போன ஞாயிறு பெரியகுளம் வரை போய் வர வேண்டியிருந்தது. உறவினர் வீட்டு நிக்காஹ் (எ) திருமணம். தேனியின் எல்லையைத் தொடும் இடத்தில் நான்கு வழிச் சாலையின் விளிம்பிலேயே மஹால் இருந்தது. ஓப்பியெஸ்ஸின் மஹால் என்று நாலு பேர் சொல்லக் காதில் விழுந்தது.

மாலை நாலு மணிக்குத்தான் திருச்சிக்குக் கிளம்ப முடிந்தது. முக்கால் மணி நேரத்தில் திண்டுக்கல்லை நெருங்கிக் கொண்டிருந்தோம்.

’டீ குடிச்சிர்லாமே?’

      ’டைம் ஆச்சா?’

      ’நாலே முக்கால். நீங்க டீ குடிக்கிற நேரந்தானே?’

      எல்லோரும் ஆமோதித்தார்கள். எங்கே என்று அடுத்து ஆலோசனை.

      ’காலைல சாப்ட்டோமே, அங்கயே குடிக்கலாம்” என்றேன்.

      ’உள்ளே போயி உக்காந்துக்கிட்டிருந்தா லேட் ஆயிரும்த்தா. வேற எடம் பாக்கலாம்’ என்றார் அத்தா.

      ’எதுக்கு உள்ள போயி உக்காரணும்? வெளியிலயே தனியா காப்பி டீ செக்‌ஷன் வச்சிருக்கானே?’

      ’அப்படியா?’

      ’ஆமாம், வடை பஜ்ஜின்னு ஸ்னாக்ஸும் இருக்கும்.’

      காலையில் எட்டரை மணி வாக்கில் பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தபோது திண்டுக்கல் பைப்பாஸ் அஸ்வின்ஸில் இறங்கி உள்ளே நுழைந்தோம். சீருடை தரித்த அக்கா ஒருவர், ‘டிஃபன் இல்லை சார், ஒன்லி காஃபி அண்ட் ஸ்னாக்ஸ்’ என்று தேனொழுக இங்லீசில் நவின்றார். ஏமாற்றமாகப் பார்த்தபோது எங்கே பயணம் என்று விசாரித்துவிட்டு, ‘பெரியகுளம் ரோட்டில் அபூர்வான்னு ஒரு ஹோட்டல் தொறந்திருக்காங்க சார். நல்லாயிருக்கும்’ என்று ஆற்றுப்படுத்தினார்.

      ஒரு மாசம் இந்தத் திசையில் வரவில்லை என்றால் என்னவெல்லாம் மாறிப்போய் விடுகிறது என்று வியந்தபடி பித்தளைப்படிப் பிரிவில் உள்ள பிள்ளையார் நத்தத்தில் அபூர்வாவை எட்டினோம். வாய் பிளக்காத குறை. அப்படி ஒரு மாற்றம்.

      ’போன தடவ வந்தப்ப இது இல்லியே? எப்பக் கட்ட ஆரம்பிக்கிறாங்க, எப்ப முடிக்கிறாங்கன்னே தெரிய மாட்டேங்குது’ என்றாள் பானு.

      பார்த்ததுமே ‘செம ஆம்பியன்ஸ்’ என்று பேர் வாங்கிவிட்டது. ரோட்டைப் பார்த்து டீ காஃபி ஸ்னாக்ஸ் செக்‌ஷன் வைத்து, உள்ளே பார்க்கிங் பண்ண வசதியாக இடம் விட்டு உணவகத்துக்கான வாசல் வைத்துள்ளார்கள். வெளியே முப்பதடி உயரத்தில் ஒரு குட்டி மலைக்குன்று. வழவழப்பான பாறைகளை அடுக்கி வைத்துக் கட்டியிருந்தார்கள். அதில் ஆங்காங்கே செடிகள். ஒரு சின்ன அருவி வழிந்து கொண்டிருந்தது. அது ஒரு குளத்துக்குள் ஓடி வருகிறது. அந்த வாவியுள் கிழக்காசிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட பல வண்ண கோயி மீன்கள் நிதானமாக நீந்திக் கொண்டிருந்தன. கருங்கற்கள் பதித்து இடையிடையே கொரியன் புல் வளர்ந்த அவுட் டோரில் மர மேஜைகளும் இருக்கைகளும்.

      அப்பால் பார்த்தபோது இந்தப் பக்கம் இதுவரை பார்க்காத ஒரு காட்சி. “பவழம் பெவிலியன் இன்ன்” என்றொரு நவீனத் தங்ககமும் அதன் முன்னால் “டாக்டர் முரளிதரன் கிரிக்கட் கிரவுண்ட்” என்னும் விளையாட்டு மைதானமும். பத்துப் பேர் மும்முரமாக கிரிக்கட் விளையாடிக் கொண்டிருந்தனர். பெவிலியனில் அமர்ந்து ஐந்தாறு பேர் சீரியஸாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்பால் நீலமும் பச்சையும் கலந்து கண்ணுக்குக் குளுமையாக மலைத் தொடர்.

உணவக வாசலின் நேரெதிரே ஒரு ‘பே அண்டு யூஸ் டாய்லட்’. அதற்கு ஆங்கிலத்தில் ஒரு போஷான பெயர்: “ஃப்ரெஷ் அன் கோ.” புத்துணர்ச்சி ஆகிச் செல்வதாம். கட்டணம் பத்து ரூவா.

      ”’ஃப்ரெஷ் அன் கோ’ன்னு பேரு வச்சிருக்கான். ஃபாரினர் யாராவது என்னன்னு தெரியாமப் போயி நின்னு ஒரு லெமன் ஜூஸ்னு கேட்டுறப் போறான்” என்றார் சின்னத்தா. ரெஸ்ட்ரூம் நாமம் வாழ்க என்று சிரித்தபடி உள்ளுக்குள் சொல்லிக்கொண்டு எல்லோருடனும் உணவகத்துக்குள் நுழைந்தேன்.

இப்போது சாயந்தரம் தேநீருக்காக அபூர்வாவின் முன் பக்கத்தில் காரை நிப்பாட்டினோம். சின்னம்மாவுக்கும் சின்னத்தாவுக்கும் காஃபி, எனக்கும் அத்தாவுக்கும் லெமன் டீ, இன்னொரு சின்னத்தாவுக்கும் அமீர் டிரைவருக்கும் வழக்கமான தேநீர் என்று கேட்டுக்கொண்டு ஆர்டர் கொடுக்கப் போனேன். சுடச்சுட எலுமிச்சம்பழம் அளவில் உருண்டையான பருப்பு வடைகளைக் கொண்டு வந்து பாத்திரத்தில் ஒருவர் சரித்தார். ஒரு பிளேட் முப்பது ரூபாய், ஆறு இருக்கும் என்றார். இரண்டு பிளேட் என்றேன். கெட்டியான காகிதப் பை ஒன்றில் போட்டுக் கொடுத்தார்.

வடையை பானுவிடம் தர காருக்குத் திரும்பும்போது காருக்கு அருகில் நின்று அத்தாவிடம் ஒருவர் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். ஈரிழைத் துவர்த்தால் முண்டாசு கட்டியிருந்தார். இடது கையில் ஒரு எவர்சில்வர் பேசின். அதன் மேல் துணி போட்டு மூடியிருந்தது. முழங்கைப் பகுதியில் மஞ்சள் பை ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அதன் காதில் கையை நுழைத்திருந்தார். வெள்ளைச் சட்டை நெஞ்சுப் பகுதி தெரிய திறந்து கிடந்தது. பருத்தி வேட்டியை டப்பாவாக மடித்துக் கட்டியிருந்தார். காலில் செருப்பு இல்லை. கார் வந்து நின்ற போதே கவனித்தேன். அவர் கோயில் பக்கமிருந்து வந்து கொண்டிருந்தார்.

 ’நவ்வாப்பளம் ஐயா, சீட்லெஸ் நவ்வாப்பளம். வாங்குங்கய்யா, ருசியா இருக்கும்,’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

”அத்தா, வாங்கட்டுமா?” என்றேன்.

அதற்குள் அவர் என்னிடம் குறுக்கிட்டார், “சீட்லெஸ் நவ்வாப்பளம்ங்கய்யா, வாங்குங்கய்யா, ருசியான நவ்வாப்பளம். பளத்தப் பாருங்க, கனிஞ்ச பளம்ங்கய்யா.”

துணியை விலக்கி பேசினைக் காட்டினார். சிறியதும் பெரியதுமான நாவற்பழங்கள் சதை வெடித்தும் மசிந்தும் கிடந்தன.

