சுக்ரீவனைப்பின்தொடர்ந்து குப்பனும் ஓடினான். அங்கே காட்டிற்குச்சம்பந்தம் இல்லாத சிலர் காட்டின் நடுப்பகுதியில் தாங்கள் குடித்துவிட்டு கையில் வைத்திருந்த மதுப்புட்டிகளைத் தூக்கி வீசுவதைக்கண்டான். அவர்கள் வீசிய கண்ணாடிப்புட்டிகள் பாறையின் மேல் மோதி சில்லுச்சில்லாக உடைந்து விழுந்தது. அந்த மனிதர்களைச்சுக்ரீவனும் அவனுடன் வந்தபிற குரங்குகளும் சேர்ந்து தங்கள் கைகளுக்குக்கிடைத்த பழங்கள்,கிளைகளைத்தூக்கி எறிந்து அவர்களைத் துரத்திக்கொண்டு இருந்தனர். அதனைக் கண்ட குப்பன் அப்படியே நின்றுவிட்டான். தங்களைத்தாக்கிய குரங்குகளின் மேல் அந்த மனிதர்களும் கற்களையும், கட்டைகளையும் கொண்டு பதில் தாக்குதல் நிகழ்த்தினர். அவர்களின் தாக்குதலில் ராசுவுக்கு தலையில் பலமான காயம் ஏற்பட்டு இரத்தம் வடியத்தொடங்கியது.
ராசுவின் காயத்தைக்கண்ட சுக்ரீவனோ கோவத்தின் எல்லைக்கே சென்றான். ஆக்ரோஷமாக மரத்திலிருந்து தரையில் இறங்கியவன் தன் பற்கள் தெரியும் வண்ணம் கீர் கீர் என்று உறுமியபடி அவர்களை நோக்கி ஓடினான். அதில் பயந்தவர்கள் அவ்விடம்விட்டு ஓடத்தொடங்கினர் .
காட்டின் எல்லைவரை அவர்களைத்துரத்தியபடி சென்ற சுக்ரீவன் அவர்கள் காட்டை விட்டுச்சென்றதை உறுதிசெய்துவிட்டுத் திரும்பிவந்தான். காயம் பட்ட ராசுவுக்குச் சில வயதான குரங்குகள் மருந்திட்டன .
சுக்ரீவன் வருவதைக் கண்ட ராசு “தலைவரே! அவங்களாம் போயிட்டாங்க தானே?” என்றான்.
“போயிட்டாங்க ராசு, ஆனா நாம இன்னும் கவனமா இருக்க வேண்டும்” என்றான் சுக்ரீவன்.
“என்ன சுக்ரீவா எதுக்காக அவர்களை நீங்கள் தாக்குனீர்கள்? அவர்களும் உங்களை ஏன் தாக்கினார்கள்?” என்று குழப்பத்துடன் கேட்டான் குப்பன்.
“என்னத்தச்சொல்ல குப்பா! உங்களாட்டம் மனுஷங்க
தங்களுடைய சந்தோஷத்துக்காகக் காட்டுப்பகுதியிலும், அருவிகளிலும் வந்து மதுகுடித்துவிட்டு மதுபாட்டில்களையும், நெகிழிக்கோப்பைகளையும் ஆங்காங்கே வீசி உடைத்துவிட்டுப் போறாங்க. அதனால் நாங்கள் அடையும் இன்னல்கள் கொஞ்ச நஞ்சம் அல்ல. நாங்கள் மட்டும் கிடையாது இந்த ஒட்டு மொத்த காடும் அடைகிற பாதிப்பு மிகப்பெரியது. இந்த பாதிப்பை உங்களால் சரிசெய்யக்கூட முடியாது குப்பா.
“என்ன சுக்ரீவா? ஒரு சிலர் செய்யும் இந்தச்சின்னத்தவறு எப்படிக்காட்டையே அழிக்கும். எனக்குப்புரியவில்லையே! கொஞ்சம் தெளிவாகத்தான் சொல்லேன்” என்றான் குப்பன்.
“குப்பா! காட்டை உருவாக்குவதிலும் ,காட்டில் வழித்தடங்களை அமைப்பதிலும் யாருக்கு முக்கிய பங்கு உண்டு என நீ நினைக்கின்றாய்?” என்று கேட்டான் சுக்ரீவன்.
