அசத்திய ஆகாரங்கள்.
பொய்யைப் பதப்படுத்தி
வண்ணத்தில்
வசீகரித்தது
வரிசையாக.
,
மனம் ஈர்த்துப்
பொறுக்கியதன்
ஆகாரத்தில்
அழிகிறது
ஆயுள் ரேகை.
***
திறப்பின் பயணம்.
வெகு நேர
மௌனத்திற்குப் பின்
விழுந்த துளி
வேர் விட்டது
தலை முறைத் தொடரை
விருட்சமாக்க.
***
விருப்பச் சுவை.
எவ்வளவு தூரம்
பயணித்தாலும்
மென்று கொண்டிருக்கும்
சொற்களை
துப்பத் தெரியவில்லை.
எடுத்ததானப் பேதமையில்.
,
துப்பியதன்
பசப்பு வாடையில்
கண்ணயர்ந்தாலும்
அந்தக் கோட்டான்
அசை போட்டபடியே இருக்கிறது
அயர்ச்சியைக் கூட்டி.
***
அள்ளியதன்
சொற்பத் துளிகள்.
தேக அனுசரணையில்
கடக்கும்
அன்றாடங்களில்
வாய்க்காதுபோன
களைப்பகற்றியால்
கொப்பளிக்கிறது
வெறுப்புகள்
தருணம் பார்த்துக் கக்குவதற்கு.
,
அவசரங்களின்
போதாமையில்
மறந்துபோன
முட்டியதன்
விடுவித்தலுக்குப்
பிறகான
முகக்குளிப்பின்
பாந்தக் குளிர்மை
ஒளிர்வின் மூழ்கலுக்கு
ஒப்பானது
வைகறைப் பொழுதில்
நீராடி
வாசல்க் காற்று
வருடுவதைப்போல.
***
கற்று மறந்தக் காதல்.
இணைவின்
சேர்மானத்தைக்
கிழித்துக்
கொடுத்த
இதயத்தை வைத்துதான்
எஞ்சிய சுவாசம்
இருக்கிறது
எதார்த்தப் புரிதலில்
சீராக.
மாற்று
இருதய சிகிச்சை
உனக்கு
நடப்பதைப் பார்த்து.
000

