முக்திநாத் செல்ல வேண்டுமென்றால் காத்மாண்டில் இருந்து போக்கரா வழியாகத்தான் போக முடியும். இமயமலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் நகரான போக்கராவை நேபாளத்தின் கோவா என்று சொல்லுமளவுக்கு மிக முக்கிய சுற்றுலாத்தலம். பாரா கிளைடிங், பங்கீ ஜம்பிங் போன்ற சாகச விளையாட்டுகளை இங்கு மேற்கொள்ள முடியும். சில நாள்கள் முன்புதான் பெங்களூர் ஆகாஷ் போக்கரா பற்றிச் சொல்லியிருந்தான். காலில் கயிற்றைக் கட்டியபடி பள்ளத்தாக்கில் குதிக்கும் பங்கீ ஜம்பிங் செய்வதற்காகவே அவன் போக்கராவுக்கு வந்திருக்கிறான். இந்தியாவிலும் பங்கீ ஜம்பிங் செய்வதற்கான தளங்கள் இருக்கின்ற போதிலும் அவன் போக்கரா வந்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. உலகிலேயே இரண்டாவது உயரமான பங்கீ ஜம்பிங் தளம் போக்கராவில்தான் இருக்கிறது என்பதால் அங்கே குதிக்கும் சாகச அனுபவம் வேண்டி அவன் வந்திருக்கிறான். அத்தளத்தில் இருந்து குதிக்க 17 ஆயிரம் நேபாள ரூபாய்க் கட்டணம் என்று சொன்னான். குஷி படத்தில் ‘மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்’ பாடலில் விஜய் குதிப்பதைப் பார்த்தபோதே அப்படியொரு சாகச உணர்வின் மேல் மனம் பற்றுக் கொண்டிருந்தாலும் அதற்காக ஆயிரங்களில் செலவு செய்கிற நிலை இல்லாததால் ஒன்றைத் தெளிவுபடுத்திக் கொண்டேன். நான் செல்வது முக்திநாத் கோயிலுக்குத்தானே தவிர போக்காரவுக்கு இல்லை. போக்கரா வழியாகச் செல்கிறேன் அவ்வளவுதான்.
காத்மாண்டில் இருந்து ஆம்னி பேருந்தில் 12 மணிநேரப் பயணத்தில் போக்கராவை வந்தடைந்தேன். காத்மாண்டைக் காட்டிலும் போக்கரா செலவீனங்கள் மிகுந்த நகரம் என்பதால் குறைந்த வாடகையில் அறை தேடுவதுதான் முதல் சவாலாக இருந்தது. பல விடுதிகள் நிறைந்து கிடந்தன. போக ஆயிரம் ரூபாய் வாடகை என்றனர். (இப்பயணத்தில்நான் குறிப்படுவது நேபாள் ரூபாய்) இறுதியாக ஒரு விடுதி அறையை 700 ரூபாய் வாடகைக்குப் பேசி முடித்தேன். காத்மாண்டில் இதைவிடப் பெரிய அறையில் 500 ரூபாய் வாடகைக்குத் தங்கியிருந்தேன். அங்கு சைவ சாப்பாட்டின் விலை சராசரியாக 180 ரூபாய். இங்கோ 250 ரூபாய். எல்லாமே விலை அதிகம். சமூக வலைதளங்களின் எழுச்சிக்குப் பிறகு சுற்றுலாத் தலங்கள் எல்லாம் அபரிமிதமான வளர்ச்சி கண்டிருக்கின்றன. அது நல்லதுதான் என்றாலும் என்னைப் போன்றபட்ஜெட் பயணிகள்தான் கொஞ்சம் தடுமாற வேண்டியிருக்கிறது.
இமயமலையில் 3800 மீட்டர் உயரத்தில் அமையப் பெற்றிருக்கும் முக்திநாத் கோயில் அன்னப்பூர்ணா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அமைந்திருக்கிறது. இந்தப் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் எங்கு செல்வதானாலும் நேபாளி அல்லாதோருக்கு பெர்மிட் அவசியம். இந்த பெர்மிட்டுக்கு இந்தியர்களுக்கு 1000 ரூபாய். சார்க் நாடுகளுக்குள் இல்லாத வெளிநாட்டவர்க்கு 3000 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த பெர்மிட் 6 மாத காலத்துக்கு செல்லுபடியாகும். போக்கராவில் உள்ள அன்னப்பூர்ணா கன்சர்வேசன் அலுவலகத்துக்குச் சென்று எனது விபரங்களைக் கொடுத்து பெர்மிட் பெற்றுக் கொண்டு அறைக்குத் திரும்பினேன். நல்ல ஓய்வு மட்டுமே தேவைப்பட்டதால் போக்கராவில் இரவு உலா கூட செல்லவில்லை. அமைதியாகப் படுத்து சிறிதுநேரம் செல்போனில் லயித்திருந்த போதுதான் தெரிந்தது அன்றைக்கோடு எனது பயணம் தொடங்கி 50 நாள்களை நிறைவு செய்திருக்கிறேன் என்பது. இந்தப் பயணத்தைத் தொடங்கும்போது ஓராண்டு காலம் இப்பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டிருந்தேன். அதற்கான சாத்தியங்கள் குறைவு என்றாலும் அப்படியொரு இலக்கு தேவையாக இருந்தது. அதன்படி 50 நாள்கள் என்பது எனது இலக்கின் முதல் வெற்றி. ஓராண்டை நிறைவு செய்வேன் என்பதில் சிறிது ஐயப்பாடு இருந்தாலும் அடுத்து நூறாவது நாளைக் கொண்டாடுவேன் என்பதில் உறுதியாக இருந்தேன். குமரியில் தொடங்கிய பயணத்தின் 50வது நாளை நிறைவு செய்ததும் இமயத்துக்குச் செல்லப்போகிறேன் என்பதை நினைக்க சற்றே சிலிர்ப்பு எழுந்தடங்கியது.



அடுத்த நாள் காலை எழுந்ததும் தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு விடுதியிலேயே எனது பேக் பேக்கை வைத்து விட்டு முக்திநாத்துக்குக் கிளம்பினேன். முக்திநாத் செல்வதெல்லாம் தனியார் பேருந்துகள்தான். ஒரு நபருக்கு ஆயிரம் ரூபாய்க் கட்டணத்தில் கூட்டிப்போகிறார்கள். போக்கராவில் இருந்து முக்திநாத் 160 கிலோ மீட்டர்தான் என்றாலும் மலைப்பாதைப் பயணம் என்பதால் ஒரு நாள் முழுவதும் பயணிக்க வேண்டியிருக்கும். போக்கராவில் இருந்து கிளம்பிய சில மணி நேரங்களில் பேருந்து கடினமான மலைப்பாதையில் பயணித்தது. முக்திநாத் மிகமுக்கிய வைணவத்தலம். 108 திவ்ய தேசங்களில் 105வது திவ்ய தேசம். நேபாளுக்கு வருகிற இந்துக்கள் தவறாமல் செல்லும் அத்தலத்துக்குச் செல்கிற பாதையில் சீரான சாலை வசதிகளே அமைக்கப்படவில்லை. சீரற்ற மண் சாலையில்தான் செல்ல வேண்டியிருந்தது. பின்புற இருக்கையில் அமர்ந்திருந்த நான் பறந்து பறந்து விழுந்து கொண்டிருந்தேன். சில நேரங்களில் இடமும் வலதுமாய் அல்லாடிக் கொண்டிருந்தேன். இப்படியான பயணம் நிச்சயமாக உடலைச் சோர்வாக்கி விடும். பனி மூடிய மலை முகடுகளைப் பார்த்தபடியே பயணப்பட்டது ஒன்றுதான் ஆறுதலைத் தந்தது. 180 கிலோ மீட்டர் பயணத்துக்கு ஒரு நாள் முழுவதையும் தர வேண்டியிருப்பது இந்தச்சீரற்ற மண் சாலையில் பயணிப்பதால்தான். அப்பாதைநெடுகிலும் இலைகள் உதிர்ந்து காய்ந்து நிற்கும் மரங்களையும் வெட்டிக்குடையப்பட்ட மலைமுகடுகளையும்தான் பார்க்க முடிந்தது. வழி நெடுகிலும் பாதையோரம் கற்களும் சிறு பாறைகளுமாககொட்டிக் கிடந்தன. பெருமளவில் ஒற்றையடிப் பாதையில்தான் பேருந்து பயணித்தது. அப்பாதையின்ஒருபுறத்தே பக்காவாட்டு விளிம்பில் எந்தத் தடுப்பும் இல்லாதது பதட்டத்தை உண்டாக்கியது. சற்றேதவறினாலும் பெரும் பள்ளத்தாக்கில் விழுந்து விடுவோம் என பதறப் வைக்கும்படியாக அவ்வப்போதுஅச்சாலையின் விளிம்பைத் தொட்டுத் தொட்டுப் போய்க்கொண்டிருந்தது பேருந்து. ராட்டினத்தில்சுழல்கையில் மேலிருந்து கீழே இறங்கும்போது அடி வயிற்றில் உண்டாகிக் கிளம்பும் மின்சாரப்பாய்ச்சலை ஒவ்வொரு கணமும் உணர்ந்தபடியே போய்க்கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் ஓட்டுநரை முழுமையாக நம்பி அப்பதட்டத்திலிருந்து மீண்டேன். இருள் படிவதற்கு முன்பாகப் போய் விட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால்நான் தீர்மானிக்க இங்கே என்ன இருக்கிறது.
