ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் தான் விடுமுறை. அதுவும் ஸ்ரீநிதிக்கு கிடையாது. பாதி நாள் சமையல் மீதி நாள் சுத்தம் செய்வது ஒரு மணி நேரம் தூக்கம் மாலை கோயில் மற்றும் சாப்பிங் என்று ஓடி விடும். வேலைக்கு செல்ல வேண்டாம் என்றால் கேட்க மாட்டாள். படித்து விட்டு நாலு காசு வாங்கினால் யாருக்காவது உதவும். உடல், மனம் மற்றும் மூளைக்கு ஏதாவது வேலை கொடுத்து கொண்டே இருக்கலாம்.
கடை ஆரம்பிப்பதற்கு முன்பு ஒரு கல்லூரியில் அட்டன்டராக வேலை பார்த்தேன். நல்ல சம்பளம் தான். எல்லா வேலைகளும் தெரியும். கார் கூட ஓட்டுவேன் ஆள் இல்லையென்றால். கிளார்க் வர வில்லை என்றால் அந்த வேலையும் செய்வேன். எனக்கு தெரியாத வேலை பாடம் நடத்துவது தான். எனக்கு படிப்பு என்றால் கசப்பு தான். எப்படியோ தத்தி தடுமாறி டிகிரி முடித்தேன். ஶ்ரீநிதியை கூட காதலித்து தான் திருமணம் செய்து கொண்டேன். நான் காதலிக்கவில்லை. புதையல் போன்று கிடைத்தவள். அவள் தான் என்னை காதலித்தாள். முதலில் பயந்தேன் குடும்பம் அக்கா தங்கை கல்யாணம் என்று. ஶ்ரீ விடுவதாக இல்லை. இரண்டு வீட்டிலும் ஒரே பிரச்சனை. வீட்டை விட்டு வெளியே வந்து தான் கல்யாணம் செய்து கொண்டோம். முதலில் கஷ்டமாக இருந்தது. வேலை முடித்து ஓட்டலில் மாலையில் சர்வராக வேலை செய்து கொண்டு இருந்தேன். ஸ்ரீ அப்போது வேலை தேடிக் கொண்டு இருந்தாள். நான் தான் மேல் படிப்பு படி என்றேன். அவள் படிப்பில் ஆர்வம் அதிகம்.
வீட்டு வாடகை கரண்டு பில்லு குடும்ப செலவு என்று எல்லாவற்றிற்கும் கஷ்டம். நாட்கள் செல்ல எல்லாம் ஓர் அளவு சரியானது. ஶ்ரீக்கு வேலை கிடைத்தது. என்னுடைய பாரம் கொஞ்சம் குறைந்தது. மாலையில் எந்த வேலைக்கும் செல்வது இல்லை. ஸ்ரீக்கு எல்லா வேலைகளிலும் துணையாக இருப்பேன். என்னை படிக்க சொல்லி வற்புறுத்துவாள் அது மட்டும் வேண்டாம் என்பேன்.
அப்படி என்றால் இந்த வேலையை விட்டு விட்டு ஏதாவது தொழில் செய் என்பாள். முதலுக்கு என்ன செய்வது என்றேன். உன் நண்பன் பாலாஜி வங்கியில் தானே வேலை பார்க்கிறான் என்பாள். அது எல்லாம் சரியாக வராது இப்ப இருக்கறதே போதும் என்பேன்.
என்ன போதும் குழந்தைகள் வந்து விட்டால் என்ன செய்வ என்பாள். அப்போது பார்த்து கொள்ளலாம் . உனக்கு இந்த வேலையில் மரியாதை கிடையாது. எத்தனை வருடம் ஆனாலும் இந்த நிலை தான். பின்னால் வருந்துவதற்கு பதிலாக இப்போதே மரியாதையா வேலையை விட்டு நின்று விட்டு என்ன தொழில் தொடங்கலாம் என்று யோசி அல்லது ஒரு தொழிலை கற்றுக்கொள் என்றாள். எனக்கு எல்லா வேலையும் தெரியும் என்பேன். ஒரு நாள் வேலையை விட்டு துரத்தினால் தான் புத்தி வரும் என்று கூறி அவள் வேலை பார்க்க போய் விட்டாள்.
அவள் சொல்வது சரி தான். முதலாளி மரியாதையாக நடத்துகிறார். ஆனால் அவருக்கு கீழே வேலை பார்ப்பவர்களிடம் எனக்கு மதிப்பே கிடையாது. அதிலும் முக்கியமாக எ.ஓ. எல்லா வேலைகளும் வாங்கி கொண்டு ஏதாவது வேலை தாமதம் ஆனால் அவர் பேசும் வார்த்தைகள் நமக்கு இரண்டு நாட்களுக்கு தூக்கமே வராது. ஸ்ரீ சரியாக கண்டு பிடித்து விடுவாள். எதுவும் கேட்க மாட்டாள். நமக்கு தான் மறதி என்ற மாமருந்து இருக்கிறதே.
ஒரு நாள் ஶ்ரீ வேலை தொடர்பாக செல்வதற்கு விடுப்பு எடுத்தேன். அன்று ஏதோ முக்கியமான வேலை போல. உடனே வர சொன்னார்கள். என்னால் வர முடியாது என்று கூறிவிட்டேன். அடுத்த நாள் வேலைக்கு சென்றேன். வருகை பதிவேட்டில் கையொப்பமிட போனேன். கிளார்க் ஒருவர் ராஜா தப்பா எடுத்துக்காத உன்ன சார் கையெழுத்து போட வேண்டாம் என்று கூறிவிட்டார் என்றார். அலுவலகத்தில் எல்லாம் ஒரு மாதிரி பார்த்தார்கள். எனக்கு கோபமும் பதட்டமும் ஒரு சேர அதிகமானது. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. ஶ்ரீயிடம் பேசினேன். ரொம்ப நல்லது சனி விட்டது வீட்டிற்கு வந்து விடு பார்த்துக்கொள்ளலாம் என்றாள். அன்று முதலாளி இருந்தார் அவரையும் பார்க்க முடியவில்லை. எதுவாக இருந்தாலும் எ.ஓ. வை பாருங்கள் என்று கூறிவிட்டார்கள். முதலாளியின் பி.எ. வை பார்த்து, நான் வேலைக்கு வரவில்லை முதலாளியிடம் கூறி விடுங்கள் என்று கூறி விட்டு அந்த இடத்தை விட்டு வந்து விட்டேன்.
மீன் கடைக்கு சென்ற போது எ. ஓ. வை பார்த்தேன் எதுவும் பேசவில்லை. எல்லா பழைய கதைகளும் ஓட ஆரம்பித்து விட்டது. அவராக வந்து பேசினார். ’என்ன ராஜா எப்படி இருக்க’ என்றார். கடை பாய் உடனே, ’சார் அவர்ட்ட பத்து பேர் வேலை பார்க்கிறாங்க நம்ம ஏரியாவுலேயே பெரிய கடை. எங்க வீட்டிற்கு எல்லா பொருட்களும் தம்பி கடைல தான்’.
ரொம்ப சந்தேஷம்.
000

சோழன்
சொந்த ஊர் தஞ்சாவூர். இவர் தஞ்சாவூரில் பள்ளியில் கணிப்பொறி அறிவியல் துறையில் பணிபுரிந்து வருகிறார். பூபாளம், நடுகல், சொல்வனம், மயிர் மற்றும் காற்றுவெளி இணைய இதழ்களில் கவிதைகள் வெளிவந்துள்ளன. சொல்வனம், மயிர் மற்றும் சிறுகதைகள்.காம் இணைய இதழ்களில் சிறுகதைகள் வெளிவந்துள்ளன.
திரு. சோழன் அவர்களால் எழுதப்பட்டது இந்தச் சிறுகதை. இது ‘நடுகல்’ இணைய இதழில் வெளிவந்துள்ளது. இந்தக் கதையின் வாயிலாக அவர் கூற விரும்புவது, தன்னை புரிந்து கொண்டு தனக்காக ஒருத்தி இருந்தால், எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதை அழகாகவும், தெளிவாகவும் எடுத்துரைத்துள்ளார்.
படித்த மனைவி, அவ்வளவாகப் படிக்காத கணவன், இவர்களுடைய திருமணம் காதல் திருமணம். வீட்டை எதிர்த்துத் திருமணம் செய்துகொண்டு, இருவர் மட்டும் சொந்தங்களை விட்டுச் சற்றே தள்ளித் தங்களது வாழ்வை நகர்த்தி வருகிறார்கள்.
தனது கணவனுக்கு அவனது அலுவலகத்தில் சரியான மதிப்பு கிடைக்கவில்லை என்பதை உணர்ந்த அவள், அதை அவனிடம் எப்படி கூறுகிறாள், அதை அவன் எப்படி எடுத்துக்கொண்டான் என்பதே இக்கதை. மற்றும் ஒரு சூட்சுமம் என்னவென்றால், “மனைவி சொல் மிக்க மந்திரமில்லை” என்பதே. எப்போதும் அவள் நல்லதையே நினைக்கக் கூடியவள் என்பதை இக்கதையின் வழியாகக் கூறியுள்ளார் எழுத்தாளர் திரு. சோழன் அவர்கள். மனமார்ந்த வாழ்த்துகள் அவருக்கும் மற்றும் இதனைப் பிரசுரம் செய்த நடுகல் இணைய இதழ் குழுமத்திற்கும்.
-பாலமுருகன்.லோ-