“கார்த்திக் உனக்கு ஒரு குட் நியூஸ்.. நேர்ல  கலெக்டர் ஆபீஸ் வாசலுக்கு வா  சொல்றேன் என்ன?” என்று மகிழ்ச்சி  கலந்த படபடப்பான குரலில்  சொல்லிவிட்டு சுமதி போனை வைத்து விட்டாள்.

கார்த்திக்கிற்கு இருப்பு கொள்ளவில்லை என்னவாக இருக்கும் என்று மண்டை குடைய ஆரம்பித்தது. இரண்டு நாள் லீவில் சேலத்துக்கு சிநேகிதியின் திருமணத்திற்குப்போய்வருவதாக சொல்லி இருந்தாள். அங்கு போனதும் போனும் செய்தாள் பிறகு வாட்ஸ் அப்பில்  எந்த தகவலும் இல்லாததால் கல்யாணத்தில் வந்தவேறு தோழிகளுடன் பேச்சு மும்முரத்தில் இருப்பாள் எப்படியும் ஊர் திரும்பியதும் கேட்டுக்கொள்ளலாம் என நினைத்திருந்தான்.

‘ஆபீஸில் எனக்கு ப்ரமோஷன் கிடைச்சிருக்கு’ என்று சொல்ல சுமதி ஒன்றும் பெரிய அலுவலகத்தில் பணி புரியவில்லை .காரத்திக்கைப் போல அவளும் அதே கொரியர் நிறுவனத்தில் தான் வேலை செய்கிறாள். கொரியர் தபால் புக்கிங் வேலை .அந்த பிரபல கொரியர் நிறுவனத்தின் சுமதி பணியில் சேர்ந்து ஒரு வருடம் தான் ஆகிறது. அதற்குமுன்பாக துணிக்கடையில் புடவைகள் பிரிவில் சேலைகள் எடுத்துப்போடும் பணியில்  களைப்பு அதிகமானதால் உடம்பில் வேறு அதிக  பலமில்லாததால் அதை விட்டுவிட்டாள்

.தபால் அனுப்ப வரும் வாடிக்கையாளரை அவரிடம் இருந்து அவற்றை எடை பார்த்து அதற்கு பணத்தை வாங்கிக் கொண்டு அவர்களுக்கு ரசீது கொடுத்து அனுப்புவது அவளுக்கான  பணியின் கடமை. அந்த நிறுவனத்தில் தற்போது இன்சார்ஜ் ஆக இருக்கும் கார்த்திக் ஆரம்பத்தில் சைக்கிளில் டெலிவரிக்கு வந்தவன். சுமதி போல அவனும் ஏழை குடும்பம் தான் நிறைய படிக்க வைக்க வசதி இல்லாததால் பிளஸ் டூவிற்கு பிறகு அவன் இந்த வேலைக்கு வந்தான். அவனுடைய உழைப்பும் நல்ல நடத்தையும் நிறுவன இன்சார்ஜ் என்கிற அளவுக்கு அவனை உயர்த்தி இருக்கிறது.

அதே நிறுவனத்தில் பணிபுரியும் ரங்கநாயகி என்பவள் சற்று அதிகமாகவே சுமதியை வேலை வாங்குவாள் “இன்னும் அந்த ரன் ஷீட்டை முடிக்காமல் என்ன பண்ற சுமதீ?” என்று அதட்டல் போடுவாள் .சுமதி பரிதாபமாக முழிக்கும் போது கார்த்திக் தான் அவளுக்கு பரிந்து கொண்டு வருவான் .அந்த கொரியர் நிறுவனத்தில் ரங்க நாயகியும் சுமதியும் மட்டுமே பெண்கள் .ரங்கநாயகி நாற்பதை நெருங்குகிறவயதில் உயரமும் பருமனுமாய்  தாட்டியாக இருப்பாள். அவளுக்கு அந்த நிறுவனத்தில் பத்தாண்டு கால அனுபவம் . தபால்விநியோக பணிக்காக இருக்கும் ஆண்கள் ஆறு பேர் தவிர இன்சார்ஜ் கார்த்திக்கும் அவ்வப்போது கொரியர் கொண்டு செல்வது வழக்கம் .

