(கதைகளின் கதை)

”மாலை சீக்கிரம் வரவேண்டும்.மயாவை தனியாக விட முடியவில்லை”யாழினி வீடு பூட்டி அந்த பென்ட்ஹவுசில் இருந்து வெளியேறி லிஃப்ட்டுக்காக காத்திருந்தாள்.

ஃப்ரான்க்ஃபர்ட்டின் செப்டம்பர் மாத வெயில் இதமாக இருந்தது. வீட்டுத் தோட்டங்களில் ஆப்பிள் பழங்கள் காய்த்து தொங்கிக்கொண்டிருந்தன.

ஸ்வெட்டரை இழுத்து மூடிக்கொண்டாள். இனி மாதங்கள் செல்லச்செல்ல குளிர் இன்னும் அதிகமாகி விடும். தலைக்கு குல்லா கைக்கு கிளவுஸ் எல்லாம் தேவைப்படும்.

குளிர் காலத்தில் பனி பெய்யும் பொழுது குளிர் அவ்வளவாகத் தெரியாது. பனி பெய்தபின் அடிக்கும் காற்று தான் அதிக குளிரூட்டும். அறைகளில் பொருத்தப்பட்ட ஹீட்டர்களும் சமயங்களில் குளிரை கட்டுப்படுத்த முடியாத அளவு குளிர் இருக்கும்.

திருச்சி வெயிலில் பிறந்து வளர்ந்த யாழினிக்கு முதலில் ஜெர்மனி தேசத்து ஒரு வருடத்தின் இரண்டு மாத வெயில் போதவில்லை

ஜெர்மனி வந்த முதல் இரண்டு வருடங்கள் யாழினி அதிகம் கஷ்டப்பட்டாள்.

ஆனால் இப்போதெல்லாம் தமிழ்நாடு வருவதென்றால், தமிழ்நாட்டை குளிர் வாட்டும் மார்கழி மாதம் தான் அவர்கள் வருகிறார்கள். தமிழ்நாட்டு வெயில் அவர்களுக்கு ஒத்துக் கொள்வதில்லை.

முந்தைய வாக்கியத்தில்  குறிப்பிடப்பட்ட ,” அவர்களை”  உள்  அடக்கியது யாழினி, அவள் கணவன் மலரவன் மற்றும் அவர்களின் மகள் மயாவையே ஆகும்.

மலர் ஜெர்மனி வந்த கதை

மலர் சேலத்தைச் சேர்ந்தவன். மலரின் தந்தையும் தாயும் சேலம், சாரதா பெண்கள் கல்லூரி அருகில் அமைந்திருக்கும் ஸ்வர்ணபுரியில் சொந்த வீட்டில் தங்கி இருந்தார்கள்.

பிளஸ் டூ முடித்ததும் மலரை அவன் அப்பா அழைத்தார்,”மலர், நல்ல மதிப்பெண்கள் எடுத்திருக்கே. அடுத்து என்ன திட்டம்?”

மலரின் எதிர்காலம் பற்றி அவனையே, சுயமுடிவு எடுக்க, அவன் அப்பா அனுமதித்திருந்தார்.

“அப்பா, நான் மேல்படிப்பு பொறியியல் படிக்க திட்டம் போட்டிருக்கேன். ஆனால் படிக்கப் போவது இங்கு இல்லை. வெளிநாட்டிலே”

“எங்கே மலர்? எந்த நாடு செலக்ட் செய்திருக்கே?”

“ஐரோப்பிய நாடுகளில் ஏதாவது ஒன்றில் படிக்க;அதிலும் குறிப்பாக ஜெர்மனியில். ஆட்டோமொபைல் படிக்க ஆசையாய் இருக்கு”.

“செலவு அதிகம் ஆகுமேப்பா” என்று கவலைப்பட்டார் மலரின் அப்பா.

