அடுத்த வாரம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட எங்களது ஜப்பானிய கஸ்டமர் ரெப்ரெசென்டடிவ் டைக்கி வரவில்லை. முதல் கன்சைன்மெண்ட் அங்கே சென்றடைய மேலும் இரண்டு மூன்று வாரங்கள் ஆகுமென்பதால் கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை கப்பல் போக்குவரத்திலேயேக் கடந்துவிடும் வாய்ப்பு. அதனாலேயே சென்னை சென்றிருந்த பிரசாத் உடனேதிரும்பவில்லை. ஆனால் ரமேஷ் சொன்னபடி வந்து சேர்ந்திருந்தான். அவனுக்கு வீடுதான் கிடைக்கவில்லை! அதனால் கிடைக்கும் வரை என்னோடேயே தங்க வைத்துக் கொண்டேன். எங்களுக்கு வசதியாக பைக்கும் கொடுத்துவிட்டதால் நன்றாகச் சுற்ற ஆரம்பித்தோம்.
அங்கு வந்துக் கொண்டிருந்த நியூஸ் பேப்பர் ‘ஈநாடு’ மூலமாக கொஞ்சம் கொஞ்சம் தெலுங்கு வாசிக்கவும் பழகத் தொடங்கினேன். நீங்கள் ஆச்சர்யப்படுவது புரிகிறது. செய்தியெல்லாம் படிக்க மாட்டேன், நேராக சினிமா பகுதிக்கு சென்றுவிடுவேன். நடிகர் நடிகைகள் படமிருக்கும், அதன் கீழே அவர்களது பெயர்களும் அச்சடிக்கப் பட்டிருக்கும், குத்து மதிப்பாக பெயர்களின் உச்சரிப்பை வைத்து எழுத்துக்களை அறியத் தொடங்கினேன்.
அதில் ஏதும் குழப்பமோ, சந்தேகமோ வந்தால் ஜலபதி உதவுவான். சீக்கிரமே பஸ் போர்டுகளை படிக்கும் அளவிற்கு எனது திடீர் தெலுங்கு ஞானம் முன்னேறிவிட்டது. சந்திர பாபுவை போல் உனக்காக எல்லாம் உனக்காக என்று பாடாததுதான் குறை. கீதாவிற்காகவென சிறுபிள்ளைத்தனமாக பெரிய காரியங்களை மனம் போன போக்கில் செய்து கொண்டிருந்தேன்.
‘மெல்லகா கரகணி ரெண்டு மனசுல தூரம்..’ அதாவது மண்ணிலே மண்ணிலே வந்து உடையுது வானம்.. என்று அப்போது ட்ரெண்டிலிருந்த வர்ஷம் (மழை) படப் பாடலை எனது முதல் தெலுங்கு செய்யுளை போல தினம் தினம் மனனம் செய்யலானேன். என்றாவது ஒருநாள் மழையில் நனைந்துக் கொண்டே அந்த சினிமாவில் வருவது போலவே அவளுடன் டூயட் பாடும் ஆசைகளெல்லாம் வளர்த்தேன்.
இப்போதெல்லாம் அரைகுறை பதத்திலிருக்கும் சோற்றை கூட குறைக் கூறாமல் வெறும் கத்திரிக்காய் கூட்டை வைத்து “நேனு கூட தெலுகு அப்பாயி லாக மாறிப்போயானு!” நானும் கூட தெலுங்கு பையன் போல மாறிவிட்டேன் என்று மண்டியிட்டு, சீதம்மாவின் வாழ்த்துகளைக் கோரினேன். ஆனால் அவளைத்தான் அதாவது கீதாவைத்தான் சில நாட்களாக காண முடியவில்லை!