12 மணி நேரப்பயணத்துக்குப் பிறகு இரவாகி விட்டதால் ஜொம்சம் நகரில் பேருந்து நிறுத்தப்பட்டது. ஜொம்சம்மிக முக்கியமான நகரம். விமானம் வழியாக முக்திநாத்தை அடைய விரும்புபவர்களுக்கு ஜொம்சம்வரையிலும் விமானப் போக்குவரத்து இருக்கிறது. ஜொம்சமில் இருந்து அடுத்த நாள் காலை 6 மணிக்குப் பேருந்து முக்திநாத் கிளம்பும் என்றும்இரவு இங்குள்ள விடுதியில் தங்கிக் கொள்ளும்படியும் சொன்னார்கள். அங்குள்ள விடுதியில் 500 ரூபாய்க்குஅறை ஒன்றினை வாடகைக்கு எடுத்துத் தங்கி விட்டேன். களைப்பின் காரணமாக உடல் ஆழ்ந்த உறக்கத்துக்குப் போயிருந்தது. அப்படியிருந்தும் மூளையில் ஓடிக்கொண்டிருக்கும் கடிகாரம் என்னை 6 மணிக்கு முன்னதாகவே எழுப்பி விட்டது.
குளிரின் பாகை பூஜ்ஜியத்துக்கும் குறைவாக இருந்த வேளையில் அனைவரும்விடுதியிலிருந்து தயாராகிக் கிளம்பிய பிறகு பேருந்து புறப்பட்டு 20 கிலோ மீட்டரைக் கடந்த பிறகுகாக்பெனி எனும் ஊரில் நிறுத்தப்பட்டது. இங்குள்ள கண்டகி ஆற்றங்கரையில் சடங்குகள் செய்யப்படுகின்றன.அகன்று விரிந்து பாய்ந்து கொண்டிருந்த கண்டகி ஆற்றின்கரைப் பகுதி முழுவதிலும் சடங்குகள் செய்வதற்கான பொருள்களோடு சாளக்கிராமக் கற்களைகூடைகளில் வைத்து விற்பனை செய்துகொண்டிருந்தனர். சாளக்கிராமம் என்பது ஓர் உயிரினப் படிமம். மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நத்தை ஓடுகளின் படிமம் திருமாலின் சங்குச் சக்கரத்தின் ஓர்மை கொண்டிருப்பதால் திருமால் இந்தச் சாளக்கிராமக் கல்லில் அருவமாய் இருக்கிறார் என்பது இந்து மத நம்பிக்கை. லிங்க வடிவில் சிவனை வழிபடுவதைப் போல சாளக்கிராம வடிவில் பெருமாள் வழிபடப்படுகிறார். முக்திநாத் செல்கிறேன் என்றதும் சாளக்கிராமத்தை வாங்கி வரும்படி அண்ணன் தமிழ்ச்செல்வன் சொல்லியிருந்தார். பூஜையறையில் வைத்து வழிபடுவதற்காக அனைவரும் சாளக்கிராமத்தை வாங்கிச் செல்கின்றனர். இந்தியாவிலும் சாளக்கிராமம் கிடைக்கிறது என்றாலும் அதுவும் இந்தக் கண்டகி ஆற்றில் இருந்து எடுக்கப்பட்டதுதான். இந்தியாவில் சாளக்கிராமத்தின் விலை சராசரியாக 4 ஆயிரம் ரூபாய். கண்டகி ஆற்றங்கரையில் மிகவும் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. நான் ஓரளவுக்குப் பெரிய கல்லைத் தேர்வு செய்து 600 நேபாள் ரூபாய்க்குப் பேரம் பேசி வாங்கினேன். காக்பெனியில் இருந்து மீண்டும் பேருந்து புறப்பட்டு முக்திநாத் கோவிலின் அடிவாரத்துக்குச் சென்று இறக்கி விட்டதோடு பயணத்தை நிறைவு செய்தது. அடிவாரத்தில் இருந்துசுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவு மலையேற்றத்தின் மூலம் கோவிலை அடையலாம். நடைபாதை வழியேஏறிச்செல்ல முடியாதவர்கள் குதிரை மற்றும் கழுதையின் கலப்பில் உருவாகிய கச்சர் மீதேறி கோவிலை அடையலாம். கழுதையின் உயரத்தில் குதியரையின் தோற்றத்தைக் கொண்டிருப்பதுதுதான்கச்சர். பொதியென மனிதர்களைச் சுமந்து போகவும், எளிதில் ஏறிக்கொள்ள முடிகிற உயரத்துக்காகவும்இந்தக் கலப்புத் தேவைப்பட்டிருக்கிறது. கீழே இருந்து முக்திநாத் கோவில் நெடுந்தொலைவு ஒன்றும் இல்லை என்பதால் பெரும்பாலானவர்கள் படிகள் வழியாகத்தான் ஏறிச்செல்கின்றனர். முதியவர்கள் மட்டும் கச்சர் மீதேறி வருகின்றனர்.

