அலமேலு வைத்தியநாத அய்யர் மாமி பஞ்சமி திதியில் சிவ பதவி அடைந்திருந்தாள். நிஜத்தில் அவள் சிவ பதவிதான் அடைந்திருக்க வேண்டும். சாப்பிட்டுக் கொண்டிருந்த ரசம் சாதம் முழுங்க முடியவில்லை என்று நெஞ்சில் கை வைத்துக் கொண்டு ’சிவ சிவ’ என்று சொல்லி மலங்க மலங்க விழித்துச் சரிந்தாள். பெரிய மாட்டுப் பெண் அகிலா கிருஷ்ணன் பதறி அவளைத் தூக்கி நிறுத்த தலைச் சாய்ந்து பிராணன் போய்விட்டது. ஷணத்தில் பிராணன் போய்விட்டது. அலமேலு வாழ்நாள் முழுவதும் இதைத்தான் விரும்பி இருந்தாள். பீ மூத்திர படுக்கையில் படுக்க வைத்துப் பாடாய்படுத்திப் பம்பரமாய் ஆட்டி பிராணன் போகவில்லை.
எண்பது வயசு என்று சொல்ல முடியாது. பதிமூன்று வயதில் திரண்டுக் குளித்து அடுத்த மாதமே விவாகம். பர்மாஷெல் ஹெட் கிளார்க் வைத்தியநாத அய்யருடன் தாம்பத்யத்தில் மணிமணியாக ஐந்துப் பெண்கள் நான்கு ஆண்கள். தாம்பத்யத்தில் ஒத்தையாக ஓடிய ஓட்டம் உடம்பை வின்னென்று நோய் நொடி இல்லாமல் வைத்திருந்தது.
இப்படி ஒத்தை ஆளாக ஒன்பது குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் செழிக்க வாழ வைத்தவள். ’ஆத்துக்காரர் ஒரு துரும்பைக் கூட அசைக்கமாட்டார்’ என்கிற சொலவடை புழங்கிய காலம். அந்த ஒரு துரும்பைக் கூட அசைக்க ஆள் இருந்தால்தானே. வைத்தியநாத அய்யர் திடீரென்று ஒரு நாள் விடிகாலையில் காணாமல் போனார். அவர் போய் முப்பது வருஷம் கூட குறைய ஆகி இருக்கும். எதற்குப் போனார் எங்கே போனார் எப்படி போனார் என்று யாருக்கும் இன்றுவரைத் தெரியாது.
இரண்டு மாதம் அவரைப் பற்றி ஓயாமல் வம்பு பேசிவிட்டுக் கடைசியில் தீர்மானமாக ரிஷிகேஷில் சந்நியாசி கோலம் பூண்டு அலைவதாகச் சொல்லி அவரை மறந்தேப் போனார்கள் அக்கம் பக்கம் மற்றும் உறவுக்காரர்கள்.
அலமேலுவும் ’நா என்ன பாவம் பண்ணேன்? நேக்கு ஏன் இப்படி?’ ஒவ்வொரு நாளும் சாமி படங்களின் முன் உருகி அழாத நாள் இல்லை. முதல் ஒரு வருடம் இப்படியாக ஓடியது. அது முடிந்து ஒரு நாள் அந்த சாமிப்படங்களின் மேல் பாரத்தைப் போட்டு அதிலிருந்து மெது மெதுவாக மீண்டாள்.
கணவர் இல்லாத குறையைத் தவிர எந்தக் குறையும் இல்லை. மீண்டு எழுந்தவுடன் அதுவும் அவளுக்குக் குறையாகப்படவில்லை. ஏதோ விவேகம் வந்தாற் போல உணர்ந்துக் கொண்டிருந்தாள்.
வாரிசுகளும் குறை வைக்கவில்லை. மூத்த மகனிலிருந்து ஆரம்பித்து நெய் பந்தம் பிடிக்கப் பேரன் பேத்தி வரை மொத்தம் 22 பேர் சாவுக்கு ஆஜர். கல்யாண சாவு.
தேகத்தை சிரத்தையாக தினமும் பேணிக் காத்தவள். அலமேலு தினப்படிக் குளியலில் சோப்பு சமாசாரங்களைச் சேர்ப்பதில்லை. அதே போல இன்றும் அசல் மஞ்சள் மற்றும் அதனுடன் சில பொடிகளும் சேர்த்துப் பூசி மணக்க மணக்கக் குளிப்பாட்டினார்கள். வசுமதிக்குத் தெரியும். உயிரோடு இருக்கும் போது இரண்டு மூன்று தடவை அலமேலுவிற்கு குளிப்பதில் ஒத்தாசையாக இருந்திருக்கிறாள்.
தண்ணீர் துளிகள் உடம்பில் அங்கங்கு மின்னியபடி சுண்டினால் ரத்தம் ஓடும் செக்க செவேல் நிறம். நல்ல சதைத் திரட்சியுடன் திமுதிமுவென சேர்ந்த சரீரம். தீர்க்கமான நாசி. பெரிய கண்கள். சராசரி உயரத்துடன் பார்க்க லட்சணமாக இருப்பாள். இதில் மோகித்து விழுந்தது போதும் இதில் மறுபடியும் ஆத்துக்காரர் விழக் கூடாது என்று கறாராக ஒன்பதோடு நிறுத்திக் கொண்டாள் அலமேலு. தன் ஆசையையும் அடக்கிக் கொண்டாள்.
அந்த சரீரம் கொஞ்சமாக கனக்கத் தொடங்கிவிட்டது. மூன்று பேர் ஓத்தாசை இல்லாமல் முடியாது. மாமியை திருப்பி நிமிர்த்தி உட்கார வைத்துச் சிரத்தையாகக் குளிப்பாட்டிய மூன்று பேரும் நெருங்கிய உறவுக்காரப் பெண்மணிகள். இரண்டு பேர் அலமேலுவை ஒத்த சரீரம். இன்னொருத்தி வசுமதி சங்கரன் ஒல்லி தேகவாகு. தம் பிடித்துக் கொண்டுதான் ரெண்டு பேருக்கும் உபகாரமாக இருக்க முடிந்தது. இதில் வருத்தம் இருந்தது. ஆனால் நிரம்ப கரிசனத்துடன்தான் செய்தாள். அலுமேலுவிற்கு வசுமதி மேல் நிறைய வாஞ்சை உண்டு. இப்போதும் ’மாமி போல இருக்க முடியுமா’ வியந்தபடி தான் செய்துக் கொண்டிருக்கும் சிருஷ்யுஷைகளை அதே வாஞ்சையுடன் கவனிப்பதுப் போலத்தான் உள்ளுக்குள் உணர்ந்துக் கொண்டிருந்தாள் வசுமதி. இரண்டாவது மாட்டுப் பெண் சுதா சாமான்களை எடுத்துக் கொடுப்பதில் ஒத்தாசையாக இருந்தாள்.
கூந்தலில் பூ வைத்து நெற்றியில் வகிடில் குங்குமம் இட்டு பச்சை வண்ணக் கூரப்புடவையில் மடிசாரும் அதற்கு மேட்சிங்கான பிளவுசம் அணிவித்து ஹாலில் படுக்க வைத்தார்கள். கன்னத்தில் திருஷ்டி பொட்டு. கழுத்தில் ரெட்டை வட தங்கத் தாலியும் அதோடு பின்னிப் பிணைந்து கொத்தாக செயின்களும் மினுமினுத்தது. மணிக்கட்டிலும் வளையல்கள் மின்னின.
இடது கை விரல்களில் இரண்டும் வலது கை விரலில் ஒரு மோதிரமும் மினுமினுத்தது. ஏற்கனவே இரண்டு கால்களிலும் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் மெட்டி அணிந்திருந்தாள். சின்ன கயிற்றால் கை கால் விரல்கள் கட்டப்பட்டு குண்டுக்கட்டாக அடங்கி ஒடுங்கி ஆழமான தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும் அலமேலுவாகவே காட்சி அளித்தாள்.
’சவக் களையிலும் மாமிக்கு எல்லாம் நன்னாதான் இருக்கு’ பார்த்துப் பார்த்துப் பரவசமான வசுமதிக்கு கூடவே மோதிரம் வளையல்களை எப்படி கழட்டப் போகிறோம் என்கிற கவலை அரித்துக் கொண்டே இருந்தது.
தலைமாட்டில் சின்னதாக காமாட்சி விளக்கு வைத்து தீபம் ஏற்றப்பட்டது. அதில் சின்னதாக சுடர் ஒளிர உட்கார்ந்திருந்த சில பேர் எழுந்து கையெடுத்து கும்பிட்டு நமஸ்கரித்தார்கள். தலை மாட்டில் மாமி ஆரம்பித்த காமாட்சி நகர் ஸ்ரீசந்திரமெளலி பஜனை மண்டலி குழு பெண்கள் மெதுவான குரலில் ஸ்லோகம் சொல்ல ஆரம்பித்தார்கள்.
சவத்திற்கு சுமங்கலி சிஷ்ருஷை செய்து ஓய்ந்துப் போய் மூன்று பேரும் காபி குடிக்க வெளியே வந்தார்கள்.
“ பெரியவா யாரையாவது கலந்தாலோசித்து செய்ய வேண்டிய பெரிய காரியம் ஆச்சே இது. நாமளா ஹேஷ்யம் பண்ணின்டு மாமிக்கு எல்லாம் பண்ணிட்டோம்’
“பரமேஸ்வரன் என்னடி இப்படி பண்றேள்னு எங்கிட்ட மொணமொணத்துட்டுப் போனான். வைத்தி மாமா போய்ட்டாரா இருக்காரான்னு வயத்துல புளிய கரச்சான்”
“ நமக்கும் எந்தத் தகவலும் இல்ல. மாமியும் ஒன்னும்
சொல்லல. வாரிசுகளும் பார்த்துண்டுதானே இருந்தா? மாமியோடவே பல வருஷமா குடும்பம் நடத்தற பெரிய மாட்டுப் பொண்ணும் ஒன்னுமே சொல்லயே? பகவான் இருக்கார். பார்த்துப்பார்”
பேசிக் கொண்டிருந்தாலும் வசுமதிக்கு உள்ளுக்குள் இன்னொரு பெரிய விஷயம் உறுத்திக் கொண்டே இருந்தது. இதை யாரிடமும் சொல்லவில்லை. வீட்டின் ஹால், பெட்ரூம், மாமி தூங்கும் இன்னொரு காத்தோட்டமான ஏசி வச்ச ரூம், மற்றும் சாமி பூஜை மாடத்தில் மாட்டப்பட்டிருந்த வைத்தியநாத அய்யர் போட்டோக்கள் சில வருடங்களாகக் காணவில்லை. மிகுந்த அதிர்ச்சியானது இருபத்தைந்து வருஷமாக ஹாலில் மாமியுடன் அய்யர் இருந்த ஜி.கே.வேல் பெரிய போட்டோவும் மாயமாகி இருந்தது.
மாமியிடம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஒரு நாள் கேட்ட போது மாமி பதிலே சொல்லவில்லை. இது தவிர மாமா தொலைந்துப் போனது பற்றிய பேச்சோ அதைப் பற்றிய கோபத்தில் அடிக்கடி எரிந்து விழுந்தோ பார்த்ததில்லை வசுமதி. மாமி கடந்து வந்துவிட்டதாகப் பெருமைப்பட்டுக் கொள்வாள்.
’இப்ப எதுக்கு வேண்டாத யோசனை மாமியோ போயாச்சு’ என்று சொல்லிக் கொண்டு அதிலிருந்து விலகி காபி குடித்துவிட்டு வாசல் வராண்டாவிற்கு வந்தாள். எதிரே வந்த பரமேஸ்வரனைப் பார்த்தும் பார்க்காத மாதிரி தலைகுனிந்துக் கொண்டு ஹாலுக்குப் போனாள்.
“தீர்க்க சுமங்கலியா காட்டுக்குக் கிளம்பறா அலுமு. யாருக்கு இது மாதிரி கொடுப்பினை வரும்… பார்த்தேளா ?” பரமேஸ்வரன் வசுமதியை ஓரக் கண்ணால் பார்த்தப்படி சங்கரன் காதில் கிசுகிசுத்தார்.
’உஸ்’ என்று சொல்லி சங்கரன் அவரை வீட்டின் பின் பக்கம் கிணத்தடிக்கு அழைத்துச் சென்று பேச்சைத் தொடர்ந்தார்.
“அலுமு என்ன செய்ய முடியும்? அவ போயிட்டா. அவ சொல்லியா செஞ்சா இவாள்ளாம்? நா போனப்பறம் அலங்கார பூஷிதையா சுமங்கலியா காட்டுக்கு அனுப்பி வைங்கோன்னு சத்யம் வாங்கின்டாளா? வேண்டப்பட்டவாளும் நம்ம மாதிரி ஒன்னும் தெரியாம பிளைண்ட் ஸ்பாட்ல இருக்கா இல்லயா ? ஏதோ காமன்சென்ஸுல உள் வாங்கிண்டு பண்ணி இருக்கா. எனக்கு குறையா தோணல”
“என்ன காமென்சென்ஸ்? யாரு கண்டா சொல்லி இருப்பா. இப்படியும் பேச்சு இருக்கு தெரியுமா? வசுமதிய கேட்ட தெரியும். வைத்யநாத அய்யர் இன்னய தேதிக்கு 85 வயசுலேந்து தொண்ணூறுக்கு மேல இருக்கும். உயிரோட இருக்கறது சந்தேகம்தான். அவர் இல்லாதப்பவே சுமங்கலி ஸ்டேட்டஸ் அனுபவச்சு இருக்காள இருக்கும். பிராணன் விட்டப்பறம் அதுக்கு வால்யூ அதிகம் இல்லையா? அலுமு அய்யர தேடி கீடி பாத்தாளோ?”
”ஒன்னு விடாமா சகலமும் பண்ணிட்டா. இவளே போலீஸ் ஸ்டேஷன் ரயில்வே ஸ்டேஷன் போஸ்ட் ஆபீஸ்னு நட நடயா நடந்து விஜாரித்து அலுத்துப் போனா. பல பேப்பர்ல போட்டோவெல்லாம் போட்டு ’திரும்பி வந்துடுங்கோ இப்படிக்கு அலமுன்னு’ பேஷா விளம்பரப்படுத்தினா. அப்பறம் விட்டுட்டா. இதெல்லாம் இந்த வயசுல சிரத்தையா செய்ய முடியுமா? ஒருத்தர் காணாம போய் ஏழு வருஷத்துக்கு மேல ஆயிட்டா அவா செத்துப் போய்ட்டதா சட்டம் சொல்றது. அதுக்காக அத பேஸ் பண்ணி டெத் சர்ஃபிட்டிகேட் வாங்கிண்டு பூவும் பொட்டும் அழிச்சுண்டு விடோ ஆக முடியுமா? நன்னாதான் இருக்குமா?”
“இது யூனிக் கேஸ். இதுக்கு முன் மாதிரி சாஸ்தரத்துல இருந்தா அத ஃபாலோ பண்ணலாம் வேண்டப்பட்டவா. இல்லேன்னா ஏஐயை கிட்ட கேட்கலாம்” இளித்தார் பரமேஸ்வரன்.
“சொல்றேன்னு தப்பா நெனைக்காதே. ஒன்னு செய். நீ சும்மா 10 வருஷம் கண் காணாத இடத்துக்குப் போய் தொலஞ்சு போ. உன்னோட வொய்ஃப்க்கு எல்லா வியாதியும் படுத்தி எடுக்கிறது. தட்க்னு வொய்ஃப் காலமாயிடறா? நீ வந்து பாரும். என்ன நடக்கறதுன்னு. இத பென்ச் மார்க்கா எடுத்துக்கலாம்”
“கரெக்டுதான். கண்காணாத இடம் ஒன்ன சஜஸ்ட் பண்ணு. நானும் ரொம்ப நாளா இத டிரை பண்ணின்டுதான் இருக்கேன். ஆனா சம்சார பந்தத்த விட முடியலயே ?” சிரித்தார்
“உன்னோட பேசி மாளாது. மாமி நீ போனதக்கப்பறம் போய் இருக்கலாம்”
”வைத்தியநாதர் அய்யர் தொலஞ்சு போய் 40 வருஷம்னு வச்சுண்ட அதுல பதினைஞ்சு வருஷம் அவர் ஆயுசுக்கு டிஸ்கவுண்ட் கொடுத்து தள்ளிட்டு மீதி இருவத்தஞ்சு வருஷம் மாமிக்கு சுமங்கலி போனஸ் ”
“பரமேஸ்வர கொஞ்சம் கூட நன்னால்ல இது. மாமியோட பாவத்தக் கொட்டிக்காத ”
பரமேஸ்வரன் ஏதோ பதில் ஆரம்பிக்க சங்கரன் ‘போறும்’ என்று அவர் வாயை மூடினார். இருவரும் மெளனமாகி மீண்டும் ஹாலுக்கு வந்தார்கள்.
ஹாலில் அமர்ந்த இருந்தவர்களின் முகத்தில் சோகத்தின் அடுத்தக் கட்டம் தெரிந்தது. அழுதழுது சிலருக்கு முகம் வீங்கி கண்ணுக்கு கீழே கருப்போடி இருந்தது. அங்கங்கு விசும்பல்கள் ஆரம்பிக்க அலமேலு மாமியின் பூத உடல் காட்டிற்கு எடுத்துச் செல்ல ஆயுத்தமானது. மகள்கள் மகன்கள் பேரன் பேத்திகள் தொடர்ந்து வர வீட்டின் கேட் அருகே சிமெண்ட் பிளாட்பாரத்தில் மூங்கில் பாடை வைக்கப்பட்டு வாய்க்கரிசிப் போட முகம் மட்டும் திறந்து வைக்கப்பட்டிருந்தது.
பெண்கள் சில பேர் துக்கம் தாளாமல் புடவைத் தலைப்பில் வாயைப் பொத்திக் கண்களில் நீர் கோத்தப்படி வாய்க்கரிசிப் போட்டு பிரதட்சிணம் வந்தார்கள். அதில் பூர்ணேஸ்வரி மாமியும் கண்களில் நீர் கோத்து லேசான விசும்பலை அடக்கி வாய்க்கரிசி போட்டு விட்டு பிரதட்சணம் வந்தாள். மாட்டுப் பொண் அகிலாதான் வாய்க்கரிசி போடும் போது அடக்க மாட்டாது கேவினாள். ரசம் சாத வாயுடன் பிராணன் விட்டு மாமி சரிந்த ஷணம் ஞாபகம் வந்து மனம் ரணமாகியது.
அலுமேலு வாய்கொள்ளாமல் பெற்றுக் கொண்ட ஈர அரிசி பல் உதடுகளில் கொத்தாகவும் கன்னங்களில் சிதறியும் விழுந்து அலுமு அப்பட்டமான சவமானாள்.
கூடி இருந்தவர்கள் ’கோவிந்தா … கோவிந்தா…’ கூச்சலாக ஓலம் எழும்ப அலுமேலு வைத்தியநாத அய்யர் மாமியின் உடல் அமரர் ஊர்தி வேனில் ஏற்றப்பட்டு கடைசி யாத்திரைப் புறப்பட்டது.
பெண்கள் வாசல்வரை கொஞ்ச தூரம் போய் நமஸ்கரித்துவிட்டுக் கலைந்தார்கள். பூர்ணேஸ்வரி மாமி கண்களைத் துடைத்துக் கொண்டாள். தலைக் குனிந்தவாறு விடுவிடுவென மாடிக்குப் போய் தன் கைப்பையை எடுத்துக் கொண்டு செருப்பை அணிந்தவாறு வாசல் கேட்டிற்கு வந்தாள். அதே நேரத்தில் பளபள மாருதி ஜென் கார் கேட்டிற்கு வந்து நின்றது. அதில் ஏறி தான் தங்கி இருந்த ஏர்போர்ட் அருகே இருந்த ஹோட்டலை அடைந்தாள்.
மாமி குளித்துவிட்டு பாத்ரூமை விட்டு வெளியே வந்த அதே சமயத்தில் பேத்தி மாலினிகிருத்திகா ரூமிற்குள் நுழைந்து ஜீன்ஸ் பாக்கெட்டிலிருந்து கார் சாவியை டேபிளில் வைத்து டி ஷர்டை கழட்டி விட்டு வெள்ளை வெளீர் குர்த்தாவுக்கு மாறிக் கொண்டிருந்தாள்.
“பாட்டி….! அலமேலு மன்னிக்கு எல்லாம் நன்னா முடிஞ்சுதா? ஹெல்த கேர் பண்ணாம தம் புடிச்சு ரிஸ்கா டெல்லிலேந்து சென்னைக்கு வந்த. திருப்தியாச்சா? அடையாளம் தெரிஞ்சுண்டாளா?”
“போ… ஏக திருப்தி…! . மன்னி மாதிரி வருமா? மன்னிக்கு என்ன குறைச்சல். ஒரு சைடு மாமியோட கொழந்தேள்ளாம் இன்னொரு பக்கம் உடன் பிறந்தவாள்ளாம்.. வாசல்ல கூட்டமான கூட்டம். வாய்க்கரிசி போட்டு அனுப்சாச்சு. பெரிய மாட்டு பொண் அகிலா அடையாளம் கண்டுண்டா. முதல் ரெண்டு பொண்களுக்கும் கூடஅடையாளம் தெரிஞ்சுடுத்து. பத்து & பதிமூணாம் நாள் சுபஸ்வீகாரம் காரியத்துக்கு ஜாடை காட்டி வரச் சொன்னா……” சொல்லி நிறுத்தி மெலிதாகப் புன்னகைத்துவிட்டு
”எந்த குறையும் இல்லாம காட்டுக்குப் போனா…. ஆனா இருந்தாலும் மாமிக்கு…….ஓஓஓ பகவானே…” ஆச்சர்யமும் வருத்தமும் கலந்தக் குரலில் சொல்லி நிறுத்திவிட்டு ஒரு நிமிடம் கழித்து மீண்டும் தொடர்ந்தாள் பூர்ணேஸ்வரி.
”இவ்வளவு பிடிவாதம் ஆகாது அலமுவுக்கு. அடேங்கப்பா அப்படி ராட்ச்ச பிடிவாதம். நேக்கு உறுத்திண்டே இருந்தது. என்ன இருந்தாலும் வைத்தி என்னோட கூட பொறந்த மூத்த அண்ணா ஆச்சே? விட்டுக் கொடுக்க முடியுமா? முதல்ல போக வேண்டாம்னு தோணித்து. நீ சொன்ன மாதிரி எதுக்கு உடம்ப வருத்திண்டு தம் புடிச்சு போனம்னு. அந்த உறுத்தலே பாவம்டி அலுமுன்னு கிளம்புடின்னு சொல்லிடுத்து”
”ஓஓஓ பகவானே பிடிவாதமா? மாலினி பெரிதாக சிரித்தப்படி “கொய்ட் இண்டரஸ்டிங் பாட்டி. எதுக்கு பிடிவாதம் பிடிச்சா அலுமு மன்னி?”
”அந்த கத தெரியாது உனக்கு. நீ அப்ப பொறந்துட்டய தெரியல. அலுமு மாமி காசிக்கு வந்திருக்கா ஒரு குரூப்போட. அப்போ என்னோட இன்னொரு அக்கா கல்யாணி அலமுவ பார்த்துட்டு ” மன்னி அண்ணா வைத்தி இங்கதான் படுத்த படுக்கைய இருக்கான். டாக்டர் நாள எண்ணிட்டா. பல தகவல் சொல்லியும் வரல. உங்க கோபம் தெரியர்து. வைத்தி அடிச்ச கூத்து. ரெண்டாவது பொண்டாட்டிய வாழ்ந்த அந்த பொம்னாட்டியும் இப்ப இல்ல. உங்காத்து கொழந்தேளும் உங்களுக்கு பயந்துட்டு வர மாட்டேங்கறா. உங்க பெரிய பையன்தான் அமெரிக்காலேந்து 10 வருஷத்து முன்னாடி பாத்துட்டுப் போனான். அது உங்களுக்குத் தெரியாது. இப்ப யாருமே இல்லாத அனாதை ஆயிட்டான். உங்கள பார்க்கனமுனு ஆசப்படறான். அதான் இவ்வளவு தூரம் வந்துட்டேள். தொட்டு தாலிகட்டின ஆம்படையான பார்த்துட்டு போயிட்டேள்னா வைத்தியோட ஆத்மா சாந்தி அடைஞ்சுடும்னு பல தடவ கைய புடிச்சி கெஞ்சி இருக்கா. மாமி உம்னு மூஞ்சி வச்சிண்டு கேட்டாளம். பதிலே சொல்லயாம். ஆனா மாமி திரும்பிக் கூட பார்க்கல. ”
“ஓ காட்… அலுமு மாமி கெத்து லேடி. சேம் டைம் ஷாக் டூ மி பாட்டி”
“அடுத்த விஷயம்தான் இன்னும் ஷாக்கிங்”
“அன்னிக்கு நைட் வைத்தி காலமாயிட்டான். அந்த நியூசும் அலுமுவுக்கு போச்சு. வருவான்னு ரொம்ப நேரம் வச்சுட்டு
கல்யாணி ஆத்துக்காரர் பொறுப்பேத்துண்டு தகனம் பண்ணிட்டார். அவ வரவே இல்ல. அடுத்த நாள் அவளுக்கு அனுப்பிச்ச சாம்பல் சொம்பும் திரும்பி வந்துடுத்து”
”ஓ காட் திஸ் இஸ் ரியல்லி ரியல்லி ஷாக்கிங்? அன்பிலிவபிள் அலுமு மாமி. பெமினிஸ்ட் ராட்ச்சசி. ஐ லவ் ஹெர் பாட்டி”
000

கே.ரவிஷங்கர்
இவர் சென்னை அண்ணா நகரில் வசிக்கிறார்.பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்து பிறகு விருப்ப ஓய்வுப் பெற்றவர்.90களில் கணையாழி,தினமணி கதிர்,கல்கி,சாவி,புதிய பார்வை,கலைமகள் போன்ற அச்சு ஊடகப் பத்திரிக்கைகளில் 20 சிறுகதைகள் எழுதி உள்ளார்.தான் சிலாகித்த இணைய இதழ் சிறு கதைகளை தன் முகநூல் பக்கத்தில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.இதுவரை 50க்கும் மேற்பட்ட கதைகள் பகிர்வில் உண்டு.பொழுதுப் போக்காக இணையத்தில் பெயர் ஆராய்ச்சி செய்து வருகிறார்.
நூல் விமர்சனம்: தீர்க்க சுமங்கலி பவ ஆசிரியர்: திரு. கே. ரவிஷங்கர்
இந்த அக்டோபர் மாதம், ‘நடுகல்’ இணைய இதழில் திரு. கே. ரவிஷங்கர் எழுதிய ‘தீர்க்க சுமங்கலி பவ’ என்ற சிறுகதையைப் படித்தேன். இக்கதையைப் படிப்பதன் மூலம் நாம் ஒரு நாற்பது அல்லது ஐம்பது வருடங்கள் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.
கதையின் நாயகி திருமதி அலமேலு. இவருடைய கணவர் வைதியநாதன் அய்யர். அலமேலுவுக்கு சிறு வயதிலேயே திருமணம் நடந்தேறியது. திருமணத்திற்குச் சான்றாக வரிசையாக ஒன்பது பிள்ளைகள். ஏனோ, கணவர் வைதியநாதன் திடீரென்று அலமேலுவை விட்டுப் பிரிந்து காணாமல் போய்விடுகிறார்.
ஒற்றை ஆளாக நின்று அலமேலு மாமி, தன் ஒன்பது பிள்ளைகளையும் ஆளாக்கி, வளர்த்து ஒரு நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்திருக்கிறார். கணவனைப் பிரிந்த அலமேலு, சுமார் முப்பது நாற்பது ஆண்டுகள் வாழ்ந்து, பிறகு சிவலோகப் பதவியை அடைகிறார்.
அவரது இறுதிச் சடங்கு எப்படி நடந்தது, அதில் கலந்து கொண்டவர்கள் அலமேலுவைப் பற்றி என்னென்ன பேசினார்கள் என்பதை எழுத்தாளர் நேர்த்தியாகத் தன் எழுத்தின் மூலம் விவரித்திருப்பார். அந்த காலத்தில் கணவன்மார்கள் எப்படி இருப்பார்கள் என்பதையும், அதாவது, ஒரு துரும்பைக்கூட அசைக்காமல் வீட்டில் எல்லா வேலையையும் பெண்களே செய்ய வேண்டும் என்பதையும் நன்றாக எடுத்துரைத்திருப்பார்.
ஒரு சுமங்கலி இறந்த பிறகு அவளுக்குச் செய்யும் இறுதிச் சடங்குகளை எல்லாம் ஒன்று விடாமல் கூறியிருப்பார். அந்தக் காலத்துக் கட்டைகள் தொண்ணூறு வயது வரை வாழ்வார்கள் என்பது நாம் அறிந்ததே. அதேபோல், அக்காலப் பெண்களின் மன வலிமையை எழுத்தாளர் திரு. கே. ரவிஷங்கர் அவர்கள் அழகாக எடுத்துச் சொல்லியிருப்பார்.
கதையின் திருப்பத்தைக் கடைசியில் வைத்திருக்கிறார். யாரும் இப்படி நடந்திருக்கும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்பதை இங்கு இவர் கையாண்டிருப்பார். அதாவது, ஊரே அலமேலு மாமி சுமங்கலியாக சிவலோகப் பதவியை அடைந்துவிட்டாள் என்று பேசிக்கொண்டது. ஆனால், கதையின் கடைசியில்தான் தெரியவருகிறது, அலமேலு ஓர் விதவை என்று.
பிறகு, ஏன் அவள் விதவைக் கோலம் ஏற்கவில்லை என்பதற்கு, அவளது பக்கத்தில் இருக்கும் ஆணித்தரமான நியாயத்தை எழுத்தாளர் எடுத்துரைத்திருப்பார்.
ஒன்பது பிள்ளைகள் பெற்ற பிறகு, திடீரென்று சொல்லிக்கொள்ளாமல் வைதியநாதன் எங்கோ போய்விட, ஒருகட்டத்தில் அலமேலுவிற்கு ஒரு தகவல் தெரியவருகிறது. அதாவது, வைதியநாதன் படுத்த படுக்கையாகக் காசியில் இருக்கிறான் என்பதுதான் அது. காசியில் தங்கி, இன்னொருத்தியை இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்துகொண்டு அங்கே காலத்தைக் கடத்தி வந்திருக்கிறார். இதைக் கேட்ட அலமேலு, காசி வரை சென்றும் தனது கணவனைப் பார்க்கவில்லை. இந்தச் செய்தி, தனது கணவனின் தங்கை மூலம்தான் அவளுக்குத் தெரியவருகிறது. ஆனால், அவள் தனது கணவனின் கடைசி நாட்களில் கூட அவரை ஒரு தடவைகூடப் பார்க்கவில்லை. பிறகு அவளது கணவனும் இறந்துவிடுகிறார்.
அந்தச் செய்தியை அவள் கட்டுக்கோப்பாகத் தன்னுடனே வைத்திருக்கிருக்கிறாள். “ஊர் மக்களுக்கு என் கணவன் ஓடிப்போனவன்; ஓடிப்போனவனாகவே இருந்துவிட்டுப் போகட்டும். நான் சுமங்கலியாகவே இருந்துவிட்டுப் போகிறேன்” என்று அவளாக எடுத்த முடிவைக் கடைசிவரை காப்பாற்றியிருக்கிறாள்.
சிறந்த இந்த கதையை அளித்த எழுத்தாளர் திரு. கே. ரவிஷங்கர் அவர்களுக்கும், இதனைப் பிரசுரம் செய்த ‘நடுகல்’ இணைய இதழ்க் குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
-பாலமுருகன். லோ