“ராஜபாளையம் இறங்குறவங்க வாங்க.., ” என்றபடி விசில் அடிக்கத் தொடங்கினான் கதிர். ராஜபாளையம் பேருந்து நிலையத்திற்குள் வண்டி வரவும் அவசரமாக இறங்கியவன் பேருந்து நிலையத்தின் ஓரத்தில் இருந்த ருசி புரோட்டக்கடைக்குள் நுழைந்தான். திரும்பி வெளியில் வரும் போது கையில் பார்சலோடு வந்தவன் நேராக பேருந்தின் முன்வாசல் வழியாக ஏறினான்.
“அண்ணே இன்னைக்கு சப்பாத்தி இல்லையாம்ணே புரோட்டா தான் இருக்குனு சொல்லிட்டான்.”
“இன்னைக்கும் இது தானா, சரி வையி இத விட்ட இனி சாப்பாடு வாங்க வண்டிய எங்கையும் நிப்பாட்டவும் முடியாது. இதாது கிடச்சிதேனு நினைச்சிக்க வேண்டியது தான்” என்றபடியே வண்டியை இயக்கத் தொடங்கினான் காளிமுத்து.
“எங்கம்மா போனும் “
“தேவதானம் ரெண்ட ” என்ற படி ஐம்பது ரூபாய் நோட்டை நீட்டினாள் சிவப்புசேலை அணிந்திருந்த அந்த பெண்.
அவள் கொடுத்த ஐம்பதுரூபாயை லாவகமாக வாங்கி நீளவாக்கில் மடித்து தனது மோதிர விரலுக்கும் நடுவிரலுக்கும் இடையில் பத்திரப்படுத்திக் கொண்டான் கதிர். பத்து ரூபாய் என்று அச்சிடப்பட்டிருந்த பயணச்சீட்டில் இரண்டையும், மீதம் முப்பது ரூபாயையும் சேர்த்து அவள் கைகளில் கொடுத்தபடி அடுத்த ஆட்களுக்கு பயணச்சீட்டு கொடுக்க முன்னேறினான்.
இரவு பதினொன்றை தாண்டி விட்டதால் பேருந்தில் அதிகமாக கூட்டம் இல்லை. இருக்கும் ஒன்றிரண்டு பேருக்கும் பயணச்சீட்டு வழங்கிவிட்டு ஓட்டுநர் இருக்கைக்கு எதிரே உள்ள ஒற்றை இருக்கையில் வந்து அமர்ந்தான்.
“கதிரு நாளைக்கு லீவு கேட்டீயே என்ன சொன்னானுவோ” .
“வழக்கம் போல தான் ணே நீ இல்லைனா வண்டியே ஓடாது,வேணா ஒரு சிங்கிள் அடிச்சிட்டு போனு சொல்லுறாங்க. சிங்கிள் அடிச்சிட்டு போறதுக்குள்ள அங்க ஃப்ங்ஷனே முடிஞ்சிடும் பெறவு போயி என்ன பண்ண சொல்லுங்க”.
“நீ எதுக்கும் ராமசாமிகிட்ட ஒரு வார்த்த கேட்டுப்பாறேன் டே அவரு நல்ல மனுஷன் நம்ம சொன்ன புரிஞ்சிப்பாரு “.
“நீங்க சொன்ன மாதிரி அவருகிட்ட தான் கேட்டு பாக்கனும் ணே. சி டைப் ஜார்ஜர் இருந்தா குடுங்கன்ணே, போன்னுல ஜார்ஜ் இல்ல”.
“பேக்குல சைடு ஜிப்புல பாரு இருக்கும் எடுத்துக்கோ.”
“என்னனே கேசரிய கொண்டாந்துட்டு சாப்பிடாம கொண்டு போகப்போறீயளாக்கும் அப்படியே வச்சிருக்கீய.”
“மறந்தே போயிட்டேனப்பா, இன்னைக்கு கல்யாண நாளுனு காலைலயே வீட்டம்மா கிண்டி குடுத்துச்சு திங்காமா கொண்டு போனா அம்புட்டு தான் சாமி ஆடிடுவா”.
“வாழ்த்துக்கள் ணே. எத்தனாவது வருஷம்ணே ?”
“முப்பது முடிஞ்சிருச்சுப்பா”.
“பஸ்ஸ்டாண்டு வரப்போகுது, டீ குடிக்கையில நாலுவாய் அள்ளிப்போடுங்க அப்பறம் மைனி வருத்தப்படப் போகுது” என்றபடியே “வாசுதேவநல்லூர் இறங்குங்க” என்று குரல் கொடுக்க ஆரம்பித்தான் கதிர்.
பஸ்ஸில் இருந்த ஒரு சில ஆட்களும் பஸ்ஸைவிட்டு இறங்க வெறும் ஐந்து பேருடன் பேருந்து தனது பயணத்தை தொடங்க ஆரம்பித்தது. பேருந்து நிலையத்தை விட்டு பஸ் வெளியில் வரும் போது வண்டியின் முன் வந்து நின்றான் அந்த ஆசாமி.
“ஏலேய் அறிவு இருக்க கொஞ்சம் கவனிக்காம விட்டுருந்தேன் செத்துருப்ப ஓரமா போ” என்றான் காளிமுத்து.
“என்னது ஓரமா போகனுமா வண்டில ஏற வந்த பேஸஞ்சர இப்படி தான் ஓரமா போனு சொல்லுவீங்களா டிரைவர் சார்”.
“ம்கும்…, விளங்குச்சு. கதிரே இன்னைக்கு நாம ஊரு போயி சேர்ந்தமாதிரி தான். இறங்கி போயி என்னானு கேளு அவன் கிட்ட”.
“இந்தாப்போறேன்ணே”,என்ற படி வண்டியை விட்டு இறங்கிய கதிர் நேராக அவனிடம் வந்தான் “ஏய் என்னப்பா வண்டிய மரிச்சுக்கிட்டு ஓரமாப் போப்பா.”
“என்ன கன்டெக்டர் சார் நீங்களும் ஓரம் போகச் சொல்லுறீங்க. பேஸஞ்சர பூரா இப்படி ஏற விடாம வண்டிய ஓட்டுனா எப்படி கல்லாகட்டும்”.
“அது எங்களுக்கு தெரியும் நீ மொதல்ல ஓரமா நில்லு இல்ல வண்டி உன்மேல ஏறிடும்”
“என்ன சார் ஒரு பேஸஞ்சர” என்று அவன் மீண்டும் ஆரம்பிக்க “யப்பா டேய் தெரியாம உங்கிட்ட பேச்சுகொடுத்துட்டேன் நீ வழிய விடு நாங்க வண்டி எடுக்கனும்”.
“நானும் வாரேன் என்னையும் கூட்டுப்போங்க சார்”
“டேய் நாங்க என்ன டூருக்கா போறோம், நானும் வாரேனு சொல்லிட்டு இருக்க வழிய விடுப்பா வண்டிய எடுக்கட்டும்” என வண்டிக்குள் இருந்த படி தலையை மட்டும் வெளியே நீட்டி கூறினார் காளிமுத்து.
“சார் பஸ்ல இப்படி தலைய வெளிய நீட்டக்கூடாதுனு எங்கள சொல்லுவீங்க இப்ப நீங்க தலைய நீட்டிட்டு இருக்கீங்க” என்றான் அந்த ஆசாமி.
“ரொம்ப வெவரம் தான் டே, அது ஓடுற பஸ்சுல தான் நீட்டக்கூடாது. நான் நிக்கிற பஸ்சுல தான் தலைய வெளிய நீட்டிருக்கேன். நீ கொஞ்சம் மூடிக்கிட்டு ஓரமா வந்து நில்லு நான் வண்டிய எடுக்கட்டும்” என்றார் காளிமுத்து.
“நானும் வாரேனு சொல்லுதேன் ஓரம்போ ஓரம்போனா எப்படி சார்வால்”
“அண்ணே என்னணே இப்ப எத்தபன்ன”.
“பேசாமா எந்த ஊருனு கேட்டு வண்டில ஏத்து இராவைக்கு ஒருத்தன் இப்படி வந்து சேருறானுங்க நம்ம உசுர வாங்க”.
“யோவ் எங்க போனும்”?.
“நீங்க எங்க போறீங்க”?.
“அமெரிக்கா போறோம் வாரீயா?”.
“அம்மபுட்டு தூரம் போறத்துக்குலாமா உங்க நிர்வாகம் பெட்ரோல் போடுமா?”.
“ஏலேய் ஏத்தம் தான்டா உனக்கு?மூடிக்கிட்டு எங்கபோகனும்னு சொல்லு இல்ல வண்டிக்கு வழியவிட்டு நகரு”.
“கோவப்படாதீங்க கன்டெக்டர் சார், தென்காசி தான் போகனும்”?.
“சரி உள்ளார ஏறு. ஆனா வண்டில சலம்பக்கூடாது. சலம்புன வண்டி நிக்காத இடத்துல இறக்கிவிட்டுட்டு போயிடுவேன் பாத்துக்கோ.”
“இருக்குற இடம் தெரியாம இருப்பேன் கவலையே படாதீங்க சார்”
“இங்கன உட்காரத அங்கன போ”.
“ஏன் சார் ?இடம் காலியாதான இருக்கு”.
“இங்க லேடீஸ் இருக்காங்க நீ கடைசி சீட்டுக்கு போ”.
“அதான் ஆணும் பெண்ணும் சமம்னு சொல்லுதாங்களே பக்கத்து சீட்டுல உட்காந்த ஆவாதாக்கும்”.
“எலேய் உன்ன என்ன சொல்லி வண்டில ஏத்துனேன் ஏறுனதுமே லந்தக் குடுக்க”.
“கோவப்படாதீங்க கன்டெக்டர் சார் இனி ஒருவார்த்த பேச மாட்டேன் போதுமா” என்ற படியே கடைசி சீட்டுக்கு முன் சீட்டில் வந்து அமர்ந்தான்.
“இந்தா டிக்கெட்ட புடி, எடு பத்த” என்றபடி டிக்கெட்டை நீட்டினான் கதிர்.
சட்டையின் மேல் பாக்கொட்டில் இருந்து கசங்கி போன ஒரு பத்து ரூபாய் தாளை எடுத்து நீட்டி டிக்கெட்டை வாங்கிக்கொண்டவன் சீட்டில் குறுக்குவாக்காக கால்களை மடக்கி படுத்துக்கொண்டான்.
நடத்துனர் இருக்கைக்கு எதிர்புரம் உள்ள சீட்டில் வந்து அமர்ந்தான் கதிர்.
“என்னலே படுத்துட்டானா “
“ஆமாணே, இன்னும் ஊரு வந்ததும் துரைய எழுப்பி வேற விடனும். ஆனாலும் நம்ம பொழப்பு நாய் பொழப்பு தான் போங்க”.
இருள் கௌவிய சாலையில் மங்கலான தெருவிளக்கு வெளிச்சத்தில் ஆள்அரவமற்ற பேரூந்து நிலையத்தில் ஒரு பெண் மட்டும் தனியே நின்றிருந்தாள் .
“அண்ணே வண்டி சந்தை பக்கம் நிக்குமா?”
“நிக்கும் மா ஏறுங்க” என்ற படி கதிர் சைகை காட்ட வண்டியை இயக்க ஆரம்பித்தான் காளிமுத்து.
“யாரும் கூட்டுப்போக வருவாங்களாம்மா? “.
“ஆமா ண்ணே அப்பா வருவாங்க”.
“அப்ப சரி அடுத்த ஸ்டாப்புல வண்டி நின்னதும் போன்னு போட்டு வரச்சொல்லு நாம போகவும் சரியா இருக்கும்” என்ற படியே டிக்கெக்டை கொடுத்து விட்டு சென்றான் கதிர்.
“கன்டெக்டர் சார் “
“என்னலே”
“என்ன சார், உங்களுக்கு ஆம்பளைகள கண்டா ஆவாதாக்கும் . பெம்பள புள்ள கிட்ட மட்டும் சிரிச்சு சிரிச்சு பேசுறீய எங்கள கண்ட எரிஞ்சு விழுறீங்களே”.
“நீயும் அந்த புள்ளையும் ஒன்னாலே. அது பாவம் வேலைய முடிச்சிட்டு போது. ஒன்னாட்டம் போதைய போட்டுட்டு போகல”.
“சார் நாங்க ஒன்னும் சும்மா குடிக்கல பொழுதன்னைக்கும் குப்பைய அள்ளி அள்ளி உடம்பு வலிக்கு சார். அந்த நாத்தத்துல இப்படி தண்ணிய போடலைனா மனுசன் நிக்க முடியாது.”
“ஆமான்டா இது ஒரு சாக்கு உங்களுக்கு ஏன் உங்க கூட எத்தன பொம்பளைங்க வேலைபாக்காங்க அவங்களாம் இப்படியா தண்ணியடிக்காங்க. நீ தண்ணியடிக்கிறதுக்கு நொண்டி சாக்கு சொல்லாத”.
“சார் நானும் பாக்கேன் அப்பவே இருந்து நீங்க பொம்பளைங்களுக்கு தான் சப்போர்ட்டு பண்ணிட்டு இருக்கீங்க. ஒரு ஆம்பளையே ஆம்பளைக்கு சாப்போர்ட்டு பண்ணலைணா எப்படி?.”
“உன்னைய பேசாம இருக்கனும்னு சொல்லி தான் வண்டில ஏத்துனேன் சலம்புன இறக்கி விட்டுடுவேன் பாத்துக்கோ” என்று காளிமுத்து சொல்லவும் அமைதியானான்.
“அண்ணே நேத்து நம்ம மாரிமுத்துக்கு மெமோ குடுத்துட்டானுங்க”
“என்ன டே சொல்லுற அவன் நல்ல பையலாச்சே. அவனுக்கு எதுக்கு குடுத்தாங்க”.
“அது ஒன்னும் இல்லைணே முப்பத்து ரூபாய் டிக்கெட்டுக்கு ஐநூறு ரூபாய தூக்கி குடுத்துருக்கு ஒரு புள்ள. சில்லரை கொண்டுவர முடியாதானு சத்தம் போட்டுருப்பான் போல. அத வண்டில வந்த ஒருத்தன் வீடியோ எடுத்து பேஸ்புக்கல போட்டு பிரச்சனையாகிடுச்சு ணே . பயணிகள் கிட்ட அன்பா நடக்க தெரியலைனு மெமோ குடுத்துருக்கானுங்க”.
“ஆனா ஊனா ஒரு போன தூக்கிட்டுவந்து படம் புடிச்சிடுவானுங்க. மனசுல பெரிய ஜேம்ஸ்பாண்டுனு நினைப்பு. முப்பது ரூபாய் டிக்கெட்டுக்கு ஐநூறு ரூபாய் குடுத்த சில்லரைக்கு எங்க போகமுடியும். இனிமேல் டியூட்டிக்கு வரும்போது மடியில உண்டியல கட்டிட்டு தான் வரனும்.”
“ஹாஹா ஹாஹா”
“என்னடே பண்ண கழுதைக்கு வாக்கப்பட்ட மிதி வாங்கித் தான் ஆகனும். பேங்குல வேலை பாக்குறவங்கள பாரு அவங்களும் நம்மள மாதிரி மக்களுக்கு தான் வேலை பண்ணுறானுங்க. அங்கப்போற அம்புட்டு பேரும் கையக் கட்டிக்கிட்டு வாயப் பொத்திக்கிட்டு அவங்களுக்கு கட்டுப்பட்டு நிப்பாங்க. அவங்க எவனும் வீரத்தக் காட்ட மாட்டானுங்க. நம்மள மாதிரி அடி மட்டத்துல இருக்குறவன் கிட்டத்தான் வீரத்தக்காட்டுவானுங்க.
“அதச் சொல்லுங்கணே, எப்போதுமே நம்மள இளச்சவன தான் இந்தப் படிச்சவனுங்க ஏறி மிதிப்பானுங்க. சோறு தண்ணி திங்க கூட நேரமில்லாம, ஒண்ணுக்கு கூட போக வழியத்து போயி அடக்கிக்கிட்டு வேலை பாத்த இவனுங்க என்னமோ நம்மள பாடா படுத்துறாங்க” .என்றான் கதிர் இருவரின் பயணமும் பேருந்து நிலையத்தை நோக்கி சென்றது. தன்னுள் இருந்த ஓரிரு பயணிகளையும் இறக்கிவிட்டு தென்காசி பேருந்து நிலையத்துக்குள் வந்தது அந்த பேருந்து.


