1. சுழல்
,
தொடர்ந்தது
தொடர்கிறது
இன்னும் தொடரும்
இறந்து எழுதல் விளையாட்டில்
மீண்டும்
இறப்பதற்கான
அத்தனை எழுதல்களும்.
,
2. யான்
,
நீயாரென வினபுவனே
யாரென்று
எனக்கும் தெரியவில்லை
அப்படியானால்
அப்படியானால்
மொழியினுள் கூட்டிக் கழிக்கும்
கவிஞனாக இருந்திருக்கலாம்
சிரித்தேப் பேசும்
பித்தனாக இருந்திருக்கலாம்
உள்ளத்துள் சுவாசிக்கும்
சித்தனாக இருந்திருக்கலாம்
உங்களுக்கு
ஒன்றுக்கும்
உதவாதவனாய் கூட இருந்திருக்கலாம்
ஆம்
இருக்கலாம்
இருக்கலாம்
உத்தேசமாய் சொல்லக்கூட
தெரியவில்லை இன்னும்
யாருக்கும் யார்நானென்று.
,
3.பிழையமுதே கண்ணம்மா!
,
சிறு கல்லை
எட்டி உதைப்பது போல்
எளிமையாக
ஆளுக்கொரு திசையில்
செல்லவே முடிவெடுத்தோம்
ஆனாலும்
இந்த காதலை என்ன செய்யலாம்
அரிய சாதனைப் புரிந்ததாக
வரலாற்றில் பதிவு செய்யலாமா
அழகுற ஒரு அனுதாப கவிதைக்கு
பயன்படுத்திக் கொள்ளலாமா
சாலையோரங்களில்
வீசியெறியப்படும் நாய்க்குட்டிகளோடு
சேர்த்துவிடலாமா
குறைந்தது
எதிர்பாராமல் சந்திக்கும் நேரங்களில்
மீண்டும் துளிர்விட
அப்படியே இருக்கட்டும் என்று பிச்சையளிக்கலாமா
என்கிறாய்
,
பட்டியலிட்டு சித்திரவதை
செய்வதைக் காட்டிலும்
இருவரும் இணைந்து
மூக்குறிஞ்சும்
இக்குழந்தையை
கொலையே செய்துவிடலாம்.
000

இயற்பெயர் கார்த்திக். திருச்சியைச் சேர்ந்தவர், ஜமால் முகமது கல்லூரியில் முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்றவர்.முதல் கவிதைகள் கதவு இதழில் வெளிவந்தது.