“இல்லேப்பா. நான் படித்துள்ள ஜெர்மானிய மொழி எனக்கு இப்பொழுது உதவுது. ஜெர்மனியில் நான் படித்தால் விடுதி செலவும், இந்தியாவில் இருந்து சென்று வரும் விமான கட்டணம் மட்டும் தான். கல்லூரியில் படிப்பு செலவு முற்றிலும் இலவசம்”

விடுதி செலவும்  உணவு செலவும் குறைவாகவே வந்தது. மலரின் பெற்றோர் தங்கள் சேமிப்பில் இருந்தே அதை நேர்கொண்டனர்.

அப்படித் தான் மலர், ஜெர்மனி வந்தான்.

ஸ்டுட்கார்ட் டெக்னிக்கல் பல்கலை கழகத்தில் சேர்ந்தான். ஆட்டோமொபைல் பொறியியல் படிப்பில் பல்கலைகழக முன்னணி மாணவனாக தேர்ச்சி பெற்றான். பொறியியல் படிப்பு முடித்தபின் அதே பல்கலைகழகத்தில் மாஸ்டர்சும் வெற்றிகரமாக படித்து முடித்தான்.

ஸ்டுட்கார்ட்டில் இருந்த மோட்டார் வாகனங்கள் தயாரிக்கும் கார்ப்பொரேட் கம்பெனிகள் போட்டி போட்டுக் கொண்டு மலரை தங்கள் கம்பெனிகளில் வந்து சேருமாறு அழைப்பு விடுத்தன. ஆனால் மலர் தேர்வு செய்ததோ, வாகனங்கள் உற்பத்தி செய்யும் கம்பெனிகளுக்கு நிதி உதவி செய்யும் ஒரு பன்னாட்டு வங்கியை. அந்த வங்கியின் தலைமையகம் மெயின் நதிக்கரையில் ஜெர்மனியின் நிதித் தலைநகரான  ஃப்ரான்க்ஃபர்ட்டில் அமைந்திருந்தது.

யாழினி ஜெர்மனி வந்த கதை

படிக்கும் பொழுது இரண்டு வருடத்துக்கு ஒரு முறை இந்தியா வந்த மலர். வேலை கிடைத்ததும் வருடம் ஒரு முறை ஒரு மாத விடுப்பில் வரத் தொடங்கினான்.

அவ்வாறு ஒரு முறை, ஜூலை மாதம் இந்தியா வந்த பொழுது தான் மலர் யாழினியை ஒரு திருமணத்தில் சந்தித்தான்.

மலர் யாழினியை கேட்டான்,”பக்கத்தில் ஏதாவது காவல் நிலையம் இருக்கிறதா? ஒரு புகார் அளிக்க வேண்டும்.”

“ஏன் ஏதாவது தொலைந்ததா?”

“ஆம்.என் இதயம் தொலைந்து போனது.அருகில் ஏதாவது காவல் நிலையம் இருக்கிறதா சொல். புகார் அளிக்கவேண்டும்” என்றான் மலர்.

மலருக்கு யாழினியைப் பிடித்திருந்தது. யாழினிக்கும் மலரைப் பிடித்திருந்தது.

மலர் யாழினியை நேரடியாகவே கேட்டான்,” ஜெர்மனி வரத் தயாரா நீ?”

யாழினி,”லிவிங் டு கெதரா?” என்றாள்

“இல்லை. சிறந்த பாதியாக”

“எப்பொழுது வர வேண்டும்?” யாழினி தொடர்ந்தாள்,”சீக்கிரம் சொல். மூட்டை முடிச்செல்லாம் தயார் செய்ய வேண்டும்”

சொன்னது போல் மூட்டையும் கட்டிவிட்டாள் யாழ்.

மலர் அந்த முறை ஜெர்மனி திரும்பு முன் மலர், யாழினி திருமணம் சிறப்பாக நடந்தேறியது.

திருமண வரவேற்புக்கு  ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் குறிப்பிடும்படியான, தேர்ந்தெடுக்கப் பட்ட நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் அழைக்கப் பட்டு உலகிற்கு மலர் எனும் மலரவன் யாழினியை தன் துணைவியாக ஏற்றுக் கொண்டதும் குமாரி யாழினி திருமதி யாழினி மலரவன் ஆனதும் அறிவிக்கப்பட்டது .

அப்படித் தான் யாழினி, மலருடன் ஜெர்மனி வந்தாள்.

மயா உருவான கதை

மலர் யாழினியை தேன்நிலவுக்கு ஸ்விட்சர்லாந்த் அழைத்துச் சென்றான்.

ஸ்விட்சர்லாந்தின் இதமான ஆகஸ்ட் மாத குளிரில் மலருக்கு போர்வையாகிப் போன யாழினி, புரிந்து கொண்டாள், மலர் ஏன் ஸ்விஸ்சை அவர்களின் தேன்நிலவுக்கு தேர்ந்தெடுத்தான் என.

ஸ்விஸ்சில் இருந்து மலரும் யாழினியும் ஃப்ரான்க்ஃபர்ட் திரும்பிய பொழுது, அவர்களின் வாரிசு வித்திடப் பட்டிருந்தது.ஆனால் கரு உண்டான உடன் யாழினிக்கு குழந்தை பெறுவது பற்றி ஒரு உள்ளூர பயம் ஏற்பட்டது. எத்தனை கவுன்செலிங்கிலும் அந்த பயத்தை போக்கமுடியவில்லை.

யாரிடமும் சொல்லாமல் கருவை கலைத்துவிட்டனர்.

மனதை திசை திருப்ப யாழினி ஜெர்மானிய மொழி கற்கத் தொடங்கினாள்.

ஜெர்மனிக்கு புலம் பெயர்ந்தவர்கள் ஏதாவது பணியில் சேருமுன் ஜெர்மானிய மொழி கற்றுத் தேர்ந்திருக்க வேண்டும். இது மூன்று படிவங்கள் கொண்டது. யாழ் மூன்று நிலைகளிலும் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி அடைந்தாள்.

யாழினி படித்திருந்த ஹெச்.ஆரும், அதனுடன் சேர்த்திருந்த ஜெர்மன் மொழியின் அறிவும் அவளுக்கு வேலைகிடைப்பதை சுலபப்படுத்தின. யாழினியும் ஒரு கார்ப்பொரேட்டில் வேலைக்கு சேர்ந்தாள்.

ஒரு இரவில் யாழினியின் கதகதப்பான பிடியில் இருந்த மலரிடம், யாழினி அந்தரங்கமாய் கேட்டாள்.

“மலர், சிசு கலைந்து விட்டதென்று வருத்தமா?”

”கிடையவே கிடையாது யாழ். விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்து விட்டது. ஏதாவது வழி பிறக்கும்”

“அப்பொழுது அடுத்த திட்டம் தான் என்ன?”

“நாம் ஏன் வாடகைத் தாய்க்கு ஏற்பாடு செய்யக்கூடாது?”

இருவரும் சேர்ந்து கணக்கு போட்டுப் பார்த்தனர். அவர்கள் பட்ஜெட்டுக்குள் அடங்கியது. ஜெர்மானிய சட்டதிட்டங்களை திருப்தி செய்து வாடகைத் தாயாக இருக்க ஒரு பெண்ணை நியமித்தனர். அவர்களுக்கு அப்பொழுது கிடைத்தது தான் திருமதி பெத்.

திருமதி பெத், ஒரு நூறு சதவிகித ஜெர்மன் நாட்டு பெண். ஜெர்மனியிலேயே பிறந்து வளர்ந்தவள். ஜெர்மானியர் சுதந்திரமான போக்கை விரும்புவர்கள்.

திருமதி பெத், ஒரு டைவர்சி. தன் கணவன் தன்னை அதிகம் திட்டுகிறான் என்ற ஒரே காரணத்திற்காக அவனை விவாகரத்து செய்தவள். ஆனாலும் அவள் பெயர் திருமதி பெத் என்றே நிலைத்துவிட்டது.

திருமதி பெத் மலர் -யாழினியின் குழந்தைக்கு வாடகைத் தாயாக இருக்க ஒத்துக் கொண்டாள்.