புகை போலப் பனி மூட்டம் முழுமையாகச் சூழ்ந்திருந்த வேளையில் நடைபாதை வழியாக ஏறிச்சென்றேன். சிறு தொலைவு சென்ற பிறகு முக்திநாத் கோவிலின் வரவேற்பு வளைவினுள் நுழைந்து சென்றால் அதன் பிறகு பாதையின் இருபுறத்திலும் மரங்கள் நெடுக இருந்தன. ஆனால்அவற்றில் ஒரு மரத்தில் கூட ஒரு இலையும் இல்லாமல் கிளைகள் அனைத்தும் கம்பியினைப் போலதடித்து நீண்டிருந்தன. களைப்பு முற்றிலும் அகன்றிருக்காத நிலையில் ‘இதோ வந்து விட்டது…இதோ… இதோ’ எனச் சொல்லியபடியே முக்திநாத் கோவிலை அடைந்தேன். தென் நாட்டுக் கோயில்களிலில்தான் நெடிதுயர்ந்து எழுப்பப்பட்ட கோபுரங்களைப் போன்ற பிரம்மாண்டத்தையெல்லாம் காண முடியும். வட நாட்டுக் கோயில்களில் அந்த பிரம்மாண்டமெல்லாம் இல்லை. முக்திநாதர் கோயிலின் பிரதானசன்னதியின் மேலே நேபாளத்து பகோடா பாணியிலான சிறிய கோபுரம் மூன்று நிலைகளில் எழுப்பப்பட்டிருந்தது. அதனைச்சுற்றி கோயிலின் சுற்றுச்சுவர் கருங்கற்களால் எழுப்பப்பட்டிருக்க மேற்கூரை மரத்தால்வேயப்பட்டிருந்தது. மரத்தால் அமைக்கப்பட்டிருந்த கோயிலின் நுழைவு சிற்ப வேலைப்பாடுகளால்ஆகியிருந்தது. நுழைவுக்கு எதிரே இரண்டு தொட்டிகள். அவைதான் இக்கோயிலின் திருக்குளங்கள். தரிசனத்துக்கு வரும் பெரும்பாலானோர் இத்தொட்டிகளில் குளித்து விடுகிறார்கள். குழந்தைகள்,முதியோர்கள் என்கிற வேறுபாடே இல்லை. கோவிலைச் சுற்றி ‘ப’ வடிவில் 108 தீர்த்தக்குழாய்களில் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தது. பசு மாட்டின் தலையின் வடிவில் அக்குழாய்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதன் வாயிலிருந்து ஊற்றும் நீருக்குக் கீழே ஓடிச்சென்றபடி பலரும் அந்த கோமுகத் தீர்த்தத்தில்குளிக்கின்றனர். பனிமூட்டம் படர்ந்திருந்த வேளையில் குளிரின் பாகை 3 என்றிருக்க அந்தக்குளிர்ந்த நீரில் குளிக்கும் மனதிடம் எனக்கு வாய்க்கவில்லை. ஏனென்றால் நான் பயணி… அவர்கள் பக்தர்கள். ஆகவே தீர்த்தக்குழாயிலிருந்து தண்ணீரைப் பிடித்துத் தலையில் தெளித்துக்கொண்டேன். ஆம்… குளித்தாகி விட்டது.
இக்கோயிலில் மணியைக் கட்டி வேண்டுதல் வைக்கும் வழக்கம் இருப்பதால் கொத்துக் கொத்தாக மணிகள் தொங்கிக் கொண்டிருப்பதை பல இடங்களில் காண முடிந்தது. பெரும்பாலும் பெண்கள் எல்லோரும் தீபங்கள் ஏற்றுவதில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தனர். கோயிலின் பின்புறத்தில் எழுந்திருக்கும் மலையிலும், சூழ்ந்திருக்கும் மரங்களிலும் பசுமையும் இல்லாமல், பனிப்பொழிவின் வெண்மையும் இல்லாமல் காய்ந்திருந்தது. சற்றுநேரத்தில் எல்லாம் சிறிதாக பனிமழை பொழிந்தது ஆனால் அது அப்பரப்பை வெள்ளைக்காடாக்கும் அளவுக்கு அதிகமாகப் பொழியவில்லை. தரிசனத்துக்காக கோயிலுக்குள் பிரவேசிக்கும் பொருட்டு செருப்பைக் கழற்றி விட்டுத் தரையில் கால் வைத்தபோது பனிக்கட்டியின் மீது நடப்பதைப் போன்ற உணர்வு மேலெழும்படி பாதங்களில் கடுங்குளிர்ச்சியின் கொடியவலி பரவியது. கோயிலுக்குச் செல்வதற்கான சிறிய வரிசையில் நின்றபடி ஒரு கால் மாற்றி ஒரு காலை வைத்தும் எந்தப் பயனும் இல்லை. ஓரத்தில் கிடந்த ஒரு சவ்வுத்தாள் பையினை எடுத்து அதன் மீது நின்று கொண்டேன். அதுவும் முழுமையாகப் பயன் தரவில்லை. ஆனால் அந்த வரிசையில் பலரும் வெகு இயல்பாக நின்றுகொண்டிருந்ததைப் பார்த்த போதுதான் குளிருக்குப் பழக்கப்படாதவை என் பாதங்கள் என்பது புரிந்தது.
அதிநீண்ட நேரக் காத்திருப்பெல்லாம் தேவைப்படவில்லை. சற்று நேரத்திலேயே சன்னதிக்குள் நுழைந்து வழிபட முடிந்தது. திருமங்கையாழ்வாராலும், பெரியாழ்வாராலும் மங்களசாசனம்செய்யப்பட்ட முக்திநாத க்ஷேத்திரத்தில் நின்றிருக்கிற உணர்வே பேருவகை கொள்ளச்செய்தது. தேவிகளோடு அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிற பெருமாளை இவ்வளவு அண்மையில் கண்டுதரிசிப்பேன் என நினைத்திருக்கவில்லை. பனி போல உறைந்து சில நிமிடங்களேனும் எந்த இடையூறுமின்றிபெருமாளைக் கண்கள் நிறையப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும் என்று மட்டும் தோன்றியது. அதற்கான வாய்ப்பு அங்கு குறைவுதான். கைகள் மேலுயர ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு பெருமாளையும் தேவிகளையும் தரிசித்தேன். நிறைவான தரிசனத்துக்குப் பிறகு கோயிலில் இருந்து சிறு தொலைவில் பேருருவாய் எழுந்திருக்கும் புத்தர் சிலையைக் கண்டு வழிபடச் சென்றேன். முக்திநாத் இந்துக்களுக்கு மட்டுமின்றி பௌத்தர்களுக்கும் முக்கியமான தலம்தான். இங்கே புத்தர் அவலோகிதரராக வழிபடப்படுகிறார். முக்திநாதர் கோயிலுக்கு அண்மையிலேயே புத்த மடாலயம் ஒன்றிருக்கிறது. நான் மடாலயம் செல்லாமல் சற்றுத் தள்ளியிருக்கும் இந்த புத்தர் சிலையைக் காண வந்தேன். பின்னணியில் நீண்டிருக்கும் மலைத்தொடரை பனிமூட்டம் முழுமையாகச் சூழ்ந்திருக்க புத்தர் அமர்ந்திருக்கும் கோலம் அவர் இந்த இமயத்திலிருந்து உலகை பேரமைதியோடு பார்த்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது.
முக்திநாத் கிராமத்துக்குத் திரும்பினேன். மறுநாள் காலை போக்கரா செல்லும் பேருந்தில் முன்பதிவு செய்து விட்டு முக்திநாத்திலேயே அன்றிரவு தங்கினேன். சாளக்கிராமக் கற்கள் அங்கும் விற்கப்பட்டன. உருளையான கற்களை உடைத்து அதனை மீண்டும் ரப்பர் பேண்ட் போட்டு சேர்த்து வைத்திருந்தனர். அதனைப் பிரித்தால் உள்ளே நத்தை ஓட்டின் படிமம் இருக்கும். தன்னுள் இன்னும் எத்தனை கோடி உயிரின் படிமத்தை இந்தக் கண்டகி ஆறு கொண்டிருக்கும் என்பதை நினைக்கையில் பிரம்மிப்பாக இருந்தது.

அன்றிரவு குளிரின் பாகை சுழியத்துக்கும் குறைவாகச் சென்றிருந்தது. தங்கியிருந்த விடுதியிலேயே உணவகமும் இருந்தது. சௌமினை சற்றே சகித்துக் கொண்டு உண்ட பிறகு போர்வையை இழுத்துப் போர்த்தி படுத்தேன். இது மேற்கொண்டு எதுவும் தேவையில்லை என்கிற நிறைவை மனம் அடைந்தது. அந்நிறைவு இயல்பாகவே பெருமகிழ்ச்சியை உண்டாக்கும். அப்படியொரு மகிழ்வோடுதான் அன்று தூங்கினேன்.
போக்கராவுக்குத் திரும்பிய பிறகு நேபாளத்திலிருந்து கிளம்புவதென முடிவெடுத்தேன். அடுத்ததாய் நான் செல்லத் தீர்மானித்தது காசிக்கு. 2015ம் ஆண்டு முதன் முதலாகக் காசிக்குச் சென்று இரண்டு நாள்கள் மட்டும் தங்கியிருந்தேன். அது எனக்குப் போதவில்லைதான். அப்போது குங்குமம் தோழி இதழில் நிருபராய் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். காசி, கயா, டார்ஜீலிங் என்று ஒரு பயணத்திட்டத்தை வகுத்து அலுவலகத்தில் விடுப்பு எடுத்துக் கொண்டு வந்தேன் என்பதால் என்னிடம் போதிய நேரம் இருக்கவில்லை. ஆனால் இப்போது அப்படியல்ல. காசியில் குறைந்தபட்சமாக 20 நாள்களேனும் வாழ வேண்டும் என்கிற முடிவில் காசிக்குக் கிளம்பினேன்.
போக்கராவில் இருந்து காசிக்குப் போக வேண்டுமென்றால் இந்திய – நேபாள் எல்லை நகரான சுனாலிக்குச் செல்ல வேண்டும். அங்கே நாம் எல்லையைக் கடந்து உத்தரப்பிரதேச மாநிலத்துக்குள் நுழைந்தால் கோரக்பூருக்குப் பேருந்து கிடைக்கும். கோரக்பூரிலிந்து காசிக்கு பேருந்தில் வந்து விடலாம். சுனாலிக்கு முன்பதிவு செய்திருந்த பேருந்தில் ஏறிய போது எனது இருக்கையில் ஒரு பெண் உட்கார்ந்திருந்தார். அருகே ஓர் ஆண். நிச்சயம் அவரது கணவராகத்தான் இருக்க முடியும். நான் இது எனது இருக்கை எனச் சொன்னபிறகு அந்தப் பெண் எழுந்து பேருந்தின் முன்பகுதிக்குச் சென்றார். பின்னர் அவரது கணவரையும் அங்கே இடம் இருந்ததால் அழைத்தார். அவரோ ‘நான் வரவில்லை. நீ உட்கார்’ என்பதாக சைகை செய்தார். நல்ல துணிச்சலான நபர்தான். தம்பதியர் எல்லா நேரமும் ஒட்டி உரசியபடியே இருப்பதை விரும்புவதில்லைதான். எங்களுக்குள் பரஸ்பர அறிமுகம் உண்டானது. அவர் பெயர் ராஜன் சேத்ரி. டெல்லியைச் சேர்ந்தவர். மனைவியோடு போக்கராவுக்கு சுற்றுலா வந்திருக்கிறார். எனது பயணத்தைப் பற்றி அவர் கேட்க ஆரம்பித்து இந்திய அரசியல் வரை நிறையப் பேசினோம். புதியவர்களுடன் உரையாடுவதில் பலருக்கும் ஆர்வம் இருக்கிறதுதான். அதற்கான சூழல் பயணங்களில் மட்டும்தான் கச்சிதமாக அமைகிறது. ஆகவேதான் ‘ரயில் சிநேகிதம்’ என்கிற சொல்லாடலே பிறந்திருக்கிறது. புலராத அதிகாலையில் சுனாலியை அடைந்தோம். இருவரும் அலைபேசி எண்களைப் பரிமாறிக் கொண்டு விடைபெற்றோம்.
சுனாலியில் நேபாள் எல்லையைக் கடக்க எந்தத் தடுப்புச் சோதனைகளுமில்லை. நேபாள் பணத்தை இந்தியப் பணமாக மாற்ற வேண்டுமா என்று ஒருவர் கேட்டார். என்னிடம் இருந்ததோ வெறும் 25 ரூபாய் என்பதால் நேபாளத்தின் நினைவாக அதனை வைத்துக் கொண்டேன்.
கோரக்பூர் வந்து காசிக்குப் பேருந்து ஏறியபோதுதான் வெயிலின் தகிப்பை உணர்ந்தேன். அன்று மே 1ம் தேதி. இப்பயணம் தொடங்கியதிலிருந்து இதுவரையிலும் பெரும்பாலும் மலைப்பிரதேசங்களில்தான் பயணித்திருக்கிறேன். சமவெளிகளிலும் கூட வெயிலின் தாக்கம் பெரியதாக இருக்கவில்லை. இப்போது கோடைக்காலத்தில் உத்தரப்பிரதேசத்துக்கு வந்திருப்பதால் வெய்யோனுக்கு அண்மையில் வந்துவிட்ட உணர்வு மேலெழுந்தது. இதற்கு முன்பு காசிக்கு டிசம்பரில் வந்திருக்கிறேன். கிரகித்துக் கொள்ளக்கூடிய அளவு குளிர் இருந்தது. இப்போது அதற்கு நேரெதிரான தட்பவெப்பநிலையை எதிர்கொள்ளவிருப்பது குறித்த பிரக்ஞையே எனக்கு அப்போதுதான் எழுந்தது. கோரக்பூரிலிருந்து காசிக்குப் போகிற வரையிலும் பின்னோக்கி விரையும் உத்தரப்பிரதேசத்தின் ஊர்களை வேடிக்கை பார்த்தபடியே வந்தேன். 8 ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்த்ததிலிருந்து நிறைய வேறுபட்டிருந்தன. தமிழக அரசியல் சூழலில் உத்தரப்பிரதேசத்தின் மீது வைக்கப்படுகிற பிம்பத்திலிருந்து பார்க்கையில் முற்றிலும் வேறாக இருந்தது. எங்கும் மாடுகள் திரிந்து சாணிகளால் நிறைந்த ஊர்களாக அவை இருக்கவில்லை. 2015ம் ஆண்டு நான் காசிக்கு வந்த போது காசி நகரே அப்படித்தான் இருந்தது. எங்கும் குறுகிய தெருக்கள். மாடுகள் சகட்டுக்கும் திரிந்து கொண்டிருக்கும். சாணியை மிதித்து விடாதபடியாகச் செல்ல வேண்டும். போக்குவரத்து வசதிகள் பெரிதாக இருக்காது. உட்கட்டமைப்பு நலிந்த மாநிலமாகத்தான் நான் உத்தரப்பிரதேசத்தை பார்த்தேன். இந்த 8 ஆண்டுகளில் வளர்ச்சி கொஞ்சமேனும் இல்லாமலா போகும். இப்போது பல நூறு கோடிகளில் புனரமைக்கப்பட்டிருக்கும் காசி எப்படி இருக்கிறது என்று காணும் எத்தனிப்பும் உள்ளிருந்து எழுந்தது.

காசி என்கிற வாரணாசியின் பேருந்து நிலையத்தை அடைந்ததும் அங்கே பேருந்துகள் நிறைந்திருந்தது கண்டு சற்றே வியந்தேன். பேருந்து நிலையம் பேருந்துகளால் நிறைந்திருப்பது குறித்து என்ன வியப்பு என்று நீங்கள் கேட்கலாம். 2015ம் ஆண்டு காசியிலிருந்து கயா செல்ல வேண்டி ஒரு பேருந்து நிலையத்துக்குப் போன போது அங்கே பேருந்துகளே இல்லை. மாடுகள் மட்டுமே உலவிக்கொண்டிருந்தன. நேரடிப் பேருந்தே கிடையாது ரயிலில்தான் போக வேண்டும் என்றார்கள். கயாவை விடுங்கள் காசியிலிருந்து 12 கிமீ தொலைவில் இருக்கும் சாரநாத் போக பேருந்து இல்லை. மூன்று ஷேர் ஆட்டோக்களைப் பிடித்துதான் போனேன். ஆனால் இப்போது சாரநாத் செல்ல மின்சாரத்தில் இயங்கும் குளிர்சாதனப் பேருந்து இயக்கப்படுவதைக் காண்கையில் வியப்பு மேலிடுவது இயல்புதான்.
கொடோவிலா சௌக்தான் காசியின் மிக முக்கிய சந்திப்பு. அங்கு சென்று கங்கைக்கரைக்கு அருகிலுள்ள விடுதிகளில் எல்லாம் அறை தேடத்துவங்கினேன். சராசரியாக ஆயிரம் ரூபாய் வாடகை என்றார்கள். காசி உண்மையிலும் காஸ்ட்லியாகி விட்டது. 300 ரூபாய்தான் என்னால் வாடகையாகக் கொடுக்க முடியும். இந்த வாடகையில் சத்திரங்கள்தான் கிடைக்கும். காசியில் பெரும்பாலும் தமிழ் மற்றும் தெலுங்குச் சமூகத்தினர் ஒவ்வொருவருக்கும் சத்திரங்கள் இருக்கின்றன. இவற்றில் பல சத்திரங்கள் நூற்றாண்டு பழமை வாய்ந்தவை. முன்பு நான் காசிக்கு வந்த போது வல்லம்பர் சத்திரத்தில் தங்கியிருந்தேன். மிகவும் பழமையான கட்டடம். பராமரிப்பும் அவ்வளவாக இருக்காது. இருந்தாலும் அன்றைக்கு 300 ரூபாய் வாடகைக்கு அந்தச் சத்திரத்தில்தான் இடம் கிடைத்தது. இப்போதும் அங்கே தங்கலாம் எனத் தேடிச்சென்ற போது அறைகள் நிரம்பி விட்டதாகச் சொன்னார்கள். தெலுங்குச் சமூகத்தினரில் சில சத்திரங்களில் கேட்ட போது அந்தச் சமூகத்தினருக்குதான் அறை கொடுப்போம் என்றனர். வேறு வழியின்றி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்துக்குப் போனேன். வாசலில் நின்றிருந்த காவலாளி நான் தனியனாக வந்திருப்பதால் உள்ளேயே அனுமதிக்க மாட்டேன் என்று கூறி விட்டார். இதனால் எனக்கும் அவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்தச் சத்திரத்தை 8 ஆண்டுகளுக்கு முன்பே அறிவேன். அன்றைக்குக் காசிக்கு வந்ததும் விசாரித்து இச்சத்திரத்துக்குதான் வந்தேன். தனியாக வருகிறவர்களுக்கு அறை தருவதில்லை என்று உறுதியாகக் கூறி மறுத்து விட்டனர். என்ன காரணம் எனக் கேட்டதற்கு தனியாக வருகிற பலர் இங்கே தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று சொன்னார்கள். காசி மோட்சத்துக்கான நகரம். பாவங்களைக் கரைக்கும் காசியில் இறந்தால் மறு ஜென்மம் இல்லை என்பது இந்து மத நம்பிக்கை. அதற்காக காசிக்கு வந்து தற்கொலை செய்து கொள்வதன் மூலம் மோட்சம் கிடைக்கும் என்று முட்டாள்தனமாக எண்ணுகிறார்களா என்பது தெரியவில்லை. ஆக இதே காரணத்துக்காகத்தான் இப்போதும் தனியர்களுக்கு அறை தருவதில்லை என்பதால் காவலாளி என்னை உள்ளே அனுமதிக்கவில்லை.
எனது கனமான பேக் பேக்கைச் சுமந்தபடி சுமார் 8 கிமீ தொலைவு காசியின் தெருக்களில் சுற்றி அலைந்தேன். சூரியன் உச்சியில் நின்று வாட்டிக் கொண்டிருந்தது. வியர்வையில் டி சர்ட் நனைந்து போனது. இனியும் தேடித்திரிய முடியாது என மண்டியிட்டுச் சரணடைய எத்தனித்த வேளையில் டார்மெட்டரி பலகையினைப் பார்த்தேன். உள்ளே சென்று பார்த்தால் நீண்ட வராந்தாவில் மூன்று கட்டில்களைப் போட்டிருந்தனர். ஒவ்வொரு கட்டிலும் கீழ் மேல் என இரண்டு அடுக்குகள். ஒவ்வொரு அடுக்கிலும் மெத்தை, தலையணையோடு சிறிய மின் விசிறி, மின் விளக்கு, சார்ஜ் போட்டுக்கொள்ளும்படியாக ப்ளக் பாய்ண்ட் இருக்கும். மூடிக்கொள்ள திரையும் இருக்கும். எல்லோருக்கும் பொதுவான கழிவறை மற்றும் குளியலறை. அது நல்ல சுத்தமாகத்தான் இருந்தது. நான் போன போது அங்கு யாரும் தங்கியிருக்கவில்லை. இதுவே போதும் என 300 ரூபாய் வாடகைக்கு அந்த டார்மெட்டரியில் தங்கினேன்.
– தொடரும்

கி.ச.திலீபன்
ஈரோடு மாவட்டம் தூக்கநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர். 2009-ம் ஆண்டிலிருந்து ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். கலை இலக்கிய சூழலிய இதழான ஓலைச்சுவடி இணைய இதழின் ஆசிரியர். ‘இன்னும் மிச்சமிருக்கிறது’ என்கிற இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு 2019-ம் ஆண்டு வாசகசாலை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. பயணங்களில் அதீத ஈடுபாடு கொண்ட இவர் 2022ம் ஆண்டு வட கிழக்கு இந்தியாவில் 21 நாள்கள் மேற்கொண்ட பயணத்தின் அனுபவங்களை ‘Back பேக்’ என்கிற பெயரில் விகடனில் தொடராக எழுதினார். பின்னர் நடுகல் பதிப்பகத்தின் வழியாக 2022ம் ஆண்டு அது நூலாக வெளிவந்தது. 2023ம் ஆண்டு 114 நாள்கள் இந்தியா முழுவதும் மேற்கொண்ட பயணத்தின் அனுபவங்களை தீரா உலா என்கிற இத்தொடரில் எழுதுகிறார்

