இந்தியாவிலேயே பல விசித்திர அனுபவங்களைத் தரக்கூடிய நகரமென்றால் அது காசிதான். அதன் தொன்மை, கங்கைக்கரைப் படித்துறைகள், அங்கு நிலவும் வாழ்க்கைச் சூழல் என ஒரு பயணிக்குத் தேவையான புதுமையான அனுபவங்கள் அத்தனையும் இங்கே கிடைக்கப்பெறும். வெளிநாட்டவர் கூட இந்தியாவுக்குப் பயணிக்கையில் அவர்களது பயணத் தேர்வில் காசி அவசியம் இடம்பெற்று விடுகிறது. நான் இதற்கு முன்பு 2015ம் ஆண்டு காசிக்கு வந்ததைப் பற்றி வாசகசாலை இணைய இதழில் எழுதியிருக்கிறேன்.
“இந்தப் பயணத்துக்கான உந்துதல் என் சிறுவயதிலேயே ஏற்பட்டது எனக்கூறலாம். அன்றைக்கு வாசித்த சிறார் கதை நூல்கள் வழியாகத்தான் நான் காசியை அறிந்தேன். ‘ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் வாழ்ந்தார். அவர் இறுதிக்காலத்தில் தனது சொத்துகளை மகன்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்து விட்டு காசிக்குப் பாதயாத்திரை சென்றார்’ இப்படியாகத்தான் பல கதைகளின் தொடக்கம் இருக்கும். இந்த வாசிப்பு என்னுள் இயல்பாக ஒரு கேள்வியை எழுப்பியது. அளப்பரிய செல்வம் படைத்தவன் எல்லாவற்றையும் விட்டுவிட்டுக் காசிக்குச் செல்கிறான் என்றால் அங்கு இவற்றையும் தாண்டி என்ன இருக்கும்? இந்த அடிப்படையான ஒரு கேள்விதான் காசியை நோக்கிய எனது பயணத்துக்கான விதை. திரைத்துறையிலிருந்து விலகி மீண்டும் பத்திரிக்கைத் துறையில் இணைந்த பிற்பாடு குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட்டு விருப்பப்படும் ஊர்களுக்குப் பயணம் செய்வது என எனக்குள்ளாக ஒரு தீர்மானத்தை வகுத்திருந்தேன். 2015ம் ஆண்டு ஜூலையில் ஏதோ ஒரு தினத்தில் திடீரென காசிக்குப் போகலாமே என்கிற எண்ணம் வந்தது. எத்தனையோ மனிதர்களின் வாழ்க்கைப் பயணத்தின் முடிவு அதுவாக இருந்திருக்கிறது. ஆண்டு அனுபவித்தவனெல்லாம் தன் அகங்காரங்கள் அத்தனையையும் இழந்து நின்ற இடம் அது.

காசிக்குப் போகிறேன் என்று சொன்னவுடன் என்னிடம் பலரும் கேட்ட கேள்வி “காசிக்குப் போற வயசா இது?” என்றுதான். காசிக்கும் வயதுக்கும் இடையே உள்ள பொருத்தத்தை நாம் இதன் மூலம் அறிய முடியும். மரணத்தின் மீதான நிச்சயத்தோடு மேற்கொள்ளப்பட்ட யாத்திரை காசி யாத்திரை. 2000 கிலோ மீட்டர் நடந்து சென்று தன் மரணத்தைத் தேடிக் கொள்ள வேண்டும் என்கிற உந்துதலுக்குப் பின் இருந்த உணர்வு எப்படிப்பட்டது? எளிமையாகச் சொல்வதானால் செத்துப்போவதற்காக ஒரு ஊருக்குச் சென்றிருக்கிறார்கள். அந்த ஊரைப் பார்க்க வேண்டும் என்கிற உணர்வுதான் எனக்குள். எனது இந்தத் தேடலுக்குப் பின் இருந்த உணர்வு ஒரு தத்துவார்த்த உணர்வா? அல்லது ஆன்மிக உணர்வா? அல்லது என் மிகையுணர்ச்சியா? எனத் தெரியவில்லை. காசிக்குப் போய் கங்கையில் கால் நனைக்க வேண்டும். கங்கைக் கரைப் படித்துறையை ஒட்டியுள்ள பழமையான கட்டிடங்களில் பார்வையை இருத்தியபடியே கங்கையில் படகு சவாரி செய்ய வேண்டும். காலில் செருப்பில்லாமல் அந்நகரின் தெருக்களில் இலக்கற்று சுற்றித்திரிய வேண்டும். இதுவே அப்பயணத்தின் நோக்கமாக இருந்தது. மற்றபடி காசியைப் பற்றிய எந்த அறிதலும் எனக்கில்லை. ஒரு இடத்துக்குச் செல்லும் முன்பு அது குறித்த வரலாற்றுத் தெளிவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற கருத்தில் எனக்கு முழுமையான உடன்பாடு இல்லை. வரலாறு நமக்குள் ஒரு உருவகத்தை ஏற்படுத்தி விடும். அந்த உருவகத்தைக் கொண்டு நாம் அதனை அணுகும்போது உண்மையான அனுபவத்தைப் பெறவியலாது என்பது என் எண்ணம்.”
“காசியில் கண் விழித்தேன். டொடக்… டொடக்… என சப்தமெழுப்பியபடி ரயில் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. ஜன்னல் வழியே தெரிந்த காசி நகரின் முதற்காட்சியே குப்பைகள் சூழ்ந்த குடிசைப்பகுதிகள்தான். தார்ச்சாலையைக் காண்பதே அரிதென மண் சாலைகளையொட்டியிருந்த குடியிருப்புகளில் எல்லாம் புழுதி படர்ந்திருந்தது. ஓலையால் வேயப்பட்ட வீடுகளைக் காட்டிலும் தகரத்தால் வேயப்பட்ட வீடுகளே அதிகமாக இருந்தன. மாடும் மாட்டுச்சாணமும் தவிர்க்க முடியாத காட்சிகளாக எங்கும் நிறைந்திருந்தன. ரயில் மொகல்சராய் ரயில் நிலையத்தை அடைந்ததும் சம்பிரதாயமாக வலது காலை எடுத்து வைத்து இறங்கினேன். காசிக்குச் சென்றதும் நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் தங்கலாம் என திட்டமிட்டிருந்தேன். காசியின் தெருக்களில் காலார நடந்து சத்திரத்துக்கு வந்தேன். எனக்குக் காத்திருந்த ஆச்சர்யம் அப்பகுதியின் சில தெருக்களில் உள்ள பலகைகள் எல்லாவற்றிலும் தமிழில் எழுதப்பட்டிருந்தது. ‘ஜவுளி வியாபாரம்’ ‘மொத்த வியாபாரம்’ போன்ற எழுத்துகளைப் பார்த்த போது மெல்லிய அதிர்ச்சிக்கு ஆளானேன். காசிக்கும் ராமேஸ்வரத்துக்குமான பிணைப்பை நான் ஓரளவு அறிவேன் என்றாலும், கிட்டத்தட்ட 2500 கிலோ மீட்டருக்கு அப்பால் முற்றிலும் வேறுபட்டதொரு நிலத்தில் தமிழைக் காண்கையில் ஒரு வித பரவசம் ஏற்படுவதைத் தவிர்க்கவியலாது.
‘நாட்டுக்கோட்டை நகர சத்திரம்’ என்கிற பலகையைத் தாங்கி செட்டிநாட்டு பாரம்பரியத்தோடு எழுந்து நின்றிருந்தது அக்கட்டடம். காப்பாளர் வடநாட்டவர். அவருக்கு தமிழ் ஓரளவு புரிந்தது என நினைக்கிறேன். என்னை வரவேற்பறைக்கு வழி காட்டி அனுப்பினார். வரவேற்பறையில் திருநீறு பூசி, படிய வாரிய தலையோடு ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவர் மேலாளராக இருக்கலாம் என நினைத்தேன். அவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அறை வாடகைக்கு வேண்டும் என்றேன். எத்தனை பேர் எனக் கேட்டார். எனக்கு மட்டும்தான் என்றதும் மறுத்து விட்டார். தனி நபருக்கு அறை கிடையாது என்றவர் அதற்கான காரணத்தையும் என்னிடம் விளக்கினார். தனி நபராக வருகிறவர்கள்தான் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்கிறார்களாம். இந்தக் காரணத்துக்காகவே தனி நபருக்கு வாடகைக்கு விடுவதில்லை என்றார். என்னைப் பார்த்தால் தற்கொலை செய்து கொள்கிறவன் மாதிரியா தெரிகிறது எனக் கேட்கலாம் என்று கூட நினைத்தேன். தற்கொலை என்ன அம்மை நோயா? முகத்தைப் பார்த்துக் கண்டுபிடிக்க. அஃதோர் மனப்பிறழ்வு. அது யாரையும் எப்போதும் தாக்கலாம். போக நான் இருப்பது காசியில்… இது சாவுக்கான நகரம். காசியில் இறப்பவர்களுக்கு மறுபிறவி இல்லை என்பது இந்து மத நம்பிக்கை. அதற்காக தற்கொலை செய்து கொள்வதெல்லாம் அபத்தம்தான்.
இன்றைக்கும் இதே மன அமைப்புடன்தான் காசிக்கு வருகிறார்களா? என்கிற கேள்வி எழுந்தது. காசிக்குப் போகிறேன் என்று சொன்னதும் நண்பர் ஒருவர் என்னிடம் எச்சரித்தார். கஞ்சா இலைகளைப் பாடம் செய்து அதை அரைத்துப் பாலில் கலக்கி ‘பாங்கு’ என விற்பார்கள். அதை முயற்சிக்க வேண்டாம் என்று கூறினார். அவருடைய நண்பர் ஒருவர் காசிக்குச் சென்றபோது புதிய அனுபவத்துக்காக அதனை முயற்சித்திருக்கிறார். தன் வாழ்வில் எதிர்கொண்டிராத அந்த போதை அவரைத் தற்கொலை எண்ணத்துக்குத் தூண்டியிருக்கிறது. பெரும் போராட்டத்துக்குப் பின்னே அதைக் கடந்து வந்ததாகக் கூறியிருக்கிறார். காசியின் புற சூழலில் வாழ்வின் மீதான நிச்சயமின்மையை உணர்கிறவனுக்குள் கஞ்சா இலைகள் இது போன்ற எண்ணங்களைத் தோற்றுவிக்கக் கூடும் என நினைக்கிறேன். வேறு எங்காவது தங்குவதற்கு வாய்ப்பிருக்கிறதா? என்று அவரிடம் கேட்டேன். இரண்டு தெருக்கள் தள்ளி வல்லம்பர் சத்திரத்தில் கேட்டுப் பார்க்கும்படி சொன்னார். நன்றி கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். கொஞ்சம் பதட்டம் கூடித்தான் இருந்தது. அங்கும் தனி நபருக்கு அறை கிடையாது எனக் கூறி விட்டார்களானால் என்ன செய்வது? வேறு விடுதிகளில் தங்கலாம் என்றாலும் குறைந்த வாடகையில் கிடைக்குமா? காசியின் படித்துறை அருகே கூடத் தங்கி விடலாம்தான் ஆனால் குளிரில் விரைத்துச் செத்துப் போய் விடுவேன். எந்த செலவும் இல்லாமல் என் உடலை அங்கிருந்து அப்படியே கங்கையில் தள்ளி விட்டு விடுவார்கள். முதல் கலவி அனுபவம் கூட கிடைக்கப் பெறாமலா சாக வேண்டும்? ஹைபர் லூப்பை விட அதீத வேகத்தில் என் யோசனைகள் ஓடிக் கொண்டிருந்தன. வல்லம்பர் சத்திரத்தை அடைந்தேன். அங்கு வரவேற்பறையில் இருந்தவர் என்னைப் பற்றி விசாரித்தார். அவரும் சென்னையில் வசித்திருப்பதாகக் கூறினார். அங்குள்ள அறையைப் பார்த்தேன். சுண்ணாம்பு பூசிய சுவர்கள்தான். கட்டில், மெத்தை, தலையணை மற்றும் கம்பளி என அடிப்படை வசதிகள் மட்டுமே இருந்தன. நாள் ஒன்றுக்கு வாடகை 300 ரூபாய் என்றார். அறையை உறுதி செய்தேன். குளித்து முடித்துவிட்டு முதலில் சாரநாத் செல்ல வேண்டும்… காசியில் இரவைக் கொண்டாட வேண்டும் என்கிற திட்டத்தோடு பல் துலக்கினேன்.

