மாதம் ஒரு மலேசிய புத்தகம்-6

மா.சண்முகசிவாவின் சிறுகதைகள்

மலேசிய இலக்கியச் சூழலில் பல இளம் தலைமுறை எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாகவும் உந்துசக்தியாகவும் இருக்கும் அதே வேளையில் இலக்கிய வெளியில் சிறந்த ஆலோசகராகவும் எழுத்தாளர் மா.சண்முகசிவாவைச் சொல்லலாம். தொழில்முறை மருத்துவர். அவரை மருத்துவராக அறிந்தவர்களைவிடவும் இலக்கியவாதியாக அறிந்தவர்கள் அதிகம். உடல் வேதனைகளை விட மன வேதனைகளே அந்த எழுத்தாளரிடம் பலரையும் அழைத்துச்செல்கின்றன. அவரும் அதற்கு கட்டணம் வாங்குவதில்லை.

நான் அறிவிப்பாளராக இருந்த நிகழ்ச்சி ஒன்றில் அடுத்த பேச்சாளராக வரவேண்டிய மா.சண்முகசிவாவை “மருத்துவத்தில் நோய்க்கு மருந்திடுபராகவும் இலக்கியத்தில் மனதிற்கு மருந்திடுபவராக இருக்கும் மருத்துவர் எழுத்தாளர் மா.சண்முகசிவாவை மேடைக்கு அழைக்கின்றோம்” என்றேன். அரங்கில் எழுந்த கைத்தட்டல் அந்தக் கூற்றை ஆமோதித்தது. மேடையில் அவர் பேசிக்கொண்டிருந்த சமயம் நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒருவர் என்னை அழைத்து  “இதுவரைக்கும் அவரை யாரும் இப்படி சொல்லி கூப்பிட்டதில்லை…. ஆனா நீங்கதான் டாக்டரை ரொம்ப சரியாவே சொல்லியிருக்கீங்க…”என்றார். எனக்கும் அது மகிழ்ச்சிதான். ஏனேனில் என் உடல் சிக்கலைவிட மன சிக்கலுக்காக அவரிடம் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பேசியிருக்கிறேன்.

மா.சண்முகசிவா வைக்கும் இலக்கிய விமரசனங்கள் எப்போதும் தோழமையோடு இருக்கும் அதே சமயத்தில் வாழைப்பழத்தில் கொஞ்சம்கொஞ்சமாய் ஊசியை இறக்கிக்கொண்டிருக்கும். எதை பேசினாலும் ரசனையோடு பேசக்கூடியவரிடம் இலக்கியம் குறித்து பேச நாம் கேட்டுகொண்டே இருக்கலாம். அவரின் பெயருக்காகவே நான் பல நிகழ்ச்சிகளுக்கு சென்றும் இருக்கிறேன். ஒவ்வொருவரும் தாங்கள் எழுத வந்த காலக்கட்டத்தில் சில முன்மாதிரிகளை வைத்திருப்பார்கள். எனக்கும் நான் வைத்துக்கொண்ட முன்மாதிரிகளில் ஒருவராக மா.சண்முகசிவா இருக்கிறார்.

நான் இடைநிலைப்பள்ளி மாணவனாக இருந்த சமயத்தில் 2004-ம் ஆண்டில், நாங்கள் வசித்த கெடா மாநிலத்தின் சுங்கைப்பட்டாணி வட்டாரத்தில் நடந்த இலக்கிய நிகழ்ச்சிக்கு அவரும் வந்திருந்தார். அன்றைய தினத்தில் மலேசியாவின் சில முக்கியமான இலக்கியவாதிகளும் வந்திருந்தார்கள். அது நாடறிந்த கலைஞர் ரே.சண்முகத்தின் சிறுகதை வெளியீடு.  தொகுப்பில் உள்ள கதைகளைக் குறித்து மருத்துவர் பேசினார். அந்த பேச்சிலேயே கவர்ந்தார். நிகழ்ச்சி முடிந்ததும் தலைநகரில் இருந்து வந்தவர்கள் அவசரமாக கிளம்பிக்கொண்டிக்க முடிந்தவரை அவர்களிடம் கையொப்பங்களை வாங்கிவிட்டேன். முதன் சந்திப்பின் அந்தக் கையொப்பங்கள் இன்றும் என்னிடம் பத்திரமாக உள்ளன.

அதன் பின் அவர் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் மருத்துவம் குறித்தும் இலக்கியம் குறித்தும் பேசபவராகவும் நிகழ்ச்சி அறிவிப்பாளராகவும் இருந்தார். அவரின் நிகழ்ச்சிகளை தவறாது பார்க்க ஆரம்பித்தேன்.

அதன் பின் பிறந்தகத்தில் இருந்து கோலாலும்பூருக்கு வேலை நிமித்தம் வந்தேன். இங்கு பல நிகழ்ச்சிகளில் அவரை சந்திக்கவும் பழகவும் வாய்ப்பு ஏற்பட்டது. இப்போது என் பெயரைச் சொன்னால் நான் யாரென அவருக்கு தெரியும். குறிப்பாக  நானுமே எழுதுகிறவன் எனவும் தெரியும். அதில் எனக்குமே மகிழ்ச்சி. நாம் தேர்ந்தெடுத்த வழியில், நமக்கு வழிகாட்டியாக நினைக்கும் ஒருவரின் படைப்புகளை வாசித்து எழுதுவது கூடுதல் மகிழ்ச்சி.  வழிகாட்டிகளின் வழியை நாம் சரியாகத்தான் தொடர்கின்றோமா என நமக்கே நாம் வைத்துக் கொள்ளும் பரிட்சைதான் இது.

கடந்த 2018-ஆம் ஆண்டில் வல்லினம் பதிப்பகம் வெளியிட்ட மா.சண்முகசிவா சிறுகதைகள் தொகுப்பை இந்த மாத, மாதம் ஒரு மலேசிய புத்தகம் அங்கத்தில் பார்க்கவுள்ளோம். மொத்தம் எட்டு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது.

மா.சண்முகசிவாவின் கதைகளில் அவரின் எழுத்து நடை பிரசித்தி பெற்றவை. வாசிப்பில் தோய்வு ஏற்படுத்தாதவை. அவரின் பகடியும் அவ்வாறே. ஒரு சிறுகதையை எங்கே தொடங்க வேண்டும் என்பதை இவரின் கதைகளில் இருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். முதல் வரியிலேயே கதைக்குள் நம்மை இழுத்துக்கொள்வார். அதேபோல கதையின் முடிவிற்கு மிக அருகிலேயே கதையைத் தொடங்கவும் செய்வார்.

‘அகிலாண்டேஸ்வரிக்கு இன்றைக்கு நெஞ்சில் படபடப்பு கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது’ என்ற முதல் வரி ‘புலிச்சிலந்தி சிறுகதைக்கானது.

‘இரு குழந்தைகள் காணாமல் போயுள்ள இத்தனை இக்கட்டான நிலையில் துர்க்காபாய் மௌனமாக வருவது எரிச்சலாக இருந்தது’ என்ற முதல் வரி ‘துர்க்கா பாய்’ சிறுகதைக்கானது.

“கனவ சொல்லவா சார்”, “ம்.. சொல்லுமா” என்ற முதல் வரி ‘கனவு சிறுகதைக்கானது.

‘அவள் கோவமாக இருந்தாள். “இதுவரைக்கும் மனுஷர்கள உங்களால அனுமானிக்க முடிஞ்சிருக்கா? இப்படி ஐயாயிரம் வெள்ளியைத் தூக்கி முன்பின் தெரியாத ஒரு மனுஷர்கிட்ட யாரும் கொடுப்பாங்களா? ஆறு மாசம் ஆச்சி.” என்ற முதல் பத்தி ‘ஒரு கூத்தனின் வருகை’ சிறுகதைக்கானது.

“உனக்குன்னே வந்து மாட்டுதுபாரு பெரச்சன, எப்படித்தான் சமாளிக்கப் போறயோ” என்று பரிவோடு கேட்டுவிட்டு முனியாண்டியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் பாலா. என்ற முதல் பத்தி ‘மெர்சிடிஸ் பென்சும் முண்டக்கண்ணியம்மனும்’ சிறுகதைக்கானது.

“நம்ம கோயில இடிச்சிட்டாங்க…” என்ற முதல் வரி ‘சாமிக்குத்தம்’ சிறுகதைக்கானது

‘பொட்டுப்பொட்டாகப் பனித்துளிபோல் நெற்றியில் வியர்வைத் துளிகள் பூத்திருந்தன’ என்ற முதல் வரி ‘எல்லாமும் சரிதான்’ சிறுகதைக்கானது.

“ச்சே… பச்ச பிள்ள மூஞ்சில இப்படி அடிக்குதே வெயில்…” என்ற முதல் வரி ‘வைரத்தூசு’ சிறுகதைக்கானது

இச்சிறுகதைகளின் முதல் வரியில் இருந்தும் முதல் பத்தியில் இருந்தும் நாம் அச்சிறுகதைக்குள் நுழைந்துவிடுகிறோம். கதையின் முடிவிற்கு அருகிலேயே இக்கதைகள் தொடங்கப்பட்டதாகவும்   இருக்கின்றன.  எங்கேங்கோ கதையைத் தொடங்கி அதை எங்கெங்கோ வைத்து முடிக்கும் பலவீனங்களை ! (இன்றைய எழுத்துச்சூழலில் அது சில சமயங்களில் பலமாகவும் சிலருக்கு இருக்கிறது. ) அவர் செய்வதில்லை. அவரின் சிறுகதைகளை அவர் கட்டமைக்கும் விதமும் நாம் கவனிக்கும்படி இருக்கும். தேவையில்லாத விவரணைகளோ சம்பந்தம் இல்லாத வாக்கியங்களோ தேவையற்ற கதாப்பாத்திரங்களோ அவரிடம் இருப்பதில்லை. சிறிய கதாப்பாத்திரம் என்றாலும், அது ஒருமுறைதான் சிறுகதையில் வருவதாக இருந்தாலும் அதற்கும் தன் கதையில் முக்கியத்துவம் வைத்திருப்பார்.

