ரம்யா, மகப்பேறு மருத்துவர் ஒருவரை சந்திக்க வரிசையில் காத்துக் கொண்டிருந்தாள். அவளைச் சுற்றி இருந்த கர்ப்பிணிப் பெண்களையும், சில பெண்களுடன் வந்திருந்த  குழந்தைகளையும் ஏக்கத்துடன் பார்த்தபடி அமர்திருந்தாள்.

வீட்டிற்கு வந்திருந்த உறவினர் ஒருவர் தனது இரண்டு வயது பேத்தியை அழைத்துக் கொண்டு வந்திருந்தார். அந்த குட்டியை ரம்யா கொஞ்சிக் கொண்டிருந்ததைப் பார்த்து, “உனக்கு குழந்தைனா எத்தனை இஷ்டம்? அதுக்குத்தான் காலாகாலத்துல கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணும்னு பெரியவங்க சொல்வாங்க!” என்றார்.

“வாஸ்தவம் தான் அங்கிள், இந்த வருஷம் எப்படியாவது கல்யாணம் பண்ணிக்கப்போறேன். ஏற்கனவே நான் பிளான் பண்ணினதை விட கொஞ்சம் லேட் ஆயிடுச்சு… பரவால்ல,” என்றாள் ரம்யா.

“கொஞ்சம் இல்ல ரம்யா, ரொம்ப லேட் ஆயிடுச்சு. நீ நினைச்சா மாதிரி எல்லாம் உடனே கல்யாணம் நடந்துடாது. கடவுள் மனசு வெக்கணும். நல்ல வரன எல்லாம் ஏதோ காரணம் காட்டி நீ தட்டிக் கழிச்சுண்டே இருந்துட்ட, இப்போ உனக்கேத்த வரன் தேடறது ரொம்ப கஷ்டம்,”  என்று தலையை அசைத்தபடி கூறினார் உறவினர்.

“மேடம், அடுத்து நீங்க தான்,” என்ற செவிலியரின் குரல் கேட்டு நிகழ்காலத்திற்கு திரும்பினாள். “டாக்டர், எனக்கு வயசு முப்பத்தி ரெண்டு. இன்னும் கல்யாணம் ஆகல. எனக்கு குழந்தைன்னா ரொம்ப ஆசை. இப்போ கல்யாணம் பண்ணிக்கிட்டா உடனே குழந்தை பொறக்குமா?” என்றாள் சற்று படபடப்பாக ரம்யா.

அமைதியாக ரம்யாவை கூர்ந்து கவனித்த மருத்துவர், “ரம்யா, நீங்களே கூகிள் பண்ணி இதற்கான விடையையும் வெச்சிருப்பீங்களே?” என்றார்.

“அதுக்கில்ல டாக்டர், இப்போ எல்லாம் ஏதேதோ ஸ்பெஷல் ஸ்கேன் எல்லாம் இருக்கே, ஒரு முறை என்னை டெஸ்ட் பண்ணி எனக்கு குழந்தை பிறக்க எந்த பிரச்னையும் இல்லன்னு நீங்க ஒரு சர்டிஃபிகேட் கொடுத்தா நான் திருப்தி அடைவேன்.” என்றாள் ரம்யா.

“திருமணம் ஆகாத பெண்களுக்கு இது போன்ற எண்ணங்கள் வருவது இயல்பு தான். என்ன கேட்டா, உங்களுக்கு பீரியட்ஸ் ரெகுலரா ஆனா போதும். இப்போதைக்கு இந்த டெஸ்ட் எல்லாம் தேவை இல்லன்னு சொல்லுவேன். வேணும்னா ஒரு சைகாலகிஸ்ட் கிட்ட ரெண்டு மூணு செஷன்ஸ் பிளான் பண்ணுங்க, அவங்க உங்களை கைடு பண்ணுவாங்க.”

“அதெல்லாம் வேண்டாம் டாக்டர், ஐ ஆம் ஆல்ரைட். டெஸ்ட்ஸ் மட்டும் ரெகமெண்ட் பண்ணுங்க. எனக்கு என் திருப்திக்காக ஒரு சர்டிஃபிகேட் வேணும்.” என்றாள் தீர்மானமாக ரம்யா.

இந்த சந்திப்பு முடிந்து ஆறு ஆண்டுகள் முடிந்த நிலையில், ரம்யாவின் குடியிருப்பில் வசிக்கும் காயத்ரி என்ற பெண் அவள் வீட்டிற்கு வந்தாள்.

“ஆண்டி, கொலு வெச்சிருக்கேன், அவசியம் நீங்களும் ரம்யாவும் வந்து தாம்பூலம் வாங்கிக்கணும். ரம்யா வீட்ல இருக்காளா?” என்று வீட்டை தேடியபடி ரம்யாவின் அம்மாவிற்கு குங்குமம் அளித்தாள் காயத்ரி.

“உள்ள தான் இருக்கா, இப்போல்லாம் யாரு கிட்டேயும் சரியா பேசறது இல்ல. யார் வீட்டுக்கும் போறதும் இல்ல. எப்போதும் உர்னு உக்கார்ந்து ஆப்பீஸ் வேலை தான் பண்றா. நீயே போய் அவளை கூப்பிடு” என்று ரகசியமாக சொல்லி ரம்யா இருக்கும் அறைக்கு அவளை போகும்படி கண்ஜாடை செய்தார்  அம்மா.

ரம்யாவும் காயத்ரியும் ஒத்த வயதுடைய பெண்கள். எட்டு வருடம் முன்பு அந்த குடியிருப்புக்கு இருவரும் குடியேறிய சமயத்தில் உற்ற தோழிகளாக இருந்தனர். ரம்யா, சொந்த வீடு வாங்கி பெற்றோருடன் குடிபெயர்ந்திருந்தாள். காயத்ரி, கணவர் மற்றும் இரு சிறிய குழந்தைகளுடன் குடிபெயர்ந்திருந்தாள். ஆனால், இப்போதெல்லாம் ரம்யா அவளைச் சுற்றி ஒரு சுவர் எழுப்பிக் கொண்டாள். காயத்ரியுடன் சரிவர பேசுவதில்லை.

“ஹை ரம்யா! என்ன ரொம்ப பிஸியா? உன்ன பிடிக்கவே முடியறது இல்ல?” என்றபடி அவள் அறைக்குள் நுழைந்தாள் காயத்ரி.

ரம்யாவிற்கு காயத்ரியை பார்த்த உடனே எரிச்சல் ஏற்பட்டது. நெற்றி நிறைய குங்குமமும், தலை நிறைய மல்லிகைப்பூவும், தழைய தழைய பட்டுபுடவையும், கையில் வெள்ளிக் குங்குமச் சிமிழுமாய் வந்த அவளைப் பார்த்து, தன்னிடம் இல்லாதது எல்லாம் அவளிடம் இருக்கிறதே என்று அவள் மனதில் அசூயை தீயாய் கிளம்பியது. அதனை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு சிரித்தாள் ரம்யா.

“அதெல்லாம் இல்ல காயத்ரி. வா, உட்கார்” என்று அருகில் இருந்த நாற்காலியை சுட்டிக்காட்டி, அவளோடு பேசுவதற்கு எளிதாக அவளைப் பார்த்து அமர்ந்துகொண்டாள்.

“நல்லா இருக்கியா? நான் ஃபோன் பண்ணினா எடுக்க மாட்டேங்குற, மெசேஜீக்கும் ரிப்ளை இல்ல, வெளியில என்னை பார்த்தாலும்  அவாய்ட் பண்ற… என் மேல ஏதாவது கோபமா?” என்றாள் தயங்கியபடி காயத்ரி.

“சே… சே… உன் மேல என்ன கோபம் எனக்கு?  ஆப்பீஸ் வேலைல கொஞ்சம் பிஸியா இருக்கேன் அவ்வளவு தான்.” என்று மழுப்பினாள் ரம்யா.

“கண்டிப்பா அது மட்டும் தான் காரணமா? ஆண்டிய நேத்து வாக்கிங் போன போது பார்த்தேன். உன்ன நினைச்சு ரொம்ப கவலை பட்டாங்க!”

“ஓ! இதெல்லாம் அம்மா ஏற்பாடு தானா?” என்று கோபமாக கேட்டுவிட்டு ஏதேதோ முணுமுணுத்தாள் ரம்யா. அவள் பெரிய மனப்போரட்டத்தில் இருக்கிறாள் என்று அவளது கலங்கிய கண்களும் குனிந்த தலையும் கூறின. ரம்யாவே மீண்டும் பேசுவதற்காக அமைதியாக காத்திருந்தாள் காயத்ரி.