ரங்கநாயகி காலையில் கார்த்திக் இருக்கும் வரை டெலிவரிக்காரர்களுக்கு சீட்டுகளை எடுத்துக் கொடுப்பாள். அவள் வேலை போன் அழைப்புகளுக்கு கம்ப்யூட்டரை உற்றுப்பார்த்தபடி பதில் அளிப்பதுதான். மாலை ஆறு மணி ஆனால் ‘டாண் என்று புறப்பட்டு விடுவாள் .பள்ளி விட்டு வரும் குழந்தைகள் காத்திருக்குமாம்.

அவள் அப்படி முன்கூட்டி கிளம்பினாலும் சுமதி அவள் வேலையையும் சேர்த்து செய்து முடித்து எட்டுமணிக்குத்தான் அவள் வீட்டிற்குப் போவாள் .

சுமதி உடம்பு மெல்லிசாய் பென்சில் போல இருப்பாள். மனசும் பூஞ்சை. ரங்கநாயகியிடம் எதிர்த்துப் பேச பயப்படுவாள். தான்  அனாதை என்கிற ஒரு அச்ச உணர்வு. அந்த 2004 டிசம்பர் 26ம் தேதி  ஐந்து வயது சிறுமியாக இருந்தவளின் வாழ்க்கையையே  புரட்டிப்போட்டுவிட்டது. அந்த சுனாமி மட்டும் அன்று அவள் பெற்றோர்களை கடலுக்கு இரையாக்காமல் இருந்திருந்தால்அவள் இன்று பட்டதாரி ஆகி இருக்கலாம். ஐடி அலுவலகம் ஒன்றில்  பணிபுரிய வாய்ப்பு கிடைத்திருக்கலாம், இப்படி வேண்டா வெறுப்பாய் வளர்க்கும் ஒரு தூரத்து உறவினர் வீட்டில் தங்கும் நிலைமை வந்திருக்காது.

பெற்றோர்களை நினைத்து சுமதி அழாத நாளில்லை. ரங்கநாயகி அடிக்கடி அதட்டி விட்டால் அவள் கண்களில் நீர் தளும்பி விடும். அப்போது கார்த்திக் தான் அவளுக்காக பரிந்து கொண்டு வருவான்.

“அந்தக் குரங்கு நாயகிக்கு உன்னை விட சம்பளம் ஜாஸ்தி .நீ வாங்குற பத்துஆயிரத்துக்கு பல மணி நேரம் வேலை பாக்கறியே.. ஒரு நாள் அந்த தடிச்சியை நல்லா கேக்க போறேன்” என்பான்.

 “வேண்டாம் வேண்டாம் கார்த்தி. அந்தம்மா ஒரு மாதிரி..” என  நடுங்குவாள் சுமதி.

 ஆனால் ஒரு நாள் ரங்கநாயகி காலை வழக்கம் போல நிறுவனத்தில் நுழையும் போது கார்த்திக் கேட்டு விட்டான். ”என்ன மேடம்.. நீங்க பாட்டுக்கு சாயந்திரம் ஆறு ஆச்சுன்னா ஓடிப் போயிடுறீங்க இந்த சுமதி எட்டு மணி வரைக்கும் வேலை பார்க்கிறா” என்றான் இடக்கான குரலில். ஏனென்றால் ..ரன்ஷீட் தொடர்பான‌ வேலைக‌ள் ரங்கநாயகினுடையவை. அந்தப் பிரிவின் பெயர் ஈடிபி. அதாவது எலக்ட்ரானிக் டேட்டா ப்ராசசிங். தபால் விநியோகிக்கச் செல்வோருக்குக் காலையில் ரன்ஷீட்டை – டெலிவரிக்கு கொண்டு செல்லும் தபால்களை ஸ்கேன் செய்த பட்டியல் – ப்ரிண்ட்அவுட் எடுத்துத் தருவதும் அவள் வேலை..ஆனால் அதைத்தான் சுமதி செய்து அவளிடமே சலிப்பும் ஏச்சும் வாங்குகிறாள் என்பது கர்த்திக்கிற்கு எரிச்சலானது,

ரங்க நாயகி  முறைப்பதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்தான்.

: “நேத்திக்கு ராத்திரி  ஹெட் ஆபீஸ்  மேனேஜர் முகேஷ் வந்தார். முன்பே ஒரு முறை அவர் பகல் பொழுதில் வந்திருக்கிறார். அறிவிப்பில்லாமல் திடீரென சின்னக் கிளைகளை மேற்பார்வை இடுவது அவர் வழக்கம்.. உங்க வேலையையும் சேர்த்து ராத்திரிஅப்பாவி சுமதி செய்றத கண்கூடாப்பார்த்திட்டார். உங்களை இன்னிக்கு ஆபீஸ் வந்ததும் போன் செய்ய சொன்னார். உங்களுக்கு இருக்கு ஆப்பு.”என்றான் .

இப்படி சுமதிக்காக அவன் அனுதாபப்பட்டதும் பலமுறை பரிந்துபேசியதும் சுமதிக்கு அவன் மீது மதிப்பானது. பிறகு அன்பாகவும் இறுதியில் காதலாகவும் முடிந்திருக்கிறது.

கார்த்திக்கிறகு அம்மா மட்டும்தான். அவன் காதலை  மறுக்கப்போவதில்லை. சுமதிக்கும் வளர்த்தவர்களுக்கு  தொல்லை தராமல் எளிமையாக பதிவுத்திருமணம் செய்து கொள்வதில் தடையில்லை.

“சுமதி..உன் சம்பளமும் என் சம்பளமும்  குடும்பம் நடத்த போதுமா தெரியல… இந்தகுரியர் கம்பெனி வேலையை விட்டு நாம் சொந்தமா தொழில்நடத்தணும். என் ஃப்ரண்ட் ஒருத்தன் என்னை மாதிரி பத்தாம் க்ளாஸ்படிச்சவன் தான்  சூரத் போயி மொத்த சந்தையில் ஜவுளித்துணி வாங்கி வீட்டோட வியாபாரம் ஆரம்பிச்சி ஒரே வருஷத்துல  பஜார்ல  ஜவுளிக்கடை வச்சி இப்போ பணம் கொட்டுது. சில லட்சம் முதல் போட இருந்தா போதும் நாமும் ஆரம்பிக்கலாம்.. ஆனா அதுக்கு எங்க போறது?” என்று ஒருநாள் புலம்பியவனிடம்,” கவலைப்படாதே  கார்த்திக்.  சுனாமில  பெத்தவங்களை  இழந்த என்னைமாதிரி அனாதைகளுக்கு 2004ல் அரசாங்கம் கொடுத்த  இழப்பீட்டுத்தொகை இருபத்தியோரு வருஷத்துல இப்போ சில லட்சங்களா வளர்ந்திருக்கு.. அதை நான்தான் என் விருப்பப்படி பாங்கிலேருந்து எடுக்கமுடியும். அது அப்படியே இருக்கு. சில  நல்ல உள்ளங்கள் கொடுத்த உதவிப்பணம்  மட்டும் என்னை வளர்த்த தூரத்து சொந்தங்கள் வாங்கிட்டாங்க… அது லட்சமா கோடியா தெரியாது.அன்னிக்கு  மண்ணோடு மண்ணாய்ப்போன என் பெற்றோர்களை இழந்து அனாதையான என்னை இதுவரை ஏதோ சோறுபோட்டு படிக்க வச்சி காப்பாத்திட்டாங்க..கல்யாண்ம செய்துகொடுக்க  அவங்களும் வசதியானவங்க இல்ல.. அதனால நீ சொல்றமாதிரி  நமக்குக் கல்யாணம் ஆனதும் இந்த வேலையை  விட்டுடலாம். எனக்கும்  ரங்கநாயகி கிட்டேயிருந்து விடுதலை கிடைக்கும். நாம ரெண்டுபேருமா சூரத்துக்குப்போயி மொத்தமா துணி வாங்கி வியாபாரம் ஆரம்பிக்கலாம்.“

“ஆமாம். ’சுமதி டெக்ஸ்டைல்ஸ்’  கடைப்பெயர் எப்படி நல்லா இருக்கா?”

“ஆஹா.. அரசமரத்தை சுத்தின உடனே அடிவயித்தை தொட்டுப்பார்த்தாளாம்! அந்தகதையாத் தான் இருக்கு “என்ற சுமதி சிரிக்க கார்த்திக்கும் சிரித்தான்.

ஒருவேளை கல்யாணத்தேதி பார்த்துவிட்டாளோ..அந்த  பணத்தை எடுத்து உடனே வியாபாரம் ஆரம்பிக்கலாம்  என்று சொல்லப்போகிறாளோ? ஆனால் கலெக்டர் ஆபீசுக்கு எதற்குவரச்சொல்கிறாள்? சுனாமி இழப்பீட்டுத்தொகை  பாங்கிலிருந்து பெற்றுக்கொள்ள அவரது ஒப்புதல் வேண்டி இருக்குமோ என்னவோ..

ஏதேதோ நினைத்தபடி  கார்த்திக்  தனது இரு சக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்தான்.

கலெக்டர் ஆபீசில் கூட்டம் நிரம்பிவழிந்தது ஆளுக்கொரு ஒரு மனுவோடு அதிகாரிகளை பார்க்க காத்திருந்தார்கள். கலெக்டரிடமே நேரில் மனு கொடுக்க வேண்டும் என்று பரிதவித்த சிலரை அறைக்கு வெளியில் தோளிலிருந்து குறுக்காக இறங்கிய சிவப்புப்பட்டையும் தொப்பியுமாக  நின்றிருந்த டவாலி எல்லோரையும் விரட்டிக் கொண்டிருந்தான்.

“ஐயா மீட்டிங்கில் இருக்காரு நீங்க போய் பி ஏ வை பாருங்க”

“ஒரு நிமிஷம் என்னை விடுங்களேன்..” என்று கெஞ்சினாள் சுமதி.

“அட போம்மா.. தமிழ்ல தானே சொல்றேன்.. உனக்குன்னு என்ன தனியா சொல்லனுமா?” என்று அலுத்துக்கொண்டான் டவாலி.

“முக்கியமான விஷயம்.. ரொம்ப முக்கியமான விஷயம்… கலெக்டர் ஐயாவை ரெண்டே நிமிஷம் நான் பாத்துட்டு போயிடுவேன்” பரபரத்தாள்  சுமதி.

“ஏம்மா நீ என்ன பெரிய ஆளா கலெக்டர் ஐயாவோட முக்கியமான விஷயம் பேச? என்னவோ  நேரா  இங்கேயே வந்துட்டியே…அதெல்லாம் ஆவாது..போய் யாராவது அதிகாரிய பாரு”

“இல்லீங்க. எனக்கு கலெக்டர் ஐயாவ தான் பாக்கணும் அதுக்கு தான் காத்திருக்கேன்”

“நீ காத்திருந்தா உன்ன உள்ள விட்டுருவோமா? போம்மா.. சொன்னா கேளு.. ஐயா இன்னைக்கு யாரையும் பாக்க மாட்டாரு போ”

சுமதி ஏமாற்றமுடன்  நகர்ந்து சென்று ஒரு ஓரமாக பரிதாபமாக நின்றாள்

“ஏம்மா வெளியில் போய் நில்லுன்னா இங்கே ஓரமா நிக்கிற உன்னை எல்லாம் உள்ள வுட முடியாது மா.. சொன்னாக்கேளு.”

