முகத்தில் உணர்ச்சியற்று நடந்து வந்து கொண்டிருந்தான். ஆனால் அவன் இன்பமாய் இல்லை என்று மட்டும் உறுதியாய்ச் சொல்லலாம். சாலை முழுதும் வெயிலின் வெம்மை படர்ந்திருந்தது. சாலையின் ஓரத்துக்கடைகளின் நீளமான கூரைகளின் நிழல் காகிதத்தின் ஓரத்தில் கோடு கிழித்ததைத் போல் படிந்திருந்தது. அந்தக் காட்சி அவனைத் தன் பள்ளிக்காலத்திற்குப் பின்னோக்கி இழுத்துச் சென்றது. சட்டென புறநகர்ப் பகுதியில் இருந்து நகரத்தின் இதயத்து வீதிகளுக்குச் சென்றிருந்தான். இன்றைய வெயிலுக்குச் சற்றும் குறைவில்லாத வெயில் தான் ஆனால் அந்த வீதி தண்மையானதாயும் அந்தக் காற்று குளுமையானதாயும் இருந்தது. காரணம் காலநிலைமாற்றமெல்லாம் இல்லை வீதி எங்கும் வெயிலின் கீற்று கூட தெரியாதபடி நெருக்கமாகப் பின்னப்பட்ட பனையோலை கொண்டு கோடை காலம் முழுதும் பந்தல் அமைத்திருப்பார்கள். அந்தப் பொன்னான நாள்களின் பொழுதெல்லாம் அந்தப் பந்தலின் அடியிலேயே கழியும். அந்த வீதியும் தன் வீட்டின் ஒரு பகுதி போல் என்பதனால் அதைத் தாண்டி எங்கும் சென்றால் மட்டுமே அவன் செருப்பு அணிவது வழக்கம். நேரம் போகப் போக தொலைந்து போன கிரிக்கெட் பந்துகளும் தோட்டத்து மாங்காய்த் துண்டுகளும் அவன் கண்முன் தோன்றின. திகட்டும் நினைவுகளின் இனிமை தாளாது அந்த நினைவுப் பந்தலில் இருந்து வெளியேறினான்.
சாலையின் நடுவில் நின்று கொண்டிருந்தவன் அண்ணாந்து பார்த்தான் வெயில் அவன் கண்களைக் கூசியது. “இன்று தான் சரியான நாள்” என்று முணுமுணுத்த படி வேகமாய்த் தன் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான். வழக்கமாய் அவனைக் கவரும் அந்தப் பேக்கரியின் ஏலக்காய் கலந்த ரொட்டியின் வாசனை கூட அவனை நிறுத்தவில்லை. வீட்டிற்குள் விரைந்தவன் சட்டென கதவைத் தாழிட்டான். பின்னர் வீட்டின் அதிகம் புழங்காத அந்த அறையின் கதவைத் திறந்தான்.
அது முழுதும் வெற்று அறையாக இருந்தது. உள்ளே எதுவுமே இல்லை, தரைத்தளம் மட்டுமே கொண்ட அந்த வீட்டின் அந்த அறையின் நடுவில் எந்தச் சுவரொடும் தொடர்பில்லாத ஒரு படிக்கட்டு இருந்தது.
நேராய்ப் படிக்கட்டின் மத்தியில் ஏறி நின்றான். கீழ்நோக்கிப் பார்த்தால் அந்தப் படிகளின் முடிவே தெரியவில்லை கீழே போகப் போக இருளில் அப்படியே மங்கிப் போயின படிகள். அவன் மெல்ல ஒவ்வொரு படியாய்க் கீழே இறங்கினான். காலை எடுத்து வைக்க வைக்க அந்தப் படிகளும் சேற்றை போல் அவன் கால்களை உள்வாங்கிக் கொண்டன. அப்படியே அவனும் அந்தப் படிகளோடு இருளுக்குள் மறைந்து போனான்.
இருள் நீங்கி எங்கும் வெளிச்சமாய் இருக்க அவன் மனதிற்கு நெருக்கமான அந்த வீதியின் நடுவில் நின்று கொண்டிருந்தான். அப்போதும் வெயில் தெரியாதபடி பந்தல் போடப்பட்டிருந்தது. ஓரிரு நிமிடங்கள் ஒன்றும் புரியாது நின்றவன் சுற்றிப் பார்த்தான், சிறுவயதில் இருந்ததைப் போலவே, அதையும் தாண்டி அவன் மனதில் இருந்ததைப் போலவே எதுவும் மாறாமல் இருந்தது அந்த வீதி. சுற்றிலும் உள்ள கடைகள் கூட மாறவில்லை உற்றுப் பார்க்கையில் தான் கடைக்காரர்கள் கூட அப்படியே தன் நினைவில் இருந்ததைப் போலவே வயது முதிராது இருந்ததை உணர்ந்தான். அப்படியே குனிந்து தன்னைப் பார்த்துக் கொண்டான் அவன் மட்டும் அன்றைய வயதில் இருந்தான். ஆனால் இந்த ஆராய்ச்சிக்கு எல்லாம் செல்ல அவன் மனம் தயாராய் இல்லை. தான் இழந்ததைப் பெற்ற பூரிப்பில் ஆவலுடன் இருந்தான். தான் மறந்தே போயிருந்த அந்த வீதியின் வாசம் அவனுள் பரவ தான் வசித்த சந்தை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
சற்றே மேடான அந்தச் சந்திற்குள் நுழைந்தால் அழுத்தி விளையாடவே அலாதியாய் இருக்கும் அழைப்பு மணி கொண்ட அந்த ஒரே வீட்டையும் கிரிக்கெட் பந்துகளால் உடலெங்கும் பொட்டு வைக்கப்பட்ட சுவர்களையும் என்றுமே காய்த்திடாத அந்தப் பலாமரத்தையும் எப்போதும் கூழாங்கற்கள் நிரம்பி இருக்கும் அந்த மழை நீர்ச் சேகரிப்புத் தொட்டியையும் கடந்து தன் வீட்டை நோக்கிச் சென்றான்.
தூரத்தில் ஒரு உருவம் தெரிந்தது. தன் வீட்டுத் திண்ணையில் தன் பாட்டி உட்கார்ந்து இருப்பதைப் பார்த்தான். எப்போதும் போலவே அவள் ஒரு வார இதழைப் படித்துக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்தவுடன் அந்தத் திண்ணையில் அவள் மடியில் படுத்தபடி கேட்ட கதைகளெல்லாம் அவனுள் ஓடிட பாட்டியை நோக்கி விரைந்தான் இன்னும் ஒரே முறை அப்படி கதை கேட்டிட வேண்டும் என்று.
ஆனால் அவள் அருகில் சென்ற பின்னும் அவள் புத்தகத்திலேயே மூழ்கிக் கிடந்தாள். அவளை அழைக்க வாயெடுத்தான் ஆனால் குரல் எழும்பவில்லை. செய்வதறியாது நின்று கொண்டிருந்த அவனை நோக்கி பாட்டி கழுத்தைத் திருப்பினாள் ஆனால் ஒரே நொடிதான், கத்திய பள்ளியை அண்ணாந்து பார்த்துவிட்டு குறுக்கெழுத்துப் போட்டியை நிரப்பத் தொடங்கினாள். அவனோ மனம் உடைந்து வெறுமையுற்றவனாய் அவளை ஒரு முறை பார்த்து விட்டுத் திரும்பி நடக்கத் தொடங்கினான்.
படிக்கட்டில் இருந்து இறங்கி அந்த அறையை விட்டு வெளியே வந்தவனின் முகம் தொய்வுற்று இருந்தது. சற்று நேரம் எதுவும் செய்யாது அப்படியே நின்று இருந்தான். திடீரென்று ஏதோ தோன்றிட மறுபடியும் அந்த அறைக்குள் நுழைந்தான். முன்பைப் போலவே நேராகப் படிக்கட்டின் மத்தியில் ஏறி நின்றான். ஆனால் இந்த முறை ஒவ்வொரு படியாய் ஏறத் தொடங்கினான். அவன் படியில் கால்களை வைக்க வைக்க அவனுக்கும் படிக்குமான இடைவெளி மெதுவாய்க் கூடத் தொடங்கியது. படிகள் ஏற ஏற அவனும் காற்றில் மிதக்க தொடங்கினான் கடைசியில் முன்பு போலவே இருளுக்குள் மறைந்து போனான்.
இப்போது பரிச்சயமற்ற ஒரு அறையின் நடுவில் தனி ஆளாய் நின்று கொண்டிருந்தான். சுற்றிலும் அமைதி நிலவிட எங்கு இருக்கிறோம் என்று குழம்பியபடி அந்த அறையை வலம் வந்தான். பாதி திறந்திருந்த சன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்தான் ஆனால் அந்தச் சாலை கூட அவனுக்கு மிகவும் அந்நியமாக இருந்தது. மேலும் குழம்பியவனாய் அந்த அறையைச் சுற்றி வந்தவன் சுவற்றில் மாட்டப் பட்டிருந்த புகைப்படங்களைப் பார்த்தான் ஆனால் அதில் யாரையுமே அவனால் அடையாளம் காண முடியவில்லை. சோர்ந்து போய் நின்று கொண்டு இருந்தபோது ஏதோ ஒரு சத்தம் வந்தது, கதவை யாரோ திறந்தார்கள்.
ஒரு முதியவர் மெதுவாக நடந்து வந்தார். கையில் ஒரு பையுடன் வந்தவர் இன்னொரு கையால் மின் விளக்கை இயக்கிவிட்டு கதவைத் தாழிட்டார். அவர் முகமும் உணர்ச்சியற்று இருந்தது. சுற்றிலும் பார்த்தவன் அந்த அறையில் அவரைத் தவிர வேறு யாரும் வசிக்கும் சுவடு தெரியாததை உணர்ந்தான். அதற்குள் அந்த முதியவர் அறையின் நடுவில் இருந்த ஒற்றை நாற்காலியில் அமர்ந்திருந்தார் கையில் இருந்த பையிலிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்தவர் அதைப் பிரித்து அதிலிருந்த மென்மையான ரொட்டித் துண்டுகளை உண்ணத் தொடங்கினார். ஆனால் அவர் உண்ணும் விதம் அவனுக்கு எதையோ நினைவு படுத்தியது. இப்படித்தான் அவரது தளர்ந்த நடை கூட அவனுக்கு எதையோ நினைவூட்டியதை எண்ணினான். அவர் முகத்தையும் உடல் மொழியையும் உற்று நோக்கியவன் கடைசியில் உணர்ந்தான் அந்த முதியவர் வேறு யாரும் இல்லை தாம் தான் என்று.
தனிமை தோய்ந்த முகமுடைய அந்த முதியவரை தாமென ஏற்றுக் கொள்ள முடியாமல் அவரையே பார்த்தபடி இருந்தான். அமைதியாக அந்த ரொட்டித் துண்டுகளை சாப்பிட்டுக் கொண்டிருந்த முதியவர் சட்டெனச் சாப்பிடுவதை நிறுத்தினார். கையில் இருக்கும் ரொட்டித் துண்டுகளையே பார்த்தபடி இருந்தார். முகத்தின் வெறுமை நீங்கி மெல்ல புன்முறுவல் செய்தார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த ரொட்டித் துண்டில் அவனுக்கு விருப்பமான ஏலக்காய் மணம் கூட வரவில்லை ஆனால் எதற்காக அவர் சிரிக்கிறார் என்று அவனுக்கு விளங்கவில்லை. முறுவலோடு அவர் முகம் லேசாக மாறத் தொடங்கியது. இப்போது அவர் ஏதோ பழைய நினைவுகளை அசைபோடுகிறார் என்றும் எதையோ நினைத்து ஏங்குகிறார் என்றும் அது ஒரு இன்பம் கலந்த ஏக்கம் என்றும் அவனுக்குப் பட்டது. சில நொடிகள் அப்படியே இருந்தவர் நிகழ்வுலகத்திற்கு வந்தபடி மறுபடியும் ரொட்டி துண்டுகளை உண்ணத் தொடங்கினார். தெளிவாய் எதுவும் விளங்காததால் மனநிறைவின்றி உணர்ச்சியற்ற முகத்துடன் அங்கிருந்து வெளியேறினான்.
படிக்கட்டில் இருந்து இறங்கியவன் வெளியே வந்து அந்த அறையின் கதவைச் சாற்றித் தாழிட்டான். தன் மனதின் வெறுமையைக் கடந்தகாலத்தின் உடலெங்கும் ஒட்டியிருக்கும் இன்பத்தை வழித்து நிரப்ப முயன்றான் ஆனால் அந்த இன்பத்தைக் காண மட்டுமே முடிந்தது. கொள்ள முடியவில்லை.
அதனால் எதிர்காலத்தின் இடுக்குகளில் ஒளிந்திருக்கும் இன்பத்தை எடுக்க முயன்றான். அதிலும் தோற்றே போனான். மொத்தத்தில் அவன் மனதின் வெறுமையைப் போக்கும் வழியும் அந்த அறையின் கதவைப் போலவே அடைந்து போனது.
அப்போது வீட்டின் அடைக்கப்பட்ட கதவுகளையும் தாண்டி சத்தமின்றி பக்கத்துப் பேக்கரியில் இருந்து ஏலக்காய் கலந்த ரொட்டியின் மணம் அவன் வீட்டுக்குள் பரவியது. அவனும் கண்களை மூடி ஆழமாய் அந்த வாசனையை உள்ளிழுத்தான் அது அவன் உடலெங்கும் பரவிற்று. அப்போது அந்த நொடியின் இன்பத்தில் அவன் முகம் மலர்ந்தது.

ர. யது நந்தன்
தஞ்சாவூரைச் சேர்ந்தவர். புத்தகங்களுக்குள்ளும் அவை இல்லாத நேரத்தில் தன் எண்ணங்களுக்குள்ளும் தொலைந்து போகக்கூடியவர்.
அருமை!