“ம்..ம்.. எனக்குச் சரியாச்சொல்லத்தெரியவில்லை. ஆனால் பறவைகள், உங்களைப்போன்ற மிருகங்கள் தான் காரணம் என்று நினைக்கிறேன்”.
“நீ சொன்னது ஒரு வகையில் சரிதான் ஆனால் உண்மையில் இந்தக்காட்டை உருவாக்குவதில் பெரும்பான்மையான பங்கு வகிப்பது யானைகள் தான் குப்பா”.
“அது எப்படி சுக்ரீவா ஒரு யானையால் காட்டை உருவாக்க முடியும் ?”
“குப்பா! யானையின் உருவம் எப்படிப் பெரியதோ அதைப்போலவே யானையின் உணவுக்கான தேவையும் பெரியது. ஒரு யானையின் ஒரு நாள் உணவுத்தேவை என்பது இருநூறு முதல் இருநூற்றி ஐம்பது கிலோ வரை ஆகும். இவ்வளவு உணவுகளை உண்டு அவை வெளியிடும் சாணத்தில் பத்துச்சதவிகிதம் விதைகள் தான் இருக்கும். அந்த விதைகள் மூலம் காட்டில் தன் வாழ்நாளில் ஒரு யானை பதினெட்டு இலட்சத்திற்கும் மேல் மரங்களை வளர்த்திட மறைமுகமாகவும் நேரடியாகவும் உதவுகின்றது”.
“என்னது பதினெட்டுஇலட்சமா?” வியந்து கேட்டான் குப்பன்.
“நான் கூட யானையும் உங்களைப் போன்று காட்டில் வாழும் ஒரு சாதாரண மிருகம் என்றுதான் நினைத்தேன்”.
“யானை சாதாரண மிருகம் கிடையாது. அது காட்டின் வழிகாட்டி. காட்டின் ஜீவ நாடியே யானைகள் தான் குப்பா”.
“காட்டோட வழி காட்டியா அது எப்படி?” என்று தன் சந்தேகத்தைக்கேட்டான் குப்பன்
“விலங்குகளிலேயே அதிக நினைவுத்திறன் கொண்டவைகளில் முதன்மையானது யானை தான், டால்பின்,சுறா,ஆமை போன்றவைகளுக்கு நினைவுத்திறன் உண்டு என்றாலும் யானை அளவுக்குக்கிடையாது. பல ஆண்டுகளுக்கு முன்னர் தாங்கள் சென்று வந்த பாதையை கூட யானைகள் நினைவில் வைத்திருக்கும்.
இந்தத்திறனால் தான் யானைகளால் நீர்நிலைகள் இருக்கும் இடத்தைத் துல்லியமாக கண்டறிய முடிகிறது. எங்களைப்போன்ற மிருகங்கள் நீர்நிலைகளுக்கு யானைகளை தான் நம்பி உள்ளோம்” .
“யானையால் எல்லாவற்றையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியுமா? ஆச்சரியமாக உள்ளது சுக்ரீவா”
“ஆமாம் குப்பா. அவைகளுக்கு நினைவுத்திறன் அதிகம் . யானைகள் தங்கள் வழித்தடங்களை எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் மறப்பதில்லை. எங்களைப்போன்ற மற்ற காட்டுவிலங்குகள் யானைகளின் வழித்தடங்களைப் பின்பற்றித் தான் எங்களின் உணவு மற்றும் , தண்ணீர்த்தேவையைத் தீர்த்துக்கொள்ளுகிறோம். இப்படி யானைகள் சென்றுவந்த வழித்தடங்களில் நீங்கள் இன்று புதிதாகக் குடியிருப்புகளையும், கட்டிடங்களையும் அமைத்துவிட்டு யானை ஊருக்குள் வந்தது என்று அதன் மேல் பழிபோடுகிறீர்கள். ஆனால் உண்மையில் நீங்கள் தான் எங்கள் இடத்தை ஆக்கிரமிப்புச் செய்கின்றீர்கள். பல வருடங்களாக நாங்கள் பயன்படுத்திய வழித்தடங்களை நீங்கள் உங்களின் பேராசையால் ஆக்கிரமிப்புச்செய்தால் நாங்கள் எங்கே போவது சொல்?”.
குப்பன் மௌனமாக இருந்தான் சுக்ரீவன் தொடர்ந்து பேசினான்.
“ஒரு யானை தன்னுடைய ஒரு நாள் உணவுக்காகப்பல மையில் தூரம் காட்டுக்குள் நடக்க வேண்டியுள்ளது. இப்படி நடக்கும் போது மனிதர்கள் உடைத்துப்போடும் கண்ணாடி பாட்டில்களின் சில்லுகள் யானைகளின் பாதங்களில் குத்திக் காயங்களை ஏற்படுத்துகின்றது.
இதனால் யானைகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றன. அவைகளின் அன்றாட உணவுத் தேவையோ மிகப் பெரியது.அந்த அளவு உணவை தேடிப்பாதிக்கப்பட்ட கால்களோடு அவைகள் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இப்படி காயத்தோடு தொடர்ந்து பயணிப்பதனால் கால்களில் இருக்கும் புண்கள் விரிவடைந்து ஒரு சில நாட்களுக்குள்ளாகவே அதில் சீழ் வைத்து புழுவும் வரத் தொடங்குகிறது. நாளடைவில் கூட்டத்தில் இருந்து விலகித் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொள்கிறது. உணவு எடுக்க முடியாமலும், காயம் தருகின்ற வலியும் வேதனை தாங்க முடியாமல் இறுதியில் யானை தன் உயிரையேவிடுகின்றது. ஒரு யானையின் இறப்பு என்பது காட்டின் அழிவுக்கு வித்திடும் குப்பா.
மனிதர்களின் அற்ப சந்தோஷங்களில் யானை போன்ற பெரிய விலங்குகள் முதல் எங்களைப்போன்ற சிறிய விலங்குகள் வரை தங்களின் இன்னுயிரை இழக்கின்றன.
நீங்கள் காடுகளில் வீசி எறியும் நெகிழிப்பைகளில் இருக்கும் மீந்து போன உணவுக்காக நெகிழியுடனே அதனை உட்கொண்டு செரிமானம் ஆகாமல் வயிறு வீங்கி எத்தனையோ விலங்குகள் உயிர் இழந்து போகின்றன”.
“சுக்ரீவா நீ சொல்வதைக் கேட்கும் போது எனக்கு மிகவும் கவலையாக இருக்கு நண்பா, எங்களோட அலட்சியத்தாலும், பேராசையாலும் உங்களுக்கு இவ்வளவு சிரமங்களும் உயிர்ச் சேதங்களும் ஏற்படுகின்றதா?”.
“நான் சொன்னது ரொம்பக் கம்மி நண்பா இன்னும் எத்தனையோ இடர்களையும், இன்னல்களையும் நாங்கள் அனுபவிக்கிறோம்” என்றான் சுக்ரீவன்.
ஹாச்சு சூ…., ஹாச்ச சூ…. என்று தொடர்ந்து தும்மல் வந்து கொண்டே இருந்தது. தும்மல் வந்த திசையைப் பார்த்தான் குப்பன் அங்கே ராசு தும்மிய படியே இருந்தான். ‘ஆமா சுக்ரீவா உங்கிட்ட ஒண்ணு கேக்கணும். நானும் கவனித்துக்கொண்டே இருக்கிறேன். அப்பொழுதிலிருந்தே இவன் தும்மிக்கொண்டே இருக்கிறான். இவனுக்கு என்ன தான் பிரச்சனை?’ என்றான் குப்பன்.
“நீ தான் பிரச்சனை” என்றான் சுக்ரீவன்
“நானா?”
”ஆமா நீ தான், நீயே தான். நீ கொடுத்த ஐஸ் கீரீம்மால தான் இவன் இப்படித்தும்மிக்கிட்டு இருக்கான்”.
“என்ன நண்பா வெயிலுக்கு இதமா இருக்கும்னு தான ஐஸ் குடுத்தேன். நீ அதையும் தப்புணு சொல்கிறாயே” என்றான் குப்பன்.
“நல்லா குடுத்த போ, ஏம்பா இந்த வெயிலு எங்களுக்கு மட்டுமா அடிக்கு? மொத்த காட்டுக்கும் தான அடிக்கு .நீ ஏன் இந்தச்சிங்கம், புலிகளுக்கு எல்லாம் ஐஸ் கொடுக்கல?”
“என்ன விளையாடுறியா? அதுங்க கிட்டப்போனா நான் உயிரோட திரும்ப முடியுமா?”
“வேட்டையாடுற மிருகத்த எட்ட நின்னு வேடிக்கை பாக்குறது,எங்கள மாதிரி அப்பாவி மிருகங்களோட வாழ்க்கையைக் கருணை என்ற பெயரில் வேடிக்கையாக்குறதே உங்களுக்கு பொழப்பாப்போச்சுல்ல” என்றான் சுக்ரீவன்.
“நல்லதுக்கே காலம் இல்லனு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க. உங்களுக்குச்சாப்பாடு கொடுத்து ,உடம்பு சரியில்லைனா முதல் உதவிலாம் பண்ணுறோம். நீங்க என்னடானா எங்கள வில்லன் மாதிரியே பாக்கிங்களே” என்றான் குப்பன்.
அவன் இப்படிச் சொல்லவும் மத்த குரங்குகள் எல்லாம் கூடி நின்னு “ஆமா நீங்க எங்களுக்கு வில்லன் தான், வில்லன் தான்” அப்படினு கத்த ஆரம்பித்தன. தன் கையை உயர்த்திக் குரங்குகளை அமைதியா இருக்கும் படிக் கூறினான் சுக்ரீவன் உடனே எல்லாக்குரங்குகளும் அமைதியாகின .
சுக்ரீவன் பேச ஆரம்பித்தான் “நீ சொல்லுறது எப்படி இருக்கு தெரியுமா பிள்ளையும் கிள்ளிவிட்டுட்டுத் தொட்டிலையும் ஆட்டி விடுறமாதிரி இருக்கு.
காட்டுல சுத்தித்திரிந்து காய், கனிகள் போன்ற இயற்கை உணவுகளை உட்கொண்டு வாழ்ந்து வந்த எங்களுக்கு உங்களின் உணவை அறிமுகப்படுத்தியதும், உங்களின் உணவுகளுக்கு எங்களை அடிமையாக்கியதும் நீங்கள் தான். இதுபோன்ற உணவுகளால் எங்களின் உடல் நலனைச்சீர்குலைத்ததும் நீங்கள் தான். இப்படி எல்லாவற்றையும் செய்துவிட்டுக்கடைசியாக எங்களுக்காக மருத்துவம் செய்வதும் நீங்களே. கேக்கவே வேடிக்கையா இருக்கிறது குப்பா. உங்களின் உணவுகளை எங்களுக்குப் பழக்கப்படுத்தாமல் இருந்திருந்தால் எங்களுக்கு இப்படி பட்ட மருத்துவ வசதிகளே தேவைப்பட்டிருக்காதே”.
“அட என்னப்பா நீ திரும்பத்திரும்ப நாங்க உணவு கொடுப்பது தவறு என்பது போல் சொல்கிறாயே”.
“இயற்கைக்கு மாறாக நடக்கும் எந்த ஒரு செயலும் தவறு தான் குப்பா. அதனால் எந்தளவு நன்மை விளைந்தாலும் அதைவிட அதில் தீமையே மேலோங்கி இருக்கும். நம்மைப்படைத்த இயற்கைக்கு நம்மை காக்கவும் தெரியும்.”
“இயற்கை எப்படி நம்மைக்காக்கும் சுக்ரீவா?. நம்மை நாம் தானே பாதுகாத்துக்கொள்ள வேண்டும்?” என்றான் குப்பன்.
“அதுசரி எங்களுக்கான உங்களோட இந்த மருத்துவம் வந்து சில நூற்றாண்டு ஆகியிருக்குமா?
”ஆமாம்..
”அதற்கு முன் எங்களுக்கு அடிபட்டால் எங்களுக்கு யாரு வைத்தியம் பண்ணிருப்பாங்கனு யோசிருக்கியா நீ” என்றது
“இல்லையே” என்றான் குப்பன்.
“எங்களுக்கு எதாவது உடல்நலக்கோளாறு வந்தாலோ அல்லது காயம் ஏற்பட்டாலோ அதை இயற்கையே சரிசெய்துவிடும். உங்க மருத்துவம் இன்று வந்தது ஆனால் இயற்கை அப்படி இல்லை எங்களை படைத்ததே அது தான். அதைவிடவா உங்களின் மருத்துவம் உயர்ந்தது.”