கணிசமான தொகை திருமதி பெத்தின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டது.

திருமதி பெத்தின் கருப்பை வலுவாக இருந்தது. கரு உடனே உருவாகிவிட்டது. சில மாதங்கள் கழித்து ஸ்கான் செய்து பார்த்ததில் அவர்களுக்கு என்று உருவானது ஒரு பெண் குழந்தை என தெரியவந்தது.

யாழ் மலரை கட்டிப் பிடித்துக்கொண்டு கேட்டாள்.

“மலர், சிசு பெண்ணாகி விட்டதென்று வருத்தமா?”

”கிடையவே கிடையாது யாழ். இனி வரப்போகும் காலம் பெண்களது. இப்பொழுதே ஆண்களுக்கு தக்க துணை கிடைப்பதே குதிரைக் கொம்பாக உள்ளது. மேலும் எத்தனை கார்ப்பரேட்டுகளின் தலைமை நிர்வாக அதிகாரிகள் பெண்களாய் உள்ளனர். எத்தனை நாடுகளின் தலைவர்களாய் பெண்கள் உள்ளனர்”

“அப்பொழுது நமது அடுத்த வேலை?”

“குழந்தைக்கு பெயர் தேடுவது தான்”

“ஏஞ்செலா மெர்க்கெல் என்று வைப்போமா” இருவரும் மனம் விட்டுச் சிரித்தனர்.

அன்றிலிருந்து இருவரும், தங்களுக்கு பிறக்கப் போகும் பெண் குழந்தைக்கு வைக்கப் போகும் பெயரை தேடத் துவங்கினர்.

அவ்வாறு அவர்கள் இருவரும் சேர்ந்து தேர்வு செய்த பெயர் தான், மயா.

மலரவனின் முதல் எழுத்து மவும் யாழினியின் முதல் எழுத்து யாவும் சேர்ந்தது.

மலரவன் யாழினியின் குடும்பத்தாரின் மூன்றாவது நபராக மயா வந்து சேர்ந்தது இவ்வாறு தான்.

காலங்கள் கடந்த கதை

மயா பிறந்த பின்னர், ஆறு மாதங்கள், யாழினியும் மலரும் குழந்தையை கண்மணியாக வளர்த்தனர். பின்னர், திருமதி பெத்தையே, வீட்டில்  மயாவின் கேர்டேக்கராக நியமனம் செய்தனர்.

திருமதி பெத்துக்கு முந்தைய உறவின் மூலம் ஒரு பெண் குழந்தை இருந்தது. கரோல்.

கரோல் மயாவை விட மூன்று வயது மூத்தவள்.

வருடம் ஒருமுறை மலரின் குடும்பம் சொந்த ஊர் வந்து திரும்புவார்கள்.

ஒவ்வொரு வருடமும் மயாவைப் பார்த்த மலர் மற்றும் யாழின் பெற்றோர், அவள் வளர்ந்து வருவதை சொல்லி பாராட்டிய பொழுது, மலரும், யாழும் பெருமை கொண்டனர்.

யாழ், ஒவ்வொரு வருடமும் மலரின் தலையில் தோன்றும் நரைமுடிகள் அதிகமாவது பற்றி வர்ணிப்பது வழக்கமாகி இருந்தது.

மயாவும் திருமதி பெத்தும்

திருமதி பெத், யாழினி நேர்முகத்தின் பொழுதே சொல்லியிருந்தாள்,” மேம், நான் மிஸ்.மயாவை ஒரு நல்ல ஜெர்மானிய குடிமகளாக ஆக்குவேன். அது நான் உங்களுக்கு அளிக்கும் உறுதி. அதே சமயம், ஒரு வருடம், என்மகள் கரோல், பாலர் பள்ளி செல்லும் வரை என்னுடன் வருவாள். அதற்கு நீங்கள் மனிதாபிமான அடிப்படையில் தடையேதும் சொல்ல மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்”

யாழ், மலருடன் ஆலோசித்தாள்.

“மலர், திருமதி  பெத்தின் கோரிக்கை, நமக்கும் நல்லதென்றே தோன்றுகிறது. மயாவுக்கும் ஒரு சம வயது தோழி கிடைப்பாள்”

மலர் யாழுக்கு அறிவுறுத்தி இருந்தான்,”திருமதி பெத் மயாவின் வாடகைத்தாய் என்பது எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மயாவுக்கு தெரியக்கூடாது”

திருமதி பெத் பைபிளின் மேல் சத்தியம் செய்துகொடுத்தாள்.

மலரும் திருமதி பெத்தின் நிபந்தனைக்கு ஒத்துக்கொண்டான்.

திருமதி பெத், மயாவின் கேர்டேக்கர் என்றாலும், மயா அதிக நேரம் செலவழித்தது கரோலுடன் தான். மாலை நேரங்களில் களைத்து வீடு திரும்பும் மலரும், யாழும் மயா கரோலுடன் விளையாடுவது கண்டு மனநிறைவு கொண்டனர்.

திருமதி பெத் கூறிய ஒரு வருடம்  கழிந்ததும், கரோல் பாலர் பள்ளியில் சேர்ந்துவிட்டாள்.

மயாவும் கரோலும்

பாலர் பள்ளி அரை நாள் தான். பள்ளி முடிந்ததும் கரோல் மயாவுடன் விளையாட மீண்டும் வந்து விடுவாள். மயாவுடன் சேர்ந்து பா பேட்ரலும், பார்பி பாடலும் தொலைகாட்சியில் பார்ப்பாள்.

இது தொடர்ந்து கொண்டே வந்தது.

ஆரம்பத்தில் இது கண்ட யாழ், மலரிடம் பகிர்ந்து கொண்டாள்,” மலர், கரோல் ஒரு வருடம் தான் மயாவுடன் நேரம் கழிப்பாள் என்று திருமதி பெத் முதலில் சொல்லி இருந்தார். ஆனால் அது இன்னும் தொடர்கிறதே மலர்?”

மலர் இப்பொழுது அவன் வேலை பார்த்த வங்கியில் மேல் தட்டு அதிகாரிகளில் ஒருவனாக உயர்வு பெற்றிருந்தான். மேல்தட்டு அதிகாரிகளுக்கு இருக்கும் வேலை அழுத்தம் மலருக்கும் இருந்தது. மலர் யாழுக்கு பதில் அளித்தான்,” குழந்தைகள் தானே யாழ். என்ன  தப்பு செய்துவிடப் போகிறார்கள். இருக்கட்டும் விடு.”

இவ்வாறு ஆரம்பித்த மயா, கரோல் நட்பு தொடர்ந்து கொண்டே இருந்தது.

வருடங்கள் கடந்தன.

மயா  டீன் பருவத்தின் முதல் வருடத்தை அடைந்திருந்தாள். கரோல் சிறுவர்கள் போல் சிகை அலங்காரம் செய்து அழகிய பெண்ணாக ஆகி இருந்தாள். ஆனாலும் கரோலின் நடை, உடை மற்றும் பாவனைகள் இளம் வாலிபனைப் போலவே இருந்தன.

யாழும் இப்பொழுது தனது கம்பெனியில் நடு மட்ட அதிகாரியாய் ஆகி இருந்தாள். இதனால், உயர்மட்ட பதவிகளில் இருந்த மலராலும்,யாழாலும் மயாவுடன் முழுமையாக நேரம் செலவிட முடியவில்லை: வார இறுதிகளில் கூட.

 உலகையே புரட்டிப்போட்ட கொரோனா பாதிப்பால் அவர்களால் இரண்டு வருடங்கள் இந்தியா வர முடியவில்லை.

வொர்க் ஃப்ரம் ஹோமாக இருந்தாலும் மலரும் யாழும், மயாவுடன் கழிக்கும் நேரம்  குறைந்து கொண்டே வந்தது. வேலைப்பலு.

கொரோனா பாதிப்புகள் அடங்கிய பின், இந்தியா  செல்ல யாழும்,  மலரும் திட்டமிட்டால், மயா வரவில்லை எனக் கூறிவிட்டாள்.

இது முதலில் யாழுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், மலரிடம் பேசிய பொழுது மலர் சொன்னான்,” ஒன்று செய்வோம். உன் பெற்றோரை ஃப்ரான்க்ஃபர்ட் வரச்சொல். வேண்டுமானால் மூன்று மாதம் வந்து தங்கி விட்டுப் போகட்டுமே.உனக்கும் ஒரு மாற்றமாக இருக்கும்”

யாழின் பெற்றொர் ஃப்ரான்க்ஃபர்ட் வந்தனர்.

அவர்கள் தங்கி இருந்த மூன்று மாதங்களும், திருமதி பெத், வீட்டு வேலைகளை நன்றாக கவனித்துக்கொண்டாள். யாழின் பெற்றோருக்கு மேற்கத்திய உணவுகளையும், பார்பெக்கு வகை உணவுகளையும் சமைத்து பரிமாறினாள்.

மூன்று மாதமும் கழிந்தது. யாழின் பெற்றோர் ஃப்ரான்க்ஃபர்ட் விட்டு கிளம்பும் நாளும் வந்தது.

அவர்கள் கிளம்பும் நாளுக்கு முந்தைய நாள், மலர் அவர்களை, ஃப்ரான்க்ஃபர்ட்டில் இருந்த சரவண பவன் அழைத்துச் சென்றான். மயா வரவில்லை.

மசாலா தோசையை பிய்த்து வாயில் போட்டுக் கொண்டே, யாழின் தந்தை சொன்னார்,”அம்மா! நாங்கள் நேரம் கழிக்க வந்தது மயாவுடன். ஆனால் மயாவோ பள்ளி விட்டு வந்ததும் முழுமையாக நேரம் கழிப்பது கரோலுடன் தான்.அறைக்குள் சென்று தனியாக நேரம் கழிக்கிறார்கள். அவர்கள் நடத்தையை பார்த்தால் நண்பர்கள் போல் தெரியவில்லை. காதலர்கள் போல் தெரிகிறது. மயாவை கொஞ்சம் பாத்துக்கோமா”

இது கேட்டு அதிர்ந்து போனார்கள், யாழும், மலரும்.

முதலில் சுதாகரித்துக் கொண்டது  மலர் தான்.அவன் யாழின் தந்தையிடம் கூறினான்,”மாமா! காலம் எவ்வளவோ மாறி விட்டது. மயாவும், கரோலும் குழந்தையாக இருந்ததில் இருந்தே ஒன்றாக வளர்ந்தவர்கள். இருந்தாலும் உங்கள் கருத்துக்கு நாங்கள் உரிய மதிப்பளிப்போம்”

அடுத்த நாள் யாழின் பெற்றோர் திருச்சி கிளம்பினர்.

அன்று மாலை, மலர் வங்கியில் இருந்து துரிதமாக வீடு கிளம்பினான். வீடு வரும் வழியில் யாழையும் அழைத்துகொண்டு இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.

யாழ் தன் சாவி கொண்டு வீட்டினுள் நுழைந்து, மயாவை அழைக்க மயாவின் அறை நெருங்கிய பொழுது, மயா தன் கைபேசியில் பேசிக்கொண்டிருந்தாள், “எனக்கு என் பெற்றோரிடம் என்றுமே பாசம் இருந்ததே இல்லை.நீ என் சகோதரி மட்டும் இல்லை.என் லவ்வரும் நீயே.நாம் இருவரும் தான் இறுதி வரை கரோல்”

00

எஃப்.எம்.பொனவெஞ்சர்

போனோ என்று அழைக்கப்படும் எஃப்.மரிய பொனவெஞ்சர் ஆகிய இவர் திருச்சி சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. மீரா போனோ என்றும் எஃப்.எம் பொனவெஞ்சர் என்ற புனைபெயரிலும் கதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதி உள்ளார்.

கடந்த நான்கு வருடங்களாகவே இவர் எழுதுவதில் மும்முரம் காட்டி வருகிறார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *