அவள் வாசிக்கத் தொடங்கிய புத்தகத்தின் மேல் அட்டையில் சில வரிகள் இருந்தன.
சாதாரண வாசகர் கடந்து செல்லும் வரிகள்.
“நீ என்னை வாசித்துக் கொண்டிருக்கிறாய் அன்பே.”
அவள் நிமிர்ந்து பார்த்தாள்.
யாருக்கு எழுதப்பட்டது? யாரோ அன்புக்கு எழுதியதாகவா?
அவளுக்கு முன்னிலை இல்லை.
வாசிக்கத் தொடங்கினாள்.
புத்தகத்தின் பக்கங்கள் மெதுவாகக் கழிந்தன.
சில பக்கங்கள் சுவையாக, சில பக்கங்கள் சற்று குழப்பமாக.
ஒரு பக்கம் மட்டும் அவளது விரலை நீண்ட நேரம் பிடித்துக்கொண்டது.
“உன் வாசிப்பில் நிறுத்தற் குறியீடுகளை கவனமாகக் கவனித்துக்கொள். அர்த்தம் மாறிவிடக் கூடும்.”
அவள் அடிக்கடி வாசிப்பதை நிறுத்துவாள். குழந்தைகள் அழைப்பார்கள். வாசிப்புப் பிரியும்.
அதுவும் கவிதையில் சொல்வது போல் தான்.
அவளது வாழ்க்கையில், அர்த்தங்கள் எப்போதும் மாறிக்கொண்டே இருந்தன.
மூன்று நாட்கள்.
புத்தகம் அவளுடன் பேசியது.
அவள் பதிலளிக்கத் தொடங்கினாள். சத்தமில்லாமல். உள்ளுக்குள்.
அந்தப் புத்தகம் தன்னை வாசிக்கிறது போலவும் இருந்தது.
“நீ இறுதிப் பக்கத்தை அடைவதற்கு நீண்டகாலம் தேவைப்படக் கூடும்.”
அவள் இறுதிப் பக்கம் வரை செல்ல மனமில்லை.
நாளைய வேலை.
குழந்தையின் சளித்தொல்லை.
தூங்காத கணவன்.
தூங்கும் கனவுகள்.
ஒரு இரவு மட்டும்.
அவள் சிறிய ஒளிக்கதிர் போல படுக்கையின் ஓரத்தில் அமர்ந்தாள்.
மழை நனைந்த மரத்தின் வாசனை ஜன்னல் வழியே வந்தது.
புத்தகத்தின் பக்கம் அழுத்தமாகத் திரும்பியது.
அவள் வாசித்தது:
“நீ கவிதையோடு கலக்க முயற்சிக்கும் போது உனது குழந்தைகள் அழுது கொண்டிருப்பார்கள். அப்போது
என்னை வாசித்து முடிக்க ஒரு முழு மாத்திரைக்காகக் கைசேதப்படுவது
நான் புரிந்து வைத்தவை தான்.”
அவளது விரல்கள் நிறுத்திக்கொண்டன.
நாள் முழுக்க வைத்திருந்த வலிகளை நினைத்தாள்.
தன் கைகளில் பசுமைத் தடம் போல ஒரு கவிதை இழைந்தது.
அவள் புத்தகத்தை மூடவில்லை.
அவள் எழுத ஆரம்பித்தாள்.
புதிய பக்கம். வெண்மை நிறம்.
புதிய வரிகள்.
“நான் உன்னை வாசித்தேன்.
நீயும் என்னை வாசித்தாயா?”
அவள் எழுதிய அந்த இரண்டு வரிகளும் பக்கத்தின் நடுவில் ஒரு வெறுமையைத் தழுவிக் கிடந்தன.
அவள் எழுதியதா? இல்லையா?
எழுதியவுடனே அவள் மனதுள் ஒரு சிறு மெழுகுவர்த்தி கொளுத்தப்பட்டது.
