மண்டபம் நிரம்பி வழிந்திருந்தது. முகூர்த்த நேரம் விடிகாலை ஐந்துமணி போலுள்ளது. சரியாய் பத்திரிக்கையை நான் பார்க்கவில்லை. பத்திரிக்கை அடித்தார்களா? அப்பாவைக் கேட்க வேண்டும். எத்தனை பத்திரிக்கையப்பா அச்சடித்தீர்கள்? யார் யாருக்கெல்லாம் கொடுத்தீர்கள். ஒரு மாதமாக கொடுத்தீர்களா? மண்டபத்திற்கு வந்திருக்கறவங்க யாரையுமே எனக்குத் தெரியலப்பா! ஒருவேள வேற கல்யாண நிகழ்ச்சிக்கு வந்துட்டமா?
மண்டபம் நிரம்பி வழிந்திருந்தது. முகூர்த்த நேரம் விடிகாலை நாலரையிலிருந்து ஐந்தாகக்கூட இருக்கலாம். மாப்பிள்ளை யாரெனக்கூடத் தெரியவில்லை. எந்த ஊர்க்காரர்? என்ன வேலையில் இருக்கிறார்? என்ன வயசு? அப்பாவைத்தான் கேட்க வேண்டும். அவர்தான் எனக்கு மாப்பிள்ளையைப்பற்றி விபரமாய் எடுத்துச்சொல்வார். அம்மாவிடம் ஒன்றும் கேட்க முடியாது. எனக்கு கல்யாணம் ஆனால் சரி.. மாப்பிள்ளை யாராய் இருந்தால்தான் என்ன? என்பாள்.
மண்டபம் நிரம்பி வழிந்திருந்தது. இந்த அதிகாலையில் குளித்து முடித்து அழகாய் டிரஸ் செய்து கொண்டு எல்லோரும் வந்துவிட்டார்கள் என்னை வாழ்த்துவதற்காக. என்னை மேடைக்கு அழைத்துச்சென்ற பள்ளிக்காலத்தோழியின் வயதுக்கு வந்த மகள் அன்றுதான் சேலை கட்டியிருப்பாள் போல! நடக்கையில் கொஞ்சம் சிரமப்பட்டாள். ஆனாலும் அவள் கட்டியிருந்த சேலை ஜிகினா போல மினுமினுத்தது! ஓரக்கண்ணால் நான் மண்டபத்தில் கிடந்த சேர்களில் அமர்ந்திருந்தவர்களின் கையில் என்னை வாழ்த்தி வீசுவதற்கு மஞ்சள் அரிசி வைத்திருக்கிறார்களா? என்று நோட்டமிட்டேன். யார் கையிலும் இல்லை. பதிலாக செல்போன் கையகலத்திற்கு வைத்திருந்தார்கள் ஒரு ஆள் பாக்கியில்லாமல்.
மண்டபம் நிரம்பி வழிந்திருந்தது. முகூர்த்தம் சூரிய உதயத்திற்கும் முன்பு என்று சோதிடர் சொல்லியிருக்கலாம். நான் மணமேடை ஏறினேன். என்னைக்கைப்பிடித்து கூட்டிச்சென்ற புதுச்சேலைக்காரி படிகளில் தடுக்கி தொப்பென படியிலேயே விழுந்தாள். ’பார்த்து பார்த்து!’ என எனைச்சுற்றிலும் கூட்டம் சப்தமெழுப்பியது. கீழே விழுந்த பெண் வெட்கமும், எரிச்சலுமாய் முகத்தை கோணித்து அழுவதற்காக உதட்டை பிதுக்கினாள். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கையில் என் தோழி டீச்சரிடம் கைநீட்டி தடியடி வாங்குகையில் உதடு பிதுக்கி அழுவது போலவே இருந்தது. ஆமாம் அந்த ஐந்தாம் வகுப்பு தோழியின் பெயரென்ன? லட்சுமியாக இருக்கலாம்.
ஒருவழியாக நான் மணமேடைக்கு வந்துசேர்ந்தேன். மேடையிலிருந்து பார்க்கையில் மண்டபம் நிரம்பி வழிந்திருந்தது. எதற்காக மண்டபம் முழுக்கவும் நீலவர்ணத்தில் விளக்குகளை ஒளிர விட்டிருக்கிறார்கள்? எதாவது காரணம் இருக்க வேண்டும். ஒருவேளை எனக்கு வயது முப்பத்தி மூன்று என்பதால் வாஸ்த்து பிரகாரம் நீலவர்ண விளக்கொளியை எரிய விட்டிருப்பார்கள். இதனால் மண்டபத்திலிருந்த அனைவருமே நீலவர்ண மனிதர்களாக காட்சியளித்தார்கள்.
மண்டபத்தின் கடைசிக்கோடியில் சிகரெட் புகையா அது?? ஆமாம்.. பத்துப்பேர் கூடி எனைப்பார்த்தபடி சிகரெட் புகைத்துக்கொண்டிருந்தார்கள். ஒருவேளை அவர்கள் மாப்பிள்ளையின் சொந்தக்காரர்களாக இருக்கலாம். மண்டபத்தின் இடதுபக்கத்தில் பிளாஸ்டிக் டம்ளர்களில் சிவந்த நிறதிரவத்தை நிரப்பி ‘சியர்ஸ்’ என்று நான்கைந்துபேர் எனை நோக்கி டம்ளரைக்காட்டிவிட்டு குடித்தார்கள். அவர்கள் முன்பாக ஒரு சேரில் மிச்சர் தட்டு இருந்தது. ஒருவேளை அவர்கள் மாப்பிள்ளையின் நண்பர்களாக இருக்கலாம்.
என் திருமணத்தை நடத்திக்கொடுக்க வந்திருந்த ஐயர் சம்மணமிட்டபடி தலைகீழாக இருந்தார். கைகளை நிலத்தில் ஊன்றி என்னையே வெறிக்கப்பார்த்தார். ‘மாப்பிள்ளையை அழைச்சுண்டு வாங்கோ!’ என்று தலைகீழாக இருந்தபடியே குரலிட்டார். எனக்குப்பின்புறத்தில் மேடையிலேயே ஒரு கதவு இருந்திருக்கும்போல. அதிலிருந்து மாப்பிள்ளையை நான்கைந்து பெண்கள் அழைத்து வந்து என்னருகில் அமர்த்தினார்கள்.
மாப்பிள்ளையின் முகஅழகை நான் பார்க்க ஆசை கொண்டேன். ஆனால் முக்காடு போட்டிருந்தார்கள். சரி நமக்குன்னு இருக்குறது நமக்கே தானே! ஐயர் இப்போது நேர்நிலைக்கு திரும்பிவிட்டார். மண்டபத்தில் திடீரென விசில் சப்தங்கள் என் காதை துளைத்தது. முன்வரிசையில் அமர்ந்திருந்த பட்டுச்சேலை உடுத்தியிருந்த பெண்களும் கூட வாயில் இரு கைவிரல்களையும் வைத்து ‘உய்ய்யா உய்க்!’ கென விசில் போட்டார்கள்.
மண்டபம் நிரம்பி வழிந்திருந்தது. இவர்கள் விசில் அடிப்பதைப்பார்த்தால் சூரிய உதயம் நெருங்கிவிட்டதோ என்னவோ! இல்லையென்றால் சாப்பாட்டிற்கு இலையை சாப்பாட்டு அறையில் விரித்துவிட்டார்கள் என்றே நினைக்கத்தோன்றியது. ஐயருக்கு விசில் சப்தம் எந்த தொந்தரவையும் கொடுத்ததாக தெரியவில்லை.
ஒருவழியாய் தாலிக்கயிற்றை அவர் கையில் எடுத்துக்கொண்டார். ‘கெட்டிமேளம் கொட்டுங்கோ!’ என்றார். கையிலிருந்த தாலிக்கயிற்றை என்னிடம் ‘தொட்டுக்கும்புட்டுட்டு வாங்கிக்கம்மா!’ என்று நீட்டினார். கும்பிட்டு வாங்கினேனா? தெரியவில்லை. இருந்தும் மஞ்சள் வர்ண கயிறு என் கையில் இருந்தது. நான் மாப்பிள்ளை பக்கமாய் திரும்பினேன். அவர் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாரா? மாப்பிள்ளையின் முகத்தில் மூக்கு, வாய், கண்கள் என ஒன்றுமில்லாமல் பூசி மெழுகிய நிலாபோல இருந்தது.
‘ஐயோ!’ என்று அலறிக்கொண்டு படுக்கையிலிருந்து எழுந்தேன் நான். என்ன கொடூரமான கனவு இது? அருகிலிருந்த டேபிளின் மீதிருந்த சொம்பை எடுத்து தண்ணீரை மடக் மடக்கென அருந்தினேன். சமீப காலமாய் இப்படித்தான் எனக்கு கசமுசவென கனவுகள் வந்துகொண்டே இருக்கிறது!
வெளியே அம்மாவும் அப்பாவும் சத்தமிட்டு பேசிக்கொள்வது கேட்டது. இவர்கள் எப்போதும் இப்படித்தான். மாதம் ஒருமுறையேனும் இருவரும் வாக்குவாதம் செய்வது இந்த வீட்டில் வாடிக்கையாகிவிட்டது. கூர்ந்து கேட்டால் அது உப்புப்பெறாத விசயமாகவே இருக்கும். ஒன்று அண்ணன் வடிவேலன் புதிதாக குடிக்கப்பழகிவிட்ட விசயத்திற்கு இவர்கள் சண்டை போட்டுக்கொள்வார்கள். ’வளர்ப்பு சரியில்லடி..கொஞ்சிக்கொஞ்சி வளர்த்துனவ நீதானடி!’ இப்படித்தான் அப்பா காட்டுக்கத்தாய் ஊருக்கே கேட்கும் விதமாய் பேசுவார்.
அம்மாவின் குரல் அதற்கும் மேலாக இருக்கும். தொண்டைக்குழியில் மைக் ஒன்றை கட்டிக்கொண்டு பேசுவதுபோல பேசுவார். ‘அன்பார்ந்த புளியகுளம் வாக்காளப்பெருமக்களே! உங்களது பொன்னான ஓட்டுக்களை எனது கத்தரிக்கோல் சின்னத்திலே வாக்களித்து என்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேணுமாய் இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்!’ என்று பஞ்சாயத்து தலைவருக்கு நிற்பது போல குரலெடுத்துப்பேசுவாள்.
புளியகுளம் கிராமம் வாக்காளர் லிஸ்ட்டில் இரநூற்றைம்பது பேர் என்று காட்டுகிறது. இதுபோக சுற்றுவட்டாரத்தில் எப்படியும் பத்து கிராமங்கள் சேரும். எல்லோரும் எல்லோரையுமே அறிவார்கள். என்னைக்கூட ’தையல்க்காரி வசந்தா’ என்றே சொல்வார்கள். பத்துவருடமாக வீட்டில் ஒரு தையல்மிஷின் வைத்துக்கொண்டு காலால் மிதித்து ஊர்க்காரப்பெண்களின் ஜாக்கெட், பாவாடை, சீலை கோடடித்தல், லுங்கியை மூட்டுதல், வேலை குறைவாக இருந்தால் கிழிஞ்ச துணியை செப்பனிடுவது என இருக்கிறேன்.
அண்ணன் வடிவேலன் ஏழு கிலோமீட்டர் தள்ளியிருக்கும் பனியன் கம்பெனிக்கு பைக்கில் போய்வந்துகொண்டிருக்கிறான். எனக்கும் இரண்டு வயது மூத்தவன். தலையில் நரைமுடி வந்ததினால் இருபது நாளைக்கு ஒருமுறை கோத்ரேஜ் கருஞ்சாயம் பூசிக்கொள்கிறான். இங்கே எனக்கு மட்டும் என்னவாம். தலைமுடியினுள் வெள்ளிக்கம்பிகள் இருக்கத்தான் செய்கிறது. அண்ணனைப்போல நானும் தினமும் கம்பெனி என்று சென்று வந்துகொண்டிருந்தால் கருஞ்சாயம் பூச ஆசைப்பட்டிருப்பேனோ என்னவோ! ஊருக்குள்ளிருந்து நிறையப்பெண்கள் காலையில் எட்டு மணிக்கு வரும் கம்பெனி பேருந்தில் ஏறிப்போய்விடுகிறார்கள். பின்பாக மாலையில் ஆறரை மணியளவில் அதே பேருந்தில் வந்து இறங்கிவிடுகிறார்கள்.
இந்த வீட்டில் இருக்கும் தலையாய பிரச்சனைகளில் ஒன்று என் திருமணம். இதுவரை என்னை பெண்பார்க்க வந்து சென்ற மாப்பிள்ளைகள் எத்தனைபேரென கணக்கு தெரியவில்லை. ஐம்பது, நூறு கிலோ மீட்டருக்கு அப்பாலிருந்தெல்லாம் வந்து பார்த்துவிட்டு போயிருக்கிறார்கள். என்னை முன்னிட்டு என் அண்ணங்காரனும் கிழவாடி ஆகிவிடுவான் போல! அவன் தனக்கு மனைவி என்றொரு பெண் வேண்டுமென மனதளவில் நினைக்கிறானா? என்றும் தெரியவில்லை. தன் வாழ்க்கை அவ்வளவுதான் என்று முடிவெடுத்துத்தான் குடிக்கப்பழகியிருக்கிறானோ என்னவோ! இந்த அப்பாவும் அம்மாவும் அவனிடம் நேராக ‘ஏண்டா குடிக்கிறே?’ என்று கேட்கவும் போவதில்லை.
என் கூடவே படித்த சரோஜா, வனஜா, கீர்த்தி இவங்கெல்லாம் உள்ளூருக்குள்ளேயே திருமணம் முடித்து அவர்களுக்கு பிறந்த பிள்ளைகளுக்கு கூட மண்டபத்தில் சீர் செய்துவிட்டார்கள் இந்த வருடத்தில். கூடப்படித்த பெல்லா, துளசி, மூர்த்தி, சாமிநாதன் இவங்க என்ன காரணத்தாலோ தற்கொலை செய்து கொண்டார்கள் ரொம்ப வருசங்கள் முன்னாடியே.
எனக்கு அப்படியேதேனும் தற்கொலை எண்ணம் வந்ததா?ன்னு கேளுங்கள்.. ஐந்து வருடம் முன்பாக தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் ஒருவருட காலம் சீரழிந்தேன். அந்த சமயத்தில் வந்த கனவுகள் எல்லாம் விதம் விதமாய் நான் இறப்பது மாதிரியே வந்தது. ரயில்வே தண்டவாளத்தில் தலையைக்கொடுத்து துண்டாகிப்போன நான் என் துண்டுபட்ட தலையை தூக்கிக்கொண்டு ஊருக்குள் நடந்து வருவது போலவெல்லாம் கனவு கண்டு நடுஇரவில் எழுந்து கோட்டான் போல இருளான சுவற்றை வெறித்துப்பார்த்தபடி அப்படியே விடியும் வரை அமர்ந்திருக்கிறேன்.
பதினெட்டு வயதில் என் உள்ளூர் தோழிகளுக்கெல்லாம் வரிசையாக திருமணம் நடக்கையில் அவர்களுக்கு துணைப்பெண்ணாய் அவ்வளவு குதூகலமாய் கூடவே இருந்தேன். மண்டபத்தில் என்னை சைட் அடித்த உள்ளூர் சிவக்குமார், கணேசன் இவர்களுக்கெல்லாம் டிமிக்கி கொடுத்து சிரித்தேன். கணேசன் சரசாள், வேலாள் என இருவரையுமே முயற்சித்து தோற்றவன் என்று பெயர் பெற்றிருந்தான். இதில் சிவக்குமார் மட்டும் ரொம்பவும் என்னிடம் பழகிவிட முயற்சித்தான். எனக்கு காதல் மீது அப்படியெல்லாம் பயம் என்று ஒன்றுமில்லை. எதற்கு ஊருக்குள் நாலுபேர் வாயில் என் விசயம் பேசப்படணும்? இன்று சிவக்குமார் குண்டடித்துப்போய் தன் ஒல்லிப்பிச்சான் மனைவியோடு பைக்கில் போய்வந்துகொண்டுதான் இருக்கிறான். அவனுக்கு மணியாட்டம் இரண்டு ஆம்பிளை பசங்கள்.
என் இருபதாவது வயதிலிருந்து என் வீட்டுக்கு மாப்பிள்ளைகள் வர ஆரம்பித்தார்கள். அப்போது நான் நான்கைந்து ஆடுகளை வைத்து சாலையோரங்களில் நின்றபடி மேய்த்துக்கொண்டிருந்தேன். ‘மாப்பிள்ளை வீட்டார் வருவாங்க.. குளிச்சி நல்ல சேலையாக்கட்டி முகத்துக்கு பவுடரெல்லாம் போட்டு ரெடி ஆயிடு’ என்று பக்கத்துவீட்டு அம்மாள்கள் சொல்வார்கள். ரெடி ஆயிடுவேன்.
வந்து பார்த்துப்போன மாப்பிள்ளை என்ன காரணம் சொல்லி என்னை ஒதுக்கினார்? என்கிற விசயம் மட்டும் எனக்குத் தெரியவே தெரியாது. மூன்றாவது வருடத்தில் ஒரு மாப்பிள்ளையிடம் நேராகவே கேட்டுவிட்டேன்! ‘என்னைய கட்டிக்கிறதுன்னா இப்பவே சொல்லிட்டு போயிடுங்க! ஊருக்கு போயிட்டு எதாச்சிம் சொத்தை சொல்ற வேலையெல்லாம் வேண்டாம்!’ என்று சொல்லவும் என் அம்மா ஓடிவந்து என் கன்னத்தில் ‘சப்’பென ஒன்று விட்டாள். ‘புள்ளை செரியான வாயிக்காரியா இருப்பாளாட்டமிருக்குதா!’ என்று மாப்பிள்ளையின் அம்மா அப்போதே ‘ஆவாது இது’ன்னு சொல்லிட்டு போயிட்டா!
நான் ’வாயிக்காரி’ என்ற விசயம் பின்பாக டெல்லி வரை பரவி விட்டது என்றுதான் நினைக்கேன். அப்புறம் மாப்பிள்ளை வரத்து என் வீட்டுப்பக்கம் குறைந்துவிட்டது. நான் டெய்லரிங் வகுப்புக்காக பேருந்து ஏறிப்போய் ஆறுமாதத்தில் கற்றுக்கொண்டேன். பின்பாக அப்பாவிடம் கெஞ்சிக்கூத்தாடி ஒரு தையல் மிஷினை வாங்கி வீட்டு ஆசாரத்தில் போட்டு அமர்ந்துவிட்டேன். எந்த நேரமும் நாலுகால் இரும்பு ஸ்டூலில் உட்கார்ந்து உட்கார்ந்து என் பின்பாகங்கள் காப்புக்காய்த்துவிட்டது.
இப்போதும் வருடத்தில் ஒரு மாப்பிள்ளையாச்சிம் வீட்டுப்பக்கமாய் வந்து சேருகிறார்கள். இரண்டாம் தாரமாய் நான் இங்கிருந்து கிளம்பணும். முதல் தாரத்தின் பொட்டு பொடுசுகளை பத்திரமாய் பார்த்துக்கணுமாம். இங்க ஏகப்பட்ட துணிமணிகளை வாங்கி வச்சிருக்கேன். திடீருன்னு ஊரை உட்டு போயிட்டா துணிமணி குடுத்தவங்க வாயில நான் விழணும்ல! ரெண்டாம் தாரமாய் அந்த வீட்டுக்குப்போனா யாரு என்னை மதிப்பாங்க? ஒரு கெத்து கூட எனக்கு இருக்காதுல்ல! ’கலியாணமாகாம கெடந்தவ இவ தானா?’ அப்படின்னு தான அந்த ஊருக்காரங்க பார்ப்பாங்க என்னை!
இங்க என் வீட்டுல என்ன கொரச்சலு எனக்கு? நானா சம்பாதிக்கிறேன். நானா பேங்க்குல பணம் போட்டு வச்சிருக்கேன். நானா எனக்குன்னு அஞ்சாறு பவுன் நகை சேர்த்தி வச்சிருக்கேன். சோப்பு, பவுடர்ல இருந்து துணிமணிங்க வரைக்கும் நானே பார்த்துக்கறேன். காய்கறி வண்டிக்காரன் சத்தம் ஊருக்குள்ள கேட்டா பையைத்தூக்கிட்டுப்போயி வாங்கிக் கொண்டாந்து சமையல்கட்டுல வச்சிடறேன். அப்பா சிப்காட்டுக்கு வாட்ச்மேனா போறாரு. அம்மா ஆடுங்களை பகல்ல மேச்சுட்டு வருது. நான் சந்தோசமாத்தான இருக்கேன். என் சந்தோசத்துக்கு ஒரு கொறச்சலுமில்ல. எனக்கு இருக்குற ஒரே பிரச்சனை தூங்குறப்ப சினிமாப்படம் மாதிரி கனவுகள் வர்றது மட்டும்தான். நல்ல கனவுகள் வந்தா அதைப்பத்தி வெளிய சொல்லி சந்தோசப்படலாம்.
பாருங்க.. நேத்தோ என்னமோ கனவுல என் புருசனை பைக்குல பின்னாடி உட்கார வச்சுட்டு செம ஸ்பீடா மலைமேல வளைஞ்சு வளைஞ்சு ஓட்டீட்டு போறேன். பைக்குல எத்தனை கீரு இருக்குதுன்னு கூட எனக்கு தெரியாது பார்த்துக்கங்க. எங்கண்ணன் பைக்கைக்கூட ஒரு நாளும் தொட்டுப்பார்த்ததில்ல. ஆனா பயங்கரமா கனவுல ஓட்டீட்டு போறேன். பின்னாடி உட்கார்ந்திருக்கிற என்னோட புருசன் சத்தம் போடறாரு. ‘மெதுவாப்போடி செல்லம்! கீழ விழுந்துட்டம்னா கையி காலெல்லாம் அடிபட்டு ஆஸ்பத்திரியில போயி கெடம்பமடி!’ அப்பிடிங்கறாரு! ’கம்முனு உக்கோந்துட்டு வாங்க சித்தெ! பயமா இருந்தா என்னை இறுக்கமா கட்டிப்புடிச்சுட்டு உக்கோருங்க!’ அப்படிங்கறேன். அவரு இறுக்கிப்புடிச்சப்புடி இருக்குதுங்களே.. கனவுலன்னாலும் நெசமாவே புடிச்சமாதிரி இருந்திச்சு அவ்ளோ சொகமா! ஆனாப்பாருங்க.. திடீருன்னு கண்ணு முழிச்சிட்டேன்.
எனக்கு என்ன வருத்தமாப்போச்சுன்னா.. பைக்கை அவ்ளோ வேகமா ஓட்டுன எனக்கு பின்னாடி உட்கார்ந்திருக்கிற புருசன் செவப்பா? கருப்பா? அழகானவரா? சோப்லாங்கியா? அப்படின்னு பார்க்காம உட்டடிச்சுட்டேன் பாருங்க! ஆனாலும் எனக்கு அடிக்கடி இப்பெல்லாம் கல்யாணக்கனவுகள் காலம்போன கடைசில வந்துட்டே இருக்குது!
வெளிய எங்கம்மா சத்தமும் அப்பா சத்தமும் பெருசா கேட்டுச்சு!
“ஏய்யா.. நீயெல்லாம் ஒரு மனுசன்னு சொல்லீட்டு ஊருக்குள்ள திரியறியே.. கேவலமா இல்லெ உனக்கு? புள்ள வயசு என்னாச்சுன்னு உனக்கு தெரியுமா? அதுக்கொரு கல்யாணத்தை பண்டோனுமுன்னு உனக்கு நினைப்பே அத்துப்போச்சா? கையில என்ன வச்சிருக்கே புள்ளைக்காவ? அரை ஏக்கரா வெத்து நிலம்.. இந்த ஓட்டு ஊடு! அவ்ளோதானே! புள்ளை உனக்கு சம்பாதிச்சு சோறு போடறா.. தெரிஞ்சுக்கோ!”
ஓஹோ! இன்னிக்கி ரெண்டு மாசம் கழிச்சி என்னோட நாயத்தை எடுத்துட்டாங்க போல! இது எங்க போயி முடியும்னுதான் தெரியுமே! தொண்டைத்தண்ணி வத்துற அளவுக்கு ரெண்டும் கத்தீட்டு கடைசீல சோத்துல வந்து உக்கோந்துக்குவாங்க! அப்பன் இன்னிக்கி கொஞ்சம் குடிச்சிட்டு வந்துடுச்சாட்ட தெரியுது! அதான் அம்மாளுக்கு கோவம் வந்துடுச்சு!
“போடி உன்னுத கொண்டுட்டு.. பெரிய இவ கணக்கா பேச வந்துட்டா! எம்புள்ளைக்கி மாப்பிள்ளை ரெடிடி! ஆமா! ஆளு பாக்க பனைமர ஒசரத்துல இருப்பாப்ல!”
“யோவ்! என்னய்யா சொல்றே? போதைல எங்காச்சிம் வசந்தாவை அடமானம் வச்சுட்டு வந்துட்டியாய்யா?”
“நானெதுக்குடி எம்புள்ளைய அடமானம் வெக்கிறேன்? எம்பட செல்லக்குட்டி அது! நாளைக்கி பொண்ணு பாக்க காலையில வந்துருவாங்க மாப்பிள்ளை ஊட்டுல இருந்து!”
“குடிச்சுட்டு ஒளறீட்டு இருக்காதயாமா..”
“இன்னிக்கி சந்தோசத்துல குடிச்சுட்டு வந்திருக்கேண்டி..”
என்னது! நிஜமாவே அப்பா மாப்பிள்ளையை பார்த்து பேசி முடிச்சுட்டு வந்துட்டாப்லையே பேசுறாரே! இதுல என்னமோ விசயமிருக்குது! முந்தாநேத்து என் பைக்குல பின்னாடி உட்கார்ந்துட்டு வந்த மாப்பிள்ளை அப்ப நாளைக்கி ஊடு தேடி வரப்போறாரு போல! மாப்பிள்ளை பனைமர ஒசரம்னு வேற சொல்லுதே! அப்ப அது ஒட்டகச்சிவிங்கியாத்தான் இருக்கோணும்.
“யோவ்! சும்மா ஒலப்பீட்டு இருக்காம போயி திண்ணையில சித்தநேரம் படு போ!”
“மாப்பிள்ளை காத்தால நம்ம ஊட்டுக்கு வந்து நம்ம பொண்னை கேப்பாரு! இந்தக்கட்டாப்பு எந்தக்காரணத்த வெச்சிம் இந்தக்கல்யாணம் நிக்காது!”
”யோவ் யாருய்யா அந்த மாப்பிள்ளை? சொல்லு இப்ப!”
“கிழக்க கிறிஸ்டியன் தெருவுல ஜான்சன் இருக்காப்லைல்ல.. அவரு தான் நம்ம மருமகன்!”
“அடப்பாவி கெடுத்தியே.. நானெல்லாம் என் புள்ளைய அந்தச்சாமி கும்புடுற ஆளுங்களுக்கெல்லாம் குடுக்க மாட்டேன்! மாப்பிள்ளை பேசீட்டு வந்து வாசல்ல நிக்குது பாரு.. யாரைக்கேட்டுய்யா நீயி எம்புள்ளைய அங்க தர்றேன்னு சொன்னே?”
“அந்த மாப்பிள்ளைக்கி என்ன கொறச்சலுன்னு சொல்லுடி? உள்ளூருலயே வாத்தியாரு வேலையில இருக்காரு.. கைநிறைய சம்பாதிக்குறாரு.. கெட்ட பழக்கம் ஒன்னுமில்ல அவருகிட்ட.. வயசான ஒரு அம்மா வீட்டுல இருக்குது! அவரோட சொந்தபந்தமெல்லாம் டவுன்ல இருக்காங்க.. நாளைக்கி மாத்தல் கெடச்சுதுன்னா அவரும் டவுனுப்பக்கம் நம்ம பிள்ளையை கூட்டீட்டு போயிருவாரு!”
“இதுக்கு புள்ளையக்கூட்டீட்டு போயி தெக்கால காட்டுல இருக்குற வத்தக்கெணத்துல நீயே தள்ளி உட்டுடு போ! மாப்பிள்ளை வருதாமா மாப்பிள்ளை! இங்க காத்தால யாரும் எம்பட வாசலுக்கு வரப்புடாது பாத்துக்க!”
“வருவாங்கடி! பின்ன உம்புள்ளைய காலத்துக்கும் ஊட்டுலயே வெச்சுக்குவியா? சொந்தபந்தத்துல இத்தனைபேரு இருக்காங்கன்னு தான பேரு! எல்லாருகிட்டயும் மாப்பிள்ளைங்க இருந்தாங்க.. யாராச்சிம் நம்ம புள்ளைய கேட்டாங்களா? எங்காச்சிம் எழவூட்டுக்கு போயி நின்னாலும் கேக்குறானுங்க..’வசந்தா புள்ளைக்கி எதாச்சிம் தெகைஞ்சுதா?’ன்னு! என்னவொரு ஏத்தம் இருக்கோணும் அவனுங்களுக்கு! அதான் அவிங்களாவே என்னை வந்து பார்த்து பேசினாங்க.. அவங்க சனத்துலயும் நமக்கு மாதிரி முன்னாடி உட்டு பின்னாடி சிரிக்குறவங்கதான் நிறைய இருக்காங்களாம். மாப்பிள்ளைக்கி வயசு முப்பத்தாறு ஆயிப்போச்சு! நம்ம வடிவேலானை விட ஒருவயசு மூத்தவரு! எவ்ளோ தன்மையா என்கிட்ட பேசுனாப்ல தெரியுமா? வாத்தியார்னா அவருதான் வாத்தியாரு! புள்ளைய அந்த மனுசனுக்கு குடுக்காம யாருக்கு குடுக்குறது?”
