1
தள்ளிச் சென்ற வாகனம்
திடீரென்று
தறிகெட்டு வந்து மோதுகிறது
விதி என்கிறார்கள்
அப்படியென்றால்
விதி மீறல் எது?
தலைகீழ் வாழ்க்கை.
2
ராசிபலன் தரும்
உடனடி ஊக்கத்தை
வேறு ஏதும்
தந்துவிடுவதில்லை
இன்றைய மனிதர்களுக்கு
மூடநம்பிக்கையில்
சிக்குண்டு கிடப்பதாக
தூரத்திலிருந்து
ஏளனத்துடன் நோக்கும்
இதர மனிதர்களும்
அதே ஊக்கம்
வேறு வழியாக கிடைத்துவிடாதா
என ஏங்கித் தவிக்கிறார்கள்
வறுமையின் தத்துவத்திலும்
தத்துவத்தின் வறுமையிலும்
தள்ளாடுகிறது சமூகம்
நிலை கொள்ளாத மனிதர்கள்
அடுத்தவர் வாசிக்கும்போது
ஓரக்கண்ணால்
ராசிபலன் படிக்கிறார்கள்
சுபம் என்று பார்த்ததும்
அப்போதைக்கு
மனம்
அதில் சாய்ந்து கொள்கிறது
ஒரு டீ சொல்லிவிட்டு
நம்பிக்கையுடன்
வேலைக்கு ஆயத்தமாகிறார்கள்.
3
காதல் என்று வந்துவிட்டால்
இந்த மண்ணில்
வெட்டு ஒன்று துண்டு இரண்டு
அவ்வப்போது
வெட்டுகள் பலவாக.
இது எந்த மாதிரி
மண் என்றே
புரியவில்லை
ஆகாயம் பார்த்து
ஆண்ட மண்
ஆயிரம் பார்த்தும்
மீளாத மண்
மண்ணின் மைந்தர்கள்
தெரிந்தால் சொல்லுங்கள்.
4
புகழ் மென்று
புகழ் சுவைத்து
புகழ் முழுங்கி
வாழ்ந்தவர்கள்
வாழ்கிறவர்கள்
புகழ் விக்கலில்
குலுங்கி
ஏதாவது கக்கும்போதுகூட
கைதட்டும் அளவுக்கு
இன்றைய
சமூக மனத்தின்
பக்குவம் வழிந்தோடுகிறது
வழுக்கும்
ஓரமாகச் செல்லுங்கள்.
5
பிரேக்-அப் ஆன
முன்னாள்
காதல் இணையர்களின்
எண்ணிக்கை
நாளுக்குநாள் பெருகிவருகிறது
என்றாலும்
இணைந்திருந்த காலத்தில்
ஒருவருகொருவர்
பரிமாறிக் கொண்ட
பிறந்தநாள் பரிசுகள்
அவரவர்
பயன்பாட்டில் உள்ளன
நினைவுகளின் நீட்சியில்
அல்லது சுருக்கத்தில்
வாழ்க்கை
ஓடிக் கொண்டிருக்கிறது.
ஓடும்.
***

சுகதேவ் – மூத்த பத்திரிகையாளர். தினமணி நாளிதழில் – தினமணி கதிர் இதழாசிரியர் உள்பட வெவ்வேறு பொறுப்புகளில் 18 ஆண்டுகள் பணி. அமெரிக்கத் துணைத் தூதரகத்தில் ஊடக ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு ஆதரவுடன் இலயோலா கல்லூரி வழங்கிய ஊடகச் சான்றிதழ் படிப்பின் திட்ட இயக்குநர் ஆகியவை பிற பணிகளில் அடங்கும். தினமணி கதிர் இதழில் நூறு வாரங்களுக்கு மேல் வெளியான பத்திக் கட்டுரைகள் மூன்று தொகுப்புகளாகவும், வணிகமணி இதழில் வெளியான பொருளாதாரக் கட்டுரைகள் தனித் தொகுப்பாகவும், தினமணி கதிர் மற்றும் சிறப்பிதழ்களில் வெளியான இலக்கிய நேர்காணல்கள், திரை ஆளுமைகளின் பேட்டிகள் தனித்தனி தொகுப்புகளாகவும் வெளிவந்துள்ளன. பல்வேறு துறை சார்ந்த 65 கருத்தாளர்கள், ஆளுமைகளுடன் நடத்திய விரிவான கலந்துரையாடல்களை குதிர் (@kudhirvirtual) யூ டியூப் தளத்தில் பதிவு செய்திருக்கிறார். திரை விமர்சனங்கள் உள்பட தெரிந்தெடுக்கப்பட்ட முகநூல் பதிவுகள் (@ElayaperumalSugadev) மையம் விரியும் காலம் என்ற தலைப்பில் அமேசான் கிண்டில் மின்னூலாக (2024) வெளியாகியிருக்கிறது. கவிதைத் தொகுதிகள்: ஒவ்வொரு கணமும் (2019) இன்னொரு திணை மயக்கம் (2024).