சாரநாத் செல்வதற்கான பேருந்துக்கு எங்கு செல்ல வேண்டும்? என்று கேட்டேன். மெல்லச் சிரித்தபடியே அவர் “பஸ்ஸா… அதெல்லாங் கிடையாது பாஸ்… கார்னர்ல போய் நின்னா ஷேர் ஆட்டோ வரும்” என்றார். சாரநாத் போய்விட்டு மாலையிலிருந்து இரவு வரையில் காசியில் சுற்றித் திரிய வேண்டும் என்கிற என் திட்டத்தை அவரிடம் சொன்னேன். ஆறு மணிக்கெல்லாம் கங்கைக் கரைக்கு வந்து விடும்படி சொன்னார். 06.30 மணிக்கு கங்கா ஆர்த்தி தொடங்கும். கங்கைக்கரையின் படித்துறையில் நின்றபடி கங்கைக்கு தீபாராதனை செய்யும் நிகழ்வுதான் கங்கா ஆர்த்தி. நாள் தவறாமல் மாலை கங்கா ஆர்த்தி நடைபெறும். கங்கையில் வெள்ளம் வந்து படித்துறை முழுவதும் மூழ்கினால் கூட அதன் விளிம்பில் நின்று ஆர்த்தி காட்டுவார்கள். காசிக்கு வருகிறவர்கள் அவசியம் கங்கா ஆர்த்தியைப் பார்த்தே ஆக வேண்டும் என்றார். நான் ஷேர் ஆட்டோ ஏறி சாரநாத் நோக்கிப் பயணப்பட்டேன். காசியிலிருந்து சாரநாத் 12 கி.மீ தூரத்தில் இருக்கிறது. இடையில் ஓரிடத்தில் இறங்கி இன்னொரு ஷேர் ஆட்டோ மாற வேண்டும். நான் ட்ரைவருக்குப் பக்கத்தில் கிடைத்த கொஞ்ச இடத்தில் உடலின் ஒரு பகுதியை வெளியே விட்டபடி அமர்ந்திருந்தேன். வேடிக்கை பார்ப்பதை விட மகத்தான் செயல் வேறென்னவாக இருக்க முடியும்? என் கண்ணுக்குச் சிக்கிய எல்லாவற்றையும் பார்த்தேன். காசியின் நகரத் தெருக்கள் எல்லாமே மிகக் குறுகலாக இருக்கின்றன. நான் சுற்றிய வரையிலும் காசியில் பேருந்து என்ற ஒன்றைப் பார்க்கவே இல்லை. ஆட்டோக்களைக் காட்டிலும் சைக்கிள் ரிக்ஷாக்களை அதிகம் பார்க்க முடிந்தது. இன்னமும் சைக்கிள் ரிக்ஷாக்கள் வழக்கத்தில் இருப்பதை நான் காசியில்தான் பார்த்தேன். மண் புழுதியைக் கிளப்பும்படியாக தார் காணாத சாலைகளில் குலுங்கிக் குலுங்கிச் சென்றது ஷேர் ஆட்டோ. தமிழ்நாட்டில் பிறந்த ஒருவன் இப்படியொரு அழுக்கான ஊரைப் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. காசியும் சாரநாத்தும் இந்தியாவின் முக்கியமான வரலாற்று நகரங்கள் என்பதோடு வழிபாட்டுத் தலங்களும் கூட. இப்படியிருக்கையில் இவற்றுக்கிடையில் பேருந்து வசதி கூட இல்லை என்பதை என்னால் விளங்கிக் கொள்ளவே முடியவில்லை.”
8 ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்த்த காசி இப்படியாகத்தான் இருந்தது. இன்றைக்கோ பெரிய அளவிலான மாற்றங்களை இந்நகரம் கண்டிருக்கிறது. டார்மெட்டரியில் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு கங்கைக்கரைக்குச் சென்றேன். கங்கையில் கால் நனைத்து விட்டு, அலையாடிக்கொண்டிருக்கும் படகில் அமர்ந்தபடி கங்கா ஆர்த்தியை கண்கள் நிறையக் காணும் பொருட்டு சென்றேன். கங்கைக் கரையை ஒட்டியிருக்கும் பல தெருக்களில் உள்ள கடைகளில் தமிழில் எழுதப்பட்டிருக்கும் விளம்பரப்பலகைகளைப் பார்க்க முடியும். பெரும்பாலும் அவை துணிக்கடைகள். அவற்றில் ‘ஜவுளி வியாபாரம்’ என சீரற்று எழுதப்பட்டிருக்கும். முதன் முறையாக காசிக்கு வந்த போது அவையெல்லாம் தமிழர்களால் நடத்தப்படுகிற கடைகள் என்றே நினைத்திருந்தேன். காசிக்கு வரும் தமிழ் மற்றும் தெலுங்கு மக்களை ஈர்க்கும் பொருட்டு அவர்தம் மொழியிலேயே பலகைகளை எழுதி வைக்கும் வியாபார யுக்தி இது என்பது பின்னர்தான் தெரிந்தது. அவற்றையெல்லாம் பார்த்தபடி தசஸ்வமேத காட்-க்குச் சென்றேன். காசியில் 84 காட் அதாவது கங்கைக்கரையில் அமைந்திருக்கும் படித்துறைகள் இருக்கின்றன. இவற்றில் தசஸ்வமேத காட் தான் மிக முக்கியமான படித்துறை. இங்குதான் தினசரி மாலை 6.45மணிக்கு கங்கா ஆர்த்தி நடைபெறும். காசியில் இதைத் தவிர மணிகர்னிகா காட் மற்றும் அஸ்ஸி காட் ஆகிய இடங்களிலும் கங்கா ஆர்த்தி நடைபெறுகிறதென்றாலும் தசஸ்வமேத காட்-ல் நடைபெறும் கங்கா ஆர்த்திதான் பிரம்மாண்டமானது.
மாலை 5 மணிக்கே கங்கா ஆர்த்தியைக் காண வேண்டி தசஸ்வமேத காட்-ல் மக்கள் குவிந்திருந்தார்கள். கங்கையில் நீரோட்டம் குறைவாகவே இருந்தது. கங்கையின் அகலத்தில் கால்வாசி அளவே நீரோட்டம் இருந்தது. இதனால் ஆற்றுக்கு நடுவே மணற்பரப்பில் தற்காலிகமான கூடாரங்கள் அமைத்து தேநீர் மற்றும் உணவுக்கடைகள் நடத்திக் கொண்டிருந்தனர். படகு சவாரி செய்து மறுகரைக்குச் செல்பவர்களுக்காக இந்த ஏற்பாடு. கங்கா ஆர்த்தி தொடங்குவதற்கு முன்பே ஹார்மோனியம், புல்லாங்குழல், தபேலாவின் இசையில் ஆராதனைப் பாடல்களை பாடத்தொடங்கினர். கங்கைக்கு ஆர்த்தி காட்டுகிற 7 பண்டாக்களுக்காக ஏழு சிறு மேடைகள் அமைக்கப்பட்டு அவற்றின் மேல் பட்டுத்துணி போர்த்தப்பட்டு மலர் தூவப்பட்டிருந்தன. ஒவ்வொரு மேடையைச் சுற்றியும் மக்கள் திரளாக அமர்ந்திருந்தனர். கங்கா ஆர்த்தியை கங்கையில் படகில் அமர்ந்தபடியும் காணலாம். தசஸ்வமேத காட் படகுகளால் நிறைந்திருந்தது. கங்கா ஆரத்திக்கான நேரம் நெருங்க நெருங்க படகுகள் ஒவ்வொன்றாக வந்து நிறுத்தப்பட்டுக் கொண்டிருந்தன. படகில் அமர்ந்து கங்கா ஆர்த்தி காண்பதற்கு 50 ரூபாய், காண்பதோடு மட்டுமல்லாமல் கங்கையில் சிறு தொலைவு சுற்றி வர 100 – 150 ரூபாய் கட்டணம். நான் ஒரு படகில் ஏறி உட்கார்ந்து கொண்டேன். சரியாக 6.45 மணிக்கெல்லாம் கங்கா ஆர்த்தி தொடங்கியது. பண்டாக்கள் என்று சொல்லப்படுகிற 7 புரோகிதர்களும் பல வடிவிலான தீபங்களைக் காட்டி இந்தப் புண்ணிய நதியான கங்கைக்கு அர்ச்சனை செய்யும் நிகழ்வுதான் கங்கா ஆர்த்தி. கங்கைக்கு தீபாராதனை செய்வதற்கென சில ஒழுங்கு முறைகள் இருக்கின்றன. இந்த 7 பண்டாக்களும் பல வடிவங்களிலான தீபங்களை கங்கைக்குக் காட்டி அர்ச்சனை புரியும்போது அவர்களுக்கிடையிலான துல்லியமான ஒத்திசைவினால் அது நெருப்பை ஏந்தியபடி நிகழ்த்தும் அழகிய நடனம் போலத் தெரியும். ஆராதனைப் பாடல்களின் இசையோடு, தீபாராதனை நடனமும், குழுமியிருக்கும் மக்களின் ஆரவாரமும் ஒன்று சேர்கையில் அது ஒரு திருவிழாவாக மாறுவதை உணர முடியும். காசிக்கு வருகிறவர்கள் எக்காரணம் கொண்டும் தவறவிடக்கூடாதது கங்கா ஆர்த்தி. இன்றைக்கான கொண்டாட்டம் என்பது அதனை தமது கைப்பேசியில் படமெடுப்பதுதான். அங்கே கலந்து கொண்டவர்களில் பலரும் தங்களது கைப்பேசித் திரையில்தான் கங்கா ஆர்த்தியைக் கண்டனர்.
கங்கா ஆர்த்தி நிறைவுற்ற பிறகு தசஸ்வமேத காட்-ல் இருந்து கொடொவிலா சௌக் நோக்கிச் சென்றேன். வழிநெடுக மக்கள் திரள் அச்சாலையை நிறைத்திருந்தது. இரு புறங்கள் நெடுகிலும் கடைகள். துணிக்கடைகள், நகைக்கடைகள், தின்பண்டக்கடைகள், பூஜையறைப் பொருள்கள், மணி மாலைகள் விற்கும் கடைகள் என வாங்குவதற்கு எத்தனையோ பொருள்கள் அடுக்கிக் கிடந்தன. கையப்பிடித்துதான் இழுக்கவில்லை எனச்சொல்லும்படியாக ஒவ்வொரு கடையிலும் ஆட்கள் கூவிக்கூவி மக்களை அழைத்துக் கொண்டிருந்தனர். கொடோவிலா சந்திப்பில் கூடும் நான்கு சாலைகளுமே ஜனநெரிசல் மிகுந்திருந்தது. நான் ஆர்ப்பரிப்பில்லாத தெருக்களை நோக்கி நடந்தேன். இந்தப் பயணத்தின் நோக்கமே காசியின் தெருக்களில் உலவித்திரிந்தால் போதும் என்பதாக இருந்தது. இன்னமும் அந்தப் பழமையைத்தாங்கியபடி அத்தெருக்கள் இருக்கின்றன. மக்கள் நடமாட்டம் குறைந்த குறுகிய தெருக்கள் வழியாகப் பயணித்து அடுத்ததொரு பிரதான சாலையை வந்தடைந்தேன். காசியில் லஸ்ஸி கடைகளை அதிகம் பார்க்க முடிந்தது. நம்மிடையே லஸ்ஸி என்றாலே தயிரில் சர்க்கரையைக் கலந்து மிக்ஸியில் அடித்துக் கொடுப்பார்கள். காசியில் அதன் செய்முறையே வேறாக இருக்கிறது. சர்க்கரை கலந்த தயிரில் பாதாம் பிஸ்தா துருவலைத் தூவி, அண்ணாசி, மாதுளை, வாழை போன்ற பழங்களை அரைத்துச் சேர்த்துக் கொடுக்கிறார்கள். குச்சி ஸ்பூனில் அதனை நன்றாகக் கலக்கி விட்டுச் சாப்பிட்டால் கனிந்த பலாப்பழத்தை உண்பதைப் போன்ற ருசியுடன் குளிர்ச்சியாக உள்ளிறங்கும். காசியில் பாங் லஸ்ஸியும் உண்டு எனச்சொல்லியிருந்தார்கள். தயிரில் கஞ்சா இலைகளை அரைத்துக் கலந்து தருவார்கள். நான் பார்த்த வரையிலும் இப்போது அவ்வளவு பரவலாக பாங் விற்கப்படுவதில்லை என்றே நினைக்கிறேன்.


அதனைத் தேடிப்போகாததால் அதுபற்றிச் சரியாகத் தெரியவில்லை. ஆனால் காசியில் கஞ்சாப் புழக்கம் இல்லை எனச் சொல்லி விடவே முடியாது. காசியில் கஞ்சா என்பது மிகச் சாதாரணமானது. அகோரிகள், சாமியார்கள் எப்போதும் கஞ்சாவைத் துணை கொண்டிருக்கிறார்கள். இவர்கள் கஞ்சா இழுப்பதாலோ என்னவோ கஞ்சாவை இந்து மதத்தோடு தொடர்புபடுத்திக் காணும் பார்வை பரவலாக இருக்கிறது. கஞ்சாவைப் பலரும் சிவபானம் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். காசி என்றாலே கஞ்சாவும் அதனோடு சேர்ந்து நினைவுக்கு வரும்படியாக அது புனிதப்படுத்தப்பட்டிருக்கிறது. மது போதையைக் காட்டிலும் கொடிய போதை கஞ்சா. காசிக்குச் செல்கிறவர்கள் பரிட்சார்த்த முயற்சியாகக் கூட பாங் வாங்கி அருந்தி விடக்கூடாது. புதிதாக பாங் அருந்துகிறவர்கள் தற்கொலை முயற்சியில் கூட ஈடுபடும் வாய்ப்பிருக்கிறது. அப்படியான சம்பவத்தை முன்பு கேட்டிருக்கிறேன். கஞ்சா போதை உண்டாக்கும் மனப்பிறழ்வு அப்படிப்பட்டது. அதைத் தாண்டி பரிட்சித்துப் பார்க்க காசியில் எத்தனையோ உணவு வகைகளும், இனிப்பு வகைகளும் இருக்கின்றன.
இனிப்புப் பலகாரங்களை விரும்பிச் சாப்பிடுகிறவர்கள் காசிக்கு வந்தால் கொண்டாடுவார்கள். காசியின் தெருக்கள் எங்கிலும் பலகாரக் கடைகளைப் பார்க்க முடியும். அவற்றில் இனிப்புப் பலகாரங்களே அதிகம். காசி மட்டுமல்ல பொதுவாக வட இந்தியாவில் காரத்தை விட இனிப்பே பிரதான சுவையாக இருக்கிறது. தென்னிந்தியர்கள்தான் இனிப்பைக் காட்டிலும் காரத்தைக் கொண்டாடுகிறார்கள். தமிழர்கள் கொண்டாடும் வட இந்திய உணவான பானி பூரியிலும் இங்கே இனிப்புப் பூரி இருக்கிறது. இரவு உலாவை முடித்து விட்டு எனது டார்மெட்டரிக்குத் திரும்புகையில் அருகே இருந்த உணவகத்தில் இரண்டு தோசைகள் சாப்பிட்டேன். இங்கே சட்னியும் சற்றே இனிப்பதுதான் பிரச்னை. சாம்பார் உப்புச்சப்பின்றி இருந்தது. இந்தியாவைச் சுற்ற விளைகிறவர் அவசியம் உணவில் சமரசம் செய்து கொள்ள வேண்டியது அவசியம். அதுவும் தென்னிந்தியர் என்றால் வட இந்தியாவில் கூடுதல் சமரசம் செய்ய வேண்டியிருக்கும்.

அடுத்த நாள் எழுந்ததும் சாப்பிட்டு விட்டு வந்து மடிக்கணினியில் எனது எழுத்துப் பணிகளை மேற்கொண்டேன். அது மே மாதம் என்பதால் வெயில் வாட்டிக் கொண்டிருந்தது. நல்லூழாக டார்மெட்டரியில் பெரிதாக வெப்பம் இறங்கவில்லை. பகலில் வெளியே செல்வதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவு வெப்பம் தகித்தது. மதியம் சாப்பிட மட்டும் வெயில் முகத்திலறைய வெளியே சென்று வருவேன். மற்றபடி மாலை வரையிலும் டார்மெட்டரிக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன். சில வேளைகளில் சாப்பிடக்கூட வேண்டாம் எனத் தோன்றியதுண்டு. குளிராகட்டும் வெயிலாகட்டும் தென்னிந்தியாவைக் காட்டிலும் வட இந்திப் பகுதிகளில் அதன் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. காலையும் மதியமும் சாப்பிடச் செல்வதோடு சரி, மாலை 5 மணிக்கு மேல் கிளம்பி இரவு 10 மணி வரையிலும் கங்கைக்கரைப் படித்துறைகளிலும் அதனை ஒட்டிய தெருக்களிலும் உலவித் திரிவதை பழக்கமாகக் கொண்டேன். காசி இரவுக்கான நகரம். காசியின் இரவு அனுபவங்களே போதுமானதாக இருந்தது.
மாலையில் கங்கையின் படித்துறைகளில் நடைபயிற்சி செய்தாலே காசியின் பூரண அழகைக் கண்டு ரசிக்க முடியும். கங்கைக்கரைப் படித்துறைகளும், அக்கரை நெடுக எழுப்பப்பட்டிருக்கும் பழமை தாங்கிய கட்டடங்களும்தான் காசியின் அழகே. காவி உடை அணிந்த சாமியார்கள், கருப்பு உடை அல்லது கோவணம் அணிந்து சாம்பல் பூசியிருக்கும் அகோரிகள், நீத்தார் கடன் செலுத்த வந்தவர்கள், புரோகிதர்கள், எரியும் பிணங்கள், பல நாள்களாக காசியில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள், சவாரிக்காகக் கூவிக்கூவி அழைக்கும் படகோட்டிகள் என பலரைக் கடந்து செல்ல முடியும். அரிச்சந்திரா காட் மற்றும் மணிகர்னிகா காட் ஆகிய இரண்டு படித்துறைகளிலும் பிணங்கள் எரிக்கப்படுகின்றன. ஒரு பிணம் எரிந்து கொண்டிருக்கும்போதே அடுத்த பிணம் வரிசையில் காத்திருக்குமளவுக்குப் பிணங்கள் கொண்டு வரப்பட்டுக்கொண்டே இருக்கும். அந்தப் பகுதியைக் கடக்கும்போதே நெருப்பின் அனல் தகிக்கும். சிதையூட்டுவதைத் தொழிலாகக் கொண்டு இங்கு பலரும் வாழ்ந்து வருகின்றனர். இறந்தவர்களுக்குத் திதி கொடுப்பதற்காக உலகின் பல்வேறு மூலைகளிலிருந்து வருகிற இந்துக்களை நம்பிப் பல புரோகிதர்கள் வாழ்ந்து வருகின்றனர். காசி மரணத்தை வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் நகரம்.
ஃபுட்டிஸ் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிற உணவுப் பிரியர்களுக்கு காசி அற்புதமான நகராக இருக்கும். எத்தனை வகையான இனிப்புகள் இருக்கிறதென்பதை காசியில் தெரிந்து கொள்ளலாம். காரமான பலகாரங்களும் உண்டு. காசியில் விற்கப்படும் உணவுகளை எல்லாம் பரிட்சித்துப் பார்க்க சில நாட்களேனும் தேவைப்படும். காசியின் தின்பண்டங்களைச் சாப்பிடவே ஒரு நாள் புறப்பட்டேன். லஸ்ஸி, குலோப் ஜாமுன், இன்னும் பெயர் தெரியாத இரண்டு இனிப்புகள், சென்னா சமோசா சாப்பிட்டதும் வயிறு நிறைந்து விட்டது. காசியில் தங்கியிருக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வெரைட்டியை முயற்சிக்கலாம்தான் இருந்தும் பலகாரங்கள் மீதான ஈர்ப்பெல்லாம் என்னிலிருந்து காணாமல் போய் சில ஆண்டுகள் ஆகி விட்டன.
நான் முதலாக தோசை சாப்பிட்ட உணவகத்தையே வாடிக்கையாக்கிக் கொண்டேன். அங்கே தோசை 20 ரூபாய். இட்லி 10 ரூபாய் என்பதால் 40 ரூபாயிலேயே ஒரு வேளை உணவைச் சாப்பிட முடிந்தது. அந்தக் கடைக்கு முன்பாகவே நான் போகிற சந்தில் ஒருவர் பூட்டிய வீட்டின் வாசலில் வைத்து தோசை சுட்டு விற்றுக் கொண்டிருந்தார். வெண்ணெய் தடவி அவர் சுடும் தோசையின் சுவைக்காக அவரிடம் சாப்பிட்டேன். அவரை எப்போதும் நம்ப முடியாது. சில வேளைகளில் ஆள் தலைமறைவாகிடுவார் என்பதால் அந்த உணவகம்தான் நிரந்தரமாக இருந்தது. அப்போது ஐ.பி.எல் போட்டிகள் நடந்து கொண்டிருந்தன. அந்த உணவகத்தின் உரிமையாளர் லக்னோ அணிக்கான போட்டி நடைபெறும் நாளில் எல்லாம் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் டி சர்ட் அணிந்து கொண்டு நின்றிருப்பார். ஒரு முறை என்னிடம் நீங்கள் எந்த அணியின் ஆதரவாளர் என்று கேட்டார். நான் தமிழ்நாடு ஆக சென்னை சூப்பர் கிங்ஸ்தான் என்றேன். அவர் சிரித்தபடியே இந்த ஆண்டு நாங்கள்தான் என்றார். நானும் சிரித்தபடியே பார்க்கலாம். எங்களுக்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்றேன். அதன் பிறகு லக்னோ அணி வென்றதற்கு மறுநாள் எல்லாம் என்னைக் காண்கையில் அவரிடம் வெளிப்படும் பெருமையுணர்வினை அறிந்தேன்.
ஒரு நாள் அந்த உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பக்கத்து இருக்கையில் ஒருவர் வந்தமர்ந்தார்… 40 வயது மதிக்கத்தக்க ஒரு கார்ப்பரேட் நிறுவன ஊழியருக்கான (so called) தோற்றம். என்னைப்பற்றி விசாரித்தவர் தான் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவன் என்றார். வேற்று மாநிலத்தவரோடு நட்பு பாராட்ட விரும்புகிறவன் என்பதால் மகிழ்ச்சி எனக்கூறினேன். அப்போதைய மனநிலையில் பெரிதாக எதுவும் பேசவில்லை. சாப்பிட்டு முடித்ததும் எனது டார்மெட்டரியை நோக்கிக் கிளம்பினேன். வழியில் ஸ்பாட்டிஃபையில் பாடலைத் தேடிக்கொண்டு நின்ற போது அவர் பின்னால் வந்தார். ஏன் நின்று விட்டீர்கள் எனக் கேட்டதும் நடக்க ஆரம்பித்தேன். பிறகு அவர் “Can I ask you something” என்றார். கேளுங்கள் என்றேன். “You like boys sex” என்றார். “No I am a hetro sexual” என்று பதில் தந்தேன். “So you like only girls” என்றார். “Defiantly” என்றேன்.”Its OK no sex… just S..king” என்றவர் தனது Home stayக்கு என்னை அழைத்தார். இல்லை எனக்கு விருப்பமில்லை எனக்கூறி விட்டு விடைபெற்றேன். காசிக்குத் தன்பால் ஈர்ப்பாளர்களும் அதிகளவில் வருகிறார்கள் என்பதை பின்னால்தான் அறிந்தேன். அவர் இவ்வாறாகக் கேட்டதில் எனக்கு அதிர்ச்சியெல்லாம் இல்லை. இதனை ஏற்கனவே எதிர்கொண்டிருப்பதோடு கையாளவும் கற்றுக் கொண்டிருக்கிறேன். ஆக அது பிரச்னையில்லை. ஆனால் ஒரு கேள்விதான் என்னிடம் எஞ்சி நின்றது. ஒரு ‘Gay’ proposal ஐ இப்படி எடுத்த எடுப்பில் முன் வைத்து விட முடிகிறது. பாலுறவுக்கான விருப்பத்தைத் தெரிவிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்பார்கள். உண்மைதான். பாலியல் அத்துமீறல்தான் குற்றமே தவிர வெளிப்பாடு குற்றமல்ல. என் கேள்வியெல்லாம் ஒரு தன்பால் ஈர்ப்பாளரின் ன் வெளிப்பாட்டைப் போல் ஒரு எதிர்பால் ஈர்ப்பாளர் தன் பாலியல் விருப்பத்தை வெளிப்படுத்தினால் இரண்டும் ஒரே அளவில் வைத்துப் பார்க்கப்படுமா என்பதாக இருந்தது. அந்த மத்தியப் பிரதேசத்துக்காரர் என்னிடம் கேட்டதைப் போல நானும் ஒரு பெண்ணிடம் எடுத்த எடுப்பில் இப்படிக் கேட்டு விட முடியுமா? முடியவே முடியாது என்பதே எனது பதில்… LGBTQ க்கான அதே நியாயங்கள் ஏன் hetro sexual க்கு பொருந்துவதில்லை? என்று யோசித்தேன். அடுத்த நாள் காலை எழுந்ததும் டார்மெட்டரியில் அல்லாது வேறு ஏதேனும் சத்திரத்தில் நல்ல அறை கிடைத்தால் நன்றாக இருக்கும் எனத்தோன்றியது. கங்கைக்கரைக்குச் சென்று வருகையில் ஆர்ய வைஸ்ய சத்திரத்தைப் பார்த்திருந்தேன். அந்த சந்திரத்து எண்ணுக்குக் கூப்பிட்டேன். மூன்று நாள்கள் தங்கிக் கொள்ளலாம் சாப்பாடு தங்குமிடம் இலவசம் என்றார்கள். அட்டகாசம் என உணர்வதற்கு முன்பாகவே வைசியருக்குதான் இந்த சலுகை தருவோம் நீங்கள் வைசியரா என்று கேட்டார். ஆம் என்று பொய் சொல்லி விட்டால் ஒரு வேளை சாதிச்சான்றிதழோ இல்லை வேறு மொழியோ பேசச்சொல்லிக் கேட்டு விட்டால் என்ன செய்வது. உண்மையை சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தேன். நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தின் தலைமையகம் காரைக்குடியில் இருக்கிறது. ஆகவே காரைக்குடியைச் சேர்ந்த எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனுக்குக் கூப்பிட்டேன். அவர் மூலமாக தம்பி குறள் பிரபாகரன் அழைத்து நாட்டுக்கோட்டை நகரத்தின் தலைமையகத்தில் விசாரிப்பதாகச் சொன்னான். அதே நேரம் முகநூல் நண்பர் தேனப்பன் அழைத்திருந்தார். அவர் மூலமாக காசியில் உள்ள நகரத்தார் சத்திரத்தின் மேலாளர் எண் கிடைக்கப்பெற்று நகரத்தார் சத்திரத்துக்குச் சென்றேன். நகரத்தார் சத்திர நிர்வாகிகளுக்கான தேர்தல் சமீபத்தில்தான் முடிந்திருக்கிறது என்பதால் புதியவர்கள் பொறுப்பில் இருந்தார்கள். நான் என்னைப் பத்திரிகையாளன் என அறிமுகப்படுத்திக் கொண்டு அவர்களிடம் பேசினேன். தனியாக வருகிறவர்களுக்கு அறை வழங்கக்கூடாது என்பது காவல் துறையினரால் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடு என்று சொன்னார்கள். தினசரி இங்கே எத்தனை பேர் தங்கியுள்ளனர் என்கிற பட்டியலை காவல் துறையினருக்குக் கொடுக்க வேண்டும். இந்தக் காரணத்தினால்தான் தனியாக வருகிறவர்களுக்கு விடுதி தருவதில்லை. தற்கொலை செய்து கொள்வார்கள் என்கிற பயம்தான் இதற்கு அடிப்படைக் காரணம் என்று சொன்னார்கள். நான் அவர்களிடம் பேசிய பிறகு எனக்கு அறை தர சம்மதித்தார்கள் ஆனால் அங்கே ஒரு அறையின் வாடகை 500 ரூபாய். இங்கே தங்குவதன் மற்றொரு பலன் என்னவென்றால் மதிய வேளைகளில் பெரும்பாலும் பணம் செலுத்தாமல் சாப்பிடலாம். நகரத்தார் சத்திரத்தின் வழியே உலகின் எந்த மூலையில் இருந்து வேண்டுமானாலும் அன்னதானம் போட முடியும். அதற்கான தொகையை செலுத்தி விட்டால் அவர்கள் பெயரில் அன்னதானம் போடுவார்கள். நான் போன போது என்னைச் சாப்பிட்டு விட்டுப் போகச் சொன்னார்கள். காரைக்குடி சமையலை எப்படி வேண்டாம் என மறுப்பது. மறுப்பேதும் சொல்லாமல் சாப்பிட்டேன். பிறகு காசியில் நகரத்தார் வரலாறு பற்றிக் கேட்டதற்கு ‘காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திரத்தின் வரலாறு’ என்கிற 300 பக்க நூலைக் கொடுத்தார்கள். நகரத்தாருக்கும் காசிக்குமான உறவு அவ்வளவு நீண்டது. தேவைப்படும்போது வருவதாகக் கூறிவிட்டுக் கிளம்பினேன். டார்மெட்டரியே எனக்குப் போதும் எனத் தோன்றியது. ஆகவே சத்திரத்தில் போய் தங்குவது பற்றி யோசிக்கவில்லை.

காசி என்கிற வாரணாசி இரண்டாகப் பிரிந்திருக்கிறது. கங்கைக்கரையை ஒட்டிய பகுதிகள் தான் நாம் அறிந்த ஆன்மிகத்தலமான காசி. இன்னொரு பகுதி முற்றிலும் வணிகமயமானது. பனாரஸ் பட்டு உலக அளவில் பிரசித்தி பெற்றது. பட்டு உற்பத்தி மற்றும் வேறு பல வணிகம் சார்ந்த உற்பத்திகள் நடைபெறும் பெருநகரம் காசியின் இன்னொரு பகுதியில் விரிந்திருக்கிறது. பயணிகள் பெரும்பாலும் அங்கே செல்வதில்லை. கங்கைக் கரையில் உலவி அதன் விளைவே கிடைக்கப்பெறும் அனுபவங்களைப் பெறவே நேரம் போதுமானதாக இருக்கும். மாலை ஊர்சுற்றிக் கொண்டிருந்த வேளையில் தம்பி சேவியரிடமிருந்து அழைப்பு வந்தது. “அண்ணே… காசிலதான இருக்கீங்க நானும் காசி வந்திருக்கேண்ணே” என்றான். “என்ன திடீர்னு?” என்றதற்கு அவனது அப்பா ஒருங்கிணைத்த அரசு ஊழியர்கள் சங்கத்தினரின் பக்தி யாத்திரையில் அவர்களோடு இவனும் வந்திருக்கிறான். பிரக்யராஜ் சென்று விட்டு அடுத்த படியாக வாரணாசிக்கு வந்திருக்கின்றனர். கொடொவிலா சோக்-க்கு அருகில் உள்ள ஒரு விடுதியில் மொத்தமாகத் தங்கியிருந்தார்கள். நான் கொடொவிலா சோக் அருகே சென்று அழைத்ததும் அவன் வந்தான். பொதுவாகவே எனது நட்பு வட்டங்களில் எல்லாம் நான்தான் வயதில் இளையவனாக இருப்பேன். வாசகசாலை நண்பர்கள் வட்டத்தில் சேவியர் என்னை விட இளையவன். பெரிதும் பரிச்சயமில்லாத ஒரு நிலத்தில் நன்கு பரிச்சயப்பட்ட முகத்தைக் காண்கையில் உண்டாகும் பரவசம் மிக அற்புதமானது. காசியில் சேவியரைப் பார்த்தபோது அப்படியொரு பரவசம் என்னுள் எழுந்து அடங்கியது. இருவரும் பேசிக்கொண்டே தசஸ்வமேத காட்-க்கு கங்கா ஆர்த்தி காணச்சென்றோம்.

“அண்ணே அந்தப் படகுல ரெண்டு பொண்ணுங்க அழகா இருக்கு அதுக்குப் பக்கத்துல போவோம்” என்று சேவியர் சொல்ல, “தம்பி பக்திப் பரவசத்துல இருக்கேண்டா… இப்போ இதெல்லாம் தேவையா?” என்று கேட்டபடி அவன் சொன்ன படகுக்குப் போனோம். உண்மையிலும் அந்தப் பெண்கள் அழகாகத்தான் இருந்தார்கள். கங்கா ஆர்த்தியை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். கங்கா ஆர்த்தி முடிந்ததும் கங்கையில் படகு சவாரி செய்தோம். சேவியர் என்னைப்போலவே சாப்பிடுவதில் பெரும் ஈடுபாடு கொண்டவன். கரை வந்த பிறகு கொடொவிலா சந்திப்பைச் சுற்றியிருக்கும் தெருக்களில் திரிந்து சில வகையான இனிப்பு, காரங்களைத் தின்றோம். மறுநாளும் மாலை கொடொவிலா சந்திப்பிலிருந்து உள்ளே சென்று பல தெருக்களில் சுற்றித் திரிந்தோம். அன்றோடு அவன் காசியிலிருந்து கிளம்புகிறான் என்பதால் லஸ்ஸி சாப்பிட்டு விட்டு விடைபெற்றோம்.

காசி பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பிரிவு இருக்கிறதென்பதை அறிந்து அங்கு சென்றேன். மிகப்பெரும் பரப்பளவில் பழமையான கட்டடங்களைத் தாங்கியிருக்கிறது அப்பல்கலைக்கழகம். தமிழ்த்துறை எங்கே இருக்கிறது என விசாரித்துச் சென்றேன். சொல்லப்போனால் அங்கு தெலுங்கு மொழிக்குத் தனித்துறை இருக்கிறது தமிழ் மொழிக்கென்று அங்கே தனித்துறை இல்லை. இந்திய மொழிகள் என்கிற பொதுத்துறையின் கீழ் தமிழ், கன்னடம், நேபாளி ஆகிய மொழிகள் அடங்கியிருக்கின்றன. இந்திய மொழிகள் துறையில் தமிழ்ப்பிரிவுக்குச் சென்றபோது உதவிப்பேராசிரியர் ஜெகதீசன் அவர்களைச் சந்திக்க முடிந்தது. நன்றாக வரவேற்றுப் பேசினார். இப்பல்கலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் தமிழில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வருவதாகவும். இவர் மட்டுமின்றி இன்னொரு உதவிப் பேராசிரியர் இருப்பதாகவும் சொன்னவர் நாளை வந்தால் அவர்களையும் சந்திக்க ஏற்பாடு செய்வதாகச் சொன்னார். காசி பல்கலைக்கழகம் மட்டுமின்றி காசிக்கும் தமிழர்களுக்குமான உறவு குறித்து அறிந்து கொள்ளும் விதமாக நீங்கள் ஒரு பேட்டி தர வேண்டும் எனக் கேட்டதற்கு ஒப்புக்கொண்டார்.

அடுத்த நாள் எனது யூ ட்யூப் சேனலுக்காக அவரைப் பேட்டி கண்டேன். காசிக்கும் தமிழர்களுக்குமான பிணைப்பு சார்ந்து சற்று விரிவாகவே அவர் பேசினார். காசிக்கும் தமிழர்களுக்குமான உறவு நீண்டகாலம் தொடர்ந்து வருவதுதான். குமரகுருபரர் காசியில் குமாரசாமி மடம் என்கிற சைவ மடத்தைத் தொடங்கியிருக்கிறார். இந்த மடத்தை நிறுவ இடம் வேண்டி காசியை ஆண்ட நவாப்பிடம் அவர் இந்துஸ்தானியில் உரையாற்றி வென்று சைவ சிந்தாந்தத்துக்காக மடத்தை அங்கு நிறுவினார் என்பது வரலாறு. காசி இந்து சர்வ கலா சாலையில்தான் பாரதியார் இந்தி மற்றும் சமஸ்கிருதம் பயின்றிருக்கிறார். கங்கைக்கரையில் இருக்கும் ஹனுமன் காட் என்கிற பகுதியில் உள்ள அவரது மாமா நடத்தி வந்த மடத்தில்தான் பாரதி தங்கியிருக்கிறார். பாரதியின் அடையாளமான முறுக்கிய மீசையும், முண்டாசு கட்டிய தோற்றமும் அவர் காசியில் தரித்ததுதான். இந்தப் பல்கலைக்கழகத்தைத் தொடங்கியவர் பண்டிதர் மதன் மோகன் மாளவியா. அன்னிபெசண்ட் அம்மையார் நடத்தி வந்த கல்லூரியை அவரிடமிருந்து வாங்கி 1916 ஆம் ஆண்டு இப்பல்கலைக் கழகத்தைத் தொடங்கியிருக்கிறார். காசி தமிழ்ச் சங்கமத்தில் காசிக்கும் தமிழுக்குமான உறவு பற்றிய நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்நூலில் மேலும் பல விரிவான தகவல்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. காசியை நாம் பெரும்பாலும் வாரணாசி என்றே அழைக்கிறோம். வருணா மற்றும் ஹசி என்கிற இரண்டு துணை ஆறுகள் கங்கையோடு சங்கமிக்கிற இடம் என்பதால் உருவான அதன் பெயர் வாராணசி என ஜெகதீசன் குறிப்பிட்டார். பல்கலைக்கழகங்களில் பொதுவாக முதுநிலைப் படிப்புதான் கற்பிக்கப்படும். காசி இந்து பல்கலைக்கழகத்தில் இளநிலைத் தமிழ் இருக்கிறது. முதுநிலை கிடையாது. இதற்கு அடுத்தபடியாக முனைவர் ஆய்வுப் படிப்புதான் இருக்கிறது. விரைவில் முதுகலைத் தமிழ் கொண்டு வரப்பட வாய்ப்புகள் இருப்பதாகக் கூறினார். தமிழ்த்துறை படிப்பவர்களின் எண்ணிக்கை குறைவு என்பதால் தமிழுக்கென தனித்துறை இல்லை என தமிழ் இந்திய மொழிகள் துறைக்குள் இருப்பதற்கான காரணத்தை விளக்கினார். அவருடனான உரையாடலுக்குப் பிறகு அங்கு பயிலும் தமிழ் மாணவர்களை சந்தித்துப்பேசி விட்டு விடைபெற்றேன்.

காசியில் மொத்தம் 18 நாள்கள் தங்கியிருந்தேன். விசுவநாதர் கோயிலுக்கு 18வது நாள்தான் சென்றேன். 8 ஆண்டுகளுக்கு முன்பு காசிக்கு வந்த போது விசுவநாதர் கோயிலுக்குச் செல்ல வேண்டும் எனக்கேட்டதற்கு இருபுறமும் கடைகளால் நிரம்பிய குறுகிய சந்தினைக் காட்டினர். அந்தச் சந்தில் வரிசையில் நின்று சென்று விசுவநாதரைக் கண்டேன். கோயில் என்றாலே கோபுரம் எழுந்திருக்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்டிருந்த எனக்கு அது அதிர்ச்சிதான். சிறிய கோயில் என்றால் கூடப் பரவாயில்லை உலக அளவில் பிரசித்தி பெற்ற இந்துக் கோயிலுக்கு இந்தக் குறுகிய சந்தின் வழியே செல்ல வேண்டும் என்பது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இன்றைக்கு கோயில் நன்றாகப் புனரமைக்கப்பட்டிருக்கிறது. சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு முறையாகச் செல்ல வரிசைகள் அமைக்கப்பட்டிருந்தன. கடும் வெயில் காரணமாக பக்தர்கள் நடந்து செல்ல வழி நெடுக தேங்காய் நாராலான விரிப்பைப் போட்டு அதில் தண்ணீர் ஊற்றப்பட்டிருந்தது. காசி விசுவநாதரை நாமே தொட்டு வழிபட முடியும் என்பார்கள். நான் போனபோது அப்படி யாரும் தொட்டு வழிபட்டுப் பார்க்கவில்லை. ஆனால் மற்றக் கோயில்களை விட மிக அண்மையில் விசுவநாதரைக் கண்டு தரிசிக்க முடிந்தது.

விசுவநாதர் கோயில் தரிசனத்துக்குப் பிறகு சாரநாத் கிளம்பினேன். முன்பு மூன்று ஷேர் ஆட்டோக்கள் மூலம் சென்ற சாரநாத்துக்கு இப்போது மின்சாரப் பேருந்து மூலம் போனேன். பௌத்த மரபு தொடங்கிய இடம். மாபெரும் வரலாற்றின் முன் நிற்கையில் மனம் சலனமற்று பேரமைதிக்குச் சென்று விடுகிறது. ஸ்தூபிகள், இடிபாடுகளுக்குள்ளான் தூண்கள், நினைவுச் சின்னங்கள் எல்லாவற்றையும் பேரமைதி கொண்டு பார்த்து விட்டு வெளியே வந்தேன். சாரநாத்துக்கு வெளியே விற்கப்படும் புத்தருடைய சுடுமண் சிலைகளை வாங்க வேண்டும் என்பதும் எனது சாரநாத் பயணத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது. சாரநாத்தில் புத்தர் தியான நிலையில் அமர்ந்திருக்கும் முழு உருவச்சிலையும், கண்களை மூடி அவர் நித்ய நிலையில் இருக்கும் டெரகோட்டாவும்தான் அங்கே அதிகம் விற்பனை செய்யப்படுகிறது. 2015ம் ஆண்டு இவற்றின் விலை முறையே 5, 10 ரூபாய் என்றிருந்தது. இன்றைக்கு 20, 30 ரூபாய் என விற்கப்படுகிறது. அன்றைக்கு வாங்கிய டெரகோட்டாவை மிகப்பத்திரமாக வைத்திருந்தேன். என் முன்னாள் காதலி ஒரு சண்டையில் அதை உடைத்து விட்டாள். அன்றிலிருந்து இந்த டெரகோட்டாவை வாங்கியே தீர வேண்டும் என்றிருந்தவன் இப்போது வாங்கி விட்டேன்.
சாரநாத்திலிருந்து திரும்பியதோடு காசிப் பயணத்தை முடித்துக் கொண்டேன். அன்று மாலை மீண்டு கங்கைக்கரையில் கொஞ்ச தூரம் உலவி விட்டு வந்தேன். ஹரித்துவாருக்கு ரயில் முன்பதிவு செய்திருந்தேன். அதன்படி அடுத்த நாள் ஹரித்துவாருக்கு ரயிலில் சென்று விட்டு அங்கிருந்து ரிஷிகேஷ் வழியாக கேதார்நாத் செல்வதே எனது திட்டமாக இருந்தது.
– தொடரும்

கி.ச.திலீபன்
ஈரோடு மாவட்டம் தூக்கநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர். 2009-ம் ஆண்டிலிருந்து ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். கலை இலக்கிய சூழலிய இதழான ஓலைச்சுவடி இணைய இதழின் ஆசிரியர். ‘இன்னும் மிச்சமிருக்கிறது’ என்கிற இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு 2019-ம் ஆண்டு வாசகசாலை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. பயணங்களில் அதீத ஈடுபாடு கொண்ட இவர் 2022ம் ஆண்டு வட கிழக்கு இந்தியாவில் 21 நாள்கள் மேற்கொண்ட பயணத்தின் அனுபவங்களை ‘Back பேக்’ என்கிற பெயரில் விகடனில் தொடராக எழுதினார். பின்னர் நடுகல் பதிப்பகத்தின் வழியாக 2022ம் ஆண்டு அது நூலாக வெளிவந்தது. 2023ம் ஆண்டு 114 நாள்கள் இந்தியா முழுவதும் மேற்கொண்ட பயணத்தின் அனுபவங்களை தீரா உலா என்கிற இத்தொடரில் எழுதுகிறார்