வேலை இருந்தாலும், ஞாயிறுகளில் அமருவதில்லை என்ற கொள்கை வைத்திருந்தனதால், ரமேஷோடு தியேட்டர் தியேட்டராக, ஹோட்டல் ஹோட்டலாக சுற்றிக் கொண்டிருந்தேன். அங்கே நம்மூரு பிரியாணி கடை ஒன்று இருந்தது. பேரே மெட்றாஸ் பிரியாணி சென்டர்! அந்த ஹோட்டலிருந்து அரை கிலோமீட்டர் தூரம் வரை அதன் வாசமடிக்கும், வாரத்தில் ஒரு நாள் சென்று ஒரு கட்டுக் கட்டுவோம்.
ஞாயிறுகளில் நான் ப்ரவுசிங்கும் செல்லும் வழக்கம் வைத்திருந்தனால், அன்று அந்த கடையொட்டியிருந்த சென்டருக்குச் சென்றேன். ஆச்சர்யம், கீதாவும் அங்கிருந்தாள்! ஆனால் பணிப்பெண்ணாக! அதாவது சிஸ்டம் அலாட் பண்ணுவது, போகும் வரும் நேரங்களை குறித்துக் கொண்டு காசு வாங்குவது போன்றவைகளை கவனித்துக் கொண்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் அவள் முகத்தில் ஒரு தவுசண்ட் வாட்ஸ் பல்பு எரிந்தது, எனக்கு லட்சம் வாட்ஸில் ஒன்று இருந்திருந்தால், அதுபோல் அடித்திருக்கும்!
“பாகுன்னாரா?” நல்லாருக்கீங்களா என்றேன். அந்த ‘ங்க’ உறுத்தினாலும் முதல் உரையாடிலேயே வாடி போடி என்று பேசினால் நன்றாகவா இருக்கும்?
“ம். மீரு?” ஆஹா நீதானா அந்த குயில் என்று பாட.. ஸாரி கேட்க வேண்டும் போலிருந்தது.
வானுயர்ந்த நயகராவை நம்மூரு மேட்டூர் அணைப்போட்டு அடக்க முயற்சித்தது போல அவளைக் கண்ட சந்தோசத்தை அடக்க மிகவும் கஷ்டப்பட்டேன்.
“ம்” என்று அவள் உதட்டோடு உதட்டைப் பொருத்துவது போல, அவளது ‘ம்’மோடு எனது ‘ம்’மை பொருத்தி கிறங்கிப் பார்த்தேன். அங்கே அவள் உடலோடுசேர்ந்து இதழ்களும் வெட்கத்தில் நெளிந்தன.
“பிரவுசிங் கோசம் வொச்சாரா?” உன்னைப் பார்க்கத்தான் வந்தேன் என்று பதில் சொல்லிருக்க வேண்டும், ஆனால் ஆமாம் என்று சொல்லிவிட்டேன். அவளுக்கும் அதில் கொஞ்சம் ஏமாற்றம்தான் போல.
பாம்பின் கால் பாம்பறிந்தது போல இருவரும் பட்டென்று சிரித்து விட்டோம்!
“க்கும்..!” ரமேஷ் கனைத்தபோதுதான் தெரிந்தது, பின்னால் அவனும் நின்றுக்கொண்டிருந்தது. ஹிஹி! என்று நான் வழிய, ‘த்தூ!’என்று துப்பினான், அது என்னவோ நல்லா இரு! என்று உளமார என்னை வாழ்த்துவது போலிருந்தது.
சிரித்துக் கொண்டே அவள் காட்டிய கேபின் பக்கம் சென்றோம், அங்கே ஒளிர்ந்துக் கொண்டிருந்ததெல்லாம் ‘நீல’த்திரையாகவேத் தெரிந்தன. ஒன்றிரெண்டு கேபினில் ஜோடிப்புறாக்கள் வேறு! ஒரே நிமிடத்தில் அவள் அங்கே வேலை செய்வதுப் பிடிக்காமல் போயிற்று. அங்கே எல்லா இடங்களிலும் ஏதோ ஒரு சங்கடம் மறைந்திருப்பதாகவே உணர்ந்தேன். இருந்தாலும் ரொம்பவும் உரிமையெடுத்து இந்த வேலையை விட்டு நின்று விடு என்றா சொல்லி விட முடியும்?
ஒரு மணி நேரத்தில் ஏதாவது ஒரு காரணம் சொல்லி அரைமணி நேரமாவது அவளிடம் பேசிக் களித்திருப்பேன். சீதம்மா எனும் கேரக்டரே அச்சமயம் மறந்துப்போயிருந்தது, ஏன் ரமேஷ் கூட அங்கு இல்லாதது போல்! யாருமே இல்லாதது போல் ஒரு முதலாளியிடம் கைகட்டி நின்று பேசும் ஒரு வேலையாள் போல, அவள் அமர்ந்திருக்க நான் நின்றுக்கொண்டே, தெலுங்குல இதுக்கு என்ன சொல்லுவீங்க? அதுக்கு என்ன சொல்லுவீங்க? என்று அவளது பதில்களை என் இதய அறைகளில் பதிவு செய்துகொண்டிருந்தேன்.
இடையிடையே வந்து போன இளைஞர்கள் என் பொறுமையை சோதித்தார்கள். இவர்களையெல்லாம் இவள் எப்படி தினமும் கையாளுகிறாள் என்ற கவலைகளும் மேலோங்கின.
“படிக்க போவதாக கேள்விப்பட்டேனே? என்னவாயிற்று?” என்றேன்
நான் அவளைப் பற்றிய விபரங்களை சேகரித்து வைத்திருந்ததில், உள்ளூர அவள் மகிழ்ந்திருக்க கூடும், அதை அவளது குழி விழுந்த சிரிப்பினில் கண்டேன். காற்று வடித்த மணற்மேட்டு அலையடுக்குகளின் மேல் சந்தடிக் கேட்காத மற்றுமொரு காற்றலையாய் என் பெருமூச்சு அவள் முக வசீகரத்தில் மாய்த்துக் கொண்டிருந்தது!
“லேதண்டி.. மே வர இக்கடே!” ஜூனில் அவள் கல்லூரி சேரவிருப்பது எனக்கு ஆறுதலைத் தந்தது.
தன்னுடைய நேரம் முடிந்து, ரமேஷ் இருக்கையிலிருந்து எழுந்துவிட்டதால், அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை, அவனும் நிற்க விடவில்லை. இது போன்ற சமயங்களில், கூட வருபவர்களின் ஏக்கமான மனநிலைகளை நான் நன்கு அறிவேன். கல்லூரி நாட்களில் கடலை போடும் நண்பர்களின் அருகே நின்று நானும் கூட வெந்திருக்கிறேனே..! அதனால் அவனது பொறுமையை மேலும் சோதிக்காமல் அன்று அவளிமிருந்து பிரியா விடைப்பெற்றுக்கொண்டேன். ஆமாம் அதுவரை ஞாயிறுகளில் மட்டும் பிரவுசிங் சென்றவன், அவளை அங்கேக் கண்டதிலிருந்து திடீர் பக்தன் போல, என் காலணிகளை அந்த கடையின் வாசலில் தினமும் விடத் தொடங்கினேன்.
“யார்ர்ரா இது? வந்த உடனே புடிச்சிட்டியா?”
“இல்லடா, நம்ம குக் இருக்காங்கல்ல, அவங்க பொண்ணுதான். அப்பப்ப அங்கே வரும், அப்ப பழக்கம்”
“ம்ம், அப்ப நமக்கும் தேறும்ங்கிற?!”
“ம்ம் தேறும் தேறும்” என்று கிண்டலாக அவனை அங்கிருந்து நகர்த்திக் கொண்டு வர முயன்றபோதுதான், சடாரென ஒருவன் வந்து விழுவது போல் எங்கள் மீது மோதினான். பயங்கர சாராய வாடை! இடித்த எங்களைப் பொருட்படுத்தாமல் அவன் பாட்டிற்கு உள்ளே சென்றுக் கொண்டிருந்தான். அவனைக் கண்டதும், உணர்வற்றவள் போல் எழுந்து நின்றாள். அவன்தான் அவளுடைய அண்ணனாக இருக்க வேண்டுமென்று யூகித்துக் கொண்டேன். திடீர் கவலைகள் பிடித்தவன் போல, நகர மனமில்லாமல் வந்த தூரத்தில் நின்றுக்கொண்டு என்ன நடக்கிறதென கொஞ்சம் பதற்றத்தோடு கவனிக்கலானேன்.
அவள் நிறத்திற்கு சம்பந்தமே இல்லாத ஒரு நிறம், அப்பனின் சாடையாகவும் இருக்கலாம். எதிர் நாயகனுக்குரிய குணாதியங்கள் சிலவற்றை அவனிடம் நான் உணரும் வேளையில், அவளை நோக்கி வேகமாக கையை ஓங்கியவன், பட்டென கீழே சரிந்தான்!
அவள் டேபிளை விட்டு வெளியே வந்து, கடைவாயிலில் கிடந்த, சுள்ளியை விட சற்றுப் பருத்த கட்டையொன்றை வைத்து நிதானமாக அவனைத் தட்ட ஆரம்பித்தாள். புதிதாக பார்த்த நான்தான் அதிகம் பதறிவிட்டேன் போலும்! அவள் தன்னுடைய அண்ணனைக் கண்டு தடுமாறாவிட்டாலும், நான் அங்கு நின்றதைக் கண்டு சங்கடப்பட்டாள். சிலர் வந்து அவனை சத்தம் போட்டுத் திட்டிவாறு, அங்கிருந்து அப்புறப்படுத்திக் கொண்டிருந்தனர். நான் ‘பார்த்துக்கொள்ளலாம்’ என்பது போல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் புன்னகைக்க முயற்சிப்பது போல அவள் பார்வை என்னை ஏற்க தயாரானது.
***
அவளைக் காணாத ஒரு நாளும் எளிதாக செல்வது போல் தோன்றவில்லை. அவளைப் பிரிந்திருக்கும் பகல் வேளையின் மீது கோபம் வந்தது. ஒரு மாதத்திற்குள் ஆரம்பத்திலிருந்து பயம், தயக்கங்களெல்லாம் மறைந்து, நெடுநாள் பழக்கம் போல இருவருக்குள்ளும் மெல்ல மெல்ல ஆழமானப் புரிதல்கள் ஏற்பட துவங்கின. அது யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அவளோடு ஊர்ச் சுற்றித் திரியுமளவிற்கு அதீதமாய் வளர்ந்தது.
‘அனுக்கோ குண்டா ஒக்க ரோஜூ’ (எதிர்பாராமல் ஒரு நாள்) என்றொரு படம் குண்டூரிலேயே பெரிய தியேட்டர் காம்ப்ளெக்ஸான நாஜியில் ஓடிக்கொண்டிருந்தது. அடிப்படையில் சதா திரைப்படங்களிலேயே திளைத்துக் கொண்டிருந்தவனால் அந்த பட விளம்பரங்களை எளிதாக கடந்து செல்ல முடியவில்லை. பெரும்பாலும் கருப்பு, வெள்ளை காம்பினேஷனிலேயே நகரெங்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் தெரிந்த முகமாக நடிகை சார்மி மாத்திரம் இருந்தாள். ஜெகபதி பாபும் கொஞ்சம் பரிச்சயம்தான்.
“போகலாமா?” என்றேன்.
“எக்கடா?”
“அனுக்கோ குண்டா ஒக்க ரோஜூ?” அல்லு அரவிந்த் படம் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. அவள் அதற்கு அழைத்தாள். ஏனென்றால் அந்த தியேட்டர் சற்று ஒதுக்குப் புறமாக இருந்தது. செல்ல ஏதுவாக இருக்கும். ஆனால் நான் சொன்ன தியேட்டர் நகரின் முக்கிய பகுதியில்! அதுவும் தியேட்டர் முன் பெரிய மைதானமிருக்கும். ஆள் நடமாட்டமும் கூடுதல். தெரிந்தோர் வர அதிக வாய்ப்புண்டு.
ஆனாலும் நான் வற்புறுத்தினேன். வந்தாள். ஒரு பாதுகாப்பிற்காக தனித்தனியாக டிக்கெட் எடுத்துக்கொண்டு தியேட்டருக்குள் நுழைந்தோம். நல்ல இருட்டு! தியேட்டர் என்றாலே அப்படிதானே இருக்கும்.
அவள் மனதில் என்ன ஓடியதோ தெரியாது, நான் படம் பார்க்கும் முனைப்பில்தான் சென்றேன். படமும் நன்றாக இருந்ததால் எனது கவனமும் திசை திரும்பவில்லை. விறுவிறுப்பாகப் போய்க்கொண்டிருந்தது. அவளும் சிறிது நேரத்தில் ஒன்றிப் போனவள் போல் தெரிந்தாள். அதன் சாட்சியாக, பயம் வரும் காட்சிகளில் எனது கைகளை அவ்வப்போதுப் பற்றிக் கொண்டாள். படம் ஹீரோயின் சப்ஜெக்ட் என்பதால் அவளுக்கும் பிடித்திருக்க வேண்டும். என்னைக் கேட்டால் சார்மி உருப்படியாக நடித்தது அந்த ஒரே ஒரு படம்தான் என்பேன்.
இன்டர்வெல்லில் வெளியே செல்லவில்லை. நிலவொளியில் பேசிக்கொண்டிருப்பது போல் கொஞ்சம் அவளது முகத்தைப் பார்த்து பேசிக்கொண்டிருக்கலாம் என ஆசைப்பட்டேன். ஆசையோடு அவளை பார்த்தேன்.. என்ன என்பது போல் நெருக்கம் காட்டினாள்.
“என்னை விட இந்த படம்தானே உனக்கு பிடிச்சிருக்கு?” என்று செல்ல கோபம் கொண்டாள்.
“இந்த படம் மட்டும் மட்டுமல்ல இது போன்ற எல்லா நல்ல படங்களும் பிடிக்கும். இந்த மாதிரி ஒரு நல்லப்படம் நானும் எடுக்கணும்!”
“என்ன படம் எடுக்க போறியா?”
“ஆமாம்”
“அதெல்லாம் உனக்கு தெரியுமா!..?”
“தெரியாது, ஆனா கத்துப்பேன். கதைகளும் வச்சிருக்கேன்!” என்றேன் ஒரு பெருமிதப் புன்னகையோடு. அப்படியா என்பது போல் கண்களை விரித்து ஒரு குழந்தை வியந்து கதைக் கேட்பது போல் என்னைப் பார்த்ததைக் கண்டு நானும் ரசித்தேன்.
“சரி என்ன கதை சொல்லு, நானும் கேட்கிறேன்!” எனக்கு சிரிப்பாய் வந்தது. என்ன கதை சொல்வது என ஒரு கணம் நெளிந்தேன். அவளிடம் ஒரு ஆர்வத்தில் அப்படி சொன்னேனே தவிர சொல்லிக்கொள்ளும்படி ஒரு கதையும் கைவசமில்லை. ஆதிகாலத்தில் யோசித்து வைத்திருந்த அந்த கதையை சொன்னால், இது ரவி தேஜா படம் போல இருக்கே என்பாள். ஏனென்றால், தெலுங்கு ஆட்டோகிராஃபில் அவர்தான் சேரன். சினேகாவிற்கு பதிலாக பூமிகா பூனையைப் போட்டு சொதப்பி வைத்திருந்தார்கள்.
அனுக்கோ குண்டா ஒக்க ரோஜூவில் சஹஸ்ரா கேரக்டர், அதாவது அந்த படத்தில் சார்மி ஏற்று நடித்திருந்த பாத்திரத்தின் குடும்ப பின்னணி அச்சமயம் என்னிடத்திலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அது என்னை தூண்டி விடுவது இருக்கவே, எதார்த்தமாக அந்த கதையை சொல்ல ஆரம்பித்தேன்.
இரண்டு கைகளையும் முன்னோக்கி கேமெரா கோணம் போல அவளது முகத்தருகே கொண்டுச் சென்றேன்.
“ஃபர்ஸ்ட் ஷாட்..! ஹீரோ கௌதம் காலேஜ் ஃபேர்வெல் முடிஞ்சி, வீட்டுக்கு வர்றான்.. அவனோட அப்பாவும் அம்மாவும் சண்டைப் போட்டுக்கிட்டு இருக்காங்க. அவனோட தங்கச்சி அழுதும், திகைச்சும் அதை ஒரு மூளையிலிருந்து அதை பார்த்துக் கொண்டு நிக்கிறா! ஹீரோ வந்ததும் ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிறத நிறுத்திடுறாங்க. தங்கச்சி பக்கம் சென்ற கௌதம், அவளை வாரி தோளில் போட்டுக்கொண்டு தன்னோட ரூமுக்கு போயிர்றான்..” அவள் இடை மறித்தாள்.
“படம் இப்படியெல்லாம் ஆரம்பிக்குமா?”
“ஏன் அப்படி கேக்குற?”
“ஹீரோவுக்கு ஓப்பனிங் சாங்கு, ஃபைட்டு எதுவும் இல்லையா? நாகார்ஜுனா நடிச்ச ‘மாஸ்’ படம் பாத்தியா..?” அவள் நாகார்ஜுனாவின் ரசிகை. நான் நேரெதிர். எனக்கு வெங்கடேஷ் படம்தான் பிடிக்கும். ஏனென்றால் நான் முதன்முதலில் தியேட்டரில் பார்த்த படம் முரட்டுத்தம்பி, அதுல ஹீரோ வெங்கடேஷ்! என்னடா நம்மூர்ல வெங்கடேஷ் படம் பார்த்தியா என்று கேட்பது புரிகிறது. அப்போது தெலுங்கு டப்பிங் படங்களுக்கு ரொம்ப மவுசு.
இதுதாண்டா போலீஸ், எவனா இருந்தா எனக்கென்ன போன்ற படங்கள் வந்து தமிழ் சினிமாவின் தாலி சென்ட்டிமெண்டு, தங்கச்சி சென்டிமென்ட்டு படங்களோடு போட்டிப்போட்டு ஜெயித்துக் கொண்டிருந்த நேரம். பாருங்க இந்த சினிமா பத்தி பேச ஆரம்பிச்சாலே, நான் சொல்ல வந்த கதையை கூட மறந்து விடுகிறேன்!
“சினிமான்னா பாட்டும் ஃபைட்டும் மட்டும் முக்கியமில்ல, அதைவிட கதை முக்கியம், மேக்கிங் முக்கியம்! இந்த படத்தை போல” என்றேன்.
“என்னது இந்த படம் போலயா?”
“ஏன் உனக்கு பிடிக்கலையா?”
“நீ பக்கத்துல இருக்கிறதால எனக்கு பிடிச்சிருக்கு, ஆனா நீதான் என்னை கவனிக்காம படத்தையே பாத்துக்கிட்டு இருக்க!” என்று கோபித்துக் கொண்டாள். இடைவேளை முடிந்து மீண்டும் படத்தில் மூழ்கலானேன். என் தோள்களில் சாய்ந்துக் கொண்டு என் முன்னகை ரோமங்களை மெல்ல வருடத் தொடங்கினாள். அவளது சூட்டு மூச்சு என் கழுத்தோரம் என்னவோ செய்தது.
அந்த தகிப்பில் திரையில் கவனம் செலுத்த முடியவில்லை. மீண்டும் அந்த படத்தை இன்னொரு சென்று நாள் தனியாகச் சென்று பார்க்கும் நிலைக்கு நான் ஆளாகத் தொடங்கியிருந்தேன். அங்கிருந்து அந்த படத்தில் வந்த எந்த திடுக்கிடும் சீனோ, சோக சீனோ என்னை துளியும் பாதிக்கவில்லை. மார்பிடுக்கினில் புதைந்த குழந்தையாய் முற்றிலும் அவளுடன் ஐக்கியமாகிவிட்டிருந்தேன்.
படம் முடிந்து, வெட்கத்தோடும் வியர்வையோடும் திரையரங்கை விட்டு வெளியே வந்தோம். நாங்கள் சற்றும் எதிர்பாராமல் கீதாவின் அண்ணன் அங்கே நின்று, நீங்கள் நினைப்பது போலவே பந்தாவாக நின்றபடி புகைப்பிடித்துக் கொண்டிருந்தான். அவள் லாவகமாய் என்னிடமிருந்து விலகி குழந்தைகள், மற்றும் பெண்கள் கூட்டத்தில் இணைந்து கொண்டாள்.
ஆனால் அவன் என்னையே வெறிக்க வெறிக்க வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். பொருட்படுத்தாமல், பைக்கை கிக் ஸ்டார்ட் செய்தபடி வெளியில் வந்தபோது இடை நின்று மறித்தான். நான் திகைத்துப் போய் அவனை ஏறிட்டேன். திரையரங்கினுள் அவனும் இருந்திருப்பானோ என்ற கேள்விகள் எழுந்தன. ஒருவேளை தான் பார்த்ததை சீதம்மாவிடம் கூறிவிட்டால்? அல்லது இங்கே வம்பு வழக்கு செய்வானோ..? கேள்விகளைத் தாங்கிய சிலை போல அவனைப் பார்த்தேன்.
“தப்பு இவ்வு!” காசு கொடு என்று நெஞ்சுக்கு நேர் கையை நீட்டினான். நான் பர்ஸை எடுக்குமுன், கைவிட்டு பாக்கெட்டிலிருந்த இரண்டு நூறு ருபாய் தாளை எடுத்து தனது ஜோப்பில் வைத்துக் கொண்டான். என்னை மீண்டும் ஒரு முறை முறைத்தான். உடனே நகருவதாக இல்லை! சிறிது தூரத்தில் அவளும் எனக்காக காத்துக் கொண்டிருந்தாள். அதை அவனும் கவனித்தான். அவளை கவனித்த தருணம், ஒன்றும் பேசாமல் சென்றுவிட்டான். நான் குழப்பான மனநிலையில் அவளருகில் போனேன்…
“ப்ச்” பார்த்துக்கொள்ளலாம் என்பது போல் வண்டியில் ஏறினாள். மணி ஏழை நெருங்கிவிட்டிருந்தது. டின்னர் சாப்பிடலாம், யாரும் பார்த்தால் பார்க்கட்டும் அவள் அண்ணனே பார்த்துவிட்டான் என பைக்கை லக்ஷ்மிபுரத்திற்கு அழுத்தினேன். அங்கே சுந்தரம் கஃபே என்று ஒரு தமிழ் வெஜ் ரெஸ்ட்டாரெண்ட் இருந்தது. இருந்தாலும் அங்கே ஆந்திர உணவு வகைகளைதான் அதிகம் மெனுகார்டில் காண முடிந்தது. லாவகமாக அந்த பக்கம் செல்லாமல் சப்பாத்தி, குருமா ஆர்டர் செய்தேன்.
இருவரின் முகத்திலும் வெட்கமும் புன்னகையும் பூமடலும் வரிகளும் போல கலந்திருந்தது. ஆனால் அதை வளர்த்துக் கொள்ள அது இடமல்லவே! அவளாக தொண்டையை கனைத்துக் கொண்டு,
“அப்புறம் என்னாச்சு?” என்றாள். நான் விழித்தேன்.
“அந்த கதையை சொல்லு!” இப்போது மறுபடியும் ஃபார்முக்கு வந்தது போல, டைரக்டர் மோடுக்கு போனேன்.
“அடுத்த நாள் காலைல. எல்லோருமே அமைதியா இருக்காங்க. வீடே அமைதிக்காடா இருக்கு! தனது சந்தோசமான குழந்தைப் பருவத்தை நெனச்சு கௌதம் அழ ஆரம்பிக்கிறான்..” என்னால் தொடர முடியவில்லை. குரல் கனத்தது. அவள் என்னாயிற்று என்பது போல் பார்த்தாள். சிரிப்பை வரவழைத்துக் கொண்டு மறுபடியும் ஆரம்பித்தேன்.
“அவனோட அப்பா அம்மா ரெண்டு பேருமே அவனைப் பத்தியோ, அவளோட தங்கச்சிப் பாப்பா பத்தியோ கவலைப்படற மாதிரி தெரியல்ங்கிறது அவனுக்கு புரியுது. வீட்டில இருக்க பிடிக்காம, ரிசல்ட் வர்றதுக்கு முன்னாடியே வேலைத் தேடி மெட்றாஸ் கெளம்பி போக முடிவெடுக்கிறான்.. அந்த அன்னைக்கு நைட்டும் அப்பா அம்மா ரெண்டு பேருக்கும் சண்டை.” டேபிளில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரை எடுத்து குடித்துக் கொண்டேன்.
“கௌதமோட அப்பா வந்து பஸ் ஏத்தி விடுகிறார். அது அவங்களோட வாழ்க்கையில ஒரு ஆரம்பம்னு நெனச்சு, அவனோட அப்பா எதையும் காட்டிக்காம சந்தோசமா வழியனுப்பி வைக்கிறார். பஸ்ல வரும்போது அவன் நடந்த எல்லாவற்றையும் நினைத்து நினைத்து வருந்துறான்… ” நான் பெருமூச்சு விட்டுக்கொண்டேன்.
“அப்புறம்..?” அவள் கொஞ்சம் கதைக்குள் வந்திருக்க வேண்டும். குரலில் கொஞ்சம் சோகம் மேலிட்டது.
நான் சிரித்துக் கொண்டே, “அவன் சென்னை வருகிறான். அப்படியே கொஞ்ச நாள்ல ஒரு வேலைக் கிடைச்சது. கிடைக்கிது. ஆனால் அது குண்டூருலன்னு சொல்றாங்க..” என்றதும்
“என்னது?”
நான் அர்த்தத்தோடு சிரித்தவனாய்,
“அங்கதான் ஹீரோயின் என்ட்ரி.. தமிழ் பையன், தெலுங்கு பொண்ணு.. லவ் ஸ்டார்ட் ஆகுது”
“மரோ சரித்திரா படம் போலவா?”
ஆமாம், அப்படிதான் எனச் சிரித்தேன்.
“அம்மாயி பேரு?”
“கீதா” இதை அவள் எதிர்பார்க்கவில்லை!
” நம்மளோட கதையா?” ஆமாம் என்பது போல் தலையாட்டினேன்.
“படத்துக்கு என்ன பேரு வச்சிருக்க?”
கொஞ்சம் இடைவெளி விட்டு சொன்னேன்,
“சீதம்ம கூதுரு!”
(தொடரும்…)

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கட்டுமாவடி எனும் ஊரைச் சார்ந்த இத்ரீஸ் யாக்கூப் நுண்ணுயிரியல் துறையில் முதுகலை பட்டம் பெற்று தற்சமயம் பணி நிமித்தமாக அமீரகத்தில் வசித்து வருகிறார். இவரது முதல் நூலான ‘ஒரு திர்ஹமும் உள்ளூர் காசும்’ – நாவல் பிப்ரவரி 2024ல் கோதை பதிப்பகம் வெளியீட்டுள்ளது. இவரது சிறுகதைகள் கீற்று, சொல்வனம், வாசகசாலை, கலகம், நடுகல் போன்ற இணைய இதழ்களிலும் மற்றும் கேலக்சி தளத்திலும் வெளியாகியுள்ளன.