முகமறியா பறவை ஒன்றின்
செல்லரித்த கூடு.
கூட்டுண்ணிகள் ஒவ்வொன்றாய் மாயமாகிப் போன துக்கத்தில்
காலம் மறந்து முடங்கிப் போனது.
வெளிச்சம் இருள்
பேதமின்றி த்யான நிலையில்
பெருங்காற்றின் வரவுக்காய் காத்திருப்பு.
0
மௌனத்தின் ஆழத்தில்
வலியின் நுனியை
ருசித்தவாறு
பெருங்காலம் கடந்து செல்லும்
0
உதைபட்ட பந்தின் வீரியம்
இடைநிற்றலில்
உள்ளார்ந்து சுழன்று
தூர அலகு மறைந்து
மைய்யமற்ற மையத்தில்
இணைந்து கரையும்.
0
விதியின் பாய்ச்சலில்
முடிவற்று புனரமைக்கப்படும்
காமக் கூடாரங்கள்.
0
தண்டவாளங்கள் பிரிந்து
இரண்டாக மூன்றாக
பயணித்தாலும்
மீண்டும் சில நேரும்
ஒன்றிணைந்து பயணிக்க கூடும்.
0
பழுத்து உதிர காத்திருக்கும்
கண் மலர்கள்..
வெற்றிலை நரம்புகள் புடைக்க
காய்ந்த வரட்டியென
நொறுங்க கிடக்கும் இதயம்..
00

சுரேசுகுமாரன்
இயற்பெயர் சுரேஷ்குமார்.வீ, கட்டுமானத்துறை பொறியாளர். உடுமலைப்பேட்டை. 2016-ல் ’விஷ ஊற்று’ என்கிற கவிதை நூல் வெளியாகியிருக்கிறது.