“ஐய்யய்ய, கொத கொதன்னு கெடக்கு. கீழ விழுந்தத எடுத்துட்டு வந்தீங்களாக்கும்? மண்ணு ஒட்டீருக்கும், வேணாம் போங்க” என்றேன்.

“ஐயா, கனிஞ்சு கெடக்குறதால அப்படி இருக்குங்கய்யா. ரெண்டு எடுத்து சாப்ட்டுப் பாருங்கய்யா, நீங்களே வாங்குவீங்க. ஐயா சாப்ட்டுப் பாத்தாங்க, கேளுங்க.”

அத்தா என் கையைத் தொட்டார்.

“என்னாங்கத்தா?”

“மண்ணெல்லாம் ஒட்டல. நல்ல பழமாத்தான் வச்சிருக்காரு. இனிப்பா இருக்கு. பாவம், ஒழைக்கிற மனுசன். வாங்கு.”

”எம்புட்டு?”

“அம்பது ரூவாய்ங்கய்யா”

“எவ்வளவு பழம்?”

அவர் மஞ்சப் பைக்குள் கைவிட்டு ஒரு எவர் சில்வர் டம்ளரை வெளியே எடுத்துக் காட்டினார். ’இதுக்கா அம்பது ரூவா?’ என்று கேட்கத் தோன்றிய எண்ணம் சட்டென்று ஆவியாகிவிட்டது. திருச்சியிலும் அப்படித்தான் விற்கிறார்கள். இவரிடம் பேரம் பேசுவது அறப்பிழை என்று பட்டதால், “சரி குடுங்க” என்றேன்.

“நூறு ரூவாய்க்குப் போடட்டூங்களாய்யா?” என்று கேட்டுக் கொண்டே பேசினை எங்கே இறக்கி வைப்பது என்று பார்த்தார். காரின் மீது வைக்கப் போனவர் அவரே சட்டென்று சுதாரித்துப் பின் வாங்கி என்னைப் பார்த்து லேசாகச் சிரித்துவிட்டு தரையில் இறக்கி வைக்கக் குனிந்தார்.

”வேணாம் வேணாம், கீழ வக்யாதீங்க” என்று அவசரமாக அவரைத் தடுத்தேன். நிமிர்ந்து நின்று என்னைப் பார்த்தார்.

டீ காஃபி குடிப்பவர்களுக்காக ஒற்றைக் காலில் நிற்கும் நெஞ்சுயர சதுர மேஜைகள் ஐந்தாறு நிறுத்தியிருந்தார்கள். அதைச் சுட்டிக் காட்டினேன்.

“அந்தா அது மேல வய்ங்க. வாங்க” என்று நகர்ந்தேன். அவர் தயங்குவதாகப் பட்டது.

“ஏன், அது மேல வச்சா திட்டுவாங்களா?”

“இல்லீங்கய்யா, நம்ம பையனோட கடெ. நான் பாக்க கிரிக்கெட் விளையாடிக்கிட்டு வளந்தவன்ங்கய்யா” என்று சொல்லிக் கொண்டே பேசினை ஒரு மேஜை மீது வைத்தார். அருகில் டம்ளரையும் வைத்தார்.

“நீங்களே ஒங்க கையால அள்ளிப் போடுங்கய்யா” என்றார்.

      பருவட்டான பழங்களாகப் பொறுக்கி எடுத்து நிரப்ப ஆரம்பித்தேன்.

      ”ரெண்டு எடுத்து வாயில போடுங்கய்யா. ருசி பாருங்க.”

      அவர் சொன்னதற்காக ஒரு பழத்தை வாய்க்குள் போட்டேன். நல்ல ருசி.

      ”எப்படீங்கய்யா இருக்கு?”

      ”அருமையா இருக்கு.”

      டம்ளர் நிரம்பி விட்டது. போதும் என்றேன்.

      ”இன்னும் நாலு எடுத்துப் போட்டுக்கங்கய்யா, குவியுறாப்ல போடுங்க,” என்றார்.

      வடை வாங்கியிருந்த ஹோட்டல் பையை அவரிடம் தந்தேன். அதனுள்ளாக அடியில் இரண்டு இலைகளை எடுத்து விரித்து வைத்தார். கல்யாண முருங்கை இலை மாதிரி தெரிந்த வேறு ஏதோ ஒரு மரத்தழை. அதில் நாவற் பழங்களைச் சரித்துக் கொண்டே சொன்னார், “சும்மா நிக்கிறீங்களேய்யா, ரெண்டு பளத்த எடுத்து வாய்ல போடுங்க. நீங்க எடுத்துச் சாப்ட்டுக்கிட்டே இருந்தாத்தான் எனக்கு சந்தோசம். அய்யாவுக்கு எந்த வூரு?”

      ”திருச்சி”

      ”ஆங், சரிங்கய்யா.”

      பையை வாங்கிக் கொண்டு அவரிடம் ஐம்பது ரூபாய்த் தாளை நீட்டினேன். வாங்கி கண்ணில் ஒற்றிக் கொண்டார்.

      ”இன்னிக்கு முதல் வியாவாரம்ய்யா இது. போய்ட்டு வாங்கய்யா.”

      சொல்லிவிட்டு அவர் அப்பால் விறுவிறு என்று நடையைக் கட்டினார்.

      ”நவ்வாப்பழத்த சீட்லெஸ்னு சொல்லி விக்கிறான் பாரு” என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே வந்தோம்.

      எனக்கானால், நான் பார்த்துக் கிரிக்கெட் விளையாடி வளர்ந்த பையன் என்று அவர் சொன்னது மீண்டும் மீண்டும் நினைவில் வந்தது. ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன், மாடுகள் மேயும் வெளியில் கிரிக்கெட் விளையாடிய சிறுவர்களில் ஒருவனாக அந்த ஒட்டலின் உரிமையாளர் இருந்திருக்க வேண்டும். அப்போது அவர்களுக்கு இவர் நாவல் கொய்யா கொடுக்காப்புளி என்று விற்றவராக இருந்திருக்கலாம். ஒரு பக்கம் மட்டும் எத்துணை அசுர வளர்ச்சி.

      இன்னொன்றும் உறுத்திக் கொண்டே இருந்தது. மாலை ஐந்து மணிக்கு நான் வாங்கியதுதான் முதல் வியாபாரம் என்று அவர் சொன்னது. அது பொய்யாக இருக்க வேண்டுமே என்று மனம் தவித்தது.

00

ரமீஸ் பிலாலி

1976-இல் திருச்சியில் பிறந்த இவரின் இயற்பெயர் அ.தௌஃபீக் ரமீஸ். திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் தமிழாய்வுத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். மொழிபெயர்ப்பு, கவிதை, கட்டுரை என விரியும் இவரின் எழுத்துப் பணி முக்கியமான ஸூஃபி நூற்களைத் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்ப்பதில் சிறப்படைகிறது. காதலின் நாற்பது விதிகள், ஜின்களின் ஆசான், அஹில்லா, விசித்திரர்களின் புத்தகம், ஒளிமிகு கற்பனையின் ஆழங்களில் ஆகிய ஐந்து ஸூஃபி நாவல்களையும், மீக்கோவும் ஐந்தாம் பொக்கிஷமும் என்னும் ஜப்பானிய சிறார் நாவலையும், ரூமியின் ருபாயியாத், ரூமியின் வைரங்கள், தாகூரின் மின்மினிகள் ஆகிய கவிதை நூல்களையும், நீருக்குள் மூழ்கிய புத்தகம், ரகசியங்களின் திரை நீக்கம், ரூமியின் வாழ்வில் ஞானக் கதைகள் நூறு, சிவப்புக் கந்தகம், ரூமியின் ஞானப் பேருரைகள், உன்னை அறிக, ரூமியின் ஸூஃபிக் கொள்கை, ஆன்மாவின் படித்தரங்கள், ஏகத்துவ நூல், இக்பாலின் நாடோடி நினைவுகள், ப்ரியமுள்ள முஹம்மதுக்கு ஆகிய கட்டுரை நூல்களையும், தர்வேஷ்களின் கதைகள், முல்லா நஸ்ருத்தீன் கதைகள் (ஐந்து பாகங்கள்) ஆகிய கதை நூல்களையும், நாற்பது ஹதீஸ் தொகுப்புகள் (ஒன்பது நூல்கள்) ஆகியவற்றையும் தமிழாக்கம் செய்துள்ளார். என்றார் சூஃபி, மலை முகட்டில் ஒரு குடில், அகத்தில் ஆயிரம் (தொகுதி-1) ஆகியவை இவர் எழுதிய உரை நடை நூல்களாகும். இவை அனைத்தும் சீர்மை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

மற்ற பதிவுகள்
Sorry no related post found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *