“ஏம்பா! “கொஞ்சம் காலையில சாப்பிட்டு தான் போயேன். இப்படித் தினமும் காலையில நீ சாப்பிடாம போனீனா உடம்பு என்னத்துக்கு ஆகும்.
“அப்பா அதெல்லாம் ஒன்னும் ஆகாது. தேவையில்லாம
நீங்கதான் இந்த விஷயத்தில சீரியஸா இருக்கீங்க.”
“அதற்குச் சொல்லலைப்பா. ஏதோ ஒரு நாள் என்றால் சரி, போனா போகுதுன்னு விட்டுவிடலாம். காலேஜுக்கு சரியான நேரத்திற்குத் தான் போக வேண்டும். அதை நான் மறுக்கல, ஆனால் நீ என்னடானா! காலையில அதுக்குன்னு இப்படியா சாப்பிடாம போவதா? வாரத்தில் நாலு நாள் இப்படியே தொடர்ந்து செய்தா எப்படி? உன்னோட உடம்பு தான் சீக்கிரமே உனக்கு ஒத்துழைக்காமல் போய்விடும். இப்ப உனக்கு எல்லாம் நல்லா இருக்கிற மாதிரி தான் தெரியும். ஆனால் இன்னும் ரெண்டு அல்லது மூன்று வருஷத்தில் உடல் ரீதியா சின்னச் சின்ன உபாதைகள் தென்படும், பாதிப்புகள் உண்டாகும்.
“என்னங்க காலையிலே காலேஜுக்குக் கிளம்புகிற பிள்ளையிடம் இப்படியா தர்க்கம் செய்துகிட்டு இருப்பீங்க”
“அதுக்குச் சொல்லல சுமதி, நான் என்ன சொல்ல வறேனா?”
“நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம், அவனுக்குப் பசித்தால் சாப்பிட போறான். இல்லையென்றால் காலேஜில இருக்கிற கேன்டியனில் வாங்கிச் சாப்பிட போறான்”.
“நான் என்ன சொல்ல வறேன்னு ரெண்டு பேரும் புரிஞ்சுக்காம பேசினா எப்படி?”
“அப்பா அம்மா, அப்போ! நான் கிளம்புறேன்”.
“சரி பார்த்து ஜாக்கிரதையா போயிட்டு வா கிரி. உனக்குக் காலேஜ் முடிந்தவுடன். வேறு எங்கும் ஊரச் சுத்தாம, நேரே வீட்டுக்கு வரணும்”.
“ம்ம். ம்ம். நேரே வீட்டுக்கு வராம வேறு எங்குப் போவதாம்.? சரி பார்ப்போம் சாயங்காலம்” என்றபடி கல்லூரிக்கு விரைந்தான் கிரி.
“என்னங்க எனக்கு இன்னும் முப்பது நிமிஷம்தான் இருக்கு. அடுப்பு மேடையில காலைக்கும், மத்தியத்துக்கும் சாப்பாடு, பொரியல் செஞ்சு வச்சுருக்கேன். நீங்க உங்களுக்கு வேணுங்கிறத சாப்பிட்ட பிறகு,மத்தியானத்திற்குக் கட்டிக்கிட்டுப் போங்க. நான் இனி குளிச்சுட்டு கிளம்புனும்”.
“ஓக்கே நான் பார்த்துக்கிறேன்,” என்று சொல்லிய வினோத். சமையல் அறைக்குள் சென்று மத்திய உணவை ஒரு டிபன் கேரியரில் எடுத்து வைத்துவிட்டு. தண்ணீர் பாட்டிலில் தண்ணீரை நிரப்பிய பிறகு. இவை யாவையும் அவரவருக்கு உண்டான உணவு கொண்டு போகும் பையில் சரியாக உள்ளதா என்று சரிபார்த்தவுடன் அவனும் குளிக்கச் சென்றான்.
***
சுமதி, தனியார் நிறுவனத்தில் தரக்கட்டுப்பாட்டுப் பிரிவில் வேலை செய்கிறாள். வினோத் பன்னாட்டு நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிகிறான். இருவரும் காலையில் வீட்டைவிட்டு வெளியே சென்றால் இரவு ஏழு மணியளவில் தான் வீடு திரும்ப முடியும்.
ஒரு சில நாட்களில் வரும் வழியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி இன்னும் சற்றுத் தாமதமாகும் வீட்டிற்கு வருவதற்கு.
இந்த இடைப்பட்ட நேரத்தில் கிரி, தனது கல்லூரியிலிருந்து வீட்டுக்கு வந்தவுடன். அவனுக்கு வேண்டிய ஸ்னாக்ஸை அவனே செய்து சாப்பிடவும் செய்வான்.
பெரும்பாலும் ரெண்டு நிமிஷம் நூடுல்ஸ் தான் அவன் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ். எப்பவாவது தேநீர் அடுப்பில் காய்த்து அதை வடிகட்டி குடிப்பதும் உண்டு.
முதலில் வீடு திரும்புவது சுமதி, அவளைத் தொடர்ந்து வினோத். இருவரும் வீட்டிற்கு வந்தவுடன் கிரியை அடுப்பில் பால் வைக்கச் சொல்லிவிட்டு. இவர்கள் ஒருவர் பின் ஒருவராக முகம், கை, கால் எல்லாம் சுத்தம் செய்துகொண்டு ஹாலுக்கு வருவர்.
கிரி, இருவருக்கும் தேநீர் அல்லது காப்பி ஏதாவது ஒன்றை அவர்களுக்கு எடுத்து கொடுப்பான். இவர்களும் அதைக் குடித்தவுடன். வினோத், சிறிது நேரம் மேஜையின் மீது இருக்கும் தினமணி கதிரை வாசிக்கத் தொடங்குவான். பிறகு வினோத் கிரியிடம் கேட்பான்.
“கண்ணா, டி.வி ரிமோட்டை என்னிடம் கொடு”.
“அப்பா, நான் தான் டி.வியில் பாட்டு பார்த்துக்கிட்டு இருக்கிறேன். இப்போ எப்படி ரிமோட்டை தர்றது. வேண்டுமானால் முப்பது நிமிஷம் கழித்துப் பார்த்துக்கோங்க. எனக்கு ஆன்லைன் கிளாஸ் இருக்கு”.
“இல்லை கிரி, ஒரு பத்து நிமிஷம் தான் கேட்கிறேன். தலைப்பு செய்தியை மட்டும் பார்த்துவிட்டு, நான் என்னோட வேலையைப் பார்க்கிறேன்.”
“ஏங்க, அவன்தான் இப்போ படிக்கப் போகப்போறான். நீங்க அப்புறம் டி.வி பார்த்தா என்ன?” ‘வினோத் மனதில் நினைக்கத் துவங்கினான். நாம இப்போ அவனிடத்தில் என்னத்த கேட்டோம். ஒரு பத்து நிமிஷம் டி.வி வேணும்ன்னு தானே. இதற்குப் போய் அம்மாவும், பிள்ளையும் ஒரே கட்சியா சேர்ந்து கிட்டு இப்படி ஒதுக்கினா எப்படி?’
காலையில என்னடானா! அவனுக்கு நல்லது தான் சொன்னேன். அப்பவும் என் பேச்சை கேட்கல, இப்பவும் ஒத்துக்கல. நான் ஒரு பத்து நிமிஷம் தான் டி.வி பார்க்கனும் என்று சொல்லறேன். ஆனாலும் அதை அவன் காதில் போட்டுக் கொள்ளாமல் ஏதேதோ சொல்றான். அதற்கும் அவள் துணைப் போகிறாள்.
இப்படித் தான் ஒரு நாள் ஆபீஸிலிருந்து அப்போது தான் வீட்டுனுள் நுழைந்தேன். உடனே சுமதி என்னிடம் கூறினாள்.
“என்னங்க, கொஞ்சம் கடைக்குப் போகனும். மாவு ரெண்டு கிலோ, பொட்டுகடலை அரைக் கிலோ, நாட்டுச் சக்கரை ஒரு கிலோ வாங்கிட்டு வாங்களேன்” என்றாள்.
“சுமதி, கிரி இங்குதானே இருக்கான் அல்லவா! அவனைப் போய்க் கடையில கொஞ்சம் பொருட்களை வாங்கி வரச் சொல்ல வேண்டியது தானே!” என்றேன்.
“அவன், தலை வலிக்கிதுனு உட்கார்ந்திருக்கான். நீங்க போய்க் கொஞ்சம் வாங்கி வந்தீங்கன்னா நல்லாயிருக்கும்” என்றாள். அன்றும் சரி அவனக்கு உடம்பு சரியில்லை என்பதால் நானே மளிகை கடைக்குச் சென்று வந்தேன்.”
மளிகை கடைக்குப் போவது பெரிய காரியமில்ல, போகக் கூடாது என்றெல்லாம் அல்ல. அப்போது தான் ஆபீஸிலிருந்து வந்து வீட்டினுள் நுழையும் போது ஏதாவது வேலையைச் சொன்னால் தான் மனுஷனுக்குக் கோபம் வருது. இவ்வளவு நேரம் அம்மாவும், பையனும் இங்க ஹாலில்தான் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் எண்ணியிருந்தால் அவர்களில் யாராவது ஒருவர் போய் வாங்கி வந்திருக்கலாம். ஆனால் அந்த வேலை என்னவோ அப்பாவின் வேலை என்று அவர்கள் நினைகிறார்கள் போல.
***
இதெல்லாம் கூடப் பரவாயில்லை என்று சொல்லலாம். சமீப, காலமா அப்பாவிடம் இன்ஃபர்மேஷன் மட்டும்தான் சொல்கிறார்கள் பிள்ளைகள். ஏன்டா நீ முன்னமே என்னிடம் சொல்லல என்று கேட்டால்.
“அப்பா, அதான் அம்மாவிடம் முன்னரே சொல்லிட்டேனே! ஏன் அம்மா உங்களிடம் சொல்லவில்லையா?”
“கண்ணா, வேலை பளு அவளுக்கு அதிகம் இருந்ததால் அவள் என்னிடம் சொல்லவில்லை. இருந்தாலும் நீ ஒரு வார்த்தை என்னிடம் சொல்லியிருக்கலாம்”.
“ம்ம்…சரி அப்பா, இனிமேல் நான் முன்னதாகவே உங்களிடம் சொல்லிவிடுகிறேன்” என்றான்.
இந்தக் காலத்து பசங்க அதுவும் காலேஜுக்குப் போகிறவர்கள் அவர்களுடைய தனி உலகத்தில்தான் வாழ்கிறார்கள். அவர்கள் என்ன நினைகிறார்களோ அதை எப்படியாவது சாதிக்க நினைகிறார்கள், சாதித்தும் விடுகின்றனர்.
நினைப்பதை சாதிக்கும் உத்வேகம் பிள்ளைகளிடம் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதே உத்வேகம் பொருட்களை வீண் விரயம் செய்வதற்கோ அல்லது அனாவசிய பொழுதுப் போக்கிற்கோ பயன்படுத்துவது சிறிது மன வருத்தமாக உள்ளது.
***
டி.வி பத்து நிமிஷம் கிடைக்காது என்று தெரிந்தவுடன், வினோத் உடனே அவனது அறைக்குச் சென்று புத்தகத்தைப் புரட்டத் தொடங்கினான். ஆனால் அவனது மனம் புத்தகத்தில் லயிக்கவில்லை. அதை விட்டிவிட்டு ஓர் இருபது வருடம் பின் நோக்கி பயணம் செய்தது.
வினோத் மற்றும் சுமதி அப்போதுதான் புதிதாகத் திருமணம் செய்துகொண்ட காலம். இருவரும் காதல் வானில் சிறகடித்துப் பறந்த காலம். அவளும் சரி அவனும் சரி அவ்வளவு ஓர் அன்னியோன்னியம். இவன் மனதில் என்ன நினைகிறானோ! அதை அவள் புரிந்து கொண்டு செய்து முடிப்பாள்.
காலை வேளையில் சமையலை முடித்தவுடன், அவனது துணி மணிகளை எடுத்து அயர்ன் பாக்ஸின் உதவி கொண்டு சட்டை, பேன்ட்டை தேய்த்து வைப்பாள். அந்த வேலை முடிந்தவுடன், காலுக்கு அணிகிற அவனது ஸ்ஷாக்ஸை, ஷூ உடன் வெளியில் ஓர் ஓரமாக வைப்பாள்.
பிறகு நன்றாகக் கைகளை அலம்பிய பின் இட்லி அல்லது தோசையை, காலைக்குச் சாப்பிட சுட்டு வைப்பாள். மத்திய உணவை டிபன் பாக்ஸில் எடுத்து வைத்த உடன் கையோட அண்டாவில் இருக்கும் தண்ணீரை பாட்டிலி்ல் ஊற்றி தண்ணீரையும் பிடித்து வைப்பாள். அவனது ஆபீஸுக்குக் கொண்டு போகும் பையில். இவை அனைத்தையும் செய்துவந்தவள், பிள்ளை பிறந்தவுடன் அவளது முழுக் கவனத்தையும் பிள்ளையின் பக்கம் திருப்பிவிட்டாளே! ‘என்ன பாபம் செய்தேன் நான் என்று வினோத் யோசிக்கத் துடங்கினான்’.
***
பிள்ளைகள் மீது கவனம் வைக்க வேண்டியதுதான். இந்தக் காலத்தில் பெண் பிள்ளைகளைக் கூட வெகு எளிதாக வளர்த்து விடலாம் போல! ஆனால் ஆண் பிள்ளைகளை அங்குலம் அங்குலமாக அவர்களைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
கொஞ்சம் பேசினா போதும் உடனே கோபம் தலைக்கு ஏறிவிடும். ஒரு தடவைக்கு மேல் அவர்களிடம் நாம் எதையாவது சொன்னோமென்றால் அவ்வளவுதான்.
“அப்பா சும்மா சொன்னதேயே எவ்வளவு முறை சொல்லுவீங்க? எனக்குப் புரியிது. திருப்பித் திருப்பிச் சொன்னா வெறுப்பா இருக்கு”.
அந்தக் காலத்திலெல்லாம் அப்பா ஹாலுக்கு வறாரென்றால் பிள்ளைகளெல்லாம் எழுந்து நிற்பார்கள். ஆனால் இன்றோ அதே பிள்ளைகள் கால் மேல் கால் போட்டு அமருகிறதுகள்.
சரி, இது கூடத் தலைமுறை இடைவெளி என்று வைத்துக் கொள்ளலாம். அஃது என்ன ஒரு தடவைக்கு மேல் ஏதாவது சொன்னால் பிள்ளைகளுக்குக் கோபம் வருது.
அவளைக் கேட்டால் அதான் “மூட் ஸ்விங்” என்கிறாள். என்ன மூட் ஸ்விங்கோ தெரியல.
நாமும்தான் சிறு பிள்ளையாக வளர்ந்து இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறோம். நமக்கு அந்தக் காலத்தில் இவ்வளவு மூட் ஸ்விங் இல்லையே! இப்ப இருக்கிற பசங்களுக்கு மட்டும் இவ்வளவு மூட் ஸ்விங் வர காரணமென்ன?

அவர்களிடம் நாம், நடந்துகொள்ளும் முறை தவறா? நமக்குப் போதிய பேரன்டல் கைடன்ஸ் கிடைக்கவில்லையா? இல்ல நமக்கு நமது முன்னோர் சரியாகச் சொல்லிக் கொடுத்து வளர்க்க வில்லையா? என்னவாக இருக்கக் கூடும்? பிள்ளைகள் ஏன் இதை எண்ணிப் பார்பதில்லை?
ஒரு மனுஷன் தினமும் சொல்றானே! நாம் ஏன் அதை ஒரு தடவை கேட்டுத்தான் பார்ப்போமே என்ற நினைப்பு அவர்களிடம் வற மறுக்கிறது.
அம்மாவுக்கு மட்டும் பிள்ளையின் மீது அக்கறை இருக்கும். அப்பாவிடம் அதே பிள்ளை மீது அக்கறை இல்லை என்றெல்லாம் சொல்லிவிட முடியாது.
அம்மாவிடம் இருக்கும் அக்கறையைக் காட்டிலும் அப்பாவிடம் பிள்ளைகள் மீது ஒரு மடங்கு அதிகமே. ஆனால் இதை எந்த அப்பனும் வெளியில் காட்டிக்கொள்வதில்லை.
உதாரணத்திற்கு, அம்மா அடிக்கடி பிள்ளைகளிடம் உடம்பு வலிக்குது, கை வலிக்குது, கால் வலிக்குது என்று சொல்வது வழக்கம். ஏனென்றால் பாசத்தின் மிகுதியால் அவள் பிள்ளைகளிடம் கூறுகிறாள். இதைக் கேட்ட பிள்ளைகள் ஆறுதலாக ரெண்டு வார்த்தை சொன்னா போதும் அவளது வலி எல்லாம் பறந்து போய்விடும்.
இதுவே அப்பா, எவ்வளவு வலியிருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பதே வழக்கம்.
பிள்ளைகளிடம், அப்பாவின் அதே அர்ப்பணிப்பு அவர்களது பார்வையில் படுவதில்லை.
பிள்ளைகள் வளர வளர அப்பாவின் கூற்று நிராகரிக்கப்படுகிறது, இதுவே நிதரசனம்.
இந்த உண்மையை அந்தப் பிள்ளை புரிந்து கொள்ள வேண்டுமானால். அவனுக்கு ஒரு கல்யாணம் ஆகி குழந்தை பிறந்து. அதே குழந்தை வளர்ந்து தனது அப்பாவிடம் எதி்ர்மறையாகப் பதில் சொல்லும் போதுதான் புரியவரும்.
அப்பாவின் சின்னச் சின்னக் கூற்று நிராகரிக்கப்படுகிறது என்று.
000

பாலமுருகன்.லோ
பிறந்த இடம் கரூர் மாவட்டம். பள்ளிப் படிப்பு அனைத்தும் கரூரில் முடித்த பிறகு. வேலை நிமித்தமாகச் சென்னைக்கு 1997-ல் வந்தவன் பல நிறுவனங்களில் பணிபுரிந்து தற்போது ஒரு ஜெர்மானிய நிறுவனத்துக்கு ஆஃப்டர் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் பிரிவில் வேலை செய்துவருகிறேன். சிறு வயதிலிருந்தே எனக்கு எழுதும் ஆர்வம் இருந்தது. ஆனால் வளர வளர படிப்பு, வேலை திருமணம், பிள்ளைகள் என்று வந்த பிறகு எழுதும் ஆர்வம் சற்று மங்கிக் காணப்பட்டது. ஆனால் என்னாலும் மீண்டும் எழுத முடியும் என்று என்னை நான் முழுமையாகக் கண்டுகொண்ட வருடம் 2020 என்று கூறலாம். 2019-ல் இருந்து தீவிரமாகக் கதை மற்றும் கவிதைகளை வாசித்து ஒரு வாசகராக என்னை முழுமையாக மாற்றி இருக்கிறது இந்தக் கலை இலக்கிய உலகம் .