அன்று காலை விடிந்ததிலிருந்தே எதுவுமே சரியாக நடக்கவில்லை. வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என்ற சலுகைகளை எல்லாம் நீக்கியிருந்தார்கள். அலுவலகத்திற்கு எல்லா நாளும் போயாக வேண்டும் என்பதே பெரும்பணியாய் இருந்திட, காலை ஒன்பது மணிக்கே முந்தைய நாளில் செய்த வேலைகளைப் பற்றிய நிலையைத் தெரிவிப்பதற்கான இணையக் கூடுகையில் சேர்ந்தாக வேண்டும். அலுவலகத்திற்குச் சென்றால் கூட இணைய அழைப்பிலேயே சேரவேண்டும் என்றாலும் அலுவலகம் செல்ல வேண்டியது கட்டாயமாய் இருந்தது. அந்தப் பெருநகரின் சாலைகள் மணிமேகலையின் அச்சயப் பாத்திரத்தைப் போன்றவை. அவற்றிலிருந்து அள்ள அள்ள எந்நேரமும் வாகனங்கள் வந்துகொண்டே இருக்கும். அந்தப் போக்குவரத்துப் போர்க்களத்திலே தினமும் போராடியே அலுவலகம் செல்ல வேண்டியிருந்தது. நாள் தவறாது தாமதாய்ப் போவது என் வழக்கமானாலும் அது பத்து நிமிடங்களைத் தாண்டியதில்லை. ஆனால் பறக்கும் இரயில் பாலம் கட்டமைக்கும் பணியால் வாகனங்கள் யாவும் ஊர்ந்து செல்லக்கூட வழியில்லாது சாலையே ஏதோ வாகனங்கள் நிறுத்துமிடம் போல் தோன்றிடும்படி அசையாது நின்றிருந்தன. அதனால் அலுவலகத்தை அடைவதற்குள் அந்த இணையக் கூடுகையே அன்று முடிந்திருந்தது. அன்றென்று பார்த்து முந்தைய நாளின் வேலையையே நான் முடித்திருக்கவில்லை. அந்த வேலையை முடித்திட அதற்கு இன்னொன்றைச் செய்து முடித்தாக வேண்டியிருந்தது. அந்த இன்னொன்றைச் செய்து முடிக்க வேறொன்றைச் செய்து முடித்தாக வேண்டியிருந்தது. இப்படியே ஒரு முடிவற்ற சங்கிலியாய் நேற்றைய வேலை என்னைச் சுற்றியிருந்தது. அதைப் புரிந்துகொள்வதிலேயே நாள் முழுதும் சரியாக இருந்திட அதில் எவ்வொன்றையும் முடித்தபாடில்லை. ஆகையால் முந்தைய நாளின் வேலையோடு சேர்த்து அன்றைய நாளின் வேலையையும் அன்று ஒரு நாளிலேயே நான் முடித்தாக வேண்டியிருந்தது. அதனால் யாரும் தொந்தரவு செய்ய முடியாதபடியான தனிமையான அறையொன்றைத் தேர்ந்தெடுத்து அங்கு சென்றமர்ந்து பணியினைத் தொடர்ந்தேன்.
அன்றைக்கும் அந்த வேலை நீண்டுகொண்டே போனது. காலை முதல் நீண்ட நேரமாய் அந்த அறைக்குள்ளாகவே இருப்பதாய்த் தோன்றியது. மணியைப் பார்த்தேன் அது நான்கைத் தாண்டியிருந்தது. மதியம் முடிந்து மாலை பிறந்து கொண்டிருந்தது. அப்போதே நினைவுக்கு வந்தது நான் மதியம் எதுவுமே சாப்பிட்டிருக்கவில்லை என்று. இனிமேல் என்னத்தைச் சாப்பிடுவது என்று எழுந்து போய் ஒரு கோப்பைத் தேநீரோடு வந்தமர்ந்தேன். அந்தத் தேனீர் என் நாக்கை இன்னும் வறட்சியுறச் செய்தது. நீர் பருகலாம் என்று நான் எழ முனைகையில் அன்றைய வேலையின் நிலையென்ன என்றும் அது முடிக்கப்பட்டதா என்றும் கேட்கும் ஊதா வண்ணக் குறுஞ்செய்தி என் மடிக்கணினித் திரையில் ஒளிர்ந்தது. அதைப்பார்த்த நான் அப்படியே எழாமல் அமர்ந்துவிட்டேன்.
வானம் பார்க்காது நான்கு சுவர்களுக்குள்ளாகவே நான் இருந்தாலும் எனக்காக சூரியன் காத்திருக்கவில்லை. அது மறைந்து இருளைக் கொணர்ந்திருந்தது. நானோ இன்னும் நேற்றைய வேலையையே முடிக்காமல் அமர்ந்திருந்தேன். ஆனால் என்ன செய்வது. வீட்டிற்குப் போய்த்தானே ஆகவேண்டும் என்று மடிக்கணினியை உறக்கநிலையிலிட்டு பைக்குள் வைத்துப் புறப்பட்டேன். அப்போது கிட்டத்தட்ட எல்லோருமே அலுவலகத்திலிருந்து கிளம்பிப் போயிருந்தார்கள்.
தலைக்கவசத்தை அணிந்து வண்டியிலேறிப் புறப்பட்டேன். மாலையெல்லாம் மழை பெய்திருக்கிறது! அதுவே எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அதுவும் நல்லது தான் மழையால் சாலையில் குறைந்த அளவிலான வண்டிகளே இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் பத்தடி நகர்வதற்குள்ளாகவே சாலை அதைப் பொய்யாக்கியிருந்தது. சேறு தேங்கிய சாலையின் குழிகளுக்குள் குலுங்கிக் குலுங்கி என் மீதும் கொஞ்சம் சேற்றையிறைத்துப் போய்க்கொண்டு இருந்தது என் வண்டி. போதாக்குறைக்கு மழையும் லேசாய்த் தூரத்தொடங்கியிருந்தது.
நசநசக்கும் தூரலோடு வண்டிகளின் இரைச்சலும் சேர்ந்து என்னை எரிச்சலூட்டியது. நீண்ட நேரமாய் அந்தப் பாலத்தின் மேலே என் வண்டியோடு சேர்ந்து எல்லா வண்டிகளும் நகர வழியின்றி நின்றுகொண்டு இருந்தன. அப்போது எனக்கருகில் இருந்த வண்டியில் அமர்ந்திருந்தவர் “சுற்றியெங்கும் இன்பம் மட்டுமே….” எனும் பாடல் ஒன்றைப் பாடிக் கொண்டிருந்தார். அவரை ஒரு முறை முறைத்துப் பார்த்தேன். அவர் பாடுவதை நிறுத்தவில்லை. சுற்றியெங்கும் நகரக்கூட இடமின்றி வண்டிகளெல்லாம் சிக்கிக்கிடக்க இன்பமாம் இன்பம் என்று அவரை என் மனதுக்குள்ளாகவே திட்டினேன். அவரின் அந்தக் கேட்கமுடியாத பாடலிடமிருந்து எனக்கு முன்னாலிருந்த வண்டிகள் நகர்ந்து விடுதலை கொடுத்தன.
சில நிமிடங்களிலேயே மறுபடியும் இன்னொரு திருப்பத்தில் வண்டிகள் நெரிசலில் சிக்குண்டு தேங்கின. அப்போதும் அவற்றின் இரைச்சல் குறையவில்லை ஆனால் எனக்கே தெரியாமல் பாடிக்கொண்டிருந்தேன் “சுற்றியெங்கும் இன்பம் மட்டுமே…. இன்பம் மட்டுமே….” என்று. அப்போது அருகில் நின்றிருந்த மகிழுந்தின் சன்னல் கண்ணாடியில் தெரிந்த என் முகத்திலிருந்த அந்த நீண்ட நாளின் இறுக்கங்கள் எல்லாம் அந்தப் பாடலில் கரைந்து போய்க் கொண்டிருந்தன.
000

ர.யது நந்தன்
தஞ்சாவூரைச் சேர்ந்தவர். புத்தகங்களுக்குள்ளும் அவை இல்லாத நேரத்தில் தன் எண்ணங்களுக்குள்ளும் தொலைந்து போகக்கூடியவர்
அருமையான கதை
சட்டென்று பெய்த மழை போன்று கதை