“அப்படின்னா இன்னிக்கி ராத்திரியே நான் போயி ரயில்ல தலையை குடுத்துடறேன். எம்பட எழவை எடுத்து முடிச்சுட்டு புள்ளைய நீயி யாருக்கு வேணாலும் கட்டிக்குடு!”
“இந்த மெரட்டல் கிரட்டலுக்கெல்லாம் நானு பயப்பட மாட்டேண்டியோவ்! சாமத்துலயே கருப்பையும் முடிச்சு வீட்டை வழிச்சு வுடச்சொல்லி காத்தால வெள்ளையுஞ் சொள்ளையுமா நானும் வடிவேலானும் வர்றவீங்களை ‘வாங்க’ன்னு கும்புடு போட்டு வரவேற்போம்டி!”
என்னோட கல்யாண விசயத்துக்காக அம்மா பாருங்க இப்பவும் முட்டுக்கட்டை போட்டுட்டு நிக்கிது! அப்படின்னு நினைச்சுட்டே எந்திரிச்சு வாசலுக்குப் போனேன். என் மூஞ்சியை பார்த்ததுமே ரெண்டுபேரும் கப்சிப்புனு ஆயிட்டாங்க! வாசல்ல பயங்கரமா பெஞ்சிட்டு இருந்த மழை பட்டுனு ஓய்ஞ்சு போச்சு!
“அப்பா.. நிசமா நாளைக்கி மாப்பிள்ளை ஊட்டுல இருந்து வர்றாங்களா? சும்மா சொல்றீங்களா?”
“அவங்க கண்டீப்பா காத்தால வருவாங்க சாமி! அவரு உன்னை கட்டிக்கிறதா என் கையில அடிச்சி சொல்லிட்டாரு! சம்பிரதாயத்துக்காக அவங்க வர்றாங்க!”
“சரிப்பா.. நான் கட்டிக்கறேன்! அதுக்கு ஏன் வாசல்ல நின்னு ரெண்டுபேரும் சாவறேன் கருப்பு பண்றேன்னு கத்தீட்டு இருக்கீங்க?”
“ஏண்டி உனக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்குது? அவங்க ஞாயித்துக்கிழமை கோயல்ல உக்கோந்து பாட்டுப்பாடுறவங்க வசந்தா! அவங்க சாமி வேற! அதெல்லாம் உனக்கு ஒத்துவராதுடி! ஊருக்குள்ள இருந்து ஒருத்தரும் உம்பட கல்யாணத்துக்கு வரமாட்டாங்க! நாளையும் பின்னியும் உங்கூட யாரும் பேச்சே வச்சுக்க மாட்டாங்க!”
“யாரும் எம்பட கல்யாணத்துக்கு வரலீன்னாலும், நீயே கூட வரலீன்னாலும் பரவால்லம்மா.. கல்யாணம் பண்டீட்டு போயிட்டன்னா இந்தூர்லயா வந்து உட்கார்ந்துட்டு பொழைக்கப்போறேன் நானு? அப்பன் தான் ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத மனுசன்னு சொல்லுதுல்ல! மொதத்தாரத்துக்கே அங்க பொண்ணுப்பிள்ளை இல்லாமத்தான அவருக்கும் வயசு முப்பத்தாறு ஆயிருக்கு. எல்லாருக்குமே எல்லா எடத்துலயும் பிரச்சனை இருக்கும்மா! உன்னோட தம்பிகாரன்.. அதான் எம்பட மாமங்காரன் எத்தனவாட்டி என்னை.. ‘வாடி.. உம்பட அத்தைகாரி செரியில்ல.. நீ வாடி’ன்னு கேட்டிருப்பான். அவன் பையனை எனக்கு கட்டி வச்சானா? கட்டிக்குடுக்க மாட்டான்! நம்மூட்டுல என்ன இருக்குது? நாலு ஆட்டுக்குட்டிக.. நீயி சொன்னாப்புல ஊடு காடு! எவன் வருவான்? போயி ரெண்டுபேரும் சோத்தை தின்னுட்டு சத்தமில்லாம படுங்க!” அவ்ளோதான். பஞ்சாயத்து முடிஞ்சுதுங்க!
காலையில சொன்னாப்புல ஜான்சன் வாத்தியாரு அவரோட டவுனு சொந்தக்காரங்க நாலுபேரோட எங்கூடு வந்து சேர்ந்துட்டாப்ல! இப்படி மாப்பிள்ளை உள்ளூரு பள்ளிக்கூட வாத்தியாரு.. யேசு சாமி கும்பிடுறவருன்னு தெரிஞ்சங்காட்டி வழக்கமா வர்ற பக்கத்து வீட்டு அம்மாளுங்களுமே வரலை. அண்ணன் விடிகாலையிலயே தலைக்கி கருஞ்சாயம் பூசீட்டு பச்சை வர்றாப்பிடி ஷேவிங் பண்டீட்டு வெள்ளையுஞ் சொள்ளையுமா கும்புடு போட்டுட்டு நின்னான். ரெண்டு பொம்பளையாளுங்க வந்திருந்தாங்க! ஜான்சன் வாத்தியாரோட அக்காளும் தங்கச்சியுமாம்! அம்மாவை கூட்டிட்டு வரலை அவங்க.
வந்தவங்களுக்கு ஸ்வீட்டு, மிச்சரு நிறைஞ்ச தட்டத்தை வடிவேலன் தான் கொண்டு போயிக்குடுத்தான். அவன் மூஞ்சியலயும், அப்பா மூஞ்சியிலயும் அப்படியொரு சந்தோசத்தை நான் பார்த்தேன். அப்படின்னா உன் மூஞ்சீல இல்லியான்னு கேக்காதீங்க! மாப்பிள்ளை நீலவர்ண ஜீன்ஸ் பேண்ட் போட்டிருந்தாரு. மேல்சட்டை பளிச்சுனு அப்படியொரு வெள்ளை. மாநிறம்தான் அவரு என்னையாட்டமே! மாப்பிள்ளை குடும்பத்தாருக்கு நான் பால்காபி கொண்டு போய் கொடுத்தேன். மாப்பிள்ளையோட அக்கா என்னை கிட்ட உட்கார வச்சிட்டாங்க!
வடிவேலனுக்கு கல்யாணம் ஆகாத விசயம் அவங்களுக்கு தெரிஞ்சிருக்குது! அப்பா கிட்ட மாப்பிள்ளையோட தங்கச்சி.. அண்ணன் கல்யாணத்தைப்பத்தி சரளமா பேசினா. அண்ணனுக்கு வெட்கம் மூஞ்சில தெரிஞ்சதைக்கூட அன்னிக்கித்தான் நான் பார்த்தேன். விட்டா அப்பா இப்பவே அவங்களோட என்னை தாட்டி அனுப்பிடுவாராட்டம் பேசிட்டு இருந்தாரு. எங்கம்மா அப்பா உட்கார்ந்துட்டு இருந்த சேருக்கும் பின்னால அமைதியா நின்னுக்குச்சு. ஒரு பேச்சு பேசுல!
மாப்பிள்ளையோட அக்காதான் ’பொண்ணும் மாப்பிள்ளையும் சித்தங்கூரியம் வெளிய வேப்பை மரத்தடியில நின்னு பேசிட்டு வாங்க!’ அப்படின்னுச்சு! எப்படான்னு காத்துட்டு இருந்திருப்பாப்லையாட்ட இந்த மாப்பிள்ளை.. மளார்னு எந்திரிச்சு வீட்டுக்கு வெளிய போயிட்டாரு. எனக்குன்னா வெக்கம் வெக்கமா வருது! முப்பத்திமூனு வயசுல வெக்கமெல்லாம் வருமா? தெரியில.. வந்துச்சு! என்னமோ மொத ராத்திரிக்கி பால்சொம்பு தூக்கீட்டு போறாப்புல வெக்கப்பட்டுக்கிட்டு எந்திரிச்சு நைசா வீட்டைவிட்டு வெளியில வந்தேன்.
“வா வசந்தாமணி.. இப்படி நிழல்ல நின்னுக்குவோம்!” அப்படின்னாப்ல. என்னோட பேரை முழுசா இப்படி யாரும் கூப்பிட்டு பலவருசமாச்சு. ‘அடியே வசந்தா!’ அப்படித்தான் கூப்பிடுவாங்க! ரொம்ப பிரியமா இருந்துச்சு எனக்கு. அவரு கிட்டக்க நானு போயி நின்னப்ப அவரோட தோளுப்பட்டைக்கிம் கொஞ்சம் கீழாப்புல நானு இருக்காப்ல தான் இருந்துச்சு! மனுசன் ஆறடிக்கும் மேல இருப்பாராட்டம்.
“ஏன் வசந்தாமணி.. நீயும் உள்ளூரு பள்ளிக்கூடத்துல தான் படிச்சியா?”
“ஆமாங்க.. எட்டாம் கிளாஸ் வரைக்கும் தான் என்னோட படிப்பு”
“என்னமோ பூச்சியாட்டம் உன் தலைக்கிட்ட.. வண்டா?” அப்படின்னுட்டு கையை நீட்டிட்டு வந்தாரு பாருங்க.. மளார்னு பொறவுக்கு ஒரு குதி குதிச்சிட்டேன்! ‘ஐயோ சேசுவே! கல்யாணத்துக்கும் முன்னால பொண்ணுப்பிள்ளையை தொடக்கூடாதுங்க!’ன்னேன்! சிரிச்சாப்ல பளீர்னு!
000