“எங்களின் உடல் ஒத்துக்கொள்ளாத உணவுகளும், எளிமையாக கிடைக்கிற உணவுகளும் என்றுமே எங்களுக்குக்கெடுதல் தான். இந்த மாதிரி உணவுகளால் நாங்க தொப்ப போட்டு மரத்துக்கு மரம் தாவக்கூட முடியாமல் சோம்பேரியா மாறிவிட்டோம், அதுமட்டும் இல்லை உங்களைப் போலவே புதுப்புது வியாதிகள் வந்து நாங்களும் அவதிப்படுகிறோம்.”
சுக்ரீவன் இப்படிச்சொல்லவும் குப்பனுக்குத் தன்னுடைய தவறு புரிய ஆரம்பித்தது . “ஏம்பா நாங்க உங்களுக்கு உணவு கிடைக்கனும்னு தான இப்படிச் செய்கிறோம். ஆனால் நீங்கள் இதனால் கெடுதல் மட்டும் தான் நடப்பது போல் பேசுறீங்களே” என்று தணிவான குரலில் கேட்டான் குப்பன்.
“குப்பா நீங்கள் செய்யும் நல்ல காரியத்துனால எங்களுக்கு எந்த நல்லதும் நடக்கவில்லை என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் அதே நேரம் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் , உங்களின் அளவுக்கு அதிகமான சாப்பாடுகள் எங்களைப்போன்ற விலங்குகளுக்கு உழைக்காமல் வாழலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்திக் காட்டின் அழிவுக்கு வழிகாட்டிடும் குப்பா. இங்கு நம்மை சுற்றி இருக்கும் குரங்குகளின் எண்ணிக்கையைச் சொல்லு?”.
“ம்ம்…, ஒண்ணு,ரெண்டு, என்று வேகமாக எண்ணிவிட்டு உன்னையும் சேர்த்து மொத்தம் இருபத்திமூன்று குரங்குகள் இருக்கீங்க சுக்ரீவா”.
“சரியாச்சொன்ன, ஆமா நீ உணவு கொடுக்கும் அந்தக் குற்றாலநாதர் கோவிலுக்கு உணவுக்காக எத்தனை குரங்குகள் வரும்?”
“ம்ம்ம்… அது ஒரு ஐம்பது முதல் எழுபது குரங்குகளுக்கு மேல வரும் குப்பா”
“காட்டில் இருக்க வேண்டிய நாங்க ஏன் இப்படி காட்டை விட்டு ஊருக்குள் வருகிறோம்?. நீங்கள் கொடுக்கும் உணவுக்காகத்தானே?. இப்படி நாங்கள் எல்லாம் காட்டைவிட்டுப் புலம்பெயர்ந்து ஊருக்குள் வந்தால் காடு என்னாகும்? சொல்.
”ஆமா சுக்ரீவா நீ சொன்ன மாதிரிக்காட்டைவிட ஊருக்குள் தான் குரங்கு அதிகம் இருக்கு”.
”குப்பா! இயற்கையின் படைப்பில் எங்களுக்கு எந்த ஒரு தீய பழக்கமும் தெரியாது. ஆனால் உங்களின் உணவுக்காக நாங்க ஊருக்குள் வந்து உணவுப்பொருட்களை எடுப்பதால் திருட்டுப்பட்டம் வேற வாங்கிறோம் தெரியுமா?”.
நேரம் செல்லச்செல்ல குப்பன் சோர்வாகக்காணப்படான் , அதனைக்கண்ட சுக்ரீவன் தன் நண்பர்களுக்குக்கண்ணாலேயே உத்தரவு கொடுத்தான்.
(தொடரும்)

ரா.சண்முகவள்ளி
கல்லிடைக்குறிச்சியை பூர்வீகமாக கொண்ட நான் திருமணத்திற்கு பிறகு தென்காசியில் வசித்து வருகிறேன்.முதுகலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றுள்ளேன்.
இதுவரை கொலுசு, காற்றுவெளி , பேசும் புதிய சக்தி, திணை,இனிய உதயம் போன்ற அச்சு இதழ்களிலும், அனிச்சம், நீரோடை, கவிமடம், வானவில், நான் போன்ற மின் இதழ்களிலும் எனது படைப்புகள் வெளிவந்துள்ளன.