“நேத்து அம்மா என்ன பண்ணினாங்க தெரியுமா? விவாகரத்து ஆன பையன் ஒருத்தர பொண்ணு பார்க்கக் கூப்பிடட்டுமான்னு கேட்டாங்க! என்ன பார்த்தா எப்படி தெரியுது அவங்களுக்கு? இதுவே விவாகரத்து ஆன ஒரு பொண்ண அவங்க பையனுக்கு முதல் தாரமா கல்யாணம் பண்ணி வைப்பாங்களா?” என்று சீறினாள் ரம்யா. காயத்ரி அமைதியாக இருப்பதை பார்த்து விட்டு மேலும் தொடர்ந்தாள்…

“அவங்களுக்கு என்னை எவன் தலைலியாவது  கட்டிட்டு அவங்க புள்ள வீட்டுக்கு அமெரிக்காவுக்கு போயிடணும். அங்க பேரன் பேத்தியோட விளையாடணும். என்ன இங்க தனியா விட்டுட்டு அங்க போனா ஊர் உலகம் தப்பாப் பேசும். அதான் உன்னை தூது விட்டிருக்காங்க! போன வருஷம் கூட ரெண்டு மாசம் அமெரிக்கா போயிட்டு வந்தாங்க, இந்த வருஷமும் போகணும்னு ஆசை, நானா தடுக்கறேன்?” என்று உச்சஸ்தாயியில் கத்தினாள் ரம்யா.

“நீ என்ன அமைதியா இருக்க? அப்போ அம்மா செஞ்சது தப்பில்லன்னு உனக்கும் தோணுதா? ஆமாம், இந்த அக்கம்பக்கத்துக் காரர்களுக்கு என்ன தான் வேலை… ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல? எப்போ கல்யாணம்? ஜோசியர் என்ன சொல்றார்? எப்போதும் ஒரே வம்பு! உங்கள மாதிரி ஆட்களால தான் நான் வீட்டை விட்டே வெளியில அதிகம் போறதில்ல. நான் கல்யாணம் பண்றேன்! பண்ணிக்கல! உங்களுக்கு என்ன வந்துது? போன வாரம் அம்மாவும் அப்பாவும் வெளியூர் போயிருந்தாங்க. துணைக்கு என்  மாமா என்னோட வீட்ல இருந்தார். மாடி வீட்டு நாயி ஜெகதீசன், ‘வீட்டுல ஆம்பள இருக்காருன்னு காட்ட பலகணியில வேஷ்டி மாட்டி வெச்சிருக்கியான்னு?’ கேட்டான். பாஸ்டர்ட்! எவ்வளவு பெரிய வார்த்தை அது? இத்தனைக்கும் அந்த ஆளு எங்க அப்பாவோட பிரெண்டு. அவன் கேட்டது தப்பில்லையாம், ஆனா, பதிலுக்கு நான், ‘உன் வேலைய பார்த்துட்டு போடான்னு,’ சொன்னது தப்பாம். எங்க அப்பா சொல்றார். எப்படி இருக்குப்பாரு உலகம்” என்று கத்தித்தீர்த்த ரம்யா உடைந்து போய் ஓ என்று அழ ஆரம்பித்தாள்.

காயத்ரி ரம்யாவினுள் இருந்த ஆற்றாமையையும் அவள் அனுபவித்த அவமானங்களையும் கேட்டு சில நொடிகள் ஸ்தம்பித்துப் போனாள். ரம்யாவை ஆரத் தழுவிக்கொண்டு அவள் அழுது ஓயும் வரை பொறுமையாக காத்திருந்தாள்.

“நான் உன் கல்யாணத்தைப் பத்தி எதுவுமே கேக்கல. நீதான் இத்தனை நேரம் அதை பத்தியே பேசிட்டு இருந்த” என்று மெதுவாக ஆரம்பித்தாள் காயத்ரி. “வாழ்க்கையில எல்லாம் நம்ம பிளான் பண்ணினா மாதிரி நடக்கறதில்ல. எனக்குத் தெரியும் உனக்கு குழந்தைன்னா ரொம்பப் பிடிக்கும். உனக்கு கல்யாணம் பண்ணிக்கவும் ஆசைன்னு தெரியும். சில சமயங்களில் நீ ரொம்ப யோசிக்கற… அரேன்ஜூடு மேரேஜ்ல சில சிரமங்கள் இருக்கு. முகம் தெரியாத ஒரு ஆணை  ஒரு குருட்டு நம்பிக்கைல கல்யாணம் பண்ணிக்கணும். அப்படிப் பார்த்தா, லவ் மேரேஜ்லயும் கூட ஒருத்தர நீ முழுசா புரிஞ்சுக்க முடியாது. இவ்வளவு ஏன்? எனக்கு கல்யாணம் ஆகி பதினான்கு வருஷம் ஆயிடுச்சு, இன்னும் சண்டை போட்டுட்டு தான் இருக்கோம். ‘ஹாப்பிலி எவர் ஆப்ட்டர்’ என்பது கதைகளுக்கு மட்டும் தான் பொருந்தும்.” என்றாள்.

“அப்போ எனக்கு வரப்போகும் கணவனை பத்தி எனக்கு எதிர்பார்ப்பே இருக்கக்கூடாதுன்னு சொல்றியா?” என்றாள் ரம்யா ஏமாற்றத்துடன்.

“எதிர்பார்ப்பு கூடாதுன்னு சொல்லல, குறைச்சுக்கோன்னு சொல்றேன். உனக்கு முப்பத்தி எட்டு வயசு ஆகுது, அதுதானே நிதர்சனம்? அப்போ நீ சில சமரசங்கள் செய்யறது நல்லது. விவாகரத்து ஆனவங்க எல்லாரும் கெட்டவங்க இல்ல. அது அவங்க சூழ்நிலையைப் பொறுத்தது. விவாகரத்து ஆன ஒருத்தர கல்யாணம் பண்ணிக்கறது தப்பில்ல என்பது என் அபிப்பிராயம். என் அபிப்பிராயம் மட்டும் தான். முடிவு உன் கையில் தான் இருக்கு. அம்மாவும் அவருக்கு ஒரு சான்ஸ் நீ கொடுத்தா நல்லா இருக்கும்னு தான் நினைக்கிறாங்க. ”

“உனக்கென்ன, உனக்கு எல்லாம் காலாகாலத்துக்கு ஆயிடுச்சு! நீ இப்படி தான் பேசுவ. உனக்கு என் வலியும் வேதனையும் என்னிக்கும் புரியாது.”

“கரெக்ட்! புரியாது தான். ஆனா, ஒரு வேளை நான் உன் நிலையில இருந்திருந்தேன்னா கண்டிப்பா அப்படிதான் யோசிச்சு இருப்பேன். நீ சொன்னா கோச்சுப்ப, இருந்தாலும் சொல்றேன், எனக்கு கல்யாணமே ஆகாட்டி கூட நான் ரொம்ப வருத்தப்பட மாட்டேன். எனக்கு என் சந்தோஷம் தான் முக்கியம். அடுத்தவங்க நினைக்கறத நினைச்சு ரொம்ப மனச குழப்பிக்க மாட்டேன். இந்நேரத்துக்கு ஒரு பக்குவத்துக்கு வந்திருப்பேன்.

அதோட இப்போ உலகம் நிறைய மாறிடுச்சு. எனக்கு தெரிஞ்சே என் ப்ரெண்ட் ஒருத்தன், கல்யாணமே வேண்டாம்னு சொன்ன ஒருத்தன், விவாகரத்து ஆன ஒரு பொண்ண, பத்து வயசு குழந்தையோட கல்யாணம் பண்ணிக்கிட்டான். நீ கூட இந்த மாதிரி கதைகள் கேள்வி பட்டிருக்கலாம். உன் சிந்தனைக்களத்தை விசாலமா மாத்திக்கோ, வாழ்க்கை ரொம்ப அழகா தெரியும்.”

“உன் பிரச்சனையே இது தான். உனக்கு அடுத்தவங்க கஷ்டம் பெருசா தெரியறது இல்ல. கலங்கிப் போய் உட்காராத! மூவ் ஆன்! அடுத்து என்னன்னு பாரு! இதுக்கு இது தான் தீர்வுன்னு நீ அதை ரொம்ப சாதாரணமா கடந்து போயிடற. நான் அந்த மாதிரி கிடையாது. ஒரு முறை உடைந்து போயிட்டா மறுபடி எழ, அந்த ஏமாற்றத்தில் இருந்து மீள ரொம்ப நேரம் ஆகுது.”

“என்ன பண்ண சொல்ற? எனக்கு ரெண்டு ஆப்ஷன்ஸ் இருக்கு, ஒண்ணு, உன் கூட சேர்ந்து பாவம் நீன்னு அழலாம், இல்லாட்டி மோதிப்பாரு, அடிபடும், ஆனா உடைஞ்சுபோயிட மாட்டேன்னு உன்ன ஊக்கப் படுத்தலாம். நான் ரெண்டாவது ரகம். எனக்கு ஒரு மூலையில உட்கார்ந்து இழந்ததை நினைச்சு அழ பிடிக்காது.

சரி, நெறைய அட்வைஸ் பண்ணிட்டேன். நாளைக்கு ஒழுங்கா வீட்டுக்கு கொலு பார்க்க வந்து சேரு. இந்த அழுதுவடியர பேண்ட் எல்லாம் போடாத, புடவை கட்டிட்டு வா!” என்று ரம்யாவை செல்லமாக மிரட்டி விட்டு கிளம்பினாள் காயத்ரி.

இந்த உரையாடல் நடந்து சில நாட்களுக்குப் பின் குடியிருப்பின் அடி தளத்தில் நடை பயிற்சி செய்துகொண்டிருந்தாள் ரம்யா. அப்போது ஆம்புலன்சிலிருந்து காயத்ரி தனது கணவரை சக்கர நாற்காலியில் இறக்குவதை கவனித்தாள். பின்னாடியே மூட்டை முடிச்சுகளை இறக்கிக்கொண்டு காயத்ரியின் மாமியாரும் இறங்கினார். ரம்யா, ஓடிச்சென்று, “ஆண்ட்டி, என்ன ஆச்சு அவருக்கு?” என்றாள் பதற்றத்துடன்.

“அத ஏன் கேக்கற! அவனுக்கு ஆக்ஸிடென்ட் ஆயிடுச்சு. காலுல கம்பி வெச்சு பெரிய ஆப்பரேஷன் பண்ணியிருக்கு. எல்லாம் போறாத வேளை” என்று தலையில் அடித்துக்கொண்டார் அவர். 

மின்தூக்கி அருகே மாமியாருக்காக காத்திருந்த காயத்ரி ரம்யாவைப் பார்த்து எப்போதும்போல முகமலர்சியுடன் கையசைத்தாள். “இவ ஒருத்தி எப்பப்பாரு சிரிச்சுட்டு, புருஷனுக்கு சர்ஜரி ஆகியிருக்கு, இந்த பைத்தியம் ஆஸ்பத்திரியில இருக்குற எல்லாருக்கும் போயி ஆறுதல் சொல்லிட்டு இருக்கா! என்னால இவள புரிஞ்சுக்கவே முடியல,” என்று முணுமுணுத்துக் கொண்டே  மின்தூக்கியை நோக்கி நடந்தார் மாமியார். காயத்ரியின் சிரித்த முகத்தைப் பார்த்த ரம்யாவின் முகத்திலும் ஓர் தெளிவு பிறந்தது.

000

மஞ்சுளா சுவாமிநாதன் :

நான் முதலில் ஓர் வாசகர். எனக்கு சமூகக் கதைகள் மற்றும் கட்டுரைகள் படிப்பது மிகவும் இஷ்டம். மூன்று ஆண்டுகள் ‘அடையார் டைம்ஸ்’ என்ற ஆங்கில செய்தித் தாளில் துணையாசிரியராக  பணி புரிந்தேன். மங்கையர் மலர் மின் இதழிலும் சில காலம் பணியாற்றினேன்.  வாஸந்தி, ஜெயகாந்தன், சிவசங்கரி, ரசவாதி, எஸ்.ரா ஆகியோரின் எழுத்துகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டு இப்போது தமிழில் சிறுகதைகள் மற்றும் குறுநாவல்கள் எழுதி வருகிறேன். மங்கையர் மலர், கல்கி, அமுத சுரபி , கலைமகள், குவிகம் மின்னிதழ், இலக்கியபீடம், வாரமலர், ராணி ஆகிய இதழ்களில் எனது கதைகள் மற்றும் கட்டுரைகள்  பிரசுரம் ஆகி உள்ளது. தொடர்ந்து தற்கால சமூகப் பிரச்சனைகள், வாழ்வியல் மாற்றங்கள் குறித்து கதைகள் எழுதவேண்டும் என்பதே என் ஆசை.

மற்ற பதிவுகள்

2 thoughts on “எது நிதர்சனம்?

  1. இக்கதையானது, முதிர்கன்னிகளின் திருமண ஏக்கத்தை, ஆசையை, எதிர்பார்ப்பைத் தெளிவாக விளக்கும் ஒரு சிறுகதை. இதனை எழுதியிருப்பவர் மஞ்சுளா சுவாமிநாதன். ஒரு விதத்தில் இவரது கூற்றை ஆமோதிக்கிறேன். நிறையப் புத்தகங்கள் வாசிப்பதனால் உண்டாகும் நற்பலன் என்னவென்று பார்த்தால், வாசகராக இருந்தவர்கள் சுயமாகக் கதைகள் எழுத முயன்று அதில் வெற்றியும் காண்கிறார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? வாசியுங்கள், தேடித் தேடிப் படியுங்கள். அதற்குக் கட்டாயம் ஒரு பலன் உள்ளது. இதற்குச் சிறந்த உதாரணமே இந்த எழுத்தாளர் மஞ்சுளா சுவாமிநாதன்.
    இனி கதையினுள் போகலாம். ரம்யா, இக்கதையின் நாயகி, திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற அவாவுடன் மருத்துவமனைக்கு வருகிறாள். ஏன் அவள் மருத்துவமனைக்கு வருகிறாள் என்று பார்த்தோமேயானால், அவளது வயதுதான் காரணம். அவளுடைய ஒத்த வயது சிநேகிதிகள் எல்லாம் கல்யாணம் முடிந்து பிள்ளைக்குட்டிகள் என்று ஜாலியாகக் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கையில், இவள் மட்டும், ‘தனக்குத் திருமணம் எப்போது நடக்கும்? அப்படி நடந்தால் நம்மால் தாம்பத்தியத்தில் நல்லபடியாகச் செயல்பட முடியுமா? பிள்ளைப்பேறு உண்டாகுமா?’ போன்ற பல சந்தேகங்களை மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்று வருகிறாள்.
    இந்தப் பெரும் கவலையில் இருந்து அவளால் மீண்டு ஒரு சாதாரண வாழ்விற்கு வருவது கடினமாக இருந்தது. அவளது தோழிகளின் வாழ்வைப் பார்த்து எரிச்சல் அடைவதும், ‘தான் மட்டும் ஏன் இப்படி இருக்கிறோம், எப்போது விமோசனம், இதற்கு ஒரு விடிவுகாலமே இல்லையா’ என்று எண்ணிக்கொண்டிருக்கையில், அவளது தோழி காயத்ரி அவளது எண்ணத்தை எப்படி மாற்றுகிறாள் என்பதே இக்கதை. எப்போதுமே துயரத்தை, வருத்தத்தை மனதில் போட்டுப் புழுங்கிக்கொண்டிருத்தலை விட, அதை ஒரு ஓரமாக விட்டுவிட்டு நாம் மற்ற வேலைகளில் கவனத்தைச் செலுத்தினால் போதும், தேவையற்ற மன உளைச்சலில் இருந்து வெளியே வந்துவிடலாம் என்பதை ஒரு சிறுகதையாக நமக்குத் தந்திருக்கிறார் மஞ்சுளா சுவாமிநாதன் அவர்கள். வாழ்த்துகள் அவருக்கும் மற்றும் இதனைப் பிரசுரம் செய்த ‘நடுகல்’ இணைய இதழ்க் குழுமத்திற்கும்.
    -பாலமுருகன்.லோ –

  2. இவ்வளவு அழகாக, ஆழ்ந்த விமர்சனம் அளித்தமைக்கு நன்றி சகோ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *