“அருண், எழுந்தாச்சா!” மணி இப்ப ஆறரை ஆயிடுச்சு, இன்னும் நீ படுக்கையைவிட்டு எழுந்திருக்கவில்லை.

“ம்மா, “…… “சிறிது மௌனம் நிலவியது அருணின் படுக்கை அறையில்”. அருண் போர்வையை இழுத்துப் போர்த்தி மேலும் ஒரு பத்து நிமிஷம் தூங்கினான்.

குக்கரிலிருந்து சப்தம் பீறிட்டுக் கொண்டு விசில் ஒலித்தது.” மறுபடியும் விமலா குரல் கொடுத்தாள் அருண், கண்ணா அருண் எழுந்திருடா மணி ஆகிறது. இப்ப நீ எழுந்தால் தான் ஒழுங்காக நேரத்திற்கு ஸ்கூல் போக முடியும். நீ இப்ப எழுந்து கீழே இறங்கி வரையா! இல்ல நான் மேலே வரவா!

“ம்மா, இதோ படுக்கையிலிருந்து எழுந்துட்டேன்” ஒரு பத்து நிமிஷம் கொடுங்க, இன்றைய டைம் டேபிளின் படி புத்தகத்தைப் பையில் அடுக்கி வைத்துவிட்டுக் குளிக்கப் போறேன்.”

“டேய் அருண், நல்லாப் பல் துலக்கி வாய் கொப்புளித்து விட்டுக் குளி. தண்ணீரை மொண்டு மேலே ஊற்றிக்கொண்டு, போனமா வந்தமா என்று உடனே வரக்கூடாது சரியா? நன்றாக நீ குளித்துவிட்டு வரவேண்டும் என்று சமையலறையிலிருந்து சப்தமாகக் குரல் கொடுத்தாள் விமலா.”

“சரி ம்மா, கத்த வேண்டாம், ஊரே கேட்கிற மாதிரி கத்தனுமா?”

குளித்த பிறகு அருண் மேலேயிருந்து கீழே இறங்கி வந்தான். வந்தவன் தனது ஸ்கூல் புத்தகப் பையை ஓரிடத்தில் வைத்துவிட்டு, விமலாவுக்குச் சற்று ஒத்தாசையாகச் சின்னச் சின்ன வேலையைச் செய்தான். டிபன் கேரியரை மூடிவைப்பது, பாட்டிலில் தண்ணீரைப் பிடித்து வைப்பது, பிறகு இரண்டையும் தனது சாப்பாட்டுப் பையில் எடுத்து வைப்பது என்று முடிந்த வேலையைச் செய்வான்.

***

இப்படி இவன் செய்வதற்கு ஒரு காரணமும் உண்டு. முதலில் அருண் குளித்துவிட்டு வந்தால் பையை ஓர் இடத்தல் வைத்து விட்டு, தொலைக்காட்சியை ஆன் செய்துவிடுவான். பின் விமலா அவனுக்குக் கலந்து வைத்த பாலை எடுத்துக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்து முடிப்பான். இதற்கே அவனுக்குப் பத்திலிருந்து பதினைந்து நிமிஷம் ஆகிவிடும். இதைத் தினம் பார்த்த விமலா இரண்டு நாட்கள் முன்தான் அருணை நல்லா திட்டிவிட்டாள் ஸ்கூல் கிளம்பும் போது.

‘’ஏன்டா, நான் இங்கே மாடு மாதிரி எல்லா வேலையையும் பார்த்துக் கிட்டு, உன்னையும் எழுப்பி விட்டு வீட்டில் உள்ள எல்லோரையும் கவனிச்சுக்கிறேன். நீயே சொல், நான் அடுப்பு வேலையை மட்டுமா செய்யறேன்.’’ வீடு தொடைகிறதிலிருந்து, பாத்திரம் கழுவறது வரைக்கும் எல்லாத்தையும் நான்தான் செய்யறேன்.

அம்மாவுக்கு உடம்பு நோகுமுன்னு நினைக்கத் தோணுதா? சின்னச் சின்ன வேலையை நாம் ஒத்தாசையா செய்தால் அவளுக்கு நல்லா இருக்குமுன்னு உனக்குத் தோணுதா? இல்லையே உன்னுடைய வேலை முடிந்தால் போதும். நீ கிளம்பி ஸ்கூல் போயிடுவ.

இங்கு யார் அவதிப்பட்டா உனக்கென்ன என்று சரம்வாரியாகக் கத்தின பிறகு. அருண் இந்த இரண்டு நாட்களாகக் கொஞ்சம் அம்மாவுக்கு உதவுகிறான் இந்தப் புலம்பல்களை எல்லாம் கேட்ட பிறகு.

‘விமலா மீண்டும் சமையலறையிலிருந்து கத்தினாள் டேய் வா இங்கே!’ வந்து இந்தத் தோசையை எடுத்துகிட்டு போ. இன்னும் உனக்குப் பதினைந்து நிமிஷம் தான் இருக்கு. சீக்கிரம் கிளம்பு இல்ல ஸ்கூல் கதவைச் சாத்தி விடுவாங்க. பிறகு நீதான் கதவு முன்பாகக் காத்திருக்கனும் என்றாள்.

“ம்மா.. எல்லாம் எனக்குத் தெரியும்,” என்றான். தினம் சைக்கிளில் போகிறவனுக்குத் தெரியாதா ஸ்கூல் கதவு எப்ப மூடுமென்று.” சும்மா தொணத்தொண என்று எதையாச்சும் சொல்லீட்டு இருக்காத ம்மா..

அன்று காலை உணவு முடிந்து அருண் சைக்கிளில் ஸ்கூல் சென்றான். விமலா வீட்டு வேலையை எல்லாம் முடித்துவிட்டு. குளித்த பிறகு சீவி சிங்காரித்துக் கொண்டு மேலே இருந்து கீழே வந்தவுடன் காலை உணவைச் சாப்பிடச் செய்தாள்.

“ட்ரிங் ட்ரிங்” என்று கைப்பேசியில் ஒலி கேட்கவே யார் என்று பார்த்தாள் விமலா. கைப்பேசியில் இருக்கும் ஸ்கிரீனில் ஜி.எம்.எஸ் ஸ்கூல் என்று வரவே அடித்துப் பிடித்துக் கைப்பேசியை ஆன் செய்து ஹலோ என்றாள்.

“ஹலோ! நாங்கள் அருண் ஸ்கூலிலிருந்து பேசறோம்,” கொஞ்சம் இங்கு வர முடியுமா? என்ன டீச்சர் சொல்லுங்க, அருணுக்கு ஏதாவது? அதெல்லாம் ஒன்னுமில்ல, இங்கு நேரில் வந்தால் உங்களுக்கு அவனது ஆசிரியர் தெளிவாகச் சொல்வார். பயப்பட வேண்டாம், உங்கள் வேலையை முடித்து விட்டு வந்தால் போதும் என்று சொல்லி விட்டு ஸ்கூலிலிருந்து வந்த கைப்பேசியின் அழைப்புத் துண்டிக்கப்பட்டது.

***

விமலா, என்னமோ ஏதோ என்று படபடத்தவாறே உடனடியாகக் கிளம்பினாள் அருண் படிக்கும் பள்ளிக்கூடத்திற்கு. பள்ளிக்கூடத்தின் வாசலில் வந்தவுடன் செக்கியூரட்டி இவளிடம் குறிப்புகளை எல்லாம் கேட்டு அறிந்துகொண்டு. அங்கு இருந்த பதிவேட்டில் அவளது கைப்பேசியின் எண்ணை எழுதச் சொல்லிவிட்டு, பின் விமலாவின் கைப்பேசியைப் பெற்றுக் கொண்டார். வாங்கியதற்குப் பதிலாக விமலா விடம் ஓர் அடையாளத்தையும் கொடுத்தார். பிறகு விமலாவிற்கு, அருணின் ஆசிரியர் இருக்கும் இடத்தைக் காண்பித்தும் கொடுத்தார். விமலா அவர் கூறிய வழியில் சென்று அருணின் வகுப்பு ஆசிரியரிடம் தன்னை ஏன் வரச்சொன்னார்கள் என்று விபரம் கேட்டு அறிந்தாள்.

ஆசிரியர் கூறியதைக் கேட்டு அதிர்ந்தாள் விமலா. அப்படி என்ன கூறினார்? அருணின் அம்மா விமலாவிடம். அவனைப் பற்றிப் புகார் எல்லாம் கூறவில்லை மாறாக, அவனால் சரியாகப் பார்த்து எழுத முடியவில்லை. ஏனெனில் அவனால் சரியாகக் கரும் பலகையைப் பார்க்க முடியவில்லை. அவனது பார்வையில் சிறிது கோளாறு இருக்கிறது என்று சொன்னார்.

“இதை கேட்ட பின்பு டீச்சரிடம், நான் இன்றே அருணை, கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறேன்.” பிறகு மருத்துவர் என்ன சொன்னாரென்று உங்களுக்கு அப்புறம் தெரிவிக்கிறேன் சார் என்று கூறிவிட்டு அங்கிருந்து விடைபெற்றுக் கொண்டாள் விமலா.

சாயங்காலம் அருணைக் கூட்டிக்கொண்டு, அவள் ஏற்கனவே சொல்லிய மாதிரி கண் மருத்துவரிடம் கூட்டிச் சென்றாள். அங்குக் கண் மருத்துவர் அருணை பரிசோதித்துவிட்டு விமலாவிடம் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார். பையன் ஒழுங்கா சாப்பிடறானா? காய் கறியெல்லாம் நல்லா சாப்பிடறானா? அவன் வயசுக்கு ஏற்றார் போல் எடை இல்லையே ஏன்? என்று பல கேள்விகளை அடிக்கிக் கொண்டே சென்றார். விமலாவும் அவர் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பதிலை அளித்தாள்.

அருண் கண்களில் சொட்டு மருந்தை மூன்று சொட்டுகள், வலது மற்றும் இடது கண்களில் உற்றினார் செவிலியர். பிறகு அவர்களிடம் முப்பது நிமிடம் கழித்து மருத்துவர் மீண்டும் பரிசோதிப்பார், உங்கள் பெயரை கூப்பிடும் போது வந்தால் போதும் அதுவரையில் இப்படி இருக்கையில் அமர்ந்துகொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அடுத்தப் பேஷண்டை கவனிக்கச் சென்றுவிட்டார் செவிலியர்.

***

அவர்களது பெயரை கூப்பிட்டவுடன், அம்மாவும் பையனும் மருத்துவரிடம் மீண்டும் சென்றனர். மருத்துவர் அருணுடைய கண்களைப் பரிசோதித்து விட்டு.

“என்ன அருண் குறைந்தது எவ்வளவு நேரம் டி.வி அல்லது மொபைல் பார்க்கக்கூடும் தினமும் என்றார்.”

“டாக்டர், பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்தவுடன் வீட்டுப் பாடத்தை முடித்த பிறகு சிறிது நேரம் மொபைல் பார்ப்பது வழக்கம்.”

“அதான் கேட்டேன் எவ்வளவு நேரம் நீ மொபைல் பார்க்கக் கூடும் என்று”

“டாக்டர், அது சரியா சொல்ல முடியாது, ஒரு சில நாட்களில் ஒரு மணி நேரம் அல்லது ரெண்டு மணி நேரம் இருக்கலாம்.“ சில நாட்களில் அதையும் கடந்து மூன்று அல்லது நான்கு மணி நேரம் இருக்கும் டாக்டர் என்றான்.

“ஏம்பா அருண், உன் மாதிரி பசங்களுக்குக் குறைந்தது எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம், இஃது உனக்குத் தெரியுமா?” நீ சொல்வதை வைத்து பார்த்தால் தினமும் நீ பதினோரு அல்லது பன்னிரண்டு மணி அளவில் தான் தூங்கச் செல்வாய் போல?”

“டாக்டர், ஸ்கூலில் ரெக்கார்டு எழுதும் வேலை இருக்கும் அதனாலேயே சற்று நேரம் கழித்துத் தூங்கப் போறேன்.”

‘’ஏன் நீ பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடன் ரெக்கார்டு எழுதக்கூடாதா?’’

நீ இப்போ! பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிற உன்னோட வாழ்வில் முக்கியமான நேரம். இக்காலகட்டத்தில் உனக்குத் தூக்கம் இன்றியமையாதது. சரியான நேரத்திற்குத் தூங்கி எழுந்தால் மட்டும் உன்னால் நன்றாகச் செயல்பட முடியும். இப்ப என்ன ஆச்சு உன் கண் பாதிக்கப் பட்டிருக்கிறது. இதனால் நீ கொஞ்சம் கண்ணாடி அணிய வேண்டியது ஏற்படுகிறது.

***

உனக்குத் தெரியுமா எங்கள் காலகட்டத்திலெல்லாம் நாங்கள் கண்ணாடி எந்த வயசுல போட்டோமென்று. நாற்பது அல்லது ஐம்பது வயதில் கண்ணாடி போட்டோம். இப்ப என்னடானா பதினைந்து வயசில் பிள்ளைகள் கண்ணாடி போடுகிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் அவர்களின் பழக்க வழக்கங்கள் தான்.

கண் மட்டும் நல்லா இருந்தது என்றால் கண்ணாடி தேவை இருந்திருக்காது. இப்ப என்னடானா, உன் கண்ணில் ஈரம் இல்லை, கண் வறண்டு காணப்படுகிறது, கண் எரிச்சல், தலைவலி, மங்கலான பார்வை எல்லாம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் நீ அதிக நேரம் கண்களைச் சிமிட்டாமல் மொபைல் அல்லது டி.வி பார்பதனால் தான்.

நான் கண்ணாடி எழுதி தருகிறேன். சில காலம் போடு எவ்வளவுக்கு எவ்ளவு நீ கண்களுக்கு ரெஸ்ட் கொடுக்கிறாயோ அவ்வளவுக்கு அவ்வளவு உன்னுடைய கண் பவர் அதிகரிக்காமல் இருக்கும்.

டாக்டரிடம் சரி நான் தவறாமல் கண்ணாடி போட்டுக்கொள்வேன் மற்றும் இனி நான் அதிக நேரம் மொபைல் அல்லது டி.வி பார்ப்பதை தவிர்த்து விடுகிறேன் என்றான் அருண். அம்மாவும் அருணும் டாக்டர் எழுதிக்கொடுத்த பிரிஸ்கிரிப்ஷனின் படி கண்ணாடி வாங்கினார்கள்.

மறு நாள் வழக்கம் போல் ஸ்கூலுக்குச் சென்ற அருணிடம் அவனது டீச்சர் கூறினார் . ஒரு விழிப்புணர்வு ஸ்பீச், வேறப் பள்ளியில் போய்ப் பேச வேண்டும். நமது வகுப்பிலிருந்து நான்கு நபர்களைத் தேர்வு செய்திருக்கிறேன். ஒவ்வொருத்தருக்கும் ஒரு தலைப்பு உனக்கு என்ன தெரியுமா என்றார்.

“சார் அதைத் தாங்கள் தான் சொல்லவேண்டும்” என்றான்.”

“அருண், நீ பேசப்போற தலைப்பு மொபைல், டி.வி, ஐபாட் போன்ற கேஜட்கள் வாழ்வில் இன்றியமையாததா! அல்லது அவசியமில்லாததா! இதனைப் பயன்படுத்தும் போது உண்டாகும் பலன் என்ன மற்றும் அதன் தீமைகள் என்ன என்று வகைப்படுத்திப் பேச வேண்டும்.”

“சரி சார், அப்படியே ஆகட்டும்.” எப்போது வேறப் பள்ளிக்குப் போய்ப் பேச வேண்டும் என்றான். “உனக்குச் சரியாக இன்னும் ஒரு வாரம் நேரம் இருக்கிறது. உன்னோடு சேர்ந்து மற்ற மூவரும் அவரவருக்கு உண்டான தலைப்பை படித்துப் பாடம் செய்து கொள்வர். அதைப் போலவே நீயும் படித்துப் பாடம் செய்துகொள்ள வேண்டும் என்றார் டீச்சர்.”

ஸ்கூலில் சொல்லிவிட்டார்கள் என்பதாலேயே அருணும் மும்மரமாக நோட்ஸ் எடுக்க ஆரபித்தான். ஒன்று மட்டும் அவனுக்கு விளங்கியது. பலன் இருக்கத்தான் செய்கிறது இந்த மாதிரி கேஜட்டின் மூலம். அதைக்காட்டிலும் நாம் அதே கேஜட்டை தவறாக உபயோகப்படுத்தினால் தீமைகளே அதிகமாக உள்ளதை அவன் கண் கூட அறிந்துகொண்டான். அதனைத் தெரிந்து கொண்ட பின் அவனுக்கு நோட்ஸ் எடுப்பது மிகவும் எளிதாக அமைந்தது.

டீச்சர் சொன்ன தேதி வந்தவுடன், அவன் தயார் செய்த மற்றும் பாடம் செய்த தகவல்களை ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொண்டான். டீச்சருடன் நான்கு மாணவர்களும் அந்தப் பள்ளி தலைமை ஆசிரியரும் வேறு பள்ளிக்கு சென்றனர்.

அங்கு ஒருவர் மாற்றி ஒருவராக அவரவர் வைத்திருந்த தலைப்பின் படி பேசினர். அருணுடைய நேரம் வந்தவுடன் அருண் மைக் முன்னர் நின்று “ ஹாப்பி மார்னிங் அனைவருக்கும்” என்றான்.“

நான் அருண் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறேன.” உங்களின் நேரத்தை நான் வீன் விரையம் செய்ய மாட்டேன். என்ன தேவையோ அதையே நான் இங்க உங்களிடம் பகிர்ந்துகொள்ள வந்திருக்கிறேன். நான் பேசப்போகும் தலைப்பு இன்றைய நவீன உலகில் கேஜட்கள், உதாரணத்திற்கு மொபைல், டி.வி, ஐபாட், போன்றவை நம் வாழ்வில் இன்றியமையாததா! அல்ல தேவையில்லாத ஒன்றா?. இதனுடைய அவசியம் என்ன, பலன் என்ன, குறிப்பாக இதனுடைய தீமைகள் என்ன என்று தான் நாம் இங்குப் பார்க்க இருக்கிறோம்.

***

ஆடிட்டோரியத்தில் கூடியிருந்த குழந்தைகள் அனைவரும் அருணையே பார்க்கத் தொடங்கினர். அருண் பேசத் தொடங்கினான். வளர்ந்து வரும் நாடுகளுக்குத் தகவல் தொழில் நுட்பம் தேவையே, இதனால் பல நன்மைகள் உள்ளன.

கொரோனா போன்ற பெருந்தொற்றுக் காலத்தில் ஆன்லைன் வகுப்பு வைத்தார்கள் அப்போது இதே கேஜட்கள் நம் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாகத் திகழ்ந்தது. படிப்பதற்கு, தெரியாத விஷயங்களைத் தெரிந்துகொள்ள இஃது ஓர் அற்புதமான கருவியும் கூட.

ஆனால் அதே கருவியை நாம் தவறாக உபயோகப்படுத்தினால் உன்டாகும் தீமைகள் அதிகமே. குறிப்பாக நான் உங்கள் மத்தியில் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவென்றால்? எப்போது தேவையோ அப்போது இதுபோன்று கருவிகளை உபயோகப்படுத்தினால் நல்லது. இல்லையேல், “நம் கண்”. ‘ஆம் ஒவ்வரொவரின் கண்ணைப் பற்றித் தான் இங்குப் பேச வந்திருக்கிறேன்.’

அதிக நேரம் நீங்கள் டி.வி, மொபைல் முன் அமருவது சரியா? இல்லை உங்கள் கண் தான் பாதிக்கப் படுகிறது. அதிக நேரம் கேஜட்களை உபயோகப் படுத்துவதால் மற்றும் அதை விடாமல் பார்ப்பதால் உண்டாகும் தீமைகளை நான் இங்கு உங்களுக்கு வகைப்படுத்திச் சொல்லப் போறேன். முதலில், கண் பார்வை மங்குதல், தூக்கமின்மை, மன அழுத்தம், கவனச்சிதறல், தனிமைப்படுத்தல், உடல் ரீதியான பிரச்சனைகள், RF கதிர்வீச்சு, இந்தக் கதிர்வீச்சால் கண் முற்றிலுமாகப் பாதிப்புக்குள்ளாகுது. உதாரணத்திற்கு என்னையே எடுத்துக்கொள்ளுங்கள். போன வருடமெல்லாம் நான் கண்ணாடி இல்லாமல் தான் இருந்தேன். ஆனால் இந்த வருடம் என் கண் பாதிக்கப் பட்டிருக்கிறது. மேலே சொன்ன தீமைகளால் எனது கண் பாதிப்புக் குள்ளாகியிருக்கிறது. கண்ணாடி இல்லாமல் என்னால் பார்ப்பது கடினம்.

இப்போது சொல்லுங்கள் அதிக நேரம் கேஜட்களை உபயோகப்படுத்துவீர்களா? “சத்தமாகச் சொல்லுங்கள்” என்றான் அருண்.

ஆடிட்டோரியத்தில் உள்ள எல்லாக் குழந்தைகளும், “மாட்டோம்” என்றனர். ‘இனி நாங்கள் அதிக நேரம் டி.வி மற்றும் மொபைல் பார்ப்பதை தவிர்த்துவிடுவோம் என்றனர் சத்தமாக.’

ஜி.எம்.எஸ் ஸ்கூல் தலைமை ஆசிரியருக்கு ஒரே ஆனந்தம், அருணுடைய விழிப்புணர்வு ஸ்பீசைக் கேட்டு அனைத்து பள்ளி மாணவர்களும் கேஜட்களின் தீமைகளை உணர்ந்திருக்கக் கூடும் என்று மனப்பூர்வமாக நம்பினார்.

அருணுக்கு முதல் பரிசும் கிட்டியது அந்த ஸ்கூல் தலைமை ஆசிரியரிடமிருந்து. அப்பள்ளி நிர்வாகமும் அதனுடைய தலைமை ஆசிரியரும் இணைந்து அருணுடைய டீச்சர் மற்றும் தலைமை ஆசிரியரை வெகுவாகவே பாராட்டினார்கள்.

அருண் தன் மனதில் எண்ணத் தொடங்கினான் இனி நாம் மற்றவர்களுக்கு எடுத்துகாட்டாக இருக்க வேண்டுமென்று.

000

பாலமுருகன்.லோ

பிறந்த இடம் கரூர் மாவட்டம். பள்ளிப் படிப்பு அனைத்தும் கரூரில் முடித்த பிறகு. வேலை நிமித்தமாகச் சென்னைக்கு 1997-ல் வந்தவன் பல நிறுவனங்களில் பணிபுரிந்து தற்போது ஒரு ஜெர்மானிய நிறுவனத்துக்கு ஆஃப்டர் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் பிரிவில் வேலை செய்துவருகிறேன். சிறு வயதிலிருந்தே எனக்கு எழுதும் ஆர்வம் இருந்தது. ஆனால் வளர வளர படிப்பு, வேலை திருமணம், பிள்ளைகள் என்று வந்த பிறகு எழுதும் ஆர்வம் சற்று மங்கிக் காணப்பட்டது. ஆனால் என்னாலும் மீண்டும் எழுத முடியும் என்று என்னை நான் முழுமையாகக் கண்டுகொண்ட வருடம் 2020 என்று கூறலாம். 2019-ல் இருந்து தீவிரமாகக் கதை மற்றும் கவிதைகளை வாசித்து ஒரு வாசகராக என்னை முழுமையாக மாற்றி இருக்கிறது இந்தக் கலை இலக்கிய உலகம் .

மற்ற பதிவுகள்

2 thoughts on “எடுத்துக்காட்டு

  1. வாழ்த்துக்கள் சார். அற்புதம் நல்ல ஒரு விழிப்புணர்வு கதை. இன்றைய மாணவர்களுக்கு தங்களின் “எடுத்துக்காட்டு ” கதை நல்ல ஒரு எடுத்துக்காட்டு. மீண்டும் வாழ்த்துக்கள்.

    1. சார் மன்னிக்கவும் உங்களுடைய கருத்தை நான் இன்று தான் பார்த்தேன். ஆத்மார்த்தமான எண்ணப்போக்கை வெளிப்படுத்தியமைக்கு நன்றி சார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *