௦1.நுண்கதை
௦
ஏவாள் ஆதாமிடம் ஆப்பிளை அளித்தாள். உண்டான். பாவம் துவங்கியது.
௦
‘காம்புகளற்ற ஆப்பிள் உண்ணத் தகுந்தது அன்று’ என ஏவாளின் கண்களுக்குள் அவன் பார்த்துச் சொன்னபோது அவள் சிவந்திருந்தாள்.
அப்போது கடவுளின் கண்களும் சாத்தானின் கண்களும் சந்தித்துக்கொண்டன. அதன்பின் ஒரு சர்ப்பம் அவர்களை நெருங்கியிருந்தது.
௦
௦2.குறுங்கதை
௦
வனம். அதற்கு அவ்வாறே பெயரிடப்பட்டிருந்தது. யுவனும் யுவதியொருத்தியும் தங்கள் முதுகோடு முதுகுரச நீரருவியின் அருகிருந்த குளிர்ந்த பாறைமீது அமர்ந்திருந்தனர். அப்போதுதான் நீராடி முடித்திருந்ததால் நீர்த்திவளைகள் அவர்கள் அமர்ந்திருக்கும் உடலின் வாட்டத்திற்கேற்ப உடலில் இருந்து இறங்கி அருவி நோக்கிக் கசிந்தோடின.
பேசிக்கொண்டிருந்தபடியே அவளைத் திருப்பி மடியில் சரிந்தவன் கண்ணயர்ந்திருந்தான். சற்றைய நேரத்தின் பின்னர் துயிற்கலையாது வாகாய் அவன் தலையைப் மடியிலிருந்து பாறையில் வைத்தவள், வனத்துள் நுழைந்து முதிர்ந்து விழுந்திருந்தக் கனிகளைச் சேகரித்தாள். அவற்றில் சிவந்து வெளிறிய ஆப்பிள்களும் இருந்தன.
பாறையை அடைந்தவள் கால்களை அருவிநோக்கித் தொங்கவிட்டு அமர்ந்து தன்பசிக்கு சில கனிகளைப் புசிக்க அவள் வாயிலிருந்து சிதறி அருவியுள் விழுந்தனவற்றை மீன்கள் மொய்த்திடக் கண்டு, பேருவகைப் பொங்கிட, கண்கள் விரிய, சற்றே பருத்து வெளிறியச் சிவப்பிலிருந்த கனியைக் கடித்துத் துப்பினாள். அப்போது எழுந்து வந்தவன் பின்னமர்ந்து அவள் கழுத்தில் முத்தமிட்டான். கூசியவள் சிணுங்களோடு தான் கடித்த கனியை அவனிடம் நீட்டினாள்.
‘காம்புகளற்ற கனி உண்ணத் தகுந்தது அல்ல’ என அவளின் கண்களுக்குள் பார்த்துச் சொன்னபோது அவள் சிவந்திருந்தாள். பின்னர், அக்கனியைத் தன் கைகளிலிருந்து நழுவவிட்டவன் பாறைகளில் மோதியவாறு நீரடைந்ததைப் பற்றி கவனம் கொள்ளாது தீரா வேட்கையோடு காம்புள்ள கனிகளை உண்ணத் துவங்கினான்.
அப்போது நறநறக்கும் பற்களுடன் கடவுளின் கண்களும் சாத்தானின் கண்களும் சந்தித்துக் கொண்டன. அதன்பின் சர்ப்பமொன்று அவர்களை நெருங்கியிருந்தது.
0

௦3.சிறுகதை:
௦
மாளிகை. பணிப்பெண்டிர் சூழ இலவம் பஞ்சாலான பட்டு இருக்கை. தோள்களை மென்மையாய் பிடித்துவிட பிஞ்சு விரல்கள். கருப்புடையில் கடவுளும் வெள்ளுடையில் சாத்தானும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர். இடையே காய்கள் அடுக்கப்பட்ட சதுரங்கப் பலகை இருந்தது. முதல் நகர்த்தலை முடித்தார் சாத்தான்.
சாத்தானின் கைகளில் சங்கு மார்க் பீடி புகைந்தபடி இருந்தது. சைகையில் அதனைப் பெற்ற கடவுள் தன் கருத்த உதட்டில் பொருத்தி கண்களை மூடி ஆழ ஒருமுறை சுவாசித்து மீள சாத்தானிடமே கொடுத்தார்.
இருவருக்கும் பொதுவான இடத்தில் பீங்கான் தட்டில் மிளகுத் தூள் தூவப்பட்ட பொறித்த பன்றியின் இறைச்சி பொன்னிறத்தில் மின்னிக் கொண்டிருந்தது. அதனைக் குத்தி எடுத்து உண்பதற்கு வாகாக முதிர்ந்த முள்ளம் பன்றியின் முட்கள் சேகரிக்கப்பட்ட குடுவை வைக்கப்பட்டிருந்தது. அப்போது, தோலுரிக்கப்பட்டு நன்றாகக் கழுவப்பட்ட காட்டெருமையின் தொடை சமையலறை நோக்கி கழியில் கட்டப்பட்டு இருவரால் தூக்கிச் செல்லப்பட்டது.
கடவுளார் முதல் நகர்த்தலை நகர்த்தாமல் எதையோ யோசித்துக் கொண்டிருந்தார். இடப் புருவத்தை உயர்த்திய சாத்தான் என்ன? என்றார். கடவுளின் விரல் சொடுக்கில் கழுதை மூத்திரம் நிரம்பியக் கண்ணாடியினாலான மந்திரக் கிண்ணம் வந்தது. சுட்டினார். சாத்தான் பார்த்தார்.
பெருமளவில் நீல நிறமும் ஆங்காங்கு பசுமையும் சூழ்ந்து காணப்படும் உருண்டையில் எலிப் புழுக்கையொத்த இரு உருவங்கள் தென்பட்டன.
௦
பெருவனம். கண்ணுக்கெட்டிய தூரம்வரை மரங்கள்! மரங்கள்! மரங்கள்! மரங்கள்!. தாவரங்கள் நிறைந்திருந்தன. வெளியை நிறைத்திருக்கும் காற்றைப்போல மழை எப்போதும் தூறிக் கொண்டிருந்தது. முதிர்ப் பட்டைகள் தங்களின் இடைவெளியில் நீர்க் கசிவதைப்போல் தோற்றம் காட்டின. நசநசவென்ற ஈரம் எல்லா உயிர்களையும் அடங்கியிருக்கச் செய்தன.
தூறல் குறைந்தபோது பறவைகள் தங்களுள் உரையாடிக் கொண்டன. அவற்றின் கீச்சுக் குரல்களும் விலங்கினங்களின் மொழிகளும் வனத்தை உயிர்ப்போடு வைத்திருந்தன. சில இடங்களில் உலவலின் அடையாளமாகக் காலடித் தடங்கள் சகதியில் பதிந்திருந்தன.
அவள் செங்கரும்பின் நிறமொத்திருந்தாள். உடல் மினுமினுத்தது. திரண்டிருந்த சதைகள் உடலின் வலிமையையும் வளமையையும் சுட்டின. பழுப்பு நிறக் கண்கள் அவள் மேனியின் நிறத்திற்கு மேலும் எடுப்பாயிருந்தன.
அவள் மடியில் அவன் கண்ணயர்ந்திருந்தான். நீண்ட நெடிய சதைப் பற்றற்ற உருவம். கருமை கண்கள். ஓரங்குள நீளத்திற்குச் சுருண்ட தலை மயிர்கள். கோதியவள் மெதுவாக அவன் தலையைப் பற்றித் தரையில் வைத்தாள். இலேசாக அசைந்தவனைக் கன்னம் வருடித் தட்டிக் கொடுத்தவள் உறக்கத்திற்குச் சென்றதும் பாறை இடுக்கைவிட்டு நீங்கினாள்.
ஈரம் சறுக்கிவிடாமலிருக்க இடக்கையால் பாறையை இலேசாக அழுத்தியபடி கீழே இறங்கினாள். சேற்றில் கால்கள் புதையப் புதைய நடந்தாள். தடுமாறும்போது மரங்களைப் பற்றிக் கொண்டாள். சில நேரங்களில் மந்திகளும் மற்றைய குரங்கினங்களும் பற்களைக் காட்டி அவளைச் சீண்டின. தற்காப்பிற்கென ஒடிந்த கிளையொன்றை கையில் வைத்திருந்தாள்.
முதிர்ந்து விழுந்த கனிகளையும் பறவைகளாலும் விலங்கினங்களாலும் கடிப்பட்டு விழுந்து கிடந்தவற்றைச் சேகரித்தவள் திரும்பினாள். மழை மீண்டும் வலுக்கத் தொடங்கியது.
பாறை இடுக்கின் அடியில் ஓடிவரும் அருவி நீரில் கனிகளைச் சுத்தம் செய்து கரையில் வைத்தாள். பின்னங்கால் முட்டிவரை தொங்கிய மயிர்க் கற்றையை முன்பக்கம் வருமாறு எடுத்துப் போட்டவள் நீராடினாள்.
பெரிதாக இடி இடித்தது. உறக்கம் களைந்தவன் பாறையின் சில்லிப்பிலிருந்து தன் கன்னங்களை விடுவித்து சோம்பல் முறித்தபடி வெளிவந்தான். மழை நீர்ச் சொட்டுக்கள் உடலில் விழ கீழே அவள் நீராடுவதைப் பார்த்து இரசித்தபடி விரைந்து இறங்கினான்.
சைகையில் பேசினர். சிரித்தாள். சிரித்தான். அவளது கற்றை மயிர்களாலேயே அவளைப் பிணைத்தவன் நீருக்குள்ளேயே அவளுடன் இணைந்தான். மழை வலுத்தது. நீர் செம்மையாக வரத் துவங்க கரையேறி மழையில் நனைந்தபடியே கனிகளைப் புசித்தனர். தோலைப் பற்களால் நீக்கி நீருள் துப்பிட மீன்கள் அவற்றை மொய்த்தன. புணர்ச்சியின் காயங்களில் விழுந்த மழைச் சொட்டுக்கள் மேலும் கிளர்த்தின. முத்தமிட்டபடியே பாறை இடுக்கை அடைந்தனர். அவளின் மயிர்களை உலர்த்த உதவியவன் அணைத்தவாறு பாறையில் சாய்ந்து கொண்டான். இருள் சூழ்ந்தது. வனம் நிசப்தத்தில் ஆழ்ந்தது. மழையின் சப்தம் வனத்தின் இசையென வெளியெங்கும் நிறைந்திருந்தது.
௦
கடவுள், ‘பார்த்தீரா’ என்றார். ‘ம்ம்ம்’ என்றார் சாத்தான். ‘இப்படியே தொடர்ந்தால் என்ன செய்வது?’ என்றார் கடவுள். ‘நீரே சொல்லும்’ என்றார் சாத்தான்.
சதுரமாய் வெட்டப்பட்ட மாட்டிறைச்சித் துண்டங்கள் உப்புக்கறியாக ஆவி பறக்க வந்து சேர்ந்தது. சூழ நின்றிருந்தவர்களில் ஆளுக்கொருவரைத் தேர, வந்தோர் ஊட்டினர். ‘சர்ப்பத்தை அனுப்பலாமா?’ என்றார் கடவுள். ‘அடடா! அற்புதமான யோசனை’ என்றார் சாத்தான்.
௦
மறுநாள். பெருவனம் புகுந்த சர்ப்பம், கனிகள் சேகரிக்கச் சென்றவளை அணுகியது. வனத்தின் மையம் பற்றிச் சொன்னதுடன் பாதுகாப்பாய் அழைத்துச் சென்றது. அங்குள்ள மரம் பற்றி அதன் அற்புதம் பற்றி அபாரமாய் விவரித்தது. சிவந்து மஞ்சள் நிறத்தில் செழித்திருக்கும் கனி பற்றியும் அதன் சுவை பற்றியும் எடுத்துரைத்தது.
கேட்டாள். கொணர்ந்தாள். உரைத்தாள். எல்லாம் முடிந்தது.
௦
கடவுளும் சாத்தானும் வெற்றிக் களிப்பில் நகைத்தனர். கையிலிருந்த கண்ணாடி டம்ளரை சப்தம் வருமளவு மோதி பட்டை சாராயத்தை ஒரே மூச்சில் குடித்துக் கொண்டாடினர்.
௦
பிறகு, கைகுலுக்கி ‘ஆட்டத்தைச் சமனில்’ முடித்துக் கொண்டனர்.
0

சுஜித் லெனின்
திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவரான இவர் 2016 முதல் அச்சு மற்ரும் இணைய இதழ்களில் நுண்கதைகள் எழுதி வருகிறார். 2023 ஜனவரியில் ’பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமிரும்’ என்கிற சிறுகதை தொகுப்பு எதிர் வெளியீடு வாயிலாக வெளிவந்துள்ளது.
வாசித்தேன்..
தொன்மம், பகடி, இனவரைவியல் கூறுகள் கதைக்கு வளம் சேர்க்கின்றன.
நுண், குறு, சிறு எனும் வடிவப் புதுமையும் தொடர்ச்சியும் புதிய பரிசோதனைகள்..
இளவல் சுஜித் அவர்களுக்கு வாழ்த்துகள்..
நன்றியும் அன்பும் ஐயா 🙏🏼🌸