நாய் கடிக்கவில்லை
ஆனாலும்
நாயானேன் நான்
அருகில் வருபவர்களைப் பார்த்து
குரைக்கின்றேன்
என்னால் லொள் லொள்ளென
குரைக்க மட்டும் தான் முடியும்
சிலர் கடிக்க வருவதாக
கல்லெடுத்து எறிகின்றனர்
வேறு சிலர் பிஸ்கட் போட்டு
பேசிக்கொண்டிருக்கும்போதே
கம்பெடுத்து அடிக்கின்றனர்
வாலாட்ட மறுக்க மறுக்க
ஓடிச் சென்ற காலம் கடந்து
வாலாட்டத் தொடங்கிய சமயத்தில்
மெதுவாகத் தலையை வருடி
அடிமை சாசனம் எழுதி
கையொப்பம் கேட்க மிரள்கிறேன்
உள்ளார அரற்றுகிறேன்
புட்டானி வலிக்க ஓடுகிறேன்
நாக்கில் நீர் வழிய இளைக்கிறேன்
வண்ணத்தில் புரண்டு
சாக்கடை நிறத்தில்
மாறுவேடமிட்டு
கழுத்தைத் தரையிலொட்டி படுத்து
அகல அகல கண் விரிக்கிறேன்
இன்னும் நாயாகவே..
*******
மறைவெனப்படுவது மரணம் என்பதல்ல
உன்னிடமிருந்து என்னை
உன் கண்களிடமிருந்து என் உருவை
உன் காதுகளிடமிருந்து என் குரலை
உன் நாசியிடமிருந்து என் வாசத்தை
உன் குரலிடமிருந்து என் காதுகளை
உன்கைகளிடமிருந்து என் கைகளை
உன் உடலிடமிருந்து என் உடலை
உன் கேள்விகளிடமிருந்து என் பதிலை
உனக்குத் தெரியாத எனக்குத் தெரிந்த
ஏதோவொரு முட்புதருக்குள்ளோ
கான்கிரீட் கட்டடத்தின் மூளைக்குள்ளோ
மர இருக்கையின் பீடத்தின் மீதோ
ஓடும் தொடரியின் படிகளிடமோ
நின்றுகொண்டிருக்கும் மரத்தின் நிழலிடமோ
ஒரு டம்ளர் தேநீரிடமோ
ஓயாது நடக்கும் கால்களிடமோ
ஒப்படைத்துவிட்டு
சந்திக்கும் திருநங்கைகளிடமும்
பாசி விற்பவரிடமும்
கண் தெரியாத பாடகரிடமும்
நடக்க முடியாத கதைசொல்லியிடமும்
தைலம் விற்பவரிடமும்
குழந்தையை இடுப்பிலிட்டுசுற்றும்இளம்அன்னையிடமும்
குடிவெறியில் ஊருக்குப் போக காசு கேட்பவரிடமும்
அவர்களது பேச்சுகளுக்கான பதில்களிலும்
உன்னை மறைக்காமல்
சுதந்திரமாக எனக்குள் ஓடவிட்டு
நான் மறைகிறேன் மரணமின்றி
*****
எங்கெங்கும் சண்டைக்கான கெக்களிப்பு ஓசைகள்
கூர்மையான ஆயுதங்களைத்தேடி கூட்டங்கூட்டமாக
புற்றீசல்களின் உதிரும் இறகுகளை சூடிக்கொண்டு
கிளம்புகின்றனர்
பேச்சுவார்த்தை பிரிவாகவும்
பிரிவு மோதலாகவும்
மோதல்கள் சண்டையாகவும்
சண்டை போராகவும் ஒட்டியொட்டி வளர்கிறது
ஒரேநிலத்தில் குழியிலிடப்பட்ட விதைகளின் பிணக்கும் பிணைப்பும்
இப்போது திரையிடப்படுகின்றன
கூர்மையைத் தேடும் கதவு திறக்கப்பட்டவுடன்
எங்கே எங்கே என அங்கலாய்த்து ஓடும் கூட்டத்தின்
இடுங்கிய ஓரமொன்றில் சாய்த்தி வைக்கப்பட்டிருக்கும் நெளிந்த கத்தியில்
ஓர் கூர்மையின் பிரதிபலிப்போடு பலகீனத்தின் சுவடுகளும் பதிந்துள்ளன
கையிலேந்தி போரிட தோதான கத்திகளையெல்லாம்
கதவு மூடும் முன் எடுக்க வேண்டுமென
முகமற்ற அசீரிரியின் குரல் அருவ வெளியின்
அத்தனை சாயங்களையும் கீறல்களையும் கோடுகளையும் கொண்டு ஒலிக்கிறது
துரிதகணத்தில் இதற்குமுன் பறந்தோடிய பாய்ச்சலின் வேகம் முளைத்திட
கத்திகளைப் பொறுக்கிப் போடுகின்றர்
உறைகளுக்கு கடுமையான தட்டுப்பாடு
பஞ்சத்தின் வறண்ட தோல்களின் வெடிப்புகளாலான உறைகள்
ஒவ்வொன்றாய் கிழித்து
தூரம் வீசப்பட்டுவிட்டன
இருக்கும் உறைகளுக்குள் ஏகப்பட்ட கத்திகளைச் சொருகும் பணி மும்முரப்பட
ஓருரையின் கத்திகள் போரின் முடிவில்
வேறோர் அறைக்குள் தூக்கி எறியப்படுகின்றன
சமாதானக் கொடியின் வெண்மையால்
குருதிக்கரை துடைக்க துடைக்க
ஓயாத நதியாய் வந்து கொண்டேயிருக்கிறது
ஒருறை கத்திகளில் சில கத்தரிக்கோலாக சேர்ந்து நெளிந்த கத்தியின் கைப்பிடிகளை உடைக்க ஆரம்பித்துவிட்டன.
ஏந்தியவர்களின் கனத்த மௌனத்தின் முடிவில் கொடுக்கப்படும்
பொய் நாவுகளில் முளைத்திட்ட முட்கள்
இடப்படும் முத்தத்தில் குத்திக் கிழிக்கிறது
ஒவ்வொரு முத்தத்தையும் புது குழந்தை ஆவலுடன் பெறும் பரிசென வாங்க வாங்க
இரத்த வாடை குழியை நிரப்பிக் குவிகிறது
*****

அரா
அரா என்ற பெயரில் கவிதை எழுதி வரும் அழகுராஜ் இராசபாளையத்தைச் சேர்ந்தவர். தற்போது புதுவைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் படித்துக் கொண்டிருக்கிறார்.
சுதந்திரச் சிந்தனை இலக்கிய அமைப்பில் பயணிக்கும் இவர் கூதிர் மின்னிதழின் ஆசிரியர்களுள் ஒருவர்.