சந்தைக்கடையில் எப்போதும்போல மாலை ஐந்துமணி என்றானதும் நல்ல கூட்டம் வரத்துவங்கியது. நான் இப்போதுதான் சந்தைக்கடை ஏரியாவுக்குள் நுழைந்து நடந்தேன். சந்தைக்கடையின் இருபுற சாலையோரங்களில் கத்திகள், டார்ச்லைட்டுகள், துணிமணிகள், கீரைக்கட்டுகள், வாழைத்தண்டுகள் வாழைப்பூக்கள், மாம்பழங்கள், வடை,போண்டாக்கள், பழவகைகள் என்று பலவிதமான விற்பனைக்கடைகள் தார்ப்பாய் விரித்து அதில் கிடத்தப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. சில கடைகள் மூங்கில் குச்சிகள் நான்கை நட்டிவைத்து அதில் தார்பாய் சீட்டை மேலே கட்டியிருந்தார்கள்..
மழை என்று மாலை நேரத்தில் பிடித்துவிட்டால் அவ்வளவுதான். கடைக்காரர்கள் ’முடிஞ்சுது நம்ம பொழப்பு’ என மழையை சபித்துக்கொண்டே செய்வதறியாமல் தவிப்பார்கள். சாலையும் அப்போதே வெறிச்சோடிப்போய்விடும். திடீரென மழை பிடித்துக்கொண்ட சமயத்தில் விலைக்குறைப்பு செய்தும் கூவுவார்கள். வாங்கத்தான் வழியின்றி பொதுஜனமும் மழைக்கு எங்கேனும் ஒதுங்கவே பார்ப்பார்கள். ஆனால் ஒதுங்க அங்கே இடமேயில்லை. ஒவ்வொரு கடையின் முன்பாகவும் கணிசமான கூட்டம் இப்போதே இருக்கத்தான் செய்தது. நேரம் ஆக ஆக கூட்டம் இன்னமும் கூடிவிடும். சாலையின் இருபுறமும் கடைகள் இருந்தமையால் சாலையில் நெரிசல் இப்போதுதான் ஆரம்பித்திருந்தது. இதில் இருசக்கர வாகனங்கள் வேறு தொல்லை தருவனவாய் இருபுறத்திலும் நிதானமாக ஊர்ந்து சென்றன.
பக்கத்து ஊர்களிலிருந்து வருபவர்களின் வாகனங்கள் எல்லாமும் நான்கு திசைகளிலும் சந்தைக்கடை முகப்பிலேயே வரிசைபோட்டு நிறுத்திவிட்டுத்தான் கட்டைப்பைகளோடு பொருட்கள் வாங்கிப்போக உள்ளே வருவார்கள். இந்தக்கூமுட்டைகள் எதற்காக இப்படி கூட்டத்தினுள் இரண்டு கால்களையும் ஊன்றிக்கொண்டு ஹாரனை ஒலிக்கவிட்டு ஊர்ந்து செல்லணும்?
இந்தமாதிரியான கேனக்கிறுக்கனுங்களை அவர்களது தாயார்கள் அவசரத்தில் பெற்றுப்போட்டு தொப்புள்கொடியை அவர்களாகவே அறுத்திருக்கவேண்டும். ரெண்டே ரெண்டு கீரைக்கட்டு வாங்குவதற்கு, எங்க? எவன் பளிச்சுனு தண்ணி தொளிச்சு, வாடாம ஃப்ரஸ்ஸா வச்சிருக்கான்னு அல்லக்கண்ணில் பார்த்துக்கொண்டே ரெண்டு ரவுண்டு வருவான்கள். ’அட அவசரத்துக்கு பொறந்தவனுங்களா.. சந்தைக்கு உள்ளார போய் பாருங்கடா.. எல்லாப் பொருளும் உள்ளாரதாண்டா குமிஞ்சு கிடக்கு.. வண்டியை இப்பிடி கூட்டத்துக்குள்ளார ஓட்டி மனுசனுங்களுக்கும், பொம்பளப்பிள்ளைங்களுக்கும் இடைஞ்சல் பண்ணாதீங்கடா அவசரத்துக்கு பொறந்தவனுங்களா! அப்படின்னு சத்தம் போடறதுக்கு ஒருத்தனும் இல்ல பாருங்க இங்க!’
கொஞ்சம் பெரிய சந்தை என்பதால் மாட்டுக்கறிக்கடை ஏரி மேட்டில் இருந்தது. உள்ளே பன்றிக்கறி கடையும் ஒதுக்குப்புறத்தில் சந்தையினுள்ளேயே இருக்கிறது. அங்கேயே ஒரு பிளேட் வாங்கியும் சாப்பிடலாம். காரம் தூக்கலாகவே இருக்கும். போக மீனும் கிடைக்கும்.
‘டே முருகேசா!’ அப்படின்னு குரலு கேட்டுதுங்க கோயல் கிணத்துக்கிட்டயிருந்து. அது எனக்கு கிணத்துக்கு உள்ளார இருந்து கூப்புட்ட மாதிரி இருந்துச்சு! அதுக்குத்தான் இரும்புக்கம்பி போட்டு பத்திரமா மூடி வச்சிருக்கானுங்களே! இப்பத்தான் கீழ்க்கடையில ஒரு கோட்டரு டைமண்டு ரம்மு வாங்கி பொட்டிக்கடையில தண்ணிக்கேனு, டம்ளரு, சுண்டலு வாங்கி படக்கு படக்குனு ரெண்டு கட்டிங்கா குடிச்சு முடிச்சுட்டு வந்தேன். உள்ளார மளார்னு போனா ஒரு பிளேட் பன்றிக்கறி தூக்குன காரத்துடன் சாப்பிடலாம். ஆளு யாருன்னு திரும்பிப் பார்த்தேன். மருதாசலம்.
பாளையத்துல எம்பட வீதியில கட்டங்கடேசி வீடு இவுனுது தான். குப்பை லாரிக்கி போயிட்டு இருக்கான். அப்பப்ப இலைக்கட்டு வெட்டுறதுக்கு வாழைத்தோப்புக்கு போவான். இன்னிக்கி எங்கீம் போகலையாட்டம். இவனொரு ஆளு! கட்டிங்குக்கு இருவது ரூவா பத்தலைம்பான். காசு இல்லீடான்னு இப்ப சொல்ல முடியுமா? சந்தைக்கடைக்குள்ள கட்டைப்பையை தூக்கீட்டு போறவன் பணமில்லாம போவானா? கூப்பிட்டவன் நேரா லுங்கியை மடிச்சுக்கட்டீட்டு மசை பிடிச்சவனாட்டம் வர்றானே!
“காது செவுடாடா உனக்கு? நீயி அவத்திக்கி வர்றப்பவே கூப்புட்டேன். காதுல உழுகாதவனாட்ட வெறச்சிட்டு வடக்க பார்த்தாப்புல வர்றே? போகட்டும் உடு.. முருகேசா.. பணமிருந்தா ஒரு அம்பது ரூவா குடுத்துட்டு போடா..”
“எம் பொண்டாட்டி ஏகப்பட்ட சாமான்கள வாங்கிட்டு வரச்சொல்லியிருக்காடா மருதாசலா.. முன்னூறு ரூவா தான் இருக்குது. பாரு ரெண்டு கட்டைப்பையை சுருட்டி கிக்கத்துல வச்சிருக்கேன். போயி கெணத்து மேலயே உட்கார்ந்திரு.. சந்தைச்செலவு பண்டீட்டு வர்றேன்.. மிச்சப்பணமிருந்தா வாங்கிக்குவியாம்!”
“அப்ப நீ தரமாட்டே?”
“தரமாட்டன்னு உன்கிட்ட இப்ப சொன்னனாடா? வவுத்தெரிச்சலை கிளப்பாம போயிரு!”
“ஆனைக்கி ஒரு காலம் வந்தா பூனைக்கி ஒரு காலம் வராமயாடா போயிரும்? நீ இப்ப கோட்டர் ஏத்தாமத்தான் வந்திருக்கியாடா? கண்ணாமுழிய பார்த்தா தெரியாதாடா எனக்கு! நீ மட்டும் ஏத்தீட்டு வருவே.. நான் சாரு போயி செலவு பண்டீட்டு வந்து வெறும் ஜோப்பை காட்டுற முட்டும் கெணத்துமேல உக்கோந்துட்டு இருக்கணும்?”
“வாயை புடுங்காதடா மருதாசலா.. கம்முனு போயிரு!”
“நடு ரோட்டுல நின்னுட்டு என்னப்பா சண்டெ? ஓரமாப்போயி நின்னுட்டு சண்டைக்கட்டுங்க.. போறவங்க வாரவங்களை எடஞ்சல் பண்ணீட்டு!” ஒரு அம்மாள் கட்டைப்பை நிறைய ஜாமான்களை தூக்கிக்கொண்டு கூட்டத்தில் செலவு முடித்து மேற்கே சென்றது. இன்னாரத்தில் போனால் எல்லாப்பொருளும் விலை கூடுதலாகத்தான் இருக்கும். இருந்தாலும் பொழுது சாய்வதற்குள் வாங்கிவிட்டு வீடு போகும் பலர் விலையைப்பற்றி நினைப்பதில்லை. இருள் சூழ்ந்தபிறகு பொருட்களின் விலை குறையும். இப்போது பத்துரூபாய் கீரைக்கட்டு இன்னும் ஒன்னரை மணி நேரத்தில் அஞ்சு ரூவாயாக மாறும். மீதமிருந்தால் மீண்டும் ஒரு மணி நேரத்தில் பத்துரூபாய்க்கு மூனு கட்டாகவும் மாறும்.
நான் மருதாசலத்திடம் ஒன்னும் சொல்லாமல் சந்தைக்கடை பாதையில் திரும்பினேன். மருதாசலம் என் கையைப்பிடித்து இழுத்தான். ஓங்கி அப்பலாம் என்றுதான் நினைத்தேன். எங்கீம் போக வர முடியுதா ஒன்னா? கோட்டர் கடைக்கி போனாலும் பத்து குடு, இருவது குடுன்னு நச்சி எடுக்கானுங்க! சந்தைக்கடைக்கி வந்தாலும் இவனாட்டம் ஆளுங்க! குடியை விட்டுட்டால் எவனும் என்னை காசு கேட்க மாட்டான். சரக்கு கடைப்பக்கம் வேலையே இருக்காது. முடியுதா ஒன்னா? அட சினிமா கொட்டாயில் இடைவேளை சமயத்தில் ஒன்னுக்கு ஊத்தப்போனால் கூட அங்கேயும் ஒருவன் நிற்கிறான். ’காபி முப்பது ரூவா சொல்றான் முருகேசா.. இருவது ரூவா இருக்குது.. ஒரே தலைவலிடா… பத்து இருந்தாக்குடு.. மளார்னு குடிச்சுட்டு வந்துடறேன்!’
“சாமி சாமியா இருப்பேடா மருதாசலா.. என் கையை உடு. நான் போயி சந்தைச்செலவு பண்டீட்டு நேரா கறிக்கடைக்கி போகணுமடா.. ஓனரு பத்து நிமிசத்துல வந்துடோணும்னு சொல்லி அனுப்பிருக்காப்டி. இன்னிக்கி புதன்கிழமைடா.. ஒம்போது மணி வரைக்கிம் இந்திக்காரனுங்க பண்ணக்கோழி வெட்டச்சொல்லீட்டு வருவானுங்க”
“நீயி அந்த சரோசாவுக்கு மட்டும் அண்டர்வேருல இருந்து எடுத்து எடுத்து நீட்டுறே? கடவுளு எனக்கும் அவுளுதாட்டம் ஒரு சந்தைக்குடுத்திருந்தான்னா கேக்குறதுக்கும் முன்னாடியே எடுத்து நீட்டீருவேல்ல!” என்றான்.
அப்போது தான் கவனித்தேன். அவனும் குடித்திருந்தான். குடிக்காத மாதிரி நடித்துக்கொண்டு வந்து பணம் கேட்டு.. இப்போது பார்த்தால் வம்பு வளர்க்க வந்திருக்கிறான். ரவுடியை ஜமாளித்துவிடலாம். ரவுடி மாதிரி நடிப்பவனை ஜமாளிக்க ஏகப்பட்ட சாமார்த்தியம் வேண்டுமென நினைத்தேன். மருதாசலம் அரைக்கட்டிங் ரவுடி தான். முன்னெப்போதோ நடந்த சண்டையில் எதிராளியின் வாயை கல்லால் கிழித்திருக்கிறான். இப்படி சில சாகச கதைகள் சின்னச்சின்னதாய் அவனுக்கு உண்டு. அதை வைத்துக்கொண்டு இப்போதும் ஒப்பேத்துகிறான்.
“பேச்சு செரியில்ல மருதாசலா.. போயி கெணத்துக்கிட்ட இரு.. வந்து தர்றேன்!”
“உன்னையெல்லாம் நம்ப முடியாதுடா முருகேசா.. அப்புறம் வந்து குடுக்குறதை இப்பவே குடு. நீயி அப்பிடியே கிழக்க போயி தெக்கெ போயிருவே.. இல்லீன்னா சரோசாவை சந்தைக்கி வரச்சொல்லியிருப்பே.. அவளுக்கும் சந்தைச்செலவு பண்ண காசு கொண்டாந்திருப்பே நீயி. எல்லாத்தையும் அவ புடுங்கீட்டு போயிருவா.. அப்புறம் உன் ஜோப்புல மசுராடா இருக்கும்? இன்னிக்கி பார்றா.. உம் பொண்டாட்டி செலுவிகிட்ட வந்து உக்கோந்து சரோசா நாயத்தை அக்குவேறா புட்டுப்புட்டு சொல்லிடறேன். அப்புறம் உனக்கு செலுவி பூஜை போடுவா! நடக்கும்டா!”
“இப்பவே போயி செலுவிகிட்ட சொல்றா போடா!” கோபமாய் நான் கிளம்பிவிட்டேன். அவனோ லுங்கியை மடித்துக்கட்டிக்கொண்டு பின்னாலேயே வந்தான். இன்னிக்கி மிதி திங்காம போக மாட்டான் போல என்று நினைத்துக்கொண்டே சந்தைக்கடை முகப்புப்பாதை வழியாக உள்ளே நுழைந்தேன். முகப்பில் கட்டிலில் சுடச்சுட போண்டா, வடை, பஜ்ஜி விற்கும் சுவாமிநாதன் ஒரு புன்னகையை வீசினார் என்னைப்பார்த்து. பதிலுக்கு நானும் புன்னகைத்துவிட்டு அகன்றேன்.
சந்தைக்கடையினுள் ஐந்து வரிசை குறும்பாதைகள் பிரிந்து சென்றது. எப்போதும் போல முதல் பாதையில் நுழைந்தேன். வீட்டுக்கான கத்திரி, வெண்டை, பீன்ஸ், கேரட், எல்லாமையும் கூறு கூறாய் இருபது ரூபாயில் வைத்திருந்த கடை முன்பாக நின்றேன். எல்லாமிலும் இரண்டு கூறுகள் போடச்சொல்லி ஒரு கட்டைப்பையில் வாங்கிக்கொண்டேன். தக்காளியும் அங்கேயே இருக்கவே விலை விசாரித்தேன். நூறு ரூபாய்க்கு அஞ்சு கிலோ என்றார். ஐம்பது ரூபாய்க்கு வாங்கிக்கொண்டேன். இன்னும் ஒருமணி நேரத்தில் தக்காளி நூறு ரூபாய்க்கு எட்டுக் கிலோவாக மாறிவிடும். அதனால் தான் இந்திக்காரப்பயல்கள் இருட்டு கட்டியபிறகு சந்தைக்கடைக்குள் குழுமிவிடுகிறார்கள். இவனுகள் வந்துதான் உருளைக்கிழங்கு வியாபாரத்தையே பெருக்கிவிட்டான்கள். கூறில் கேட்பாரற்றுக்கிடந்த உருளைக்கிழங்குகளுக்கு இன்று தனியாகவே நான்கைந்து கடைகள். அதுகள் இப்போதெல்லாம் வாயில் வைத்தால் இனிக்கவும் ஆரம்பித்துவிட்டன. வெளியூர் கிழங்குகளாம். நாட்டு உருளைக்கிழங்கா? என்று சின்னச்சின்னதாய் இருப்பனவற்றை கேட்டு வாங்கிப்போக வேண்டியதாய் இருக்கிறது.
“பொண்டாட்டிக தானடா சந்தைக்குள்ளார வந்து ஜாமான் வாங்குவாளுக! செலுவி என்ன உன்னோட ஊட்டுல படுத்துட்டு மொட்டு உடறாளாடா? ஆம்பளெ எங்காச்சிம் சந்தைச்செலவு பண்டி பாத்திருக்கியாடா? பாரு.. பாக்கெட்டுல நோட்டு நோட்டா வச்சிருக்கான் பாரு.. எனக்கு அம்பது ரூவா குடுக்கறக்கு இவனுக்கு முடியலியாம்! டேய்.. பணம் இன்னிக்கி வரும் நாளைக்கி போகும்டா.. மனுசன் முக்கியம்! வாழ்க்கெ ஒரு வட்டம்டா.. இன்னிக்கி கீழ இருக்கறவன் நாளைக்கி மேலாக்கா போயிருவான். மேலாக்கா இருக்கறவன் நாளைக்கி கீழாக்கா வந்துருவான். சரோஜாவை நானும் தாண்டா ரெண்டு வருசத்திக்கிம் முன்னால வச்சிருந்தேன். அப்பத்தான் நீயி செலுவிய கட்டுன புதுசு. என்னேரமும் பணம் பணமுன்னு நச்சுவாடா.. என் காசைப் பூராத்தையும் புடுங்கீட்டாடா அவ. இன்னிக்கி நான் ராஜாவாட்டம் இருந்திருப்பேன். எல்லாம் போச்சு அந்த ஊசையை தொட்டு. சுழியே போச்சு!” என்றவன் காறி ஓரமாய் துப்பினான்.
இவன் சல்லை சாலையோடு முடிந்துவிடுமென்று பார்த்தால் சந்தைக்குள்ளும் வந்துவிட்டானே! அடுத்த கடையில் முட்டைக்கோஸ் வாங்கி அடுத்த பையில் போட்டுக்கொண்டேன். துணி துவைக்கும் சோப்பு, குளியல் சோப்பு என்று சொல்லியிருந்தாள் செல்வி. அதையெல்லாம் மளிகைக்கடையிலேயே வாங்கிக்கொள்ளச் சொல்லிவிட்டேன். பார்த்தால் இங்கே பலவகையான சோப்புகளை திண்டில் அடுக்கி வைத்திருந்தார்கள். சோப்பு போட்டு குளிக்கும் வழக்கம் என்னிடமில்லை. சோப்பு போட்டு துணியை துவைக்கும் வழக்கமும் செல்வி வீட்டுக்கு வரும்வரை என்னிடம் இருந்ததில்லை. இனி திங்கிறபண்டம் வாங்கினால்.. போகிற வழியில் கீரைக்கட்டு ரெண்டு வாங்கி பையில் திணித்தால் அடுத்த பையும் நிரம்பிவிடும். நான் திரும்பிப் பார்த்தேன். பின்னால் மருதாசலத்தை இப்போது காணவில்லை. போகட்டும். என்னிடமிருந்து பைசா தேறாது என்று தெரிந்துகொண்டானா? இல்லை வேறு பார்ட்டி மாட்டிக்கொண்டானா?
சரோஜா ஊருக்குள் இரண்டாவது வீதியில் இருக்கிறாள். அவளோடு எனக்கு இந்த ஆறு மாதமாகத்தான் தொடுப்பாகிவிட்டது. சரோஜா வீட்டுக்காரன் போனவருடம் உடம்பு மோசமாகி போய்விட்டான். சரோஜாவுக்கு ரெண்டு பசங்கள். ரெண்டுபேரும் தறிக்குடோனுக்கு போய்வந்து கொண்டிருந்தார்கள். சரோஜா என்னைவிட மூன்றுவயது மூத்தவள். முன்னே அப்பிடி இப்படி என்று அவள் இருப்பதாக சொல்வார்களேயொழிய அப்படியெல்லாம் எனக்கு தெரிந்ததில்லை. இரண்டு மூன்றுமுறை ஊரிலிருந்து என் டிவிஎஸ் பைக்கில் பஸ்ஸ்டாப் வரை பின்னால் ஏற்றிக்கொண்டு வந்து விட்டிருக்கிறேன். அத்தோடு சரி.
நான் இந்த குறுநகரில் கறிக்கடையில் பத்துவருடமாக கறிவெட்டிக்கொண்டு இருக்கிறேன். ஊரில் எல்லா கறிக்கடைகளிலும் வேலை பார்த்திருக்கிறேன். புதிதாக கடைகள் இப்போது நிறைய முளைத்துவிட்டன. எல்லாமும் இந்த இந்திக்காரப்பயல்களின் வருகையால் தான். எல்லாக்கடைகளிலும் இந்திக்காரப்பயல்கள் தான் கறிவாங்க நிற்கிறார்கள். புதிதாக தொழிலே தெரியாதவர்கள் கூட கறிக்கடை போட்டு கல்லா முன்பாக அமர்ந்துவிடுகிறார்கள்.
ஆட்டை கயிற்றில் கட்டி தூக்கிக்கட்டி அறுத்து, வின்னம் படாமல் தோலை உறித்து, குடல்களை உறுவி, தொடை, முன்னங்கால், நெஞ்சாங்கூடு என பகுதியாய் பிரித்து வைக்க சிலர் தான் இருக்கிறார்கள். கிலோகணக்கு போட்டு கறியை துண்டுகளாக்க எல்லோருக்கும் தெரிகிறது. எப்படியோ ஆட்களைப்போட்டு கடை முதலாளியாய் உட்கார்ந்துவிடுகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை என்றால் கடை கடையாய் என்னை வந்து ‘நிமிசத்துல வந்துடலாம்டா முருகேசா!.. கட்டிங் தனியா வங்கிவேணாலும் குடுத்துடுடறேன்!’ என்று வண்டி போட்டு கூட்டிப்போவார்கள். எல்லாம் அடங்கி ஒரே கடையில் செல்வி வந்த பிறகு உட்கார்ந்துவிட்டேன். யார் கடைக்கும் ஆடு அறுக்க நான் போவதில்லை. என் முதலாளியும் பெரிய கோவக்காரரும் இல்லை. கோவம் காட்டினால் அடுத்த கடைக்கு போய்விடுவேன் என்று அவருகு தெரியும். எப்படியோ இருவருக்கும் செட்டாகிவிட்டது.
இந்தக்குடிப்பழக்கம் ஒன்றுதான் எனக்கு. மத்தபடி பொயிலை, பீடிப்பக்கம் போகவே மாட்டேன். சரோஜா நான் கறிவெட்டும் கடையில் தான் எப்போதும் வந்து கறி எடுப்பாள். வாய் எந்த நேரமும் வெத்தலை பாக்கு பொயிலை என அதக்கிக்கொண்டே இருப்பாள். ரெண்டு விரலை உதட்டருகே வைத்து அந்தச்சந்தில் புரீச்சென துப்புவாள் வெற்றிலைச்சாறை. ரெண்டு பசங்களுக்கும் பதினெட்டு, பத்தொம்பது வயசு ஆகிவிட்டது. ஆனாலும் நெகு நெகுன்னு இருந்ததால் அப்பப்போ பேச்சுக்கொடுத்தேன். எனக்கு செல்வி வந்தபிறகு தான் இந்த ஆசையெல்லாம் வந்து சேர்ந்தது. இதையெல்லாம் முன்பாக யார் பேசினாலும் ’கெட்ட பேச்சு பேசாதீங்கடா!’ என்று தான் சொல்லிக்கொண்டிருப்பேன். செல்வி இரண்டு வருடமாக வயிற்றில் ஒன்றுமில்லாமல் இருந்து இப்போதுதான் மாசமாய் இருக்கிறாள். அவளுக்காகத்தான் இப்போ பழக்கடை முன்பாக நின்றுகொண்டிருக்கிறேன். நாலு ஆப்பிளை நூறு ரூவா சொல்றானே! சொல்லீட்டுப்போறான். ஆப்பிள் மாசக்காரிக்கி ரொம்ப நல்லதாமே! அப்புறம் செவ்வாழை.. அப்புறம் பேரீச்சம்பழம்! அவள் ஒரு பையனையோ, புள்ளையையோ பெத்தெடுக்கும் வரை மணியாட்டம் பார்த்துக்கணும் நான்.
பேச்சுக்குடுத்து பேச்சுக்குடுத்தே சரோஜாவும் நானும் பழகிட்டோம். சரோஜா எனக்கு சத்தியமெல்லாம் பண்ணியிருக்காள். ‘என்னெப்பத்தி ஊருக்காரங்க உங்கிட்ட இல்லாதது பொல்லாததது சொல்லுவாங்க முருகேசு.. அதையெல்லாம் காதுல வாங்கிக்காதே! எம் புருசன் செத்ததுக்கு அப்புறமா உன்கிட்டத்தான் இருக்கேன் நானு. இனி சாவுமுட்டும் உனக்காகத்தான் இருப்பேன். ஊட்டுல பசங்க இருக்கானுங்கன்னு பயந்துக்காதே.. அவனுங்க இருந்தாலும்.. வெளிய சித்தெ போயிட்டு வாங்கடான்னு சொன்னன்னா போயிருவானுங்க! கொஞ்ச நாளு கழிச்சி அவனுங்களுக்கு கலியாணம் பண்டனும். அப்ப நீ தான் முன்னால நின்னு பண்ணனும். புருசன் இல்லாதவள்னு ஊருக்குள்ள சிலபேரு என்னை ரவுண்டு கட்டுனானுங்க முருகேசு.. ஒருத்தன் இருக்கான். என்னையப் பார்த்தாவே தூக்கி புடிச்சுட்டு ஒன்னுக்கு போவான். என்னையக் கண்டாமட்டும் அவன் அப்பிடியேதான் பண்ணுறான். நானா அந்தமாதிரி ஈத்தரைககூட போவேன்? சரோஜான்னா யாருன்னு அவனுங்களுக்கு தெரியல போல! நீ தான் என் ராசா எப்பவும் பாத்துக்க! எவனாச்சிம் என்கிட்ட வாலாட்டினா அவன் யாருன்னு உன்கிட்டத்தான் நான் சொல்லுவேன் முருகேசு.. அவனை ஒரு தட்டு தட்டி வச்சீன்னா என் கிட்ட வாலாட்ட மாட்டான்! எப்பவும் நான் உனக்குத்தான்! இது சத்தியம்!’
இதெல்லாம் தப்புன்னு எனக்குத் தெரியுது. ஆனா ஆசை யாரை உட்டுது? சரோஜாவை கண்ணுல பார்த்தாவே நான் ஒரு மாதிரி ஆயிருவேன். இப்பவும் அப்பிடித்தான். அவ ஊட்டுக்கு போலாம்னு நெனப்பு வந்தாலே உடம்பெல்லாம் குப்புனு ஒருமாதிரியா ஆயிடறேன். செல்விகிட்ட அப்படி இல்லத்தான். செல்வி தான் எனக்குன்னே என்னோட வீட்டுக்கு வந்தவளாச்சே! தாலி கட்டி கூட்டி வந்திருக்கேன்ல! அதுக்காக செல்வி மேல எனக்கு ஆசை இல்லீன்னு இல்ல. அவதான என் உசுரு. அவளுக்கு நான் தான் உசுரு. ஆனாலும் ஆசையின்னு பார்த்தா சரோஜான்னா ஜிவ்வுங்குது எப்பயும்.

இந்த மருதாசலம் எப்பிடியோ நாயாட்டம் மோப்பம் பிடிச்சு என்னை கண்டுபிடிச்சிட்டான். ஒரு நாளு ராத்திரியில ஒரு மணி இருக்கும்னு நினைக்கேன். சரோஜா ஊட்டுல இருந்து கிளம்பி என்னோட ஊட்டுக்கு வர ரோட்டுல வந்துட்டு இருக்கேன்.. இவன் புள்ளாரு கோயில் திண்டுல பூதமாட்டம் உக்காந்திருக்கான். ‘எங்கடா போயிட்டு வர்றே?’ன்னான். இப்பத்தான் கடையில இருந்து வர்றேன்னேன். ‘உன்னோட பூளவாக்கை பார்த்துட்டேன்.. நடத்து நடத்து.. கடையில இருந்து சாமத்துல வர்றானாம் நல்லபுடி நாச்சி.. சாமத்துல எவண்டா கறிக்கடையை தெறந்து வச்சிருக்கான் உனக்கு?’ என்று அவன் போதையில் பேச, திருப்பி ஒன்றும் பேசாமல் நான் வீடு வந்துவிட்டேன். அந்த நினைப்பில் தான் எப்போ பார்த்தாலும் இருபது ரூபா கட்டிங்கிற்கு கேட்பான். கொடுத்துவிடுவேன். இன்னிக்கி ஐம்பது ரூபாய்க்கு தாவி விட்டான் படவா ராஸ்கோல். இருபது எப்போதும்போல கேட்டிருந்தான் என்றால் மேல் பாக்கெட்டிலேயே இருந்தது. செல்வி கிட்டே போய் நாயம் சொல்வானாம்! சொல்லட்டும். இதையெல்லாம் ஒரு நாயம்னு இவன் போய் சொல்ல அவள் கேட்டுக்கொண்டிருப்பாளா? ‘எந்திரிச்சு போடா!’ன்னு முடுக்கி விட்டிருவா அவ. ’எங்கிருந்து எங்க வந்து எம் புருசனைப்பத்தி என்கிட்டயே கோலு மூட்டுறே? என் வாசல்ல நிக்காதே போடா!’ அப்படின்னுதான் விரட்டுவாள்.
அப்பிடியே ’ஏம் மாமா அப்பிடியா?’ அப்படின்னு என்னையக் கேட்டாள்னா.. ’அம்பது ரூவா குடுக்காததால இப்படி போயி சொல்லப்போறேன்னான்.. சொல்லிட்டானா?’ அப்படின்னு அவளையே திருப்பி கேட்டால் எல்லாம் செரியாகிடும். நான் என் இரண்டு கட்டைப்பைகளையும் நிரப்பிக்கொண்டு கூட்ட நெரிசலில் மெதுவாய் நகர்ந்தேன். அவ்வளவுதான். நேராய் கறிக்கடைக்கு போய் சந்தைநாள் என்பதால் ஒன்பதுமணி வரை கோழி வெட்டணும். சந்தைநாள் என்றால் பத்துமணிக்கித்தான் வீடு வருவேன் என்று செல்விக்கு தெரியும்.
இன்னும் சித்தங்கூரியத்தில் இருட்டு சூழ்ந்துவிடும். இந்திக்காரப்பயல்கள் சந்தைக்கு இப்போதுதான் வந்து கொண்டிருந்தார்கள். இனிப்பார்த்தால் சந்தை முழுக்க இரவில் இவனுங்களே இருப்பான்கள். கூடவே பேண்ட் பனியன் போட்ட இந்திக்காரிகளும். ஊர் அப்படியே இந்த ஆறு வருடங்களில் மாறிப்போய்விட்டது. சந்தைக்குள் சென்றவர்கள் நிப்பாட்டிவிட்டுச் சென்ற இருசக்கர வாகனங்கள் நிற்கும் பகுதிக்கு வந்துவிட்டேன்.
பார்த்தால் எதிர்க்கே மருதாசலம் சரோஜாவை நிப்பாட்டி நாயம் போட்டுக்கொண்டிருந்தான். இவன் என்ன சரோஜாவிடம் அம்பது ரூபாய் கேட்டு நச்சிக்கொண்டு இருக்கிறானா? என்னோட தொடுப்போடு இவனுக்கு என்ன நாயம் வேண்டி கிடக்குது? எனக்கு சுள்ளென கோபம் வந்துவிட்டது. வேகமாய் அவர்கள் நின்றிருந்த இடத்துக்கு விரைந்தேன். இவனுக்கு இன்னிக்கி பூஜை போட்டுட வேண்டியது தான். கிட்டே சென்று என் கட்டைப்பைகளை ஒரு டிவிஎஸ் பைக்கின் பின் சக்கரத்திற்கு அருகாமையில் வைத்துவிட்டு திரும்புகையிலும் அவன் என் தொடுப்போடு நாயம் போட்டு கொளுத்து கொளுத்தென கொளுத்திக்கொண்டிருந்தான். என்னை அவன் பார்க்கவுமில்லை.
என் லுங்கியை மடித்துக்கட்டிக்கொண்டு வேகமாய்ப்போய் அவன் இடுப்பில் ஒரு மிதி வைத்தேன். தொப்பென சாலையின் நடுவாந்திரத்தில் விழுந்தான். ‘என்ற ஆளுக்கூட உனக்கென்னடா நாயம்? சரோஜாகிட்டயும் அம்பது ரூவா கேட்டு நச்சீட்டு நிக்கிறியாடா?’ காலை ஓங்கிக்கொண்டு போய் அவன் வயிற்றில் மிதித்தேன். சரோஜா என்னைப்பின்னால் பிடித்து இழுத்தாள். ‘முருகேசு.. வேண்டாத வேலை செய்யறீடா.. இதெல்லாம் எனக்கு ஆவாது.. போயிரு உன்னுதை இறுக்கீட்டு!’ சரோஜாவா சொன்னாள்? ஆமாம் அவளே தான்!
மருதாசலம் வயிற்றைப்பிடித்துக்கொண்டே எழுந்தவன் என்னை நோக்கி மாடு முட்டுவது போல வந்து முட்டித்தள்ளினான். நேராய் இந்தப்பக்கம் நின்றிருந்த பைக்கில் போய் விழுகையில் அவனும் என் கூடவே விழுந்தான். வண்டியும் சாய்ந்துவிட்டது. ’நங்’கென என் மண்டை எங்கேயோ மோதியது. ‘உடுளே என்னைய! இவனெ இன்னிக்கி கொன்னே போடுறேன்!’ என்று கத்திக்கொண்டு மருதாசலம் என் முகத்திலேயே ஒரு மிதி மிதித்தான். என் முன்நெற்றியில் ஈரமாய் ரத்தம் வருவதை உணர்ந்தேன். ‘மருதாசலா.. செத்துக்கித்துப் போயிருவாண்டா அவன்.. நீ வாடா!’ என்று சரோஜா அவனை இழுத்தாள். நான் வாகாய் மிதிவாங்கிக்கிடந்தேன்.
மருதாசலம் தன் லுங்கியை மடித்துக்கட்டினான். ‘இந்தா புடி’ என்று தன் ஜாக்கெட்டினுள் கைவிட்டு குட்டிப்பர்சை எடுத்த சரோஜா அதன் ஜிப்பை இழுத்து நூறு ரூபாய் நோட்டொன்றை எடுத்து அவனுக்கு நீட்டினாள். அதை வாங்கிக்கொண்டவன் என்னைப்பார்த்து, ‘சரோஜா சொன்னதால உன்னை உசுரோட உட்டுட்டு போறேன்! என்னைய யாருன்னு நெனச்செடா? சரோஜா உனக்கென்ன பொண்டாட்டியாடா.. ஏறீட்டு வந்து ஒதைக்கிறே? சரோஜா எட்டு வருசமா என்னோட ஆள்டா! நீயி இந்த நாயிகிட்ட நிக்காதே சரோஜா.. நீ கெளம்பு.. சந்தைச்செலவை பார்த்துட்டு ஊட்டுக்குப் பத்திரமாப்போ.. நான் கடைக்கி போயிட்டு நேரா ஊட்டுக்கு வர்றேன். உங்கூட விடிய வரைக்கிம் இருக்கேன் இன்னிக்கி. எந்த நாயி வந்து உன்னோட ஊட்டு வாசல்ல ‘என்றாளு.. என்றாளு’ன்னு சொல்லிட்டு நிக்கிதுன்னு பார்த்துடறேன்’ என்று சொல்லிக்கொண்டே அவன் சென்றான்.
சரோஜா கீழே கிடக்கும் என்னை கைகொடுத்து தூக்கிவிடுவாள் என்று பார்த்தேன்.’ புரீச்’சென வெற்றிலைச்சாறை இருவிரல்களை உதட்டில் வைத்து துப்பிவிட்டு கீழே கிடந்த அவளது கட்டைப்பைகள் இரண்டை தூக்கிக்கொண்டு சந்தக்கடை பார்த்துப் போய்விட்டாள். நான் நிதானமாய் கையை நிலத்தில் ஊன்றிக்கொண்டு எழுந்தேன்.
நான் ஆஸ்பத்திரி சென்று ஊசி போட்டு மண்டைக்கு கட்டுப்போட்டுக்கொண்டு கறிக்கடைக்கு வருகையில் ஓனரும், ஓனர் பையனும் மும்மரமாய் முட்டியில் பிராய்லர் கோழிகளை போட்டு வெட்டிக்கொண்டிருந்தார்கள். கடையின் முன்பாக இந்திக்கார கூட்டம் தான். பைகளை கொண்டுபோய் சாலைக்குள் வைத்துவிட்டு ஓனரிடமிருந்து வெட்டுகத்தியை வாங்கிக்கொண்டேன். அவர் எதுவும் என்னைக் கேட்கவில்லை. நானும் அவருக்கு எதுவும் சொல்லவில்லை. வேலைகளை முடித்து விட்டு நான் என் டிவிஎஸ்சில் வீடு வருகையில் மணி பத்தாகியிருந்தது. பக்கத்து வீட்டு வாசலில் குணசேகரனின் பொண்டாட்டி தன் பொண்ணோடு வட்டிலில் கறிச்சோறு தின்றுகொண்டிருந்தாள்.
“உம் பொண்டாட்டிகிட்ட மருதாசலம் உக்கோந்து ங்கொண்ங்கொணன்னு பேசீட்டு இருந்தாண்டா முருகேசா.. சித்தங்கூரியத்துல ரெண்டு கட்டைப்பையில துணிமணிகளை போட்டுட்டு ‘எட்டுமணி பஸ்ஸுக்கு எங்கூருக்கு போறேன்’னு சொல்லிட்டு கிளம்பிட்டா. அட இருளே.. என்ன ஏதுன்னு சொல்லிட்டு போளேன்னு நிப்பாட்டுனேன் நானு.. மருதாச்சலத்துக்கிட்ட கேளுங்க அக்கான்னு சொல்லிட்டு சிட்டாப்பறந்துட்டா! இந்த மருதாச்லம் நாயை என்னடான்னு கேட்டா ‘உய்க்கி உய்க்கி உய்க்கி’ன்னு விசிலு போட்டுட்டே தெக்கால போயிட்டான்!’ என்றாள் குணசேகரனின் பொண்டாட்டி என்னிடம்.
எல்லாம் அம்பது ரூவா பிரச்சனை தான்.
000
