அன்னைக்குப் பொழுதோட மும்தாஜ் ஜங்ஷனிலிருந்து மேற்கு வீதியிலுள்ள தன் வீடு வரைக்கும் நிர்வாணமாக நடந்து போனாளாம் என்கிற சேதி ஊர் முழுக்க பரபரப்பாகப் பேசப்பட்டுக்கொண்டிருந்தது.   

“பாக்கறக்கு நமக்கு குடுத்துவெக்காமப் போயிருச்சே…! அவ சீலை கட்டி வந்தாலே சிங்கிள் எக்ஸு. அதைய அவுத்துட்டு நின்னா டப்புள் எக்ஸு. ஒடம்புல ஒட்டுத் துணி கூட இல்லாம முண்டக்கட்டையா நடந்து போயிருக்கறான்னா, முப்பிள் எக்ஸ் ஓப்பனிங் சீனாட்டவே இருந்திருக்குமே…! குடுத்து வெக்கிலியே…! குடுத்து வெக்கிலியே…!!” மும்தாஜ் ரசிகர்கள் அங்கலாப்பில் அடித்துக்கொண்டனர். 

பிறகுதான் தெரிந்தது, ஊருதுன்னாப் பறக்குதுங்கற மிகைப்படுத்தல் பேர்வழிகள் கிளப்பிவிட்ட எக்ஸ்ட்ரா பிட் இது என்று. சம்பவம் உண்மைதான்; ஆனால், நிர்வாணமாக அல்ல; மேலே சீலையில்லாமல், உள்பாவாடையும் ஜாக்கெட்டும் அணிந்த நிலையில் நடந்துபோயிருக்கிறாள்.

அப்படியானால் சரி, நமக்கு பெரிதாக ஒன்றும் குடுத்து வைக்காமல் போய்விடவில்லை என்று சமாதானப்பட்டவர்கள், “அதுன்னாலும் அது,… பாக்கறக்கில்லாமப் போயிருச்சு. அது செரீ,… தென்னத்துக்கு அப்புடி டூப்பீஸ்ல போனாளாமா? ஆராச்சு கூட பெட்டு கட்டியிருந்தாளா…? இல்ல,… குடும்பஸ்ரீக கீது தகலாறு பண்ணி, முச்சந்தில மூக்கறுக்கோணும்ணு சீலைய அவுத்துட்டாங்ளா?” என விசாரித்தனர்.

கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த புதுமணத் தம்பதி ஒன்று முன்சீப்சள்ளைக்கு விருந்துக்கு வந்து திரும்பிக்கொண்டிருந்தது. ஒழலப்பதி ஐங்ஷன் முச்சந்தியருகே வரும்போது மொஃபட் சக்கரத்தில் சேலை சிக்கி ஒழட்டியதில் வண்டியோடு இருவரும் விழுந்துவிட்டனர். துண்டித்து எடுக்கப்பட்ட சேலைத் துண்டு பயனளிக்காமல் அந்தப் பெண் உள்பாவாடை – ஜாக்கெட்டோடு அவமானப்பட்டு நிற்க வேண்டியதாயிற்று. அப்போது அங்கிருந்த மும்தாஜ், தான் கட்டியிருந்த சேலையை அவிழ்த்துக் கொடுத்துவிட்டுப் போனாள் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதைக் கேட்ட ரசிக சிகாமணிகளில் சிலர், துண்டு சீன் பார்க்க வாய்க்காத அங்கலாப்பை மறந்து மும்தாஜைப் பாராட்டினர்.

ஆனால், பெண்கள், “அவளுக்கென்னொ,… அட்டன் டைத்துல அஞ்சாறு ஆம்பளைகளப் பாக்கறவ! கட்டுன சீலைய மட்லுமா? பாவாடை – ஜாக்கிட்டு, உள்பாடி எல்லாத்தீமே அவுத்தெறிஞ்சுட்டு, அம்மணக்குண்டியாக் கூட நடந்து போவா!” எனப் பரிகசித்தனரே அல்லாமல், அவளது செயலைச் சிலாகிப்பதற்கு ஒருத்திக்கேனும் மனசு வரவில்லை. ஒட்டுமொத்த ஊர்ப் பெண்களுக்குமே சக்களத்தியல்லவா அவள்!

எப்படியோ, இந்த சம்பவம் பரவிய அளவுக்கு இதற்கு முத்தாய்ப்பாக அமைந்த சிவபாணச் சித்தரின் ஆசீர்வாதம் பரவியிருக்கவில்லை. அது நியாயம்தானே! மும்தாஜ் உள்பாவாடையும் ஜாக்கெட்டுமாக நடந்துபோவதிலுள்ள மகத்துவம், மகிமை, சித்தரின் வாழ்த்தில் இருக்கிறதா?

ஆனாலும் மிகச் சிலரேனும் அது பற்றி அக்கறை கொண்டனர்.

“அவ சீலையக் கள்ட்டிக் குடுத்துட்டடுப் போகீல, உனக்கொசரம் ஒரு மள பேயும் மும்தாசுன்னு ஆசீர்வதிச்சாராமாப்பா, சித்தரு! ஊருல எந்தப் பொம்பளையுமே ஒளுக்கமில்லீன்னு, ‘உய்யடா உய்’ போட்டுட்டிருக்கறவரு அவுரு. அந்தப் பாட்டே இவளையாட்ட வெடி*களப் பத்தித்தானே! அப்புடியிருக்க,… ஒரு கலியாணங் காச்சீல கூட நல்ல வார்த்தை சொல்லி வாள்த்தாத மனுசன்,… அவளோட செய்கையப் பாத்துட்டு, அதும் அந்தளவுக்கு மனசார வாள்த்தியிருக்கறாருன்னா,… பெரிய சமாச்சாரந்தான்!” என்று அவரைப் பிடிக்காத பெரிய மனிதர்கள் சிலரே கூட வியப்புற்றனர்.

*******

சிவபாணச் சித்தர் அவர்களுக்கு ஊருக்குள் அவ்வளவாக மதிப்பில்லை. சதா நேரமும் கஞ்சா போதை; பொம்பளை – புள்ளைகள் அக்கம் பக்கத்தில் இருக்கிறார்கள் என்றோ, கல்யாண வீடு – எழவு வீடு – கோவில் வளாகம் என்றோ இடம் – பொருள் – ஏவல் பாராமல் விரச முத்திரையுடன் ‘உய்யடா உய்’ ஆசியளிப்பது; ஒழுக்கங் கெட்ட பெண்கள் பற்றிய பட்டினத்தாரின் நாற்றப் பாட்டுகளை எட்டுக் கட்டை சுதியில் எடுத்துவிடுவது; புழுத்துச் செத்த நாயின் பொண நாத்தமளவுக்கு அதற்கான வியாக்கியானங்களை முழக்குவது என்றிருக்கும் அவரை நன்மதிப்புடன் வாழும் யார்தான் மதிக்க முடியும்?

ஆனால், சிவபாணத்தாரின் அமெச்சூர் சீடனும், கஞ்சா விநியோகஸ்தனுமான கஞ்சாக் கடத்தல் தேவாங்கு, அவர் மீது பெருமதிப்பு வைத்திருந்தான்.

“சித்தரு முக்காலமும் ஒணந்த நானீங்கோவ்! நாலு வேதம் கரைச்சுக் குடிச்சு, நாலு யோக வித்தை* படிச்சவரு. நெலம், நீரு, நெருப்பு, காத்து, ஆகாசம்னு அஞ்சு பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆளக்கூடிய சக்தி படைச்ச மகா யோகியாக்குங்கொ!” என்று சித்தர் மகிமைகளை கேப்பி சுந்தராம்பாள் மாதிரி எண் வரிசையில் அடுக்குவான்.

“திருவாத்தானாத் திரிஞ்சுட்டிருந்த இவனே இன்னைக்கு நம்முளுக்குத் தெரியாத இத்தனை விசியங்களை சரஞ்சரமா எடுத்துடறானே! இவன் சொல்றாப்புடி, ஒருவேளை சித்தருக்கு அந்த மாற சித்துகல்லாம் தெரிஞ்சுதான் இருக்குமோ?!” படித்த பாமரர்களும், படிக்காத மேதைகளும் சந்தேகமாக நம்பத் தலைப்படுவார்கள்.

சீடன் சொல்வது முற்றிலும் உண்மையாக இல்லாவிட்டாலும், அதில் சிற்சில விஷயங்கள் உண்மைதான் என்பதே பரவலான கருத்து. ‘கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்பது தெரியாது; ஆனால், நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கிறது’ என்று, ஆத்திகத்துக்கும் நாத்திகத்துக்கும் நடுவே இருக்கிற ஐந்தரை அறிவுவாதிகள் சொல்வார்களே,… அம் மாதிரியான ஏதோ ஒரு சக்தி சித்தர் அவர்களுக்கு இருக்கலாம் என்பது திண்ணை அறிஞர்கள், டீக் கடை – சலூன் கடை பெஞ்சு ஞானிகளின் அபிப்ராயம்.

பொம்பளை – புள்ளைகளைப் பார்த்த மாத்திரத்திலேயே அவள்களின் அந்தரங்க ஆழ அகலங்களையும், அதன் உள்ளடுக்கு நுணுக்கங்களையும், நாற்ற – மண குணங்களையும், சீர் வரிசைப் பிரகாரம் சித்தரிப்பது சித்தர் பெருமானின் சிறப்பம்சம். ஒருத்தியின் உருவத்தையும்; நிற்கிற, நடக்கிற, உட்காருகிற, பேசுகிற, பார்க்கிற செயல்களையும் வைத்தே அவளது உள் – வெளி விவகாரங்களை, ‘அத்திப் பழத்தப் புட்டா உள்ளெல்லாம் மசுரு’ங்கறாப்புடி புட்டுப் புட்டு வைத்துவிடுகிறாரே என்பதில் ஊராருக்குப் பேராச்சரியம்.

ஆண்களையும் இப்படி உருவம், நடை, பேச்சு, பாவனைகளைக் கொண்டே அவர்களது வண்ணம் (பருமன்), நீளம், வீரியம் – காரியம், எடுப்பு – தொடுப்பு அத்தனையும் விளாவாரியாக விளக்கிவிடுவார்.

நூற்றாண்டுப் பழமை வாய்ந்த சித்தரின் நாலுகெட்டு வீட்டில், அவர் வசிக்கிற மெய்ஞானக் குகையான மேல்தளத்தில் ஓர் அறை இருக்கிறது. அங்கே, புரட்டினாலே காகிதங்கள் ஒடிந்து தூளாகிவிடக் கூடிய அளவு பழமை வாய்ந்த, பழுப்பேறிய, 19-ஆம் நூற்றாண்டுப் பதிப்பு முதல், சமகாலச் செம்பதிப்புகள் வரையிலான புத்தகங்கள் குறுநூலகமளவு உள்ளன. தவிர, புராதன கால வட்டெழுத்துகளிலான அரிய ஓலைச் சுவடிகளும் ஐந்து மூட்டை உள்ளனவாம். சித்தர் பாடல்கள், சித்த வைத்தியம், யோகம், ரஸவாதம், மாந்தரீகம், அஷ்டமா சித்திகள், ஜோதிடம், ஆருடம், சாமுத்ரிகா லட்சணம், மனோ வசியம் என பல்வகை நூல்களையும் சுவடிகளையும் படித்துத்தான் சித்தருக்கு மூளை குழம்பிவிட்டது என்று சிலர் கூறுவர். இருந்தாலும் அவற்றின் வாயிலாகவே அவருக்கு மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்திகளும் சில்லறைச் சித்துகளும் வாய்க்கப் பெற்றுள்ளன என்றும் ஒரு சாராரால் நம்பப்படுகிறது.

மும்தாஜ் சம்பவம் நடந்ததற்கு மறுநாளும், அதற்கடுத்த நாளும் சித்தர் தன் வீட்டை விட்டு வெளிவரவேயில்லை. ஊரார் யாரும் அதைப் பொருட்படுத்தவுமில்லை. சித்தர் போக்கு சிவன் போக்கேதான் என்பது எல்லோருக்கும் தெரியும். சில நாள் முற்பகல், பிற்பகல் இரு வேளையும், ஒரு நேரம் கிழக்கு வீதி, மறு நேரம் மேற்கு வீதி என உலா வருவார். சில நாள் தொடர்ந்தாற் போல் தன் மெய்ஞானக் குகைக்குள்ளேயே அடைந்து கிடப்பார். திடீரென்று அவரை வெளியிலும் காணாது; வீட்டிலும் காணாது. திருமூர்த்தி மலை, வெள்ளியங்கிரி மலை, கொல்லி மலை என்று போய்விடுவார். அல்லது சுற்று வட்டாரக் காடு மேடுகளில் மூலிகைகள் தேடி அலைந்து திரிந்துகொண்டிருப்பார்.

இரண்டு நாள் குகைக்குள் அடைந்து கிடந்த சித்தர், மூன்றாம் நாள் பிற்பகல் சுமார் 04:30 வாக்கில் ஜங்ஷனில் எழுந்தருளினார். செட்டியார் கடையில் கனி (எலுமிச்சை), கற்பூரம், பீடிக் கட்டு வாங்கிக்கொண்டு வீடு நோக்கி நடந்தவர், நடுத் தெருவில் நின்று ஆகாசத்தை அண்ணாந்து பார்த்தார். மருந்துக்குக் கூட ஒரு மேகத் துணுக்கேனும் காணவில்லை. மந்திர உச்சாடனம் போல ஏதோ முணுமுணுத்தவர், “இன்னைக்கு மள பேஞ்சே தீரும்!” என்று தனக்குத் தானே உறுதிபடக் கூறி, “பெய்யடா பெய்!” என்றுவிட்டு விறுவிறெனச் சென்றுவிட்டார்.

அக்கினி நட்சத்திர வெயில் அப்பவும் மண்டையைப் பிளந்துகொண்டும், வெங்காத்து அனலடித்துக்கொண்டும் இருந்தது. சுமார் ஐந்து மணி வாக்கில் திடுமென வெயில் மந்தமாகி, மேக நிழல்கள் சாலையில் விரைந்தன. கொஞ்ச நேரத்திலேயே சாம்பல் மேகங்கள் திரண்டு வானை மூடிவிட்டன. வெக்கை தணிந்து காற்று சிலுசிலுத்தது. ஐந்தரை வாக்கில் வானம் மப்பும் மந்தாரமுமாகிவிட்டது. கொப்பளித்துக் குமிழ் விட்டிருந்த தார்ச் சாலையில் ஓரிரு பெருந் துளிகள் அடர் கருப்புப் புள்ளிகளிட்டன. பின் சடச்சடவென ஓட்டுக் கூரைகளிலும், ஆஸ்பெட்டாஸ் கூரைகளிலும் சத்தம். வாசல்களில், தெருக்களில் அதிவேகத்துடன் சாய்ந்திறங்கும் நீர்த் தாரைகளை சனம் வியந்து பார்த்தது. தாரைகளில் கனம் குறைந்து, அடர்த்தி கூடிக் கூடி,…

வாசல்களிலிருந்து வடிந்த வெள்ளம் தெருக்களை நிறைத்து மருங்குகளில் வாய்க்கால் ஓட,…

‘உய்யட உய்…!  பெய்யடா பெய்…!’ எனப் பெய்தது மழை.

*******

மறுச்ச நாள் ஊரெங்கும் சித்தர் வாக்கு பலித்துவிட்ட பேச்சாகவே இருந்தது.

“மும்தாசுக்காக ஒரு மள பேயும்னு திங்கக் கெளம் பொளுதோட – அதுதேன், அவ சீலைய அவுத்துக் குடுத்துட்டு உள் பாவாடையும் ஜாக்கிட்டுமா ஊர்கோலம் போனால்லோ,…. அப்பத்தேன் – சொல்லியிருந்தாராமாப்பா, நம்ம சித்தரு! சொல்லி மூணாம் பக்கம், சொன்ன அதே பொளுதோட நேரத்துல புடிச்சு, ரவ்வு முளுக்க மள தட்டோ தட்டுன்னு தட்டீருச்சு பாத்தையா….!?” வெடியக்காலத்திலிருந்து அதிசயித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

அது மழை பெய்கிற பருவமே அல்ல. வேச காலம். அதுவும் அக்கினி நட்சத்ரம் அனல் கக்கிக்கொண்டிருந்த வெங்கோடை உச்சம். அடிக்கிற வெயிலில் அடிவாரக் காடுகளே கருகி, ஆப் பாயில் மூளைகள் ஆவியாகிவிடும் போலிருந்தது. தார்ச் சாலைகள் கொப்பளித்துக் குமிழ்விட்டுக்கொண்டிருந்தன. கண்ணுக்கு முன்னாலேயே கானல் சுனாமியாடியது. வெயிலுக்கு பயந்து வீட்டுக்குள் இருந்தாலும் வெங்காத்து வீட்டுக்காரியாட்டம் காந்தியது.

மாசியிலேயே குளம் வற்றி, பங்குனியில் பாளம் வெடித்துவிட்டது. கிணறுகள் ஒரம்பின்றி பூமியின் பொக்கைவாய்களாகக் காட்சியளித்தன. மூலத்தரை டேமில் நில் பேலன்ஸ். அதனால் குழாய் நீர் விநியோகம் ரத்தாகி, சனம் குடிநீருக்கு அல்லாடியது. லாரி விநியோகத்தில் வீட்டுக்கு ஐந்து குடம், அதுவும் ஒந்நராடம் (ஒரு நாள்விட்டு ஒரு நாள்) என்பது போதவில்லை. வெற்றுக் குடங்களோடு அந்த வேகாத வெயிலில் பெண்களெல்லாம் முஸ்லீம் மதத்துக்கு மாறியது மாதிரி முக்காடு போட்டுக்கொண்டும், ஆண்களெல்லாம் மும்தாஜ் வீட்டுக்குப் போவது போல தலைக்குத் துண்டு போட்டுக்கொண்டும் மறியலில் ஈடுபட்டனர்.

பொது மக்கள் பாடு இப்படியென்றால் குடியானவர்கள் பாடு கொடும் பாடு. மானாவாரிக்காரர்கள் மம்முட்டி, கடப்பாரையோடு எலி வேட்டையில் ஈடுபட்டிருக்க, நஞ்சைக்காரர்கள் வாடிய பயிர் கண்டு வள்ளலார்களாயினர். அறநூறு, எழுநூறு அடி இறக்கிய கம்ப்ரசர்களிலிருந்து ‘இஞ்சீ-ஈஈ-டுப்ப-ளகீ…’யாட்டம் வெறும் காத்துதான் வந்துகொண்டிருந்தது. 50 ஆயிரம், 60 ஆயிரம், அங்க இங்க மொள்ளை வாங்கி, தொள்ளாயிரம் – ஆயிரம் அடி இறக்கிய ஆழ்குழாய்களும் சொளுக்கு நீர்தான் பாய்ச்சின. மாடு கன்னுகளும் மனுசர்களும் குடிக்கப் புழங்க ஆகும்; மத்த வெள்ளாமை பாழாப் போனாலும் போச்சாது, புள்ளைகளக் காப்பாத்தியாகோணும் என்று தென்னைகளுக்கு சொட்டு விடலாம் என்பது தவிர அதில் வேறு பலனேதுமில்லை.

ஊரெங்கும் எரவாரங்களில் வேப்பிலைக் கொத்துகள் செருகப்பட்டிருந்தன. அதோடு சூட்டுக் கொப்புளம், சென்னைக் கண், உள்ளாடை அணியாமை முதலான பருவகால வியாதிகளும் ஏற்கனவே அமுலில் இருக்க, நவ துவாரங்களிலும் பேதியேற்படுத்துகிற, மட்டன் பனியா என்று அன்போடு அழைக்கப்பட்ட, புத்தம் புதிய தொற்று வியாதியொன்று ரிலீஸாகி, வயசுப் புள்ளைகளின் மிஸ்ட் கால்கள் வழி பரவிக்கொண்டிருந்தது.

இப்படியான சந்தர்ப்பத்தில் சித்தர் வாக்குப் பிரகாரம் மழை பெய்த அற்புதம் ஊரெங்கும் பேசப்பட்டதில் ஆச்சரியமென்ன!

“இதுல உன்னொரு விசியம் பாத்துக்கொ. உத்தமீக, பத்தினீக, பதிவிரதைகதான் ‘பெய்யி’ன்னு சொன்னா மள பெய்யும்னு திருக்குறள் சொல்லுது. அதெல்லாம் கண்ணகி, நளாயினி, சீதை காலத்துல வேண்ணா நடந்திருக்கலாம். உப்ப நடக்குமா? நம்மூரு உத்தமீகன்னு இல்ல,… ஊரு உலகத்துல அத்தன உத்தமீகளயும் வேண்ணாலும் எடுத்துக்குலாம். அவீகல்லாம் ஒட்டுக்காச் சேந்து, கோடி கோடியா நின்னு கோரசு போட்டாலும், மளயென்னொ – தூத்தலென்னொ; ஒரு துளி கூட உளகாதே…! அப்புடி இருக்கீல,… ஊரறிஞ்ச, உலகமறிஞ்ச அவுசாரிக்காக, நம்ம சித்தரு மள பேய வெச்சுட்டாருங்கறது,… மகாப் பெரிய சமாச்சாரந்தானப்போவ்! மகாப் பெரிய சமாச்சாரந்தேன்! சம்சியமே இல்ல; தேவாங்கு சொல்றாப்புடி அவுரு அஞ்சு பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆளக்கூடிய மகாச் சித்தரேதேன்!”

*******

தனது மகிமை ஊர் முழுக்க பரபரப்பாகப் பேசப்பட்டுக்கொண்டிருப்பதோ, அதன் காரணமாக தான் போற்றிப் புகழப்பட்டுக்கொண்டிருப்பதோ சித்தர் அவர்களின் திரிகால திருஷ்டியில் தென்பட்டிருக்கவில்லை. அதனால் பத்தரை மணி வாக்கில் மேற்கு வீதி உலாவுக்காகச் சென்றுகொண்டிருந்தபோது சாலையிலும் மருங்குகளிலும் தென்பட்ட காட்சி அவரைக் குழப்பியது. அது கனவா, நனவா, கஞ்சா விளைவுப் பிரமையா என்பது பிடிபடவில்லை. அவரைக் கண்டாலே கடிநாயைக் கண்டாப்புடி அக்கட்டால ஒதுங்கிப் போகிற சனங்கள், இன்று இன்முகம் காட்டி நிற்கிறார்கள். சிலர் ஏதோ காங்காத அதிசுயத்தக் கண்டாப்புடி வாய் பிளந்து பார்க்கிறார்கள். அட,… சில பேர் அவருக்கு கும்பிடு கூடப் போடுகிறார்களே…!

இன்முக, வாய்பிளப்பு, கும்பிடுகள் வழி நெடுகத் தொடர்ந்தன. இவரது வரவு கண்டு எதுத்தாப்புடி வந்துகொண்டிருப்பவர்கள் பவ்யமாக ஒதுங்கி நின்றும்; வீட்டு முற்றம், வொர்க் ஷாப், லேடீஸ் டெய்லர் கடை என ஆங்காங்கே இருப்பவர்கள், “சித்தரு வாராரு,… சித்தரு வாறாரு”என அறிவித்தபடி சாலை மருங்குகளுக்கு இறங்கி நின்றும் வேடிக்கை பார்க்கலாயினர்.

கிராம அலுவலக நிறுத்தமான மேற்கு வீதி முக்கில் நட்ட நடுவே நின்று உரையாடிக்கொண்டிருந்த ஐந்தாறு பெருசுகள் இவரைக் கண்டவுடன், சேற்றுக்காக மடித்துக் கட்டியிருந்த வேட்டியை அவசர அவசரமாக இறக்கிவிட்டுக்கொண்டு, பயபக்தியோடு ஒதுங்கி நின்று கை கூப்பின.

இதற்குள், கள்ளக் காதல் கொலை, முல்லைப் பெரியார் விவகாரம், மட்டன் பனியாவுக்கு மாற்று கண்டுபிடிப்பு செய்திகளோடு வந்திருந்த நாளிதழ் மடிப்பைக் கூடப் பிரிக்காமல், சித்தர் பெய்வித்த ‘மும்தாஜ் மழை’ கிளப்பிவிட்ட விவாதத்தில் முங்கியிருந்த சாயாக் கடை பெஞ்சினரும் சித்தர் குரல் கேட்டு வெளிவந்தனர். அதில் முதலாவது ஆளாக இருந்த தேவாங்கு, ஓடோடி வந்து, சேறென்றும் பாராமல் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து அவரது தாள் பணிந்து தொழுது, பக்திப் பரவசத்தில் சிலிர்த்தெழுந்து நின்றான்.

“பஞ்ச பூதங்கள்லயே விஞ்சாணிகனாலயும் மெய்ஞ்சாணிகனாலயும் கூட ஆதி அந்தம் அளக்க முடியாதபடி இருக்கறது,… அண்ட சராசரங்களும்மு அடங்குன ஆகாசந்தானுங்ளே! அப்புடியாப்பட்ட ஆகாசத்தையே எக்கிரிமென்டுப் போட்டு குத்தைக்கு எடுத்தாப்புடி, உங்க கைப்புடிக்குள்ள கொண்டு வந்துட்டீங்கொ. மும்தாசுக்காக ஒரு மள பேயும்னு வாக்குச் சொல்லி, சொன்னபடியே பேய வெச்சு, என்ற குருநாதருங்கறத ரூப்பிச்சுட்டீங் சித்தரே!” என்று பாராட்டுப் பத்திரமும் வாசித்தான்.

சித்தர் எப்போது போதத்தோடு இருப்பார், எப்போது போதமற்று இருப்பார் என்பது அவருக்கே தெரியாது. விழித்திருக்கையில் அன்கான்சியஸ், தூங்கும்போதும் சமாதியில் ஆழ்ந்துவிடும்போதும் சப் கான்சியஸ், கஞ்சாவிலேதான் கான்சியஸ் என்று இயங்கக்கூடிய தலைகீழ் மூளை அவருடையது. அவ்வப்போது அது, அவராலேயே கூட போட முடியாத பாதஹஸ்தாசனம், பச்சிமோத்சாசனம், அஷ்டவக்ராசனம், நூடுல்சாசனம் போன்ற சிக்கலான ஆசனங்களைப் போட்டுவிட்டு, விடுவிக்க முடியாமல் முழி மிதுங்கிக்கொண்டிருக்கும். ‘உளவியல் பிதாமகன்’ ஃப்ராய்டும், ‘யோகப் பிதாமகன்’ பதஞ்சலியும் இணைந்து போராடினால் கூட அந்த சிக்கலாசனங்களை விடுவிக்கவோ, அவருக்குள் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பதைத் கண்டுபிடிக்கவோ முடியாது.

அப்படியான ஒரு அசந்தர்ப்பத்திலேதான் மும்தாஜை வாழ்த்தி, தான் ஆசீர்வதித்த அசம்பாவிதம் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று பட்டது சித்தருக்கு.

சிவபாணச் சித்தரை ஊரிலுள்ள எந்தப் பெண்களுக்குமே பிடிக்காது. உத்தமிகள் என ஊரில் ஒருத்தியும் கிடையாது, பொம்பளை – புள்ளைகள் எல்லாமே சோரம் போகக் கூடியவள்களே எனப் பேசி, பட்டினத்தாரின் டிங்கிடிப் பாடல்களையும் அதற்கான வியாக்கியானங்களையும் சொல்லி, பெண் குலத்தையே இழிவுபடுத்திக்கொண்டிருக்கும் அவரை எந்தப் பெண்ணால் பொறுத்துக்கொள்ள முடியும்? கண்ணகி வம்சம் அவரைக் கண்டாலே காத தூரம் ஓடி கரித்துக் கொட்டியது, பார்ட் டைம் பத்தினிகளான வேலி சாட்ட வீராங்கனைகள், புருசனைக் காட்டிலும் அவரை வெறுத்தார்கள். கல்யாணமாகாத இளம் வீராங்கனைகளுக்கோ, அவர் நாள் தள்ளிப்போகிற மாதிரியான ஒரு பீதி.

அப்படியிருக்க, இப்போது சுற்றுபாடுகளிலுள்ள வீடுகளிலிருந்து பக்தைகள் படை திரண்டு குழுமிவிட்டது.

அவர்களின் வருகை சாமானியமாகவா இருக்கும்? தண்ணிவாத்துத் தலைக்குச் சூடி, நெத்தி நெறக்கா துண்ணூறு அப்பி, அதுக்கு நடுவாண்ட சந்தனஞ் செகப்பு சாத்தி, தெய்வீகம் கமழ அவள்கள் எழுந்தருளியதைப் பார்த்தால், ‘அப்புடியே தூக்கி சப்பரத்துல வெக்கலாம்’னு இருந்தது. வர வரவே, “சிவபாணச் சாமீ – சித்தரு பகவானே…!”, “மள குடுத்த திருமகனே – மாரியாத்தா மருமகனே…!” என்று ஆங்காரமெடுத்து ஒங்காரம் கொட்டிக்கொண்டுதான் முறறுகையிட்டனர்.

‘மங்கையர் சங்காத்தமே ஆகாது; டிங்கிடிய உட்டாத்தான் மங்கிடி’ என்று இவள்களுக்கு எதிராகத்தானே இவ்வளவு காலமும் உய்யடா உய் போட்டு, ஊளைப் பாட்டும் பாடிக்கொண்டிருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்த்த சித்தருக்கு, பித்தம் தலைக்கேறியது.

அந் நேரம் பார்த்து, அஞ்சாறு வீடு தள்ளி இருக்கிற மும்தாஜும் மேற்படி சத்தஞ் சள்ளுகளைக் கேட்டு அங்கே வந்துகொண்டிருப்பதும் தட்டுப்படவே, “எத்தனை பேர், எத்தனை பேர், எத்தனை பேர்!” என்று தொண்டை கிழியக் கத்தி, “உய்யடா உய்…!” என உசுரு போறாப்புடி அலறினார்.

உட்டேஞ் சவாரி என்று அத்தனை பொம்பளைகளும் பொடனியில் கால் பட ஒட்டமெடுத்துவிடுவாள்கள் என்று பார்த்தால், ‘குலுக்-குலு-லுலு…’ என அவள்கள் எழுப்பிய கூட்டக் கொலகைக் சத்தம், காது ஜவ்வையே கிழித்துவிட்டது. ஆண்கள் அத்தனை பேரும் பக்திப் பரவசத்தோடு, “உய்யடா உய்! உய்யடா உய்!!” என்று கும்பிடு சகிதம் கோஷமும் எழுப்பத் தொடங்கிவிட்டனர்.

மக்கள் அவருக்கு அளித்த தெய்வீக மரியாதைகளினால் சித்தரின் போதமே கெட்டுவிட்டது. அதாவது, கஞ்சா மப்பு இறங்கிவிட்டது.

தேவாங்குக்கோ, இந்த சந்தர்ப்பத்தை நழுவவிடக் கூடாது என்று மண்டைக்குள் மெர்க்குரி பல்ப் ஒளிர்ந்தது.

கூட்டத்தை நோக்கி, “குடிக்கறக்கும் குண்டி களுவறக்குமே தண்ணியில்லாம, காஞ்சு கருவளிஞ்சுட்டிருக்கிற இந்த வெங்கோடைல, நம்ம கொறையத் தீக்கறக்கு வேண்டியே, அண்ட சராசரங்களையும் அடக்கியாண்டு, ஆகாச பூதத்துக்கே ஆடர் போட்டு, அட்டமா சித்துல மள பேய வெச்சிருக்கறாரு நம்ம சித்தரு. அப்பேர்ப்பட்ட மகானுக்கு வெத்து வாயில கொலகை – கோசம் போட்டாப் போதுமா? தோள்ல தூக்கி வெச்சு ஊர்கோலம் வர வேண்டாமா?” என்றான்.

அருகிலிருந்த ஆண்கள், “அ-ஆமப்பா! கேக்காமயே வரங்குடுத்த இந்தச் சாமிய, சப்பரத்துல வெச்சுத் தூக்குனாலும் தரும்; தேருல வெச்சு இளுத்தாலும் தகும். இப்பத்திக்கு, தேவாங்கு சொன்னாப்புடி தோள்லயாச்சு தூக்கீட்டுப் போலாம். ஆளுக்கொரு பக்கம் புடிங்கப்பா!” என்றபடி, ஆகாசப் பார்வையாக நின்றவரை அலேக்காகத் தூக்கினார்கள்.

கூச்சப்பட்டு நெளிந்த சித்தர் முரண்டியும் திமிறியும் கூட விடவில்லை. உய்யடா உய் கோஷத்தோடு ஊர்வலம் வடக்கு நோக்கி நகர்ந்தது. சேற்றுச் சட்டையோடிருந்த தேவாங்கு அதற்குத் தலைமை தாங்கி வழிநடத்த, நேற்றுப் பெய்த சித்தர் மழையில் முளைத்திருந்த திடீர் பக்தர் – பக்தைகள் கூட்டமும் ஆரவாரித்தபடி பின்தொடரலாயிற்று.

*******

வழி நெடுக உள்ள வீடுகளிலிருந்தும் பலத்த வரவேற்பு. பக்தையர் கூட்டம் தண்ணீர்க் குடம் தாங்கி எதிர்கொண்டு, சித்தர் சாமி ஊர்வலம் வரும் வழியைப் புனிதப்படுத்தும் விதமாக, ஏற்கனவே மழையால் ஈரமும் சகதியுமாகக் கிடந்த தெருவில் குடம் குடமாக ஊற்றி, சகதித் தேக்கமாக்கியது. ஆங்காங்குள்ள வெட்டி ஆப்பீசர்களும் வீட்டுப் பெண்களும் இவர்களோடு இணைந்துகொள்ள, இருபது – முப்பது பேராக இருந்த பக்தகோடிகளின் எண்ணிக்கை அறுபது, எழுபது என உயரலாயிற்று.

பக்தையர் கூட்டத்தில் முன்னிலை வகித்துக்கொண்டிருந்த மும்தாஜுக்கும் பெருத்த மவுசு.

‘ப்பிரியாக் கெடைக்கற நம்மளய உட்டுப்போட்டு, ஆயரம் – ரெண்டாயரம் குடுத்து இவகட்டப் போறானே நம்மளயக் கட்டுன நாசகாலன்?’ என்று வகுத்தெரிச்சல் கொண்டிருந்த கண்ணகி – நளாயினி பரம்பரைகளும், ‘நாமதான் மோளஞ் சேவிச்சு கண்டவங் கூட ப்பிரீ டிங்கிடி போட்டுட்டிருக்கறம். இவ பாரு, அதுல சொகத்துக்கு சொகமும்மாச்சு; காசுக்குக் காசும்மாச்சுன்னு, ஒரே நாளைல ஐயாயரம் – பத்தாயரம் சம்பாரிக்கறா. அவுசாரம் போனாலும் மொக ராசி வேணும்ங்கறது செரித்தான்!’ என்று பொறத்தாண்டி எரிச்சல் கொண்டிருந்த வே.சா.வீராங்கனைகளும், “எது எப்புடியோ மும்தாசு! உன்னாலதான் சித்தரு மள பேய வெச்சிருக்கறாரு” என்று தங்கள் உள்ளிருப்பை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவளைப் பாராட்டி, “மகராசியா இருக்கோணும்” என்று நெஞ்செரிய வஞ்சப்புகழ்ச்சி வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டனர்.

மும்தாஜின் தெய்வீகக் காதலர்களான ஆண்கள் தரப்பில் இந்த விஷயம் ஆரோக்கியமாகவே பார்க்கப்பட்டது.

அந் நேரம் பார்த்து, வெள்ளிக்கிழமைதோறும் கடை கண்ணிகளுக்கு மாலை விநியோகிக்கிற சரோஜாதேவிப் பண்டாரம், இடுப்பில் பூக் கூடையோடு பின்னழகை ஆட்டி ஆட்டி நடந்தபடி ஒயிலாக அங்கு வந்து சேர்ந்தான். அர்த்தநாரியக் குரலில்,”யக்கா…! இந்தக் கூடையச் சித்தெ புடி!” என ஒரு பெண்மணியிடம் கொடுத்தவன், அதிலிருந்து அரளி இலைகள் நடுவே ஆங்காங்கு பொன்னரளி, செம்பருத்திப் பூக்கள் தலை காட்டுகிற மாலை ஒன்றை எடுத்து, “பூமி குளுர, மக்க மனசு குளுர மள குடுத்த உங்குளுக்கு கோயல் கட்டி கும்படோணுங் சித்தரே…! என்னால முடிஞ்சது இந்த மாலையப் போட்டுக் கும்படறதுதான்!” என்றபடி அவரது. கழுத்தில் அணிவித்து, பாதம் தொட்டு வணங்கினான்.

“சரோசா சொல்றது செரித்தானுங். மும்தாசுக்காக ஒரு மள பேய வைச்ச சித்தருக்கு நாம கோயலுக் கட்டிக் கும்புட்டமுன்னா, நம்முளுக்காக மாசம் மும்மாரி பேய வெப்பாரு!” தேவாங்கு வழிமொழிந்தான்.

சித்தர் மகிமைகள் பற்றி முன்பு அவன் சொல்லியிருந்தவற்றையெல்லாம் நம்பாதிருந்தவர்கள் கூட நம்பும்படியாக நேற்றைய அனுபவம் இருந்ததால், கூடியிருந்த சனமும் ஆமாஞ்சாமி போட்டது.

பாலக்காடு மாவட்டம் கேரளத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படுவது. ஆனால், ‘அம்மா ஃபிகரு, மக அட்டு’ என்பது போல இம் மாவட்டத்தின் மேற்குப் பகுதியில்தான் அத்தகைய செழிப்பு. கிழக்குப் பகுதி அதற்கு நேரெதிர். குறிப்பாக, தமிழக எல்லையை ஒட்டிய எங்களின் வடகரப்பதி பஞ்சாயத்து, வறட்சிப் பகுதி என்று அரசாங்கத்தாலேயே அறிவிக்கப்பட்டதாகும். அதிலும் இப்போதைய கோடை நிலவரங்களைப் பார்த்தால் முப்பது வருசத்துக்கு முந்தி ஒரு சலக்கா, கால்நடைகளுக்கு புல்லோ தழை தாம்புகளோ இல்லாமல் பனையோலைகளை வெட்டிப் போட்டும், மனுசர்களுக்கு சுத்திகரிக்கத் தண்ணியில்லாமல் வெள்ளைக்காரனாட்டம் காகிதத்தில் துடைத்துக்கொண்டும் வாழ்ந்த பஞ்ச காலம் மறுக்காவும் வத்துவிடுமோ என்கிற கவலை எல்லோருக்கும் இருந்துவந்தது. சித்தருக்கு கோவில் கட்டி வழிபட்டால் இனி எக்காலத்திலும் தண்ணிப் பஞ்சமே இராது என்று பேசிக்கொண்டார்கள்.

கூட்டத்திலிருந்த மானாவாரி விவசாயி ஒருவர், “அப்புடிக் கோயல் கட்டறதானா எங்க காட்டுலயே எடங் குடக்கறேன்” என முன்வந்தார்.

மேட்டாங்காட்டு விவசாய நிலத்திற்கிடையே வெட்டியாகக் கிடக்கிற, கரட்டாங்குத்தில் கோயில் கட்ட இடம் தானமாகக் கொடுத்தால், சித்தர் மூலம் பெய்கிற மழை, முதலில் தனது காட்டுக்கும் கிணற்றுக்கும் பெய்து, மானாவாரிக் காடு நஞ்சை நிலமாகிக் கொழிக்குமே என்கிற நப்பாசை அவருக்கு.

“அப்பறம் என்னப்பா! நாம ஊருக்காள வரி வசூலிச்சு, மத்த குடியானவீக, பணக்காரங்ககட்டல்லாம் லம்ப்பா டொனேசனும் வாங்கி, கோயில் கட்டிப்போடலாம்” என்றது ஊர்ப் பெருசு ஒன்று.

எப்படியாவது இவர்களிடமிருந்து தப்பித்துவிட வேண்டும் என்றிருந்த சித்தர், வெள்ளம் தலைக்கு மேலே போவதை உணர்ந்து, “கோயிலாவது ஏதடா, குளங்களாவது ஏதடா? நட்ட கல்லும் பேசுமோ, நாதன் உள்ளிருக்கையில்?” என பங்காளிச் சித்தர் பாட்டை வீர வசனமாக எடுத்துவிட்டார்.  

அருள் மழை ஈரம் காயும் முன் கோடை உழவுக்காக வாடகை ட்ராக்டருக்கு சொல்வதற்காக வந்திருந்த மும்தாஜ் வெறியர் சேமலைக் கவுண்டர், “அதெல்லாம் உங்களையாட்ட சித்தருக, நானவானுகளுக்குத்தானுங் சித்தரே! நாங்க சாமானியமானவீக. எங்குளுக்கு கோயலு, கொளம், சாமி செலை எல்லாம் வேணும். இன்னிமேலு நீங்கதான் எங்குளுக்குக் கொல தெய்வமே! எல்லார்த்துக்குஞ் சொல்றன்,… கோயலுக் கட்டறக்கு வரியாவோ, டொனேசனாவோ, எப்புடி வேண்ணாலும் வெச்சுக்குங்கொ. இந்தாங்க ஆயரத்தொண்ணு. புடீடா தேவாங்கு!” என்று, மடித்துக் கட்டிய வேட்டியைத் தூக்கி, அண்டர் வேர்ல்டிலிருந்து பணமும் ருவ்வாய் நாணயமும் எடுத்து நீட்டினார்.

*******

ஒரே வருடத்தில், ஒழலப்பதி ஊருக்கு மேக்கால, வங்கெலி கூட தங்காத கரட்டாங்குத்தில், ஸ்ரீலஸ்ரீ சிவபாணச் சித்தர் ஸ்வாமிகள் தியானத் திருக்கோவில் கட்டப்பட்டு, வெகு விமரிசையாக குடமுழுக்கு விழாவும் நடத்தப்பட்டுவிட்டது. கருவறையில் கருங்கல் சிலையாக அருள் பாலிக்கிற சித்தர் அவர்கள், மண்டபத்தில் மனித உடலோடு நேரடி ஆசிகளையும், வழக்கமான முத்திரை காட்டல் சகிதம் வழங்கிக்கொண்டிருப்பார். சித்தர் சிலைக்குப் பூஜை புனஸ்காரங்கள் செய்வது சரோஜாதேவிப் பண்டாரம். ஆலய நிர்வாகி, அன்னாரின் முன்னாள் சீடரான பூஜ்ய ஸ்ரீ தேவாங்கு அடிகளார்.

சித்தர் மகிமைகள் எட்டுத் திக்கும் பிரபலமாகி, பதினாறு திக்கிலுமிருந்து பக்த கோடிகள் தியானத் திருக்கோவிலுக்கு வந்து செல்வதில் உள்ளூர்க்காரர்களுக்குப் பெருமையோ பெருமை. ஆனால் இந்தப் பெருமைகளுக்கெல்லாம் மூல காரணமாக இருந்த மும்தாஜ், தனக்காக சித்தர் நிகழ்த்திய அற்புதத்தினால் மனம் மாறி, தொழிலையே விட்டுவிட்டாள் என்பதில் அவளது வாடிக்கையாளர்களுக்குத்தான் தாங்கவியலாத துக்கம்.

*******

அடிக் குறிப்புகள்:

*வெடி – பாலியல் தொழிலாளிகளைக் குறிக்கும் மலையாளக் கொச்சை இழி சொல்.

*நான்கு யோகங்கள் – க்ரியா, ஞானம், பக்தி, கர்மம்.

000

ஷாராஜ்

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது பொள்ளாச்சியில் வசித்துக்கொண்டிருக்கிறார். தமிழ் வழிக் கல்வியை பள்ளி இறுதி வரை மட்டும் பயின்றவர். 90-களின் துவக்கம் முதல் இலக்கியத்தில் ஈடுபட்டுவரும் இவர், சுயமாக நுண்கலை ஓவியம் கற்றுக்கொண்டு நவீன தாந்த்ரீக ஓவியராகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். 5 சிறுகதைத் தொகுப்புகள், நான்கு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு ஆகியவை வெளியாகியுள்ளன.

சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும், நுண்கலை ஓவியத்துக்காக கே.எம்.கோபால் நினைவு விருதும், கவிதைக்காக நெருஞ்சி இலக்கிய விருதும் பெற்றவர். 2023-ம் ஆண்டுக்கான சௌந்தரா கைலாசம் நாவல் போட்டியில், நீர்க்கொல்லி என்ற இவரது நாவல் பரிசு பெற்றது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *