வாழ்வின் எல்லாத் தருணங்களையும் வாசித்து மகிழ்ந்து அன்பையும் கருணையையும் நிரப்பிக்கொண்டு சமூகத்தின் மீதான நேர்மறைப் பார்வையை அள்ளிக் கொடுக்க வந்திருக்கிறது மழையால் கடலுக்கு அழிவில்லை நூல்.
மேல்நிலை ஆசிரியர் பணியில் தொடர்ச்சியாக 100 சதவீத தேர்ச்சியை கொடுத்து வரும் கணினியியல் ஆசிரியரான ஜெயக்குமார் அவர்கள் ஆசிரியர் பணிக்காகவும் சமுதாயப் பணிக்காகவும் இலக்கியப் பணிக்காகவும் நிறைய விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றவர். சமூகத்தின் மீதான தனது பெரு விருப்பத்தை கவிதைகளின் வழியாக பொதுவெளியில் இறக்கி வைத்து உலகத்தின் நகர்விற்கு ஒரு நெம்புகோலாக தன்னை நம்பிக் கொண்டிருப்பவர்.. தன்னைச் சுற்றி நிகழும் சமூகத்தின் சகலவிதமான போக்கையும் நேர்மறைச் சிந்தனைகளில் அணுகும் இவரது அகம் சின்னச் சின்ன கவிதைகளாக உருமாறி நம் மனதை நிரப்பி விடுகின்றன. மொட்டின் மலர்தல் சட்டென்று நிகழ்ந்துவிடுகிற தருணத்தில் தொடர்ச்சியான புன்னகையில் செடிக்கு அழகு சேர்க்கும் விதையின் உழைப்பைப் போலவே இவரது கவிதைகளும் வாசிப்போருக்கு நிறைவைச் சேர்க்கின்றன.
எப்போதோ சந்திக்கும் நண்பர்களுக்கிடையில் கடந்து வந்த காலங்கள் உருண்டோடி அவர்களை மீண்டும் பால்யத்திற்கே அழைத்துச் சென்று விடும் காலச்சூழல் விரிவடைய விரிவடைய அண்டை வீட்டாரையும் எப்போதோ சந்திக்கும் நிலைக்கு நம்மை நாம் இட்டுச் சென்றிருக்கிறோம். அப்படியானதொரு உரையாடல்களில் அண்டை வீட்டாரின் நம்பகத்தன்மைக்குள் நம்மை நுழைத்து விடுவது போல நூலின் கவிதைகள் நமக்குள் இறந்த காலத்தையும் எதிர்காலத்தையும் நிகழ்காலத்தோடு இணைக்கப் பார்க்கின்றன.
நவீன கவிதைகள் பல்வேறு திசைகளில் திருப்பப்பட்டும் சிதறடிக்கப்பட்டும் வாசிப்போரின் மனநிலைக்கு ஏற்ப பொருள் கொள்ளப்பட்டும் காலச் சூழலுக்கு ஏற்ப வாசிப்பின் தளம் வேறு வேறாக அமையும்படியும் எழுதப்படுகின்றன. கவிதைகளின் நம்பகத்தன்மை என்பது அது நம் மனதிற்குள் ஏதோ ஒரு புதிய சிந்தனையைத் தூண்டி விடக்கூடும் என்பதாகவோ நமது வாழ்வின் மீள் உருவாக்கத்தை நாமே அர்த்தப்படுத்திக் கொள்ள ஏதுவாகவோ அமைந்துவிடக் கூடும். அந்த வகையில் இந்த நூலின் கவிதைகள் சமூகப் பழக்கங்களில் இருந்து நமக்கான ஒன்றை நாம் கண்டடைவதையும் நமது பழக்கத்திலிருந்து சமூகத்தின் நகர்தலுக்கு வழியமைப்பதை பாதையாக்கி காட்டுவதும் என்று அமைந்துவிடுகிறது.
“பாட்டிகள் நீரூற்றி வளர்த்த ரொட்டிச் செடிகள் வாடும் போதெல்லாம் அவன் தன் கோளையில் நீர் பிடிக்கிறான் குட்டியப்பனுக்குத்தான் தெரியும் பாட்டிகள் எல்லாம் தாவரங்கள்””
எனத் தொடங்கும் கவிதையின் வழியே இயற்கையின் எல்லா ரகசியங்களையும் முன்னோர்கள் நமக்காக கற்றுத்தர முயன்றிருக்கிறார்கள் என்பதையும் அவர்களே நமக்கான வழிகாட்டிகள் என்பதையும் எதிர்வரும் தலைமுறையினரும் உணர்ந்துவிட்டனர் என்ற பேரன்பை விதைக்கிறது.
“கிணற்றில் விழுந்த விலங்குகள் கூட மக்கிவிடும் காலத்தில்
நெகிழிப்பைகளில் அனைத்தையும்
சுமந்து கொண்டு
பயணிக்கிறது சமகாலம்”
சுற்றுச்சூழல் குறித்தான இந்தக் கவிதை மனித மனங்களின் தன்மையும் நெகிழிப்பைகளைப் போலவே மாறிவிட்டதை உருவகப்படுத்துகிறது. காலத்தின் வேகமான ஓட்டத்தில் ஒவ்வொரு மனங்களும் தனித்தனியாக மாறி நின்று நெகிழிப் பைகள் போல எல்லாவற்றையும் சுமந்து திரிகின்றன.
“உணவு வேண்டாம் என
அடம் பிடிக்கும் இவனுக்கு அப்பாவுக்காக ஒருவாய் அம்மாவிற்காக ஒருவாய் பாப்பாவுக்காக ஒருவாய் பாட்டிக்காக ஒரு வாய்
எனச் சொல்லி தோசையை சாப்பிட வைக்கிறாள்
அன்பின் அடையாளமாய் தோசை.
பசியின் அடையாளமாகக் கூட இருக்கலாம்.
வெளிநாட்டுப் பறவைகள்
கடல் கடந்து வருகின்றன வேடந்தாங்கலுக்கு””
பறவைகளும் குழந்தைகளும் இன்றை பெரிதெனக் கொண்டு இன்றில் தம்மை ஒப்படைத்தபடி வாழக்கூடியவர்கள். அவர்களின் அன்பும் சுதந்திரமும் அறிவும் பரிவும் எப்போதும் கட்டுப்பாடற்ற விடுதலை வெளியில் பறந்து கொண்டிருப்பது. ஒருவரின் பசியைப் போக்குவதற்காக எடுத்துக் கொள்ளும் முயற்சிகளும் அதைச் செய்யும் மனமும் எப்போதும் வலசை போகும் பறவைகளின் தாய்மை குணத்தை பெற்றிடுகின்றன.
அதுவே தான் மனங்களில் வேடந்தாங்கலாக வளர்ந்து விடுகிறது
“”சுடுகாட்டுப் பாதையில்
எங்கள் வீடு
சங்குச் சத்தம் கேட்டதும்
சொம்பில் தண்ணீர் எடுத்துப் போய் ஊற்றவாள் அம்மா. எங்களை வீட்டுக்குள்ளேயே இருக்கச் சொல்லி விடுவாள். சற்று நேரம் கழித்து
சாலையைப் பார்த்தால் ஒவ்வொரு வீட்டுக்கு முன்பும் தண்ணீர்.
இந்த உலகமே பிணங்கள் போகும் பாதையில் தான் இருக்கிறது.
நான் இதை அம்மாவிடம் சொல்லவில்லை””
உலகில் பிறப்பும் இறப்பும் நிலையாமையின் தத்துவத்தை எல்லோருக்கும் கற்றுக் கொடுக்கின்றன. பிரசவம் நிகழாத நாளும் மரணம் நிகழாத நாளும் பூமியில் உதிப்பதில்லை. காணும் உலகில் உயிர்களின் இருப்பும் அவரவர்களின் வாழ்வின் பேசு பொருளும் எல்லோருக்குள்ளும் புதிய புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் அவரவர் வாழ்வை நகர்த்தும் ஏதோ ஒரு அர்த்தத்தை இறப்பு சொல்லித் தந்து விடுகிறது.
“இவன்தான் அவன் என்று பலமுறை சுட்டிக்காட்டினார்கள் எவன் என்று சொல்வதற்கு எனக்கு வெட்கமாய் இருக்கிறது அவன் தான் இவன் என்பதில் தொடங்கிவிட்டது வாழ்க்கை””
புறத்தின் நிகழ்வுகளை தன் அகத்திற்குள் இணைத்துக் கொண்டு சலனத்திலிருந்து தன்னை மீட்டெடுத்தபடி காலத்தையும் அதன் வழியான கனவுகளையும் நமக்குள் ஒப்படைத்து விடும் பக்குவ மனம் கவிஞருக்கு அதிகரித்துக் கொண்டே இருப்பதன் விளைவுதான் இந்தக் கவிதை எனலாம். என்னை நானாகவே வாழ விட எப்படியாவது போராட வேண்டி இருக்கிறது என்பதை எல்லோரும் அறிந்து கொண்டால் அடுத்தவர் வாழ்விற்குள் அர்த்தத்தைத் தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை.
“துணைகளையோ இணைகளையோ நட்புகளையோ உறவுகளையோ காதலையோ காமத்தையோ இழப்பது குறித்து
நான் ஒன்றும் சொல்லவில்லை எங்கு வைத்தேன் என்று தெரியவில்லை
என் கைப்பேசியை
எடுத்துத் தாருங்கள்””
அறிவியல் தொழில்நுட்பத்தின் இன்றைய நவீன கருவிகள் மனித மனங்களுக்குள் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தி விடுகின்றன. அன்பு அறம் ஒழுக்கம் விட்டுக் கொடுத்தல் சகிப்புத்தன்மை பொறுப்புணர்வு பொறுமையைக் கடைப்பிடித்தல் உறவுகளைப் பேணுதல் நண்பர்களை பின் தொடர்தல் போன்ற அகவயப்பட்ட செயல்கள் கொஞ்சம் கொஞ்சமாக மனங்களில் இருந்து தூக்கி எறியப்பட்டு பொருட்காட்சிகளிலும் கண்காட்சிகளிலும் எழுதி வைக்கப்படும் சொற்களாக மாறிவிட்ட சூழலில் எல்லோரையும் எல்லாப் பொழுதும் முழுமையாக ஆட்டி வைக்கும் கருவியாக மாறிப்போனது கைப்பேசி. நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளுக்கு நம்மிடமிருந்து ஏதேனும் எதிர் விளைவுகள் ஏற்படுத்தக் கூட நேரமற்றும் மனமற்றும் அலைபேசியின் பின்னே அலைந்து கொண்டே இருக்கும் அவலத்தை இந்தக் கவிதை எழுதிச் செல்கிறது
“அப்பாவின் நண்பருக்கு பத்திரிக்கை வைத்தேன் “அப்பாவை பார்ப்பது போலவே இருக்கிறாய்” என்றார்.
இது எத்தனையாவது சுழற்சி என்று தெரியவில்லை “”
தந்தை கொடுத்த உயிர் தானே நமது இன்றைய இயக்கங்கள். மரபின் நீட்சிகள் தொடர்ந்து தலைமுறை தலைமுறையாக நீண்டு வருகையில் முகமோ நடத்தையோ ஏதோ ஒருவரின் சாயலை நமக்குள் புகுத்தி விடுகிறது. பெரும்பாலும் இது தந்தை வழி வம்சமாகவே அமைவது மரபின் குணாதிசயங்களில் ஒன்று. ஆனால் அவரவர் மனங்களுக்குள் அவரின் செயலை எண்ணி யாமல் ஏன் முந்தைய தலைமுறையினரைத் தேட துவங்குகிறது உலகம் என்பதை கேள்வியாக்கி விடுகிறார் இந்தக் கவிதையில்..
“”நேரு விளையாட்டு அரங்கம் நேருவையும்
காமராஜர் சாலை காமராஜரையும்
அண்ணா பேருந்து நிலையம் அண்ணாவையும் நினைவுபடுத்துவது போல
வாழ நினைக்கையில்
நான் நானாகவே வாழ்கிறேன் என்னை யாராகப் பார்ப்பார்கள்?””
தோன்றில் புகழோடு தோன்றுக என்று வள்ளுவனின் வார்த்தைகளை இந்த கவிதையில் மறு வடிவமாக பார்க்க முடிகிறது. உலகத்தில் எத்தனையோ கோடி மக்களுக்குள் ஒரு சிலரே எல்லோராலும் நினைவில் கொள்ளப்படுகிறார்கள். அப்படியானதொரு எல்லைக்குள் தன்னையும் புகுத்திக் கொண்டு பூமிப் பந்தில் பிறந்ததற்கான பயனை அடைந்து விட வேண்டும் என்ற பேராசையை கவிஞர் கவிதையின் வழியே வெளிப்படுத்தி விடுகிறார்.
“”ஆதியில் ஒரு கிணறு இருந்தது ஊர் முழுக்க நீர் தந்தது
அருகில் இருந்த மரங்களும் வேர்களை நுழைத்து
தாகம் அருந்தின.
அப்புறம் அனைத்தும் கட்டடங்கள் ஆயின.
நீர்க்கேன் ஒன்றைத்
தோளில் சுமந்தவாறு
படியேறிக் கொண்டிருக்கிறான் ஒருவன்””
கால மாற்றத்தின் விளைவுகளுக்குள் பிறருக்காக தன்னை ஒப்படைத்த தியாகிகள் குறைந்து வருகின்றனர். அவரவருக்கான தேவைகளை அடுத்தவரை எண்ணிப் பார்க்காது ஓடியபடியே அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் உள்ளபடியே தமக்கான வாழ்வை மட்டுமே நகர்த்திக் கொண்டு இருக்கிறார்கள்.
இல்லங்கள் பெரிதாகவும் உள்ளங்கள் சிறிதாகவும் உருமாறிக் கொண்டிருக்கும் இன்றைய வேளையில் சமூகத்தின் தாக்கங்களுக்குள் யாரும் பெரிய அளவில் பாதிப்பை உணர்த்துவதில்லை உணர்வதும் இல்லை. அவரவருக்கான நேரத்தை மட்டுமே பிடித்துக் கொண்டு அலைந்து கொண்டிருக்கும் சமூகத்திடம் அறத்தையும் அன்பையும் கருணையையும் பேசிவிடப் பார்க்கிறது மழையால் கடலுக்கு அழிவில்லை நூல். மொழிப்பற்றின் அவசியத்தை படம் பிடிக்கும் அதேசமயம் மொழியின் மீதான நிறைய ஆதிக்க மனப்பான்மையின் தாக்குதலும் அத்தகு நிலையிலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் எச்சரிக்கையாகவும் தாய்மை உணர்வோடும் இந்த மழை எழுதிச் செல்லும் கவிதைகள் எல்லோரது மனக்கடலுக்குள்ளும் போய்ச் சேரட்டும்.
மழையால் கடலுக்கு அழிவில்லை, கவிதைத் தொகுப்பு
புன்னகை பூ ஜெயக்குமார்- வெளியீடு வேரல் புக்ஸ் சென்னை
முதல் பதிப்பு ஜூலை 2025- பக்கங்கள் 72 -விலை ரூபாய் 120
000

இளையவன் சிவா
கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி அறிவியல் ஆசிரியர். பிறந்தது திண்டுக்கல் மாவட்டத்தில் பழநிக்கு அருகில் அய்யம்பாளையம் என்ற சிறுகிராமம். தற்சமயம் வசிப்பது திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் நரசிங்காபுரம் என்ற ஊரில்.
1.மின்மினிகள்(1999)
2.தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022)
3.தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது)
4.அன்பு மொழி(2024)
5.மீன் சுமக்கும் கடல் (2025)
என ஐந்து கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
உடுமலை இலக்கியக் களம் என்ற அமைப்பின் செயலாளராகப் பணிபுரிகிறார்.
நன்றியும் அன்பும் தோழர்