இந்த பழம் தான் அது என
என் கேள்விகளை முடக்கி
கையில் திணிக்கப்பட்ட வாழ்க்கை.
,
என் தேர்
நிலை நிறுத்தப்பட்டுவிட்டது.
இனி
எந்த யானை கொம்பனாலும்
இம்மியளவும்
அசைக்க முடியாது.
,
ஒவ்வொரு நாளும்
வாழ்க்கை…
உண்டு பெருத்து
ஆஜானுபாகுவாக எதிரில் நிற்கிறது.
சிறுமையுடன் அதன் பாதம் கழுவி வழிமொழிகிறேன்.
,
பேசி பேசித்தான்
உறவை வளர்க்க வேண்டும்..
மௌன ராகம் பாடி
எந்த பிரயோஜனமுமில்லை..
சொற்களின் திசுக்கள்
மூலை முடுக்கெல்லாம் பரவி
புதிய அலைகளை பிரசவிக்கும்.
,
எனக்குள் இறங்குவது
அவள் முகமட்டுமல்ல
முழு உடலும் தான்..
,
எதையோ மறந்தேன்..
எதை மறந்தேன்?
அதையும் மறந்தேன்?
மறதி நல்லது.
மறதியே இனிமை..
மறதியை போற்றுவோம்….
,
இறந்தவர்கள் கடவுளாக மாறிவிடும் பட்சத்தில்
நாம் ஏன் விரைந்து அந்த நிலைக்கு செல்ல முயலுவதில்லை?
,
பிட்டு உண்ணது போக மீத வாழ்க்கை (ஒளி அல்லது இருள்)
என தோற்றம் கொள்கிறது அரை நிலவு.
,
எல்லையற்ற புற வெளி
எல்லைக்குட்பட்ட அக வெளி.
,
காலை விடிந்துவிட்டது.
இனி மதியம் மற்றும் இரவு வரும்.
வேறு சொல்வதற்க்கு ஒன்றுமில்லை.
,
எப்படி வாழ்வு ஒரு தொடக்கம் இல்லையோ
மரணம் ஒரு முடிவே இல்லை.
,
நான் பாதிதான்.
என் செயல்களுக்கு பின்னால் நான் மட்டுமே இல்லை.
பின் விளைவுகளுக்காக நான் ஏன் வருந்த வேண்டும்.
,
ஆர்ப்பாட்டத்திற்கும் அந்நியமாதலுக்கும் இடைப்பட்ட
மூன்றாவது நிலைப் பாடு
,
நேர்மையற்ற மனம் எவ்வளவு புத்திசாலித்தனமாக
காய் நகர்த்தினாலும் அதனளவில் துயருறத்தான் செய்யும்.
000

சுரேசுகுமாரன்
இயற்பெயர் சுரேஷ்குமார்.வீ, கட்டுமானத்துறை பொறியாளர். உடுமலைப்பேட்டை. 2016-ல் ’விஷ ஊற்று’ என்கிற கவிதை நூல் வெளியாகியிருக்கிறது.