அப்பா தவறியதிலிருந்து, ஒரு கை ஒடிந்தது போலிருந்தது. அவர் ஞாபகமாவே இருந்தது. அம்மா வேறு அழாமலே இருந்தது, பயமளிப்பதாக இருந்தது.
வழக்கமாக வரும் தபால்காரர், அன்று காலையிலேயே வந்து விட்டார். “என்னமோ தெரியலை, இது ஏதோ வக்கீல் நோட்டீஸ் மாதிரி இருக்குதுங்க. இங்க ஒரு கையெழுத்தப் போடுங்க” என்றார். கையெழுத்து போட்டவுடன் ஒரு கவரை நீட்டினார். அது ஒரு வக்கீல் நோட்டீஸ் தான். நரிப்பயல் மோகனசுந்தரம் தன்னுடைய வேலையைக் காட்டி விட்டான். ஒரு புறம், எங்களுக்கு உதவுவது போல நடித்து விட்டு, மறுபுறம் அத்தைகள் இருவரையும் தூண்டி விட்டிருக்கிறான்.
1980களில் வந்த சட்ட திருத்தத்தின் மூலமாக, சொத்தில் பெண்களுக்கு சம பங்கு இருக்கிறது என்றும், அவர்களின் அனுமதியின்றி நிலத்தை விற்கத் கூடாது என்றும், மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த வக்கீல் நோட்டீஸ் தெரிவித்தது.
நிலத்தை வாங்குவதாக இருந்த இருவரிடமும், மோகனசுந்தரமே விஷயத்தைச் சொல்லி இருக்கிறான்.
சமாதானம் பேசுவதற்கு நிலம் வாங்குபவர்களில் ஒருவரான அருளின் பட்டக்கோவில் வீட்டில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. எனக்கு கடுமையான கோபம். வாசலிலேயே நின்றபடி சுந்தரத்தைத் திட்டிய படி இருந்தேன்:”இந்த மாதிரி சகுனி வேலை பாக்கறத்துக்கு வேற ஏதாவது வேலை செய்யலாம்”.
“மரியாதை இல்லாமப் பேசாத கண்ணா. அவங்களுக்கு உரிமை இருக்குது, கேட்கிறாங்க. நான் என்ன செய்ய முடியும்?”
“நீயெல்லாம் ஒரு ஆளு, ஒனக்கு மரியாதை ஒரு கேடு”.
“சரி சரி விடுங்க. ஆளா பேசிக்கிட்டே போனா, ஒரு முடிவும் எடுக்க முடியாது. சுந்தரம் கொஞ்சம் உள்ள வாப்பா” என்றார் அருள்.
தனியாக ஏதோ பேசிவிட்டு வெளியே வந்த அருள்,”ஆளுக்கு ஒன்றரை லட்சம் கேட்கிறாங்க கண்ணா” என்றார். “இதெல்லாம் சரிப்பட்டு வராது. நாங்க கோர்ட்டிலேயே பாத்துக்கறங்க. ஆனாலும் இவ்வளவு பேராசை ஆவாது” என்று சந்துரு சொல்ல, அத்துடன் அந்த பஞ்சாயத்து முடிந்தது. நாங்கள் கிளம்பி வந்து விட்டோம்.
ரிசார்ட் அமைப்புக்களுக்கு நல்ல விலையில் கை மாற்றி விடலாம் என்று நினைத்த அருளுக்கு இது பெரிய பின்னடைவு.
அடுத்த வாரமே மீண்டும் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து விட்டான். இந்த முறை பணக்காரர்கள் அனைவரும் கூடும் சேலம் கிளப்பில் கூட்டம். மோகனசுந்தரமும் அவனது சகோதரர்கள் நால்வரும், சின்ன அத்தையின் மகள்கள் மூவரும் என ஒரு பெரிய கூட்டமே கூடியிருந்தனர்.
அனைவருக்கும் வெனிலா கேக், மிக்சர், காபி என சிற்றுண்டிகள் பரிமாறப் பட்டன. இதுதான் விருந்து வைச்சு, கழுத்து வெட்டுவது என நினைத்துக் கொண்டேன்.
“சந்துரு, கண்ணா. அவங்க பக்கத்துலயும் ஞாயம் இருக்குது. சட்டப்படி அவங்களுக்கு உரிமை இருக்கிறதுனால கேட்கிறாங்க. இதுல தப்பு எதுவுமில்ல. என்ன நான் சொல்றது?” என்று ஆரம்பித்தான் அருள்.
