மகேஷ் வீட்டை விட்டு கிளம்பி விட்டான். காட்டன் பைஜாமாவும் குர்தாவும் அணிந்திருந்தான். சுதர்சன் நகர் வரை சென்று அங்கு கணபதி பேக்கரியில் கேக் வாங்கிக் கொண்டான். 

“ம் ம் இப்போ எப்படி போக வேண்டும் ஆங் ! இங்கே இருந்து இடது பக்கம் திரும்பி பிளே ஸ்கூல் அருகில் திரும்பி வலது பக்கம் இரண்டாவது தெரு”.மனதுக்குள் அந்த வழியை சொல்லியபடியே சரியாக கமலாகரன் வீடு  இருக்கும் தெருவுக்கு வந்துவிட்டான்.

தெருவில் நுழையும் போது ஒரு சில நாய்கள் அவனை நோக்கிக் குரைத்துக் கொண்டே வந்தன. மகேஷ் தன் சைக்கிளின் வேகத்தைக் கூட்டினான்.  ஒரு கையால் தான் சைக்கிளை ஓட்டிக் கொண்டிருந்தான். இன்னொரு கை கேக் வைத்திருந்த பையைப் பிடித்து இருந்தது. 

கர்ணகடூரமாக குரைத்துக் கொண்டு கனவேகமாக அவன் சைக்கிளின் பின்னால் ஓடி வந்த இரு நாய்கள், அவனது கால் சராயைப் பிடித்து இழுத்தன. நிலை தடுமாறிய மகேஷின் சைக்கிள் அருகில் இருந்த ஒரு சிறு கல் மீது மோதி சரிந்தது. 

அப்போது அதிவேகமாக இன்னும் இரு நாய்கள் முன்பக்கத்தில் வந்து கேக் பார்சலை கைப்பற்ற முயன்றன.

நாய்களை விரட்ட மகேஷ் “ஹாய் ஓய், ச்சூ”என்றெல்லாம் கத்தினான் .

ஆனால் நாய்கள் ஆக்ரோஷத்துடன் பார்த்தபடி அவனை நோக்கி பாய எத்தனித்தன.

சட்டென கேக் பார்சலில் இருந்து தனது கைகளை எடுத்துக் கொண்டான் மகேஷ்.  பின் பக்கம் இருந்த நாய்களும் கேக்கின் மீது பாய்ந்தன.

சைக்கிளை விட்டு விலகி தன்னை காப்பாற்றிக் கொள்ள முயற்சித்தான் மகேஷ். பெடலில் மாட்டியிருந்த பைஜாமா அவன் எழுந்திருக்கும் போது இன்னும் கிழிந்தது.

“அடடா மகேஷ் ! என்னடா ஆச்சு ! அச்சச்சோ இந்த தெரு நாய்கள் தொல்லை தாங்கவே முடியலடா ! அம்மா அம்மா சீக்கிரம் வாங்க!” எனப் பதறினான் கமலக்கண்ணன்.

பிறந்தநாள் விழாவுக்காக நன்றாகத் தலையை வாரி நல்ல உடுப்பு அணிந்து வந்த மகேஷ் தற்போது தலை கலைந்து ,கால்களில் கைகளில் சிராய்ப்புகளும் முகத்தில் புழுதியுமாக நிலை குலைந்து இருந்தான்.

 நண்பர்கள் அனைவருமாக பணம் போட்டு வாங்கிய கேக் பார்சல் நாய்களால் கைப்பற்றப்பட்டது அவனுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

இப்போது பர்த்டே பார்ட்டிக்கு கேக்கு வேண்டுமே என்ன செய்வது என்ற கவலை வேறு. 

கேக் பார்சலை பாதியில் விட்டுவிட்டு நாய்கள் திரும்பவும் தெருமுனைக்கு சென்றன. அங்கே மகேஷின் மற்றொரு நண்பன் ராகவன் நடந்து வந்து கொண்டிருந்தான். அவனது கைகளில் சமோசா இருக்கும் பை இருந்தது.

நாய்கள் படு வேகமாக ராகவனை நோக்கிப் பாய்ந்தன. ராகவனும் தனது கையில் இருந்த சமோசா பாக்கெட்டை பாதுகாக்கத் தான் நினைத்தான். ஆனால் நாய்கள் வந்து பாய்ந்த வேகத்தில் தான் பிழைத்தால் போதும் என சமோசாவை தூக்கி எறிந்து விட்டு நாலு கால் பாய்ச்சலாக கமலாகரன் வீட்டுக்கு ஓடி வந்து விட்டான்.

கமலாகரனின் அம்மா  இருவரையும் உள்ளே அழைத்துச் சென்று ஆசுவாசப் படுத்தினார். அவர்களுக்கு குடிப்பதற்கு ஜூஸ் கொடுத்தார்.

“எப்பவுமே இப்படித்தான் இருக்குமா யாருமே இந்த நாய்களை பத்தி கண்டுக்க மாட்டாங்களா?” எனக் கேட்டான் ராகவன்.

சில மாதங்களுக்கு முன்பும் இப்படித்தான் இருந்தது. பகுதிவாசிகளின் புகாரின் பேரில், அதிகாரிகள் நாய்வண்டி கொண்டு வந்து பிடித்துச் சென்றனர். மறுபடியும் தொல்லை ஆரம்பித்துவிட்டது “என்றார் கமலாகரனின் அம்மா.

மகேஷ் தன் அப்பாவுக்குப் போன் செய்தான். அவர் உடனே வருவதாகச் சொன்னார். வரும் போது கேக், சமோசா வாங்கி வருவதாகச் சொன்னது, பிள்ளைகளுக்கு நிம்மதியைத் தந்தது.

வர வேண்டிய மூன்று நண்பர்கள், அவர்கள் பெற்றோருடன் வண்டியில் வந்து இறங்கினர்.

பிறந்த நாள் வாழ்த்து பாடி, கேக் வெட்டி, பரிசுப் பொருட்களைத் தந்து நண்பர்கள் மகிழ்வுடன் இருந்தார்கள். அனைவருக்கும் கேக், சமோசா, சிப்ஸ் வந்தவுடன் மீண்டும் ஆரம்பித்தது நாய்களைப் பற்றிய பேச்சு!

“ஏதாவது செஞ்சே ஆகணும், இந்த நாய்த் தொல்லையில் இருந்து விடுபட“ என கமலாகரன் சொன்னான்.

மகேஷின் அப்பா, “நாங்க முன்னால எல்லாம், பிரபல தினசரிகளுக்கு இது போன்ற பிரச்சினை பற்றி கடிதம் எழுதுவோம்.”

“ஆமா, லெட்டர் டு த எடிட்டர்’ கேள்வி பரிட்சையிலும் வருமே “  கமலாகரனின் அம்மா.

”இப்போ வீடியோ போடறது தான் ட்ரெண்ட் அங்கிள்” என்ற ராகவன், “எங்க சித்தப்பா யூ ட்யூப் சேனல் வச்சு, நிறைய வீடியோ போடுறாரு! அவர் கிட்ட சொல்லலாம்”

“கண்டிப்பா! ஆனா, முறைப்படி அதிகாரிகளிடம் மறுபடியும் மனு கொடுக்கணும்“

“இந்த நாய்களால பாதிக்கப்படுகிறது பெரும்பாலும் இளஞ்சிறார்கள் தான்!”

“பிராப்ளம் திரும்பத் திரும்ப வராம இருக்க ஆக்‌ஷன் எடுக்கணும்”

“மாதம் ஒரு முறை வந்து, அதிகாரிகள் மேற்பார்வை பார்க்கலாம்”

கமலாகரனின் தங்கை வசுந்தரா ஏதுவும் பேசாமல் இருந்தாள். சோகமாக இருப்பது போலத் தெரிந்தாள்.

“என்னாச்சு வசு! இன்னும் கொஞ்சம் கேக் வேணுமா?” எனக் கேட்டார் அம்மா.

“இல்லம்மா! நாய் ஒரு நன்றியுள்ள விலங்கு. அது நம்ம வீடுகளைப் பாதுகாக்கும். நம்ம கிட்ட பிரியமா வந்து வாலாட்டும். அதுங்களப் போயி ஓழிக்கணும்ன்னு சொல்லலாமா?” என வசு சொன்னாள்.

“அடடா ! நாம எல்லா நாய்களையும் ஒழிக்க நினைக்கல்ல வசு. சில தெருக்களில் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகம். அவை, ஆக்ரோஷமாக வருவோர் போவோரை விரட்டி அவர்கள் மேல் பாய்கின்றன.” ராகவன்.

”இதோ பார், மகேஷ் அண்ணாவை! ட்ரெஸ் எப்படி கிழிஞ்சு போச்சு! கேக், சமோசா கொட்டி போயிடுச்சு ! நாம வெளில போகும் போது நம்மளைக் கடிச்சுதுன்னா“ என்றான் கமலாகரன்.

“குடியிருப்புப் பகுதிகளில் அதிக அளவில் இருக்கும் ஆக்ரோஷமான நாய்களை அங்கிருந்து அகற்றணும். மக்கள் பாதுகாப்புக்காக! அவ்வளவு தான்”

சொன்ன பதில்களும், அம்மா தந்த கேக்கும் வசுந்தராவை சமாதானப்படுத்தின.

“சரி, இது, பிறந்தநாள் பார்ட்டியா இல்ல ‘லொள்ளு சபா’ கூட்டமா? வாங்க எல்லோரும் ஒரு செல்ஃபி எடுக்கலாம்” என மகேஷ் சொல்ல, அனைவரும் சிரித்துக் கொண்டு செல்ஃபி எடுத்தனர்.

000

கமலா முரளி

கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வரும்,இவரது இயற்பெயர்  திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும்.

ஆங்கில இலக்கியம் மற்றும் கல்வியியலில் முதுகலைப்பட்டம் பெற்ற கமலா முரளி,சென்னை, பெரம்பூர்,விவேகானந்தா பள்ளியில் சில வருடங்கள் பணியாற்றிய பின், கேந்திரிய வித்யாலயா சங்கதனில் ஆங்கில ஆசிரியையாகப் பணியேற்றார். கேந்திரிய வித்யாலயாவின் தேசிய அளவிலான “சீர்மிகு ஆசிரியர்” விருதினை 2009 ஆண்டு பெற்றார்.

கமலா முரளியின்,கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் தினசரி.டாட் காம், மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ், கேலக்ஸி தளம், நமது உரத்த சிந்தனை, மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், சிறுவர் வனம் ,ஆனந்தசந்திரிகை, மங்கையர்மலர், கோகுலம் , இந்து தமிழ்திசையின் மாயாபஜார் , வாசகசாலை, தினமலர் பட்டம் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.

இவரது “மங்கை எனும் மந்திர தீபம்”  (“எ லேடி வித் த மேஜிக் லேம்ப்”)எனும் மொழிபெயர்ப்பு நூல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இவர் எழுதிய, “இந்துமதி கல்யாணம் எப்போ?” என்ற சிறுகதைத் தொகுப்பு மணிமேகலைப் பிரசுர வெளியிடாக மலர்ந்துள்ளது.

மற்றும் இவரது சிறார் கதை நூல், “கிளியக்காவின் பாட்டு” லாலிபாப் சிறுவர் உலகம் வெளியீடாக வந்துள்ளது.

கனவு இலக்கிய அமைப்பு, திருப்பூர் முத்தமிழ் சங்கம் மற்றும் திருப்பூர் மக்கள் மாமன்றம் இணைந்து வழங்கிய ’திருப்பூர் சக்தி விருது’ இந்த ஆண்டு (2024) பெற்றுள்ளார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *