புத்தரின் சுவடுகள்
இருபது ஆண்டுகள் கடந்தும் நிறம் மங்காமல்
இன்று வைகறையில் கண்டது போல்
ஆயுளுக்கும் மறக்காத அந்தக் கனவு
,
கிளிப் பச்சைப் புல்வெளி நடுவே
இறுதிவரை ஒன்றாததும் பிரியாததுமான
இணைக் குழிவு இடைவெளியாக
செம்புலப் பாதை
ஏதோ ஒரு தொலைதூரக் குக்கிராமத்தின் புறப்பகுதி
சற்று முன் பெய்த மழையின் ஈரமும்
இப்போது பொலிவூட்டும் இளங்காலை வெயிலும்
எதிர்மைகளின் கவன ஈர்ப்பு அழகில்
சாலை மருங்குகளில் வானளாவிய மரங்கள்
வரலாற்றின் நீண்ட விரல்கள் போல
,
ஓதக் காற்று உடல் தழுவ
நடந்து சென்றுகொண்டிருக்கிறேன் தனியனாக
சாலையில் ஆங்காங்கே சகதியும் சேற்று நீர்த்தேக்கங்களும்
ஏனோ எனக்குத் தோன்றுகிறது
அந்த இடம் இலங்கையென்று
முன்னே ஈரச் செம்மண்ணில்
ஆளின்றிப் பதிந்துகொண்டிருக்கின்றன
மனிதக் காலடிச் சுவடுகள் அழமாக
ஓர் ஆணின் பாதச் சுவடுகள்
ஆளே இல்லாமல் பாதச் சுவடுகள் பதிவது எப்படி?
யார் அந்த அமானுஷ்யன்?
வியந்து குழம்புகிறேன்
,
சட்டென்று சுவடுகள் மறைந்தன
பின் சாலையோர மரங்களுக்குப் புலம்பெயர்ந்தன
பட்டைகளை வெட்டி எடுத்தது போல ஆழ்ந்து
,
செங்குத்து மரங்களில் படுக்கைவசமாக நடப்பது
மனிதர்களுக்குச் சாத்தியமா?
,
அடிமரச் சுவடுகள் சராசரி அளவு
மேலே செல்லச் செல்லப் பெரிதாகி
இறுதியில் ஒன்றரை அடி நீள ராட்சதம்
,
அதில் போதி மரம் இல்லை
எனினும் உள்ளம் உறுதியாக நம்புகிறது
அவை புத்தரின் பாதச் சுவடுகள் என்று
ஆனால், அவை ஏன் மேல் நோக்கிச் செல்கின்றன?
00
தலைகீழாக நடந்துவரும் மரம்
வானத்தில் வேர்கள் ஒளி குடிக்கின்றன
காண்போர் யாருமில்லை
நிலத்தில் கிளைகள்
மேற்கே விலக்கப்பட்டதும் கிழக்கே அருளப்படுவதுமான
கனிகளைக் கனிக்கின்றன
பறிப்போர் எவருமில்லை
புறவிழிகள் காணவியலாதது தலைகீழ் மரம்
,
யோகியர்களால் போற்றப்படும் அந்த மரமும் ஒரு யோகி
அதன் தலைகீழ்மை சிரசாசனம்
புலப்படாமை ஆழ்நிலை தியானம்
,
அது எங்கெங்கும் இருப்பினும்
அயோகிகள் அறியாதிருக்கக் காரணம்
அவர்களுக்குள் இருப்பதே
தனக்குள் தேடுகிறவர்கள் மட்டுமே கண்டடைகின்றனர்
பேருண்மைகளின் தரிசனங்களை
,
தலைகீழாக நடந்துவரும் மரம்
கௌதமனை புத்தனாக்கிய பின்
ஒவ்வொரு விசாக பௌர்ணமியிலும் பூமிக்கு வந்து
தேடுகிறது தகுதி கொண்ட தேடலரை
தன் வேரில் மலர்த்த; கிளையில் கனிக்க
2,400 பௌர்ணமிகளும் தேய்ந்ததுதான் மிச்சம்
ஒளி மரம் ஏமாற்றத்தோடு சொர்க்கத்துக்குத் திரும்புகிறது
ஒவ்வொரு முறையும்
,
நிலவுதின்னியும் அகிம்சைத் தாவரமுமான அது
பூமியில் பதியமிட மறுக்கிறது
நாமோ அதன் கிளையில் கனிக்கத் தயாரில்லை
0

ஷாராஜ்
கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது பொள்ளாச்சியில் வசித்துக்கொண்டிருக்கிறார். தமிழ் வழிக் கல்வியை பள்ளி இறுதி வரை மட்டும் பயின்றவர். 90-களின் துவக்கம் முதல் இலக்கியத்தில் ஈடுபட்டுவரும் இவர், சுயமாக நுண்கலை ஓவியம் கற்றுக்கொண்டு நவீன தாந்த்ரீக ஓவியராகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். 5 சிறுகதைத் தொகுப்புகள், நான்கு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு ஆகியவை வெளியாகியுள்ளன.
சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும், நுண்கலை ஓவியத்துக்காக கே.எம்.கோபால் நினைவு விருதும், கவிதைக்காக நெருஞ்சி இலக்கிய விருதும் பெற்றவர். 2023-ம் ஆண்டுக்கான சௌந்தரா கைலாசம் நாவல் போட்டியில், நீர்க்கொல்லி என்ற இவரது நாவல் பரிசு பெற்றது.