“ஒனக்கென்னப்பா சொல்லிட்டுப் போயிடுவ. காலம் பூரா கஷ்டப்பட்டது நாங்க. சும்மா தூக்கிக் குடுக்கச் சொன்னா எப்படி?” சந்துரு சொல்லிக்கொண்டு இருக்கும்போதே சுந்தரம் ஆரம்பித்தான். “எங்க அப்பா அம்மாவும் தான் கல்லு மண்ணு சொமந்திருக்காங்க”.
“ஒங்கள காட்டுக்குள்ள உட்டது எங்க தாத்தா பண்ண பெரிய தப்பு. கல்லு மண்ணு சொமந்திருக்காங்களாமே” என்றேன் கோபமாக.
“கண்ணா, உடுப்பா. பேசிக்கிட்டே இருந்தா எப்படி?. ஏதாவது ஒரு முடிவுக்கு வரணுமில்ல” என்றான் அருள்.
“வேணும்னா,வித்து எல்லாத்தையும் அவங்களுக்கே குடுத்துடலாம். நல்லா இருக்கட்டும்” என்றேன்.
“நீங்க என்ன பிச்சையாப் போடுறீங்க. எங்களுக்கு உரிமை இருக்குது, அதத் தான கேட்கிறோம்”.
“பிச்சை போடுறதுக்குத் தகுதியில்லாத ஆளு நீ”.
“கண்ணா, போதும்பா. தேவையில்லாத எதுக்கு வார்த்தைகள உடறீங்க.இப்படி வாங்க. சந்துரு, நீங்களும் இப்படி வாங்க”.
“பெரிய அத்தைக்கும்,சின்ன அத்தைக்கும் ஒண்ணு. அம்மாவுக்கும்,கண் தெரியாத அத்தைக்கும் ஒண்ணு. மீதி ஆறு ரூபாயில், ஒங்க மூணு பேருக்கும் ஆளுக்கு ரெண்டு. நான் சொல்றது சரிதான?. அவனுங்க ஒண்ணுக்குக் கீழே ஒத்துக்க மாட்டானுங்க. கோர்ட்டுக்குப் போனா வீண் செலவு, அலைச்சல். கலந்து பேசி ஒரு முடிவுக்கு வாங்க. நீங்க சரின்னு சொன்னா, ரெஜிஸ்டர் பண்ணும்போது, ஆளுக்கு ஒரு ரூபாயக் கையில கொடுத்துட்டு, பத்திரத்தில எழுதி வாங்கிக்கலாம்” என்று நீளமாக பேசி முடித்தான் அருள். அவனுடைய பார்ட்னரும் அதையே சொன்னார்.
“சந்துரு, நமக்கு வேற வழியில்ல. இவனுங்க கூட நம்மளாள மல்லுகட்ட முடியாது. கோர்ட், கேஸ்ன்னு அலையறதுக்கு நமக்கு நேரம் கெடயாது. கையில காசும் கெடயாது. அருள் சொல்றதுதான் சரி. என்ன சொல்ற?”.
“நான் என்ன சொல்றது. நமக்கு சீக்கிரம் வேல நடந்தா சரி”.
“சரி சந்துரு, அப்ப அருளுகிட்ட சொல்லிடலாம்”.
“அருளு, எங்களுக்கு ஓகே. மோகனசுந்தரம் வக்கீல் நோட்டீஸக் கேன்சல் பண்ணச் சொல்லுங்க. நல்ல நாளா பாத்து ரெஜிஸ்டர் பண்ணிக்கலாம்.பெரிய அத்தைக்கு அஞ்சு பசங்க. சின்ன அத்தைக்கு மூணு பொண்ணுங்க. அவங்க எல்லாரும் வந்து கையெழுத்துப் போடனும். பின்னால எந்த பிரச்சினையும் வரக்கூடாது. அவனக் கூப்பிட்டுச் சொல்லிடுங்க” என்றேன்.
“சரி, கண்ணா. அப்படியே சொல்லிடறேன். வர்ற புதன்கிழமை நல்ல நாளா இருக்குது. ரெண்டு ரூபா ஏற்கனவே கொடுத்தாச்சு. மீதி எட்டு ரூபா, ரெஜிஸ்டர் பண்ணும்போது கொடுத்துடலாம்” என்றான் அருள்.
வேலைக்காக ஏற்கனவே இரண்டு லட்சமும், நான் வாங்கி விட்டதை அப்போது தான் உணர்ந்தேன்.
அன்றிரவு துளிகூட தூக்கமில்லை. நினைவுகள் அலை அலையாக மேலெழுந்து வந்து கொண்டே இருந்தன. எங்களது பால்யம் முழுவதும் இந்த நிலத்தில் தான் கழிந்திருக்கிறது.
வீட்டுக்கு இடதுபுறமாக நடந்தால் வரும் சிறிய துண்டு நிலத்தில் ஒரு ஒற்றைத் தென்னை மரம் இருக்கும். ரொம்பவும் உயரமேதுமில்லை. காய்களும் அதிகமிருந்ததாக ஞாபகமில்லை. பத்தாம் வகுப்பில், விடுமுறை நாட்களில் பெரும்பாலும் அந்த மரத்தடியிலேயே அமர்ந்திருப்பேன். அங்கு செல்லாத நாட்களில், எனது படிப்பு பூர்த்தி ஆகாமலே இருக்கும். பத்தாம் வகுப்பில் எனது பள்ளியில் முதல் மதிப்பெண் பெறுவதற்கு அந்தத் தென்னை மரமும் ஒரு காரணம்.
எங்களுக்குப் பிடித்த நாயான மணியை எப்படி மறக்க முடியும்? எங்களுடனே அவனும் வளர்ந்து வந்தான். எங்களின் பாஷை அவனுக்கு நன்றாக புரிந்திருந்தது. விளையாட்டாகவே அவனுக்குப் பலதும் பழக்கியிருந்தோம்.ஒரு நாள் அவனுக்கும் வயதானது, நோய் வாய்ப்பட்டு இறந்து போனான். அவனுக்கு செங்கற்களை அடுக்கி வைத்து ஒரு கோவில் கட்டினோம். தினமும் பள்ளி விட்டு வந்ததும், அங்கு சென்று, கற்பூரம் ஏற்றிக் கும்பிடுவோம். வருடக்கணக்கில் இது தொடர்ந்தது.
சிறுவயதில் பள்ளி செல்லும் வேளையில் வேக வைத்த முட்டையைத் தின்று விட்டு, வாயுக் கோளாறால், படுத்துக் கொள்வேன். அம்மாவுக்கும் குணமாக்கும் வழிமுறைகள் எதுவும் தெரியவில்லை. தொப்புளுக்கு விளக்கெண்ணெய் தடவி விடுவார். பக்கத்து காட்டு சேகர் பள்ளி செல்வதற்கு வந்து விடுவான். அவனை வைத்துக் கொண்டு அப்பாவிடம் சரமாரியாக திட்டு வாங்குவேன்.
பள்ளி செல்லும் வயதில், எனக்கு அடிக்கடி சூடு பிடித்து விடும். பகலெல்லாம் வெயிலில் அலைந்து திரிந்து விட்டு, இரவில் சூடு பிடித்துக்கொண்டு அவஸ்தைப் படுவேன். எரிச்சலுடன், சொட்டுச் சொட்டாக சிறுநீர் கழித்தல் பெரும் வலி. சில நேரங்களில் மணிக்கணக்கில் வாசலிலேயே அமர்ந்திருப்பேன். அப்பாவிடம் இதற்கும் நன்றாக திட்டு வாங்குவேன்.இதற்கும் அம்மாவுக்குத் தெரிந்த ஒரே கைவைத்தியம், தொப்புளில் விளக்கெண்ணெய் தடவி விடுதல். பல மணி நேரங்கள் கழித்து, எரிச்சல் அடங்கிய பிறகு, தூங்க வருவேன்.
மாதா மாதம், தாத்தா வாங்கி வரும் காமிக்ஸ் புத்தகங்களைப் படித்து விட்டு, சொந்தமாக ஏதோ கிறுக்கி விட்டு, அண்ணன் சந்துருவிடம் காட்டுவேன். எடுத்தவுடன் “என்னடா இது, நல்லாவே இல்லடா” என்பதே பெரும்பாலான நேரங்களில் அவன் விமர்சனமாக இருக்கும்.
தாத்தாவுடன் கயிற்றுக் கட்டிலில் படுத்தபடியே, நானும், தம்பி ராஜுவும் கதை கேட்டதையெல்லாம், எப்படி மறக்க முடியும்? திருக்குறள், பகவத்கீதை, சுதந்திரப் போராட்டக் கதைகள், காந்தியைப் பற்றிய கதைகள், சுக்தேவ், ராஜ்குரு ஆகியோரின் நாட்டுப் பற்று, காமராஜர் தன்னைப் பெயர் சொல்லி அழைப்பது என மறக்க முடியாத எத்தனையோ கதைகள்.
பள்ளிக்கு நடந்து சென்று வந்தது, மற்றொரு மறக்க முடியாத அனுபவம்.
தினமும் சேகர் வீட்டிற்கு வந்து விடுவான். இருவரும் சேர்ந்து தான் பள்ளிக்குச் செல்வோம். ஐந்தாம் வகுப்பு வரை மேட்டுப்பட்டி ஊருக்குள் இருக்கும் ஆரம்பப் பள்ளியில் படித்தோம். மூன்றாம் வகுப்பு வரை அப்பா தினமும் சைக்கிளில் என்னையும் தம்பியையும் அழைத்துச் செல்வார். நான்காம் வகுப்பில் இருந்து நடக்க ஆரம்பித்தோம். ஏறக்குறைய ஒரு மைல் தூரத்திற்கும் அதிகமாக இருக்கும். காட்டு வழியைக் கடந்து, ரோட்டில் சிறிது தூரம் நடந்து, பிறகு சீனமில்லைக் கடந்து மேட்டுப்பட்டி செல்லும் பாதையில் நடப்போம்.
சீன மில், அந்த சுற்று வட்டாரத்தில், பல விவசாயிகளுக்கும் படியளந்திருக்கிறது. கிழங்குக்கு விலை சற்றுக் குறைவாகக் கிடைத்தாலும், பணம் உடனே கிடைத்து விடும். பலரும் விவசாய வேலைகளை விட்டு விட்டு, சீன மில்லில் சேர்ந்தார்கள். மில்லை ஒட்டிய காம்ப்பௌண்ட் அருகிலேயே அவர்களின் வீடும் இருக்கும். அந்த வீடு வழியாக, பள்ளிக்குச் செல்லும் போதெல்லாம், அது ஒரு பெரிய மாளிகையாகத் தோன்றும். அந்தப் பெரிய வீட்டிலிருந்து, குதிரை வண்டியில் பள்ளிக்கு வருவார்கள். கூடப் படித்த கணேசன் பிறகு சீனமில்லில் வேலைக்குச் சேர்ந்து விட்டான். ஒரு முறை வீட்டுக்கு வந்து, பை நிறைய ஜவ்வரிசி கொடுத்தான்.
சீனமில்லைக் கடந்து கொஞ்ச தூரத்தில் போயர் மில் வரும். அங்கும் கிழங்கு வண்டிகள் வந்த படியே இருக்கும்.
போயர் மில்லைத் தாண்டியதும், இடது புறமாக இருக்கும் முனியப்பன் கோவிலில் தினமும் கற்பூரம் ஏற்றிக் கும்பிடுவோம். இதையெல்லாம் சேகர் வீட்டிலிருந்து எடுத்து வந்து விடுவான். ஆறாவது வகுப்புக்கு மேட்டுப்பட்டி மெயின் ரோட்டில் இருக்கும் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்த பிறகு, இக்கோவிலை மிகவும் மிஸ் செய்தேன்.
பள்ளிக்கு அருகில் ஒரு பெட்டிக்கடை இருக்கும்.எல்லோரும் முட்டக்கட என்பார்கள்.அப்போது எங்களுக்கு ஐந்து காசுகள் பாக்கெட் மணி கிடைக்கும். பெரும்பாலும் புளிப்பு மிட்டாய் வாங்கிச் சாப்பிடுவோம். ஒரு நாள் கடையில் வாங்கிக் கொண்டு இருந்தபோது, ஒரு பையன் ஸ்டைலான ஒரு சைக்கிளில் வந்திறங்கி, காகிதத்தில் கூம்பு வடிவில் சுற்றப்பட்ட கடலை வாங்கினான். அப்போதுதான் அந்த சைக்கிளை முதன்முதலில் பார்த்தேன். மிகவும் அழகாக இருந்தது. அவன் சென்றதும், “எனக்கும் அந்தக் கடலை கொடுங்க” என்று ஐந்து காசை நீட்ட,”அதெல்லாம் முப்பது பைசா. போயி மீதிக் காசையும் கொண்டா” என்று அனுப்பி விட்டார். இன்று வரை, கூம்பு வடிவில் சுற்றப்பட்ட கடலையின் மீதான ஆசை தீரவில்லை.
மூவருக்கும் கிரிக்கெட் மீது அவ்வளவு ஆர்வம். கொஞ்சம் கொஞ்சமாக காசு சேர்த்து வைத்து, ஸ்டம்ப், பேட், ஆரஞ்சு பால் எல்லாம் வாங்கி விளையாடுவோம். வீட்டின் முன்பிருந்த நடக்கும் தடம் தான் எங்களுக்கு விளையாட்டு மைதானம்.
அப்போது கபில்தேவ் தலைமையில் இந்திய அணி, உலகக் கோப்பையை வென்ற தருணம். ரேடியோவில் தமிழ் வர்ணனை அவ்வளவு சிறப்பாக இருக்கும். அப்போதிலிருந்து அண்ணன் சந்துரு, கோடு போட்ட நோட்டில் இந்தியா விளையாடிய ஒவ்வொரு போட்டியைப் பற்றியும் எழுத ஆரம்பித்தான்.
பின்னர் எங்களது மைதானம் இடம் மாறியது. கடைசி எல்லையில், கல்லுக்கட்டுக்குப் பக்கத்தில், லைன்மேன் முத்துவின் காட்டுக்குப் பக்கத்தில் உள்ள காட்டில் ஆட ஆரம்பித்தோம். சற்றே முன்னேறி கார்க் பாலில் ஆட ஆரம்பித்தோம். எத்தனையோ விழுப்புண்கள். முத்துவின் மகன்கள், சந்திரனும் இந்திரனும், விளையாட வருவார்கள். ஒரு முறை, இந்திரன் வாயில் பிங்க் கலராக இருக்க,”என்னடாது, உதடெல்லாம் கலரா இருக்குது என்று கேட்க,”இப்பதான் ரஸ்னா குடிச்சிட்டு வந்தேன்” என்றான். அப்போதெல்லாம் ரஸ்னா குடிப்பது பெரிய விஷயம். நீண்ட நாட்களுக்கு எனது ரஸ்னா ஆசை தீரவில்லை.
ஒரு முறை எல்லோரும் சேர்ந்து நடந்து வந்து கொண்டு இருந்தோம். திடீரென ரயில்வே பாலத்துக்கு அருகில் வரும்போது, தண்டவாளத்தில் ஒண்ணுக்கு அடித்தால் என்ன என்று யோசனை தோன்றியது. எல்லோரும் ஏறி அடித்துக் கொண்டு இருந்தபோது, ரயிலின் சத்தம் கேட்டது. உடனே எல்லோரும் தபதபவெனக் கீழிறங்க, ராஜ் மட்டும் மெதுவாக அடித்துக்கொண்டு இருக்க, எல்லோரும் கத்த, பதட்டத்தில் மேலிருந்து உருண்டு விழுந்தான். நன்றாக கைகால்களெல்லாம் சிராய்ப்பு. பின்னால் வந்த அண்ணன் சந்துருவிடமிருந்து, எனக்கும், ராஜூக்கும் தர்ம அடி. வீட்டுக்கு வந்து அமைதியாக படுத்துக் கொண்டான். சந்துரு அம்மாவிடம் சொல்ல, அம்மா அப்பாவிடம் சொல்லி, போர்வையில் ஒளிந்திருந்த, எனக்கும் ராஜூக்கும் மீண்டும் அடி விழுந்தது.
சேகர் ஒரு முறை வீட்டுக்குப் பின்னால் இருக்கும் பாரஸ்ட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறான். எங்கு பார்த்தாலும் முட்செடிகளாக இருக்கும். செருப்புடன் நடந்தாலும் முட்கள் கால்களில் ஏறி விடும். நட்டுவாக்காலி, தேள், பூரான் போன்றவையும், பாம்புகளும் சாதாரணமாக பார்க்கலாம். மலை மீது ஏறும் வழி ஆரம்பிக்கும் இடத்திலிருந்த ஆலமரம் வரை சென்று திரும்பியிருக்கிறோம். செல்வி அக்கா, பாட்டப்பன் எனப் பலரும் காட்டில், ஆடு மேய்க்கச் செல்வார்கள். சேகரின் அப்பாவும் அடிக்கடி ஆடு மாடு மேய்க்கச் செல்வதுண்டு.
தாத்தா ஒரு முறை, நிறைய யூகலிப்டஸ் மரங்களை நட்டு வளர்த்து வந்தார். சில மரங்கள் மட்டுமே பிழைத்து, நெடுநெடுவென வளர்ந்தன. பதம் வந்ததும், அறுத்து எடுத்துச் சென்று விட்டனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் வரையிலான விடுமுறையில், தாத்தாவுடன் சேர்ந்து மாடு மேய்க்கச் செல்வதுண்டு. நிறைய கதைகள் சொல்வார். தண்ணீர் பாய்ச்ச, பலரும் கற்றுக் கொடுத்தனர். மம்முட்டி கொஞ்சம் அசந்தால், காலைப் பதம் பார்த்து விடும். கடப்பாரையைக் கையாளும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் கால்களில் படுவதற்கான அத்தனை சாத்தியங்களும் உண்டு. ஏர் உழும் போதும், பறம்பு அடிக்கும் போதும்,கவலை இறைக்கும் போதும், பின்னாலேயே ஓடி இருக்கிறேன்.
தொட்டியில் குளிப்பது அவ்வளவு சுகமான அனுபவம். வார இறுதியில், நீண்ட நேரம் ஆட்டம் போடுவோம். ஆழம் குறைவு என்பதால், மேலிருந்து குதிக்க முடியாது. ஆனால் உள்ளுக்குள்ளேயே குட்டிக்கரணம் அடிக்க இயலும். அவ்வாறு அடிக்கும் போது, பல முறை தண்ணீர் மூக்கில் ஏறி, புரை ஏறும். நன்றாக திட்டு வாங்குவோம்.
இப்படியாக ஒரு வாழ்நாள் முழுதும் நினைவு கொள்ளப் போதுமான நினைவுகள், இந்த நிலத்தில் எங்களுக்கு இருந்தது. அது கைவிட்டுப் போகப் போகிறது என்பதை என்னால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. ஆனால் வேறு வழியில்லை. நிலைமை கை மீறி விட்டது.
அந்த புதன்கிழமையும் வந்தது. அன்று விடுமுறை எடுத்திருந்தேன். பக்கத்து காட்டுச் சேட்டு காரில் சென்றோம். அயோத்தியா பட்டினத்தில் தான் பத்திரப் பதிவு அலுவலகம் இருந்தது. அப்பா வேலை செய்து வந்த, யூனியன் அலுவலகத்திற்கு அருகிலேயே இருந்தது. பேருந்து நிறுத்தத்தில் இருந்து நடக்கும் தூரம். அருகிலேயே கஸ்தூரிபா கல்யாண மண்டபம் இருந்தது.
மண்டபம் தாண்டியதும் ஒரு காவலர் செக் போஸ்ட். அதைத் தாண்டி நடந்தால், சோலையப்பன் சைவ உணவகம். அப்பாவுக்கு மிகவும் பிடித்த உணவகம். இந்த உணவகம் தாண்டினால் இடதுபுறம் ஒரு சந்து. அந்த சந்து தொடங்கும் இடத்தில், குறைந்தது இரண்டு மூன்று ஜெராக்ஸ் கடைகள். எப்போதும் பிஸியாகவே இருந்தன. சந்தில் தான், பழங்காலப் பத்திரப் பதிவு அலுவலகம் இருந்தது. நிறைய பேர், எழுதும் டேபுளை வைத்தபடி, அமர்ந்திருந்தனர். அவர்களைச் சுற்றி நிறைய கும்பலிருந்தது. அவர்கள் பத்திரம் எழுதுபவர்கள் என்று தெரிந்து கொண்டேன்.
எங்களுக்கு முன்னரே, அருளும் அவனது பார்ட்னரும் வந்திருந்தார்கள்.
“சந்துரு, கண்ணா. ஏற்கனவே உள்ளார பேசியாச்சு. சீக்கிரம் வேலய முடிக்கனும். அத்தைங்க ரெண்டு பேரும் வந்துட்டாங்களா?”.
“வந்தாச்சுங்க. அந்த மோகனசுந்தரம் பய எதுவும் புதுசா வில்லங்கம் பண்ணாம பாத்துக்குங்க.”.
“அத நாங்க பாத்துக்கறம். சரி,பின்னால போலாம்.நான் சுந்தரத்தக் கூப்புடறன். நீங்க அத்தைங்களை வரச்சொல்லுங்க”.
பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு அருகிலேயே அனைவரும் கூடினோம்.
சுந்தரம் மீண்டும் ஆரம்பித்தான்:”நாங்க அஞ்சு பேரு இருக்கிறம். வெறும் ஒரு ரூபா குடுத்தா, எப்படி பத்தும். ஆளுக்கு ஒண்ணரை குடுத்தா, கையெழுத்துப் போடுறம். இல்லன்னா, பஸ் ஏறி கெளம்பிக்கிட்டே இருப்போம்.அருளு, நீங்க தான் பார்த்துச் செய்யனும்”.
“ஏங்க அருளு, பேராசைக்கு ஒரு அளவு வேணாமா? அதுவுமில்லாம ஆளுக்கு ஒரு ரூபான்னு ஒத்துக்கிட்டுதான வந்தாங்க. இப்ப கடைசி நேரத்தில இப்படிப் பேசினா எப்படிங்க? இது நியாயமாத் தெரியலைங்க” என்றேன்.
இந்த முறை, சந்துருவுக்குச் சரியான கோபம் வந்து விட்டது.”இந்த மாதிரி செய்யறதுக்கு பேசாமப் போயி, பிச்சை எடுத்துப் பொழக்கலாண்டா நீயி?” என்றான் சுந்தரத்தைப் பார்த்து.
“சந்துரு, வாய அடக்கிப் பேசு. ஒன்னோட காசும் வேணாம், ஒண்ணும் வேணாம். அம்மா, வா, கெளம்பலாம்.” என்றான்.
“சந்துரு, கொஞ்சம் கோபப்படாத இருங்க. யாருக்குக் குடுக்கறீங்க. ஒங்க அத்தைங்களுக்குத் தான. அவங்க வாழ்த்துனா ஒங்களுக்கு நல்லது தானே. ஒத்துங்கங்க”.
“இருங்க, கொஞ்சம் தனியாப் பேசனும்”.
“என்னடா பண்ணலாம் கண்ணா?”. “வேற வழியில்ல சந்துரு. கொடுத்துடலாம். ராஜ், நீ என்ன சொல்ற?”.
“எனக்கும் வேற வழியில்லன்னுதான் தோனுது. இதுக்கு மேல இழுக்க முடியாது. சரின்னு சொல்லிடலாம்”.
மீண்டும் பழைய இடத்திற்கே வந்து, அருளிடம் சொன்னேன்:”சரி, அருளு. அப்படியே செஞ்சிடலாம். ஆளுக்கு ஒன்றரை வாங்கிக் கிட்டு, எல்லோரையும் கையெழுத்து போடச் சொல்லுங்க”.
முதலில் பெரிய அத்தைக்குக் கொடுத்த பின், ஐந்து மகன்களிடமும் கையெழுத்து வாங்கப்பட்டது.
அதன் பின்னர், சின்ன அத்தை. அத்தையின் மூன்று பெண்களிடமும் கையெழுத்து பெறப்பட்டது. சின்ன அத்தையின் பையன் முருகன் பம்பாயில் எங்கோ இருப்பதால் அவனைக் கணக்கில் சேர்க்கவில்லை.
அத்தைகளைத் தவிர மற்றவர்கள் கிளம்பினார்கள்.
அலுவலகத்தில் அடுத்தது எங்களின் முறை.மூவரிடமும்,ஏகப்பட்ட இடங்களில் கையெழுத்தும் கைரேகைகளும் வாங்கினார்கள். இந்த விற்பனைக்கான அலுவலகக் கட்டணம் செலுத்தியதும், ஆபிஸரின் முன்பு கையெழுத்திட்டோம். மீதித் தொகையைப் பெற்றுக் கொண்டோம்.
வெறும் இருபதே நிமிடங்களில் எல்லாம் முடிந்து போனது. கைவிட்டுப் போனது எங்களின் வைரம், வைடூரியம், மாணிக்கம் எல்லாம். மூவரின் கண்களும் கலங்கியது. விட்டால் வாய் விட்டு அழுதிருப்பேன்.அம்மாவும் யாரிடமும் பேசவில்லை.அப்பா இறந்த போது, எப்படி இறுக்கமாக இருந்தாரோ, அப்படியே இருந்தார்.
காலி செய்வதற்கு இரண்டு வாரங்கள் நேரம் வாங்கியிருந்தோம். அண்ணன் சந்துரு அயோத்தியாபட்டிணத்திலேயே, வாடகை வீடு பார்த்து விட்டான். அம்மா அவனுடன் தங்க விருப்பம் தெரிவித்தார். நான் மனைவியின் ஊரான தாரமங்கலத்திலேயே ஒரு வாடகை வீடு எடுத்திருந்தேன்.தம்பி ராஜ் வேலை செய்யும் பெங்களூரில் ஏற்கனவே ரூமில் தங்கியிருந்தான்.
வேலை செய்யும் ஆறுமுகத்திடம் சொல்லியிருந்தோம். அவனும் தனது மாமனாரின் வீட்டில் தங்கியிருந்து, டவுனில் வேலை தேட ஆரம்பித்திருந்தான். காலி செய்யும் வரை தினமும் காட்டுக்கு வந்து கொண்டு இருந்தான்.
குண்டனையும், கூர் கொம்புக் காரனையும் விற்பதென முடிவானது. வயதானதால், ஏர் உழுவதற்கோ, பறம்பு ஓட்டவோ யாரும் கேட்கவில்லை. அறுப்புக்குக் கேட்டவனிடம்,வேறு வழியின்றி ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று. காலையில் வேலைக்குக் கிளம்பும் போதே, மாடுகளைப் பிடித்துக் கொண்டு போக வந்து விட்டார்கள்.
குண்டனை தடவிக் கொடுத்துக் கொண்டே இருந்தேன். என்ன புரிந்து கொண்டானோத் தெரியாது. ஆனால் அவனது கண்களில் கண்ணீரைப் பார்த்தேன். என்னாலும் தாங்க முடியவில்லை. நாங்கள் ஒன்றாகவே வளர்ந்தோம்.அன்றைய நாள் ஒரு கடினமான நாளாக அமைந்தது.
அதற்குள் அருள், காட்டினைப் பார்ப்பதற்கு, பார்ட்டிகளைக் கூட்டி வர ஆரம்பித்தான். ஏதோ ரிசார்ட் கட்டுவதாகப் பேசிக் கொண்டார்கள். எங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இந்த காட்டுக்கு, மலையடிவாரத்தில் ரிசார்ட்டில் யார் வந்து தங்குவார்கள்?
அப்பா வைத்திருந்த அட்லஸ் சைக்கிளை, ஆறுமுகத்திடம் கொடுத்து விட்டோம்.
கண் தெரியாத அத்தையை, நானும் சந்துருவும், சுழற்சி முறையில், ஆறு மாதங்கள் பார்த்துக் கொள்வது என்று முடிவானது.
அம்மாவும் சரோஜினி அத்தையும் சேர்ந்து, தங்களுக்கு வந்த பாகத்தில், அயோத்தியா பட்டினத்தில் ஒரு காலி நிலத்தை வாங்கிப் போட்டார்கள்.
எனது பங்கிற்கும் மேல், வேலைக்காக, ஏற்கனவே பணம் வாங்கி இருந்ததால், ஒரு பைசாவும் எனக்கு வரவில்லை. பெரிய மனதுடன், சந்துருவும் ராஜூவும், மேற்கொண்டு பணம் எதுவும் தர வேண்டியதில்லை என்று சொல்லி விட்டார்கள்.
எனக்குத் திருமணம் ஆனதும், பெரிய வீட்டுக்கு அருகிலேயே ஒரு சிறிய ஓட்டு வீடு கட்டியிருந்தோம். அதிலேயே நிறைய பொருட்களைக் குவித்து வைத்திருந்தோம். கொஞ்சம் கொஞ்சமாக, பொருட்களை தாரமங்கலத்திற்கு மாற்ற ஆரம்பித்தேன். சந்துருவுக்கும் அவனது பொருட்களை அயோத்தியா பட்டிணம் வீட்டிற்கு, மாற்றுவதற்கு உதவி செய்தோம்.
சேகர் தினமும் வந்து ஏதாவது ஒரு வகையில் உதவி செய்தான். அவனுக்கும் திருமணமாகியிருந்தது. அவனும் விரைவில் ராசிபுரம் செல்லும் வழியில் உள்ள நூல் மில்லுக்கு வேலைக்குச் செல்ல உள்ளதாகவும் சொன்னான்.
ஒரு தேன் கூட்டில் யாரோ கல்லெறிந்ததால், தேனீக்கள் வழி தெரியாமல் தவித்தன.
இரண்டு வாரங்கள் கழித்து அந்த நாளும் வந்தது.
அம்மாவைப் போல, எங்களுக்கு சோறூற்றி வளர்த்த மண்ணிலிருந்து கிளம்பினோம். எங்களையும் அறியாமல் கண்ணீர் வழிந்தபடியே இருந்தது. துடைக்கவும் சொரணையற்றுப் போயிருந்தோம்.
சேகர் காலையிலேயே வந்து விட்டான்.”எல்லாமே நல்லதுக்குத் தான் கண்ணா. போற எடத்துல நல்லாவே இருப்பீங்க. கொஞ்ச நாளைக்கு காட்டு ஞாபகம் இருக்கும். அப்புறம் சரியாப் போய்டும். அந்த கோதண்டராமன் நம்மளக் கைவிட மாட்டான். தைரியமா இரு” என்றான். எனக்கு என் தாத்தாவே சொல்வது போலிருந்தது.
கண் தெரியாத சரோஜினி அத்தை, கோதண்டராமன் இருக்கும் மலையை நோக்கி தடாலெனக் கீழே விழுந்து கும்பிட்டது. “ஏழு மலையான், கோதண்டராமா, நீதான் பசங்களக் காப்பாத்துனும்” என்று பெருங்குரலெடுத்துக் கதறியது. எல்லோரும் அழுதபடியே வண்டியில் ஏறினோம்.
-வளரும்

கண்ணன்
வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி. முதல் கவிதை விருட்சத்தில் 30 வருடங்களுக்கும் முன்பு வெளியாகியது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளது.