வேப்பம்பூ உதிர்ந்துகிடந்த பள்ளி மைதானத்தில் சிவப்பு இறக்கைகள் கொண்ட பட்டாம்பூச்சி ஒன்று இறந்து கிடந்தது. காற்றில் பறக்கவிட்ட காலாண்டுத்தேர்வு தரவரிசையட்டையைத் துரத்திப் பிடிக்க ஓடிக்கொண்டிருந்த வள்ளி பட்டாம்பூச்சியை நெருங்கினாள். குழந்தைக்கே உரிய கவனச்சிதறலால் வெண்மஞ்சள் பூக்களுக்கிடையே மல்லாந்து கிடந்த செவ்வுடல் அவளை ஈர்த்தது. அருகே சென்று கையிலெடுத்தாள். இறந்துவிட்டதை உணர்ந்த வள்ளி மனதில் “செத்துவிட்டதே!” என்கிற கருணையொடு “இருந்தொ அழகாயிருக்கெ!” என்று பூரிப்பு. நிலத்திற்குமேல் புடைத்துக் கிடந்த வேரில் தங்கியிருந்த தரவரிசையட்டையை எடுத்துக் கொண்டு வகுப்பிற்குச் சென்றாள் வள்ளி.
மதியம் மணி மூன்றானது. பள்ளி முடிய இன்னும் ஒரு மணி நேரம்தான் இருக்கிறது. ஆனால் குழந்தைகளின் கடிகாரத்தில் ஒரு மணி நேரம் என்பது கடிகாரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நடுமுள் 360 முறை அசைந்தோட வேண்டும்; அதுவும் கடைசிப் பாடவேளையின் ஒரு மணி நேரம், வகுப்பிற்கு வரும் ஆசிரியர் சொல்லும் அத்தனையும் எத்தனை மெதுவாகச் செல்லும் தெரியுமா? வகுப்பறை வாசலில் சிதறிக் கிடக்கும் திண்பண்டத் துகளை எடுத்துக்கொண்ட எறும்பு மெல்ல மெல்லத் தடுமாறித் தவறவிட்டு உருட்டிக்கொண்டு மெல்ல மெல்ல மெல்லப் படிகட்டுகள் இறங்கி அதன் இருப்பிடம் செல்லும் நேரம்.
வீட்டிற்கு வரும் வழியெல்லாம் இந்தப் பட்டாம்பூச்சியை என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டே வந்தாள். வீட்டை அடைந்தவள் பக்குவமாய்ப் பாடப்பையைக் கழட்டி வைத்துவிட்டு, கைகளுள் அடங்காத பட்டாம்பூச்சியைத் தன் மென் விரல்களால் அமிழ்த்து மூடி வெளியே வந்தாள். வாசலில் அமர்ந்து மண்ணைக் கிளறிக்கொண்டே யோசித்தாள். அதனை அப்படியே விடுவதற்கு விருப்பமில்லை, உயிரோடில்லாததை உடன் வைத்திருக்கவும் மனமில்லை. “என்னடி ஊனிஃபாம் கூட மாத்தாம வெளிய போயிட்ட?” வள்ளியின் அம்மா அதட்டும் சத்தம் “தோ, வந்துட்டேம்மா”. இவ்வளவு நேரம் கையில் காத்து வைத்திருந்த சடலத்தை, தன்னிச்சையாய்த் தோண்டியக் குழியில் வைத்து மண்ணைப் போட்டு மூடிப் புதைத்துவிட்டாள்.
உடை மாற்றிக்கொண்டாள். அம்மாவிடம் தரவரிசைப்பட்டியலைக் காட்டி கையெழுத்தும் பெற்றுக்கொண்டாள். வள்ளி படிப்பில் சுட்டியெல்லாம் கிடையாது; அனைத்துத் தேர்வுகளிலும் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சியடையக்கூடிய சுமாரான மாணவிதான். வள்ளியின் அம்மா வசந்தாவிற்கு அவள் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சியடைந்தால் போதும், பிறகென்னவென்றால் வள்ளிக்கு நண்பர்கள் யாருமில்லை என்கிற வருத்தம். அதேசமயம் வள்ளி தனிமையில் மகிழ்வாய் தான் இருக்கிறாள். பறக்கும் அனைத்தும் வள்ளிக்குப் பிடித்தமானவை. காற்றில் பறக்கின்ற சருகைத் துரத்தும் வள்ளியை பறந்திருந்தக் களைப்பில் மின்கம்பியில் அமரும் காக்கையோ குருவியோதான் ஆசுவாசப்படுத்தும். மூன்றாம் வகுப்புக் குழந்தை இப்படியிருப்பது வசந்தாவை அவ்வப்போது குழப்பத்திற்குள்ளாக்கியது.
அம்மாவிடம் எதைப்பற்றியும் சொல்லவில்லை. அறைகுறையாய் வீட்டுப்பாடங்கள் செய்துவிட்டு உறங்கிப்போன வள்ளி விடியற்காலையே எழுந்துவிட்டாள். புதைத்தப் பட்டாம்பூச்சி பற்றி யோசித்திருந்தவள் மனதில் மரங்கள் பற்றிய எண்ணம். ‘மரம் மண்ணுக்குள்ளிருந்து அதன் விதையிலிருந்துதான் முளைக்கிறது. மண்ணுக்குள் புதைந்திருக்கும் பட்டாம்பூச்சியும் அதேபோல் மரமாகுமா? அதிலிருந்து நிறைய பட்டாம்பூச்சி பூக்குமா?’ இப்படியாகத் தொடர்புபடுத்திக் கொண்டாள். புறப்பட்டுப் பள்ளிக்குச் சென்றவள் அந்த நாள் எப்போது முடியும் என்று காத்துக்கொண்டிருந்தாள்.

குழந்தைகளின் நேரத்தில் ஒரு நாள்பொழுது என்பது காலையில் குளித்து முடித்து சாப்பிட்டுவிட்டு சீருடையணிந்து கிளம்பிய பின் மீண்டுமொருமுறை காலைக்கடனை சரிபார்த்துக்கொண்டு, பள்ளிக்குப் போனதும் காலை வழிபாடு முடித்து முதல் பாடவேளையிலிருந்து எட்டாம் பாடவேளை வரை பொறுமை காத்து வீடு வந்து சேர்வது, அதாவது காலையில் உதித்துவிட்ட சூரியன் வள்ளியின் நிழலைப் பிடித்துக்கொண்டு அவளின் நடைவேகத்திற்கு ஈடு கொடுக்கமுடியாமல் உருண்டுகொண்டே துரத்தி வந்து, வகுப்பறைக்குள்ளிருக்கும் வள்ளியைத் தேடிக்கொண்டே உச்சி வந்து ஓய்ந்து, மாலை மீண்டும் வள்ளியோடு வீடு திரும்பும் அத்துணை நீண்ட நேரம்.
அன்றையிலிருந்து பட்டாம்பூச்சியை விதைத்த நிலத்திற்கு தினமும் தண்ணீர் ஊற்றிவந்தாள் வள்ளி. ஒரே வாரத்தில் மரம் முளைத்து பட்டாம்பூச்சிகள் பூத்துவிடும் என்று கனவு கண்டாள். குழந்தைகளின் நாள்காட்டியில் ஒரு வாரம் என்பது காக்கை கூடு கட்ட மர இடுக்கில் இடம் பார்த்துச் சுள்ளிகளைப் பொறுக்கி, சருகுகளைச் சேகரித்து ஒன்றோடொன்று இணைத்து, காற்றடித்துக் கொட்டிப் போனால் மீண்டும் தளராமல் கூடு கட்டி முடிக்கும் காலம். ஒரு வார முடிவில் முளைவிட்டிருந்த தாவரத்தைப் பார்த்து அதிருப்தியடைந்தாள் வள்ளி. அவள்தான் காக்கையின் செயலைக் கவனித்திருந்தாளே, தளராமல் தண்ணீர் ஊற்றினாள்; சினத்தோடு தண்ணீர் ஊற்றினாள்; சலிப்போடு தண்ணீர் ஊற்றினாள்; சிரிப்போடு தண்ணீர் ஊற்றினாள்; சில சமயம் தண்ணீர் மட்டும் ஊற்றினாள். எப்படியோ தினமும் தண்ணீர் ஊற்றினாள்.
வள்ளி நிறைய கற்றுக்கொண்டாள். உலகம் உருண்டையானது என்றும், சூரியன் உதிக்காது, மறையாது என்றும், பூமிதான் சுழலும் என்றும், ஏதோ இரண்டு நாடுகளுக்கிடயில் சண்டை நடக்கிறது என்றும், செத்துவிட்ட பட்டாம்பூச்சியைப் புதைத்தால் மரமெல்லாம் முளைக்காது என்றும், அப்படியே முளைத்து வளர்ந்தாலும் அதிலிருந்து பட்டாம்பூச்சியெல்லாம் பூக்காது என்றும் கற்றுக்கொண்டாள். குறிப்பாக குழந்தைகள் வளர வளர மனிதர்களிடம் அன்பு குறைவதைக் கவனித்தாள் வள்ளி. அதற்கான காரணம் யோசித்தே ஒரு வருடம் கடந்து விட்டது. இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. என்ன ஆனாலும் தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தாத வள்ளி, தான் வளர்த்து வந்தது மரமில்லை செடி என்றும் தெரிந்துகொண்டாள். குழந்தைகளின் நாள்காட்டியில் ஒரு வருடம் என்பது படித்துக்கொண்டிருக்கும் வகுப்பிலிருந்து அடுத்த வகுப்பிற்கு செல்வதற்கான காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வுகளின் போராட்டமும், அவற்றின் நீட்சியாய் கிடைக்கும் விடுமுறைக் கொண்டாட்டங்களும் அடங்கியது.
வள்ளி வளர்த்ததா? வள்ளிக்காக வளர்ந்ததா? பட்டாம்பூச்சிகள் பூத்ததா? பூத்திருந்தப் பூக்கள் பட்டாம்பூச்சிகளை கவர்ந்ததா? ஒருமுறைகூட பட்டாம்பூச்சியை மொட்டு வைக்காத வள்ளியின் சாமந்திச் செடியில் பூத்ததெல்லாம் பூக்கள்தான்!
000

சங்கர் பிரகாசம்
என் பெயர் பி. சங்கர். தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறேன். நாமக்கல் மாவட்டத்தின் திருச்செங்கோடு நகரில் வசித்து வரும் எனக்கு சிறுவயது முதலே வாசிப்பதிலும், எழுதுவதிலும் ஆர்வம். 2023இல் அல்குல் எனும் கவிதைத் தொகுப்பு எழுதி, கற்கைப் பதிப்பகத்தின் உதவியுடன் வெளியிட்டேன். தற்போது கவிதைகள், கதைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன்.