சு.ராம்தாஸ்காந்தி கவிதைகள்

1) நிலை

   ————–

மாட்டு வாலில்

சிண்டு முடிந்து

தொடையில் இறுக்குகிறான்

கறவைக்காரன்

ஒரு கணம் திகைத்துப்

பின்வாங்குகிறது

புட்டத்தில் அமர வந்த கொசு.

 2) நிலை 2

   —————–

கிட்டத்தட்ட

மரணத்தை ஒட்டிய

என் மயக்கத்தை

அவர்கள் விரும்புகிறார்கள்

எனவே தான் நான்

விழித்துக்கொள்ள

விரும்புகிறேன்.

3) ஈடு

————–

எங்கேனும் கிழியாத

வாழ்வைப் பற்றியெடுத்து

ஊர் சிரிக்கும்

நிர்வாணத்தின் மீது

கௌவரமாகப்

போர்த்திக் கொள்ளத்தான்

நீதிக்கும் வாழ்வுக்கும்

முன் வைத்து

பிரியமில்லாத ஓட்டத்தை

நொண்டிக் குதிரையாய்த்

தொடர்ந்து கொண்டிருக்கிறேன்!

4) எச்சில்

———————

இது போதுமென்று

மூடி வைக்கும்

எச்சில் இலைக்குள்

பொதிந்திருக்கும்

மீதச்சோறான இவ்வாழ்வில்

சுயமென்றும் சுத்தமென்றும்

எதனைச் சொல்வீர்?

5) அளவு

———————–

தன் அறிவுக்கு

மேலான விஷயங்களை

சக மனிதன் பேசுவதை

எவரும் விரும்புவதில்லை

அவ்வளவு தான்

மற்றபடி எல்லோருக்கும்

தேவைப்படும் நேசம்

எங்கும் வியாபித்திருக்கவே

செய்கிறது.

6) பரிகாசம்

——————-

பெரும்பள்ளத்திற்கு அப்பால்

மலையுச்சியில் ஒளிப்புள்ளியெனத் துலங்கும்

உன் கண்களிலிருந்து பரவிய

காருண்யம் தான் என்

ஜென்மபாவங்களைக் கடைத்தேற்றும்

கதிமோட்சம் என்று நம்பிய கணம்

என் கால்களுக்கிடையில்

கனத்த சங்கிலி பூட்டிய

கட்டை ஒன்று போடப்பட்டது

பிறகு வலு குறைந்த கால்களுடன்

ஆகாசம் ஏகிய என்னை

ஊரில் யாவரும்

சப்பாணி என்றழைக்கத் தொடங்கினர்.

7) அதிர்ச்சி

————————-

நெஞ்சப் பானையில்

நுரைக்கும் கள்ளாய்

பொங்கிப் பிரவகிக்கும்

என் பிரியம் எடுத்தியம்ப

வந்தபோது தான்

உன் ஒற்றை வாழ்வில்

இரண்டாய் மூன்றாய்

விதி ஆடிய பரமபதத்தை

நண்பன் கூறக் கேட்டேன்

பழம்பெருமை வாய்ந்த வீட்டை

பஞ்சம் தின்னக் கொடுத்துவிட்டு

பெண்களின் விசும்பலொலியும்

குதிரைவண்டிச் சத்தமும்

முனகலாகக் கேட்ட

ஒரு நள்ளிரவில்

பட்டணம் போய்விட்ட

குடும்பம் ஒன்று எடுக்க மறந்துவிட்ட

கருவாட்டுப் பானையின்

மட்கல் வாடையைப் போல

உருக் கொள்ளாமலே

முகம் சிதைந்து போனது

என் அநாதை அன்பு!

( கவர்கல் சரசுவுக்கு) .

சு. ராம்தாஸ்காந்தி

பழனி அருகேயுள்ள மானூர் கிராமத்தைச் சேர்ந்தவர். நடப்பு இலக்கியச் சூழலில் வெளியாகும்

அச்சு மற்றும் இணைய இதழ்களில் இவரது கவிதைகள் சில பிரசுரமாகியுள்ளன

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *