“அச்சச்சோ” என்று இளவரசி கூறிய அந்த நேரத்தில் இடி இடித்து மின்னல் வெட்டியது.
லேசாக வைர ஊசி போல் மழைத் தூறல்கள் தூவ ஆரம்பித்தன.
“எலவரசி மழை வருது. மழை கனமா வாரத்துக்குள்ள ஊட்டுக்கு ஓடிரு” என்றார் பெரியம்மா.
“மழை எத்தனை கனமா வந்தாலும் நான் தொப்பறயா நலஞ்சாலும் நீங்க இந்தக் கதைய முழுசாச் சொன்னாத் தான் போவேன்”
“அட என்ற தங்கக் குட்டியே சொன்னாக் கேளு! மழையில் நனைஞ்சுட்டீனா உங்க அம்மா என்னைய தான் பேசுவா. அப்புறம் இங்க வர்றதுக்கே உன்ன உட மாட்டா”
“சரி! சரி! நான் இப்பப் போறேன். ஆனா நாளைக்குத் திரும்ப வருவேன். எனக்கு அந்த 200 வருஷத்துக்கு முன்னாடி நடந்த கதையச் சொல்லணும் செரியா?”
“சரி சரி இந்தா இந்தச் சாக்கு பையத் தலை மேல போட்டுட்டுப் போ. தலை நனஞ்சா சளிப் புடிச்சுக்கும்”
“அப்போ உங்களுக்கு?” “என்னைய இந்த மழை ஒன்னும் பண்ணிடாது. இந்த மழையும் வெயிலும் என் கூடவே பொறந்த பொறப்பு மாதிரி” என்று கூறி இளவரசியின் கன்னத்தைச் செல்லமாகத் தட்டிக் கொடுத்தார் பெரியம்மா.
பெரியம்மாவின் கைகளில் முத்தமிட்டு வானத்தை அண்ணாந்து பார்த்தாள். முகத்தில் விழுந்த மழைத்துளியை வழித்து எடுத்து முத்தமிட்டு பெரியம்மா கொடுத்த சாக்குப்பையைத் தலையில் போட்டுக்கொண்டு சிட்டாகப் பறந்தாள் இளவரசி.
அன்று சனிக்கிழமை வழக்கம் போல விளையாட்டு ஆரம்பமானது.
“போன வாரம் அம்மா என்ன பெருமாள் கோயலுக்குக் கூட்டிட்டுப் போயிருந்துச்சு. அங்க பொங்கல் குடுத்தாங்க. அவ்வளவு ருசியா இருந்துச்சு. கொஞ்சமாத் தான் குடுத்தாங்க. திருப்பியும் கேட்டேன். தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க”
என்றாள் விஜயா.
“எனக்கும் கூட ரொம்ப நாளா பொங்கல் நெறையாச் சாப்பிடணும்னு ஆசையா இருக்கு. ஆனா எப்பக் கோயலுக்குப் போனாலும் இத்தனூண்டு தான் தருவாங்க” என்றாள் இளவரசி.
“நான் அதைச் சாப்பிட்டதே இல்லை. எதுல செய்வாங்க? அது எப்படி இருக்கும்?” என்று ஆவலோடு கேட்டான் ஜோசப்.
“அரிசில தான் செய்வாங்க” என்றாள் இளவரசி.
“அது இனிப்பா? காரமா?” என்று கேட்டாள் மேரி
“அட அது இனிப்பு. அரிசி, சக்கரை, நெய், முந்திரி திராட்சை ஏலக்காய் எல்லாம் போட்டு வேகவச்சு செய்யறது தான் பொங்கல்” என்றாள் விஜயா.
“ஓ சக்கரை எல்லாம் போட்டுச் செய்வார்களா? அப்ப ருசியா இருக்குமே” என்றாள் மேரி.
“ஆமா அவ்வளவு ருசியா இருக்கும். நம்மளே அதைச் செஞ்சு பார்த்தா என்ன?” என்று ஒரு கேள்வியை முன் வைத்தாள் சுபா.
“அதுக்கு அரிசி, சக்கர,முந்திரி ஏலக்காய், திராட்சை நெய் இதெல்லாம் வேணும். பொங்கல் செய்யறதுக்கு ஒரு போசி வேணும். அதுக்கு எல்லாம் எங்க போறது?” என்று கேட்டாள் இளவரசி.
“ஊட்ல இருந்து எடுத்துட்டு வர வேண்டியது தான்” என்றாள் மேரி.
“ஊட்டுக்குத் தெரிஞ்சா அவ்வளவுதான் கொன்னு போட்டுருவாங்க”
“சரி ஒருத்தர் வீட்ல இருந்து மொத்தமா எடுத்தாத் தானே பிரச்சனை. ஒவ்வொருத்தர் வீட்ல இருந்து ஒவ்வொன்னு எடுத்துட்டு வரலாமே. வீட்டுக்கு தெரியாம யாருக்கும் தெரியாம” என்று கைகளைச் சுழற்றிச் சுழற்றிக் மர்மக் கதை சொல்பவளைப் போலக் கூறினாள் இளவரசி.
“இது நல்லா ரோசனையா இருக்குதே! சரி எங்க வீட்ல இருந்து நான் அரிசி கொண்டு வந்துடறேன்” என்றான் சுந்தர்.
“எங்க வீட்ல இருந்து முந்திரியும் திராட்சையும் ஏலக்காயும் கொண்டு வந்துடறேன். அம்மா பாயசம் செய்யறதுக்காக ஒரு ஜாடியில போட்டு வச்சிருப்பாங்க”என்று கிசு கிசுத் தான் ஜோசப்.
ஜோசப் சொன்னதுக்குத் தலையாட்டிக் கொண்டே “ஆமாம் ஆமாம்! நாங்க ரெண்டு பேரும் அம்மாவுக்குத் தெரியாம முந்திரி ஏலக்காய் திராட்சை எல்லாம் எடுத்துட்டு வந்துடறோம்” என்று கிசுகிசுத்தாள் மேரி.
“சரிப்பா அப்பன்னா நானே போசி எடுத்துட்டு வந்துடறேன். பருப்பு செய்ற போசி இருக்குது. காலையில மட்டும் தான் பருப்பு செய்வாங்க. அதுக்கப்புறம் அடுத்த நாள் காலையில தான் அது எடுப்பாங்க. நம்ம 11 மணிக்கு மேல பொங்கல் வெச்சுக்கலாம் சரியா? அப்பதான் சாப்பிட்டு முடிச்சுட்டு சாயந்திரதுக்குள்ள கழுவி கொண்டு போய் பழையபடி வைக்க முடியும்” என்றாள் விஜயா.
“சரி சரி நான் சர்க்கரை எடுத்துட்டு வந்துடுறேன்” என்றாள் இளவரசி.
எல்லோரும் பேசி முடித்து அந்த இடத்திலிருந்து கலைந்து சென்றார்கள். 11 மணிக்கு கருப்பராயன் கோவிலில் எல்லோரும் கூடினார்கள். அருகில் இருந்த அரச மரத்து நிழல் அவர்களுக்கு வசதியாக இருந்தது. சுற்றிலும் கிடந்த சுள்ளிகளைப் பொறுக்கி வந்து மூன்று கற்களை அடுப்பு போல் கூட்டினார்கள். விஜயா கொண்டு வந்திருந்த போசியை அதன் மேல் வைத்தார்கள்.
எல்லோரும் அவரவர் கொண்டு வந்திருந்த பொருட்களைக் காண்பித்தார்கள்.
“தண்ணிக்கு எங்க போறது?” என்று கேட்டாள் மேரி.
வாய்க்காலில் தண்ணீர் ஓடிக்கிட்டு இருக்குது. தண்ணி கட்றவங்க யாரையுமே காணோம். போய் நம்ம கொண்டு வந்துரலாம். ஆனா எதுல கொண்டு வரது” என்று கேட்டாள் விஜயா.
“அட இருங்கப்பா யோசிக்கலாம்” என்று எல்லோரும் யோசிக்க ஆரம்பித்தார்கள்.
அட இந்த போசியேவே கொண்டு போய் தண்ணி மோந்துட்டு வந்து வச்சுக்கலாம் என்று கூறினால் சுபா.
அந்தப் பூசையை எடுத்து க்கொண்டு ஓடி வாய்க்காலில் ஓடிக் கொண்டிருந்த தண்ணீரைப் பிடித்துக் கொண்டு வேகமாக வந்தாள் மேரி.
“அரிசி முதல்ல போடணுமா? தண்ணிய முதல்ல போடணுமான்னு தெரியுமா?” என்று கேட்டாள் மேரி.
“எனக்கும் தெரியலையே அரிசியாவே முதல்ல போட்டு தண்ணி ஊத்திடலாம். இல்ல இல்ல தண்ணிய முதல்ல வச்சு… இல்ல ரெண்டயுமே ஒண்ணா போட்டுடலாம்” என்றாள் இளவரசி.
அப்போதுதான் யாரும் தீப்பெட்டி எடுத்து வரவில்லை என்பதைத் தெரிந்து கொண்டார்கள்.
“இப்ப என்ன செய்றது?” என்று கேட்டான் ஜோசப்.
அந்த நேரத்தில் தூரத்திலிருந்து சைக்கிளில் யாரோ வந்து கொண்டிருப்பது தெரிந்தது. “ஜோசப் நீ ஓடிப்போய் பாதைல நின்னுக்கோ. அவங்க யாருன்னு பாரு. அவங்க பீடி குடிக்கிறவங்களா இருந்தா கண்டிப்பா தீப்பெட்டி இருக்கும். அவங்க கிட்ட வாங்கிட்டு வந்து பத்த வச்சுட்டு கொண்டு போய் கொடுத்துடலாம். சரியா?” என்றாள் இளவரசி.
சரி சரி என்று கூறிவிட்டு ஜோசப் ஓடிச் சென்று அந்த சைக்கிள் வரும் வழியில் நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருந்தான். சைக்கிளில் வந்தவரை பார்த்து மிரண்டு போனான் ஜோசப். சைக்கிளில் வந்தவர் அவருடைய பள்ளி ஆசிரியர் வினாயகம்.
ஆசிரியரைப் பார்த்தவுடன் மெதுவாகத் திரும்பி நடக்க ஆரம்பித்தான். “என்னடா பண்ற?” என்று கேட்டார் விநாயகம்.
“அது வந்துங்க சார். இங்க வெளையாடிகிட்டு இருந்தோம்” என்றான் ஜோசப்.
“இந்த நடுக்காட்டுக்குள்ள மத்தியான நேரத்துல என்ன விளையாட்டு? யார் அங்க நிக்கிறது?” என்று அரச மரத்தடியை நோக்கி கைநீட்டிக் கேட்டார் விநாயகம்.
“விஜயா மேரி இளவரசி சுந்தர் சுபா எல்லாரும் தான் அங்க இருக்காங்க சார்”
“அங்க எனன பண்றீங்க?”
“சாமி கும்பிட்டு இருக்கோம் சார்”
“சரி வா நானும் சாமி கும்பிடறேன்” என்றார் விநாயகம்.
“இல்ல சார். நீங்க கிளம்புங்க சார் “என்று பதறியபடி கூறினான் ஜோசப்.
“பரவால்ல வா! நீங்க என்னதான் விளையாடுறீங்கன்னு பாக்குறேன். ஆமா நீ இயேசு சாமியத் தான கும்பிடுவ? கருப்பராயனையும் கூப்பிடுவியா? என்று சிரித்துக் கொண்டே ஜோசப்பின் தோளில் கையை போட்டபடி ஜோசப்போடு நடந்தார் விநாயகம்.
“வார வாரம் இங்க தான் சார் வந்து விளையாடுவோம். விளையாடுறப்போ அவங்க எல்லாம் சாமி கும்பிடுவாங்க. நானும் கும்பிடுவங்க சார். ஒரு தடவை பரீட்சை ஈஸியா வரணும்னு இளவரசி இங்க வந்து கும்பிடுறப்ப நானும் கூட வந்தேன். நீயே சும்மா நிக்கிற நீயும் வேண்டிக்கோ எங்க சாமி கேட்டதெல்லாம் குடுக்கும் அப்படின்னு இளவரசி சொன்னா. நானும் பரீட்சை ஈசியா வரணும்னு வேண்டிகிட்டேன். அதே மாதிரி பரீட்சை ஈஸியா வந்துச்சு. அதிலிருந்து ஒவ்வொரு பரிட்சையப்பவும் வந்து இங்க வேண்டிக்குவேன். எங்க சாமி கிட்ட போய் சாமி சாமி மன்னிச்சிடுன்னு சொல்லிடுவேன்” என்றான் ஜோசப்.
“உங்க சாமி கிட்ட எதுக்கு மன்னிப்பு கேட்கிறே?” என்று கேட்டார் விநாயகம்.
“எங்க சாமி கோவிச்சுக்கக் கூடாதுல்ல அதுக்குத்தாங்க சார்” என்றான் ஜோசப்.
“அப்படியெல்லாம் கோவிச்சுக்க மாட்டாங்க. உனக்கு எந்த சாமி பிடிக்குதோ அதைக் கும்பிட்டுக்கோ” என்றார் விநாயகம்.
பேசிக்கொண்டே கருப்புசாமி கோயிலை அடைந்தார்கள். அங்கு அடுப்புக்கூட்டி விறகு உள்ளே வைக்கப்பட்டு தண்ணீர்ரோடு பாத்திரம் மேலே வைக்கப்பட்டிருந்தது.
“எல்லாரும் என்ன பண்றீங்க இங்க?” என்று கேட்டார் விநாயகம்.
“சார்…… நாங்க….. சாமிக்குப் பொங்க வைக்கலாம்னு வந்தோம்” என்று இழுத்து இழுத்து மெதுவாகக் கூறினான் சுந்தர்.
“என்னது பொங்க வைக்கிறிங்களா? யாருக்கும் தெரியாமலா?”
ஆமாங்க சார் தெரிஞ்ச ஊட்ல உட மாட்டாங்க. கண்டுபடி பேசுவாங்க. அதனால தான் தெரியாம ஒவ்வொருத்தர் வீட்டில் இருந்தும் ஒவ்வொன்னு எடுத்துட்டு வந்துட்டோம்” என்றாள் இளவரசி.
“சின்னப் பசங்க இப்படி எல்லாம் விளையாடக்கூடாது உங்க மேல தீ பிடிச்சிருச்சுன்னா? கிளம்புங்க கிளம்புங்க” என்றார் விநாயகம்.
“அதெல்லாம் ஒன்னும் பிடிக்காதுங்க சார் நாங்க பாத்துக்குவோம்” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் விஜயா.
“ஆமாம் சார் நாங்க மாசத்துக்கு ஒரு தடவை இந்த மாதிரி கூட்டாஞ்சோறு செய்வோம்” என்றாள் சுபா.
“ஓ இந்த டீமுக்கு நீதான் லீடரா?”
“எப்பவுமே எலவரசி தான் எல்லாத்தையும் செய்வா. ஆனா அடுப்பு வேலைன்னா எலவரசிக்குப் பிடிக்காது அதனால” இன்று இழுத்தாள் விஜயா.
“சரி பொங்கல் செஞ்சு எனக்குக் கொஞ்சம் தரீங்களா?” என்று சிரித்தபடியே கேட்டார் விநாயகம். “செஞ்சு தரோம் சார். ஆனா தீப்பெட்டி எடுத்துட்டு வராம வந்துட்டோம்” என்றாள் இளவரசி. “அட அதான விஷயம். இருங்க இருங்க என்னோட சைக்கிள் இருக்குது. இப்பத்தான் மளிகை சாமான்கள் வாங்கிட்டு வந்ததேன். அதுல தீப்பெட்டி இருக்கு எடுத்துட்டு வரேன்” என்று கூறிச் சென்று பையில் இருந்த தீப்பெட்டியை எடுத்து வந்து கொடுத்தார்.
கோயிலின் முன்னால் இருந்த திண்ணையில் அனைவரும் அமர்ந்தார்கள். விஜயா அடுப்பைப் பற்ற வைத்து தண்ணீரில் அரிசியைப் போட்டு வைத்தாள்.
அரிசி பாத்திரத்தில் தள தள வென்று கொதிக்க ஆரம்பித்தது.
சரி எல்லாரும் கெணத்துக்குப் பக்கத்துல இருக்குற அரளிப் பூவப் போய் பொறிச்சிட்டு வாங்க. நீங்க பொறிச்சுட்டு வர்றதுக்குள்ள பொங்கல் ரெடியாயிடும்” என்றாள் விஜயா.
“அரளிப்பூவா எதுக்கு?” என்று கேட்டார் விநாயகம்.
“சாமிக்கு அலங்காரம் பண்றதுக்குத் தாங்க சார். சாமிக்கு பூஜை பண்ணி பொங்கல படச்சிட்டுத் தான் நாங்க சாப்பிடுவோம். அப்படியே அந்த வப்பாளி இலையையும் பொறிச்சுட்டு வாங்க” என்றாள் விஜயா.
எல்லோரும் கிணற்றடிக்கு கிளம்பினார்கள். அரளி பூக்களைப் பறித்து விட்டு, பப்பாளி இலைகள் இரண்டு மூன்றை ஒடித்துக் கொண்டு வாய்க்காலில் ஓடிய தண்ணீரில் அவற்றை எல்லாம் கழுவி எடுத்து வந்தார்கள்.
அந்த நேரம் திடீரென்று வானம் இருள் கவ்வியது. “அடடா மழை வர்ற மாதிரி இருக்குது நான் வீட்டுக்கு கிளம்புறேன். நீங்களும் கிளம்புங்க. நாளைக்கு வந்து செஞ்சுக்கோங்க” என்று கூறிவிட்டு விநாயகம் வேகவேகமாக சைக்கிள் எடுத்துக் கொண்டு கிளம்பினார். “அச்சச்சோ இப்ப என்ன செய்யறது?” என்று கேட்டாள் சுபா.
“அரிசி வெந்துருச்சா?” என்று கேட்டான் ஜோசப்.
“இன்னும் வேகலையே” என்றாள் விஜயா.
“பரவால்ல. எந்த வரைக்கும் இருக்கட்டும். இந்தச் சக்கரை எடுத்து உள்ள கொட்டிடலாம். நெய் முந்திரியும் திராட்சையும் போட்டு, ஏலக்காய கல்லுல வச்சுக் கொட்டி உள்ள போட்டுடலாம்” என்று வேக வேகமாகக் கூறினாள் விஜயா விஜயா சொன்னதை அனைவரும் செயல்படுத்தினார்கள். அரைவேக்காட்டோடு இருந்த அரிசிக்குள் சர்க்கரையும் முந்திரி திராட்சையும் ஏலக்காயும் கலந்தது. தன்னுடைய பாவாடையில் சுடு பாத்திரத்தை பிடித்து எடுத்துக் கொண்டு தோட்டத்தில் இருந்த மோட்டார் இருந்த சாலைக்குள் நுழைந்தார்கள். அருகில் இருந்த சிறிய பப்பாளி மரத்தின் இலைகளை உடைத்தார்கள். வாய்க்காலில் கழுவி பொங்கலை எடுத்து இலையில் போட்டார்கள். அந்த மழை ஈரத்தில் அந்த பொங்கல் வாசனையே தேவாமிர்தமாக இருந்தது. கோவில்ல கொடுத்த பொங்கலு தங்கக் கலர்ல இருந்துச்சு. இது என்ன வெள்ளைக் கலர்லை இருக்குது?” என்று கேட்டாள் விஜயா. “ஒருவேளை நாட்டுச் சக்கரை போடணுமோ? அதுதான் தங்கக் கலர்ல இருக்குது”
“ஆட ஆமா நம்ம மாகாளியத்தாலுக்கு பொங்க வைக்கும் போது எங்க அப்பா கட்டி மாதிரி இருந்த நாட்டு சர்க்கரையை தான் வாங்கிட்டு வந்திருந்தார். மறந்தே போச்சு. சரி சரி விடு கலரு எப்படி இருந்தா என்ன ருசியா இருந்தாப் போதும் ” என்றாள் இளவரசி.
பாதி வெந்தும் வேகாமலும் இருந்த பொங்கலை அனைவரும் இலையிலிருந்து உறிஞ்சி உறிஞ்சிக் குடித்தார்கள்…
ஏய் இதுவரைக்கும் இப்படி ஒரு ருசியை நான் சாப்பிட்டதே இல்லை என்று மாற்றி மாற்றி ஒவ்வொருவரும் கூறினார்கள்.
அந்த நேரத்தில் சாலையில் வேயப்பட்டிருந்த ஓலையில் சலசல என்று சத்தம் கேட்டு அனைவரும் திரும்பினார்கள் அங்கே…
-வளரும்.

சரிதா ஜோ
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சரிதா ஜோ தமிழிலும் உளவியலிலும் முதுகலை பட்டமும் கல்வியியலில் நிறைஞர் பட்டமும் பெற்றவர். கதை சொல்லியாக தமிழ் இலக்கியத்திற்குள் பயணத்தை தொடங்கிய இவர் ஏராளமான சிறார் புத்தகங்கள் எழுதியுள்ளார்.