“பரவாயில்லீங்க அவர் வெளியில் வருகிற போது நான் பாத்துக்குறேன்”

“அப்படின்னா போயி தெரு பக்கம் நில்லு இது ஆபிஸ்.. எல்லாம் நீ நிக்கிறதுக்கு அனுமதி கிடையாது”

“இந்த ஆபீஸ் தானே எங்கள மாதிரி ஆட்களுக்கு நல்லதும் செய்யுது ..நிக்கிறேன்” என்று அவள் நிற்பதை  தூரத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பலரில் ஒருவனாக கார்த்திக்கும் நின்று கொண்டிருந்தான்.

எதற்காக சுமதி இவ்வளவு அவசரமாக கலெக்டரைப் பார்க்க வேண்டும் ?

கார்த்திக் குழப்பமுடன்அவளுக்குபோன் செய்தான்.தனது செல்போன்திரையில் அவன் பெயர்பார்த்த சுமதி போனை சட்டெனஅணைத்துவிட்டு தூரத்தில் நின்று கொண்டிருந்த கார்த்திக்கை எம்பிப்பார்த்தவள்’ இரு வருகிறேன்’ என்கிற மாதிரி ஜாடை காட்டினாள்.

கார்த்திக்கும் நின்று கொண்டிருந்தான். நேரம் மெல்ல மெல்ல கரைந்தது மதிய உணவு நேரமும் முடிந்தது. கார்த்திக்கிற்கு  பசி எடுத்தது

கலெக்டரின் டவாலி ப்யூன் அவரது அறைக்குள் அடிக்கடி உள்ளே செல்வதும் கோப்புகளோடு பல பிரிவுகளுக்கு ஓடுவதுமாக இருந்தான். அலுவலர்கள் உள்ளே போவதும் வருவதுமாக இருந்தார்கள்.

சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு டவாலி சற்று தள்ளி போய் தன் பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்து யாரிடமா பேசிக் கொண்டிருந்தபோது சட்டென சுமதி கலெக்டரின் அறைக்குள் நுழைந்து விட்டாள்

“ஏய். பொண்ணு  ஏய்..என்னமா  எங்க போற?” டவாலி கத்திக் கொண்டு வருவதற்குள் அவள் கலெக்டரின் அறைக்குள் நுழைந்து விட்டாள்.

 கலெக்டர் சுமதியைப்பார்த்து புருவம் சுருக்கினர்.”யாரும்மா நீ என்ன வேணும்?” என்று அவர் கேட்கும் போது சுமதி கை குவித்தபடி,” கலெக்டர் ஐயா மன்னிக்கணும் .நான் எந்த கெட்ட எண்ணத்துடனும் வரல..” என்று பணிவான குரலில் சொல்லும்போது டவாலி உள்ளேவந்தவன்,” உள்ள போகக் கூடாதுன்னும் சொல்லியும் எப்படியோ வந்திடிச்சிங்க”என்று பயத்துடன் சொல்ல கலெக்டர் அவனிடம் ,”நீ முதல்ல வெளியில போ நான் விசாரிச்சுக்கிறேன்” என்றார்.

சுமதியின் மெலிந்த ஏழ்மைத்தோற்றமும் கள்ளங்கபடம் இல்லாத  முகமும் அவரை யோசிக்க வைத்தன.

 பிறகு சுமதியிடம்,”என்ன வேணும் உனக்கு?” என்று கேட்டார்.

“கலெக்டர்ஐயா..வணக்கம்,நான் வந்தகாரணத்தை சுருக்கமா சொல்லிடுறேன் .2004ல்சுனாமி வந்தப்ப எனக்கு வயசு அஞ்சு,,,எங்க வீடு கடலூர்ல கடல்பக்கம் ஒரு தெருல இருந்தது..சுனாமி வெள்ளத்துல என் அப்பா அம்மா செத்துட்டாங்கன்னு வெளியூருக்கு பக்கத்துவீட்டுக்காரங்களோட  திருவிழா போயிட்டு வந்தஎனக்கு அரசாங்கம்  கொடுத்த பணம் பாங்குல இருந்தது….அது கலெக்டர் கொடுத்தது”

“ஆமா அதுக்கு என்ன இப்போ?”

“க..,க..கலெக்டரய்யா…! செத்துட்டாங்கன்னு நெனச்சிருந்த எங்க அம்மாவையும் அப்பாவையும் சமீபத்துல சேலம்போனப்ப அங்கு ஒரு நல்ல மனுஷர் நான் போன கல்யாணத்துக்குக்கூட்டி வந்திருந்தாரு. இருபத்தி ஓரு வருஷமா அவருதான் சுனாமில எங்கோ அடிச்சிட்டுப்போயி சாவின் விளிம்புவரை போயி  மண்ணுலமூடி ரெண்டுநாள் அப்படியே கிடந்தவங்களை மீட்புப்பணிக்குழு மீட்டு எடுத்தபோது தான் கூட்டிட்டுப்போயி காப்பாத்தறதா அனுமதி வாங்கிகூட்டிப்போயிருக்காரு.அம்மாக்கும் அப்பாக்கும் அதிர்ச்சில மூளை பிரண்டுபோயி எதுவுமே  இதுவரை சொல்லலயாம்.அதனால நான் ஒருமகள் இருப்பது அவருக்குத்தெரியல..ஆனா நான் எங்கம்மாவை அடையாளம் கண்டுகிட்டேன். அம்மாபேர ஷண்முக வடிவு. பாட்டி  முருகனுக்கு ஷஷ்டிவிரத்ம இருந்து பெத்தவங்க. அம்மாக்கு ரெண்டு கைகால்விரல்களிலும் அபூர்வமா ஆறாவது விரல்கள் இருக்கும். மொத்தம் இருபத்து நாலுவிரல்கள்..அவங்களுக்கு என்னைத்தெரியலேன்னாலும் நான் அவங்களை அடையாளம் தெரிஞ்சிட்டேன். நான் .அனாதை இல்லை இனிமேன்னு சந்தோஷமா இருக்கு…:”

“சரிம்மா இதை சொல்லிட்டு போகத்தான் இங்க வந்தியா?”

“அதுமட்டும்:இல்லங்க ஐயா” என்ற சுமதி தன் ஹேண்ட் பேக்கில் கைவிட்டு பணக்கற்றை ஒன்றை எடுத்தாள். கலெக்டர் முன்பிருந்த டேபிள் மீது வைத்தாள்.

“என்னமா இது?”

“எனக்கு கலெக்டர் அன்னிக்குக் கொடுத்த பணம். இந்த பணத்தை நான் மேஜரானதும் எடுத்துக்கலாம்னு சொல்லியும் நான் எடுத்து  செலவழிக்கவே இல்ல அப்படியே பேங்க்ல போட்டு வச்சிருக்கேன். இப்போ அப்பா அம்மா தான் பிழைச்சி இருக்கிறது தெரிந்துபோச்சே..அதனால் நீங்க கொடுத்த பணத்தை இனிமே நான் வச்சுக்கிறது தப்பு இல்லையா அதனால்தான் இதை திருப்பிக் கொடுக்கறதுக்கு வந்தேன்..வரேன்..நன்றிங்க..”என்றாள்.

வெளியே திரும்பிச்செல்ல இருந்தவளை கலெக்டர்  அழைத்தார்.

“உன் பேர் என்னம்மா?’

“சுமதிங்க கலெக்டர் ஐயா.”

“ சமதி..உன்னை உன் நேர்மையை நான் பாராட்டுகிறேன் ..இந்த பணத்தை நீ திருப்பி கொடுத்ததற்கு உனக்கு ரசீது தரணும் ..இப்பவே அதிகாரிங்ககிட்ட சொல்றேன் இங்க  கொண்டு கொடுப்பாங்க வாங்கிட்டு போயிடு “என்றார்.அடுத்தகணம் .இண்ட்ரகாமில் யாருடனோ பேசினார்.

அவர் பார்வையில் பெருமிதம் மிகுந்தது.

“ரொம்ப நன்றி ஐயா காலையிலிருந்து நிக்கறேன். நேரமாக நேரமாக உங்கள பாக்க முடியாம போகவும் இந்த பணம் என் கையில ரொம்ப கனக்க ஆரம்பிச்சிடுச்சு ..மனசாட்சி வேற குத்துது. அதான் டவாலியை மீறி உள்ளே வந்திட்டேன்”

“பரவால்ல அம்மா காலையிலிருந்து உன்னைகாக்க வச்சதுக்கு நான் தான் மன்னிப்பு கேட்கணும்” என்று எழுந்து நின்றுவிட்டார் கலெக்டர்.

சுமதி ரசீதைப்பெற்றுக்கொண்டு மன நிம்மதியுடன் வெளியே வந்தாள்.

நடந்ததை எல்லாம் வெளியே காத்திருந்த கார்த்திக்கிடம் மகிழ்ச்சி எல்லை மீற விவரித்தாள்.

“அப்பா அம்மா கிடைச்சிட்டாங்க..அவங்களை  வச்சிக்காப்பாத்தணும்.. இனிமே நான் அனாதை இல்லை கார்த்திக். ரங்க நாயகி சில சமயம் என்னை அனாதைன்னு கூட  திட்டியிருக்காங்க தெரியுமா?” 

 கார்த்திக் முகம் கடுகடுக்க,”அது சரி…யாரைக் கேட்டு அந்த பணத்தைக் கொண்டு போய் கலெக்டரிடம் திருப்பிக் கொடுத்தாய்? செத்துப்போன உன் அப்பா அம்மாவை உயிரோடு திரும்பி பார்த்த விஷயமெல்லாம் நீ சொல்லி தானே மற்றவர்களுக்கு தெரியப் போகிறது? சொல்லாமல் இருந்திருந்தால் அந்தப் பணம்  நம்முடைய எதிர்கால வாழ்க்கைக்கு எவ்வளவு உதவியாக இருந்திருக்கும்? என்ன அவசரம் என்னிடம் ஒரு வரத்தைக்கேட்கமாட்டியோ அறிவுகெட்ட முண்டம்” அதைப்போய் தூக்கிக் கொடுத்திருக்கிறாயே..அறிவுகெட்டமுண்டம்” என்று சீறினான்.

அவன் முகத்தில் தெரிந்த குரோதம் அவன் மனத்தைக்காட்டியது.

.சுமதி பதில் ஏதும் பேசவில்லை. கழுத்தில் தாலி ஏறுமுன்பே கார்த்திக்கின் அகம் தெரிந்துபோனதில் மெலிதான நிம்மதிப்பெரூமூச்சும் வந்தது. தன்செயலைப்பாராட்டப்போகிறான் என ‌எதிர்பார்த்தவளுக்கு அவன் சுயரூபம் தெரிந்துபோனது.

“சு.சுமதி..சுமதீ..என்ன பேசாம நிக்கறே?”

கார்த்திக் கூவிய அந்தக்கணம் சுமதி அவசரப்படாமல் நிதானமாக அவனை விட்டு… விலகி நடக்க ஆரம்பித்தாள்.

000

ஷைலஜா.

இயற்பெயர் மைதிலிநாராயணன். ஸ்ரீரங்கத்து மண். கணவர், மற்றும் இரண்டு மகள்கள். தற்போது வசிப்பது கோவையில். இதுவரை 400 சிறுகதைகளுக்கு மேல் எழுதி இருக்கிறேன். 12  நாவல்கள் வந்துள்ளன.

கல்கி அமுதசுரபி தினமலர் கலைமகள் இலக்கியபீடம்  குவிகம் மாத இதழ் பெங்களூர் தமிழ்ச்சங்கம் இணையப்பத்திரிகைகள், அமெரிக்கதென்றல் இதழ் முதலியன நடத்திய  நாவல், குறுநாவல்,சிறுகதைப்போட்டிகளில் பரிசு பெற்றிருக்கிறேன்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *