வலி
அல்சைமர் என்னும் மறதியால்
அவமானத்தின்
வலிகளை நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்களா?
பால் சுரக்கும் மார்பு அறுத்து
வெற்று நெஞ்சோடு
கேன்சரின் தையல் தழும்புகளோடு
கண்ணாடியில் முன்
உங்களை கண்டு இருக்கிறீர்களா ?
உங்கள் உடலை சுத்தரிக்கும்
கிட்னி செயலிழந்து
டயாலிசின் வலிகளை உணர்ந்து இருக்கிறீர்களா ?
பசி கொடுமையில் அல்சர் வந்து
வயிற்றை பிடித்து கொண்டு துடித்து இருக்கிறீர்களா ?
நீங்கள் டீனேஜ் வயதை தொடும் நேரத்தில்
உங்கள் குடும்பத்தின் தூணான
தந்தை இறந்து
உங்கள் கண் முன்னே உங்கள் தாயாரை
கடன்காரர்கள் எல்லாம்
பணம் கேட்டு
கொடுமை செய்வதை கண்டு இருக்கிறீர்களா ?
நீயெல்லாம் ஒண்ணுத்துக்கும் ஆகாதவன்
நீயெல்லாம் வாழுறதே
இந்த பூமிக்கு பாரம் என
உங்கள் மனைவியின் வசவு சொல்லுக்கு
ஆட்பட்டு இருக்கிறீர்களா ?
உங்கள் இரத்த உறவுகள்
சிங்களப்படையவனின்
காமஇச்சைக்கு பலியாகி மாண்டதை
உங்கள் கண் முன்னே கண்டு இருக்கிறீர்களா ?
இத்தனை சொல்லியும்
உங்கள் மயிரு காதல் வலி தான் பெரிதென்றால்
இந்த பூமியில்
நீங்களெல்லாம் வாழவே தகுதியற்றவர்கள்!
00

லி .நௌஷாத் அலி (புனைப்பெயர் லி .நௌஷாத் கான் ) என்கிற நான் முது நிலை மேலாண்மை பட்டப் படிப்பு முடித்தவன் .கோயில் நகரமான கும்பகோணத்தில் பிறந்தவன், வந்தாரை வாழ வைக்கும் வந்தவாசியில் வளர்ந்தவன்.
இதுவரை கவிதை -கதை என என்னுடைய படைப்புகள் நூற்றுக்கும் மேற்பட்டவை பல தினசரி நாளிதழிலும் ,வார இதழ்களிலும் ,மாத இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளது .
கவிதை -கதை என இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதி இருக்கிறேன் …
என்னுடைய படைப்புகளை மணிமேலை பிரசுரம் 11 புத்தகங்களையும் , காகிதம் பதிப்பகம் மூன்று புத்தகங்களையும் , ஓவியா பதிப்பகம் ஒரு புத்தகத்தையும் – PGK ஆர்ட்ஸ் ஒரு புத்தகத்தையும் , நண்பர்கள் பதிப்பகம் நான்கு புத்தகத்தினையும் வெளியிட்டு உள்ளது.