படுக்கையின் அருகே சின்ன ஒலி. குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது.
அந்த சுழலடையாத தூக்கத்தின் ஓரத்தில் இருந்து ஒரு கண்ணோட்டம்.
அவளது கணவன் தொலைக்காட்சியை மூடி விட்டு காப்பி அருந்திய கிளாசை குசினி அலமாரிக்குள் வைத்தான்.
அவளுக்கு தெரிந்தது இவை எல்லாம் அன்றாடமானவை.
அவளோ அன்றாடத்திலிருந்து சற்று விலகி,
தன் உள்ளே ஒரு நொடியைக்கூட யாரும் கவனிக்காத இடத்தில்
புத்தகத்தின் ஒரு பக்கம் போல அமைதி பெற்று இருந்தாள்.
அந்தக் கவிதை அவளை வாசிக்கத் தொடங்கியது.
“என் பக்கங்களில் உனது வீணான எதிர்பார்ப்புகளும்,
உனது சின்னதொரு நிம்மதிக்கான போராட்டங்களும் இருப்பதை
நீ உணர்ந்துவிட்டாயா?”
அவள் சற்று சிலிர்த்தாள்.
இது ஏற்கனவே எழுதியது இல்லை.
இது இப்போது எழுதிக் கொண்டிருக்கிறது.
புத்தகம் உயிரோடு இருப்பது போல.
அதன் பக்கங்கள் அவளது விரல்களுக்கு கீழ் ஒட்டிக்கொண்டு பறந்தன.
அவளது கண்கள் பக்கங்கள் மீது.
ஆனால் அவள் வாசித்தது,
தன் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் போலத்தான் இருந்தது.
தூக்கம், குழப்பம், அன்பு, தவிர்க்க முடியாத பொறுப்புகள்,
மற்றும் எதையோ எதிர்நோக்கிய தற்காலிக அமைதிகள்.
ஒரு நாள் அவள் புத்தகத்தை வைத்துவிட்டு வெளியே போனாள்.
மழை.
மழையிலும் அந்தப் புத்தகம் நனையவில்லை.
மாறாக, அதற்குள் இருந்த கவிதைகள் நனைந்தன.
அவளது குழந்தை ஒரு நாள் பேசியது:
“அம்மா, அந்தப் புத்தகம் ஏன் என் மீது பார்க்கிற மாதிரி இருக்கு?”
அவள் சிரித்தாள்.
“அது நம்மைப் பற்றித்தான் எழுதப்பட்டிருக்கிறது போல தெரியல?” என்றாள்.
“பூனை மாதிரியா?” என்று குழந்தை கேட்டது.
“இல்ல… நம்ம வீட்டுப் படம் மாதிரி,” அவள் சொன்னாள்.
ஓர் இரவு, பல வருடங்களுக்கு பிறகு
அவளது தலைமுடி வெண்மையாக, குழந்தைகள் உயரமாகி விட்ட பின்
அந்த புத்தகம் இன்னும் இருக்கிறது.
அவள் வாசிக்கிறாள்.
“நீ என் இறுதிப் பக்கம் வந்துவிட்டாய்,
ஆனால் இப்போது தான் வாழ்க்கையின் முதல் வரி எழுதப்படுகிறது.”
அவள் புனைந்தாள்.
அவள் புத்தகத்தை மூடினாள்.
மறுநாள் காலை, அந்த புத்தகம் ஒரு மேசையின் ஓரத்தில் சற்று வளைந்தது போல கிடந்தது.
மழை நனைந்த பக்கங்கள் வறண்டு திரிந்திருந்தன.
அவள் அதைத் திரும்ப வாசிக்கவில்லை.
பதினைந்து நாட்கள்.
அந்த நாட்களில் குழந்தைகள் பாடசாலையில் தொடங்கினர்.
அவளது கணவன் ஒருமுறை வரம்பு மீறிப் பேசினார்.
அவள் பேசவில்லை.
புதிய தேநீர் மேசைக்கு வந்தது.
புத்தகம் அதற்கு அடியில் நழுவிக் கொண்டது.
மரங்களின் மேலிருந்து இலைகள் விழுந்தன.
அவளது கண்களில் சிறு இருள் தோன்றியது.
சில நேரங்களில், அவள் கண்ணாடியைத் தேடாமல் வாசிக்கத் தொடங்குவாள்.
புத்தகம் இல்லை.
தன் உள்ளே மட்டும் வாசிக்கும் பழக்கம் வந்தது.
ஒரு இரவு – மின்சாரம் அறுந்த நேரம்.
குழந்தைகள் தூங்கிவிட்டனர்.
வெளியில் நாய் மெல்லக் குரைத்தது.
மழையின் வாசனை மீண்டும் ஜன்னல் வழியே நுழைந்தது.
அவளுக்கு புத்தகம் நினைவில் வந்தது.
அது மேல்தட்டில் இல்லையென்றாலும்,
அதன் ஒரு வரி காற்றில் இருந்தது:
“நீ ஏன் இறுதிப் பக்கம் வந்துவிட்டாய்,
ஆனால் இப்போது தான் வாழ்க்கையின் முதல் வரி எழுதப்படுகிறது.”
அவள் எழுந்தாள்.
அந்த புதிய தேநீர் மேசையின் கீழ் குனிந்தாள்.
புத்தகம் இருந்தது.
பக்கங்கள் இன்னும் உயிரோடு.
மெல்ல வாசிக்கத் தொடங்கினாள்.
ஒரு பக்கத்தில் மட்டும் எழுத்துக்கள் நனையாமல் தெளிவாக இருந்தன:
“உன் விரல்களை நான் உயிராகக் கொண்டிருந்தேன்.
இப்போது அவை பழைய நிழல்களாய் மாறுகின்றன.
நீ என்னை மீண்டும் வாசிக்கும்போது
நீயே என்னை எழுதுகிறாய்.
உன் வாழ்க்கையின் பக்கம் இதுதான்.”
அவள் ஒரு வெண்மையான காகிதத்தை எடுத்தாள்.
புத்தகத்தில் இருந்து கடைசி வரிகளை நகலெடுக்கவில்லை.
மாறாக, தன் கைகளால் எழுதினாள்:
“அந்த ஒரே பக்கம் தான் என் முழு வாழ்க்கையா?”
பக்கத்தை மடித்தாள்.
புத்தகத்துக்குள் வைத்தாள்.
புத்தகம் மூடியபோது அது அழுத்தமாக மூடப்படவில்லை.
மெல்ல, சுவாசமெடுத்தது போல.
அடுத்த காலையில், குழந்தை அவளிடம் கேட்டது:
“அம்மா, நீ நேற்று இரவு யாரிடமோ பேசின மாதிரி…”
அவள் சிரித்தாள்.
“ஆமாம். பழைய நண்பியிடம்.”
“அவளோட பெயர் என்ன?”
அவள் சற்று நின்று பின்புறத்தைப் பார்த்தாள்.
“கவிதை.”
அவளது வாழ்க்கையில் புதிய காகிதங்கள் தோன்றத் தொடங்கின.
அந்தக் காகிதங்கள் வெறுமையாக இருந்தன.
ஆனால் அவற்றில் அவளால் எழுத முடியவில்லை.
ஏனெனில், ஒவ்வொரு வெறுமை பக்கமும்
அந்தப் பழைய புத்தகத்தின் நிழல்களில் மூழ்கியிருந்தது.
அந்த நிழல்கள் சில நேரங்களில் பிளாஸ்டிக் மூடிய ஜாடிகளில்
தொட்டுக்கழுவும் விளக்குகளாய் தோன்றின.
சில நேரங்களில் அது காய்ந்த பூக்கள் போல் மடிந்து கிடந்தது.
ஒரு நாள் குழந்தை நூலகத்தில் இருந்து புதிய புத்தகம் ஒன்று எடுத்துக் கொண்டு வந்தது.
“அம்மா, இதைப் படிச்சுச் சொல்லுங்க!”
அவள் புத்தகத்தைத் திறந்து, ஒரு பக்கம் வாசித்தாள்.
முதலாவது வரி:
“நீ என்னை வாசிப்பதில்லை, ஆனால் நான் உன்னை வாசிக்கிறேன்.”
அவள் அசைந்தாள்.
மழையில் நனைந்த அந்தப் பழைய கவிதைப் புத்தகம் நினைவுக்கு வந்தது.
அது வாசித்ததும், வாழ்க்கையின் சில பாகங்கள் மீண்டும் திறந்தன.
கண்ணாடி மேலே படும் பனித்துளிகள் போல்.
அவள் கணவனிடம் பேசினாள்.
“நம்ம வாழ்நாளில், நாம எந்தப் புத்தகத்தையும் முழுமையாக முடிச்சதா?”
அவன் சிரித்தான்.
“நம்ம கல்யாணபத்திரிகை கூட அவ்வாறே போச்சு.”
அவள் சிரித்தாள்.
ஆனால் அந்தச் சிரிப்பு கவிதையின் இடைவெளி போலிருந்தது.
ஒலி இல்லாமல் நிறைந்த.
அந்த இரவு, குழந்தைகள் தூங்கிய பிறகு,
அவள் தூங்காமல் ஒரு வெறுமைப் பக்கத்தில்
மெல்ல எழுதி விட்டாள்:
“புத்தகம் ஒன்றை முடிப்பதில்லை.
அதை வாழ்வதே முழுமையாக வாசிப்பதாய் இருக்கிறது.”
அந்த வரிகளை அவள் ஒட்டினாள் பழைய கவிதைப் புத்தகத்தின் கடைசி பக்கத்தில்.
அப்போது அந்த பக்கம் திறந்தது.
அவள் வாழ்ந்துவந்த ஒவ்வொரு நாளும்
தன் கவிதையை வாசித்தாள்.
அவள் அந்த கவிதைப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்கிய அந்த இரவு,
காலம் சற்றும் நகரவில்லை போலிருந்தது.
மழை பெய்யவில்லை.
நிலா வெளிச்சம் இல்லை.
முற்றிலும் அமைதி.
அந்த அமைதியில், ஒரு மெலிதான குரல்
அவளுக்குள் இருந்து எழுந்தது:
“நான் ஒரு கதையாகத்தான் இருந்தேன்.
நீ என்னை வாசித்த பிறகு,
நீயே என் எழுத்தாளர் ஆயிற்று.”
அவள் பயந்தாள்.
திடீரென வாசித்தது பயத்தை உருவாக்கியது.
ஆனால் அந்த பயம் பரிசாகத் தோன்றியது .
அவளிடம் பழைய ஓவியங்களை மீட்டுச் செலுத்தும் பழைய முகநூல் நினைவுகள்போல்.
அடுத்த நாள் காலை.
அவள் வீட்டு வாசலில் ஒரு புத்தகத்தாள் கிடந்தது.
அவள் அதை எடுத்தாள்.
அதில் எழுதியிருந்தது.
“ஒரு வாசிப்பின் பின், எழுத்து உயிர் பெறும். ஒரு வாசகரின் தேடலால்,
ஒரு எழுத்தாளனின் மனம் கிழிக்கப்படும்.”
அவள் முகத்தில் சிறு புன்னகை தோன்றியது.
“இது யாருடைய கையெழுத்து?” என குழந்தை கேட்டது.
அவள் சொன்னாள்
“இது ஒரு கவிதையின் கையெழுத்து.”
மூன்று நாட்களுக்குப் பிறகு, அவள் ஒரு புதிய நோட்புக் வாங்கினாள்.
அதில் தலைப்பு எதுவும் இல்லை.
முதலாவது பக்கம் வெறுமை.
அவள் எழுதி ஆரம்பித்தாள்
“நீ என்னை வாசிக்க ஆரம்பித்த காலத்திலிருந்து
நான் ஒரு கதையாக மாறினேன்.
ஆனால் இப்போது,
நீ என் கதையின் புனைவல்ல.
என் உண்மையான வாசகன்.”
அந்தப் பக்கத்தைக் கடைசிப் பக்கமாக வைத்தாள்.
முதலாவது பக்கத்தில் ஏதும் எழுதவில்லை.
அந்த புத்தகம் முழுவதும் வாசிக்கப்படவில்லை.
அது உயிரோடு இருந்தது.
அது தன் வாசகருக்காக காத்திருந்தது.
அது, அவளே.
இரவு நேரம்.
அவளும் குழந்தைகளும் தூங்கிவிட்டார்கள்.
அந்த புத்தகம் மட்டும் விழிக்கிறது.
அது மெதுவாகத் திறக்கிறது.
தன் பக்கங்களை சுழற்றி,
அவள் எழுதிய கடைசி வரிகளை வாசிக்கிறது.
“நீ என்னை வாசிக்க ஆரம்பித்த காலத்திலிருந்து
நான் ஒரு கதையாக மாறினேன்.”
அந்த வரிகள் தன் உள்ளத்தில் நுழைந்தபின்,
புத்தகம் சற்று கதறுகிறது.
வாசிக்கப்பட்டதின் நிவாரணம் அது.
பிறகு, மெதுவாகத் தன்னை மூடுகிறது.
வாசகியின் கண்ணீரும், எழுத்தாளரின் அமைதியும் அதற்குள் மூடியபடி.
ஆண்டுகள் கடந்துபோகின்றன.
அவளது குழந்தை, இப்போது ஒரு இளைஞன்.
அவள் எழுதித் தவழ்ந்த அந்த புத்தகத்தை தன் புத்தகப்பெட்டியில் நெறிக்கின்றான்.
அவளின் கையெழுத்தும்,
அந்த பெயரற்ற கவிதையும்
அவனது நினைவுகளுக்குள் பதிகிறது.
“அம்மா எழுதிய புத்தகம்…
ஆனா அதை நான் வாசிக்க நேரமே கிடைக்கல.”
அவன் சொல்கிறான்.
அன்று இரவு, அவன் அந்தப் புத்தகத்தைத் திறக்கிறான்.
முதலாவது பக்கம் வெறுமை.
அவன் எழுதத் தொடங்குகிறான்.
“நான் உன்னை வாசிக்கத் தொடங்கிய நேரம், என் கதையையும் புதிதாக ஆரம்பித்தேன்.”
ஒரு புத்தகம் வாசிக்கப்படும்போது மட்டும் இல்லையெனில்,
அது வாழ்ந்துகொண்டிருக்கிறது.
வாசிப்பும் எழுத்தும் ஒரே உயிரின் இரு மூச்சுகள்.
அவளும் அவனும்
அந்த இரு மூச்சுகளின் தொடர்ச்சியாகவே இருந்தனர்.
•••

டீன் கபூர்
ஓய்வு நிலை ஆசிரியர். இலங்கை கிழக்கு மாகாணம் மருதமுனை எனும் ஊரில் 1963 இல் பிறந்தேன். 1987 களில் இருந்து பத்திரிகை, சஞ்சிகைகள் மற்றும் இணைய சஞ்சிகைகளிலும் எழுதி வருகிறேன். இதுவரை நான்கு கவிதை நூல்களை வெளியிட்டிருக்கிறேன். குரோட்டான் அழகி (1994), திண்ணைக் கவிதைகள் (2007), சொற்களில் சுழலும் பிரபஞ்சம் (2019), வேரினிடை (ஆங்கில மொழிபெயர்ப்பு கவிதை நூல் 2023). அத்துடன் எண்ணிம ஓவியங்களையும் வரைந்து வருகிறேன்.