தன் சிறுகதைகளில் அரசியல் பார்வையையும் அவர் வைக்கத் தவறவில்லை. அதற்கு சிறந்த உதாரணமாக ‘சாமி குத்தம்’ என்ற சிறுகதையைச் சொல்லலாம். (உள்ளடக்கத்தில் சாமி குத்தம் என்றும் சிறுகதை தலைப்பில் சாமிக்குத்தம் என்றும் தலைப்பு இருக்கிறது.)

எங்குமே சிறுபான்மை மக்களின் மதத்தையும் ஜாதியையும் வைத்து அரசியல் செய்வது இயல்பாகிவிட்டது.  அல்லது சிறுபான்மை மக்களின் மதத்தையும் ஜாதியையும் வைத்தே அரசியல் செய்து அரசங்கத்தை அமைத்துக்கொள்ள முடிகின்றது என்றும் சொல்லலாம். இவர்களின் உணர்வுகளைப் பகடைக்காயாய் வைத்து பரமபதம் ஆடும் அரசியல்வதிகளை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றோம். ஓர் இடத்தில் பெரும்பான்மையாய் இருந்து அடிக்கும் மதமும் ஜாதியுமே இன்னொரு இடத்தில் சிறுபான்மையாக இருந்து அடி வாங்கி கொண்டிருந்தும் யாரும் எதையும் பொருட்படுத்துவதில்லை.

அரசியல் சூழலை தன் பகடி எழுத்தால் புனைவாக்கியிருக்கிறார் எழுத்தாளர். யாரோ ஒருவர் முனியாண்டி கோயிலை இடித்துவிட்டதாக தொடங்கும் இச்சிறுகதையில் அதன் பின் நடக்கும் அரசியலை கட்டம்கட்டமாக படம் பிடித்து காட்டுகின்றார். வெறுமனே சிரித்துவிட்டு கடந்துவிட முடியாதபடிக்கு கதையை அமைத்திருக்கிறார். ஒரு கோயில் இடிக்கப்பட்ட செய்தி மட்டுமே இச்சமூகத்திற்கு போதுமானதாக இருக்கிறது. ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்குமே இது பொருந்தும். எந்தக் கோவில், எங்கே இருக்கிறது, யார் இடித்தார்கள், அது விபத்தா அல்லது சூழ்ச்சியா என்ற அறிவார்ந்த  எந்த தகவலும் யாருக்கும் தேவையில்லை. ஒரு நிருபரின் பரபரப்பான செய்தி தேவைக்கு தொடங்கி பத்திரிகையின் முதற்பக்க செய்தியில் இருந்து அரசியல் மேடை வரை வெறும் உணர்ச்சிவசப்பட்டே எல்லோரும் அவரவர் காரியத்தை கவனித்து கொள்கிறார்கள்.

வெறுமனே அந்தச் சிக்கலை மட்டுமே எழுத்தாளார் புனைவாக்கவில்லை. அங்குதான் அவர் தனித்து நிற்பதை வாசகனாய் நாம் அறிய முடிகிறது. இடிபட்ட கோவிலின் நிலத்தை கோவிலுக்கே கொடுப்பதற்கு மாநில அரசு முடிவெடுக்கின்றது. அங்கிருந்துதான் கதையின் இன்னொரு பரிணாமத்தை எழுத்தாளர் காட்டுகின்றார். எட்டு பக்கங்கள் கொண்ட சிறுகதையில் அரைபக்கவே வந்தாலும் அதில் அவர் சொல்லியிருக்கும் செய்தி இன்றளவும் விவாதிக்க ஏற்றது. கோவிலுக்கு நிலம் தரப்படுகிறது என முடிவானதும், புதிதாக நிர்வாக கமிட்டி அமைக்கப்படுகின்றது. ஏற்கனவே இருந்த பூசாரி சொற்ப சம்பளத்திற்காக அதே கோவிலில் துப்புரவு தொழிலாளியாக மாறிவிட்டார். கும்பகோணத்திலிருந்து சிவாச்சாரியார்கள் வரவகைக்கப்படுகின்றார்கள். இதுவரை முனியாண்டி கோயிலாக இருந்தது இப்போது  முனீஸ்வரர் கோயிலாகி பின்னர் ஈஸ்வர கோவிலாக மாறுகிறது. மூல விக்ரஹம் ஈஸ்வர மூர்த்தியாகிவிட்டபடியால்  இதற்கு முன் அங்கிருந்த முனியாண்டி சாமி , ஈஸ்வர மூர்த்திக்கு காவல் தெய்வமாக மாற்றப்பட்டு வாசல் ஓரத்தில் இடம் ஒதுக்கப்பட்டு அதன் உச்சமாக இனி அவருக்கும் சைவ உணவே என முடிவாகிறது.

இதோடு கதையை எழுத்தாளர் முடிக்கவில்லை. பழைய பூசாரியின் (புதிய துப்புரவு தொழிலாளி) கனவில் முனியாண்டி சாமி வந்து தன் மனபாரத்தைச் சொல்கிறார்.

அங்கு குப்பை அள்ள வந்த லாரி தவறுதலாக கோவில் சுவற்றில் மோதிவிட்டதுதான் சுவர் இடிந்தததற்கு  காரணம் என்று கூறிய முனியாண்டி சாமி, அசைவ சாப்பாடு கிடைக்காத பசியைச் சொல்லி ஆற்று கரையில் இருக்கும் ஆலமரத்தில் தனக்கே தனக்கென ஒரு கோவிலைக் கட்டி கெடா வெட்டி படையல் போடச் சொல்கிறது.

கனவில் இருந்து பதைபதைக்க எழுந்தவர் தன் மனைவியிடம் கனவில் வந்த முனியாண்டி சாமி கேட்டுகொண்டதைச் சொல்ல அதற்கு மனைவி சொல்லும் பதிலை வாசித்து நம்மால் சிரிக்காமல் இருக்க முடியாது. சிரித்துவிட்ட அடுத்த நொடியில் இதற்கா சிரித்தோம் இதைத்தானே இங்கு எதிர்கொண்டிருக்கின்றோம் என நினைக்க தொடங்கிவிடுவோம்.

பலரிடம் நான் பேசும் போது குறிப்பாக கதைகள் எழுத ஆர்வமாக இருப்பதாக சொல்கிறவர்களும் சில கதைகளை எழுதியவர்களும்; தங்களிடம் எழுத கதைகள் இல்லை என்பதாகக் கூறி சலித்துக்கொள்வார்கள். அல்லது இப்போதெல்லாம் கதை கிடைக்கவே மாட்டேங்குது என புலம்பவும் செய்வார்கள். அவர்களே அடுத்த கட்டத்திற்கு செல்வதாய் நினைத்து “ஒருவேளை இதுதான் ரைட்டட் ப்ளாக்கோ?” என கேட்டதும் உண்டு. “இருக்கலாம் ஆனால் அது ரைட்டர்களுக்குத்தானே வரனும்.. உங்களுக்கு ஏன் வருது..!” என கேட்டுவிடுகிறேன்.

நாம் எங்கு இருக்கிறோமோ நாம் என்னவாக இருக்கிறோமோ அங்கிருந்தான் நமக்கு கதைகள் கிடைக்கின்றன. சந்திரனின் அமர்ந்து வடை சுடும் பாட்டியைப் பற்றி கதை எழுததான் சிரமம், நம் வீட்டு பக்கத்தில் தினமும் பலகாரம் விற்கும் பாட்டியை எழுதலாம். தினமும் பார்க்கிறோம். எதாவது பேச்சு கொடுக்கலாம். அவரது அனுபவத்தை கேட்கலாம். உரையாடலை நிகழ்த்தலாம் அங்கிருந்து நமக்கான ஒரு கதைக்கருவை கண்டுபிடிக்கலாம்.  நம்மைச்சுற்றி நடக்கும் சம்பவங்களில் இருந்து நாம் கதைகளை எடுக்கலாம். அதற்கு நாமே ஒரு கதாப்பாத்திரமாக மாறவும் செய்யலாம். நடந்த சம்பவத்தை எழுதுவதற்கும் புனைவை எழுதுவதற்குமான அடிப்படை வித்தியாசங்களை தெரிந்து கொண்டால் போதுமானது. இதுதான் அடிப்படை என நண்பர்களுடன் பேசியிருக்கிறேன்.

மா.சண்முகசிவா அவரது சிறுகதைகளில் மருத்துவராகவே வருகின்றேன். வெறுமனே தொழில்முறை  மருத்துவரின் கதையாக அது இல்லாமல், இயல்பாக அவரை நாம் எப்படி  தெரிந்து கொண்டோமோ அப்படியே அவரும் அவரின் கதைகளின் ஒரு கதாப்பாத்திரமாக வருகின்றார். அவர் மட்டுமல்ல அவரது நண்பர்களுமே வருகின்றார்கள். ‘துர்க்கா பாய்’ என்னும் சிறுகதை அதற்கு உதாரணம். அதில் அவர் மருத்துவராகவும் சமூக சேவையாளராகவும் வருகின்றார்.

கதையின் தொடக்கத்திலேயே இரு குழந்தைகள் காணாமல் போய்விட்டதாக வருகிறது. அந்த சூழலிலும் கூட எதுவும் பேசாமல் வரும் துர்க்கா பாய் மீது மருத்துவருக்கு எரிச்சல் வருகிறது.

  பன்னிரெண்டு வயது சிறுமி கர்ப்பமாகின்றாள். அவளுக்கு குழந்தை பிறக்கிறது. அவளை ஆதரவற்றோர் தாய் சேய் காப்பகத்தில் சேர்க்கிறார்கள். அங்கு அந்தச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு ஏற்படுகிறது. மருத்துவரும் துர்க்காபாயும் அந்தச் சிறுமியையும் அவளது குழந்தையையும் பார்க்க செல்கிறார்கள். அவர்களை அங்கு காணவில்லை. யாருக்கும் என்ன நடந்தது என தெளிவாக புரியவில்லை. அதன் பின்னணியில் துர்க்காபாய் எப்படி சம்பத்தப்படுகின்றார் என்பதுதான் கதை.  இச்சிறுகதையை வாசிக்க வாசிக்க அதன் முடிவை தவிர்த்து உண்மையான சம்பவத்தை வாசித்துக்கொண்டிருக்கின்றோம் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கும். இந்தக் சிறுகதையில் கூட நடந்தவிட்ட சம்பவத்தை (சிறுமியின் சிக்கலை) தனக்கு சாதகமாக்கி அரசியல் செய்யும்  அரசியல்வாதிகள் வந்து நம்மிடம் வாங்கி கட்டிகொண்டு போவார்கள்.

மனிதர்கள் அவ்வளவு மோசமானவர்கள் அல்ல என்பதில் உறுதியாக இருப்பவர் மா.சண்முகசிவா என நான் புரிந்து கொண்டிருக்கிறேன். எவ்வளவு மோசமான மனிதரைப் பற்றி அவரிடம் சொன்னாலும்  சொல்லி அழுதாலும் நமக்கு ஆறுதல் சொல்லும் அதே சமயத்தில் அந்த நபரிடம் இருக்கும் குறைந்த பட்ச நல்லது ஒன்றை அவர் நமக்கு சொல்லாமல் இருக்க மாட்டார். இது அவரது பல கதைகளின் வெளிப்படவும் செய்கிறது. அது திட்டமிட்டதா அல்லது அதுவாக அமைகிறதா என்பதை அவரின் கதைகளை வாசித்தாலும் திட்டவட்டமாக நம்மால் சொல்லிவிட முடியாது. உண்மைக்கு மிக நெருக்கமான கதைகளாகவே அவை அமைந்துவிடுவதுதான் காரணம்.

அவர் நம்பும் மானுடத்தை பேசும் கதைகள் மேலும் இரண்டு இந்தத் தொகுப்பில் உள்ளன. ‘ஒரு கூத்தனின் வருகை’ மற்றும் ‘எல்லாமும் சரிதான்’.

தமிழகத்தில் இருந்து மருத்துவம் செய்துகொள்ள மலேசியா வந்திருக்கும் முத்துசாமி தம்பிரானின் பேச்சில் ஏற்பட்ட ஈர்ப்பால்; சில நாட்களே பழகியிருந்தாலும் அவருக்கு ஐயாயிரம் வெள்ளியைக் கடனாக கொடுக்கின்றார். தலைப்பிற்கு ஏற்றார் போல கூத்துகள் குறித்து முத்துசாமி தம்பிரான் பேசும்போதெல்லாம் நம் கண்முன்னே அந்தக் கலைஞர்களும் அவர்கள் கலையை எப்படி பார்த்தார்கள் என்பதும் புலப்படுகிறது. சிலரை பார்த்ததும் நம்மையறியாமல் அவர்கள்மீது ஓர் ஈர்ப்பு வந்துவிடும். நாயகனுக்கும் அவ்வாறே ஏற்படுகின்றது. எழுத்தாளரே இதில் நாயகனாக (மருத்துவராக) வருகின்றார்.

பணம் பெற்றுக்கொண்ட முத்துசாமி தம்பிரான் சில நாட்களிலேயே சொல்லாமல் கொள்ளாமல் தமிழகம் சென்றுவிடுகின்றார். இப்படி பணத்தைக் கொடுத்து ஏமாந்துவிட்டதால் மனைவி திட்டவும் செய்கிறார். கொஞ்ச நாளில் மருத்துவருக்கு  தமிழகத்தில் இருந்து கடிதம் ஒன்று வருகின்றது. முத்துசாமி தம்பிராந்தான் எழுதியிருக்கிறார். என்ன எழுதியிருக்கிறார் என்பது மருத்துவரின் நம்பிக்கையைக் காப்பாற்றியதா இல்லையா என்பதுதான் கதை.

நமக்கு ஏன் இப்படியொரு துன்பம் வருகிறது என நாம் வருந்தும்போது; முன்னமே நாம் செய்துவிட்ட செயலின் விளைவோ அல்லது அதற்கான எதிர்வினையோ என யோசிக்க ஆரம்பித்துவிட்டால் இன்றுமுதல் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நாம் முழு கவனம் செலுத்தி பொறுப்பேற்றுக்கொள்வோம். அப்படியொரு கருத்தை சுமந்திருக்கும் சிறுகதைதான் ‘எல்லாமும் சரிதான்’. இதிலும் நாயகன் மருத்துவராக வருகிறார். தன்னிடம் சிகிச்சிக்கை வந்திருக்கும் குழந்தையின் தந்தையான ‘டிரேகன் ராஜா’ என்னும் ரௌடியின் உதவி மருத்துவருக்கு தேவை. தன மனைவி மீது சந்தேகப்படும் மருத்துவர் டிரேகன் ராஜாவை வேவு பார்க்க அனுப்புகின்றார். டிரேகன் ராஜாவும் தேவையான தகவல்களைத் திரட்டி மருத்துவரைச் சந்திக்கின்றார். இருவருமே குடிக்கிறார்கள். மருத்துவரின் மனைவி மீது எந்த தவறும் இல்லை. மருத்துவர்தான் சில ஆண்டுகளுக்கு முன் பிலிப்பினோ நர்ஸுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். அதனால்தான் மனைவி அவரைவிட்டு பிரிந்திருக்கிறார்.

மருத்துவரும் டிரேகன் ராஜாவும் குடித்திருப்பதால் மனம்விட்டு பேசுகிறார்கள். மீண்டும் தன் மனைவியிடமே மருத்துவரை சேர்ந்து வாழ சொல்கிறார் டிரேகன் ராஜா. அதோடில்லாமல் அவர் தனது கதையை இதுவரை யாரிடமும் சொல்லாமல் தன மனதில் பூட்டி வைத்திருந்த இரகசியத்தைச் சொல்கிறார். எதை, யார் சொல்கிறார்கள் என்பதற்கும், யார், எதை சொல்கிறார்கள் என்பதற்கும் வித்தியாசம் இருக்கவே செய்கின்றன. மருத்துவருக்கு அவரின் தவறை திருத்திக்கச் சொல்லும் டிரேகன் ராஜா தன் கதை சொல்வது இச்சிறுகதையின் உச்சம்.

ஒருமுறை சண்டையில் அடிபட்டு குழந்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை இழக்கிறார் டிரேகன் ராஜா. அதனை மறைத்து லில்லியை திருமணம் செய்து கொள்கிறார். அவர்களுக்கு  பத்து ஆண்டுகள் கழித்து குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தையை அவர் மனதார ஏற்றுக்கொள்கிறார். வேறேந்த விசாரணையும் அவரிடம் இல்லை. அது ஒரு பெண்ணை தான் உண்மையை சொல்லாமல் ஏமாற்றியதற்கான தண்டனையாகவோ பிராயச்சித்திமாகவோ கூட இருக்கலாம் என ஏற்றுக்கொண்டிருக்கலாம்.

இதை வாசித்து முடிக்கையில் மருத்துவருடன் பழைய பிலிப்பொனோ நர்ஸும் டிரேகன் ராஜாவின் மனைவியான லில்லியும் ஒருவர்தானா என தேடிப்பார்க்கலானேன். நீங்களுமே இக்கதை முடிவில் தேடுவீர்கள்.

சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒருவருக்கும் ரௌடியான இன்னொருவருக்கும் இடையே இருப்பது நகைமுரண் அல்லாமல் வேறு என்ன?

தொகுப்பில் இருக்கும் ‘வைரத்தூசு’ என்னும் சிறுகதை எனக்கு சுஜாதாவின் ‘நகரம்’ கதையை நினைக்கவைத்தது. இரண்டிற்குமே கதைக்களம் ஏறக்குறைய ஒன்றுதான். இரண்டுமே மருத்துவமனைக்கு வரும் சாமானியர்களின் கதை. ‘நகரம்’ சிறுகதை நமக்கு பேரதிர்ச்சியைக் கொடுக்கும். ‘வைரத்தூசு’ சிறுகதையில் இனி தன் பிள்ளைக்காக வாழத்தான் வேண்டும் என்கிற நம்பிக்கையை நாயகிக்கும் (நமக்கும்) கொடுக்கும்.

எதன் மீது நமக்கு பயம் இருக்கின்றதோ அது நம்மை அடிமைப்படுத்துகிறது.  அது அதிகாரமாக இருக்கலாம், ஆண்டவனாகவும் இருக்கலாம். ‘மெர்சிடிஸ் பென்சும் முண்டக்கண்ணியம்மனும்’ என்னும் சிறுகதையில் இரண்டு வகையான பயத்தை எழுத்தாளர் சொல்லியிருப்பார். தன் முதலாளி மீது பயம் கொள்ளும் தொழிலாளி. கடவுள் மீது பயம் கொள்ளும் முதலாளி. இரண்டு தரப்புகளையும் ஒரு புள்ளியில் இச்சிறுகதையில் எழுத்தாளர் இணைத்திருப்பார். தனக்கே உரிய அங்கத பாணியில் இந்தக் கதையையும் எழுதியிருப்பார்.

முனியாண்டி தனது தொழிற்சாலை வாகனத்தை தனிப்பட்ட முறையில்    பயன்படுத்தியது மேனேஜர் ரட்னராஜாவிற்கு தெரிகிறது. முனியாண்டிக்கு வேலை போகும் அபாயமும்     பயமும் வருகிறது. கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ள மேனேஜரிடம் எப்படியாவது பேசி தப்பிக்க வேண்டும் என நினைக்கிறார். அதற்கு ஏற்றவாறு கோவில் குங்குமத்துடன் சந்திக்க வீட்டிற்கே செல்கிறார். அதற்கு முன் தான் யாரோ எலுமிச்சையை மந்திரித்து மேனேஜர் அறையில் வைத்து அது அவரின் காலில் பட்டு காயமாகியிருக்கும். அவரும் அந்த பீதியிலேயே இருக்க முனியாண்டி கொண்டு வந்த குங்குமம் தவறுதலாக மேனேஜரின் காலில் பட்டுவிடுகிறது. காயம்பட்ட அதே காலில் என்பதுதான் விடயம். குங்குமம் குறித்தும் கோவில் குறித்தும் அங்குள்ள பூசாரிக்கு அருள் வருவது குறித்தும் பேச்சு வளர்கிறது. முனியாண்டியே மேனேஜரின் நிலமை புரிந்து அவரின் மெர்சிடிஸ்பென்சில் ஓட்டுனராகா அமர்ந்து முண்டக்கன்னியம்மன் கோவிலுக்கு செல்கிறார்கள்.

கோவிலில் நடப்பதோ வேறு, வழக்கமாக அருள் வரவேண்டியவருக்கு அருள் வராமல் முனியாண்டிக்கு அருள் வந்துவிடுகிறது. மேனேஜர் முனியாண்டி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி தன் மனக்குறைகளைச் சொல்கிறார். எல்லாம் முடிந்த பின் அருள் ஆடிய அசதியில் முனியாண்டி பின் இருக்கையில் தூங்கி கொண்டிருக்க, மேனேஜர் ஓட்டுனராக அமர்ந்து மெர்சிடிஸ்பென்சை ஓட்டிச் செல்கிறார்.

கோவிலுக்கு அழைத்துச் சென்ற சமயம் மேனஜருக்கு தெரியாமல், அருள் வரவேண்டிய பூசாரிக்கும் முனியாண்டிக்கும் இருந்த உடல் மொழியை நாம் கவனித்திருந்தால் அது இந்த ஒட்டுமொத்த கதையையும் மாற்றிவிடக்கூடியது. அப்பாவியாக இருந்த முனியாண்டிதான் தொடக்கத்தில்  இருந்து நடந்த எல்லாவற்றுக்கும் காரணம் எனவும் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

இந்தத் தொகுப்பில் இன்னும் இரண்டு சிறுகதைகள் இருக்கின்றன, அவை ‘புலிச்சிலந்தி’ மற்றும் ‘கனவு’ இரண்டுமே சிறுமிகளை மையப்படுத்திய சிறுகதைகள். அதிலும் ‘புலிச்சிலந்தி’ சிறுகதையை ஏன் படித்தேன் என நினைக்கும்படி ஆகிவிட்டது. அக்கதையின் முடிவை கொஞ்சமும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை. தன்னை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்து அழிக்கும் கைகளுக்கு குழந்தையொன்று தானே தவழ்ந்து தவழ்ந்து போவதாய் மனம் கற்பனைச் செய்து சில நாட்களாக தூக்கத்தையும் கெடுத்துவிட்டது.

‘கனவு’ சிறுகதையில் போதைமருந்து  வைத்திருந்ததற்கு அம்மா கைதாகின்றார்.  அவருடன் அன்றுதான் அம்மாவைப் பார்க்க சென்ற அவரது மகளுமே கைதாகின்றாள்.  மகளை மட்டுமே இப்போதைக்கு காப்பாற்றி வெளியில் கொண்டு வர முடிந்தது. அந்த மகளிடம் மருத்துவர் நடத்தும் உரையாடலில் அவள்; அவளுக்கு வரும் கனவுகளைச் சொல்கிறாள். அது வெறும் கனவாக இருக்கவில்லை.  ஒவ்வொரு கனவும் வாசிக்க வாசிக்க அந்த மகள் மீது பாவப்பட வைக்கிறது. அவளது அம்மாவிற்கும் ஒரு கதை இருக்கிறது. வழக்கம் போல சிதைந்து போன குடும்பங்கள் எதிர்நோக்கும் சிக்கல்தான் என்றாலும் இன்றும்கூட அந்தச் சிக்கல்களை   நாம் கண்கூடாகப் பார்த்து கொண்டுதான் இருக்கின்றோம். மருத்துவர் மகளின் பாட்டியைச் சந்தித்து மேலும் பல விபரங்களைப் பெற்றுக்கொள்கிறார். அவளது அப்பா சிறைக்கு சென்றது, அம்மா மறுமணம் செய்து கொண்டு கொடுமைக்கு ஆளாவது, வேறு வழியில்லாமல் தவறான தொழில் செய்வது என எல்லாவற்றையும் மருத்துவர் தெரிந்து கொள்கிறார். பாட்டி எவ்வளவு சொல்லியும் கேட்காமல்தான் அம்மா இருக்கும் இடத்திற்கு மகள் சென்றிருக்கிறாள் என மருத்துவருக்கு தெரியவருகிறது. அதோடு அந்த நேரத்தில் அம்மா அந்த இடத்தில் போதைப்பொருட்களோடு இருப்பார் என்கிற தகவலை யாரோ ஒருவர் காவல் துறையினருக்கு கொடுத்திருப்பதாகவும் சொல்கிறார்.

மகள்தான் அம்மாவைக் காப்பாற்ற அந்த தகவலை கொடுத்திருக்கக்கூடும் என்கிற இடத்தையும்  எழுத்தாளர் வைத்திருக்கின்றார். அம்மாவைக் காப்பாற்ற அவளுக்கும் வேறு வழிகள் இருக்கவில்லை.       

‘புலிச்சிலந்தி’ இச்சிறுகதைத் தொகுப்பின் முதல் சிறுகதை. அதை வாசித்த பின் உடனே அடுத்த கதையை வாசிக்க முடியாமல் போனது. மனதிற்கு அந்தச் சிறுகதையின் கடைசி காட்சி திரும்ப திரும்ப வந்துகொண்டே இருந்தது. நான் சிறுவனாக இருந்த போது எழுத்தாளர் சிவசங்கரியின் ‘குட்டி’ சிறுகதையை திரைப்படமாக பார்த்தேன். அதன் கடைசி காட்சியை இன்றளவு என்னால் கலங்காமல் பார்க்க முடியாது. இனி நிம்மதியாக வாழலாம் என அந்த சிறுமி போகிற இடம் என்ன இடம் அங்கு அவளுக்கு என்னென்ன ஆகப்போகிறது என தெரிந்து கொண்ட பின் எப்படி அதனை சாதாரணமாக நம்மால் கடந்து போக முடியும்.

அப்படி கலங்கடிக்கும் முடிவைத்தான் இந்தச் சிறுகதையில் எழுத்த்தாளர் கொடுத்திருக்கின்றார். மேனேஜர், அம்மா, மாமா, அத்தை, சிறுமி இப்படி குறைந்த கதாப்பாத்திரங்களைக் கொண்டே இச்சிறுகதையை எழுதியிருக்கிறார். பெற்றோர் தன் சொந்த சுகத்திற்கும் சுயநலத்திற்கு  செய்யக்கூடிய செயல்களின் விளைவு பிள்ளைகளை எப்படியும் பாதித்துவிடுகிறது என்கிற அடிப்படை பயத்தை இச்சிறுகதை நமக்கு கொடுக்கவும் செய்கிறது. எழுத்தாளன் என்பவன் வாசிக்கின்றவர்களுக்கு வாழ்க்கை மீதான நம்பிக்கையை ஒளியை கொடுக்கவேண்டும்  என சொல்லுவார்கள். எனக்கே அதில் உடன்பாடு உண்டு. ஆனால் அவநம்பிக்கையை இருள் வெளியையும் எழுத்தாளன் பகிரங்கமாக போட்டுடைக்கத்தான் வேண்டும் என்பதை இச்சிறுகதை கூறுகிறது. நீங்கள் இந்தக் கதையை தவறாது வாசிக்கத்தான் வேண்டும்.

நிறைவாக;

எழுத்தாளர் மா.சண்முகசிவாவின் சிறுகதைகளில் அவர் கையாளும் நடையும் மொழியும் பகடியும் சமுக அவலங்களும் நம்மை மேலும் மேலும் அவரை வாசிக்க வைக்கும். அவரிடம் நகைச்சுவையும் இருக்கும், அபத்த நகைச்சுவையும் இருக்கும். தன் தொழில் சார்ந்து கதைகளை மட்டுமல்ல மனிதர்கள் மீதான நம்பிக்கையைக் கொடுக்கும் கதைகளையுமே அவர் உண்மைக்கு மிக அருகில் அந்த வாழ்க்கையை மீள எழுதுகிறார். கதைகளின் முடிவுகளையும் நானே  முழுதுமாக சொல்லிவிடுவேன் என்கிற பாணியில் சில கதைகளை அவர் முடித்தும்விடுகிறார். கதைகள் முடிந்தும் கூட ஏனோ தொடர்வதாக நமக்கு தோன்றினாலும் அது ஒரு குறையாக நமக்கு தெரியவில்லை.

மலேசிய இலக்கியச் சூழலில் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய எழுத்தாளர்களில் மா.சண்முகசிவாவும் ஒருவர் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கவில்லை. இப்பொழுது அவர் எழுதுவதில்லை  ஆன்மீககத்தில் ஈடுபாடு காட்டுகின்றார் என அறிகின்றேன். அவர் எங்கிருக்கிறாரோ அங்கிருந்தெல்லாம் கதைகளை கண்டறியக்கூடியவர்தான் அவர். ஆகவே அவர் மீண்டும் கதைகளை எழுதுவார்  என பெரிய எதிர்ப்பார்ப்புடன் இந்தக் கட்டுரையை முடிக்கின்றேன். மீண்டும் அடுத்த மாத ‘மாதம் ஒரு மலேசிய புத்தகத்தில்’ நாம் சந்திக்கலாம்.

000

எழுத்தாளர் தயாஜி குறிப்புகள்

எழுத்தாளர் தயாஜி. மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். முன்னாள் அரசாங்க வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர்/அறிவிப்பாளர். தனது வானொலி  அனுபவத்தை முதன்படுத்தி ‘ஒளிபுகா இடங்களில் ஒலி’ என்னும் பத்திகள் தொகுப்பையும், ‘அந்தக் கண்கள் விற்பனைக்கல்ல’, ‘குறுங்கதை எழுதுவதை எப்படி?’ என்ற இரு குறுங்கதை தொகுப்புகளையும், ‘பொம்மி’ என்ற கவிதை தொகுப்பினையும் இதுவரையில் வெளியிட்டுள்ளார். குறுங்கதைகள், சிறுகதைகள், வானொலி நாடகங்கள், வானொலி சிறுகதைகள், தொடர்கதைகள், என தொடர்ந்து எழுதிவருவதோடு மலேசிய ஊடக/சினிமா துறையிலும் அவ்வப்போது பணியாற்றுகிறார்.  முழுநேர எழுத்தாளரான இவர் ‘புத்தகச்சிறகுகள் புத்தகக்கடை’ என்னும் இணைய புத்தக அங்காடியையும்  ‘வெள்ளைரோஜா பதிப்பகம்’ என்னும் பதிப்பகத்தையும் நடத்திவருகிறார்.              ‘சிறகுகளின் கதை நேரம்’ சிறுகதை கலந்துரையாடல் என்னும் இணையம் வழி இலக்கிய கலந்துரையாடலை ஒவ்வொரு வாரமும் நடத்திவருகின்றார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *