கிய நிகழ்ச்சிகள் பற்றிய தமது எண்ணங்களை அவர் இதில் குறித்துவந்தார்.

‘கச்சிதமாக இருக்க வேண்டும்” என்று விரலை உயர்த்தியபடிச் சொன்னார்.

களைப்பைப் பொருட்படுத்தாமல் மருத்துவர் தம் தோல் புத்தகத்தை எடுத்து மேசை அருகில் உட்கார்ந்து குறிப்பு எழுதத் தொடங்கினார்:

“கம்மியர்கள், சுரங்கத் தொழிலாளர்கள், மாலுமிகள் முதலியவர்கள்- நகரத்தின் ஏழை உழைப்பாளி மக்கள் எல்லாரும் -மூன்று தடியர்களின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தார்கள். காவல் படையினர் வென்றார்கள். கருமான் புரோஸ்பெரோ கைதி ஆகி விட்டான். ஆனால் சர்க்கஸ்காரன் திபூல் தப்பி ஓடி விட்டான். சற்று நேரத்துக்கு முன்னால் விண்மீன் சதுக்கத்தில் ஒரு காவல் படை வீரன் தன் அதிகாரியைச் சுட்டுக் கொன்றான். மக்களுக்கு எதிராகப் போரிடவும் மூன்று தடியர்களைக் காக்கவும் எல்லாப் படையினரும் விரைவில் மறுத்து விடுவார்கள் என்று இந்த நிகழ்ச்சி குறிக்கிறது. ஆனாலும் திபூலுக்கு என்ன நேருமோ என்று அச்சம் உண்டாகிறது…”

இந்த இடத்தில் மருத்துவருக்குப் பின்னால் ஓசை கேட்டது. திரும்பிப் பார்த்தார். அங்கே கணப்பு இருந்தது. பச்சை மழைக்கோட்டு மாட்டிய உயரமான ஒருவன் கணப்பிலிருந்து வெளியே வந்தான். சர்க்கஸ்காரன் திபூல்தான் அவன்.

00

-வளரும்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *