நிறுவனத்திலிருந்து பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த கணேசனுக்கு ஏனோ அவரது மனது ஒரு நிலையில் இல்லை.பேருந்தில் ஜன்னல் ஓரமாக அமர்ந்தவர் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியவராக மற்றவர்களுக்குக் காட்சியளித்தார், அஃது உண்மையும் கூட. அவர் இது போன்று என்றுமே இருந்ததில்லை, ஆனால் இன்று கணேசனின் மனதில் ஓர் இனம் புரியாத படபடப்புத் தென்பட்டது.
போருந்தின் ஜன்னல் கம்பியில் தலையைச் சாய்த்தவர். அன்று காலையில் நிறுவனத்தில் நடந்தவற்றை எண்ணிய வண்ணமாகத் திரும்பத் திரும்ப யோசித்துக் கொண்டிருந்தார். என்றும் போல் இன்றும் கணேசன் அலுவலகம் சென்ற போது. ‘பழகிய நண்பர்கள் சக உத்தியோகஸ்தர்கள் அனைவரும் தன்னைப் பார்த்து ஏதோ சூசகமாகப் பேசுவது போல் தோன்றுயது கணேசனுக்கு.
‘அலுவலகம்’ன்னா நாலு பேரு நாலு விதமாகத்தான் பேசுவார்கள்; அதையெல்லாம் ஒன்றும் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று தனகுதானே எண்ணிக்கொண்டு’.
தனது அன்றாட வேலையைச் செய்ய முற்படத் தொடங்கிய பொழுது; சிங்க முத்துக் குமாஸ்தா கணேசனிடம் சார் மேல் அதிகாரி உங்களைத் தனது அறைக்கு அழைக்கிறார் எனச் சொல்ல.
“சரி சிங்கம் அப்போது நான் அவரைப் போய்ப் பார்த்துவிட்டு, மற்ற பணிகளைக் கவனிக்கிறேன்”.
“ஓக்கே சார் போங்க சீக்கிரம். இல்லையென்றால் அதற்கும் அவர் எனைத்தான் சத்தம் போடுவார்”.
***
“வா கணேசா! இப்படி நாற்காலியில் உட்காரு, மேற்கொண்டு நாம் பேசலாம்”.
‘சார் எதற்கு என்னை அழைத்தீர்கள்’?
‘அஃது ஒன்றுமில்லை’.
“அப்படியென்றால் நான் திரும்பி எனது சீட்டுக்கே போய்விடவா!”
“உனக்குத் தெரிந்ததே”
“எனக்குத் தெரிந்த விஷயமா?”
“என்ன சார்?” .
“அதான் கணேசா, உன் ரிடையர்மென்ட் சம்பந்தமாத்தான் சிலது பேசனும்”.
‘என்னுடைய ரிடையர்மென்டைப் பற்றி இப்ப என்ன பேச்சு? அதுக்கு இன்னும் மூணு வருஷம் இருக்கே சார்!’
‘நீ இப்போது வீ.ஆர்.எஸ் வாங்கிக்கொண்டால் உனக்கு கணிசமான தொகையை நிறுவனம் தருவதாகக் கூறியிருக்கிறார்கள்’. உன் வேலையை இனி இளைய வயது நபர் ஒருவர் வந்து பார்த்துக்கொள்வார். நீ சற்று யோசித்துச் சொல்!’. மேலும், கணேசனிடம் மேல் அதிகாரி கூறினார்.
“என் மனதில் நல்லது என்று எது படுகிறது என்றால்? நீ வீ.ஆர்.எஸ் வாங்கிக் கொள்வதுதான் சரி, இறுதி காலம் வரை இன்னும் மூன்று வருடம் உழைத்தாலும் இப்போது கிடைக்கும் சம்பளத்தைக்காட்டிலும் அதிகமாகக் கிடைக்கும்! நீ வீ.ஆர்.எஸ் கொடுத்தால். கூட்டிக் கழித்துப் பார்த்தால் மொத்தத்தில் உனக்கு லாபம் தான். சரி உன் வீட்டில் கலந்து பேசி ஒரு நல்ல முடிவாக நாளை வந்து என்னிடம் சொல்” என்று கூறினார் மேல் அதிகாரி.
***
அன்று முழுவதும் கணேசனின் மனதில் இதே எண்ணம்தான் என்ன செய்வது,யாரிடம் கேட்பது, நாம் வேலையை விட்டுவிடலாமா? அப்படி வேலையை விட்டால் சாப்பாட்டிற்கு என்ன வழி? மகன் சங்கர் இப்போதுதான் பட்டப்படிப்பு முடித்திருக்கிறான்’. இன்னும் அவன் வேலைக்குப் போகவில்லை. இந்த நிலையில் எப்படி முடிவெடுப்பது என்று பேருந்தின் ஜன்னல் ஓரமாக அமர்ந்த கணேசன் யோசித்த வண்ணமாக இருக்கையில்….
பேருந்தின் நடத்துநர், “மயிலாப்பூர் இருந்தால் இறங்கிவிடுங்கள் மயிலாப்பூர்” என்று கத்திக்கொண்டிருந்தது கணேசனின் காதுகளில் விழ, சுய நினைவிற்கு வந்த கணேசன் வேக வேகமாகப் பேருந்திலிருந்து இறங்கி மயிலாப்பூரில் இருக்கும் தனது வீட்டிற்கு மெதுவாக நடந்தவன் பத்து பதினைந்து நிமிடத்தில் வீடு வந்தடைந்தான்.
***
லட்சுமி, கணேசனின் மனைவி. ’வாங்க என்ன ஒருமாதிரியா இருக்கீங்க..’?, என்ன விஷயம்?’ என்றாள்.
”ஒன்றுமில்லை முதலில் ஒரு டம்ளர் காப்பிக் கொண்டுவா”.
“சரி சரி கத்த வேண்டாம் காப்பிதானே இதோ கொண்டுவருகிறேன்” என்றாள் லட்சுமி. சிறிது நேரம் கழித்துக் காப்பி வந்து சேர்ந்தது, டம்ளரை லட்சுமியிடமிருந்து வாங்கித் தனது வாய் அருகில் கொண்டு போய் டம்ளரில் வழிய வழிய இருந்த காப்பியை ஊதி ஊதிக் குடித்த பிறகு கொஞ்ச நிதானம் அடைந்த கணேசன். காலையில் தனது நிறுவனத்தில் நடந்தவற்றை மனைவி லட்சுமியிடம் சொல்ல. முதலில் பயந்த லட்சுமி பிறகு நிதானமாக யோசனை செய்தபடி இருந்தாள்.
கொஞ்ச நேரம் கழித்துப் பொறுமையாகத் தனது கனவனிடம், ’யோசித்துப் பார்த்ததில் நீங்கள் உங்கள் வேலையை வீ.ஆர்.எஸ் கொடுப்பதே சிறந்தது’ என்றாள். ’இதனால் நமது வீட்டு நிலைமை தற்போது இருக்கும் நிலையிலிருந்து சற்று மாறுபட்டுவிடும்’ என்று் கணேசனிடம் தெரியப்படுத்தினாள்.
”இன்னும் சில மாதங்களில் சங்கர் வேலைக்குப் போய்விடுவான். பிறகு என்ன அவன் தலையெடுக்க ஆரம்பித்துவிடுவான். நமக்கு என்ன கவலை?”. இந்தப் பதிலைக் கணேசன் எதிர் பார்க்கவில்லை லட்சுமியிடமிருந்து.
ஆனால் அவள் சொன்னதை அன்று இரவு முழுவதும் திரும்பத் திரும்ப யோசித்து எப்போது துக்கம் வந்தது என்று தெரியாமல் தூங்கி அடுத்த நாள் காலை விடியற்காலையில் தான் கணேசனுக்கு விழிப்பு வந்தது.
மேல் அதிகாரி கணேசனிடம் சொன்னமாதிரி வீட்டிலுள்ள அனைவரிடமும் கலந்து பேசிய பிறகு ஒரு தெளிவு வந்தது கணேசனுக்கு. அதிகாரியிடம் தன் விருப்பத்தைத் தெரியப்படுத்தினார். வீ.ஆர்.எஸ் பெறுவதாகச் சம்மதம் தெரிவித்தார் கணேசன். வீ.ஆர்.எஸ் பணத்தில் குடும்பத்தை ஒரு நிலைக்குக் கொண்டுவந்த பெருமிதம் இருந்தது கணேசனுக்கு.
***
மகன் சங்கர் பொறியில் பட்டப் படிப்பைப் படித்துவிட்டு. மென்பொருள் நிறுவனமான இன்ஃபோசிஸ் என்ற நிறுவனத்தில் பணிபுரிகிறான். நல்ல வருமானம், ஆடம்பரமான வாழ்க்கை எனச் சங்கர் தனது வாழ்கையைத் தொடங்கி ஓடிக்கொண்டிருந்தான்.
கணேசனின் மனைவி சில வருடங்களில் திடீரென்று நோய்வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையாயிருந்து இறந்தும் விடுகிறாள். கணேசனுடைய வாழ்கையில் ஒரு வெற்றிடம் உருவானது.
ஒரு மனிதன் முழுமையான ஆளாக மாறுகிறான் என்றால் அவனுக்கு மனைவி வந்த உடன் தான்.
தற்போது கணேசன் ஒற்றையாளாக உணர்கிறார். என்னதான் பெற்ற பிள்ளை சங்கர் இருந்தாலும் கட்டின மனைவி தன்னுடன் இல்லை என்ற நிதர்சனம் தினந்தினம் வாட்டி எடுத்தது.
சங்கர் தான் வேலை செய்யும் நிறுவனத்திலே ஒரு பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டான். திருமணத்திற்குப் பிறகு இருவரும் தனிக் குடித்தனம் சென்றுவிட்டனர்.
மேலும் கணேசன் தனிமையில் தள்ளப்பட்டார். தன் மனைவி இருக்கும் போது தான் குடித்த காப்பி டம்பளரைக் கூட எடுத்துக் கழுவாத கணேசன். இன்று தானாகப் பால் அடுப்பில் காய்த்துக் குடிப்பது, சின்னச் சின்ன வேலையைத் தானே செய்துகொள்வது என்று மாறிவிட்ட கணேசனால் சாப்பாடு மட்டும் மூன்று வேலையும் கடையிலிருந்து வாங்கிச் சாப்பிட்டு வந்தார். கூட இருந்த ஒரு நபர் இல்லையென்றால் அருவரிடம் எவ்வளவு மாற்றங்கள் தென்படுகின்றது என்பதற்குச் சிறந்த உதாரணம் கணேசனே.
சங்கர் பல முறை கூப்பிட்டும் கணேசன், சங்கரின் வீட்டிற்குப் போய்த் தங்குவதில்லை. சங்கர் இதைப்பற்றிக் கேட்டால். “உனக்கு எதுக்குக் கஷ்டம், நீ சந்தோசமாக உன் மனைவியுடன் இரு. நான் இங்கு நமது வீட்டில் நன்றாகத்தானே உள்ளேன்”. உனக்குப் பார்க்கவேண்டுமானால் நீயும் உன் மனைவியும் ஞாயற்றுக் கிழமை வந்து பார்த்துவிட்டுப் போக வேண்டியதுதானே”.. என்று சங்கரிடம் பதிலைக் கூறினார் கணேசன்.
***
அந்த வீட்டில் கணேசனுக்கு ஒரே துணை அந்தத் தொலைக்காட்சிதான். அதில் ஒளிபரப்பட்டும் நாடகங்களில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்துடனும் பேச ஆரம்பித்தார் கணேசன். காலையில் எழுந்தவுடன் தனது அன்றாட வேலையை முடித்தவுடன் தொலைக்காட்சி பெட்டியை ஆன் செய்வது வழக்கமாக வைத்திருந்தார்.
காலை சுமார் பதினோர் மணியளவில் தொலைக்காட்சியில் வரும் நாடகங்களைப் பார்க்க ஆரம்பித்தார் என்றால் சுமார் இரவு பத்து மணிவரை பார்த்துக்கொண்டே இருப்பார். இடையிடையில் தனது வேலைகளை முடித்துக்கொள்வார்.
ஒரு நாள் அவருக்கு இரத்த அழுத்தம் அதிகமானதால் வீட்டினுள் மயங்கி கீழே விழுந்தவர். அப்படியே அடுத்த நாள் மதியம் வரை அப்படியே அவரது வீட்டிலிருந்துவந்தார்.
சங்கர் தொலைப்பேசியில் அழைத்துப் பார்த்து, தொலைப்பேசியை எடுக்காததால் தனது அப்பாவைத் தேடி அவனது வீட்டிற்கு வந்து பார்த்த போது தான் தெரியவருகிறது அப்பாவின் நிலை.
அவர் கீழே விழுந்து கிடந்ததைப் பார்த்துப் பதறினான். அவரை மீட்டு எடுத்து மருத்துவமனையில் சேர்த்த பிறகு ஒரு வாரம் அவசர சிகிச்சைப் பிரிவில் கணேசன் அனுமதிக்கப்பட்டார்.
கணேசனின் நினைவு சற்றுத் தடுமாறிக் காணப்பட்டது அதாவது கடந்த காலத்தை நினைவில் வைத்துக் கொண்டு நிகழ்காலத்தை நினைவில் கொள்வதில் சிரமப்படுபவர்களுக்கு ஆன்டிரோகிரேட் மறதி நோய் (anterograde amnesia) என்பார்கள். அதாவது கடந்த கால நினைவுகளை மாத்திரம் மனதில் வைத்துக் கொண்டு நிகழ் காலத்தில் நடப்பதை மறந்துவிடுவது.
சங்கரின் மருத்துவ நண்பர் ஒருவரால் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து ஒரு வாரத்திற்குப் பிறகு ரெகுலர் வார்டுக்கு மாற்றப்பட்டார்.
மன நல மருத்துவரிடமும் ஆலோசனை பெற்ற பிறகு கணேசனை சங்கர் அவனது வீட்டிற்கு அழைத்து வந்தான். ஆனால் கணேசனால் அங்குச் சிறிது காலம் கூட இருக்க முடியவில்லை.
சங்கர் நல்லபடியாகத்தான் பார்த்துக்கொண்டான். இருந்தும் கணேசனின் வயது சாப்பிடும் திறன் இவை அனைத்தும் சற்று மங்கிக் காணப்பட்டதால் அவரது நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது.
***
மூப்பின் காரணமாக ப்ளாடர் கண்ட்ரோல் இழந்துவிட்டது. பெட் வெட்டிங் என்று சொல்லக் கூடிய படுக்கையிலேயே சிறுநீர் கழிக்கத் துவங்கிவிடுவார். யூரினரி இன்ஃபெக்ஷன் வந்து தொற்றிக்கொண்டது. இரவு நேரங்களில் வீடு முழுவதும் திடீர் திடீரென்று கணேசன் மூத்திரத்தை அடக்க முடையாத காரணத்தால் கணேசன் இருந்த இடத்திலே சிறுநீர் போய்விடுவார். ஏனென்றால் படுக்கையில் இருந்து உடனடியாக அவரால் எழுந்திருக்க முடியாத சூழல்.
சங்கர் வேறு வழியில்லாமல் தரையைச் சுத்தம் செய்து விட்டு அவரது துணிகளை வாஷிங் மிஷினில் போட்டுவிட்டு அலுவலகம் செல்லுவான். ஆனால் தினம் தினம் அவனால் இதைச் செய்ய இயலவில்லை அதனால் குழந்தைகள் அணிவார்களே அதே போல்! பெரியவர்களுக்குப் பிரத்தியேகமாக விற்கிறார்களே அடல்ட் டயப்பர் அதை வாங்கிப் பெரிய போராட்டத்திற்குப் பிறகு கணேசனைச் சமாதானம் செய்து அணிவித்தான் சங்கர்.
இதற்குப் பிறகு கணேனுடைய அன்றாட வேலையைக் கூடச் சங்கர்தான் செய்ய வேண்டிய நிலை. படுக்கையிலிருந்து எழுப்பி அமர வைப்பதிலிருந்து, தாங்கி பிடித்துத் தூக்கி நிறுத்திவைத்து குளியல் அறைக்குக் கூட்டிக்கொண்டு போய்க் குளிக்க வைப்பது, குளித்த பின் டயப்பர் மாற்றிவிடுவது மற்றும் கணேசனை பின் அவரது படுக்கைக்குக் கூட்டிவந்து அமர வைப்பது என்று எல்லா வேலைகளையும் அவன் செய்துவந்தான்.
சில சமயங்களில் கணேசனின் ஒத்துழைப்புக் கிடைக்காத பட்சத்தில் சங்கர் சிறிது கோபம் அடைவது வாஸ்தவமே. சில நாட்களில் இதும் நடப்பதுண்டு. வேலைக்குச் செல்லும் முன்னர்த் தனது அப்பாவுக்குச் செய்ய வேண்டிய வேலையைச் செய்துவிடலாம் என்று அவரிடம் வந்தால்.
கணேசன் அவனுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்து விடவே என்ன செய்வது என்று தெரியாமல் தனது ஆதங்கத்தைக் கணேசனிடமே கூறுவான் சங்கர். “எல்லா வேலைகளையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன். ஏன் உங்களிடமிருந்து சரியான ஒத்துழைப்பு இல்லை மனசு வலிக்குதுப்பா”.. என்பான். சில சமயங்களில் கடிந்து கொள்வான்.
***
கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா? என்பது போல் கோபத்தின் உச்சத்தில் தன் அப்பாவைக் கடிந்து கொண்ட சங்கருக்கு அன்பு பாசம் எல்லாம் இல்லை என்று சொல்ல முடியாது.
அவரிடமிருந்த அன்பின் வெளிப்பாடே கோபமாக மாற்றியது. கணேசன் ஒத்துழைக்கவில்லை என்ற போது புரிந்து புரியாத நிலையில் கணேசன் தன் பார்வையைச் சங்கரின் கண்களைப் பார்த்துக்கொண்டே இருப்பார். இந்த மாதிரி தருணங்களில் சங்கர் தன்மனதில் நினைப்பதுண்டு இருக்கும் வரை நல்லபடியாக இருந்துவிட்டுப் போக வேண்டும்.
யாருக்கும் இடையூறாக இருக்கக் கூடாது என்ற எண்ணம் அவனது மனதில் வந்து மறையும். ஆனால் என்றுமே தவிர்க முடியாத உண்மை என்னவென்றால் முதுமையே என்று அவன் அறிவான்.
000

பாலமுருகன்.லோ
பிறந்த இடம் கரூர் மாவட்டம். பள்ளிப் படிப்பு அனைத்தும் கரூரில் முடித்த பிறகு. வேலை நிமித்தமாகச் சென்னைக்கு 1997-ல் வந்தவன் பல நிறுவனங்களில் பணிபுரிந்து தற்போது ஒரு ஜெர்மானிய நிறுவனத்துக்கு ஆஃப்டர் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் பிரிவில் வேலை செய்துவருகிறேன். சிறு வயதிலிருந்தே எனக்கு எழுதும் ஆர்வம் இருந்தது. ஆனால் வளர வளர படிப்பு, வேலை திருமணம், பிள்ளைகள் என்று வந்த பிறகு எழுதும் ஆர்வம் சற்று மங்கிக் காணப்பட்டது. ஆனால் என்னாலும் மீண்டும் எழுத முடியும் என்று என்னை நான் முழுமையாகக் கண்டுகொண்ட வருடம் 2020 என்று கூறலாம். 2019-ல் இருந்து தீவிரமாகக் கதை மற்றும் கவிதைகளை வாசித்து ஒரு வாசகராக என்னை முழுமையாக மாற்றி இருக்கிறது இந்தக் கலை இலக்கிய உலகம் .