விளையாட்டு நாள் தடகளப் போட்டியில் முதல் பரிசு பெற்றால், கூடைப்பந்து பயிற்சி வகுப்பில் சேர்த்து விடுவதாக தங்க ராஜூவின் அப்பா கூறியிருந்தார்.

கூடைப்பந்து பயிற்சி வகுப்புக்காக தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டும். வீடு திரும்ப தனியாக ஆட்டோ வைக்க வேண்டும். ஜெர்ஸி, ஷூ செலவுகள் தனி!

தங்கராஜு ஓடுவதே சிரமம். இதில் போட்டியில் பங்கு பெற்று, பரிசு வெல்வது நடக்காத காரியம் என்று தான் அப்பா நினைத்தார்.

ஆனால், தங்கராஜு ஓட்டப்போட்டியில் இறுதிச்சுற்று வரை வந்துவிட்டான்.

இதோ, இறுதிப்போட்டி !

“இத பாருங்க ! ராஜுவை கூடைப்பந்துல சேத்திடணும்” அம்மா.

“ஸ், இரு ! இந்தப் போட்டியில முதல் இடம் வந்தாதான் சேர்த்து விடறேன்னு சொல்லி இருக்கேன்”

“போட்டியில பரிசு பெறலாம் இல்ல பெறமால் போகலாம். ஆனா, அதற்கான முயற்சியில ஈடுபட்டதற்காகவே நாம தங்கத்தை கூடைப்பந்து பயிற்சியில சேர்க்கலாம்” அம்மாவின் குரலில் தீர்மானமான முடிவு எதிரொலித்தது.

போட்டியில் தங்கராஜூ மூன்றாவதாக வந்தான்.

அம்மாவின் சிபாரிசில் கூடைப்பந்து பயிற்சியில் சேர்ந்துவிட்டான்.

முதல் ஓரிரு தினங்கள் பரபரப்பும் அதீத மகிழ்ச்சியுமாக இருந்தான் தங்கராஜு.

”அம்மா, இன்னிக்கி என்ன தெரியுமா? ப்ளம் கேக் ! மூணு கொடுத்தாரு சார்! வாழைப்பழம் வேற “ என முதல் நாளில் கத்தியவன், அடுத்த சில நாட்களில், “அம்மா, நாந்தான் இன்னிக்கி ஸ்கோர் போர்ட்ல எழுதினேன்” எனக் கத்திக்கொண்டு வந்தான்.

”அந்த கேசவன் அண்ணா ஃபௌல் ப்ளே பண்ணுறாரும்மா !’

“அம்மா, இன்னிக்கி பூரா டிரிப்ளிங் எப்படி போடறதுன்னு தான் பயிற்சி”…

பந்தைக் கையாளும் பயிற்சிகளைப் பற்றி சொல்லிக் கொண்டே இருப்பான். ஒருநாள், பயிற்சி முடிந்து வந்த பின், மிகவும் சோர்வாக இருந்தான். சீக்கிரமே படுத்துத் தூங்கிவிட்டான்.

ஆசிரியர் சொல்லியிருந்த வீட்டுப்பாடங்களை எழுதவேயில்லை. வீட்டுப்பாடம் எழுதி வராதவர்களை நிற்கச் சொன்னார் ஆசிரியர். தக்கராஜுவால் சற்று நேரம் கூட நிற்க முடியவில்லை.

“சார்! கால் வலிக்குது.”

“ம் ! வீட்டுப்பாடம் எழுதினா கை வலி வந்திருக்குமோ? ஏன் பாடம் எழுதல?”

“சார்! நேத்திக்கி கூடைப் பந்து பயிற்சி முடிஞ்சு வீட்டுக்குப் போய் தூங்கிட்டேன்.”

“தங்கம்! நான் இந்தப் பாடத்தை மூணு நாள் முன்னாலயே எழுதச் சொல்லிட்டேன்.”

“…..”

“என்ன ஒண்ணும் பதிலக் காணோம்? வாய் வலிக்குதா? ம்ம்..”

அப்பா வரவழைக்கப்பட்டார்.

”இந்த பாஸ்கெட்பால் கோச்சிங் சேர்த்துவிட்டதால எனக்கு எக்ஸ்ட்ரா செல்வு தான் சார்! இப்ப வீட்டுப்பாடங்களையும் ஒழுங்கா செய்யல்லன்னா? நிறுத்திடறேன் கோச்சிங் …” அப்பா படபடத்தார்.

“அப்படி டக்குன்னு முடிவு பண்ணாதீங்க ! ஜகதீசன் சாரையும் கோச் கிஷோரையும் பாருங்க ! தங்கராஜூக்கு விளையாட நல்லா வருதுன்னா, தொடர்ந்து போகட்டும். பாடங்களை அவ்வப்போது படிச்சு, படிப்பில கவனமா இருந்தா போதுமே ! “ என்றார் வகுப்பு ஆசிரியர்.

மாலை பயிற்சி நேரத்தில் தங்கராஜுவின் அப்பா மைதானத்தில் தான் இருந்தார். ராஜூ நன்றாக விளையாடுகிறான் என்று அவருக்கே புரிந்தது. ஆசிரியர்களும் அதையே தான் சொன்னார்கள்.

“தங்கராஜூ ! நல்லாப் படிக்கணும். வீட்டுப்பாடத்தை எல்லாம் நேரம் தவறாம செய்யணும்.இல்லன்னா…” என்று ராஜுவிடம் சொன்னார்.

“சரிப்பா! இனிமே எந்தக் கம்ப்ளெயிண்ட்டும் வராது”

சொன்னது போலவே, பாடங்களைப் படித்தான். மதிப்பெண் கூடியது, வகுப்பில் அவன் மதிப்பும் கூடியது.

                                    ….     ….    ….

“கூடைப்பந்து விளையாட்டில் முக்கியமானது அணியின் ஒற்றுமை தான்! கவனமாக ஓற்றுமையுடன் விளையாடினால் தான் புள்ளிகள் கிட்டும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார் பயிற்சியாளர் கிஷோர்.

”அடுத்த வாரம் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி இருக்கிறது. அணி நாளை உறுதி செய்யப்படும்” என்றார் ஜகதீசன் சார்.

அணியில் தங்கராஜும் இடம் பெற்று இருந்தான். மாற்று விளையாட்டு வீரனாக… சப்ஸ்டிட்யூட் ப்ளேயர் தான்.

மாவட்ட அளவு போட்டிக்குத் தயார்படுத்துவதற்காக வாரம் முழுவதும் கடுமையான பயிற்சி இருந்தது.

“மாதவா ! நீ சூப்பரா விளையாடற ! உன் கீழ நம் டீம் சிறப்பா விளையாடும்” என நண்பன் மாதவனை மனமாரப் பாராட்டினான் தங்கராஜூ.

“மழை வரும் போல இருக்கேடா. ஆமா! மழை தான்”

எதிர்பாராத மழை ! சடசடவென கனமான மழை!

”அச்சச்சோ ! என் பஸ் போயிடுமே ! பஸ் ஸ்டாண்ட் போறதுக்குள நனைஞ்சிடுவேனே!” என வருந்தினான் மாதவன்.

“ஆமா ! நனைஞ்சா வீடு போற வரைக்கும் ஈர உடையுடன் இருந்தா சளி பிடிச்சுடும். ரெயின் கோட் இல்லயா ?” தங்கராஜு.

“இல்லடா! கரெக்ட்டா டோர்னமெண்ட் சமயத்தில சளி பிடிக்கக்கூடாது”, மாதவன்.

“ஆமாம்! மாதவா! என்கிட்ட ரெயின்கோட் இருக்கு. நீ போட்டுக்கோ” என்றான் தங்கராஜு.

“இன்னிக்கி உன் ஆட்டோ வராது. உங்க அப்பா தான் வராருன்னு சொன்னயே! நீயும் தான நனைவ!” என்றான் மாதவன்.

“பரவால்லடா ! நீ முக்கியமான ப்ளேயர். நீ நனைஞ்சு உடம்பைக் கெடுத்துக்காத. எங்க அப்பா ஸ்பேர் ரெயின்கோட் வச்சு இருப்பாரு”

ரெயின்கோட்டைப் போட்டுக் கொண்டு நனையாமல் வீடு போய் சேர்ந்தான் மாதவன்.

மாவட்ட அளவிலான போட்டியில் அவர்கள் அணி முதலிடம் பெற்றது.

“எல்லாம் மாதவன் அற்புதமான விளையாடினதால தான். என்ன ஷாட்ஸ்” எல்லோரும் பாராட்டினார்.

ஜொலிக்கும் தங்கக்கோப்பையை மாதவன் வாங்க வேண்டும்.

“தங்கராஜூ ! வா முன்னால! என்னோட சேர்ந்து கோப்பையை வாங்க வா”

”வா தங்கராஜ் ! வெறும் வெஜ்ரோலுக்காக விளையாட்டுல சேருகிறாயோ எனத்தான் முதலில் அனைவரும் நினைத்தோம். ஆனால், படிப்பு, விளையாட்டு இரண்டிலும் சிறப்பாக முன்னேறி ‘மாடல்’ மாணவனாக ஜொலிக்கிறான் தங்கராஜு ! ” என்று புகழ்ந்தார் ஜகதீசன் சார்!

“அது மட்டுமல்ல சார்! நான் மழையில நனையக்கூடாதுன்னு என்கிட்ட ரெயின்கோட்டைக் குடுத்துட்டு தான் மழையில போனான் தங்கராஜு ! அவன் ரெயின் கோட் கொடுக்கல்லன்னா, எனக்கு ஜூரம் வந்திருக்கும். நான் விளையாடவே முடிஞ்சு இருக்காது” என்றான் மாதவன்.

“அணியின் வெற்றிக்காக உழைத்த தங்க மனசுக்காரன் நம்ம தங்கராஜூ!” என கை குலுக்கினார் பயிற்சியாளர் கிஷோர்.

00

கமலா முரளி

கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வரும்,இவரது இயற்பெயர்  திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும்.

ஆங்கில இலக்கியம் மற்றும் கல்வியியலில் முதுகலைப்பட்டம் பெற்ற கமலா முரளி,சென்னை, பெரம்பூர்,விவேகானந்தா பள்ளியில் சில வருடங்கள் பணியாற்றிய பின், கேந்திரிய வித்யாலயா சங்கதனில் ஆங்கில ஆசிரியையாகப் பணியேற்றார். கேந்திரிய வித்யாலயாவின் தேசிய அளவிலான “சீர்மிகு ஆசிரியர்” விருதினை 2009 ஆண்டு பெற்றார்.

கமலா முரளியின்,கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் தினசரி.டாட் காம், மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ், கேலக்ஸி தளம், நமது உரத்த சிந்தனை, மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், சிறுவர் வனம் ,ஆனந்தசந்திரிகை, மங்கையர்மலர், கோகுலம் , இந்து தமிழ்திசையின் மாயாபஜார் , வாசகசாலை, தினமலர் பட்டம் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.

இவரது “மங்கை எனும் மந்திர தீபம்”  (“எ லேடி வித் த மேஜிக் லேம்ப்”)எனும் மொழிபெயர்ப்பு நூல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இவர் எழுதிய, “இந்துமதி கல்யாணம் எப்போ?” என்ற சிறுகதைத் தொகுப்பு மணிமேகலைப் பிரசுர வெளியிடாக மலர்ந்துள்ளது.

மற்றும் இவரது சிறார் கதை நூல், “கிளியக்காவின் பாட்டு” லாலிபாப் சிறுவர் உலகம் வெளியீடாக வந்துள்ளது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *