1.நுண்கதை:

அவன் கட்டை விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடையே சிக்கியிருந்த பட்டாம்பூச்சி தன் உடலையும் கைகால்களையும் அசைத்தது.

இவ்வுலகிலுள்ள பட்டாம் பூச்சிகளெல்லாம் ஏன் பல்வேறு நிறங்களில் உள்ளன? என்றான். மிகமிக இயல்பாய் அவனை உற்றுப்பார்த்த துமியாள், ‘ஏனென்றால் இவ்வுலகில் உள்ள பூக்கள் அனைத்தும் பல்வேறு நிறங்களால் ஆனவை’ என்றாள்.

அவன் தன் கை விரல்களில் ஒட்டியிருந்த அதன் வண்ணங்களைத் தடவிப் பார்த்துக் கொண்டிருந்தான்.

0

2. குறுங்கதை:

அவன் கட்டை விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடையே சிக்கியிருந்த பட்டாம்பூச்சி தன் உடலையும் கைகால்களையும் அசைத்தது.

இவ்வுலகிலுள்ள பட்டாம் பூச்சிகளெல்லாம் ஏன் பல்வேறு நிறங்களில் உள்ளது? என்றான். மிகமிக இயல்பாய் அவனை உற்றுப்பார்த்த துமியாள் ‘ஏனென்றால் இவ்வுலகில் உள்ள பூக்கள் அனைத்தும் பல்வேறு நிறங்களால் ஆனவை’ என்றாள்.

இப்போது அவன் கைகளையும் அதில் துடிதுடிக்கும் வண்ணத்துப் பூச்சியையும் பார்த்தவள் சற்றேக் கடுமையுடன்  ‘போதும் அதை விட்டுவிடு’ என்றாள். அவளையோ அவள் வார்த்தைகளின் கடுமையையோ சிறிதும் பொருட்படுத்தாதவன் அதன் படபடக்கும் கால்களைத் தன் மூக்கின்மீது படரவிட்டு எழும் குறுகுறுப்பை இரசித்தான்.

அவனின் குத்தூகலத்தைக் கண்ட துமியாளின் கண்களில் நீர்க்கோர்த்தது. போடி அழுமூஞ்சி என்றவாறு பட்டாம்பூச்சியை உயரத் தூக்கி எறிந்தான். நிலைதடுமாறிய அது கீழ் வந்து தரையைத் தொடும்போது எம்பிப் பறந்தது.

பிறகு, தன் கை விரல்களில் ஒட்டியிருந்த அதன் வண்ணங்களைத் தடவிப் பார்த்துக் கொண்டிருந்தான்.

0

3. சிறுகதை:

    ஆறாம்  வகுப்பின் ஆண்டு விடுமுறையில் இருந்தாள் துமியாள். பிரேமலதாவையும் மகேஷ்வரியையும் தேன்மொழியையும் எப்போதும் பிரியாதவள். விடுமுறை ஒரு பக்கம் கொண்டாட்டத்தையும் மறுபக்கம் பிரிவின் துயரையும் தரவல்லது என்பதை முதன்முறையாக உணர்ந்த தருணமது.

விடுமுறை துவரங்குறிச்சியிலிருந்து பெரியப்பாவும் பெரியம்மாவும் அண்ணன்களை அழைத்துக்கொண்டு துமியாளின் வீட்டிற்கு வந்திருந்தனர்.

கண்மாய்கள் அதிகம் கொண்டது அவர்களின் ஊர்.  ஆற்றினையும் வாய்க்கால்களையும் கண்டவர்கள் கொண்டாடினர். தினமும் பாதி நேரம் வாய்க்காலிலேயே கிடந்தனர்.

பதினெட்டடி நீளமும் பனிரெண்டடி அகலமும் கொண்டது துமியாளின் வீடு. வலது புறம் முட்காடு செறிந்திருக்க இடப்புறம் பூவரசும் கொடுக்காபுளியும் முருங்கையும் இருந்தது. பம்பரமாக பூவரசின் மொட்டுக்களைப் பயன்படுத்துவாள். எப்போதும் மாலையில் மலர்ந்திருக்கும் அதன் மலர்களைப் பறிப்பவள் அந்த மஞ்சளின் பரிசுத்தத்தை வியப்பாள். கரும்பழுப்பில் இருக்கும்  அதன் உள் வட்டத்தை முகர்வாள். அவ்வாறான தருணங்களில் உடல் இலேசாகிப் பறப்பதை உணர்வாள்.

சில்லிப்பை எப்போதும் சுமந்திருக்கும் கூரை வீடு அவளுடையது. வட்ட வடிவில் சாணம் பூசிய தரை. அதில் அம்மாவின் விரல்கள் கோடுகளாய் பதிந்திருக்கும்.

அவர்கள் வந்த மூன்றாவது நாளின் மாலையில் வீட்டிற்கு வலது புறமுள்ள ஆய்காட்டிற்குச் சென்று வந்த சின்ன அண்ணன்  தான் பார்த்த பெரிய தேன் கூட்டினைப் பற்றி பெரியப்பாவிடம்  சொன்னான்.

வீட்டின் எதிரே நன்கு பருத்து உயர்ந்து வளர்ந்திருந்த பனையிலிருந்து விழுந்திருந்த காய்ந்த மட்டையை தூக்கி வந்த பெரியப்பா எந்த இடம் எனக் கேட்ட போது அழைத்துச் சென்று காட்டினான். வளைந்து நெளிந்து அவ்விடம்  சென்றடைந்து அவனிருந்தப் பீயை ஒரு வண்டு உருட்டியபடி சென்று கொண்டிருந்தது.

குத்தவைத்து அமர்ந்திருந்த அவளின் பெரியப்பா பனை மட்டையைப் பற்ற வைத்து கீழிருந்தபடியே தேன் கூட்டின்மீது காட்ட சடசடத்து வெடித்து உதிர்ந்தன  தேனீக்கள்.  கருகல் வாடை சுற்றத்தை நிறைத்தது. எடுத்துச் சென்றிருந்த தூக்கு வாலியில்  தேனடையை பிய்த்துப் போட ஒருவர் பின் ஒருவராக வெளியேறினர். அணைக்கப்படாத பனையோலையின் அடிப்பகுதி சிறு கங்குடன் புகைந்தபடி இருந்தது.

மறுநாள் இரவு  அனைவரும் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது வாலைக் குழைத்தபடி வந்த  கறுப்பி அவளது அம்மாவின் முழங்காலை உரசினாள்.

அவர்கள் ஆசையாய் வளர்த்த பூனையைப் பார்த்த பெரியப்பா பொதுவாக ‘நல்லா கொழுகொழுனு இருக்கே; அடிச்சுத் தின்னா கன ருசியா இருக்கும்’ என்றார். பெரியண்ணன் வாயை சப்புக்கொட்டினான். அவளுக்கு உயிரே போனது. அவள் அழுது கொண்டே வெளியே வந்ததைப் பார்த்த அவளின் அப்பா, ‘பெரியப்பா விளையாட்டுக்குச்  சொல்லுறார்ப்பா’ என்றார். ஏனோ அவளால் அதை நம்ப முடியவில்லை.

அன்று மாலை அண்ணன்களுடன் சேர்ந்து விளையாடச் சென்றாள். பெரியவன் பச்சை தென்னை ஓலையிலிருந்து நீண்ட ஒன்றை பிரித்தெடுத்து நடுவில் இருக்கும் குச்சியை விடுத்து இருபக்க ஓலைகளை நீக்கினான். பூமாறு செய்யப் பயன்படும்  பச்சை குச்சியின் நுனி ஒரு நூலின் தன்மையோடு இருந்தது. முடிச்சொன்று போட்டு சுருக்கு வைத்தான்.

சாலையோரத்தில் இருந்த வேலிச் செடிகளைப் பார்த்துக்கொண்டு வந்தவன், ‘நம்பூரு மாரி கள்ளிச்செடியே இல்லல்லடா’ என்றான் சின்னவனிடம். ஆமாடா என்றான் சின்னவன். அவர்கள்  குட்டியான கரட்டானை கண்டு பிடித்ததோடு வாகாய் அதன் தலை நுழையுமாறு சுருக்கில் வைத்து பிடித்தான்.  அதன் துள்ளல்கள் மேலும் அதன் கழுத்தை இறுக்க அந்தரத்தில் தொங்கியது. எருக்கம் செடியைத் தேடி சின்னவனின் உதவியோடு அதன் கண்களில் பாலை விட்டான். துடிதுடித்து சாலையில் அது புரண்டபோது இரசித்து கொண்டாடினர். பிறகு, பெரிய கல்லொன்றால் அதன் தலையை நசுக்கிக் கடந்தனர். அவளுக்கு ‘திக்’ என்று இருந்தது.

மறுநாள் மாலையில்  ஊர்ப்பிள்ளைகள் விளையாடிய தரிசிற்குச் சென்றனர். முத்துக்குமார் மஞ்சள் முட்டைகளுடன் இருந்த பொன்வண்டை வரிக்குதிரை போட்ட தீப்பெட்டி அட்டைக்குள் வைத்திருந்தான். அதற்கு உணவாக சில கொடுக்காபுளி இலைகளையும் வைத்திருந்தான். மூக்குப்பீ துருத்தித் தெரிந்தது. சட்டை இல்லாத உடல் சாட்டையென நீண்டிருந்தது. தனது சாதனையை அறிவித்தவன் மீண்டும் ஊதா டவுசர் பாக்கெட்டில் பெட்டியை வைத்துக் கொண்டான்.

நிலம் படிப்படியாக இருந்தது.  நெருஞ்சியும் தும்பையும்  அதிகம் வளர்ந்திருந்தன. ஆங்காங்கே தொட்டாச் சுருங்கியும் அகன்ற இலைகளுடன் ஊமத்தம் செடிகளும் இருந்தன. அங்கே தங்களுக்கான ஆயுதத்தைத் தேடியவர்கள் நீண்டு காய்ந்திருந்த செடியைக் கண்டறிந்தனர்; அதனை தூரோடு பிடுங்கி தலைகீழாய்ப் பிடித்து மண்ணை வரப்பில் அடித்து உதிர்த்தனர்.  பிறகு, தூரை கையில் பற்றிக்கொண்டு அடர்ந்திருக்கும் அதன் கிளைகளால் வண்ணத்துப் பூச்சிகளை துரத்தித்துரத்தி  வேட்டையாடினர்.

இவ்வுலகிலுள்ள பட்டாம் பூச்சிகளெல்லாம் ஏன் பல்வேறு நிறங்களில் உள்ளன? என்றான் பெரியவன். மிகமிக இயல்பாய் அவனை உற்றுப்பார்த்த துமியாள் ‘ஏனென்றால் இவ்வுலகில் உள்ள பூக்கள் அனைத்தும் பல்வேறு நிறங்களால் ஆனவை’ என்றாள்.

பெரியவன் கருப்பில் சிவப்பு வண்ண புள்ளிகள் காணப்படும் பட்டாம் பூச்சியைப் பிடித்திருந்தான். சற்றே வெண்மையில் ஆரஞ்சு நிற வண்ணத்துப் பூச்சியை  பிடித்தவர்கள்  அதன் குண்டியை அழுத்தி அதிலிருந்து பூபோல் விரியும் ஒன்றை பார்த்து நணபர்களுடன் ஆனந்தித்தனர்.

பெரியவன் பிடித்திருந்த வண்ணத்துப் பூச்சியின் நடுப்பகுதியில் நூலைக் கட்டி துமியாவின் கையில் கொடுத்தான்.  பாவம் விட்டுவிடு எனக் அவள் கெஞ்ச மறுத்தவன் சிரித்துக் கொண்டே அதை இரண்டாய்ப் பிய்த்து அவள் முன் தூக்கி எறிந்தான். அதன் உடல் இரு துண்டுகளாய்ப் பிரிந்து காற்றின் போக்கிற்கு ஏற்ப சுழன்றபடியே தரையை அடைந்தன.

பெரியவன், தன் கை விரல்களில் ஒட்டியிருந்த அதன் வண்ணங்களை தடவிப் பார்த்துக் கொண்டிருந்தான். துமியாள் அவர்களை நீங்கியிருந்தாள்.

0

சுஜித் லெனின்

திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவரான இவர் 2016 முதல் அச்சு மற்ரும் இணைய இதழ்களில் நுண்கதைகள் எழுதி வருகிறார். 2023 ஜனவரியில் ’பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமிரும்’ என்கிற சிறுகதை தொகுப்பு எதிர் வெளியீடு வாயிலாக வெளிவந்துள்ளது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *